மறந்து தொலைக்கிறது. என்ன செய்ய?
நண்பர் ராம்ஜியாஹூ சில பெயர்கள் விட்டுப் போனது பற்றி எழுதியிருந்தார். எனக்கு இப்பெயர்கள் புதியன. எல்லா எழுத்துக்களையும் ஒருவர் தெரிந்திருப்பது துர்லபம். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திய எல்லை உண்டு தானே. தெரிந்திராதது ஒரு புறம் இருக்க, தெரிந்தவர்களே, படித்த எழுத்துக்கள் கூட ஒரு சமயம் மறந்துவிட்டால் என்ன செய்ய?
மலேசியா பற்றிப் பேசினேன். எனக்குத் தெரிந்த, நான் படித்து மகிழ்ந்த எழுத்துக்களையே நான் மறந்து விட்டிருக்கிறேன். உதாரணமாக ஜெயந்தி சங்கர். இவரை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. மறக்க முடியாதபடி, நிறைய சிறப்பாக எழுதியிருக்கிறார். இவரது கதைகளின் முழு தொகுப்பே வெளிவந்துள்ளது. அது ஜெயந்தன் பரிசும் பெற்றிருக்கிறது. சிங்கப்பூர் வாசி. இன்னொருவர் கமலம் அரவிந்தன். அவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.. தமிழிலும் எழுதுகிறார். தமிழ்க் கொச்சையில் மலையாள மணமும் கலந்து வந்தால் எப்படி இருக்கும்? அவர் எழுத்துக்கள் மலேசியாவிலுள்ள பத்திரிகைகளிலும் இங்கு வல்லமை இணைய இதழிலும் பிரசுரமாகின்றன. இவர்களுக்கெல்லாம் மூத்தவர், இளங்கண்ணன், மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர். இவரது இரு நாவல்கள் படித்திருக்கிறேன். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முந்தைய சிங்கப்பூரின் வாழ்க்கையும், காட்சிகளும் நம்முன் திரையோடும். லீ க்வான் யூக்கு முந்திய சிங்கப்பூர். மாட்டுத் தொழுவங்களும், பால்காரர்களும் காட்சி தரும் சிங்கப்பூர்.
மாதவன் இளங்கோ பெல்ஜியத்தில் வாழ்கிறவர். பழமை பேசி என்ற பெயரில் தன் கிராமத்து நினைவுகளையும் மொழியையும் மறக்காது தான் இப்போது வாழும் இடத்தின் அனுபவங்களையும் பதிவு செய்பவர் வாழ்வது அமெரிக்காவில், மிச்சிகனில் என்று நினைவு. அந்தியூர்க் காரர். இவர்கள் இருவரும் எனக்குத் தெரியவந்தது வல்லமை இணைய இதழ் மூலம். வல்லமை இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்றதன் மூலம் தெரிய வந்தவர்கள். தமிழர்களின் அமெரிக்க, ஐரோப்பிய வாழ்க்கை நமக்கு பரிச்சயப்படுத்துகிறவர்கள்.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இப்போது ஆஸ்திரேலியாவில் வாழும் கே. எச் சுதாகர் கதைகளில், ஆஸ்திரேலிய, நியூஸீலண்டு வாழ்க்கையின் அனுபவங்கள் சில ஆச்சரியமளிப்பன. ரஸாயன, மின்னணுக் கழிவுகளை இட்டு நிரப்பிய இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நம்மூர் மாதிரியே தான். மெதேன் வாயு மேலெழ, வீட்டைக் காலிசெய்து போகிறார்கள். இதான் சாக்கு என்று சீப்பா வாங்கிப் போடும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் நம்மூர் ப்ராண்ட் என்று நினைக்க வேண்ட்டாம்.அங்கும் உண்டு. நியூ ஸீலண்டில், 18 வயதானால் பிள்ளைகள் பெற்றோருடன் இருக்கவிடுவதில்லை. தனியாகப் போய் தன் வாழ்வை நிர்ணயித்துக்கொள்ள அரசு உதவி செய்கிறது. வேலைக்கு மனுச் செய்த இடத்திலிருந்து, “உங்களை விட அனுபவஸ்தர்கள் கிடைத்துவிட்டதால், உஙகளை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாது போனதற்கு வருந்துகிறோம் என்று ஒழுங்காக பதில் வந்துவிடுகிறது. அந்த சமூகத்தில் தான், சாக்லெட் சாப்பிட்டு எறிந்துவிட்டுச் செல்லும் சிறுவனைக் கூப்பிட்டு அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடும் படி தெருவில் இருப்பவரிடமிருந்து கட்டளை வரும். இது போன்ற காட்சிகள் ஜெயந்தி சங்கரின் கதைகளிலும் வரும்.
இன்னொரு மிக முக்கிய மனிதர். இளங்கோ. ஆனால் இவர் ஆங்கிலத்தில் எழுதும் நாடகாசிரியர். இப்போதைய நம் கதைக்கு உதவமாட்டார்.
இவ்வளவு விஷயங்கள் இருக்க, இவ்வளவையும் எப்படி மறந்தேன் தெரியவில்லை.
நன்றிகள் பல – எவ்வளவு பெரிய வார்த்தைகள்- நீங்கள் அறிந்த / வாசித்த படைப்பாளிகளில் 0.0000001% மட்டுமே நாங்கள் வாசித்து இருப்போம்/ வாசிக்கிறோம்