சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே !

Fury_Lonely_Forest+Burnமண் மகள் முன்னின்று மறுகினேன் !

ஒரு பிடி மண் தா,
உழைத்துப் பிழைக்கணும் !

ஆங்காரத்துடன் அள்ளிக்கொண்டன

அதிகாரங்கள்
பன்னாட்டுப் பங்குகள்
கவ்விக்கொண்டன
மற்று என்னிடம் ஏது
மண்ணெனச் சொன்னாள்
அகழ்வாரையும் இகழ்வாரையும்
தாங்கும் அன்னை !

தாழ்விலா மறம் ஒரு துளி மந்திரித்துத்
தா என்றேன் மலையவன் மகளிடம் !
இரு மூன்று வதனத்தான் தன் தாயும் உரை செய்தாள் !
முன்னைக் கொடுத்ததைக் கொண்டு
பாரதி போனான்
வ.உ.சி. மாண்டான்
ம.பொ.சி நீத்தான்
இன்றவர்
அஸ்தியும் இல்லை ஆஸ்தியும் பொச்சு !
வீரம் என்றொரு பொருளுனக்கெதற்கு?
மானம் கெட்ட வாழ்க்கை நடத்த?

தேவர்களும் தெரிவறியாச்
சீர்மகளைப் பேர்மகளை அலைமகளை
அண்ணாந்து பார்த்தேன் !
கைப்பிடித் தங்கம்
கரை சேர்க்கும் என்றேன் !

வணியர், வங்கியர், கல்வித் தந்தையர்,
தாதுக் கொள்ளையர், கனிம உரிமையர்,
கலைக் காவலர், கலப்படம் செய்பவர்,
மனைகள் விற்பவர், மருத்துவ மனையர்
உரிமைப் பெண்டிர்
கழுத்தில் இடுப்பில் காலில் கிடக்கும்
காணக் கிடைக்கும் வாங்கக் கிடைக்காது.
என் தாலிக்கே தங்கம் இல்லை
விரலி மஞ்சளை முடிந்து கொண்டுள்ளேன் !
சங்கடம் சொன்னாள்
செந்திரு மகளும் !

எழுத்தின் கிழத்தியின்
எளியமகன் நான் !
மாற்றான் தாயிடம் ஏன்
மண்டியிடணும்?

நாமகள் வெள்ளைத் தாமரைப் பூமகள்
நயனம் நயத்து நாணிக் கேட்டேன் –
சூரிய ஒளியில் நின்று சுடரும்
தூய தமிழின் சொல்லொன்று தா என !

கை கணக்கின்றிக் கிடக்குடா மகனே !
துருப்பிடியாத, நிறம் குன்றாத, கூர்மழுங்காத,
கருக்கழியாத, பாசி பற்றாத, புழு அரிக்காத,
காலக் கறையான் கரம்பி எடுக்காத
தெள்ளு தமிழ்ச் சொற்கூட்டம்
எக்கச் சக்கமாய் இருக்குடா தம்பி !

போர் அறியாக் கோழை கைக்கருவி போல,
குக்கல் உருட்டும் நெற்றுத் தேங்காய் போல,
பாழாய்க் கிடக்குடா !
பண்டாரம் நிறைந்து சிந்தி வழியக்
கண்டமானம் காணலாம் மகனே !

சங்கப் புலவர், வள்ளுவன், இளங்கோ,
மதுரை கூல வணியன் சீத்தலைச் சாத்தன்,
திருத்தக்கத் தேவன்,
ஔவை, காரைக்கால் அம்மை,
அன்னவயல் ஆண்
டாள்,

தேவார மூவர், அருள் மணி வாசகன்,
பன்னறிய ஆழ்வார், திருமூலன்,
கம்பன், சேக்கிழார், அருணகிரி நாதன்,
பட்டினத்துப் பிள்ளை, அருமைத் தாயுமானவன்,
சிற்றிலக்கியப் புலவர், தனிப்பாடல் கவிஞர்,
வாடிய பயைரைக் கண்டு வாடிய வள்ளல்,
போர்க்குணப் பாரதி
எனப்பலர்
கைவிட்டு அளைந்து அம்மானை ஆடிய
வண்ணச் சொற் கருவூலம் !

குலுக்கிக் கட்டு நீ !
கோரிக்குடி கொள்ளுமட்டும் !
குவலயம் கண் கூச
வீசியெறி வானப் பரப்பெங்கும் !
விண்மீனாய்ச் சுடரும் தமிழ்ச் சொற்கள் !
அவை
ஊரான் முதலல்ல தம்பி,
உன் மொழியின் வெள்ளாமை !

ஏழைக்கு இரங்குபவள்
கலைமகள் மாத்திரமே !
சோத்துக்குச் செத்தாலும்
சொல்லுக்குச் சாகாதே,
தொன்மைத் தமிழ்க் குடியே !

0 Replies to “சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே !”

  1. பண்டாரம் நிறைந்து சிந்தி வழியக்
    கண்டமானம் காணலாம் மகனே! ….கண்டமானம்..:)…கோரிக்குடி…
    அண்ணாச்சி என்னத்த சொல்ல?…
    அந்த எழுத்தின் கிழத்தி உமக்கு கண்டமானம் அருளட்டும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.