மூன்று விருதுகள்

பன்னாட்டரங்கில் கௌரவிப்பு- எழுத்தாளர் அம்பை

SPARROW
எழுத்தாளர் அம்பை முன்னின்று நடத்தி வரும் ஸ்பாரோ(SPARROWSound & Picture Archives for Research on Women) என்ற ஆவணக் காப்பு அமைப்பிற்கு இந்த ஆண்டின் பிரின்ஸ் க்ளௌஸ் (Prince Claus) விருது வழங்கப்படுகிறது.  நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள இந்த நிதி, வருடந்தோறும் விருதுகளை வழங்குகிறது. இந்த விருது, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளில், கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்து சமுதாயத்தில் ஆக்க பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் தனிநபர்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ வழங்கப்படுவது.
ஸ்பாரோ அமைப்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தியப் பெண்களின் பல்வேறு குரல்களையும் வரலாறுகளையும் ஆவணப்படுத்தி வருகிறது.
எழுத்தாளர் அம்பையின் வீட்டில் சிறியதாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது பெண்கள் குறித்த 5000ற்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கும் ஏராளமான வாய்மொழி வரலாற்று ஆய்வுகளுக்கும் ஆவணக்காப்பகமாக ஒரு கட்டடமாகவே வளர்ந்திருக்கிறது. இந்த ஆவணங்கள் பெண்களின் தினசரி வாழ்வில் உள்ள இன, பால், வர்க்க முரண்பாடுகளையும், அவற்றால் இந்தியப் பெண்களின் வாழ்வில் எழும் பற்பல சவால்களையும் பற்றிப் பேசுவதோடு, தடைகளையும், வரம்புகளையும் தாண்டித் தம் ஊக்கத்தாலும் திறனாலும், சலியா உழைப்பாலும் இந்தியப் பெண்கள் இந்தியாவின் சமூக வாழ்வுக்கும், பண்பாட்டுக்கும், அரசியல் பொருளாதார நலனுக்கும் கொடுத்த பங்களிப்புகளையும் பதிவு செய்கின்றன.
ambai_2தக்க அங்கீகரிப்பான இந்த விருதைப் பெறும் ‘ஸ்பாரோ’ அமைப்பிற்கும், அதன் இயக்குநர்களின் தலையாயவரான எழுத்தாளர் அம்பை அவர்களுக்கும் சொல்வனத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் .
மேலும்,  இந்த அமைப்புக்குக் கட்டடம், ஆவணப் பராமரிப்பு, மேலும் நிர்வாகத்துக்குத் தேவை என்று நிதி உதவி செய்யுமாறு சில முறைகள் சொல்வனம் இதழிலேயே வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது.
விருது வழங்கப்பட்டது நல்ல விஷயம் என்றாலும், இந்த அமைப்பு செய்ய விரும்புவதும், அதற்குச் செய்ய இருப்பனவும் என்று நோக்கினால் ஏராளமான விஷயங்கள் முன்னிற்கின்றன.
உலக நாடுகள் பலவற்றிலும், தம் பாரம்பரியங்களைப் பராமரிப்பது குறித்தும், சரியான வரலாற்றை எழுதி, அதை பின் வரும் தலைமுறைகளுக்குக் கொடுப்பதையும் குறித்துக் கவனமும் பொறுப்புணர்வும் உள்ள அரசுகள், பல புரவலர் அமைப்புகள், பல்கலைகள், ஊடக நிறுவனங்கள் என்று பற்பலவும் சேர்ந்தியங்கி அந்நாட்டின் தகவல்களையும், படைப்புகளையும் ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள் என்று அமைப்புகளில் சேமிக்கின்றன.
இப்படி ஒரு கவனிப்பும், பராமரிப்பும், தம் மக்களின் கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் ஆகியன குறித்த விழிப்புணர்வும் இன்னும் இந்திய அரசுக்கோ, புரவலர் அமைப்புகளுக்கோ, பல்கலைகளுக்கோ, ஊடகங்களுக்கோ, தனியாரான இந்தியர்களுக்கோ ஏற்படவில்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.
இப்போது கூடக் காலம் கடந்து விடவில்லை. 25 ஆண்டுகளாகக் கடும் முயற்சியாலும், பலரின் தன்னலமற்ற உழைப்பாலும், அபரிமிதமான பொறுப்புணர்வாலும் நடத்தப்பட்டு வரும் ஸ்பாரோ அமைப்பிற்கு வாசகர்களும், அவர்களது நண்பர்களும், அவர்கள் பங்கெடுக்கக் கூடிய பல பண்பாட்டு அமைப்புகளளும், நிதி அமைப்புகளும் தமக்கு இயன்ற அளவில் இந்த அமைப்புக்கு நன்கொடை கொடுத்து இதை ஊக்குவிக்கலாம். அப்படிச் செய்வது பன்மடங்கான நன்மையாக வருங்கால இந்தியப் பிரஜைகளுக்குத் திரும்பும் என்பதில் ஐயமில்லை.
சொல்வனத்தில் முன்பு ஸ்பாரோவின் சார்பில் பிரசுரிக்கப்பட்ட கோரிக்கையையும், நிதி வழங்க விருப்பமுள்ளோர் என்ன விதமாக அதை அளிக்க முடியும் என்பன குறித்த தகவலையும் இந்தச் சுட்டியைப் பின்பற்றினால் பார்க்கலாம்.

தமிழக அரங்கில் கௌரவிப்பு- எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ்

 
கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எம்.ஜி.சுரேஷ் அவர்களுக்கு இலக்கிய வீதியும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து வழங்கும் 2014-ஆண்டுக்கான அன்னம் விருது mgsureshவழங்கப்பட்டுள்ளது.
புனைவிலக்கியவாதியாகவும், கட்டுரையாளராகவும் விமரிசகராகவும் இயங்கி வரும் எம்.ஜி.சுரேஷ் இதுவரை ஐந்து நாவல்கள் உட்பட 22 புத்தகங்கள் எழுதியுள்ளார். உலக இலக்கிய போக்குகளை உற்றுக் கவனித்தும் தமிழில் அதன் சாத்தியப்பாடுகளை சிந்தித்து தம் முடிவுகளைக் கட்டுரைகளாகவும் புனைவாகவும் தொடர்ந்து எழுதுகிறார். இப்படி ஒரு பல பத்தாண்டு கால இயக்கத்தால் தேர்ந்த தமிழ் வாசகர்களிடையே இவருக்கு நிறைய கவனிப்பு இருக்கிறது.
இதற்கு முன்னர் இவரது ‘அட்லாண்டிஸ் மனிதர் மற்றும் சிலருடன்‘ என்ற நாவல் திருப்பூர் தமிழ் சங்க விருதும், ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன‘ என்ற நூல் ஏலாதி இலக்கிய விருதும் பெற்றுள்ளன.
விருது பெறும் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷிற்கு சொல்வனத்தின் வாழ்த்துக்கள்.

கோவை மாவட்டத்தில் கௌரவிப்பு – எழுத்தாளர் வெ. சுரேஷ்

 

vsuresh

சொல்வனத்தில் தொடர்ந்து எழுதி வருபவரும், தற்காலத் தமிழ் இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவருமான எழுத்தாளர் வெ. சுரேஷ், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை பிரிவினரால், கோவை மாவட்டத்தின் நேர்மையான அலுவலர்களுள் ஒருவர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரோடு சேர்ந்து மொத்தம் பதினைந்து பேர் இந்த கௌரவத்தை அடைகின்றனர்.
எழுத்தாளர் வெ.சுரேஷிற்கு சொல்வனத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.