தூக்கத்தைக்கெடுக்கும் சிந்தனைச்சோதனைகள்

இந்த முறை கொஞ்சம் குழப்பமான மூலைகளுக்கு உங்களை அழைத்துச்செல்ல உத்தேசம். ஒழுங்காக திரும்பி வந்து சேர்கிறோமா என்று பார்ப்போம்.
ஒரு ஜாடியில் உங்கள் மூளை
சொலிப்சிசம் என்று ஒரு இசம் இருக்கிறது. இதன் ஆதரவாளர்கள் நம்மால் அதிகபட்சம் உண்மை என்று அறியமுடிவது நமது பிரத்யோக மூளை என்பது ஒன்று மட்டும்தான், அதுவும் இல்லாவிடில் நம்மால் இப்போது இந்த சிந்தனையில் ஈடுபட்டு இருக்கவே முடிந்திருக்காது. எனவே அது உண்மை. மற்றபடி நம்முடன் ஊடாடுபவரிடம் இருந்து ஆரம்பித்து நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் பிரபஞ்சம் வரை எதையுமே நிஜம் என்று ஸ்திரமாக சொல்ல முடியாது, அவை எல்லாமே மாயையாக இருக்கக்கூடும் என்கிறார்கள்! பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு வேதாந்தி ரெனெ தெகார்தே சொலிப்சிசக்காரர் என்று பலர் கருதுகிறார்கள். சிலர் மறுப்பதும் உண்டு என்றாலும், “நான் நினைக்கிறேன், எனவே இருக்கிறேன்” (I think, therefore I am*.) என்ற அவரது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வரி அவரை இந்த இசக்காரராக அடையாளம் காட்டுவது போல்தான் தெரிகிறது. அந்த ஒரு வரி மட்டும்தான் உணர முடியும் உண்மை என்று எடுத்துக்கொண்டு, மனித வாழ்வுக்கு தேவையான அத்தனை தத்துவங்களையும் அதிலிருந்து ஆதாரப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்தவர், அந்த மாபெரும் திட்டத்தை முடித்ததாக தெரியவில்லை. இருந்தாலும், அதற்கான ஆதாரங்களை தேடிக்கொண்டு போகும் வழியில் அவர் ஒரு கேள்வியை உதிர்த்து வைத்தார். நாம் நமது ஐம்புலன்களின் வழியாக உள்ளே வரும் செய்திகளை வைத்துக்கொண்டுதான் உலகையே புரிந்து கொள்கிறோம். அப்படி இருக்கும்போது, ஏதோ ஒரு பேயோ பிசாசோ நமது புலன்களை குத்தகைக்கு எடுத்து வைத்துக்கொண்டு அதற்கு தோன்றியபடி நமது ஐம்புலன்களுக்குள்ளும் செய்திகளை அனுப்பிக்கொண்டிருக்கவில்லை என்பது என்ன நிச்சயம் என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி!
putnamஅந்த நோக்கின் ஒரு நீட்டிப்பாக (extension) “ஒரு ஜாடியில் (அல்லது கொப்பரையில்) உள்ள மூளை” என்று அழைக்கப்படும் (Brain in a vat) சிந்தனைச்சோதனையை சொல்லலாம்.அருகிலுள்ள படத்தில் இருக்கும் சமகால அமெரிக்க தத்துவ பேராசிரியர் ஹிலரி புட்ணம் (Hillary Putnam) பிரபலப்படுத்திய  ஒரு சிந்தனைச்சோதனைதான் இந்த ஜாடியில் மூளை. இதெல்லாம் வெறும் தேவையில்லாத நேரத்தை வீணாக்கும் கற்பனைகள் என்று இந்த எண்ணத்தை ஒதுக்கும் முன், இது நிஜமாகவே இருந்தால் அதன் விளைவுகள் என்னென்ன என்று கொஞ்சம் யோசித்துதான் பார்ப்போமே. ஒரு விஷமக்கார விஞ்ஞானி நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்கள் மூளையை மட்டும் எடுத்து ஒரு ஜாடியில் ஏதோ ஒரு ஸ்பெஷல் திரவத்தில் உயிரோடு இருக்கும்படி மிதக்க  விடுகிறார். அதன்பின் ஒரு சக்தி வாய்ந்த கணினியை உங்கள் மூளையுடன் இணைத்து சாதாரணமாக கண், காது, மூக்கு, இத்யாதி வழியாக உங்கள் மூளைக்குள் வந்து சேரும் அத்தனை செய்திகளையும் உங்கள் மூளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்களின் வழியாக அனுப்பி வைக்கிறார்! கணினி உங்கள் மூளைக்குள் அனுப்பி வைக்கும் சமிக்ஞைகள் அந்த விஞ்ஞானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தேவைக்கேற்ப சமிக்ஞைகளை உங்கள் மூளைக்கு மாற்றி அனுப்பி நீங்கள் சந்திரமண்டலத்தில் உலவிக்கொண்டு இருப்பதாகவோ, கடலுக்குள் நீந்தி முத்துக்குளிப்பதாகவோ அல்லது உங்கள் வீட்டில் காஃபி சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாகவோ உங்களை அவரால் நம்ப வைக்க முடியுமல்லவா?

binvat

அறிவியல், நரம்பியல், கணினியியல் எதுவுமே இதெல்லாம் செய்யக்கூடிய அளவு வளரவில்லை என்று நீங்கள் சத்தியம் செய்யத்தயாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்யும் அந்த சத்தியமும், நீங்கள் இப்போது படித்துக்கொண்டு இருக்கும் இந்தக்கட்டுரையும் கூட உங்கள் மூளைக்குள் மட்டுமே நிலவும் அந்த போலி உலகிற்குள்தான் நடந்து கொண்டு இருக்கிறது என்று நான் சொன்னால் அது பொய் என்று உங்களால் எப்படி ஊர்ஜிதம் செய்ய முடியும்? மேட்ரிக்ஸ் திரைப்படம், சில Star Trek தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல அறிவியல் புனைவுகளில் இந்த யோசனை ஊடுருவி இருப்பதை பார்க்கலாம்.

brain-in-a-vat2

இப்போது சென்ற இதழில் நாம் சந்தித்த நியூகொம்ப் முரண்பாட்டை ஒரு நடை  போய் பார்த்துவிட்டு வருவோம். (இந்தக்கட்டுரைத்தொடரின் நான்காம் பகுதியை நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றால், அதை முதலில் படித்துவிட்டு இங்கே தொடர்வது உசிதம்.) திரும்பவும் அந்த வங்கியாளரை சந்திக்கிறோம். அவருடைய தோல்வியையே கண்டறியாத ஞானதிருஷ்டி அவர் தனது விஷமக்கார விஞ்ஞானி நண்பருடன் சேர்ந்துகொண்டு நடத்திப்பார்க்கும் சோதனைகளின் முடிவுகளில் இருந்து கூட வரலாம் அல்லவா? நிஜ உலகில் போட்டியாளரான நீங்கள் ஒரு பெட்டியை தேர்ந்தெடுப்பீர்களா அல்லது இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வீர்களா என்று முடிவு செய்ய உங்கள் மூளையை ஒரு நகல் எடுத்தோ அல்லது உங்களைப்போலவே எல்லா விதங்களிலும் செயல்படும் இன்னொருவரின் மூளையை எடுத்தோ ஜாடியில் போட்டு, அந்த மூளையை அதே விளையாட்டை விளையாடுவதாய் கணினி உள்ளே அனுப்பி வைக்கும் சமிக்ஞைகள் மூலம் நம்ப வைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஜாடியில் உள்ள மூளை எடுக்கும் முடிவைத்தான் வங்கியாளர் வெளி உலகில் சொல்லி தனது தவறே செய்யாத ஞானதிருஷ்டி என்று கதை விட்டுக்கொண்டு இருக்கிறார்! இந்த “ஜாடியில் மூளை” கருத்து நிச்சயம் பொய் என்று நம்மால் சொல்ல முடியாத பட்சத்தில், நீங்கள் உண்மையில் விளையாடுவதாய் நினைத்துக்கொண்டு பெட்டிகளை தேர்ந்தெடுப்பது, இன்னொரு நிஜ உலகில் வங்கியாளர் நடத்தும் உருவகப்படுத்தலாக (Simulation) இருக்க வாய்ப்பிருக்கிறது!

brain-in-a-vat

எனவே நீங்கள் பேசாமல் இரண்டாம் பெட்டியை மட்டும் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம். உங்களது அந்த முடிவை வைத்துக்கொண்டு வங்கியாளர் இரண்டாம் பெட்டியில் ஒரு கோடி ரூபாயை வைத்து மூடுவார். அப்போது அந்த நிஜ உலகில் உங்களின் நிஜ அவதாரம் இரண்டு பெட்டிகளையும் கூட எடுத்துக்கொள்ளலாம்! எனவே மொத்தத்தில் நாம் ஒரு ஜாடிக்குள் இருக்கும் மூளையா இல்லையா என்று தெரியாத பட்சத்தில், நிச்சயம் இரண்டாம் பெட்டியை மட்டுமே எடுக்க வேண்டும். இல்லாவிடில் இப்போதும் சரி நிஜ உலகிலும் சரி நீங்கள் வெறும் ஆயிரம் ரூபாயோடு வீடு திரும்பும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள் ஒரு பெட்டிக்கட்சியினர்! இந்தத்தேர்வுகளை இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், நீங்கள் இப்போது எடுக்கும் முடிவு, ஒரு வாரம் முன்பு இரண்டாம் பெட்டிக்குள் வைக்கப்பட்டது என்ன என்று முடிவு செய்கிறது! எனவே, எதிர்காலத்தில் நிகழும் ஒரு நிகழ்வு கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பாதிப்பதாக சொல்லலாம்! இந்த சிந்தனை உங்களை மிகவும் கவர்ந்தால் “காலவரையற்ற தீர்மான கோட்பாடு” (Timeless Decision Theory) பற்றி இன்னும் படித்து தூக்கம் இழக்கலாம். இது வரை குழப்பம் ஒன்றும் இல்லை என்றால், இந்த ஜாடியில் மூளை சோதனையை பிரபலப்படுத்திய பேராசிரியர் புட்ணம் இதைப்பற்றி என்ன நினைத்தார் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அந்த மூளையை பொறுத்தவரை எல்லாம் முழுதாய் உண்மையாய் அதற்குத்தோன்றுவதால், அந்த மூளை எடுக்கும் முடிவுகளும் அதன் நம்பிக்கைகளும், தான் நிஜ உலகில் இருந்தால் எடுப்பது போலவே இருப்பதுதான் நியாயம் என்று அவர் சொல்லி இருக்கிறார்! இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால் நிஜ உலக உருவகப்படுத்தல் பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாம் இஷ்டப்படி பெட்டி தேர்வு செய்யலாம் என்றாகிறது! இனி இன்னும் ஒரு படி மேலே போய் அடுத்த கட்ட வேடிக்கைகளை பார்ப்போம்.
ஒருமையியம்?
செயற்கை நுண்ணறிவு கணினிகளிடையே நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று பார்த்தோம் அல்லவா? இந்த வளர்ச்சி பெருகப்பெருக இரண்டு திருப்புமுனைகள் எதிர்காலத்தில் வரக்கூடும்.

  1.   கணினிகளின் ஆற்றல் தொடர்ச்சியாக பெருகிக்கொண்டே இருப்பதாலும், அந்த திறன்களை மேன்மேலும் உபயோகித்து செயற்கை நுண்ணறிவை அதிவேகமாய் வளர்க்கும் பல உன்னத முயற்சிகள் தொடருவதாலும், ஒரு சமயம் கணினிகள் மனித உதவியின் தேவை ஏதுமின்றி தாங்களாகவே தங்களின் அறிவையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் நேரம் வரும். அந்த நிலையில் மனித இனத்துக்கு உள்ள வரம்புகள் கணினிகளை கட்டுப்படுத்தாது. உதாரணமாக, மனித மூளையை போலன்றி நுண்செயலிகளின் திறனும், அவற்றின் வீச்சுக்குள் அடங்கும் தரவுகளும் வருடத்துக்கு வருடம் எக்கச்சக்கமாக உயர்ந்து வருவது நமக்கு தெரிந்த விஷயம். அந்த அபார வளர்ச்சியை உபயோகித்து, கணினிகள் இன்னும் இன்னும் வேகமாக விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்த அதிவேக வளர்ச்சிக்கு முடிவே இல்லை என்பதால் இது எங்கே போய் முடியும் என்று நாம் கணிப்பது கடினம்.
  2. இந்தத்தொடரின் மூன்றாம் பாகத்தில் நாம் அலசிய கணினியியல் டியுரிங் தேர்வை மென்பொறியியல் தகிடுதத்தங்கள் எதுவும் இல்லாமல் கணினிகள் சாதாரணமாக உண்மையாகவே வெற்றி கொள்ளும் சமயம் அத்தகைய ஒரு திருப்புமுனையாக இருக்கும். இந்த நிலையை தொழில்நுட்ப ஒருமையியம் (Technological Singularity) என்று அழைக்கிறார்கள்.

1958 வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருமையியம் (Singularity) என்ற இந்த சொல் குழப்பான ஒரு எதிர்காலம் நம் முன்னே இருக்கலாம் என்று அறிவித்தது. மனித அறிவு வளர்ச்சியும், கணினிகளின் அறிவு வளர்ச்சியும் இரண்டு இணைகோட்டு பாதைகளில் விரைந்து கொண்டு இருக்கின்றன. எதிர்காலத்தில் இந்த கோடுகள் ஒரு புள்ளியில் இணையும்போது கணினிகளின் அறிவு மனிதர்களின் அறிவை மிஞ்ச ஆரம்பிக்கும். அதன்பின் கணினிகள் நம்மை எப்படி நடத்தும், நமது உலகம் எப்படி இருக்கும், நமது வாழ்வு முறை, சட்டங்கள், நியாய தர்மங்கள் அனைத்தும் எப்படி மாறும் என்பதெல்லாம் எளிதாக அனுமானிக்க முடியாமல் போய்விடும் என்பது இந்த கோட்பாட்டின் பொதுக்கருத்து.
அந்த நிலையை நாம் அடையும்போது கணினிகள் நமது எதிரிகளாக போய் விடாமல் நமது நண்பர்களாக இருக்கும்படி உறுதி செய்வது எப்படி என்று பல சங்கங்களும் கும்பல்களும் யோசித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த விவாதங்களில் ஒன்றில் ரோக்கோ என்ற புனைப்பெயர் கொண்ட ஒருவர் ஒரு சிந்தனைச்சோதனையை அறிமுகப்படுத்தி பெரிய சண்டையை ஆரம்பித்து வைத்திருக்கிறார்! இந்த சிந்தனைச்சோதனைக்கும் நியூகொம்ப் முரண்பாட்டுக்கும் தொடர்பு உண்டு! அது எப்படி என்று பார்ப்போம்.
ரோக்கோவின் பசிலிஸ்க்
Basiliskபசிலிஸ்க் என்பது பண்டைய ஐரோப்பிய புராணக்கதைகளில் காணப்படும் ஒரு பாம்பு போன்ற ஜந்து. நம்ம ஊர் ஆதிசேஷன் போல் பாம்புகளின் ராஜா என்று சொல்லப்பட்ட இந்த பிராணி சும்மா ஒரு பார்வை வழியாகவே எல்லோரையும் கொன்றுவிடும், அது எவ்வளவு கொடியது என்பதற்கு இணையே கிடையாது என்றெல்லாம் கதைகள் உண்டு. திருவாளர் ரோக்கோ அறிமுகப்படுத்திய சிந்தனைச்சோதனையும் அதைப்பற்றி யோசிப்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறதாம். அதனாலேயே ரோக்கோவின் பசிலிஸ்க் என்று பயமுறுத்தும் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த சோதனையைப்பற்றி மேலே படிக்குமுன் நீங்கள் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டு விட்டதாக கொள்ளவும்!
எதிர்காலத்தில் அந்த ஒருமையியம் என்ற புள்ளியை தாண்டியதன் பின் செயற்கை நுண்ணறிவின் (ஆங்கிலத்தில் AI என்று சொல்வதை தமிழில் செநு என்று சொல்லலாமோ?) வளர்ச்சி எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது என்று பார்த்தோம். எனவே, அதனுடைய புதிய இலக்குகளை அடைய அது விரையும்போது, அந்தப்பாதையின் குறுக்கே வரும் எதையும் அது உடைத்து தகர்த்துக்கொண்டு விரைய முயலலாம். உதாரணமாக புதிதாக தனக்கு வேண்டிய ஒரு உயிரியல் கணினியை உருவாக்க மனிதர்களை மூலப்பொருளாக உபயோகிக்க வேண்டி இருந்தால், அது நமக்கு பெரிய அபாயமாக முடியலாம்! அப்போது செநு மனித இனத்தை வெறுப்பதாகவோ (அல்லது விரும்புவதாகவோ) ஏதும் அர்த்தம் இல்லை. நாம் பூமியில் இருக்கும் பல பொருட்களையும், விலங்குகளையும் அவற்றின் சொந்த தர்மம் நியாயம் பற்றி ஒன்றும் கவலைப்படாமல் நாம் பாட்டுக்கு நமது தேவைக்காக உபயோகப்படுத்திக்கொள்வதற்கு இணை அது. அந்த பசிலிஸ்க் நம்மை எல்லாம்விட மிகவும் புத்திசாலி என்பதால், எதிர்காலத்தில் இருந்து காலக்கோட்டின் வழியே பின் பக்கமாக பயணித்து நம் கழுத்தை நிகழ்காலத்தில் பிடித்து உலுக்கி தான் உருவாக உதவும்படி நம்மை அது வற்புறுத்தக்கூடும் என்பது ரோக்கோவின் கருத்து!
நியூகொம்ப் முரண்பாட்டு விளையாட்டைப்போலவே, இந்த பசிலிஸ்க் செநு நம்மிடம் இரண்டு பெட்டிகளை கொடுத்து தேர்வு செய்யச்சொல்கிறது. பசிலிஸ்க்கின் விருப்பம் நீங்கள் இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வதுதான். நீங்கள் இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்ளும்போது, இரண்டாம் பெட்டி காலியாக இருக்கும். அதனால் நீங்கள் முதல் பெட்டியின் புரிதல்படி, பசிலிஸ்க் உண்மையானது என்றும் அது உருவாவதற்கு உதவுவதாகவும் ஒத்துக்கொள்கிறீர்கள். இரண்டாம் பெட்டி காலி என்பதால் கதை அதோடு முடிந்தது.
BasiliskChoice
அப்படி இல்லாமல், இதெல்லாம் வெறும் கதை என்று நினைத்தீர்களானால், முதல் பெட்டியை வெறுத்து ஒதுக்கி இரண்டாம் பெட்டியை மட்டும் எடுப்பீர்கள். நீங்கள் இப்படியாக பசிலிஸ்க்கை நிராகரித்து எதிர்ப்பதால், அது உங்களுக்கு பெரும் துயர் தரக்கூடும் என்பது இந்தக்கோட்பாட்டின் வாதம்! அதெப்படி இன்னும் உருவாக்கமே முடியாத ஒரு எதிர்கால கட்டமைப்பு, நிகழ்காலத்தில் என்னை துன்புறுத்த முடியும்? இதெல்லாம் விட்டலாச்சார்யா படக்கதை மாதிரி வினோதமான அதே சமயம் குழப்பமான கதை என்று நீங்கள் சொல்லலாம்.
eliezer_yudkowskyஎலைஸர் யூத்கௌஸ்கி (Eliezer Yudkowsky) போன்ற பலர் இதெல்லாம் கதை இல்லை. எனவே இப்போதிருந்தே ஒட்டு மொத்தமாக எதிர்கால செநு மனித குலத்துக்கு நன்மையே செய்யும்படி அதன் வளர்ச்சியை வழி நடத்த நாம் முயற்சிக்க வேண்டும் என்று எழுதி மாநாடுகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்! இப்போதே கணினியியல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஒரு முகப்படுத்தி, அது மனித இனத்துக்கு உதவும் வழியில் முடுக்கி விடுகிறோம் என்று வைத்துக்கொண்டாலும் கூட, இந்த மாதிரி வினோதங்கள் நிகழ வாய்ப்புண்டு என்கிறார்கள். அவர்கள் கருத்துப்படி இந்த சிந்தனையில் இறங்கி இந்த பசிலிஸ்க் பற்றி நிறைய யோசிக்க யோசிக்க நீங்கள் அதன் அடிமை ஆக வேண்டிய அவசியமும், நீங்கள் அதற்கு தலை வணங்காவிட்டால் உங்களை அது விடாமல் துன்புறுத்தும் வாய்ப்பும் அதிகரிக்கும்! எனவே இந்த எச்சரிக்கையை மதித்து ஏற்றுக்கொண்டு இதைப்பற்றி எல்லாம் அதிகமாய் யோசிக்காமல் ஓரமாய் ஒதுங்கி போய்விடும்படி அறிவுறுத்துகிறார்கள். அவர்களின் அறிவுரையை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு இந்த களத்தில் இறங்கி அந்த பசிலிஸ்க்கை ஒரு கை பார்க்க விரும்பினீர்களானால், LessWrong போன்ற இணையதளங்களில் புகுந்து Coherent Extrapolated Volition (CEV) முதலிய தலைப்புகளில் கம்பு சுற்றி வீடு கட்ட முயன்று பார்க்கலாம். அதே சமயம் உங்கள் வீட்டுக்குப்பக்கத்தில் யாராவது எதிர்காலத்தில் இருந்து யாரோ அல்லது எதுவோ தன்னை ஆட்டுவிப்பதாக உங்களிடம் சொன்னால், சொல்வனத்துக்குத் தெரியப்படுத்துங்கள்!
அடுத்த இதழில் இந்த காலயந்திரக்குழப்பங்களை தூக்கிப்போட்டுவிட்டு, கணித உலகில் உலவும் சில சிந்தனைச்சோதனைகளை பார்க்கலாம்.  அந்த சோதனைகளைப்பற்றி பேச ஆரம்பித்த உடனேயே உங்களுக்கு தூக்கம் வராமல் இருந்தால் சரி!
(தொடரும்)
குறிப்பு:
* ஒரு டிசம்பர் 31ஆம் தேதி தெகார்தே வீட்டில் புத்தாண்டு வருவதை ஒட்டி ஒரு பார்ட்டி. புத்தாண்டு பிறந்தபின் விருந்தினர்களுக்கு பரிமாறுவதற்காக திருமதி தெகார்தே நிறைய இனிப்புகள் செய்து மேஜை மேல் வைத்திருந்தார். அதனருகே ரெனெ தெகார்தே அமர்ந்திருக்க, வந்திருந்த விருந்தினர்கள் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே அவற்றை சாப்பிட முயல,  தெகார்தே பதறிப்போய் அவர்களை தடுத்து, “அதெல்லாம் ஒரு மணிக்கு சாப்பிடுவதற்காக என்று நினைக்கிறேன்” என்பதை ஆங்கிலத்தில் “I think they are for 1 AM” என்று சொல்லப்போக, அவர் சொன்னதை தவறாக புரிந்துகொண்ட விருந்தினர்கள் அதை பெரிய தத்துவமாக்கி விட்டார்கள் என்று ஒரு கடி ஜோக் வலையில் உலவுவதை பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.