சொல் மறைப்பதென்ன

sol maraippathenna

நரம்பியல் நிபுணர் வி. எஸ். ராமச்சந்திரன் அவரின் நூல் ஒன்றில் பார்வையாளர் ஒருவரின் நோயின் தன்மையை விளக்குகிறார். ஜானிற்கு ஒரு பொருளைப் பார்த்த்தவுடன் அது என்ன என்று சரியாகக் கூற இயலவில்லை. எனவே அந்தப் பொருளின் புறத் தோற்றத்தை வைத்து அது என்னவாக இருக்கலாம் என ஊகித்து சொல்கிறார். உதாரணத்திற்கு கேரட். அதைப் பார்த்தவுடன் நம்மில் பலரைப் போல் அனிச்சையாக, அவரால் கேரட் என அடையாளம் கண்டு சொல்ல இயலவில்லை. மாறாக அதை ஒரு புதிய பொருளாக பார்க்கிறார். நீளமான, சற்று ஒல்லியான ஒரு பொருள், அதன் ஒரு முனையில் இழைக்கொத்து. என்னவாக இருக்க முடியும்? பெயிண்ட் பிரஷ் என தவறாக ஊகிக்கிறார்.
ஆனால் ஜானிடம் கேரட் பற்றி என்ன தெரியும் என கேட்டால், அதைப் பற்றி அவரால் விவரித்து கூற முடிகிறது. கேரட் – அது ஒரு கிழங்குவகைக் காயாகப்  பயிரிடப்பட்டு உணவாக உபயோகப்படுத்தப்படுகிறது, உலகெங்கும். விதையில் இருந்து முளைக்கும் வருடாந்திரப் பயிரான கேரட், அதன் மேல் நுனியில் மெல்லிய, நீளமான இலைகளை உருவாக்க்குகிறது. இவ்வாறு ஆரம்பித்து நம்மில் பலரை விட, ஒரு முழுமையான, நல்ல சித்தரிப்பை தருகிறார்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு எண்ணம் தோன்றியது. எந்த ஒரு பொருளைப் பற்றியும் ஒரு முழுமையான அறிதல் அல்லவா முக்கியம். ஜானின் நோயை மாறாக இவ்வாறாக கற்பனை செய்து பார்ப்போம்: கேரட்டை பார்த்த்தவுடன் ஜானிற்கு அதை கேரட் என்று சொல்ல இயலவில்லை, ஆனால் அவரால் அவர் காணும் பொருளைப் பற்றிய முழுமையான சித்த்தரிப்பை தர முடிகிறது, என வைத்த்துக் கொள்வோம். எனவே ஜான் கேரட்டை காணும் போது “இது ஒரு கிழங்கு…” என்று ஆரம்பித்து விவரித்து கூறுகிறார். இவ்வாறான நிலை ஒருவருக்கு இருந்தால், அது ஒரு நோய் என்று தோன்ற வில்லை. சொல்லப் போனால் இது விரும்பப்படக் கூடிய நிலை கூட. வெறும் பெயரில் என்ன இருக்கிறது. எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜா, ரோஜா தானே.
ஒரு பொருளை அதன் பெயரால் அறிவது சில நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒன்று நாம் அந்தப் பெயரைச் சுட்டும் போது மற்றவர்களுக்கு நாம் எதை குறிக்கிறோம் என தெரிகிறது. இரண்டு சுட்டப்படும் பொருள் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. இதிலுள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் பெயர் ஒரு நிறைவைத் தருகிறது. போலியான நிறைவு. அந்நிறைவைப் பெற்றவுடன் நமக்கு அப்பொருளின் மீதான விசாரணை முடிந்துவிடுகிறது. அதனாலேயே நாம் அப்பொருளைப் பற்றி அறிவதும் குறைந்து விடுகிறது.
உதாரணமாக ஒரு குழந்தை சூரியன் என்ற வார்த்தையை 4 அல்லது 5 வயது வாக்கில் அறிய வருகிறது. ஆனால் அதிலிருந்து, சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என அறிய சாதரணமாக அதற்கு எத்தனை ஆண்டு ஆகிறது? மேலும் அவ்வாறு அறிய வரும் போது ஒரு ஆச்சரியம் வருகிறது, ஏன்? இந்த இரு விஷயங்களுக்கான காரணம் என நான் நினைப்பது என்னவெனில், அந்தக் குழந்தைக்கு, வானில் இருக்கும் அந்தப் பொருள் சூரியன் என உறுதியாகச் சொல்லப்படுவதுதான். பெயர்  அறுதியானது. குழந்தைக்கு அந்த நெருப்புக் கோளத்தின் மீதான ஆர்வம் சூரியன் என்ற வார்த்தையுடன் முடிகிறது. இது ஒரு சிக்கல் என உணர்ந்தால், இதை எதிர்கொள்ள என்ன வழி?
ஒரு பொருளை அறிய வரும்போது, அப்பொருள் ஏற்கனவே அறியப்பட்டிருந்தால், நமக்கு அந்த தகவலும் தேவை. ஆனால் அதைவிட முக்கியமாக அப்பொருளின் மீதான மேலதிக விசாரணைக்கான சாத்தியமும் இருக்க வேண்டும். எனவே குழந்தையிடம் “அது சூரியன்” (It is sun) என கூறுவதை விட “அது சூரியன் என அழைக்கப்படுகிறது” (It is called as sun) எனக் கூறுவது மேலும் உபயோகமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
குழந்தை அதைக் கேட்கும் போது அதற்கு மேலும் ஒரு கேள்வி வருகிறது – அப்படிஎன்றால் அது உண்மையில் என்ன?. இந்தக் கேள்வி அக்குழந்தையின் மேலதிக அறிதலுக்கு ஒரு படியாக இருக்கும். இந்த முறைக்கு பலன் இருக்குமா என கண்டறிய, சோதனை வகுப்பது கடினமல்ல.
ஆதியில் சொல் இருந்தது என்று ஒரு வாக்கியம் உண்டு. ஆனால், அந்தத்தில் சொல் இருக்கவேண்டும் என சொல்லத் தோன்றுகிறது.

Vilayanur_S_VS_Ramachandran_Books_Human_Mind_Phantoms_Tell_Tale_Brain_Neuro_Scientist_Behavioral_Neurology_Visual_Psycho_Physics

பின்குறிப்பு:
ஜானிற்கு வந்த குறைபாடின் பெயர் அக்னோசியா (agnosia), அதற்கு காரணம் அவரது மூளையில் fusiform gyrus என்ற பகுதியில் ஏற்பட்ட சேதாரம் காரணம் என V.S. ராமச்சந்திரன் அவருடைய  நூலில் விளக்கிச்செல்கிறார்.

0 Replies to “சொல் மறைப்பதென்ன”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.