ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன?

நண்பர்களே,

jeyakanthan6

நண்பர் சிதம்பரநாதர் சொன்னது போல இது ஒரு வளமான கூட்டம். வளம் என்றால் மன வளம் படைத்தவர்களின் கூட்டம். உங்களுடைய மனம் எவ்வளவு பெரியதென்பதற்கு – என்னை அழைத்து வேதம் பற்றி பேச சொல்லியிருக்கிறீர்களே அதிலே தெரிகிறது உங்கள் மனம் எவ்வளவு விசாலமானது என்று.

`வித்தை ஏதும் கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிட செய்தனை` என்று பாரதியார் சொல்லுகிறார்.

நண்பர் சிதம்பரநாதர் சொன்னது போல நான் வேதம் படித்ததே இல்லை.நான் படித்த வேதம் எல்லாம் பாரதியார் புத்தகம் ஒன்று தான். அதில் வேதம் எவ்வளவு இடத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணி பாருங்கள்.

நம்மை பற்றி சொல்லுகிற பொழுது, இந்த தமிழ் நாட்டை பற்றி சொல்லுகிற போது, வேதம் நிறைந்த தமிழ்நாடு. ஒரு கடவுளை வர்ணிக்கின்ற பொழுது வேதத்திருவிழியினாள், வேத வாழ்வை கைப்பிடிப்போம். அதுக்கு ஒரு definition. வேத வாழ்வென்றால் என்ன? `வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேத வாழ்வு`.

புதுமை செய்வது என்றால் என்ன? நம்முடையது ஆக்கி கொள்வது. தமிழில் சொன்னால் வேதம் புதுமையாகி விடுகிறது. புது பொருள் வருகிறது. காலத்திற்கு ஏற்ப வேத்தை நாம் கண்டு கொள்ள வேண்டுவது நம் கடமையாகிறது. அது யாரோ சொல்லி யாரோ கேட்பதல்ல.

வேதம் என்று எது எதெற்கெல்லாம் பெயர் நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். விவிலியத்திற்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான். இந்த வேதம் என்ற பொருள் ஒன்றிற்கு ஏன் வருகிறது என்றால் அது காலம் தோறும் மனிதனுக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு புரிந்துக்கொள்ள படுவதால் தான். அது சிரஞ்ஜீவியானது.எது எது சிரஞ்சீவியானதோ, அது காலம் தோறும் புதுமையுறும்.

காலம் என்பது மனிதன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.அது பிரபஞ்சம் சம்பந்தப்பட்டது. மனிதன் சம்பந்தப்பட்டதற்கு பெயர் நேரம். சில காலங்களில் சில மனிதர்களல்ல, சில நேரங்களில் சில மனிதர்கள் தான்.

ஆகவே பாரதியை புரிந்து கொள்வதும்  தமிழர்கள் பாரதியை பரிச்சயம் கொள்வதும், பாரதியை குருவாக ஏற்பதும் நமக்கு வாய்த்த நல்ல நேரம்.

வேதம் அறிந்தவன் பார்ப்பான் என்பது definition. வேதம் தெரியாதவர்கள், நீங்கள் நினைக்கிற மாதிரி அல்லது நீங்கள் வெறுக்கிற மாதிரி பார்ப்பனர்கள் அல்ல. பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான். ஒரு வித்தை மட்டுமல்ல – பல வித்தை. ஷத்திரியனுக்கு வில் பயிற்சியை கற்று தந்தவர்கள் பார்ப்பனர்கள். என்னத்துக்கோ தெரியல. ஷத்திரியர்களுக்கு தான் கற்று தருவார்கள். சூத்திரனுக்கு கற்று தர மாட்டார்கள்.

ஏன்?

மனிதரை கொல்லும் உரிமை எல்லா மனிதருக்கும் இல்லை.

சில தருமங்கள் நீங்கள் சொன்னது போல யாருக்கு சொல்லுகிறோம் என்பதை பொறுத்து அமைகிறது. இந்த வேதத்தை எல்லோருக்கும் பரிச்சயம் செய்யவேண்டிய காலம் ஒன்று வந்தது பாரதியாருக்கு.

ஆரம்பத்தில் சொன்னது போல் நாமெல்லாம் கடவுளை கருத்துக்களில் தேடுகிறோம். நூல்களில் தேடுகிறோம். கவிதையில் தேடுகிறோம். பிரபஞ்சத்தில் தேடியதற்கு பெயர் வேதம்.

அது நீங்கள் சொல்வது போல விநாயகரையோ அல்லது நாம் வணங்குகிற விக்கிரக தெய்வங்களையோ குறிக்கவே இல்லை. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா – ஃ- சொன்னவர்கள் கேட்டு தான்.

அதாவது விஞ்ஞானத்திற்கு எது எது முக்கியமோ அந்த பஞ்ச பூதங்களை குறித்து தான் பேசுகிறது.சூரியன், வருணன், காற்று, மண், வெளி இவற்றை வணங்குகிறோம். எதற்கு? இந்த மனிதர்க்கு நலம் தரும் பொருட்டு.

மனிதர்கள் மேல் பாசம் இல்லாவிட்டால் வேதம் கூட பிறந்திருக்காது. உலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும்.என்று நினைத்தால், நான் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்ற நினைப்புக்கு அவசியமே இல்லை. நான் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், அதுவே என்னை தின்று அழிக்கின்ற கவலை ஆகும். ஆகவே வேதம் என்பது பிறர் பொருட்டு ஓதப்படுவது.

`மழையே நன்கு பொழிக எங்களை அழிக்காமல் பொழிக. தீயே விலகி நின்று எங்களை காக்க`. இவற்றில் எல்லாவற்றிற்க்கும் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருக்கிறது பாருங்கள். நமக்கு வெளிச்சம் மட்டுமே தேவை. இருட்டு இல்லாமல் வெளிச்சம் எப்படி வரும். இருட்டுக்கு எதிர்மறையாக இருப்பதால் தான் அதற்கு வெளிச்சம் என்று பெயர். நம் அறிவுக்கு சுடராக இருப்பதனால் தான் எது எது நம் அறிவுக்கு ஒளி தருகிறதோ அதெல்லாம் வேதம் என்பதனால் தான் நமக்கு திருக்குறள் வேதமாகிறது. இன்னொருவருக்கு விவிலியம் வேதமாகிறது. இன்னொருவருக்கு குரான் வேதமாகிறது.

இதிலேருந்து என்ன தெரிகிறது? வேதம் பொது. நம் தனிப்பட்டவருடைய பொருட்டு அல்ல. மனித சமூகத்தின் பொருட்டு, மனிதர்களின் மீது கொண்ட அன்பின் பொருட்டு. முன்னாளில் வேதம் ஓதுவார்கள், மூன்று மழை பொழியும்.அப்புறம் இன்னொன்று சொல்ல வேண்டாம்.

இந்நாளில் இருக்கிற கதியை பற்றி என்னத்தை சொல்றது? முன்னாளில் இருந்த பெருமை தான் வேதம். அந்த வேதத்திற்கு உரியவர்கள், அந்த வேதத்தை காப்பவர்கள், அதன் படி வாழ்கிறவர்கள் வேதியர்கள். கடவுள் கூட ஒரு வேதியன் தான்.சிவபெருமானை வேதியன் என்று சொல்கிறார்கள். அதாவது பிராமண சங்கத்தில சேர்த்துக்கலாம்னு பார்க்கறீங்களா?

அப்படிப்பட்ட வேதத்தை மக்களின் நலன் பொருட்டு உபாசிப்பது, அவர்களுக்காகவே தங்கள் சுக துக்கங்களை எல்லாம் துறப்பது என்று சில மனிதர்கள் அக்காலத்தில் வாழ்ந்தார்கள். இன்றைக்கு அவர்கள் இல்லை என்று நினைக்காதீர்கள். அவர்கள் வேதியர்களாக மட்டும் இல்லை. அவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள்.மக்களை வாழ வைப்பவர்கள், மக்களின் நலம் பொருட்டு வாழ்பவர்கள், இவர்கள் எல்லாம் புதிய வேத்த்தின் படி வேதியர்கள் தான்.

எல்லாவற்றையும் புதுமை செய்ய சொன்னார் அவர். வேதத்தை மட்டும் அல்ல. மனிதனை, சிந்தனையை, பெண்ணை, இந்த பூமியை.

`புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்`. இன்னொன்று சொன்னால் தான் ஒன்றிற்கு அர்த்தம் வருகிறது. புதியதோர் உலகம் செய்தால் கெட்ட போரிடும் உலகம் இல்லாமல் போய்விடும். ஆகவே வேதத்தை போற்றுவதும் வேதத்தை வாழ்வாக கொள்ளுவதும் நமது மண்ணில் மரபாக இருந்திருக்கிறது.

முன்னோர்கள் சொல்லுவதை எல்லாம் நாம் முதலில் நம்புதல் வேண்டும். அறிவு என்பதே முன்னோர்கள் சொல்வதை நம்பாமல் இருப்பது என்ற விபரீத பொருள் கொண்டு விட்டது இன்றைக்கு. அதை நம்பி அங்கேயே நின்று விடுவது அல்ல.

தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு தெய்வ நம்பிக்கை வரவே முடியாது. தன்னம்பிக்கைக்கு ஒரு எல்லை உண்டு. எதுவரைக்கும் என்னையே நான் நம்புவது? ஒரு எல்லைக்கு மேலே என் நம்பிக்கை இருக்கிறது, நான் இல்லை என்றாகிறது.

எனது நம்பிக்கை இருக்கிறது. நான் இல்லை.வேறு எது இருக்கிறது?

எதுவுமே இல்லை. இதுதான் வேத்த்தின் இறுதி வாக்கியம்.

இல்லை- நாத்திகர்களுக்கு மட்டுமல்ல, நம்புவர்கள் கூட கண்ட உண்மை என்னவென்றால், நம்புவர்களும் இல்லை என்பதே.

இதில் பாரதியார் தான் புதிய விளக்கம் சொல்கிறார். வேதம் சொல்லாத புதுமையை, வேத்த்தில் இல்லாத புதுமையை, வேதம் இல்லை என்று சொல்லிவிட்ட ஒன்றை- `எல்லை ஒன்று, இன்மை எனும் பொருள் அதனை கம்பன் குறிகளால் காட்டிட முயலும்` அதாவது வேத்திலே புரியாததை கம்பன், தமிழ் ஏன் அமரத்துவம் வாய்ந்த்து என்று நான் கருதுகிறேன் என்றால் இது காரணம் என்று ஒரு காரணத்தை சொல்லுகிறார்.

அதிலே கம்பன், ஒரு காரணம் தமிழ் அழியாமல் இருப்பதற்கு. எதனாலென்றால் – `எல்லை ஒன்று, இன்மை எனும் பொருள் அதனை கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியை கருதி` அது என்ன?

நன்றி : திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரு. சுகா. (கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்திய ‘பாரதி’ பற்றிய நிகழ்ச்சியின் ஒலிக் கோவை.)

(அடுத்த இதழில்)

0 Replies to “ஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.