இணையமும், இணையத்தில் தமிழும் – ஆரம்ப நாட்கள்

90களின் ஆரம்பத்தில் இணையம், பத்திரிகையுலகில் பரவலாக இருந்திருக்கவில்லை. என்னைப்போன்ற சுயேச்சை செய்தியாளர்கள் செய்திகள், கட்டுரைகள் எழுதி, தபால் (இப்படி ஒன்று இருந்ததே… !!) கொரியர் அல்லது, ஃபாக்ஸ் என்று அனுப்புவார்கள். உள்ளூரில் இருந்தால் நேரில் போய் கொடுத்துவிட்டு வருவதும் உண்டு. என்னிடம் அப்போது கணினி இருக்கவில்லை. “பிரதர்” டைப்ரைட்டரில் கார்பன் காப்பி வைத்துத் தட்டிவிட்டு, அவசரம் அவசரமாக அச்சு ஏற “டெட்லைன்” சமயத்துக்குள் போய் கொடுத்துவிட்டு – அப்படியே நண்பர்களை சந்தித்து அரட்டை அடித்துவிட்டு – வருவது வழக்கம். ஆரம்ப நாட்களில் டில்லி டிராஃபிக்கில் கார் ஓட்டும்போது உள்ளூர வயிற்றைக் கலக்கும். கட்டுரை எழுதுவதைவிட அதைக் கொடுக்கப் போகும் பயணம் இன்னும் அதிக சிரமம்.
அடாது மழை பெய்தாலும் விடாது காரியத்தை முடித்தல் என்பதன் முழு அர்த்தமும் ஒரு நாள் விளங்கியது – அடை மழையில் காரை பார்க்கிங் தேடி நிறுத்திவிட்டு வருவதற்குள் தொப்பலாக நனைந்து, டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்துள் ஈரத்தில் குரல் நடுங்க நுழைந்து, கட்டுரையை எடிட்டோரியல் மேஜையில் வைத்த அனுபவம் ஒரு சாம்பிள்! அந்த காலக்கட்டத்தில்தான் டில்லியின் இன்றைய மேம்பாலங்கள் பல உருவாகிக்கொண்டிருந்தன. பல சாலைகளைக் கடப்பதே பிரம்மப் பிரயத்தனம்.
ஒரு நாள் பேட்டிக்கு செல்லும்போது கார் டயர் பஞ்சராகிவிட்டது. எனக்கோ கார் ஓட்டத்தான் தெரியும் – அதன் உள்ளே என்ன அவயவங்கள் இருக்கும் என்று கூட தெரியாது. நல்ல வேளை.. நான் பேட்டி காணச் சென்றவர் வீடு அருகில்தான் இருந்தது. மெள்ள அவர் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, அவரையே உதவிக்கு அழைத்து ( பேட்டி முடிந்தப்புறம்தான் !!) டயரை மாற்றி வீடு வந்து சேர்ந்தேன் !
சரி; இதெல்லாம் இப்போ ஏன்? இணையம் என்னிடம் வருவதற்கு முன் இப்படியெல்லாம் தட்டுத்தடுமாறி செய்தி அனுப்பிக்கொண்டிருந்த சமயத்தில்தான் இணையம் மெள்ளப் பரவலாகிற்று. அதைப் பற்றி நான் கட்டுரைகள் அனுப்ப ஆரம்பித்த சமயம் அது.
இன்று என் தடத்தில் அந்தக் கட்டுரைகளைத் திரும்பப் படிக்கும்போது ஒரு புன்முறுவல் படருகிறது. அந்த சமயம் எனக்கு இணையம் பற்றி ஏதும் தெரியாது. விமானப் பயணம் பரவலாக இல்லாத காலத்தில் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து சில மணி நேரங்களில் பயணிக்க முடியும் என்றால் எப்படி ஆச்சரியமாக இருந்திருக்குமோ அதே நிலைதான் என்னுடையதும்! வீட்டிலிருந்தே, அப்படியே கட்டுரையை எடிட்டர் மேஜைக்கு அனுப்பி விடலாம் என்ற “கற்பனையே” (!!) எனக்கு நம்ப முடியாமலும், புல்லரிக்க வைப்பதாகவும் இருக்கும். ஃபோன் இருக்குமிடம் சென்று ஃபோன் செய்வது, உங்கள் குரலை வாங்கிக்கொள்ளும் கருவி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லாத இந்த காலத்தில் இது போன்ற ஆதிகாலத்துக் கட்டுரைகள் படிக்கச் சுவையாக இருக்கலாம்!
1990களின் ஆரம்பத்தில் தொழில் நுட்ப உலகில் ஏற்பட்ட வளர்ச்சிகளை அவ்வப்போது பதிந்து வந்தேன். இணையமே இந்தியாவில் அப்போதுதான் பரவலாக ஆரம்பித்தது என்றாலும், தமிழ் இணையமும் அடுத்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்தது. ஆரம்பத்தில் தமிழ், GIF எனப்படும் முறையில் ஃபோட்டொ எடுத்து ஏற்றப்பட்டது. பின்னர் தமிழை வலையில் நேரடியாக எழுதும் வகையில் பல மென்பொருட்கள் உருவாகின.
இப்படி இணையத் தமிழுக்கு முக்கியப் பங்காற்றியவர்களில், மறைந்த சிங்கப்பூர் தமிழர் நா. கோவிந்தசாமி, பல வருடங்களாக ஸ்விட்சர்லாந்தின், லொஸான் (Lausanne) நகரில் பணியாற்றும் கல்யாணசுந்தரம், மலேஷியத் தமிழர் முத்து நெடுமாறன், மற்றும் தமிழக மென்பொருள் வல்லுனர்கள் பலரும் தமிழ் இணையச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் நான் அந்த சமயம் சிங்கப்பூரில் இருந்ததால் நா. கோவிந்தசாமியுடன் நல்ல பழக்கம் இருந்தது. அவர் செய்யும் முயற்சிகளை எல்லாம் ஆர்வத்துடன் என்னுடன் பகிர்ந்து கொள்வார். கணினி, இணையம் இவை பற்றியெல்லாம் அதிகம் அறியாமல் பாமரத்தனமாக இருந்த எனக்கு முதல் முறையாக இணையம், தேடு பொறி போன்றவறைப்பற்றி, பொறுமையாக விளக்குவார். “இப்போ, மல்லிகை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்; மல்லிகை என்று தமிழில் நீங்கள் உள்ளீடு செய்தால், மல்லிகை பற்றி இணையத்தில் இதுவரை என்னவெல்லாம் இருக்கிறதோ அவையனைத்தும் உங்கள் கணினியில் தெரியும்.” என்று அவர் விளக்கும்போது மிக ஆச்சரியமாக இருக்கும். இப்படி பலவும் அதிசயமாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில், நான் எழுதிய இக்கட்டுரைகளிலிருந்து மாதிரிக்கு இரண்டு இங்கே – அன்றையத் தொழில் நுட்ப வளர்ச்சியை மனதில் கொண்டு படியுங்கள் ☺

இடம்: மெட்ராஸ்; தேதி: ஜுன் 23: வருடம் 1990

அந்தப் பெண் முகத்தில் ஒரு பயமும் கலவரமும் கலந்து இருந்தன. அறையில் மேலும் கீழும் நடந்தவண்ணம் இருந்தாள். சங்கடம் தாங்க முடியாமல் போனபோது, ஒரு முடிவுடன் ஃபோன் இருக்குமிடம் நகர்ந்தாள். ஒரு நம்பருக்கு ஃபோன் செய்துவிட்டு, காதில் வைத்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து ஃபோனை வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். இப்போது முகத்தில் ஒரு அமைதி தெரிந்தது.
தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு உங்களை வரவேற்கிறோம். உங்கள் கவலைகள் பலவற்றிற்கு இன்று ஒரு போன் நம்பரில் தீர்வு கிடைக்கலாம்! அந்தப் பெண் போன் செய்த நம்பரில் அவளுக்கு ஆறுதலும், ஆலோசனையும் கிடைத்தன. இந்த சேவையை அளித்தது, சங்கர மடம். கணினியும் ஈமெயிலும் இன்று ஆசாரமான சங்கர மடத்திற்குள்ளும் ஆக்கிரமித்துள்ளன. இங்குள்ள இந்த புதிய தொழில் நுட்பம் மூலம் இனி உங்கள் தொலைபேசியில் உங்களுக்கு விருப்பமானதைக் கேட்டு மகிழலாம். தினசரி கிடைக்கும் அந்த மெனுவில் 6 விஷயங்கள் இருக்கும். மகா பெரியவாளின் ஆன்மீக உரைகள் 2 நிமிடம்; அன்றைய நாளின் முக்கியத்துவம், விசேஷங்கள் இன்னொரு 2 நிமிடம்; பஞ்சாங்கம், பகவத் கீதை சுலோகங்களும் உரைகளும் தலா 2 நிமிடம்; மற்றும் பஜன்கள், குரு ஸ்துதி இரண்டிரண்டு நிமிடங்கள் என்று ஒரு தொலைபேசி மெனு தயாரிக்கப்பட்டுள்ளது பாரம்பரியம் மிக்க இந்த மடத்தில். இதைத் தவிர, உங்கள் ஆன்மீகக் கேள்விகளுக்கும், பதிலளிக்கப்படும். தவிர, தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளும் உண்டு. ஸ்பீக்கர் போன் முலம் இந்த உரைகளையும், பஜன்களையும் குடும்ப நபர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் கேட்டு மகிழலாம் அல்லது எதிர்காலத்துக்காகப் பதிவு செய்து உபயோகித்துக் கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரொம்ப சுலபம். சங்கரரின் குரல் – Voice of Sankara – என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த சேவையின் நம்பரை டயல் செய்து, உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ரகசிய எண்ணை – code – அழுத்த வேண்டும். பின்னர் நீங்கள் விரும்பும் ஒலிபரப்பை அந்த மெனுவிலிருந்து தேர்வு செய்ய மற்றொரு நம்பரை அழுத்த வேண்டும்.
இந்த சேவைக்கு ஃபோன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த சேவையை சங்கர மடத்திற்காக நிறுவியிருக்கும் மென் பொருள் நிறுவனம் இதற்காக பிரத்யேகமாக ஒரு கருவியையும் தயாரித்துள்ளது. இந்தக் கருவியில் ஒலிபரப்பையும், இதர குரல் குறிப்புகளையும் சேமித்துக்கொண்டு, பின்னர் நிதானமாக கேட்டுக்கொள்ளலாம். ஒரு சிறு கையடக்க கால்குலேட்டர் போல் இருக்கிறது இந்தக் கருவி. நீங்கள் மட்டுமே ஒலிபரப்பைக் கேட்பதற்கு ஒரு கடவுச் சொல்லும் இருக்கிறது.
இது போன்ற சேவைகள் ஒரு உதாரணம் மட்டுமே. இது போல் பலவித சேவைகள், அரசுத் தகவல்கள், இன்னும் என்னவிதமான தகவல்கள் உங்களுக்குத் தேவையோ அவையனைத்தும் தகவல் தொழில் நுட்பம் மூலமாக தற்போது உங்கள் விரல் நுனியில் கிடைக்கும். மத்திய அரசின் தேசிய தகவல் அமைப்பு (National Informatic Centre) தவிர, பல தனியார் அமைப்புகளும் இப்படி தகவல் தொழில் நுட்ப சேவைகள் அளிக்கின்றன. அந்தமான் தீவுகளில் இருக்கும் ஒரு மருத்துவர், தனக்கு தேவையான மருத்துவ விவரங்களை, அமெரிக்காவில் வாஷிங்டன் நகருக்கு அருகே இருக்கும் பெதெஸ்டா தேசிய நூலகத்திலிருந்து ஒரு நொடியில் தன் கணினி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதுபோல், ஈ மெயில் என்னும் மின் அஞ்சலும் இன்று வேகமாகப் பரவி வருகிறது. இப்படி பலவிதத் தகவல் தொழில் நுட்பக் கூறுகளை ஒரே இடத்தில் இணைத்து அனைத்து வசதிகளும் ஒரே கணினியில் கிடைக்கும் மல்டி மீடியா எனப்படும் வசதியை அளிக்கும் நிறுவனங்கள் அனேகம் உள்ளன. உதாரணமாக இந்த “சங்கரரின் குரல்’ என்ற சேவையை அளிக்கும் நிறுவனம், உங்களுக்குப் பல சேவைகளை ஒருங்கிணைக்கும் “மோடம்” எனும் ஒரு சிறிய பெட்டியை அளிக்கிறது.
கேபிள் டிவி மூலம் உலகம் உங்கள் டிவி ரிமொட்டுக்குள் வந்துவிட்டதென்றால், இந்த புதிய தகவல் தொழில் நுட்ப வசதிகள் மூலம் நீங்கள் உங்கள் நாற்காலியை விட்டு அசையாமலேயே, உலகம் முழுவதும் வணிகம் செய்யலாம்; பயணம் செய்யலாம் – குரல், காட்சி, புள்ளி விவரங்கள் என்று அனைத்து பரிமாற்றங்களையும் உங்கள் விரல் நுனியிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

Naa_Govindasamy_Singapore_Tamil_Computing_Internet_Fonts_Type_Writing_Language_Keyboards_Tech

இடம்: சிங்கப்பூர்: வருடம் – 1995 – 96

“…….தமிழ் முதன் முதலாக World Wide Web இணையத்தில் எழுதப்படுகிறது. ஏற்கனவே, இணையத்தில் தமிழ் புழங்குகிறது என்றாலும் இனி தமிழில் எளிதாக வலையில் நேரடியாக எழுத முடியும்.
சிங்கப்பூர் நான்யாங் பல்கலைகழகத்தில் பணியாற்றும் நா. கோவிந்தசாமி, தான் அமைத்த தமிழ் மென்பொருள் பற்றி என்னிடம் கூறியது:
“……சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இணைய ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டாக்டர் டான் டின் வீ எங்கள் இணையத் தமிழ் முயற்சிக்கு பெரும் ஆதரவு அளிக்கிறார். இணையம் என்பது உலக சரித்திரத்தில் மிக முக்கிய மாற்றங்களில் ஒன்று. இதைத் தமிழ் இழந்துவிடக்கூடாது என்பது என் ஆவல்.
:….1988 ல் சிங்கப்பூர் கீ போர்டு என்று ஒன்றை முதலில் உருவாக்கினேன். அதைப் பின்னர் கணியன் என்று மாற்றினேன். முக்கியமாக விண்டோஸ்’-இல் தமிழ் புழங்கும் வகையில் எழுத்துரு உருவாக்குவதில் என் முயற்சி இருந்தது. இணையம் பிரபலமாகும் இந்தக் காலத்தில் தமிழ் எழுத்துருவை இணையத்தில் ஏற்றத்தக்க வகையில் உருவாக்க வேண்டும் என்றும் முனைய ஆரம்பித்தேன்.
“….இந்த சமயத்தில்தான் சீன, மற்றும் ஜப்பானிய மொழிகள் இணையத்தில் வர ஆரம்பித்தன. எனக்கோ இந்த வாய்ப்பை தமிழ் தவற விடக்கூடாதே என்று ஆதங்கம். சிங்கப்பூர் பல்கலைக் கழகம், “கவிதை இணையம்” என்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சிங்கப்பூரின் நான்கு மொழிகளிலும் கவிதைகள் இணையத்தில் இடம் பெறும் அந்தத் திட்டத்திற்காக தமிழில் கவிதைகள் ஏற்றுவது என் பொறுப்பு. ஆங்கிலக் கவிதைகளை அப்படியே படிக்கலாம். ஆனல் சீன மற்றும் தமிழ் கவிதைகளைப் படிக்க அந்தந்த மென்பொருள் தேவை. அவையும் அந்தக் கவிதைகளுக்கு உள்ளேயே இருக்குமாறு வைத்திருந்தோம். தமிழ் படிக்க எங்கள் எழுத்துருவைத் தரவிறக்கிக் கொள்ள வேண்டும். இதை வைத்து நீங்கள் இதர மின்னஞ்சல் அனுப்பவோ, கட்டுரை எழுதவோ உபயோகித்துக்கொள்ளலாம். தற்போது படமெடுத்து இணையத்தில் ஏற்றப்படுகிறது. இதை அப்படியே படிக்க முடியும். ஆனால் எதிர்காலத்தில் நிறைய தமிழ் புழங்கும்போது இந்த முறை கட்டுப்படியாகாது….”
“…..புது டில்லியில் இந்தி மொழிக்கு அரசின் சி டாக் அமைப்பு தேவநாகரி முறையில் எழுத்துரு உருவாக்கியிருந்தது. ஆனால் தமிழுக்கு அந்த முறை சரியாக வராது என்று எனக்குத் தோன்றியது. தவிர, இணையத்தில் ஏற்றவும் தமிழுக்காகப் பிரத்யேகமாக குறியீடு தேவையாக இருந்தது. அதுவரை இருந்த மென்பொருள் எதுவும் சரியாக இல்லை என்று தோன்றியது. அதனால் கணியன் மென்பொருளை அமைத்தேன். இதன் மூலம் தமிழை வெற்றிகரமாக இணையத்தில் ஏற்ற முடிந்தது. இப்படித் தமிழை நேரடியாக இணையத்தில் உபயோகிக்க முடிந்தால் எதிர்காலத்தில் இணையத்தில் பத்திரிகைகளும், இதர வெளியீடுகளும் எளிதாக வெளியிட முடியும். விரைவில் இணைய இதழ்கள் பிரபலமாகும்; இணையம் மூலம் தமிழ் உலகம் முழுவதும் எளிதான கருத்துப் பறிமாற்றலுக்கு உதவும் என்பது என் நம்பிக்கை.”
இணையத்தில் முதன் முதலாக ஏற்றப்பட்ட இந்திய மொழி தமிழ். இதர இந்திய மொழிகளும் விரைவில் இணையத்தில் நுழையும் என்று கோவிந்தசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

Tamil_Computing_Lab_Anna_University

வருடம் 2014

தமிழில் பல மென்பொருள் ஆர்வலர்கள் பலவித எழுத்துருக்களை உருவாக்கியதில் பல வருடங்கள் தமிழ் இணையத்தில் எழுதவும் படிக்கவும் பலவித மென்பொருட்கள் தரவிறக்கத் தேவையாக இருந்தது. ஆனால், பல தமிழ் / மென்பொருள் ஆர்வலர்களின் கூட்டு முயற்சியில், பல தமிழ் இணைய மாநாட்டு உரையாடல்கள் மூலமாக தீர்வுகள் அலசப்பட்டு, ஒரு வழியாக இன்று தமிழ் “ஒரே தமிழாக” ஒரே மென்பொருள் மொழியில்- ஒருங்கிணைந்த குறியீட்டில் – “யூனிகோடில், இணையத்தில் வலம் வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.