புரிதல் பற்றிய சிந்தனைச்சோதனைகள்

நியூகொம்ப் முரண்பாடு

“நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” மாதிரியான ஒரு விளையாட்டை விளையாட நீங்கள் அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். இந்த விளையாட்டில் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள் போன்ற கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதில் அளித்து எல்லோரையும் மகிழ்விக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. இந்த வினோத விளையாட்டில் மேடை மீது இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். கண்ணாடியால் செய்யப்பட்ட முதல் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு தெளிவாகத்தெரிகிறது. உள்ளே இருப்பது ஆயிரம் ரூபாய். ஆனால் இரண்டாம் பெட்டியோ இரும்பால் செய்யப்பட்டு உள்ளே இருப்பது என்ன என்று உங்களுக்கு தெரியாமல் மூடி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. போட்டியின் விதிகளின்படி இரண்டாம் பெட்டிக்குள் ஒரு கோடி ரூபாயோ அல்லது வெறும் காற்று மட்டுமோ இருக்கும்! மொத்த விளையாட்டே நீங்கள் செய்யும் தேர்வுதான். நீங்கள் முதல் பெட்டியை மட்டுமோ அல்லது இரண்டாம் பெட்டியை மட்டுமோ அல்லது இரண்டு பெட்டிகளையும் சேர்த்தோ எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவு அதிகப்பணத்தை வெல்வது உங்கள் குறிக்கோள்.
NewcombGame
இதில் வேடிக்கை என்னவென்றால் “டீலா நோ டீலா” ஷோவில் வரும் வங்கியாளரைப்போல இந்த விளையாட்டிலும் ஒரு வங்கியாளர் உண்டு. இவருடைய சிறப்பம்சம் இதுவரை தோல்வியையே அறியாத இவருடைய ஞானதிருஷ்டி! விளையாட்டில் பங்கு பெற நீங்கள் ஊரில் பஸ் ஏறுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பெட்டிகள் பற்றிய உங்கள் தேர்வு என்னவாக இருக்கும் என்பதை அந்த வங்கியாளர் தன் ஞானதிருஷ்டி மூலம் கணித்து விடுகிறார்! அவருடைய கணிப்புப்படி நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும்தான் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால், அவர் பெட்டிக்குள் ஒரு கோடி ரூபாயை வைத்துப்பூட்டி சீல் வைத்து விடுவார். ஆனால் நீங்கள் இரண்டு பெட்டியையும் கிளப்பிக்கொண்டு போவீர்கள் என்று அவருக்கு தோன்றி விட்டால், இரண்டாம் பெட்டியை காலியாய் விட்டு சீல் வைத்து விடுவார். நீங்கள் வந்து சேர்வதற்கு ஒரு வாரம் முன்பே பெட்டிக்கு சீல் வைத்தாகிவிட்டது என்பது என்னவோ நிச்சயம். ஒரு வாரம் கழித்து ஒருவழியாக அரங்கத்திற்கு வந்து சேரும் நீங்கள் இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வீர்களா? அல்லது இரண்டாம் பெட்டியை மட்டும் தேர்ந்தெடுப்பீர்களா?
யோசித்துப்பார்த்தால் இந்தத்தேர்வு அவ்வளவு சுலபம் இல்லை என்பது புரியும். முதல் பெட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது உறுதியாக வெறும் ஆயிரம் ரூபாயை மட்டுமே உங்களுக்கு பெற்றுத்தரும் என்பதால், அதிகபட்ச பணத்தை வெல்ல முயலும் உங்களுக்கு அந்த தேர்வில் ஈடுபாடு இருக்க வாய்ப்பில்லை. எனவே வங்கியாளரும் நீங்களும் எடுக்கும்  முடிவுகளைப்பொறுத்து விளையாட்டு நான்கு விதமாய் முடியக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
வங்கியாளர் நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும்தான் எடுப்பீர்கள் என்று ஞானதிருஷ்டி மூலம் முடிவெடுத்திருந்தால் இரண்டாம் பெட்டிக்குள் ஒரு கோடி ரூபாயை வைத்திருப்பார். இப்போது நீங்களும் இரண்டாம் பெட்டியை மட்டும் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இது முதல் முடிவு.
ஆனால் நீங்கள் சாமர்த்தியமாக இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு ஒரு கோடியே ஓராயிரம் கிடைக்கும். இதுதான் அதிகபட்ச ஜாக்பாட். இது இரண்டாம் முடிவு.
வங்கியாளர் நீங்கள் இரண்டு பெட்டிகளையும் எடுப்பீர்கள் என்று முடிவெடுத்திருந்தால் இரண்டாம் பெட்டிக்குள் பணம் ஏதும் வைத்திருக்க மாட்டார். இப்போது நீங்களும் இரண்டு பெட்டிகளையும் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் கிடைக்கும். இது மூன்றாம் முடிவு.
ஆனால் நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு ஒரு பைசா கூடக்கிடைக்காது! இது நான்காம் முடிவு.
1960களில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் வில்லியம் நியூகொம்ப் (William Newcomb) அறிமுகப்படுத்திய இந்த சிந்தனைச்சோதனை நியூகொம்ப் முரண்பாடு (Newcomb’s Paradox) என்று அழைக்கப்படுகிறது. இதை RobertNozickஉருவாக்கியவர் நியூகொம்ப் என்றாலும், இதைப்பற்றி எழுதி பிரபலப்படுத்தியவர் அருகிலுள்ள படத்தில் காணப்படும் ராபர்ட் நோசிக் (Robert Nozick) என்பவர்தான். சிலர் இதில் என்ன முரண்பாடு இருக்கிறது என்று வினவியிருக்கிறார்கள். முரண்பாடு இந்த விளையாட்டில் வெல்வதற்கு, அதாவது அதிகபட்ச பணத்தைப்பெறுவதற்கு, சரியான மூலோபாயம் (Strategy) என்ன என்று இந்த சிந்தனைச்சோதனையில் பங்கேர்ப்பவர்கள் சொல்லும் பதிலில் இருக்கிறது. பதில் சொல்லும் பாதிப்பேர் “ஒற்றை பெட்டியினர்”, அதாவது நாம் இரண்டாம் பெட்டியை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் ஒரு கோடிதான் நம்மால் வெல்லமுடியும் அதிகபட்ச தொகை என்பது அவர்கள் வாதம். பதில் சொல்லும் மறு பாதிப்பேர் “இரட்டை பெட்டியினர்”. அவர்கள் வாதம், இரண்டாம் பெட்டிதான் சீல் வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆகி விட்டதே, அதனால் நாம் இப்போது எடுக்கும் முடிவால் பெட்டிக்குள் இருக்கும் பணத்தொகை மாறப்போவதில்லை. எனவே இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒரு வேளை வங்கியாளர் ஞானதிருஷ்டிப்படி நாம் இரண்டாம் பெட்டியை மட்டும்தான் எடுப்போம் என்று முடிவு செய்திருந்தால், நமக்கு அடித்தது அதிர்ஷ்டம். ஒரு கோடியே ஓராயிரம் சம்பாதித்துக்கொண்டு வந்து விடலாம். இல்லையேல் வெறும் ஆயிரம் ரூபாய். மொத்தத்தில் இரண்டாம் பெட்டியில் உள்ள பணத்தொகை மாறப்போவதில்லை என்றால் நிச்சயம் இரண்டு பெட்டிகளையும் எடுப்பதுதான் சரி என்பது அவர்கள் வாதம்! இவர்கள் கேட்கும் ஒரு கேள்வி சுவையானது. ஒரு விவாதத்திற்காக, உங்களுக்கு எதிரே பெட்டிகளுக்கு அந்தப்பக்கம் நீங்கள் நம்பும் ஒரு நபர் (உங்கள் சகோதரி அல்லது கணவர் போன்ற ஒருவர்) உட்கார்ந்திருப்பதாக கொள்வோம். இரண்டாம் பெட்டியின் ஒரு புறம் மட்டும் கண்ணாடியால் செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு அந்தப்பெட்டிக்குள் ஒரு கோடி இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிட்டதென்றால், அவர் நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும் தேர்ந்தெடுப்பதை விரும்புவாரா அல்லது இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வதை விரும்புவாரா?
பொதுவாக இரண்டு கட்சிக்காரர்களுமே எதிர் கட்சியினரின் வாதம் முற்றிலும் தவறு என்பது ஏன் அவர்களுக்கு புரியவில்லை என்று வியக்கிறார்கள் அல்லது எரிச்சல் அடைகிறார்கள்!  இந்த பிரச்சினையை உருவாக்கிய நியூகொம்ப் ஒற்றைப்பெட்டி கட்சி பக்கம் சாய்பவர். ஆனால் நோசிக் முதலில் இரு பெட்டி கட்சி பக்கம் சாய்பவராக இருந்துவிட்டு பின் நாட்களில் வெளிவந்த பல அலசல்களை படித்துவிட்டு இரண்டு பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று ஜகா வாங்கி இருக்கிறார். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரிடம் இந்த விளையாட்டை விளக்கி, அவர்கள் சரியாக புரிந்துகொண்டு விட்டார்கள் என்று உறுதி செய்துகொண்டு, அவர்கள் ஒவ்வொருவரின் தெரிவும் என்ன என்று அட்டவனைப்படுத்திப்பாருங்கள்.
தத்துவம், கேம் தியரி முதலிய துறைகளில் வேலை பார்ப்பவர்களை இந்தக்கேள்வி பல வருடங்கள் பைத்தியமாக அடித்திருக்கிறது. இப்போதைக்கு இந்த சோதனையை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து வேறு சில சோதனைகளைப்பற்றி பேசிவிட்டு, அதன்பின் அந்த மொட்டைத்தலைகளுக்கும் இந்த முழங்காலுக்கும் முடிச்சுப்போட முடிகிறதா என்று பார்ப்போம்.
 

குகையும் நிழலும்

platoஇரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்குமுன் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் ப்ளேட்டோ கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்ற தத்துவத்தை விளக்க ஒருசிந்தனைச்சோதனையை பரிந்துரைத்தார். அவரது குடியரசு என்ற புத்தகத்தில் இடம் பெறும் இந்த சிந்தனைச்சோதனை அவரது குரு சாக்ரடிஸ், ப்ளேட்டோவின் சகோதரருக்கு பாடம் சொல்வது போல் அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு இருட்டு குகை. அதனுள் ஒரு வெற்று சுவற்றை பார்த்துக்கொண்டு நிற்கும்படி விலங்கிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள். பிறந்ததில் இருந்து அங்கேயே அடைந்து கிடக்கும் அவர்கள் வெளி உலகையே அறியாதவர்கள். இந்தக்கைதிகள் இருக்கும் இடத்திற்குப்பின்னால் எரிந்துகொண்டு இருக்கிறது ஒரு தீப்பந்தம். அந்த தீப்பந்தத்துக்கும் கைதிகளுக்கும் இடையே ஒரு குட்டிச்சுவர். அதன்பின் பொம்மலாட்டக்காரர்கள் போல் பலர் அட்டையால் செய்யப்பட்ட மனித, விலங்கு உருவங்களை குச்சிகளில் ஒட்டி தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு தலைக்குமேல் உயர்த்தியவாறு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். கைதிகள் அவ்வப்போது அவர்கள் முன்னே இருக்கும் சுவரில் அந்த பொம்மை உருவங்களால் விழும் நிழல்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கைதிகள் பொம்மலாட்டக்காரர்களை பார்த்ததே இல்லை என்பதால், அவர்களைப்பொருத்தவரை அந்த சுவற்று நிழல்கள்தான் நிஜம். பொம்மலாட்டக்காரர்களின் காலடி ஓசைகளைக்கூட அவர்கள் அந்த நிழல்கள் நடக்கும்போது ஏற்படுத்தும் ஒலிகளாக நினைக்கிறார்கள்! அந்தக்கைதிகளின் சமூகத்துக்குள் அந்த நிழல்களைப்பற்றி எதையும் அனுமானித்து சொல்லக்கூடியவர்கள் அறிவாளிகளாக கருதப்படுவார்கள்!
Plato_Cave
இப்போது ஒரு சில கைதிகள் மட்டும் விடுவிக்கப்பட்டு விடுவதாகக்கொள்வோம். இவர்கள் முதலில் தீப்பந்ததையும் பின் பொம்மலாட்டக்காரர்களையும் பார்த்து, தாங்கள் இதுவரை பார்த்து நிஜம் என்று புரிந்து வைத்திருந்த நிழல்களுக்கும் நிஜ உலகுக்கும் சம்பந்தமே இல்லை என்று புரிந்து கொள்வார்கள். அதன்பின் குகையை விட்டே வெளியேறி நிஜ உலகைப்பார்க்கும்போது குகையின் இருட்டுக்கு பழகிப்போன அவர்களின் கண்கள் முதலில் நிறையவே கூசும். கண்கள் வெளிச்சத்துக்கு பழகியபின், சூரியன் சந்திரன், வானவில், ஏரி, கடல், வயல் என்று எல்லாவற்றையும் பார்த்து புரிந்துகொண்டு குகையில் இன்னும் இருக்கும் கைதிகள் எவ்வளவு குறுகிய தவறான முறையில் உலகை அறிந்து இருக்கிறார்கள் என்று உணர்வார்கள். ப்ளேட்டோவின் கருத்துப்படி, நாம் எல்லோரும் நமது ஐம்புலன்களின் அற்ப திறன்களின் வழியே இந்த உலகை அந்தக்கைதிகள் நிழல்களைப்பார்த்து நிஜத்தை அறிந்தது போல் புரிந்து கொண்டிருக்கிறோம். நம்மிடையே வாழும் தத்துவமேதைகளும் மற்ற அறிஞர்களும் விடுவிக்கப்பட்ட கைதிகள் போல் நம்மைத்தாண்டி பல படிகள் மேலே போய் நிஜத்தை சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த தேடலையே எப்போதும் தொடர்ந்துகொண்டு இருக்காமல், குகைக்கு திரும்பிவந்து கைதிகளாகிய நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு ஞான தீட்சை தருவது அவர்களின் கடமை என்கிறார் ப்ளேட்டோ.
நிகழ்காலத்தில் அச்சில் தோன்றும் அத்தனையும் உண்மை, வலைத்தளங்களில் சொல்லப்படுபவை எல்லாம் நிஜம் என்று பொது ஜனங்களில் பலர் நம்புவதை குகை கைதிகளின் நிலைக்கு இணையாகக்கருதலாம்.
 

மேரியின் அறை

உலகை உணர்தல் என்ற அதே விஷயத்தை இன்னொரு கோணத்திலிருந்து அணுகினார் ஃபிராங்க் ஜாக்சன் என்ற சமகால ஆஸ்திரேலிய தத்துவ பேராசிரியர். அவருடைய கதாநாயகியான மேரி ஒரு அதிபுத்திசாலியான நரம்பியல் விஞ்ஞானி. இந்த frankjacksonசிந்தனைச்சோதனைப்படி அவள் வெறும் கறுப்பு வெளுப்பு வர்ணங்களை மட்டுமே கொண்ட ஒரு அறையில் பிறந்ததிலிருந்து வசித்து வருகிறாள். அவளுடைய ஆய்வுகள் அனைத்தும் ஒரு கறுப்பு வெளுப்பு கணினி முனையம் வழியே மட்டுமே நடக்கிறது. மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது சம்பந்தமான அத்தனை விஷயங்களும் அவளுக்கு அத்துப்படி. ஒலியோ, ஒளியோ, நிறங்களோ, உணர்வுகளோ, பயமோ, மகிழ்வோ அல்லது வேறு எப்படிப்பட்ட அனுபவங்களோ ஏற்படும்போது மனிதமூளையின் ஒவ்வொரு நியூரானும் எப்படி இயங்கும் என்பதெல்லாம் அவளுக்கு மிக நன்றாகப்புரிந்திருக்கிறது. உதாரணமாக நீல நிற ஒளியின் அலைக்கற்றை, அவை நமது கண் திரையை வந்து அடையும்பொழுது கண்ணில் ஏற்படும் நிகழ்வுகள், மூளையில் எப்படி அந்தச்செய்தி பதிவாகிறது, இது நீல நிறம் என்று நாம் சொல்லும்போது மூளையின் எந்தப்பகுதியில் அந்த செய்தி உருவாகிறது, எப்படி குரல்வளையை சென்றைடைகிறது எல்லாம் அவளுக்கு தெரியும். இந்த நிலையில் என்னதான் நீலம் என்ற நிறத்தை பார்க்கும்போது மூளைக்குள் என்ன நிகழும் என்று அவளுக்கு முற்றிலும் புரிந்திரிந்தாலும் அவள் ஒரு நாள் தன் அறையை விட்டு வெளியே வந்து நிஜ உலகில் முதல் முறையாக நீல நிற வானத்தைப்பார்க்கும்போது அவளுக்குள் ஒரு புதிய அனுபவ ரீதியான புரிதல் உருவாகுமா ஆகாதா? உருவாகும் என்றால், புரிதல் என்பது இயற்பியல், வேதியல், உயிரியல் சம்பந்தமான வெறும் ரசாயன மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட, தான் என்கிற பிரக்ஞை சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என்கிறாகிறது, எனவே புரிதலில் ஒரு இருமை (Dualism) உண்டு என்கிறார் ஜாக்சன்.
நாடகமே உலகம், நாம் எல்லோரும் அந்த நாடகத்தில் நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறோம், அவ்வளவுதான் என்ற ஒரு ஷேக்ஸ்‌பியர்  வேதாந்ததை கேட்டிருப்பீர்கள். இதற்கெல்லாம் ஒன்றுக்கொன்றாய் என்ன சம்பந்தம் என்று அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்)

0 Replies to “புரிதல் பற்றிய சிந்தனைச்சோதனைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.