[stextbox id=”info” caption=”அமெரிக்கக் குடியரசும் குடிமக்களும்”]
இது ஒரு தோற்றப் பிழையா என்று நாம் முதலிலேயே சற்றுத் தயங்குவது நல்லது. உலகில் அனேக ஜனநாயக அரசுகள் ஆளும் நாடுகளிலும் கடந்த சில பத்தாண்டுகளாக, அரசுகளின் செயல் திறன் குறைந்து கொண்டே போகிறது, அவற்றின் கண்காணிப்புத் திறனும், அதற்கான கருவிகளும், முயற்சிகளுமோ அபரிமிதமாகப் பெருகி வருகின்றன.
சாதாரணமாக ஒரு குச்சியை வைத்துத் தட்டிக் கொண்டிருந்த பல நாட்டுக் காவல் துறையினர் இன்று ராணுவ வீரர்களைப் போல சுடும் ஆயுதங்களும், பற்பல தாக்குதல் கருவிகளோடும் தெருக்களில் உலவுகிறார்கள்.
ஜனநாயகம் என்பதன் வரையறுப்பே மாறிவருகிறது என்றுதான் கருதவேண்டி இருக்கிறது.
இந்த நிலை அமெரிக்காவில் சற்றுத் தீவிரமாகவே ஆகிக் கொண்டு வருகிறது. உலகின் பற்பல அடக்குமுறை ஆட்சிகளுக்கும் தம் ஆட்சி முறையே பெரும் மாற்று என்று பிரச்சாரம் செய்வதில் வல்லவரான அமெரிக்க அரசும், ஊடகங்களும் இன்றும் அதையே செய்கின்றன. என்றாலும் இன்று அவற்றின் பிரச்சாரத்தை நம்ப யாரும் தயாரில்லை.
ஏன், அமெரிக்கர்களே கூடத் தம் அரசின் மீது தீவிர நம்பிக்கையின்மையோடுதான் இருக்கிறார்கள். நால்வரில் ஒரு அமெரிக்கர் நாட்டில் பல மாநிலங்களில் எழுந்து வரும் பிரிவினை முயற்சிகள் மீது பரிவோடு இருக்கிறார்கள் என்று ஒரு சமீபத்துக் கருத்துக் கணிப்பு தெரிவித்தது. கருத்துக் கணிப்புகளை அப்படி எல்லாம் நம்ப முடியுமா என்றால் அவை வீசும் காற்று எத்திக்கில் வீசுகிறது என்றாவது சொல்கின்றன எனலாம்.
சமீபத்துச் செய்திகள் இரண்டு அமெரிக்க அரசமைப்பும், நிர்வாக அமைப்புகளும் எப்படிக் கொடுமைகளின் இருப்பிடமாக மாறி வருகின்றன என்று சுட்டுகின்றன. ஒரு புறம் ஐஸிஸ் என அழைக்கப்படும் மேற்காசிய நிலப்பரப்பில் பரவி வரும் பயங்கரவாதக் கும்பல நடத்தும் பெரும் படுகொலைகள் பற்றிய செய்திகள் ஊடகங்களை நிரப்புகையில், இன்னொரு புறம் ஜனநாயக அரசுகளின் தோல்விகளும், ஊழல்களும், அக்கிரமச் செயல்களும் செய்தி வெளியை நிரப்பினால் அமெரிக்கர் என்ன, உலக மக்களுக்கே ஜனநாயகத்தின் பேரில் நம்பிக்கை நசியத்தான் செய்யும்.
மாற்று என்று ஏதும் உருப்படியாக இல்லாததால் – பின் என்ன உங்கள் வாழ்வை ஐஸிஸ் அமைப்பிடமா ஒப்படைப்பீர்கள்? அதற்கு நேராகத் தற்கொலை செய்து கொள்ளலாமே, இல்லையா? – இப்போதைக்கு ஜனநாயக அரசுகளை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு செய்திகள்தான் என்ன?
ஒன்று – http://goo.gl/4G0eeQ/
பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஒரு நகரில் குடும்பத் தகராறில் வன்முறைக்கு ஆளாகும் நபர்கள், உதவி நாடிப் போலிஸைப் பல முறை கூப்பிட்டால் அவர்கள் இனிமேல் வசிப்பிடங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று நகர நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறதாம். முன்னர் இருந்த ஒரு விதி அப்படிப்பட்டவர்களை (குடியிருப்பவர்கள் ஆனால்) அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு உரிமை வழங்கி இருந்ததாம்.
இதென்ன நல்ல செய்திதானே என்றீர்களாயின், சற்று யோசித்தால் நிலைமை எப்படி இருந்த்து, இன்னும் எத்தனை ஊர்களில் இப்படி இருக்கிறது என்பது நினைவு வரும்.
இது நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் இந்த நகர நிர்வாகத்தினர்? எத்தனை பேர்களை இப்படி வீடில்லாதவர்களாக ஆக்கி இருக்கிறார்கள்? எத்தனை பேர் இப்படி வெளியேற்றப்படுவோம் என்று பயந்து வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் முடங்கி இருந்தார்கள்?
மேலும் தகவலுக்குச் செய்தியைப் படிப்பதோடு, இந்தச் சிறு முன்னேற்றத்துக்கும் எத்தனை கருத்து வேறுபாடுகள், எத்தனை அரசியல் மோதல்கள் என்பதை வாசகர் உரையாடலில் இருந்து பார்க்கலாம். அத்தனைக்கு ஜனநாயக வெளி என்பது இன்னும் அழியவில்லை என்று நாம் கருத முடியும். இன்னும் எத்தனையோ ஊர்களில் இதே போன்ற கடுமையான நடவடிக்கைகள் அமலில் இருக்கின்றன என்பதும் புரியும்.
சம்பவம் 2: இந்தப் புள்ளி விவரத்தை எல்லாம் கொஞ்சம் சந்தேகத்தோடு பார்க்கத்தான் வேண்டும் என்றாலும், அமெரிக்கச் சிறைகள் நிறையக் கொடிய வழிமுறைகளைக் கையாள்கின்றன என்பது ஏற்கனவே உலகப் பிரசித்தம். ஒரு முக்கிய வழி முறை வன்முறையில் ஈடுபடும் கைதிகளைத் தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது.
இந்த வழிமுறை சிறை அதிகாரிகள், காவலர்கள் ஆகியோரை ஆபத்தில்லாமல் பணியாற்ற விடுகிறது என்பது இதன் சார்பில் வைக்கப்படும் வழக்கமான வாதம். இது ஓரளவு உண்மையாகவும் இருக்கலாம். அமெரிக்கச் சமூகம் நிறைய வன்முறை நிறைந்த சமூகம் என்பதோடு, அமெரிக்காவில் எளிதில் கிட்டும் துப்பாக்கி போன்ற கொலைக்கருவிகள் மக்களிடையே சர்ச்சைகளைத் தீர்க்க எளிதில் இக்கருவிகளைப் பயன்படுத்த்த் தூண்டுதலாகவும் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இதன் ஒரு விளைவு காவல் துறையாகட்டும், சிறைத் துறையாகட்டும் அவற்றில் பணி புரியும் காவலர்கள் எப்போதும் வன்முறையை எதிர்பார்த்துக் கடுமையான நடவடிக்கைகளையே நாடுவதாகத் தெரிகிறது.
அமெரிக்க மனநோயாளிகளில் சுமார் 40% த்தினர் அமெரிக்கக் குற்றத் தடுப்பு/ நீதி அமைப்பின் பிடியில் சிக்கி விடுகிறார்கள் எனறு சொல்லும் இந்தச் செய்தி, மனநோய் உள்ளவர்களைத் தனிமையில் அடைத்தல் கொடுமை என்றும், அது அவர்கள் நோயை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும் என்றும் சொல்கிறது. அமெரிக்க அமைப்பின் குறைகளை ஏதோ ஒரு கட்ட்த்தில் அந்நாட்டு ஊடகங்கள் சொல்லவாவது செய்கின்றன. இந்தியாவில் சிறைகளின் நிலைமை குறித்தோ, மனநல மருத்துவ மனைகளின் நிலைமை குறித்தோ ஊடகங்கள் மூலம் எத்தனை செய்திகள் நமக்குக் கிட்டுகின்றன?
அமெரிக்கச் சிறைகள் பற்றிய செய்தி இங்கே:
http://www.salon.com/2014/09/09/mentally_ill_inmates_brutally_tortured_in_michigan_womens_prison/
[/stextbox]
[stextbox id=”info” caption=”பொருட்களின் உலகவலை: இந்தியாவின் அடையாளம்”]
பொருட்களின் உலகவலைக்கு (Internet of Things) மிகச் சிறந்த உதாரணமாக ஆதார் அட்டையை இந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது. பலவிதமான பொருட்களில் இருந்து வெவ்வேறு விஷயங்களைத் தாங்கி விதவிதமான நேரங்களில் வரும் எல்லா தகவல்களையும் சேமித்து வைப்பதை “பெரும் தரவுகள்” (Big Data) என்போம். குடிமகனுக்குத் தேவையான அரசு உதவிகளைப் பெறவும், வங்கி போன்ற அரசு சாரா நிறுவனங்களோடு தகவல் பரிமாறவும், நகரம் சார்ந்த பொதுக் கணக்கீடுகளுக்கு மக்கள் பழக்கவழக்கத்தைக் கொணரவும் உதவக் கூடிய ஆதார் அட்டை என்பது உலகத்திற்கே முன்னோடியாக எவ்வாறு உதாரணத் திட்டமாக நடைமுறையாகிறது என்பதை அறியமுடிகிறது.
[stextbox id=”info” caption=”தொலைந்த குறிக்கோளும் தொலை தூரப் பயணமும்”]
தற்செயலாக நூலகத்திலிருந்து கொண்டு வந்த ஸர் ஜான் ப்ராங்க்ளினின் ஆர்க்டிக் கடற்பயணம் பற்றிய புத்தகத்தினால்தான் துருவப் பயண சாகஸங்கள் பற்றி ஆர்வம் ஏற்பட்டது. இரு முறை, இந்த மனிதர் ஆர்க்டிக்கிற்கு வடமேற்கு திசையில் செல்லும் வழியைத் தேடிப் பயணமானார். இந்த வழித்தடமே கற்பனை; இரண்டாம் முறை சென்றவர் திரும்ப வரவேயில்லை.
காணாமல் போனவர்களைத் தேடிப் பல பயணங்கள் நடந்தன. கப்பல்கள் மூழ்கின என்று இனூயிட் மக்கள் சொல்ல, மூழ்கும் முன் மனிதர்கள் நடந்து போனதைப் பார்த்ததாகவும் சொல்ல, பின் வெகு சிலரின் சமாதிகளும் கண்களில் சிக்கினாலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் தலையெழுத்து என்ன என்பது மர்மமாகவே இருந்தது. உயிர் பிழைக்க, பலரும் நர மாமிசம் சாப்பிட்ட தடயங்களும் கிடைக்க, விக்டோரியன் ஆட்சிக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி இல்லை என்று நிரூபிக்கவே ஏகப்பட்ட பயணங்களுக்குப் பண உதவி செய்தது. ப்ராங்க்ளினின் மனைவி பெரிய மனிதர்களிடத்தில் எல்லாம் கெஞ்சிக் கூத்தாடி அந்த அவப்பெயர் இல்லாமல் பார்த்துக் கொண்டார். தற்போது ப்ராங்க்ளினின் ஒரு கப்பலின் இருப்பிடம் ஒலி வழித் தேடல் கருவிகளின் (ஸோனார்) மூலமாக அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1840களில் ஆர்க்டிக் பனி மாயையில் காணாமல் போனது… தொழில்நுட்பத்தின் மூலம் இன்று தெரிய வந்திருக்கிறது.
[stextbox id=”info” caption=”தாய்நாடா? திறமையா?”]
இந்தியாவில் இருந்தபோது டிவியில் கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் போது இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்து மைதானங்களில் எப்படி இவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்று வியப்பாக இருக்கும். இன்றோ, இங்கிலாந்தின் மைதானங்களில் இந்திய அணிக்கு கிட்டும் ஆதரவைத் தாண்டி இங்கிலாந்து அணியினரை அவமதிப்பதாக, உள்ளூர்காரர்களை தூஷிக்கும் வரை கூட நிலைமை போய்க்கொண்டிருக்கிறது.
கிரிக்இன்ஃபோவில் வந்த இந்தக் கட்டுரை ஒரு இந்திய வம்சாவளியினரால் எழுதப்பட்டதுதான். கிரிக்கெட் மைதானங்களில் பார்வையாளர்களின் சொந்த நாட்டுப் பற்றைச் சோதிக்க முடியுமா என்ன? அப்படிச் சோதிக்க எண்ணுவதுதான் சரியா?
http://www.espncricinfo.com/england-v-india-2014/content/story/778123.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”பாட்டாளிகளுக்கென்று ஓர் உலகம் என்றாவது பிறக்குமா?”]
கடைசிக் குறிப்பை எழுதுகையில் மனம் நொய்ந்து போகிற நிலை எழுகிறது. உழைப்பாளர்களுக்கான உலகம் எப்போது எழும், உலகைப் படைக்கத் தம் உடலை உருக்கி அளிக்கும் பாட்டாளிகளின் நலனைப் பாதுகாப்பதை, அதைத் தொடர்ந்து கண்காணிப்பதை, அதையே முதல் முதல் முன்னேற்றப்பட வேண்டிய சமூகக் கடமையாக ஏற்கும் அரசமைப்பும், சமுதாயமும், பண்பாடும் எப்போது எழும் என்ற பெரும் ஆதங்கம் கவிகிறது. இத்தனை நலங்கள் குவிந்த பூமியில் சிறு கூட்டங்கள் எல்லா வளங்களையும் பயனற்ற விதங்களில் விநியோகித்து, நல்வாழ்வுக்கான பாதையை உலகப் பெரும்பான்மைக்கு அடைத்து வைத்திருப்பதுதான் எப்படி ஒழியப் போகிறது?
முதல்கட்ட உலக முதலியம் துவங்கிய நூறாண்டுகளில், அதுதான், நவீனத்துவம் என்று சொல்லப்படுகிற உலகமாயை யூரோப்பில் துவங்கிய கட்டத்தில், யூரோப்பியர் உலகெங்கும் இழைத்த பெரும் கொலை, கொள்ளைகள் எல்லாம் ஒரு புறமிருக்க, தம் நாட்டிலேயே அவர்கள் இழைத்த கொடுமைகள் ஏராளம். குறிப்பாக, தொழிற்சாலைகள் என்ற பெயரில் அவர்கள் கட்டிய கொடும் உழைப்புப் பாசறைகளும், அமைத்த காரிருள் சிறைகளான கனிமச் சுரங்கங்களும், துறைமுகங்களும், படைப் பாசறைகளும், ரத்தக் களரியான போர்க் களங்களும் பல கோடி மக்களின் வாழ்வை எல்லாம் உருக்குலைத்து நாசமாக்கின.
இன்று வரலாற்றுணர்வற்று, ஏனோ மூட நம்பிக்கைகளில் சிக்கி, நாம் அந்தக் கட்ட்த்தை மனித குலத்தின் பெரும் முன்னேற்றக் காலம் என்றே நம்பும் வகையில் பல நூறாண்டுகளாக நமக்கு வரலாறு என்ற பெயரில் மூளைச் சலவை நடந்திருக்கிறது.
உலகெங்கும் நடந்த பல எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், பன்னாட்டு ஏகாதிபத்தியத்துக்கு ஆசைப்பட்ட சில நாட்டு ஆளும் கூட்டங்கள், தம் உள்நாட்டு மக்களின் ஆதரவு இந்த ஆக்கிரமிப்புக்கு அவசியம் என்று புரிந்து கொண்டதாலும், அம்மக்களுக்குப் பொதுநலம் கோரும் நடவடிக்கைகள் என்ற போர்வையில் பல உழைப்பாளர் நலச் சட்டங்களையும், சமூகப் பாதுகாப்பு விதிகளையும் பல நாடுகளும் அமலுக்குக் கொணர்ந்தன. அவையே இன்னுமே முன்னாள் காலனியாதிக்க நாடுகளில்தான் அனேகமாக அமலில் இருக்கின்றன. கடந்த அரை நூற்றாண்டுகளாக மேலை நாட்டுத் தொழிலாளர்களை இந்தச் சட்டங்கள்தாம் ஓரளவு உலக முதலியத்திடமிருந்து காத்து வந்தன.
சமீபத்தில் த்ன் ஆளும் கூட்டத்தின் சூதாட்டங்களால் பெரும் சரிவில் வீழ்ந்த உலக முதலியம், உலகத் தொழிலாளர்கள் உலகெங்கும் சில நூறாண்டுகளாகப் போராடி, தம் கூட்டுச் சங்கங்களின் உதவியால் பெற்ற பற்பல நலத் திட்டங்களும், பாதுகாப்புச் சட்டங்களும் தம் பெரும் குவிப்புக்குத் தடையாக இருக்கின்றன என்று கருதி, அவற்றை இல்லாமலாக்க மறுபடியும் பெரும் முயற்சிகள் செய்துவருகிற்து.
இந்த முயற்சிகளில் ஒன்று, வளர்ந்த நாடுகளிலிருந்து பெரும் தொழிற்சாலைகளை அகற்றி, அவற்றைப் பின் தங்கிய நாடுகளில் புதிதாக அமைத்து, தொழிலாளர் நலச் சட்டங்கள் இல்லாதபடிக்கும், ஒருவேளை அவை இருந்தாலும் அமலாகாதபடிக்கும் அடிக்க, அந்நாட்டு அரசுகளை ஊழலில் சிக்க வைத்துத் தம் பொருள் உற்பத்தியைச் சாதித்துக் கொள்கின்றன.
இப்படி ஒரு பன்னாட்டுப் பொருள் உற்பத்தி என்பது ஒரு விதத்தில் பல நாட்டுத் தொழிலாளருக்கு வேலை வாய்ப்புகளைக் கொணர்ந்தாலும் பல நேரம் இந்த வகை வேலை வாய்ப்பு கிட்டாமலே இருந்திருக்கலாம் என்ற பரிதாப நிலையில் இந்த மூன்றாம் உலகத்துத் தொழிலாளர் தள்ளப்படுகின்றனர்.
மலேசியாவில் பல நாட்டு மக்கள் புலம்பெயர்ந்து வந்து தற்காலிகக் குடியேறிகளாகி, தொழிலாளராக வேலைக்கு அமர்கிறார்கள். அவர்கள் தாம் கிளம்பும் நாட்டில் இந்தக் குடி பெயர்ப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் என்று இடைத் தரகர்களுக்குக் கடன் பட்டுக் கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். பின் சேர்ந்த இடத்தில் என்னென்ன விதங்களில் மேன்மேலும் கொடுமைகளுக்கும், கடன்படுதலுக்கும் ஆட்படுத்தப்படுகின்றனர் என்று ஒரு தன்னார்வக் குழு சமீபத்தில் நட்த்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.
இதைப் பற்றி எழுதும் கார்டியன் பத்திரிகை இதைக் கொத்தடிமை முறை என்றே அழைக்கிறது. நவீனயுகம் பல நூறாண்டுகளின் சுழற்சிக்குப் பிறகு மறுபடியும் தன் துவக்க கால உழைப்பு முறைகளுக்கே திரும்பி இருக்கிறது என்பது தெளிவாகிறது.
அப்படிக் கொடுமைப்படும் மக்களில் இந்தியாவிலிருந்து செல்லும் தொழிலாளரும் நிறைய உண்டு. செய்தியைப் படிக்க இங்கே செல்லவும்.
[/stextbox]