பாஸனின் தூதகடோத்கஜம்

Karna_kills_Ghatotkacha

பொதுவாக வடமொழி நாடகங்கள் அரங்கேறும் போது “நாந்தி“ என்ற அமைப்போடு தொடங்கும் மரபு உண்டு. நாந்தி என்பது விருப்ப தெய்வத்தை வணங்கி விட்டுச் செயல் தொடங்கும் நிலையாகும். பாசனின்  நாடகங்கள் இந்த அடிப்படை மரபிலிருந்து மாறுபடுகின்றன. ’நாந்தி அந்தே’ [  நாந்தி முடிந்தது ] என்று அறிவித்துக் கொண்டு சூத்திரதாரன் அரங்கத்துக்குள் நுழைவதாகக் காட்சி அமைகிறது. அரங்கின் உள்ளே  அந்த வணக்கம் முடிந்தது என்ற எண்ணத்தை பார்வையாளனுக்கு  ஏற்படுத்துவதான பாவனை இதுவாகும். தொடக்க மரபு  போல ஒவ்வொரு வடமொழி நாடகமும் ’பரத வாக்யம்’ என்ற நிலையோடுதான்  நிறைவு பெறும். இது நாடக இறுதியில் உலகையே  வாழ்த்துவதான ஒரு ஐதிகமாகும்.. இதுவும் பாஸனின் பதிமூன்று நாடகங்களில் இல்லை.

கடோத்கஜன் மூலமாக கௌரவர்களுக்கு கிருஷ்ணன் சொல்லி அனுப்பும் செய்தியைக் கருவாகக் கொண்டதால் நாடகம் தூதகடோத்கஜம் என்னும் பெயருடையதாகிறது. கடோத்கஜன் தூது என்ற நினைவே பாஸனின் கற்பனையில் உதித்ததுதான் மகாபாரத துணைப்  பாத்திரம் ஒன்றைத் தன் எண்ணங்களுக்கு ஏற்றபடி வளைத்து நாடகக் கருவிற்கு மூலமாக்கி இருப்பது  பாஸனின் நாடக அமைப்புத் திறனுக்கும், படைப்புத் திறனுக்கும் சான்றாகும். இது பாஸனைத் தவிர வேறு எந்த நாடக ஆசிரியனும் செய்யாததாகும் என்ற கருத்து அறிஞர்களிடையே உண்டு. மற்றொரு சிறந்த  நாடக ஆசிரியனான பாணபட்டன் “பாஸனுக்குக் கிடைத்த அதே  புகழ்  எனக்கும் கிடைக்கட்டும்” என்று தன்னை பாஸனுக்குள் அடக்கிக் கொண்டுள்ள வகையில் போற்றியிருப்பது இங்கு நினைவில் நிறுத்த வேண்டியதாகும்.

கௌரவர் படையால் அபிமன்யு இரக்கமற்ற நிலையில் கொல்லப்பட்ட செய்தியை, திரிதிராட்டிரனுக்கு ஒரு போர் வீரன் அறிவிப்பதாக நாடகம் தொடங்குகிறது. காந்தாரி, மகள் துச்சலா ஆகியோருடன் சபைக்கு வரும் திரிதிராட்டிரனுக்கு இந்தச் செய்தி தாங்க முடியாத அவலம் தருகிறது. கடும் எதிர்ப்பை வெளிப் படுத்துகிறான். இதற்குப் பதிலாக அர்ச்சுனன் கடுமையான தாக்குதலை கௌரவர் மீது நடத்துவான் என்கிறான். அப்போது தானே அபிமன்யுவைக் கொன்றதாக துச்சலாவின் கணவன் ஜயத்ரதன் சொல்ல, திரிதிராட்டிரன் அதிர்ச்சி அடைகிறான். ஜயத்ரதனின் மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாக திரிதிராட்டிரன் வருந்துகிறான். ஜயத்ரதன் மனைவி துச்சலாவுக்கு இது மிகுந்த வேதனையைத் தருகிறது. சகோதரியின் வாழ்க்கையை அழித்து, அந்த அடிப்படையில் அமையப் போகும் கௌரவர்களின் வாழ்க்கை எப்படிச் சிறப்பு உடையதாக இருக்கும் என திரிதிராட்டிரன் கேட்கிறான்..

தன் மகன்கள் அனைவரையும் அர்ச்சுனன் கொன்று விடுவான் என்றும், அவர்கள் தங்கள் அழிவைத் தாமே உறுதிப் படுத்திக் கொண்டார்கள் எனவும் சொல்கிறான்.. கங்கைக்குச் சென்று மகன்களுக்கு சடங்குகள் செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் தங்களுக்கு இல்லை எனக் காந்தாரியிடம்  பேசுகிறான். .குடும்பப் பகைதான் கௌரவர்களின் வாழ்க்கை அழிவிற்கு வழி வகுக்கிறது என்கிறாள். காந்தாரி. அந்த நேரத்தில் துரியோதனன் சகுனி  துச்சாதனனோடு வருகிறான். தந்தையைப் பார்க்க இது சரியான நேரமில்லை எனவும், அபிமன்யுவின் மரணச் செய்தி கேட்ட பிறகு அவன் மனம் இயல்பாக இருக்காது எனவும் சகுனி அச்செயலிலிருந்து துரியோதனைத்  தடுக்க முயல்கிறான். மீறி, துரியோதனன் தந்தையைப் பார்க்க வருகிறான். எப்போது மகன்களைப் பார்த்தாலும் வாழ்த்தும், வரவேற்பும் சொல்லும் திரிதிராட்டிரன் அமைதியாக இருக்கிறான். தந்தையிடமிருந்து வழக்கமான வாழ்த்து பெறாதது அவனுக்கு  குழப்பம் தருகிறது. துரியோதனன் காரணம் கேட்கிறான். அபிமன்யுவை அப்படிக் கொன்றிருக்கக் கூடாது எனவும் கிருஷ்ணன், அர்ச்சுனனுக்குப் பிரியமான அபிமன்யுவின் மரணம் முறையற்றது எனத் தந்தையின் பதில் அமைகிறது. பீஷ்மரை பாண்டவர்கள்  கொன்ற முறையும் முறையற்றது தானே எனக் கேட்டு இது அவர்களுக்குச் சரியான வழிதான் எனத் துரியோதனன்  தங்கள் செயலை நியாயப் படுத்துகிறான்.

மகனின் பேச்சில் தந்தைக்கு உடன்பாடில்லை. தன் மகனைக் கொன்றவனைப் பார்த்தன் ஒரு காலத்திலும் மன்னிக்கவோ, உயிரோடு விடவோ மாட்டான் எனத் தந்தை சொல்லும் நேரத்தில், தங்கள் படையிலும் அர்ச்சுனனைத் தாக்க வீரன் உண்டு என்கிறான். துரியோதனன் .அவ்வளவு வலிமை யாருக்குண்டு என்ற கேள்விக்கு, கர்ணன் என அவன் தரும் விடை  கேலியாகத் திரிதிராட்டினனுக்குத் தெரிகிறது. கர்ணன் இந்திரனுக்குத் தன் கவச குண்டலங்களைக் கொடுத்து விட்டான். தவிர, குருவின் சாபத்தால் அவனது ஆயுத பலமும் இப்போது பயனில்லாமல் போனது. கர்ணன் அர்ச்சுனனுக்கு சமமானவனாக இருந்த போதிலும் அக்னி, இந்திரன், ருத்ரன் ஆகியோர் உதவி இருந்தால்தான் அவன் வெல்ல முடியும் எனத்  தந்தையின் வாதம் அமைகிறது.

இந்த நேரத்தில்  பாண்டவர் முகாமிலிருந்து பெரிய ஆரவாரம் கேட்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து வர ஜயத்ரதன் போகிறான். போரிலிருந்து வெற்றியுடன் திரும்பிய அர்ச்சுனன் தன் மகன் அபிமன்யுவின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்ததாகவும், மகனின் உடலை மடியில் போட்டுக் கொண்டு ஒரு சபதம் செய்வதாகவும் செய்தி கிடைக்கிறது.’என் மகனைக் கொன்று மகிழ்ந்தவர்களை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் நான் கொல்லுவேன்’ என்பதுதான் அர்ச்சுனனின்  சபதமாகும். தந்தை கலங்கும் நேரத்தில் அது நடக்காமல் தான் பார்த்துக் கொள்வதாக துரியோதனன் உறுதி சொல்கிறான். துரோணாச்சார்யாரின் அறிவுரைப்படி ஜயத்ரதனைச் சுற்றித் தான் அமைக்கும் படை வியூகம் அவனை யாராலும் தாக்க முடியாமல் செய்யும் என்கிறான். போருக்கு வரும் அர்ச்சுனன் எதுவும் செய்ய முடியாமல் நம்பிக்கையற்ற நிலையில் மனம் வருந்திப் போவான்  எனத் துரியோதனன் சொல்கிறான் .

அந்த நேரத்தில் கடோத்கஜன் வரவு நிகழ்கிறது. தான் ஹிடும்பாவின் மகன் எனவும், பாண்டவர்களின் தூதனாக வந்திருப்பதாகவும் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். வணக்கமும், மரியாதையும் செலுத்தியபடி தன் தூதுச் செய்தியைச் சொல்லுகிறான். தன் ஒரே மகனை இழந்த அர்ச்சுனனின் துயரம் சொற்களால் விளக்க இயலாதது  எனவும், அர்ச்சுனனால்தான் கௌரவர்கள் அழியப் போகிறார்கள் என்றும் சொல்கிறான். இந்தச் செய்தியைக் கேட்டு துரியோதனன் கேலியாகப் பேசுகிறான். கௌரவ வம்சத்தை ஒருவனே அழிக்கும் இந்தப் பேச்சை யார் நம்புவார்கள், இது கேலிக்கு உரியது என துரியோதனன் இகழ்கிறான்.  அப்போது சகுனியின் குறுக்கீடும் நிகழ்கிறது. ஒரு வேளை வெறும் வார்த்தைகளால் மனிதர்களைக்  கொல்ல முடியும் என்றிருந்தால், அது நடக்கும் என சகுனியும் கேலி தொனிக்கச்  சொல்கிறான். அப்போது துரியோதனன் தலையிட்டு தன் அரக்கத் தோற்றத்தை கடோத்கஜன்  பெரிதாக நினைத்துக் கொண்டு பெருமைப்பட்டுப் பேசினால்  ,தாங்களும் அவனைப் போலவே எல்லா வகையிலும் அரக்கர்கள்தான் என்கிறான். அவர்களின் பேச்சும், பாவமும், எரிச்சலும், கோபமும் தர  அரக்கர்களை விட அவர்கள் மோசமானவர்கள் என்கிறான் கடோத்கஜன். தூதனாக வந்திருக்கும் அவன் தூதுச் செய்தியை மட்டுமே சொல்ல வேண்டும் என அந்த நேரத்தில்  துரியோதனன் கட்டளை இடுகிறான். கோபம் பொங்கிய நிலையில்  கடோத்கஜன் தான் தனியொரு ஆளாக அவர்களோடு போரிடத் தயார் என்கிறான். திரிதிராட்டிரன் அவனைச் சமாதானம் செய்து அங்கிருந்து செல்லுமாறு வேண்டுகிறான்.

பதிலான தூதுச் செய்தியாக அவர்கள் தருவது என்ன என்ற கடோத்கஜனின் கேள்விக்கு, நடக்க இருக்கும் போரில் தன் அம்பு  அவனை நேரடியாகத்  தாக்குவதுதான் பதில் என துரியோதனன் சொல்கிறான். திரிதிராட்டிரனிடம் விடை பெற்றுக் கொண்டு கடோத்கஜன் புறப்படுகிறான் .”இது கிருஷ்ணனின் செய்தி.” எது  சரியானதோ அதைச் செய்யுங்கள். உறவினர்களிடம் அன்பு காட்டுங்கள். எது செய்ய இயலுமோ அதை வாழும் போது செய்யுங்கள். கௌரவர்களுக்கு அடுத்த நாளில் சூரியன் வரவோடு சாவின் வரவும் வரும்.” எனச் சொல்லிப் போகிறான்.

இந்நாடகம், முழுக்க முழுக்க பாசனின் கற்பனை. மகாபாரதத்தில் கடோத்கஜன் தூதனாகப் போன காட்சி என்பதே இல்லை. அபிமன்யுவின் அவலமான முடிவு என்ற செய்தித் தொடர்பை மட்டும் கொண்டு  இந்த நாடகம் படைக்கப் பட்டுள்ளது இதன் சிறப்பாகும். அழிவு நிச்சயம் என்ற அறிவுரை போல அமையும் எச்சரிக்கையாக கடோத்கஜனின் பேச்சு முடிவடைவதும் வட மொழி நாடக மரபுக்கு மாறுபட்டதாகும். நாடகம் முடியும் போது எந்த வாழ்த்தும், நல்ல செய்தியும் [பரத வாக்யம்] இல்லாமல்  முடிகிறது.. கௌரவர்களை எச்சரிப்பதான நிலையிலும், தூதுவப் பாத்திரத்தின் வலிமையைக் காட்டுவதான தன்மையிலும் தலைப்பு மிகப் பொருத்தமாகிறது. இந்நாடகம் இரண்டு பிரிவுகளின் கீழ் இயங்குகிறது. ஒன்று திரிதிராட்டிரன் தன் மகனின் கொடும் செயலை விமரிசித்து, அர்ச்சுனனின் வீரத்தைச் சொல்லி எச்சரிப்பது. இரண்டு, கடோத்கஜன் மூலமாகக் கிருஷ்ணன் கௌரவர்களை எச்சரிப்பது இந்தப் பார்வையும், அணுகுமுறையும், மிகப் பொருத்தமாகவும், தொடர்ச்சியாகவும், இயல்பாகவும் அமைந்து ,நாடகக் கருத்தை வலுப்படுத்துகிறது.

உரையாடல் அழுத்தத்திற்கும், வலுவிற்கும், எள்ளலுக்கும் சான்று காட்டும் வகையில் சில உரையாடல்கள் இங்கே;

தந்தையைச் சந்திக்க சகுனியோடும், துச்சாதனனோடும் போகும் துரியோதனன்  வணக்கம் தெரிவிக்கிறான். தந்தையிடமிருந்து எந்த வரவேற்பும் இல்லை இப்படி நடப்பது முதல் முறை

அனைவரும் : என்ன இது? தந்தையிடமிருந்து எந்த வாழ்த்தும் இல்லையே?

திரி:என்ன சொல்லி வாழ்த்த முடியும் மகனே? கிருஷ்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் உயிரான அபிமன்யு கொல்லப்பட்டுள்ள சூழ்நிலையில் எப்படி வாழ்த்த முடியும்? வாழ்க்கையை  யோசிக்காமல் அவலப்படுத்திக் கொள்கிறவர்களுக்கு  என்ன வாழ்த்துச் சொல்ல  முடியும்?

துரி: தந்தையே! உங்களுக்கு என்ன குழப்பம் என்று புரியவில்லையே?

திரி: என்ன குழப்பம் என்றா கேட்கிறாய்? நூறு சகோதரர்கள்  மத்தியில் ஒரே ஒருத்தியாகப்  பிறந்த பெண், தன் சகோதரர்களால்  விதவையாக்கப்படுவது எவ்வளவு கொடுமை?  பலரும் ஒன்று சேர்ந்து இரக்கமற்ற முறையில் ஒரு குழந்தையைக் கொல்லும்போது அவர்கள் கை ஒடியவில்லையா?

துரி  :வயதான பீஷ்மரை அவர்கள் சூழ்ச்சியால் கொன்றபோது அவர்கள் கை ஒடிந்த்தா? இல்லையே! நம்முடையது மட்டும் ஏன் ஒடிய வேண்டும்?

திரி:  பீஷ்மரின் சாவும் ,அபிமன்யுவின் சாவும் ஒன்று என்றா நினைக்கிறாய்?

துரி:  எப்படிச் சமமில்லாமல் போகும் தந்தையே.?

திரி:பீஷ்மரின் மரணம் அவர் விரும்பி ஏற்றது, அவருடைய அறிவுரைப் படியும் சம்மதத்தோடும்தான் நடந்தது. இங்கோ அர்ச்சுனனின் முதல் குழந்தை, குரு வம்சத்தின் எதிர் காலம் மொட்டாக இருக்கும்போதே  அழிக்கப் பட்டு விட்டதே!.

அப்போது துச்சாதனன் அபிமன்யு குழந்தை இல்லை எனவும், வீரமாகப் போர் செய்தான் எனவும் சொல்கிறான்.

திரி:குழந்தை அபிமன்யுவால் தனியாக அப்படிப் பலத்தை வெளிக் காட்ட முடியுமென்றால் மகனை இழந்த சோகத்தில் அர்ச்சுனன் எப்படியெல்லாம் உங்களைத் தாக்குவான்?

துரி:  என்ன செய்வான்?

திரி :நீ உயிரோடு இருந்தால், அவன் என்ன செய்வான் என்பது தெரியும்.

துரி : யார் இந்த அர்ச்சுனன்?

திரி: உனக்கு அர்ச்சுனனைத் தெரியாது என்பது உண்மையானால் எனக்கும்  அவனைத் தெரியாது மகனே.

என்று தந்தை இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளாத மகனின் நிலைக்காக வெதும்பும் நிலை இங்கு வெளிப்படுகிறது.

அர்ச்சுனன், கிருஶ்ணன் கோபத்தை, துன்பத்தைத் தூதுச் செய்தியாகக் கொண்டு வரும் கடோத்கஜனின் பேச்சு இது.

கடோ: கௌரவர்கள் அழிவு உறுதியாகி விட்டது. அர்ச்சுனனின் கோபத்தால் கௌரவர்கள் நூறு பேரும் இறந்து போக பூமியின் பாரம் குறையட்டும். மகனை இழந்து பெரும் சோகத்தில் இருக்கும் அர்ச்சுனனுக்குப் பழி வாங்க வேண்டும் என்பதுதான் முதல் குறியாக இருக்கும். அர்ச்சுனன் ஒருவனே அனைவரையும்அழித்து விடுவான்.

சகுனி: இந்த உலகத்தை வெறும் வார்த்தைகளால் அழித்து விடமுடியும் என்றால்தான் எல்லா வீரர்களும் இறந்து போகும் நிலை ஏற்பட முடியும்.

என்று  சகுனி பேச அவனுக்குத் துரியோதனனின் ஆதரவு கிடைக்கிறது. தாங்களும் அரக்க குணம் உடையவர்கள்தான் என்கிறான்.

கடோ: கடவுள் என்னை மன்னிப்பாராக .நீங்கள் அரக்கர்களை  விட மோசமானவர்கள். அவர்கள் தங்கள் சகோதரர்களை ஒரு நாளும் வீட்டுக்குள் வைத்து எரிக்க மாட்டார்கள். சகோதரனின் மனவியின் கூந்தலை இழுத்து அவமானம் செய்ய மாட்டார்கள். வஞ்சகமாக இளைஞனைப் போரில் கொல்ல மாட்டார்கள்…

இது போன்ற உரையாடல் நாடகத்திற்கு வலிமையானதாக அமைவதோடு மனிதர்களின் மனவியல் ரீதியான அணுகுமுறையையும் காட்டுவதாகிறது. இந்த நாடகம் அளவில் சிறியது என்றாலும் நாடகத்துவமும்,வலிமையான, ஆழமான ,கூர்மையான உரையாடல்களும் ,பார்வையும் கொண்டது என்பது ஆய்வாளர் சிந்தனையாகும்.