நினைவுப் பிழைதானோ!

இதைப் படிக்கும் உங்களுக்கு ஐம்பது வயது என்று வைத்துக் கொள்வோம். வீட்டிற்கு வந்திருக்கும் நண்பரிடம் உங்கள் பள்ளிக் காலத்தைப் பற்றி பேசி/பீற்றிக் கொண்டிருக்கிறீர்கள் – “நம்ப கூட மைதிலின்னு ஒருத்தி படிச்சா ஞாபமிருக்கா. வெட வெடன்னு ஒல்லியா நெட்டையா இருப்பா. எங்க தெருவுல இருந்தா. அவளும் நானும் எங்க வீட்டு மொட்ட மாடியிலே …” என்று கதை போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்பவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கதை? எது உண்மை எது கதை என்று யார் சொல்ல? கதையாக இருந்தால், அதை நீங்கள் பலமுறை – வெளிப்படையாகவோ, மனதுக்குள்ளோ – கூறிக் கூறி நீங்கள் உண்மையென்று நம்பிவிட்டீர்களா? அல்லது உங்கள் ஞாபகத்தில் எஞ்சி நிற்கும் நினைவுப் பிழைகளைக் கோர்த்து உங்கள் வாழ்க்கை கதையைப் பதிவாக்க விரும்புகிறீர்களா ? இந்தக் கேள்விகளின் நாயகனாக இருக்கிறான் ஜூலியன் பார்ன்ஸ்சின் (Julian Barnes) “The Sense Of An Ending”ன் நாயகன்.
– பளபளக்கும் மணிக்கட்டு
– கழுவுமிடத்தில் அனாயாசமாக போடப்பட்ட வாணலியிருந்து எழும் நீராவி
– உயர்ந்த வீட்டினூடே பயணிக்குமுன் குழாய் நுழைவின் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் விந்துக் கூட்டம்
– எதிர்த்திசையில் அர்த்தமில்லாமல் பாய்ந்து கொண்டிருக்கும் நதியின் அலைகளின் மீதும் நுரைகளின் மீதும் ஊடாடும் வெளிச்ச பிம்பங்கள்
– மேலிருந்து எழும் காற்றின் அசைவினால் எத்திசையில் பாய்கிறது என்று சொல்ல முடியாத மற்றுமோரு அகண்ட நதி
– மூடிய கதவின் பின் வெகு நேரத்திற்குமுன் சூடு ஆறிப் போன குளி தண்ணீர்
என்று ஒன்றோடொன்று சம்பந்தமில்லா வாங்கியங்களாக ஆரம்பிக்கிறது குறுநாவல். மேலும் படிக்க அவை டோனி வெப்ஸ்டரின் நினைவுக் கீற்றல்கள் என்று தெரிகிறது. டோனி விவாகரத்தான, ஒய்வு பெற்ற ஒரு மனிதர். இங்கிலாந்தின் அறுபதுகளில் ஆரம்பிக்கின்றது கதை. டோனியின் பார்வையில் சொல்ல பட்டிருக்கிறது கதை: பள்ளியில் நான்கு நண்பர்கள் – அவர்களுள் ஒருவன் அறீவுஜீவி – கைகூடாத காதலின் காதலி – காதலியின் வீட்டில் ஓரிரவு தங்கல் – காதலியைக் கைப்பிடிக்கும் அறிவுஜீவி – அறிவுஜீவியின் தற்கொலை (காரணம்?) – விவாகரத்தான மனைவியுடனான உறவு – காதலியின் அம்மாவிடமிருந்து வரும் 500 பவுண்டுக்கான உயில் (எதற்கு?) – காதலியுடன் கடிதப் போக்குவரத்து, என்று சாதாரணமாகத் தெரியும் நிகழ்வுகளாக பின்னப் பட்டிருக்கிறது குறுநாவல்.
BarnesBook
கதையின் ஆரம்பத்தில் வரலாறு என்றால் என்ன என்பதற்கு அறிவுஜீவி நண்பன் தரும் இலக்கணம் –

“வரலாறு என்பது ஞாபகங்களின் குறைகளும் ஆவணங்களின் இயலாமைகளும் சந்திக்கும் ஒரு தேற்றப் புள்ளி”

– அறிவுஜீவித்தனமாவோ அல்லது செயற்கையாகவோ தோன்றினாலும், இதே விளக்கம் கதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக சொல்லாமல் சொல்லப் பட்டிருக்கிறது தெரிகிறது. அதனால் டோனி கூறும் கதை ‘ஞாபகங்களின் குறைகளா’ என்ற கேள்வியை நமக்குள் எழுப்ப வைக்கிறது.
ஒரே நிகழ்வை வெவ்வேறு மனிதர்கள் தங்கள் கோணங்களிலிருந்து கூறும் உத்தியை நிறைய கதைகளில் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களில் கூட அவ்வுத்தி வெகு காலமாக கையாளப் பட்டிருக்கிறது (ரசோமான் தொடங்கி). பார்ன்ஸ் இக்கதையில் கையாளும் உத்தி அதனின்று சற்று வேறுபட்டது. ஒருவன் தன் வாழ்க்கையைப் பதிவு செய்யும் போது, அதைக் கூறும் விதத்தால் அப்பதிவு எவ்வளக்கெவ்வளவு உண்மை, உண்மை இல்லையெனின் அது சொல்பவரின் ஞாபகக் கோளாறா அல்லது அவன் வேண்டுமென்றே திரிக்கும் கதைகளா என்று படிப்பவரை சிந்திக்க வைக்கும் உத்தியைக் கையாண்டிருக்கிறார் ஜூலியன் பார்ன்ஸ்.
நூற்றைம்பது பக்கங்களுக்குக் குறைவாக கொண்டிருந்தாலும் அழகான, அர்த்தத் தொடர்புடைய வாக்கியங்களைக் கொண்டு புத்தகத்தை செதுக்கியிருக்கிறார் பார்ன்ஸ். உதாரணத்திற்கு இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை இவ்விதமாக வகுக்கிறார் ஆசிரியர் –

“நம் இளமையில் நம்மின் வெவ்வேறு எதிர்காலங்களை நாம் கற்பிதப் படுத்திக் கொள்கிறோம்; நம் முதுமையில் மற்றவர்களின் வெவ்வேறு இறந்த காலங்களை நாம் கற்பிதப் படுத்திக் கொள்கிறோம்”.

(அவ்வாறு கற்பிதப்படுத்தல் தான் இந்தக் கதையா ?)
ஆசிரியரின் சொற்சித்திரத் திறமைக்கு இதோ மேலும் சில உதாரணங்கள்:
* கணித அல்லது தர்க்க கோட்பாடுகள் கொண்டு எந்த அளவு மனித உறவுகளை சொல்ல முடியும். அப்படியே முடிந்தாலும் எண்களுக்கு நடுவில் எந்த குறிகளை இடுவது ? கூட்டலும் கழித்தலும் நிச்சயம், சில நேரங்களில் பெருக்கல் – வகுத்தலும் கூட. ஆனால் இக்குறிகள் எல்லாம் அளவு பட்டன. முழுவதும் முறிந்துபோன உறவை நட்டம்/கழித்தல் அல்லது வகுத்தல்/குறைத்தல் மூலம் பூஜ்யமாக வரையறுக்கலாம்; அதுபோல் முழுவதும் கைகூடிய உறவை கூட்டல் அல்லது பெருக்கலினால் வரையறுக்கலாம். ஆனால் மற்றெல்லா உறவுகளையும் வரையறுப்பது எப்படி? அவற்றை விளக்க தருக்கத்தத்தால் அவதானிக்க முடியாத, கணித சாத்திரத்தால் பொருளுணர முடியா விசேடக் குறிகள் வேண்டுமல்லவா?
* கூட்டலுக்கும் விருத்திக்கும் வேறுபாடு இருக்கிறது. என் வாழ்வு விருத்தியாகிருக்கிறதா அல்லது வெறும் கூட்டல்களால் அமைந்ததா?
* காலம் நம்மை முதலில் பணியச் செய்கிறது பிறகு குழம்பச் செய்கிறது. நாம் பத்திரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த போது முதிர்ச்சியுடன் செயல் படுவதாய் நினைத்துக் கொண்டிருந்தோம். உண்மைகளை எதிர்கொள்ளாமல் தவிர்த்தலை யதார்த்தம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். காலம்…..செல்லச் செல்ல நம்மின் மிகவும் ஆதாரப் படுத்தப் பட்ட முடிவுகள் நடுக்கமானவைகளாவும், நமது முடிவான தேற்றங்கள் விளையாட்டுத்தனமாயும் தோன்றும்.
* திரும்பத் திரும்ப எவ்வளவு முறை நம் வாழ்க்கைக் கதைகளை நாம் கூறிக்கொண்டிருக்கிறோம்? அவற்றை எவ்வளவு முறை திருத்தியும் மெருகேற்றியும் வஞ்சகத்துடன் வெட்டியும் கூறுகிறோம் ? நம் வாழ்க்கை நீள நீள, நம்மைக் கேள்வி கேட்க, நம் வாழ்க்கை நிஜமல்ல நம் வாழ்க்கையைப் பற்றி நாம் கூறிக் கொள்ளும் வெறும் கதைகளே என்பதை நினைவு படுத்த, நம்மைச் சுற்றி வெகு சிலரே எஞ்சி இருக்கின்றனர். (வாழ்க்கை) அடுத்தவர்களுக்கு நாம் சொல்லும் கதைகள் – முக்கியமாக – நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் கதைகள்.
* இளமையில், உங்களது குறுகிய வாழ்க்கையை முழுமையாக நினைவு கொள்ள முடியும். பின்னர், ஞாபகம் என்பது பிய்த்துப் பிடுங்கப் பட்ட சிதறல்களாய் அமைந்து விடுகிறது. விமான விபத்தைப் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டியாய் அது அமைந்து விடுகிறது. விபத்துகள் ஏதும் நிகழாத போது நாடா தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது. நீங்கள் நொறுங்கி வீழ்ந்தால், காரணம் வெட்ட வெளிச்சம்; வீழாவிட்டால், உங்கள் பயணத்தின் பதிவு அவ்வளவு தெளிவாய் இருப்பதில்லை.

*

barnes11946ஆம் வருடம் இங்கிலாந்தில் லெஸ்டர் என்னும் இடத்தில் பிறந்த ஜூலியன் பார்ன்ஸ், இங்கிலாந்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக கருதப் படுகிறார். “The Sense Of An Ending” என்ற இந்த நாவல் அவருக்கு 2011 வருடத்திற்கான் புக்கர் விருதை பெற்றுத் தந்தது.

“உண்மையைச் சொல்வதற்கான சிறந்த வழி இலக்கியம்: அழகான, அசகாயமான, ஒழுங்கு படுத்தப்பட்ட பொய்களால் உண்மையைச் சொல்லும் ஒரு முறைமை”

என்று இலக்கியத்தை நோக்குகிறார் பார்ன்ஸ். (பாரிஸ் ரெவ்யூ பேட்டி) எழுபதுகளில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் ஆசிரியக் குழுவில் எழுத்துக்களின் வரலாறுகளை ஆராயும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். கதாபாத்திங்களைக்கொண்டு கதையை ஆரம்பிப்பதில்லை பார்ன்ஸ். “ஒரு களனைக் கொண்டு, அக்களனில் நிகழும் ஒழுக்கப் பிறழ்வைக் கொண்டோ கதையை ஆரம்பிப்பேன். பிறகு யாருக்கு அது நிகழ்கிறது என்று கேட்பேன்” என்று தன் கதை அமைப்பை பற்றிக் கூறுகிறார் பார்ன்ஸ். தன் தாத்தாவைப் பற்றிய நினைவுகளை தன் சகோதரரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, ஒரு கேள்விக்கு அவர் சகோதர் எழுதிய வாக்கியம் – “இறந்த காலத்தைக் குறிக்கும் ஒரு நல்ல கருவியாக் நான் ஞாபகங்களைக் கொள்வதில்லை” – “The Sense Of An Ending”க்கு வித்தாக அமைந்தது என்று கூறுகிறார் பார்ன்ஸ். (ந்யூயார்க்கர் கட்டுரை).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.