உலக வர்த்தக அமைப்பு மாநாடு

கடந்த ஜூலை 31ந் தேதி ஜெனிவாவில், உலக வர்த்தக அமைப்பின் சந்திப்பில் பேச்சு வார்த்தை முறிந்ததற்கு இந்தியா காரணமாயிற்று. இந்தியாவின் நிலையை இதர உறுப்பினர் நாடுகள் கண்டித்தாலும் உள்ளூரில் பொதுவாக வரவேற்பு இருந்தது.

உறுப்பினர் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மேம்படும் வகையில் சுங்க வரிகளைத் தளர்த்தி நாடுகளுக்கிடையே பொருட்கள் தடையில்லாமல் இறக்குமதி ஏற்றுமதி செய்ய இந்த உடன்பாடு வகை செய்திருக்கும். ஆனால், இந்த உடன்பாட்டின் ஷரத்துகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவே இருப்பதாக இந்தியாவும் இதர வளரும் நாடுகளும் கருதின.

கடைசியில் இந்தியா ஒரு நிபந்தனை விதித்தது. இந்த உடன் பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்றால், இந்தியாவின் மற்றொரு நிலைபாட்டிற்கு இதர நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் அது. அதன்படி, ஏழைகளுக்கு உதவும் தம் உணவு மான்யக் கொள்கைக்கு வழி செய்யும் விதத்தில் தம் கையிருப்பில் தேவையான அளவு உணவு தான்யங்களை வைத்திருக்கவும், உலக வர்த்தக வரம்பைத் தாண்டி ஏழைகளுக்கு மான்யமாக அளிக்கவும் இந்தியாவிற்கு இதர நாடுகள் உலக வர்த்தக கொள்கைகளிலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைபாட்டை இந்தியா எடுத்து அதில் உறுதியாக இருந்தது. இந்த உறுதியைத்தான் இதர நாடுகள் இந்தியாவின் பிடிவாதம் என்று வர்ணித்து, பேச்சு வார்த்தை முறிய இந்தியா காரணமானதுமல்லாமல் எதிர்காலத்தில் இந்த உலக அமைப்பே ஆட்டம் காணும் நிலை எழுந்துள்ளது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது…….

இன்று இதர நாடுகளின் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தாலும் இந்தியா இந்த உலக வர்த்தக அமைப்பின் நிறுவன உறுப்பினர் நாடுகளில் ஒன்று என்பதும், இந்த அமைப்பு தொடர்ந்து வெற்றிப்பட இயங்க வேண்டும் என முயலும் நாடுகளில் முக்கியமான ஒன்று என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இந்த அமைப்பின் முதல் அமைச்சர்கள் மாநாடு சிங்கப்பூரில் 1996 டிசம்பர் நடந்தபோது அதைப் பற்றி விரிவாக இந்தியாவுக்குச் செய்திக் கட்டுரைகள் அனுப்பிகொண்டிருந்தேன். டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்களுக்காக அந்த இதழ்களின் மூத்த பத்திரிகையாளர் சுவாமிநாதன் அங்கலேஷ்வர ஐயர் அன்று எனக்கு சீனியர். அவருடன் சேர்ந்து தினம் இந்த மாநாட்டின் செய்திகளை அனுப்பியது ஒரு சுவாரசியமான அனுபவம்.

சிங்கப்பூரில் அப்போதுதான் புதிதாகக் கட்டப்பட்டிருந்த, “சன்டெக் சிடி” வளாகத்தில் மாநாடு நடந்தது. என் வீட்டிலிருந்து பத்து நிமிட நேர தூரம்தான். அதனால், அங்கிருந்த பத்திரிகையாளர்கள் முகாமில் இருக்கும் தகவல் சாதனங்களைப் பயன்படுத்தாமல் மாநாட்டின் ஒவ்வொரு அமர்விலும் நடந்த விவாதங்கள், முடிவுகள் இவற்றை உடனுக்குடன் வீட்டுக்கு வந்து செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தேன்.

வட மேற்கு ஆப்பிரிகாவில் மொரொகோ நாட்டின் மாராகேஷ் நகரில் முதன் முதல் ஆரம்பித்த இந்த வர்த்தக அமைப்பு “உலக வர்த்தக அமைப்பு” என்று புது அவதாரம் எடுத்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. எனக்கும் நிறைய விஷயங்கள் இன்னும் புரியாமலும், தெரியாமலும் இருந்த நிலையில், மாநாட்டின் ஒவ்வொரு செய்தி அனுப்பும்போதும் அதன் பின்புலம், இந்தியாவுக்கான சாதக பாதகங்கள் என்று நிறைய ஆராய்ச்சி செய்த பின்னரே அனுப்பும் வேலை அழுத்தம் இருந்தது. எனக்கு சவாலாக இருந்த நாட்கள் அவை என்பதால் இன்றும் இந்த வர்த்தக அமைப்புச் சார்ந்த செய்திகள் என் கவனத்தை ஈர்க்கும்.

எந்த ஒரு மாநாட்டிலும் வழக்கமாக இருக்கும் ஒரு பிரச்சனை – அல்லது Bottle Neck – என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பெரும் தடங்கல், மாநாட்டின் வரைவு உடன்பாட்டில் எழும் வார்த்தை சிக்கல்கள். ஒவ்வொரு நாடும் தன் சாதக பாதகங்களுக்கு ஏற்ப வார்த்தை ஜாலம் செய்ய முனையும். ஒரேயொரு வார்த்தை சேர்ப்பதாலோ / நீக்குவதாலோ எந்த உடன்பாட்டுக்கும் வர முடியாமல் கிடப்பில் போன மாநாடுகளும் உண்டு.

இந்த முதன் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டிலும் இப்படி வார்த்தை தகராறு வந்தது. ஒரு நாள் இரவு நடுநிசியைத் தாண்டியும் எந்த வார்த்தைகள் சேர்க்கப்படும் என்ற முடிவுக்கு வராமல் உறுப்பினர் நாடுகள் போராடின. அமைச்சர்கள் அரங்கின் உள்ளே விவாதிக்கும்போது நிருபர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். முடிவு தெரிந்ததா என்று வெளியே வரும் ஒவ்வொருவரிடமும் ஆவலுடன் விசாரித்துக் கொண்டிருந்தோம். கடைசியில் மறு நாளைக்கு முடிவு ஒத்திப்போடப்பட்டது.

இப்படிப்பட்ட மாநாடுகளில் மற்றொரு அம்சம், பலவித தன்னார்வ அமைப்புகள் ஒரு புறம் இணையாக – தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து – குட்டி உபகோள் மாநாடுகள் நடத்தும். இந்த 1996 உலக வர்த்த அமைப்பின் முதல் அமைச்சர்கள் மாநாட்டின் சமயத்தில் சுமார் 118 சிறு சிறு தன்னார்வ குழுக்கள் ஆங்காங்கே கூட்டம் நடத்தி உலகின் கவனத்தை அவரவர் கொள்கைகள் மேல் வெளிச்சம் போட்டுக் காட்டினர். அமர்வுகள் நடக்கும் அரங்கங்களுக்கு வெளியே நோட்டீஸ் போர்டுகளில் ஒட்டியும், பெரிய பெரிய பானர்களைத் தூக்கிக்கொண்டும், அவர்கள் கவனத்தை ஈர்த்த வண்ணம் இருந்தனர்.

அமர்வுகளிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பு வந்தவுடன் இந்தக் குழுக்கள் உடனுக்குடன் தங்கள் எதிர்ப்பை அல்லது வரவேற்பை வெளிப்படுத்த நோட்டீஸ் அல்லது பானர்கள் பிடித்து கோஷம் இடுவார்கள். இவர்கள் இப்படி அறிவிப்புகள் வர வர தங்கள் கருத்துக்களை வெளியிடும் வேகத்தைப் பார்த்தால் ஒரு விளையாட்டு அரங்கில் இருக்கும் பெரிய ஸ்கோர் போர்டு மாதிரி இருக்கும். அமைச்சர்கள் ஏதாவது கருத்தை வெளியிடுவதுதான் தாமதம், உடனே இங்கேயிருந்து எதிர் குரல் / எதிர் கருத்து கிளம்பும் விதம் அன்று எனக்குப் புதுசு என்பதால் பார்க்க ரொம்ப சுவாரசியமாக இருந்தது.

ஒரு அமர்வின் போது வெளியே கூடியிருந்த “அனைத்திந்திய தொழில் முனைவர்கள் அமைப்பு” என்ற குழுவின் தலைவரொருவர் என்னிடம் பொருமினார். “மூன்றாம் உலகு நாடுகளாகிய நாம் நிறையவே வரிக் குறைப்புச் செய்து விட்டோம். ஆனாலும் இவர்கள் – முதலாம் உலக / வளர்ந்த நாடுகள் நம்மை இன்னும் மேன்மேலும் வரிக் குறைப்பு செய்யச்சொல்லுகின்றனர். ஆனால் அவர்கள் மட்டும் வரியைக் குறைப்பதில்லை. அதேபோல், நம்ம பொருட்கள் அங்கே விற்பனையாக சந்தை கிடைப்பதில்லை. ஆனால், அவர்கள் பொருட்கள் நம்ப நாடுகளில் விற்பதற்கு நாம் நம் சந்தையைத் திறந்து விட வேண்டுமாம். இது என்ன நியாயம்?” என்று பொருமினார்.

இதுபோல் தாய்லாந்து அமைப்பின் தலைவரொருவர், உலக மயமாக்கல் மற்றும், தாராளமயமாக்கல் எல்லாம் தங்களுக்கு நிறைய கவலை தருவதாக கூறினார். வளர்ந்த நாடுகளின் போட்டியை சந்திக்கும் அளவு நம்மிடையே இன்னும் ஒரு சம தளம் உருவாகவில்லை என்பதாக இருந்தது அவர் கருத்து.

இந்தச் சிறு குழுக்களுக்கும் மாநாட்டின் அனைத்து வசதிகளும் தகவல் பரிமாற்ற வசதி உட்பட – அளிக்கப்ட்டிருந்தன.

அந்த முதல் மாநாட்டிலிருந்து நான் அனுப்பிய செய்திகளின் சிறு தொகுப்பு, என் தடத்தில் இங்கே……

Palace-of-Nations-WTO

வருடம் – 1996, டிசம்பர்: சிங்கப்பூர்:

தற்சமயம் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பின் முதல் அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா, மூன்று புதிய அம்சங்களை ஆதரிக்கும் என்று இந்தியாவின் நிலைப்பாட்டினை விவரித்தார் மத்திய வணிகத்துறை அமைச்சர் பி.பி. ராமைய்யா. அவை, தகவல் தொழில்நுட்பம் தாராளமயமாக்கல், அரசு கொள்முதலில் வெளிப்படை, மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு /பரிமாற்றத்துக்கு வழி வகை செய்தல். அதே சமயம், முதலீடு, வணிக போட்டிகள் ரீதியான கொள்கைகள் மற்றும் தொழிலாளர் நலன் போன்றவற்றில் உலக வர்த்தக அமைப்பின் தலையீட்டை இந்தியா எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார்.

அரசு கொள்முதல் மற்றும் வர்த்தக மேம்பாடு விஷயங்களில் உறுப்பினர் நாடுகள் தவறிழைத்தாலும் பெரும் குற்றமாகக் கருதப்படாது என்ற நிலையில் இந்த ஷரத்துகளை ஏற்றுக்கொள்வதில் இந்தியாவுக்குப் பிரச்சனையில்லை.

தகவல் தொழில் நுட்பம் தாராளமயமாக்கல் பற்றி விவரிக்கும்போது, வணிக அமைச்சின் செயலாளர் தேஜேந்திர கன்னா, அமெரிக்கா சொல்லுவதுபோல், இந்தியாவால் 2000 ம் வருடத்துக்குள் வரிக்குறைப்பை பூஜ்யம் அளவு கொன்டு செல்ல முடியாவிட்டாலும், குறிப்பிட்ட சில விஷயங்களில் கணிசமாக வரிக்குறைப்புச் செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

மாநாட்டின் “வர்த்தக மேம்பாடு” என்ற அம்சம் குறிப்பாக என்ன மாதிரியாக உருவெடுக்கும் என்று இன்னும் தெளிவாகவில்லை. ஒரு பொதுவான வரி அம்சம் உருவாகலாம்; அல்லது ஒவ்வொரு பொருளுக்கும் என்ன மாதிரியான வரி என்று நியதி இருக்கலாம். இப்போதைக்கு இந்த அம்சத்தை உறுப்பினர் நாடுகள் சரிவர ஆராய்ந்து பார்த்துவிட்டு, பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என்று மட்டுமே இந்த மாநாட்டில் முடிவாகியது.

குழப்பங்களும், தெளிவின்மையும் பல அம்சங்களில் இருந்தாலும் பொதுவாக இந்த முதல் மாநாடு ஒரு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையில்தான் தொடங்கியது. உறுப்பினர் நாடுகள் பல அம்சங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உலக வர்த்தகம் மேம்பட ஒத்துழைப்பார்கள் என்ற கருத்து நிலவியது. வெறும் நான்கு அம்சங்களில் மட்டுமே உறுப்பினர் நாடுகளிடயே கருத்து வேற்றுமை இருப்பதாக உலக வர்த்தக அமைப்பின் தலைவர் கெய்த் ராக்வெல் கூறினார். அவை: தொழிலாளர் நலன், வேளாண்மை மற்றும் நெசவு கொள்கைகளில் சில வார்த்தைகள், முதலீடு கொள்கைகள், வணிக போட்டிகள் ரீதியான கொள்கைகள், மற்றும் அரசு கொள்முதலில் ஒளிவு மறைவின்மை என்ற நான்கு அம்சங்கள்.

முதல் சுற்று பேச்சு வார்த்தையிலேயே நெசவு சம்பந்தமான வரைவு உடன்பாட்டில் உறுப்பினர் நாடுகளுக்கிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் ஓரளவு பேச்சு வார்த்தையில் தீர்க்கப்பட்டது என்றும் ராக்வெல் குறிப்பிட்டார். வேளாண்மை மற்றும் அரசு கொள்முதல் போன்ற விஷயாங்களை இன்னும் நன்றாக ஆராய குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வருடம் 2014

18 வருடங்கள் கழித்து இந்த ஜூலை மாதம், ஜெனிவாவில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த வர்த்தக மேம்பாட்டு அம்சத்தில்தான் உடன்பாடு ஏதுமின்றி பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.

வளர்ந்த நாடுகள் வேண்டுமானால் இந்தியாவைக் குறை கூறலாம். ஆனால் இந்தியாவின் முன்னுரிமைகள் முக்கியம். 1996ல் என்னிடம் பேசிய அந்தத் தொழில் முனைவர் சொல்லியது இன்றும் பொருந்தும். வளரும் நாடுகள் தங்கள் சந்தையை வளர்ந்த நாடுகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது வளர்ந்த நாடுகள் “தடையில்லா வணிகம்” என்று குரல் எழுப்புவதும், அதுவே தங்கள் நாடுகளுக்குள் வளரும் நாடுகளின் பொருட்கள்/ தொழிலாளர்களுக்கு பல்வித தடைகள் விதிப்பதும் என்று இருந்தால் அது சரியான சம தள வணிகம் ஆகாது. வணிக விதிகள் இருவழிப்பாதையாக இருந்தால்தான் உண்மையான வர்த்தக நியாயம் கிடைக்கும்.

இரண்டு வருடங்களுக்கொருமுறை கூடும் இந்த உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்களின் ஒன்பதாவது மாநாடு 2013 டிசம்பரில் இந்தொனேஷியாவின் பாலியில் நடந்தது. அடுத்து 2015 டிசம்பர். தேதியும் இடமும் இன்னும் முடிவாகவில்லை.

அன்று 1996ல் ஐந்து நாள் நடந்த முதல் மாநாட்டின் முடிவில் என் கடைசிச் செய்தியை இப்படி முடித்திருந்தேன்: “ உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு முடிவடைந்துவிட்டது. இது ஒரு போர்க்களம். இன்றைய முடிவு, ஒரு ஆரம்பமே. ஒரு மாபெரும் போரின் தொடக்கம். வெள்ளோட்டம் பார்ப்பதுபோல் போராட்டக் களம், போரிடும் வீரர்கள் என்று ஓரளவு சோதனை பார்க்க இந்த ஆரம்பம் உதவியது. போரைத் தொடரலாம்; கைவிட வேண்டியதில்லை என்று முடிவெடுத்தாகிவிட்டது. ஏனென்றால் இந்தப் பேச்சு வார்த்தை என்கிற போர்க்களனில்தான் ஒரு நல்ல வாய்ப்பே இருக்கிறது. உலகளவில் ஒருவருக்கொருவர் பொருட்களையும், வணிகங்களையும் நல்லுறவோடு பரிமாறிக்கொண்டு, ஆதாயங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு.

அந்தக் குறிக்கோளை, பன்முக கொள்கைகளுடன் – சுற்றுச்சூழல், மற்றும் மனித வள மேம்பாட்டுக்கொள்கைகளுடன் சேர்ந்து அரவணைத்து முடிவுகள் எடுப்பதன் மூலம் மனித சமுதாயம் ஒரு பெரும் சாதனை செய்ய முடியும். பல்வேறு நிலையில் இருக்கும் பலதரப்பட்ட விதமான நாடுகள் ஒன்று கூடி இப்படி ஒருக் குறிக்கோளை நோக்கி நகர முடிவு செய்திருப்பதே ஒரு பெரும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

இதுவரை நடந்த விவாதங்கள் பல தரப்பு நியாங்களை ஆராய்ந்தால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நடப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரத் தேவையும் கூட. ஏனென்றால் இத்தனை முயற்சிக்கும் அடி நாதமாக இருக்கும் ஒரு உந்துதல், பூமியின் வேகமாக குறைந்து வரும் இயற்கை வளங்கள் – பாக்கி எஞ்சி இருக்கும் இயற்கை வளங்கள் – அனைத்து நாடுகளுக்கும் சரி வரக் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கம். இது மாநாட்டின் ஒவ்வொரு குரலிலும் எதிரொலித்தது என்பது உண்மை.

இந்த நிலையில் பேச்சு வார்த்தைகளின் ஒவ்வொரு வார்த்தையும், கமாவும், புள்ளியும், செமி கோலன்களும், முற்றுப்புள்ளியும், முக்கியத்துவம் பெறுகிறது. சிலருக்கு ஒரு சந்தேகமே எழுந்தது: பேச்சு வார்த்தையில் அதிக முக்கியத்துவம், நாடுகளின் கொள்கைகளுக்கா அல்லது வார்த்தை ஜாலத்துக்கா என்று. ஐந்து நாள் சஸ்பென்ஸ் முடிவில், வார்த்தைகளின் விளையாட்டில் இப்போதைக்கு நாடுகள் திருப்தியடைந்து அவரவர் ஊர் திரும்பியிருக்கின்றனர் என்று தோன்றுகிறது. போர் தொடரும்…..” என்று முடித்திருந்தேன்.

9 மாநாடுகள் கழித்து இன்றும் இந்த மாநாடுகளிலிருந்து வெளி வரும் செய்திகளைப் பார்த்தால் 18 ஆண்டுகளில் வெகு தூரம் வந்த மாதிரி எனக்குத் தோன்றவில்லை. போகும் தூரம் இன்னும் நிறைய…….

ஆனால் வெற்றி அல்லது தோல்வி என்ற நிலையில்லாத – அனைவருக்கும் நியாயமான வாய்ப்புகள், வளங்கள் கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

0 Replies to “உலக வர்த்தக அமைப்பு மாநாடு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.