கேள்வி 12. பூலாத்தூர், பூலாங்குறிச்சி என்ற பெயர்களில் உள்ள ‘பூல்‘ என்ற மரத்தின் அறிவியல் பெயர் என்ன?
து.ராஜகோபால், திண்டுக்கல் – 5
‘பூல்’ என்றால் பூ அல்லது மலர் என்று பொருள். திண்டுக்கல் மாவட்டம் மலர் சாகுபடியில் முன்னணி மாவட்டம். ஆகவே, பூல் பற்றிய கேள்வி உங்களிடமிருந்து வந்துள்ளதை வரவேற்கவேண்டும்.
திண்டுக்கல்லில் பேகம்பூர் என்ற பகுதியில் நிறைய இஸ்லாமியக் குடியிருப்புகள் உண்டு. அவை திப்பு சுல்தானால் உருவாக்கப்பட்டவை. திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் கோட்டையும் உள்ளது. திப்பு சுல்தானுக்கு பூ மீது கொள்ளை ஆசை. பெங்களூரில் உள்ல தாவரவியல் பூங்காவை உருவாக்கிய திப்புவுக்கு ‘குல்மொஹர்’ என்ற செம்மலர் மீது கொள்ளை ஆசை. இதை தீக் கொன்றை என்றும் ‘flame of the forest’ என்றும் ‘may flower’ என்றும் அழைப்பார்கள். பெங்களூரையே குல்மொஹர் மரங்களால் அலங்காரப்படுத்தியவர் திப்பு சுல்தான். உங்கள் கேள்வியை வேறு கோணத்திலும் ஆராயலாம்.
பூல் என்று எதுவும் மரம் இல்லை. பூலா என்ற மரம் உள்ளது. அதுவும் தமிழ்ச் சொல் இல்லை. பூலா என்பது மலையாளச் சொல். பூலா என்றால் இலவு மரம். இலவில் வெள்ளை இலவு என்றும் செவ்விலவு என்றும் இருவகை உண்டு. செவ்விலவையை, ‘கோங்கு’ என்று செந்தமிழில் அழைப்போரும் உண்டு.
செவ்விலவின் அறிவியல் பெயர், ‘BOMBAX MALABARICUM’ அல்லது ‘ERIODENDRON ANFRACTUOSUM’. வெள்லை இலவின் பெயர், ‘BOMBAX PENTANDRUM’. செவ்விலவு பிரம்மாண்டமான மரம். உயரத்தில் ஓக் மரத்தை அடுத்து இதைச் சொல்வதுண்டு. 140 அடி உயரமும் 20 அடை சுற்றளவுடனும் வளரக்கூடியதால், மலைப்பகுதியில் மண்ணரிப்பும் நிலச்சரிவும் நிகழாமல் பாதுகாக்க நடவேண்டும். பழனிமலைப் பகுதியில் (கொடைக்கானல் -மலைத்தொடர்) இழந்த காடுகளை மீட்க ராஜீவ் காந்தி ஆட்சியில் நடப்பட்ட செவ்விலவு மரங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டதை தோணி மலைப்பகுதியில் பார்வையிட்டால் புரியும். செவ்விலவு மரங்களை உலரவைத்துப் பழங்குடி மக்கள் உணவாகவும் பயன்படுத்துவார்கள். உலர்ந்த செவ்விலவு பூக்களுடன் சம அளவு கசகசவை அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து தினமும் 50 மில்லி குடித்தால் ரத்தப்போக்கு ரத்தப்பித்தம் தணியும் என்கிறது ஆயுர்வேதம்.
oOo
கேள்வி 13 : எனக்கு மன்னார்குடியில் நிலம் உள்ளது. நான் சிக்கரி பயிரிட விரும்புகிறேன். விதை எங்கு கிடைக்கும்? நமது தட்ப வெட்பம் பொருந்தி வருமா?
-எம்.சுவாமிநாதன், திருச்சி.
உங்களிடம் நிலமிருந்தால், அப்படிப்பட்ட நிலம் உங்கள் பணியிடத்திலிருந்து பல மைல்கள் அப்பால் இருந்தால், மரங்களைப் பயிரிட்டுப் பசுமைவிருந்து பெறுக. தேவையற்ற வீண் யோசனை ஏன்?
எனினும், சிக்கரி பற்றிய தகவல்களை நாம் அறிவது அவசியம்.
சிக்கரியின் அறிவியல் பெயர் சிக்கோரியம் இண்டைபஸ் (CICHORIUM INTYBUS). இது ஐரோப்பா, ருஷியா, மேற்கு ஆசியாவின் குளிர் மண்டலப்பயிர். லெட்டுஸ் போன்ற சீமைக்கீரை, முள்ளங்கி, பீட்டுக் கிழங்குபோல நீண்ட கிழங்கும் வழங்கும் டெய்ஸி குடும்பம். இச் சிக்கரிப் பயிர் இலைகளை மேல் நாட்டினர் சாலட் செய்வார்கள். சற்றுக் கசப்புத் தன்மையுள்ளது. பெரும்பாலும் சிக்கரிக்கிழங்கு காஃபியுடன் கலக்கப்படுகிறது. சிக்கரி ஒரு களைப்பயிர். ஒரு முறை நட்டால் போதும். விதையுதிர்த்து மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டேயிருக்கும். மன்னார்குடியில் வருவது சந்தேகம். ஊட்டி, கொடைக்கானலில் வளரும். இது மலிவுப்பயிர். அப்படியே பயிர் வந்தாலும் லாபம் இல்லை. வட இந்தியாவில், பாகிஸ்தான்-பஞ்சாப் பகுதியில் வர வாய்ப்புண்டு.
விலையில்லாமல் வளரும் இதன் கிழங்குகளை உலர வைத்து, வறுத்துப் பொடி செய்து காஃபித் தூளில் கலக்கிறார்கள். வெளி நாட்டில் திரவ வடிவில் கலப்படம் ஆகும். சிலருக்கு சிக்கரி போட்ட காஃபி பிடிக்கும். தலைவலியை ஏற்படுத்தும். சிக்கரி உடலுக்கு ஆரோக்கியம் தராது. காஃபி விலை உயர்வால் ஏழைகள் சிக்கரி கலந்த காஃபியைப் பயன்படுத்துவார்கள். ஓட்டல்களில் டீக்கடைகளில் வழங்கப்படும் காஃபியில் சிக்கரி கலப்படம் உண்டு. சுத்தமான காஃபி கட்டுப்படியாகாது. சிக்கரி கலந்த டிக்காக்ஷன் சொட்டுவிட்டல்போதும், நிறமும் கசப்பும் வழங்கும். காஃபியை ரசித்தும் ருசித்தும் அருந்துபவர்கள் சிக்கரி இல்லாத சுத்தமான காபியை விரும்புவார்கள். கடைகளில் ப்யூர் காபி தூளும் கிடைக்கும், சிக்கரி கலந்த காபித்தூளும் கிடைக்கும். அவரவர் சௌகரியம் அவரவர் வாங்குவது. இப்படி நிலவரம் உள்ளபோது மன்னார்குடி நிலத்தில் சிக்கரி சாகுபடி செய்து நஷ்டப்பட வேண்டாம் என்பது என் கருத்து. விதைவாங்க நீங்கள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டால்தான் முடியும். சிக்கரி வாங்கும் முன்பு பாஸ்போர்ட் விசா எல்லாம் ரெடி செய்ய வேண்டும். செய்வீர்களா?
0Oo
கேள்வி 14 : மூலிகை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வழி உண்டா? சரியானபடி எந்தெந்த மூலிகைகளுக்கு ஏற்றுமதித் தேவை உள்ளது? சற்று விவரமாகப் பதில் கூறுங்கள்.
-வே.வெற்றிவேலன், மதுரை.
முதலாவதாக முக்கிய மூலிகைகள் பற்றிய ஒரு பட்டியல் தருகிறேன். இவை எல்லாமே ஏற்றுமதியாகின்றன.
தாமரைவிதை, மிளகு, சுக்கு, திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, சீரகம், சோம்பு, வெந்தயம், ஓமம், பெருங்காயம், கொத்தமல்லி, சதகுப்பை, வசம்பு, வால்மிளகு, தேஜபத்ரம், அய்மோதம், வனில்லா, குங்குமப்பூ, கஞ்சா, போஸ்த்தக்காய், தென்னை, கண்வலிக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு, கீழா நெல்லி, கரிசாலை, சர்ப்பகந்தி, நித்திய கல்யாணி, சென்னா, செம்பருத்தி, மருந்து இர்க்கன், வல்லாரை, ஆவாரை, சதாவரி, நன்னாறி, பச்சோலி, வெட்டிவேர், ஓரிதழ் தாமரை, ஜெரேனியம், வெள்ளை முசலி, அமுக்குரா, நிலவேம்பு, காட்டாமணக்கு, ஆமணக்கு, வில்வம், வேம்பு, ப்லாசு, கோடம்பதி, புங்கு, எட்டி, நாவல், தேற்றான், அசோகம், வெப்பாலை, புண்ணை, குமிழ், அத்தி, மருதம், கலயுறுவி, நெல்லி, எலுமிச்சை, தான்றி, கஸ்தூரி மஞ்சள், துலசி, பிராய், மதனகாமப்பூ, வேம்பாரம், சித்தரத்தை, பேரரத்தை, பூசணி (வெள்ளை), சோத்துக்கத்தாழை…
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லிக்கொண்டே போனல் இன்னம் ஆயிரம் உண்டு. லாபம் உள்ளவை எவை? லாபம் இல்லாதவை எவை? என்று கவனித்தால் மூலிகை மரங்கள் களை போல் மண்டி வளரக் கூடியவை, லாபமில்லாதவை. ஆயுர்வேத மருந்துகளுக்கு பழங்குடி மக்கள், விவசாயிகள் அலைந்து திரிந்து மலைப்பகுதியில் சேகரித்து வழங்குவார்கள். முக்கியமாக கீழா நெல்லி, கலயுறுவி, வல்லாரை, நிலவேம்பு போன்றவை களைப்பயிர்கள், மரங்களின் வேர், பட்டை, விதைகள் இவ்வாறு சேகரமாவதால் சாகுபடியில் லாபம் இருக்காது.
நெல்லி, எலுமிச்சை, தான்றி, கடுக்காய் சாகுபடி செய்யலாம். நெல்லி, எலுமிச்சை 6,7 ஆண்டுகளில் பயன் தரும். தான்றி, கடுக்காய் மரங்கள் பூத்து காய்க்க 10, 15 ஆண்டுகள் ஆகலாம்.
மருந்து துர்க்கன், அமுக்குரா, கார்த்திகை கிழங்கு, சென்ன, சர்ப்பகந்தா, சதாவரி, நித்யகல்யாணி போன்றவை சாகுபடி செய்தால் லாபம். ஏற்றுமதி செய்வோருக்கு சர்வச் சர்வதேசச் சந்தை விலையை ஒட்டி லாபம் நஷ்டம் பார்க்கலாம். விவசாயிகளுக்கு லாபமும் உன்டு, நஷ்டமும் உண்டு. ஏற்றுமதியாளர்களிடம் எப்படி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட மூலிகைகளான கஞ்சா, அபின் போன்றவை மாஃபியாக்களின் ஏகபோகம். கஞ்சாவையும் அபினையும் சாகுபடி செய்தால் கோடீஸ்வரர்கள் ஆகலாம். மாஃபியாக்களுக்கு மட்டுமே அது இயலும். எனினும், இவற்றில் உள்ள தடை நீங்க விவசாயிகள் போராட வேண்டும். போதைப் பொருள், லாகிரி வஸ்து என்று முத்திரைக் குத்தப்பட்டவை உண்மையில் அற்புதமான அரிய மருந்துகளாகும்.
கஞ்சா – ‘பாங்’ என்ற மதுவாக மாறுகிறது. “பங்கி” என்றும் கூறுவர். பல ஹிந்தி சினிமாக்களில் பங்கி அடிக்கும் காட்சி இடம்பெறுவது உண்டு. ஹோலியில் “பங்கி” உண்டு. ‘பாங்’, சடையாண்டி கோலத்திலுள்ள சிவபெருமானின் விருப்ப பானம். சிவனுக்கு “பங்கேறி பாபா” என்ற நாமகரணமும் உண்டு. சமஸ்க்ருதத்தில் ‘விஜயா’ என்றும் ஹிந்தியில் ‘பாங்’ என்றும் தமிழில் ‘பங்கி’ என்றும் கஞ்சா என்றும் பெயர். இந்திய மாநில மொழிகளிலும் ‘கஞ்சா’ என்று பெயர். இது அரபு நாட்டுப் பெயர். இந்திய இனமும் உண்டு. அரபு மொழிகளில் ‘கின்னாப்’. அதையொட்டி விஞ்ஞானப்பெயர் கேன்னபிஸ் சதிவா (cannabis sativa). ஆங்கிலத்தில் – Indian Hemp.
கஞ்சாவைப் பக்குவப்படுத்தி இலை, பூ, விதை எல்லாவற்றையும் உலர்த்தி சூர்ணமாக்கியபின் கஞ்சா ‘பாங்’ ஆகிறது. ந தோலா பாங், உலர்ந்த ரோஜா இதழ்கள், கசகசா, பாதாம், பிஸ்தா, ஏலக்காய், பறங்கி விதைப்பருப்பு, சர்க்கரை ஆகியவற்றைத் தண்ணீர்விட்டு அரைத்துப் பாலில் கலந்தால் “சரஸ்” ரெடி. போதைக்கு மட்டுமல்ல, பல்வேறு நரம்புகோளாறுகளுக்கு அருமருந்து. மூளை சம்பந்தமான நோய்களுக்கு அந்தக் கால ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவர்கள் “சரஸ்” பானத்தை வழங்கினர். இது புனிதபானம். இடைக்கால இந்தியாவில் பாங்/சரஸ் கோயில்களில் பிரசாதமாக வழங்கும் மரபு வந்தது. சிவனுக்கு நிவேதனம் செய்யப்பட்டதாம். “ஹஷீஷ்” என்ற பெயரில் 40 சதவீதம் புகையாக ஊதப்படுகிறது (ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா). சிவனுடைய பங்கி வெள்ளைக்காரர்களான ஹிப்பிக்களால் ராமருக்கும் க்ருஷ்ணருக்கும் ஆராதனைப் பொருளாயிற்று. இமயமலைப் பகுதியில் கடுங்குளிரில் சுற்றியலையும் பாபாக்கள் கஞ்சாவின் பூக்களை உலர வைத்து புகைபிடிப்பார்கள். 20 சதவிகிதம் பாபாக்களின் புகைக்குப் பயனாவது போக 10 சதவீதம் மட்டுமே பங்கி அடிக்கும் சரஸ பானமாக அருந்தப்படுவதாக நவீன் பட்னாயக் தன்னுடைய “Garden of Life” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
அபினி விஷயம் இன்னும் விஸ்தாரமானது. சுருங்கக் கூறினால், கஞ்சாவுடன் ஒப்பிட்டால் அபினி சித்த-ஆயுர்வேத-யுனானி மட்டுமல்ல அலோபதியிலும் பயன்படும் அற்புத மூலிகை. இதன் விஞ்ஞான பெயர் பபாவர்சோம்னிஃபெரம். ‘சோம்னி’ என்ற லத்தீன் சொல்லுக்கும் ‘சோம’ எனும் சம்ஸ்க்ருத சொல்லுக்கும் தொடர்பு இருக்கலாம். “சோமபானம்” என்பது அபினியா? கஞ்சாவா? இதற்கு ரிஷிகள்தான் பதில் சொல்லவேண்டும். அபினிஸ் செடியில் விளைவது போஸ்த்தக்காய். போஸ்த்தக்காய் முற்றினால் கசகசா விதைகள் கிட்டும். கசக்சா இந்திய சமையல் ருசிக்கு அரும்பங்கு ஆற்றுகிறது. கசகசா இல்லாமல் குருமா செய்ய முடியாது. கசகசாவும் மருந்து. லாகிரி வஸ்து அல்ல. அதே சமயம் போஸ்த்தக்காயை முற்றவிடாமல் உள்ளே உள்ள திரவத்தை உறிஞ்சிகள் மூலம் எடுத்து உறையவைத்தால் அபினி கிடைக்கும். அபினியில் 10% மார்ஃபின் உள்ளது. 5% நார்கோட்டின், 5% கோட்டின், 2% திபைன், 1% கிரைப்டோபைன் உள்ளது. அலோபதி மருத்துவத்தில் மேற்படி ரசாயன அமிலங்களைப் பிரித்தெடுத்து ஊசி மருந்துகளுக்கும், மாத்திரை, கேப்ஸ்யூல்களுக்குள் சேர்க்கப்படுகின்றன.
இந்திய மருத்துவத்தில் போஸ்த்தக் காய்களைத் துளையிட்டு வடியும் சாறிலிருந்து “சார்பக்ரா” எனும் மருத்துவ பானத்தைத் தயாரித்து மொகலாயர்களும் சீனப் பேரரசர்களும் அருந்துவார்களாம். இதையே பஞ்சாபியர்கள் “குல்நார்” என்ற பெயரில் ஊற்றிக்கொண்டு ஆட்டம்போடுவார்கள். வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களும் சார்பக்ரா மூலம் நிவர்த்தியாவதுடன் மூட்டுவலி, மூட்டுவீக்கம், ஒற்றைத் தலைவலி, கண், காது வீக்கம், கர்பப்பையில் ஏற்படும் கட்டி/புற்று நோய்க்கும் சார்பக்ரா அருமருந்து.
அபின், கஞ்சா ஆகியவற்றைப் பயிரிட மைய அரசின் நார்கோட்டிக்ஸ் பீரோவின் அனுமதியுடன் ஒப்பந்த அடிப்படையில் பயிரிடலாம். அனுமதியில்லாமல் ரகசியமாகப் பயிர் செய்ய காவல்துறை உதவி வேண்டும். மலைப்பகுதிகளில் பரந்த அளவு கஞ்சா பயிர் செய்து அறுவடையானதும் காவல்துறை கண்டுபிடித்ததுபோல் நடித்து தீயிட்டுக் கொளுத்தியதை டி.வி-யில் காண்பிப்பார்கள். தீயிட்டுக் கொளுத்தினால்தான் மறுசாகுபடி செய்ய முடியும் என யார் அறிவார்? அந்தவகையிலும் மாஃபியாக்களுக்கு காவல்துறை உதவக் கூடியது. மோடி அரசு ஒருக்கால், துருக்கி, பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளைப் போல அபின், கஞ்சா சாகுபடிகளில் உள்ள கட்டுப்பாட்டைத் தளர்த்தும் வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. அப்படியானால், விவசாயிகளுக்கு லாபம் உண்டு.
oOo