ஒரு கொலைகாரன் துப்பு துலக்குகிறான்
‘முரண்பட்டு பிரிந்து நிற்பவன்’ எனப் பொருள்படும் ரஷ்யச் சொல்லை உணர்த்தும் பெயர் கொண்ட மாணவன் ரஸ்கோல்னிகோவ் (roskol- dissent, schism, split), வட்டிக்கு கடன் கொடுக்கும் மூதாட்டி ஒருவரை “உயர்நன்மையின்” பொருட்டு கொலை செய்வதென்று திருகலான தர்க்க விசாரணையொன்றின் முடிவில் தீர்மானிக்கிறான்.
குற்றமும் தண்டனையும் நாவலின் கதை இந்தக் குற்றச்செயலுக்கு இரண்டரை நாட்கள் முன்னர் துவங்கி, அடுத்த இரு வாரங்களில் ரஸ்கோல்னிகோவ் எதிர்கொள்ளும் பல்வகை அனுபவங்களை விவரிக்கிறது. எது முதலில் நேரடியான துப்பறியும் கதையாகத் துவங்குகிறதோ, அது மெல்ல மெல்ல உளவமைப்பை விசாரிக்கும் நாவலாகிறது, ‘தேடப்படுவது’ குற்றவாளி என்றல்லாமல், தேடல் குற்றச்செயலின் உந்துவிசையை நோக்கித் திரும்புகிறது. துப்பு துலக்கும் போர்ஃபீரி பெட்ரோவிச், குற்றவாளி ரஸ்கோல்னிகோவை வீழ்த்தும் நோக்கத்தில் பொறுமையாய் வலை பின்னுகிறான் என்றாலும் ‘உண்மையான தேடல்’ கொலைகாரனாலேயே மேற்கொள்ளப்படுகிறது- தான் செய்த குற்றத்துக்குக் காரணமாய் அமைந்த தன் உள்நோக்கங்களை கண்டறிவதே இத்தேடலின் லட்சியம். கொலையாளி- துப்பறிவாளன் ரஸ்கோல்னிகோவின் வாதைக்குட்பட்ட பிரக்ஞையின் வலைகம்பிகளூடாகச் சலிக்கப்பட்ட திசைதடுமாற்றத்துடன் ஆழப் புதைந்திருப்பவை அனைத்தும் வெளிப்படுகின்றன. அவனைச் சூழ்ந்திருக்கும் பாத்திரங்கள் அவனது அகச் சிக்கல்களின் பிரதிபிம்பங்களாக இருந்து அவனது தனிப்பட்ட கேள்விகளுக்கான விடைகளின் சாத்தியங்களை உருவகிக்கின்றனர். இரட்டைப் பணியாற்றும் அவர்கள் (எப்படியும் ரஸ்கோல்னிகோவின் இரட்டையர்கள்தானே?), கதையை நகர்த்திச் செல்பவர்களாகவும் அவன் தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் எண்ணற்ற விவாதங்களை வெளிப்படுத்தி, அவற்றுக்கு ஒருவாறான உடனடி விமரிசன எதிர்வினையாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர்- “வேற்றாரை”க் கொண்டு மட்டுமே ரஸ்கோல்னிகோவால் தன்னைப் புரிந்துகொள்ள முடியும் என்பது போல்.
முதல் பக்கத்திலேயே ரஸ்கோல்னிகோவ் மனநிலையின் ‘தடயம்’ நமக்கு அளிக்கப்படுகிறது: “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சிக்க விரும்பினேன், ஆனால் அதே நேரம் அப்படிப்பட்ட சில்லறைத்தனங்கள் எனக்குச் சங்கடமாய் இருந்தன”. “அவன் தன் வீட்டுக்கார அம்மாளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ‘கடனில் மூழ்கியிருந்தான்” என்பதுவும் முதல் பக்கத்தில் சொல்லப்படுகிறது.. இங்கு துப்பறியும் கதை வகைமையின் எதிர்பார்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தாஸ்தோயெவ்ஸ்கி நாவலெங்கும் நிஜமானதும் பொய்யானதுமான தடயங்களை ஆங்காங்கே இட்டுச் செல்கிறார் (அவன் தன் லோகாயத தேவைகளுக்காகக் கொலை செய்கிறானா அல்லது அவன், “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சி” செய்கிறானா?).
ஆனால் அவன் முயற்சிக்கும் ‘விஷயம்’தான் என்ன? இக்கேள்விக்கு பதில் காண, காலக்கணக்கில் பின் சென்று, புரட்சிகர சிந்தனைகள் அவனது உளவமைப்பில் தாக்கம் செலுத்தத் துவங்கும் ஆறு மாதங்களுக்கு முற்பட்ட இடத்தைத் தொட வேண்டும். ஏற்கனவே சுட்டப்பட்டது போல், மனித உளவமைப்பைத் தீர்மானிப்பதில் சிந்தனைகள் ஆற்றும் பங்களிப்பை ஆய்வது தாஸ்தோயெவ்ஸ்கியின் நாவல் கலையின் மையப்புள்ளியாக இருக்கிறது. செர்னிஷேவ்ஸ்கியின் பகுத்தறியும் அகங்காரத்துவ கோட்பாட்டின் மையத்தில் இடம் பெற்றிருந்த அதீத அகந்தைப் போக்குகளுடன் பொது நலம் மற்றும் சமூக நீதி சார்ந்த கருத்துகள் கூடியதன் விளைவாக உருவான ஒரு வினோதமான கலவையே அன்றைய ரஷிய அறிவுப்புலத்தாரிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.. அதன் பாதிப்பில்தான் ரஸ்கோல்னிகோவ், “குற்றம் குறித்து,” என்ற தன் கட்டுரையை எழுதுகிறான் – அதில் அவன் அளிக்கும் புறவுருவச் சித்திரம் மானுடம் இரு குழுக்களாகப் பிளவுபட்டிருப்பதான அவனது தரிசனத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது: சாமானியர்கள், அசாதாரணர்கள் என்ற இருவகையினர். அவனது இந்த தரிசனம்தான், ‘அறத்துக்கும் மனச்சான்றுக்கும்” புதுப்பொருள் அளிக்கவல்ல, (தன்னால் தீர்மானிக்கப்பட்ட) “உயர்நன்மை” விழைவில் கொலையும் செய்யும் தார்மீக நியாயம் கொண்ட, நெப்போலிய ‘மாமனிதன்’ என்ற கருத்துருவை அவன் தகவமைத்துக் கொள்வதற்கும் அடிப்படையாகிறது. சிறுபான்மை எண்ணிக்கையிலுள்ள மேலோராகிய இப்படிப்பட்ட ‘மாமனிதர்’ மட்டுமே எதிர்காலத்தின் நம்பிக்கைகளுக்கு உரித்தானவர்கள்.
ஐந்து மாதங்கள் சென்ற பின்னர் அவனது எதிர்கால பலி, “கிழவி வீட்டில் தனியாய் இருப்பாள்,” என்ற தகவலை ஒரு வட்டிக்கடை உரையாடலின்போது அவன் ஒட்டுக் கேட்க நேரிடும். இதையடுத்து, உடனேயே, ஆறாம் அத்தியாயத்தில் உள்ள மதுசாலை காட்சியில், “அவனது தலைக்குள் குஞ்சு பொரித்துக் கொண்டிருந்த” “வினோதமான எண்ணம்”, பில்லியர்ட்ஸ் விளையாடிவிட்டு டீ குடித்துக் கொண்டிருக்கும் ஓர் அதிகாரிக்கும் மாணவனுக்குமிடையே நிகழும் உரையாடலை ஒட்டுக்கேட்கும்போது திட்டவட்டமான இறுதி உருவம் பெறத் துவங்கும். “”கிழவி மடாலயத்துக்கென ஒளித்து வைத்திருக்கும் பணம்,” “அனைத்து மானுடத்துக்கும் சேவை செய்ய” பயன்படும் என்பதால், தன்னால் எப்படி “கொஞ்சம்கூட வருத்தப்படாமல் அவளைக் கொல்ல முடியும்” என்று அந்த மாணவன் வட்டிக்கடை மூதாட்டியைப் பற்றி பேசுகிறான் (அவளையே ரஸ்கோல்னிகோவ் பலி கொள்ளப்போகிறான்), “நூறு உயிர்களுக்காக ஒரு மரணம்,” என்ற கணக்கை அந்த மாணவன் விவாதிக்கிறான், மூதாட்டியின் இரக்கமின்மையை அழுத்தம் திருத்தமாக விவரிக்கிறான். “ஆமாம், அவளுக்கு உயிர்வாழும் அருகதையில்லைதான்,” என்று அந்த அதிகாரியும் இறுதியில் ஒப்புக்கொள்கிறார். இந்தக் காட்சிதான் அவன் மனதில் இருந்த எண்ணம் முடிவாக குஞ்சு பொறித்து குற்றச் சம்பவம் நிகழும் இடத்துக்கு விரைவதற்கான அடைகாப்பானாக இருக்கிறது..
ரஸ்கோல்னிகோவ்வின் பலியை அசூயையேற்படுத்தும் மூதாட்டியாகப் படைத்ததுமல்லாமல் தாஸ்தாயெவ்ஸ்கி மிகவும் கவனமாக இந்தக் குற்றச்செயலுக்கு இணக்கமான வாசக மனநிலையையும் கட்டமைக்கிறார் – இதற்காகவே, நாவலின் முந்தைய அத்தியாயங்களில் விவாதத்தின் மனிதநேய தரப்பை உறுதியானதாக நிறுவிவிடுகிறார். ரஸ்கோல்னிகோவ் பீட்டர்ஸ்பர்க்கில் சீறழிந்த சுற்றுப்புறத்தில் வாழ்வதை அழுத்தமான வண்ணங்களில் விவரிக்கிறார்- அதன் லாகிரிக்கடைகள், விலைமாதர் இல்லங்கள், குடிகாரர்கள், பாலியல் வக்கிரங்கள் என்று பல. இது தவிர குடிகாரன் மார்மலெடோவ்வுடன் ஒரு சந்திப்பு, விலைமாதாய் வாழும் தன் மகள் சோனியாவின் தியாகத்தை நம்பி அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். துயரைக் காண்கையில் அவனுள் தன்னிச்சையாய்த் தோன்றும் கருணையும், தன் கருணையின் தாத்பர்யங்களை தர்க்கப்பூர்வமான பகுப்பாய்வுக்கு உட்படுத்துகையில் அவனுள் தோன்றும் சுய வெறுப்புமாய் ரஸ்கோல்னிகோவின் உள்ளத்திலுள்ள பிளவை இந்தக் காட்சி சித்தரிக்கிறது- .ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் மார்மலெடோவ் வேதாகமக் கருத்துகளை வேறு சொற்களில் எதிரொலிக்கிறான், அனைத்தையும் மன்னித்தணையும் கிறிஸ்துவின் அருளோடு படித்தவர்களின் பகுத்தறிவை எதிர்மறை ஒப்பீட்டுக்கு உள்ளாக்குகிறான் (“உன்னைப் பார்த்து நாங்கள் ஏன் பரிதாபப்பட வேண்டும்?”). இறுதியில் ரஸ்கோல்னிகோவ் அவனது ஜன்னலில் சில்லறைப் பணத்தை விட்டுச் செல்லும்படியாகிறது, ஆனால் உடனேயே அவன் தன் செயலை அருவருக்கிறான் (“என்னவொரு முட்டாள்தனமான வேலையைச் செய்திருக்கிறேன்… அவர்களுக்கு சோனியா இருக்கிறாள், எனக்கு இதன் தேவையிருக்கிறது…”).
ஒரு கொடுங்கனவில் சுற்றித்திரிவதுபோல் கிழ வட்டிக்கடைக்காரியைக் கொன்றபின் ரஸ்கோல்னிகோவ் தன் நினைவழியத் தடுமாறும் பாலங்களும் முகப்புகளும் கால்வாய்க்கரைகளுமாய் காட்சியளிக்கும் பீட்டர்ஸ்பர்க்கின் சுற்றுப்புறம், மருட்சியின் உச்சமாக அவனது பௌதீக மனவெளியாகிறது. “குற்றமும் தண்டனையும் நாவலில் மேலைக் கதைமரபுக்குரிய குற்றவியல் மிகையுணர்ச்சிப் புனைவெனும் வகைமை பீட்டர்ஸ்பர்க்கின் மன, ஆன்மிக நகரமைப்புக்குரிய ஒன்றாகவே மாற்றப்பட்டு விடுகிறது,” என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜான் பெய்லி.. ஆம், குற்றமும் தண்டனையும் மனவெளி உருமயக்க நாவல்தான், குறைந்தபட்சம் அதன் நாயகனுக்காவது அப்படிப்பட்ட அனுபவத்தை அளிப்பதாக இருக்கிறது. ஐந்தாம் அத்தியாயத்தில் வரும் கிறுக்குத்தனமான கனவின் வழி நமக்கு இதன் அறிமுகம் ஏற்கனவே அளிக்கப்பட்டு விடுகிறது:: குடியானவன் மிகோல்கா குடிபோதையில் ஒரு கழுதையைச் சிறிதும் இரக்கமின்றித் துன்புறுத்துகிறான் (சாட்டையால் அடிக்கிறான், தடியால் தாக்குகிறான், ஒரு தீர்க்கதரிசனம்போல், “அவளைக் கோடரியால் போடும்படி” வலியுறுத்தப்படுகிறான்); சிறுவன் ரஸ்கோல்னிகோவ் அழுதுகொண்டே உணர்ச்சி வேகத்தில், “ரத்தம் வடியும் அதன் செத்துப்போன முகத்தைத் தன் கரங்களால் அணைத்துக் கொள்கிறான, அதற்கு முத்தம் தருகிறான்… ஆவேசத்தில் தன் சின்னஞ்சிறு முஷ்டிகளால் மிகோல்காவை அடிக்கப் பாய்கிறான்”. ‘மோசமான’ இந்த கனவிலிருந்து விழிக்கிறான் ரஸ்கோல்னிகோவ், அவனது உடல் ‘நொறுங்கியது’ போலிருக்கிறது, அவனது ஆன்மா, ‘இருண்டு, கலக்கமுற்றிருந்தது”.
குற்றம் என்னவோ நேர்த்தியாய் செய்யப்பட்டதல்ல- அது குறித்த அப்பட்டமான விவரணைகள் அவரது சமகால வாசகர்களுக்கு அதிர்ச்சியளித்தன. இங்குதான் யதார்த்தம் (அவனது அகங்காரத்தால் இதுகாறும் அது எளிதில் வழிக்குக் கொணரப்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது) அவனை எட்டிப் பிடிக்கிறது: கிழவி முன்ஜாக்கிரதையுடன் திறந்து வைத்திருந்த கதவுக்குத் தாழிட ரஸ்கோல்னிகோவ் மறக்கிறான், அவளது ரத்தத்தைக் கொண்டு தன் இரு கரங்களையும் கோடரியையும் கறைப்படுத்திக் கொள்கிறான், பொருட்களைப் புரட்டிப் போடுகிறான், முன்வரை செய்யப்பட முடியாத மெய்ம்மையின் உச்சக்கட்ட எள்ளலாக, தன் சகோதரி கொல்லப்பட்டது தெரியாமல் திறந்த கதவின் வழி நுழையும் கிழவியின் சகோதரி லிஜாவெத்தாவையும் கொலை செய்ய வேண்டியதாகிறது (“அவள் தன் இடது கையை மட்டுமே கொஞ்சமாக உயர்த்தி மெல்ல அவனை நோக்கி நீட்டினாள், அவனைத் தள்ளிவிட முயற்சி செய்வது போல்”). தாஸ்தயெவ்ஸ்கி தேர்ந்த கதைசொல்லியாக அவனது மனவுலகின் இருவேறு துருவங்களையும் அருகே கொணர்கிறார்- அவனது மனசாட்சியின் அருவருப்பு “அவனுள் உயர்ந்து வளர்கிறது”, கோடரியும் கையுமாக அவன் கதவின் மறுபுறத்தில் இருக்கும் அன்னியர்களைச் செவிக்கையில், அவனது அகங்காரம் “வையவும், கேவலப்படுத்தவும்” உரக்கக் கத்தச் சொல்லி அவனைத் தூண்டுகிறது.
முதலாம் பகுதி முழுமையும் வாசகன் ரஸ்கோல்னிகோவ்வின் பிரக்ஞைக்கு மிக நெருக்கமாய்த் தொடர்ந்தாலும், அவனது பார்வை ரஸ்கோல்னிகோவ்வின் பார்வையினின்று இப்போதே விலகத் துவங்கிவிடுகின்றது. நாவலில் ரஸ்கோல்னிகோவ் தனக்குரிய மெய்க்காலத்தில் வாழ்ந்தாலும், அவனை உந்தும் விசைகளின் ஆதார சாத்தியத்தைத் தேடி வாசகன் கடந்த காலத்துள் ஆழ அழைத்துச் செல்லப்படுகிறான். நினைவுகூரலின் வசதி வாய்க்கப்பெற்ற வாசகன், நிகழ்வுகளுக்கும் ரஸ்கோல்னிகோவ் தனக்கென வரிந்து கொண்டுள்ள லட்சியங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் வளர்ந்துவரும் பெரும்பிளவை அதற்குள் அவதானிக்கத் துவங்கிவிடுகிறான். ஒப்புநோக்க ஒழுக்கத்தையும் கொலைச்செயலையும் சமதளத்தில் இருத்தும் சாதுர்ய தர்க்கத்தை இட்டுக்கட்டி ரஸ்கோல்னிகோவ் தொடர்ந்து இப்பிளவை நிரப்பும் பாலத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறான். குற்றத்தின் பின்விளைவுகளிலிருந்து தொடங்கி ரஸ்கோல்னிகோவ்வின் குடும்பத்தினர் பீட்டர்ஸ்பர்க்கில் வந்திறங்குவதோடு முடியும் இரண்டாம் பகுதியில் தான் இதுகாறும் விலகும் பார்வைக் கோணங்கள் இணைபுள்ளியை நோக்கித் திரும்பத் துவங்குகின்றன.
இரண்டாம் பகுதியின் துவக்கத்தில் ரஸ்கோல்னிகோவ் “சுரம் கண்டவனாக” குற்றத்தின் தடயங்கள் அனைத்தையும் மறைக்க முயற்சித்து மூர்ச்சையையொத்த முழுமறதி நிலையை எய்துகிறானெனினும், அவன் விழித்துக் கொள்ளும்போது காவல் நிலையம் வருமாறு அவனுக்கு இடப்பட்ட ஆள்கொணர்வு உத்தரவை பெற்றுக்கொள்ள நேரிடுகிறது. பின்னர் இது ஒருபிழைபிராந்தியாக அறியப்பட்டாலும் அதைவிட முக்கியமாக அவனது அகவிசாரணையைத் துவக்கி வைப்பதாக இதுவே இருக்கிறது, அவன் தன் உந்துவிசையைத் தேடலாகிறான். பீட்டர்ஸ்பர்க் நகரூடான அவனது இருப்புகொள்ளா நிலைபெயர்தல்கள் மூன்று நாட்கள் நீடிக்கும் ஜன்னிக்காய்ச்சலுக்கு அவனைக் கொண்டு செல்கின்றன. அவனது தமக்கை துன்யாவின் வருங்கால கணவன் பீட்டர் லூஜின் வந்து சேர்கிறான், முன்னேற்றம் மற்றும் “நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” ரக பொருளாதாரக் கோட்பாடு முதலான பீட்டர் லூஜின்னின் ரசக்கேடான பொதுவிளம்பல்களில் ரஸ்கோல்னிகோவ் காருண்ய மானுடநேயம் மழிக்கப்பட்ட தன் தத்துவத்தின் அதோமுகத்தை தரிசிக்கிறான். கற்றோர் மாட்டு குற்றப்பான்மை அதிகரித்தல் குறித்து இவர்களின் உரையாடல் திரும்புகையில் ரஸ்கோல்னிகோவ் இடையீடு செய்யும் வகையில், “நீ இத்தனை நேரம் செய்த போதனைகளின் உட்பொருள் என்னவென்று யோசித்துப் பார், ஊராரைக் கத்தியால் குத்திக் கொண்டே போகலாம், தப்பில்லை என்று அர்த்தமாகும்”, என்று சொல்கிறான். ஆனால் உள்ளூர இது தன் கோட்பாட்டை அபாயகரமாக நெருங்கி வருகிறது என்பதை அவன் அவதானித்துவிட நேர்கையில், தன் பிரதிபிம்பம் லூஜினில் தென்படுவது குறித்து சுயவெறுப்பு மேலிட்டு ரஸ்கோல்னிகோவ் தன் அறையிலிருந்து எல்லாரையும் உதைத்து விரட்டுமளவு ரகளை செய்யுமிடத்துப் போய் நிற்கிறான்.
தன் மாபெரும் வாதத்தின் ஒரு தரப்பு இவ்வாறு அஸ்திவாரத்திலேயே ஆட்டங்கண்டுவிடுவது அவனை நிலைதடுமாறச் செய்கிறது, ஆதாரமின்மையால் உருவாகும் பாழ்வெளியை அவனது அகங்காரம் எழுந்து முட்டுக் கொடுத்து நிரப்புகிறது. இதனால் அவனது துணிச்சல் எந்த அளவுக்குப் போகிறதென்றால், தன் குற்றம் குறித்து ஜாம்யெட்டோவ்விடமே போட்டுப் பார்க்கிறான்: “கிழவியையும் லிஜாவெத்தாவையும் கொன்றது நானாக இருந்தால் எப்படி?”. தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் தேவைக்கும், தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் நாட்டத்துக்கும், இடையில் தாறுமாறாகத் தள்ளாட்டம் போடும் ரஸ்கோல்னிகோவ், மெல்ல மெல்ல தனக்கே அன்னியனாகிறான்- இப்போது, மானுடத் துணையின் ஆறுதல் அவனது அவசரத் தேவையாகிறது. விதி அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறது, குடிகார மார்மெலதோவ் குதிரைகளால் மிதித்துத் தள்ளப்படும் விபத்தின் வாயிலாக. சோனியாவின் குடும்பத்தினருக்கு உதவியபின் அவன் தான் “உயிர்த்திருப்பதாய்” உணர்கிறான், “குரூபக் கிழம்” செத்துப் போனதோடு தன் வாழ்வு முடிந்துவிடவில்லை என்று அவன் புரிந்து கொள்கிறான். தனக்குப் போதுமான மனவுறுதி உண்டா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி என்று அவன் தீர்மானிக்கிறான், தான் “ஒரு சதுர கனஅடியில் வாழ” தயாராய் இருப்பதாய் உறுதி பூண்கிறான். இது தன் சகோதர மானுடர்களுடன் இணக்கப்பூர்வமான புரிந்துணர்வை ஒரு குறுகிய காலத்துக்கு தருவித்துக் கொடுத்தாலும், இரண்டாம் பகுதியின் முடிவில் அவன் மூர்ச்சையாகிறான்- அப்போதுதான் பீட்டர்ஸ்பர்க்குக்கு வந்து சேர்ந்த தன் தாயையும் சகோதரியையும் தழுவியணைத்துக்கொள்ளத் தாளா வேதனையை உணர்கிறான் அவன். “திடீரென்று அவனால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விழிப்புநிலை ஓர் இடி போல் அவனைத் தாக்கிற்று”, தன் குற்றச் செயலின் சுமையை அவன் அதன் அத்தனை உக்கிரத்தோடும் உணர்கிறான்- இப்போது அவன் தான் மிக நெருக்கமாய் நேசிப்பவரகளிடமிருந்தும் துண்டிக்கப்பட்ட தீவாந்தரமாகத் தனித்திருக்கிறான், இனி அவன்தான் தன்னை அழுத்தும் பாரத்தைச் சுமந்தாக வேண்டும், எப்போதும்.
(தொடரும்)
Sources :
- Crime and Punishment ,Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky
- Dostoevsky: A Writer in His Time by Joseph Frank