தூரயியங்கி – டிரோன்களின் வருங்காலம்

இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’
தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள்.
நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை. ஐஃபோன் போல் எல்லோரின் கைகளிலும் தூரயியங்கி வைத்திருக்கும் காலம் இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் நிகழும். அப்பொழுதுதான் தூரயியங்கிகளின் உண்மையான வீச்சு எல்லோருக்கும் ஓரளவிற்காவது தெரியவரும்.
உலக நாடுகளின் இராணுவத்திடம் உள்ள தூரயியங்கிகளை விட இரண்டு மடங்கு அதிகமான அளவில் தனிநபர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் தங்களுக்குச் சொந்தமான தூரயியங்கிகளை இயக்குகிறார்கள். இராணுவத்தினால் குண்டு போட முடியும்; இந்த தனி நபர் பரிசோதனைகளில் குண்டு போட முடியாது என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இந்த தூரயியங்கிகளில் கிடையாது.
இவ்வாறு எல்லோருடைய கைகளிலும் துரயியங்கி இருப்பதால் என்ன பிரச்சினை வரலாம்? ஓட்டத் தெரியாதவர் கையில் டிரோன் இருப்பதால், அது தவறுதலாக, உங்கள் மண்டையின் மேல் விழுந்து விழுப்புண் உண்டாகலாம். நீங்களே அறியாமல், உங்கள் நடவடிக்கைகளை திருட்டு வீடியோ எடுக்கலாம். இந்த மாதிரி சமூகச் சிக்கல் உருவாகக் கூடாது என்பதற்காகத்தான் தூரயியங்கிக்களுக்கான சட்டதிட்டங்களை உருவாக்குகிறார்கள்.

Lexus ‘Swarm’ Behind The Scenes from The Mill on Vimeo.
அடுத்த வருடத்தில் (2015ல்) இருந்து வர்த்தக வேலைக்காக தூரயியங்கிகளை எவர் வேண்டுமானாலும் இயக்க ஆரம்பிக்கலாம். ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக தூரயியங்கிகளை இயக்கலாம் என்று FAA சென்ற வாரம்தான் அனுமதி வழங்கிருக்கிறது. திரைப்படத் துறையினர் லாபி (lobby) செய்தது போலவே, விவசாயக் குழுக்களும், எரிசக்தி நிறுவனங்களும், நில வர்த்தகர்களும், செய்தித் துறை ஸ்தாபனங்களும், இணைய விற்பனையாளர்களும் தனித் தனியே அனுமதிப் பெறப் போகின்றனர்.
தூரயியங்கிகளை எவ்வாறு செய்வது, எப்படி வடிவமைப்பது என்னும் திட்டங்களையும் வரைபடங்களையும் தன்னார்வலர்கள் பலர் இணையக் குழுமங்களில் பகிர்கிறார்கள். இதைக் கொண்டு சீனாவில் இருந்து எக்கச்சக்கமான இரகவாரியான தயாரிப்புகள் சந்தைக்குள் புகுகின்றன. காசே இல்லாமல் செய்முறை சொல்லப்பட்டு, மிகக் குறைவான பொருட்செலவைக் கொண்ட உபகரணங்களைக் கொண்டு உருவாகி, திறமுல நிரலிகளை (Open Source Software) உள்ளடக்கிய இந்த தூரயியங்கிகள் ஆயிரக்கணக்கில் விற்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு டேவிட் ஷ்மேல் (David Schmale) என்னும் காற்றியல்-உயிரியல் (aerobiologist) வல்லுநரை எடுத்துக் கொள்வோம். காற்று வழியாகப் பரவும் நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிக்க தூரயியங்கிகளை இவர் பயன்படுத்துகிறார். மேகத்தினூடே பயணிக்கும் நுண்கிருமிகளையும் வான்வெளியில் சஞ்சரிக்கும் நுண்ணுயிரிகளையும் கண்டுபிடிக்க, துரும்பைப் போல் எங்கும் தாவி, சோதனைச் செய்யப்படும் ஜந்துக்களுடனேயே பயணிக்க தூரயியங்கிகளைக் கொண்டு சோதனைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இவரின் கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வரும்போது, வருமுன் காப்போனாக பயிர்களைக் காப்பாற்றலாம். நோய்களைத் தடுக்கலாம்.
ஆப்பிரிக்காவில் இருந்து வரும் எபோலாவை அறிய இந்த ட்ரோன் முறை பயன்படும். ஆனால், ஆப்பிரிக்காவில் இணையத்தை பரவலாக்கவும் ட்ரோன்கள் பயன்படுகின்றன.

www_internet_usage_worldwide_web_mobile_computing_light_up_reach_ping_global_devices_tech_reach

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது போன்ற இடங்களில் இணையப் பயன்பாடும் செல்பேசிகளும் சிறு கிராமங்களையும் அனைத்து வயதினரையும் சென்றடைந்திருக்கின்றன. ஆனால், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் எல்லாவிடங்களிலும் வையவிரிவு வலை கிடைப்பதில்லை. பலரிடம் செல்பேசியும் செயற்கைகோள் கொண்டு தொலைபேசும் வசதியும் இருந்தாலும், அந்த செல்பேசியில் இணையம் கிடைப்பதில்லை. இணையம் கிடைத்தால்தான் ஃபேஸ்புக் பார்க்க முடியும். ஃபேஸ்புக் பார்க்க முடிந்தால், அதன் மூலம் அந்தத் தளத்தின் பயனர்களும், அதனால் கிடைக்கும் விளம்பரங்களும், வருவாயும் பல்கிப் பெருகும்.
இண்டு இடுக்குகளையும் இணையம் சென்றடைய என்ன வழி?
சூரிய ஒளியில் இயங்கும் தூரயியங்கியை ஆப்பிரிக்காவின் மூலை முடுக்கில் எல்லாம் ஃபேஸ்புக் நிறுத்தப் போகிறது. ஆப்பிரிக்காவில் வருடம் முழுக்க நல்ல வெயிலும் அடிக்கிறது. கடுமையான வெப்பத்தைத் தேக்கி வைத்து, எரிசக்தியாக ஆக்கும் இராட்சத ஆற்றலும் தூரயியங்கியின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அடிக்கடி பெட்ரோல் போட வேண்டும் என்னும் தடையும் இல்லை. ஃபேஸ்புக் நிறைய பணம் வைத்துக் கொண்டிருப்பதால், இது போன்ற பிரும்மாண்டமான திட்டங்களை செயலாக்குவதில் எந்த சிரமமும் இல்லை. மேலும், பங்குச்சந்தையில் உலவும் பணத்தை விட, அசையாச் சொத்துக்களான விமானங்கள், அந்த தூரயியங்கிகளின் மூலம் இணையச் சேவை என்று நிலையான முதலீடுகளில் கால்கோள் இடவும் ஃபேஸ்புக் விரும்புகிறது. அதே சமயம், இணையம் என்றால் ஃபேஸ்புக்; ஃபேஸ்புக் என்றால் இணையம் என்று புதுப்பயனர்கள் நெஞ்சில் ஊன்றிப் பதியவும், நிரந்தமாக அடையாள இலச்சினை போட்டு குடிகொள்ளவும் ‘ஃபேஸ்புக தூரயியங்கிகள் உதவுகின்றன.
ஃபேஸ்புக் வந்துவிட்டால் கூகுள் சும்மா இருப்பாரா?
கூகிளைப் பொருத்தமட்டில் அது சேவை இயங்குத்தளத்தில் இருக்கிறது. பணம் பரிமாற வேண்டுமா? கூகுள் வாலே (wallet) நாடுகிறோம். விளம்பரம் செய்ய வேண்டுமா? கூகுள் ஆட்வோர்ட்ஸ் (AdWords) நாடுகிறோம். செல்பேசியை இயக்க வேண்டுமா? ஆன்டிராய்ட் நாடுகிறோம்.
அதே போல், ஏதாவது பொருளை எங்காவது கொடுக்க வேண்டுமா… அதற்கும் கூகிளை நாடுங்கள் என்று உலகெங்கும் சொல்வதற்கு தூரயியங்கியை சேவையாகத் தருவதற்கு கூகுள் திட்டமிட்டு வருகிறது. தானியங்கியாக ஓடும் கார்களை கூகுள் வைத்திருக்கிறது. அதே போல், தானியங்கியாக ட்ரோன்களை நீங்களே துவக்கலாம்; எங்கு வேண்டுமோ அங்கே இறக்கலாம்; பொருள்களை பட்டுவாடா செய்யலாம்.
ஒரு பொருளை பயன்படுத்தியபின் என்ன செய்கிறோம்? அதை வீட்டின் மூலையில் போட்டு வைக்கிறோம். அதன் பிறகு அந்த சுத்தியலோ, தயிர் கடையும் மத்தோ, இன்ன பிற உபகரணமோ பயனின்றி உறங்கிக் கிடக்கும். அனைவருக்கும் அனைத்தும் என்று வாழும் காலம் இது; அதே சமயம் வீட்டை அடைத்து வைத்துக் கொண்டிருக்கும் பொருள்களும் இல்லாமல் எளிமையாக வாழ வேண்டும் என்னும் விருப்பமும் உள்ள காலம்; தேவை என்னும்போது தருவிக்கலாம்; தேவை முடிந்தபின்பு இன்னொருவருக்கு தந்து உதவலாம் எனக் கூட்டுச் சமுதாயச் சிந்தனைக்கும் தூரயியங்கிகள் உதவுகின்றன.
உங்களுக்கு எந்தப் பொருள், எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது, அந்தச் சமயத்தில், தூரயியங்கிக் கொண்டு அந்தப் பொருளை தருவிக்கலாம். உங்களின் தேவை முடிந்தபின்பு ‘யதாஸ்தானம் ப்ரதிஷ்டயாமி’ என்று பொதுவிடத்தில் கொடுத்துவிடலாம். சிக்கனமாகவும் இருக்கலாம். சுற்றுச்சூழலையும் பேணலாம்.
தூரயியங்கிகளின் வளர்ச்சியை தனித்துப் பார்க்க முடியாது. முப்பரிமாண நகலி (3D printing), எந்திரனியல் (robotics) போன்ற பிற துறைகளுடன் இணைத்தே தூரயியங்கிகளின் சாத்தியங்களைப் பார்க்க வேண்டும். இதுதான் அமேசான்.காம் வர்த்தகத் தளத்தின் திட்டம்.
வானகத்தில் ஆங்காங்கே, நகரத்திற்கு ஒன்றாகவோ, மாவட்டத்திற்கு ஒன்றாகவோ மாபெரும் தூரயியங்கிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அதனுள்ளே முப்பரிமாண வார்ப்பி (3D Printer) இருக்கும். அவை சிறிய பொருள்களை அச்செடுத்துக் கொடுக்கும். அந்தக் குட்டி குட்டி வடிவங்களை ஒருங்கிணைக்க எந்திரன்கள் உள்ளே இருக்கும். முழுப்பொருளும் தயாரானவுடன் அதை தரையிறக்க இன்னும் சில வேறுவகையான தூரயியங்கிகள் உதவும். இவையெல்லாம் நொடி நேரத்தில் நடக்கும்.
சீனாவை நம்பி இறக்குமதி செய்யவேண்டாம். மாபெரும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டாம். ஒவ்வொருவரும் தயாரிக்கலாம். உங்களுக்கான செருப்பை நீங்களே உருவாக்கலாம். உங்களின் முகத்தின் கோணல்களுக்கேற்ப கண்ணாடியை செதுக்கலாம். வீட்டின் மூலையில் அமர்ந்தபடி இவற்றைச் செய்யலாம்.
நீங்கள் தயாரா?

கனடாவின் புகழ்பெற்ற சர்கியூ டி சொலீல் (Cirque du Soleil) தயாரித்த குறும்படத்தில் பத்து டிரோன்கள் நடனமாடுகின்றன. கணினி வரைகலை உதவியோ ஃபோட்டோஷாப் தில்லாலங்கடியோ இல்லாமல் மனிதனின் லயத்திற்கேற்ப தூரயியங்கிகளின் ஒத்திசைவை படம் பிடிக்கிறது:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.