விடைபெற்ற கோடை
வெக்கையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு
வெறும் வெளிச்சத்தை உலர்த்துகிறது வானம்
நீண்ட நாள் ஜுரம் வடிந்து
குளிர்ந்து கிடக்கிறது மண்
கோடையை
ஏதோவொரு தூரதேசத்திற்கு வழியனுப்பி ஆயிற்று.
கொடுங்கோல்தான்
கொடூரக் கொடுமைதான் என்றாலும்
ஊர்முழுக்க
சோகமாய் ஒரு சோம்பல் பரவியிருக்கிறது.
oOo
நேர்முகம்
நான்கைந்து இருசக்கர வாகனங்கள்
வரிசையாக ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால்
அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தந்தானே
அதுபோக்குவரத்து நெரிசல் மிகுந்த
மாநகரச் சாலையின் ஓரத்தில்
அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன்பாக
எனது வாகனத்தையும் நிறுத்திவிட்டு
மாமன்மகனின் நேர்முகத் தேர்விற்காக
இருவரும் நுழைந்தோம்
கட்டிடத்தின் உள்ளே
தேர்வு முடிந்து
மூன்று மணிநேரங்கள் கழிந்து
நுழைந்த வழியாகவே
வெளி வந்தோம் இருவரும்
நிறுத்திய இடத்தில்
ஒருவண்டியையும் காணாது
திகைத்து நின்றேன்
அடித்துச் சொன்னான்
மாமன்மகன்:
‘இதுவல்ல
கட்டிடத்தின் முகப்பு
பின்புறம் இருக்கிறது’
பாவம்
அந்த அடுக்குமாடிக் கட்டிடம்
மீண்டும் மழை
வெயில் படகோட்டிக் கொண்டிருக்கும்
தெரு குட்டைகள்.
இலை படுக்கைகளிலிருந்து உருண்டு விழும்
குட்டி மழைகள்.
பெருமழை சென்ற பின்னும் கையசைத்துக் கொண்டிருக்கும்
காலைத் தூரல்.
உறங்கியபின் விடியும் தீபாவளியென
இரவு மழை.
அடைந்த அறைகளின்
கண்ணாடி ஜன்னல்களை அறையும்
ஊமை மழை.
ஒதுங்கிய கடை வாசற் தெரு மேல்
மத்தாப்புகளென தெறிக்கும்
திடீர் மழை.
இப்போதே பெய்துவிடுவதுபோல
எப்போதும் கருத்திருக்கும் வானம்.
மீண்டும் மழைக்காலம்.
ஒரு முறையாவது
குடையின் அடியில்
நனைவேன் என நினைக்கிறேன்.
oOo
பைத்தியக்காரர்களின் வீடு
இரண்டுபேர்தான்.
நாற்புறமும் வாசல் வைத்த வீடு.
வெளிச்சம் அணையாத
அந்த ஜன்னல்,
பகலில் மஞ்சளாகவும்
இரவில் இளஞ்சிவப்பாகவும் மாறும்.
காலையில் எழுந்து
சமைப்பார்கள்.
பாத்திரங்கள் குலுங்க, துலங்க
சமைத்து முடித்து
சாப்பிடுவார்கள்.
பின் ஒருவர் இங்கு செல்ல,
ஒருவர் அங்கு செல்ல
ஜன்னல் கண்ணாடியில்
மழை கொட்டிக்கொண்டேயிருக்கும்.
உலராத துணிகள்
வீடெங்கும் தொங்கியிருக்க
பாத்திரங்கள் உருண்டு குலுங்கி
ஜன்னலில்
இளஞ்சிவப்பு வெளிச்சம்
மினுக்கத் துவங்கும்.
oOo
வீடு திரும்புதல்
எப்பொழுதும் வெளியே
இருப்பதற்காக
எப்படி ஒரு வீடு செய்கிறோம்.
நெடுந்தூர பயணங்களில்
மனது வீடுசென்று சேர்கிறது.
வீட்டின் தனிமையில்
மனம் வெளியெங்கும் அலைகிறது.
புதுச் சுண்ணாம்பின் மணத்துடன்,
யாரோவென நின்றிருந்தது.
நம் காலடிகளின் சத்தங்களில்
அது சிரிக்கின்றதா?
நம் எண்ணங்களின் காற்றை
அது சேமிக்கிறதா?
நம் உறக்கங்களின் உலகம்.
அங்கு குழாய்கள் உடையும்,
தண்ணீர் கசியும்.
அது நம்முடையதில்லாமல் போவதற்குள்
வீடு திரும்ப வேண்டும்.
எப்பொழுதும் வெளியே
இருப்பதற்காக
எப்படி ஒரு வீடு செய்கிறோம்.
இரவிற்காக காத்திருக்கிறது
நம் வீடு.