கச்சேரி

Pic-Page-4

“மறுபடியும் அந்தச் சங்கதியப் பாடு!” பாட்டிஆணையிட்டாள்.

“மீன லோஓஓஒசனி பாஆஆஷ மோஓஓஒசனி” சரண்யா பாடினாள்
“மோசனி, உப்பு சப்பு இல்லாத பாடற. இன்னும் நல்லா அந்த நெளிவு சுளிவுல்லாம் வரணும். தட்டையா பாடக்கூடாது,” பாட்டி அறிவுரை ஆரம்பித்தாள். “மறுபடியும் பாடு.”

மறுபடியும், “மீன லோசனி” தொடர்ந்தது.

இது எங்கள் வீட்டில் தினமும் நிகழும் சம்பவம். நீங்கள் எப்பொழுது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் இதைக் கேட்க வாய்ப்புண்டு. சரண்யா என் மூத்த சகோதரி. இந்த வருடம்தான் படிப்பை முடித்தாள். இப்பொழுது முழு நேரப் பாடகியாக வரவேண்டும் என்று அவளுக்கு ஆசை. உண்மையாகச் சொல்லப்போனால் அவளுக்கு இந்த ஆசை இருக்கிறதோ இல்லையோ, என் பாட்டிக்கு இந்த ஆசை தீவிரமாக இருக்கிறது. அதனால் தான் அவள் தினமும் சரண்யாவைப் பாடவைத்து ஒவ்வொரு சங்கதியும் சரியாக வரும்வரை விடமாட்டாள். “போறும் பாட்டி. சரியாதானே வந்துது,” என்று சரண்யா அவ்வப்பொழுது அழுவாள். ஆனால் பாட்டி இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டாள். அவளுக்குச் சரி என்னும் வரை பாடியாகவேண்டும். “அங்க டீச்சர் தொல்ல. இங்க ஒன் தொல்ல,” என்று சரண்யா சலித்துக்கொள்வாள்.

சரண்யா அனந்தலக்ஷ்மி மாமியிடம் பாட்டு கத்துக்கொள்கிறாள். மாமி பயங்கர ஸ்ட்ரிக்ட். வெட்டிப் பேச்சுக்கு இடமிருக்காது. சொல்லித் தந்தபடிதான் பாடவேண்டும். சொந்த சரக்குக்கு இடமில்லை. சங்கதி எல்லாம் கனகச்சிதமாக வரணும். புக் பாக்காம பாடணும். ஒரு பாட்டு எல்லா விதத்துலையும் திருப்தியா அமைஞ்சாதான் அடுத்தப் பாட்டை சொல்லிக்கொடுப்பாள். அங்கேயும் சங்கதிய மறுபடியும் மறுபடியும் பாடணும். பாட்டிகிட்ட வந்து மறுபடியும் மறுபடியும் பாடணும். கேக்கற எனக்கே சலிப்பா இருக்கும். சரண்யாவுக்கு இருக்காதா?

“இப்படிச் சலிச்சிண்டா எப்படி? நல்ல பாடகியாகணும்னா நல்லா பயிற்சி பண்ணனும். தூக்கத்துல எழுப்பி ஒரு பாட்ட பாடச் சொன்னா ஒரு சங்கதியும் மறக்காம ஒரு பிசிறில்லாம பாடணும். அந்த அளவுக்கு ப்ராக்டிஸ் பண்ணனும்,” என்பாள்.

“நான் என்ன எம்.எஸ். ஆகப் போறேனா?” என்று அம்மாவிடம் கேட்பாள் சரண்யா.

பாட்டி ஒல்லியாக இருப்பாள். எப்பொழுதும் மடிசார் தான். நரைத்த முடி. தடிமனான கருப்புக் கண்ணாடி. பார்க்க ரொம்பச் சாந்தமாக இருப்பாள். ஆனால் பாட்டு என்று வந்துவிட்டால் ஹிட்லர் ஆகி விடுவாள்.

பாட்டி நன்றாகப் பாடுவாள். “ரொம்ப சின்ன வயசுல எனக்கு கல்யாணம் பண்ணிட்டா. உங்க தாத்தாவோ பாட்டெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டார். இல்லேன்னா நான் பெரிய பாடகி ஆயிருப்பேன்,” என்று பாட்டி அடிக்கடி சொல்லுவாள். அவள் ஆகமுடியாத பாடகியாகப் பேத்தியைத் தயார் செய்யவேண்டும் என்று பாட்டிக்கு ஆசை.

சாயங்காலம் சரண்யாவிற்கு ஒரு கச்சேரி இருக்கிறது. யாரோ டம்பமாக ‘Future Classical Stars Week ’ என்று ஒரு இளம் பாடக / பாடகிகள் வாஆஆஆரம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதில் சரண்யாவுக்கு சாயங்கால ஸ்லாட். எப்பொழுதும் வரும் ஒரு பத்து இருபது பேர் அல்லாமல் இந்தத் தடவை அரங்கம் பாதி நிரம்பியிருந்தது. ஸ்ரீனிவாசன் மாமா கண்ணில் பட்டார். “என்னடா. எப்படி இருக்க?’ என்று கேட்டுவிட்டு எப்பொழுதும் போல் பழைய புராணத்தை ஆரம்பித்தார். “இதே ஹால்ல அரியக்குடி ஒரு தோடி பாடினார் பாரு. இன்னும் காதுல கேக்கறதுடா அது.”

“அப்படின்னா காதுல எதாவது கோளாறா இருக்கும் மாமா. நல்ல ENT டாக்டர் கிட்ட காமிங்க,” என்றேன். என்னை முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். நாட்டில் நகைச்சுவை உணர்வு கம்மியாகிக்கொண்டே வருகிறது.
சரண்யாவின் கச்சேரி என்றால் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணி இருக்கும். கூஜா தூக்குவதும், எடுபிடி வேலைகளும் எனக்கு. கூட்டம் சேர்ப்பது அப்பாவின் பொறுப்பு. யார் வந்தார்கள், அவர்கள் கச்சேரி பற்றி என்ன சொன்னார்கள், எந்தப் பாட்டிற்குக் கை தட்டினார்கள் என்று கவனிப்பதில் அம்மா குறியாக இருந்தாள். பாட்டி தான் ஆஸ்தான விமர்சகர்.

கச்சேரி முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது அம்மா ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். “நல்ல கூட்டம் இன்னிக்கி. நல்ல ரெஸ்பான்ஸ். ரொம்ப திருப்தியா இருந்துது.” அப்பாவுக்கு இதைக் கேட்டதும் சந்தோஷமாகி விட்டது.. ஒவ்வொரு கச்சேரிக்கு பிறகும் அவருக்கு டோஸ் விழுவது வழக்கம். “ஏன் கூட்டம் கம்மி? ஏன் அந்த மாமா வரல? அந்த மாமிக்கு வேற என்ன அவ்வளவு முக்கியமா வேல?” போன்ற கேள்விகள் அம்மா கேட்க, பதில் சொல்வதற்கு அப்பா திணறிக்கொண்டிருப்பார். இன்றைக்குத் தப்பித்தோம் என்ற நிம்மதி அவர் சிரிப்பில் தெரிந்தது.

சரண்யாவுக்கும் ஒரே சந்தோஷம். நல்ல கூட்டம் என்பதை விட ராகுல் வந்திருந்தான். கச்சேரிக்குப் பின் அவளைச் சந்தித்து, “வெரி நைஸ்,” என்று வேறு சொன்னான். இவளுக்குத் தலை கால் புரியவில்லை. சரண்யாவுக்கும் அவள் நண்பிகளுக்கும் ராகுல் தான் ‘மோஸ்ட் க்யூட் அண்ட் ஹாண்ட்சம் பாய்.’ அவன் வந்திருந்ததையும் தன்னுடன் பேசியதையும் பல பேருக்கு போன் செய்து சொல்லிவிட்டாள்.

எப்பொழுதும் போல் பாட்டிக்குத்தான் கச்சேரியில் முழு திருப்தி இலை. “நீ பாடற பைரவில ரொம்ப கரஹரப்பிரியா சாயல் வருது. பைரவி பாடறப்போ கண்கொத்திப் பாம்பா இருக்கணும். வரவா போறவாளக் கவனிச்சிண்டிருந்தா நமக்கு பைரவி கைல கிடைக்காது,” என்று விமர்சித்தாள்.

“பைரவி நல்லா தானே இருந்துது,” என்று ஆரம்பித்தார் அப்பா

“நீங்க செத்த சும்மா இருங்கோ மாப்பிள்ளை.” என்றாள் பாட்டி.

பாட்டிக்கு அப்பாவின் இசை அறிவு மேல் நம்பிக்கை இல்லை. ஒரு முறை நான் பாட்டியிடம் கேட்டிருக்கிறேன்.

“நீ ஏன் பாட்டி அப்பாவ பாட்டப் பத்திப் பேசவேவிட மாட்டேங்கர?”
“உங்க அப்பாவுக்குப் பாட்டப் பத்தி ஒரு மண்ணும் தெரியாது. எதாவது உளறிண்டிருப்பார்.”
“மாப்பிளையைப் பத்தி இப்படி சொன்னா சாமி கண்ணக் குத்தும்.”
“சொல்லலேன்னாதாண்டா குத்தும். உங்க அப்பா உங்க அம்மாவைப் பொண்ணு பாக்க வந்தார். பெண் பார்க்கும் படலத்துக்குன்னே நான் உங்கம்மாவுக்கு தோடில ‘கார்த்திகேய காங்கேய’ சொல்லிக் குடுத்திருந்தேன். அவளும் அருமையா பாடினா. பாட்ட ரொம்ப ரசிக்கற மாதிரி பாவன பண்ணார் ஒங்க அப்பா. பாட்டு முடிஞ்ச உடனே, “ரொம்ப நல்லா இருக்கு. இந்த மாதிரி கல்யாணி ராகத்த நான் கேட்டதே இல்லை” ன்னார்.”

நான் உரக்க சிரித்தேன்.

“எனக்கும் இப்படித்தான் சிரிப்பு வந்துது. இது நடுவுல உன் தாத்தா, அதான் உங்கப்பாவோட அப்பா, சொன்னார், “எங்க வீட்ல இவனுக்குத் தான் இசை ஞானம் ஜாஸ்தி. டக்கு டக்குனு ராகத்த கண்டுபுடிச்சிடுவான். நான்லாம் ஞானசூனியம்.”

நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.

“சிரிக்காதடா. அவா வெளில போனாளோ இல்லையோ, உன்னோட இன்னொரு தாத்தா என்கிட்டே சொன்னார், “பாருடீ. உனக்கு வேண்டிய மாதிரியே நல்ல ஞானஸ்தன் மாப்பிள்ளையா வரப்போறார். எப்படி டக்குன்னு சொன்னார் பாரு, ‘இது கல்யாணி ராகம்’ன்னு. என்னால கண்டுபிடிச்சிருக்கவே முடியாது.”

நான் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். பிறகு, “என்னவிட ஞான சூனியமா இருப்பா போல இருக்கே இவா. எப்படி பாட்டி இவாளெல்லாம் கட்டி மெய்ச்ச?” என்று கேட்டேன்.

பாட்டி தலையில் அடித்துக்கொண்டு, “எல்லாம் என் தலையெழுத்து,” என்றாள்.

அடுத்த நாள் வீட்டில் வீட்டில் சந்தோஷம் குறைந்திருந்தது. காரணம், சரண்யாவின் தோழியான ம்ருதுஸ்மிதாவின் கச்சேரிக்கு கிடைத்த வரவேற்பு. அரங்கம் ரொம்பி வழிந்தது. எல்லாப் பாட்டுக்கும் கைதட்டல் காதை கிழித்தது. கச்சேரி முடிந்த பின் எல்லோரும் அவளைச் சூழ்ந்துக்கொண்டு வாழ்த்தினார்கள்.

நான் நினைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தவுடன் அப்பாவுக்கு அர்ச்சனை தொடங்கியது, “இன்னிக்கு கூட்டத்தப் பாத்தேளா?” என்று அம்மா கேட்டாள்.
“அவோ டீ.வீ.ல வந்திருக்காளோல்லையோ, அதுனால தான் கூட்டம்,” என்று அப்பா சமாளித்தார்.
“ஏதாவது ஒரு சாக்கு சொல்லுங்கோ. உங்களுக்கு சரியா நிர்வாகம் பண்ணத் துப்பில்ல. நீங்க சரியா ப்ளான் பண்ணியிருந்தா நேத்திக்கும் ஹால் புல்லா இருந்திருக்கும்.” சரவெடியாக அம்மா.
“அது டீ.வீ. க்ளாமர்டீ. அவ ஏதோ பாட்டுப் போட்டில வராளாம். அதனால் அவள நெறய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. பாட்டக் கேக்க யாரு வரா. அவளப் பாக்க வரா”

“நம்ப பொண்ணு ஏன் டீ.வீ ல வரல?”

அப்பா முழித்தார்.

சரண்யாவுக்குத் துக்கம் தொண்டை அடைத்தது. கச்சேரிக்குக் கூட்டம் வந்தது பற்றி அவள் கவலைப்படவில்லை. ராகுல், ம்ருதுஸ்மிதா கச்சேரிக்கு வந்ததும், கச்சேரி முடிந்த பிறகு அவளிடம் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தததும்தான் சரண்யாவின் துக்கத்திற்கு காரணம். நெருங்கிய தோழியான ரஞ்சனிக்கு போன் செய்து புலம்பித் தீர்த்தாள்.

எப்பொழுதும்போல் பாட்டிக்கு எதிர்மறைக் கருத்து இருந்தது. “இவ்வளவு மட்டமான பாட்டக் கேக்க இவ்வளவு பேர் எதுக்கு வந்தா? அந்த பொண்ணுக்கு ஸ்ருதில நிக்கவே தெரியல. எவ்வளவு இடத்துல ஸ்ருதி போச்சு. இவளுக்கு எப்படி சான்ஸ் குடுக்கறா?” என்று கேட்டாள்.

“அந்த காலத்துப் பெரிய பெரிய வித்வான்களுக்கே ஸ்ருதி சேராதுன்னு நீ தானே சொல்லுவ பாட்டி. இவ சின்னவ தானே?” என்று நான் கேட்டேன்.

“நீ சும்மா இருடா. அவாளுக்கெல்லாம் என்ன ஞானம். இவளோட அவாள கம்பேர் பண்ணிண்டு,” சரண்யாவைப் பார்த்துத் தொடர்ந்தாள், “ஒன் பாட்டு அவ பாட்டைவிட எவ்வளவோ மேல். ஒனக்கு இருக்கற திறமேல பாதி கூட அவகிட்ட இல்ல. நீ எதுக்கு கவலைப்படற?” என்று கேட்டாள்

“ராகுலுக்காக,” என்று சொல்ல வந்தவன் சொல்லவில்லை.

அம்மா பாட்டிக்குப் பதில் சொன்னாள். “வெறும் திறமை இருந்தா இந்த காலத்துல போறாது. இன்னிக்கு நல்லா தெரிஞ்சி போச்சு. நான் இதை சரி பண்ணியாகணும். இவர நம்பி இருந்தா சரண்யா காரியர் அதள பாதாளத்துக்கு தான் போகும்,” என்று சொல்லிவிட்டுப் புடவை மாற்றிக்கொள்ளச் சென்றுவிட்டாள். அப்பா மொபைல் ஃபோனைக் கையிலெடுத்து யாருக்கோ போன் செய்வது போல் நடித்துக்கொண்டே ஹாலைவிட்டு வெளியே சென்றார்.

அம்மா ஒன்றைச் ‘சரி செய்கிறேன்’ என்றால் சரி செய்துவிடுவாள். அம்மாவுக்கு அப்படி ஒரு பிடிவாத குணம். பல வருடங்களாக ஒரு கம்ப்யூட்டர் ஏஜென்சி நடத்துகிறாள். அப்பா, அம்மா, மாமனார், மாமியார் என்று எல்லோரையும் எதிர்த்து இதை வெற்றிகரமாக நடத்தி வருகிறாள்.

இப்போது சரண்யாவிற்கு வேண்டியது வேறு ஒரு குரு என்று பலர் பேரிடம் பேசியபின் அம்மா முடிவு செய்தாள். இப்பொழுது ரொம்பவும் புகழ் பெற்றிருந்த குருவான மதுரை விஸ்வநாதனிடம் சரண்யா பயிலவேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் பாட்டி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

“புகழ்ங்கரது வேற. பாட்டு வேற. அந்த மனுஷனுக்கு ஆனந்தலக்ஷமியவிட என்ன பெரிய பாடாந்தரம் இருக்கு? அவர் சொல்லிகுடுத்தவா எல்லாம் ரொம்ப மேலோட்டமா பாடறா. கைத்தட்டல் வாங்கறதுக்குப் பாடறா. சரண்யா எவ்வளவு அழகா பாடறா. ஏன் அத கெடுக்கணும்ன்னு பாக்கற. சரண்யா அவர்கிட்ட கத்துக்கறத என்னால ஒத்துக்கமுடியாது,” என்று ஆணித்தரமாகக் கூறினாள்.

அம்மா விடவில்லை. “அம்மா, இந்த காலத்துல கச்சேரி எப்படி கிடைக்கறது, டீ வீ ல எப்படி எல்லாம் வரலாம், எப்படில்லாம் விளம்பரம் பண்ணனும்னு ஒனக்கு ஒண்ணும் தெரியாது. பழைய காலத்த மாதிரி பாட்ட மட்டுமே நம்பிண்டு இருக்க முடியாது. அத தவிர பல விஷயங்கள் பண்ண வேண்டியிருக்கு. விஸ்வநாதன் மாமா பாட்டு எப்படி சொல்லிக்கொடுத்தாலும் பரவாயில்லை. அவருக்கு நல்ல காண்டாக்ட்ஸ் இருக்கு. எல்லா சபா செக்ரெட்டரியும் நல்லா தெரியும். டீ.வீ.காரளையும் நல்ல தெரியும். சரண்யாவ நல்லா முன்னுக்குக் கொண்டுவருவார்.”

“ஆமாம். இந்த காலத்துல பிராண்டிங் ரொம்ப முக்கியம்,” என்றார் அப்பா. பாட்டியும் அம்மாவும் அவரைப் பார்த்து முறைத்தார்கள். அப்பா இருவர் கண்களையும் தவிர்த்தார்.

“என்னடி முன்னுக்குக் கொண்டுவருவார்? டீ.வீ ல வந்தா போறுமா. பாட்டுன்னா தலைமுறை தலைமுறையா நிக்கணும். சீவி சிங்காரிச்சிண்டு வந்து அழகா சிரிச்சா போறாது. பாட்ட கேட்டா இத மாதிரி யாரும் பாடினதில்லன்னு இருக்கணும். பெரிய பெரிய ஞானஸ்தாள்லாம் பத்து பேரு இருக்கற சபைல பாடியிருக்கா. அவா எப்போவோ போயிட்டா ஆனா அவா இன்னும் பாட்டு உயிரோடயிருக்கு. இப்ப பாரு ஏதோ ஒரு தடவ டீ.வீ ல வந்தேன், ஒரு பாட்டு சினிமால பாடின்னேனு பத்து நாளு ஆகாசத்துல மிதக்கரா. அப்புறம் என்ன ஆறது? ஏதோ ப்ரோக்ராம்ல ஜட்ஜா வரா. இப்படியா நம்ப பொண்ணு போகணும். அனந்தலக்ஷ்மிகிட்டேயே போகட்டும் என் பேத்தி”

பாட்டியின் தாக்குதலை அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. வேறு வழியின்றித் தற்காலிகத் தோல்வியை ஒத்துக்கொண்டாள். சரண்யா அதே குருவிடம் பயின்று வந்தாள். பாட்டி அதேபோல் தினமும் சரண்யாவை பாடவைத்துப் படுத்தினாள். இப்படியா மூன்று மாதங்கள் கழிந்தன.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நாங்கள் சென்ற ஒரு கல்யாணம் தான் கதையில் திருப்புமுனையாக அமைந்தது. பாட்டி அந்த கல்யாணத்துக்கு வரவில்லை.

வீட்டுக்கு வந்தவுடன் பாட்டியிடம் அம்மா முறையிட்டாள். “என் பொண்ணப் பத்தி என்ன நெனச்சிண்டிருக்கா எல்லாரும்?”
“என்னடி ஆச்சு?”

“இன்னும் என்ன ஆகணும்? அந்த ம்ருதுஸ்மிதா வந்திருந்தா. எல்லாரும் அவளுக்கே சிஸ்ரூஷ செய்யறா. “நீ எப்படி இருக்க? நீ எப்படி இருக்க? காபி குடிக்கறயா? ஜூஸ் குடிக்கறையா? இங்க உட்காரு. உன்னோட ஒரு போட்டோ எடுத்துக்கறேன்”. போட்டி போட்டுண்டு எல்லாரும் அவள சுத்தி சுத்தி வரா. எங்கள யாரும் கண்டுக்கல. சரண்யா பாடறான்னு கூட நெறைய பேருக்கு தெரியல. இத்தனைக்கும் அவ பாட்டு சரண்யா பாட்டோட கம்பேரே பண்ண முடியாது. “ஒ. நீயும் பாடறியா? நல்ல பாடி ம்ருதுஸ்மிதா மாதிரி முன்னுக்கு வரணும்” ன்னார் ஒரு கிழவர். செவிட்ல அறையணும் போல இருந்துது,” என்று அம்மா ஆத்திரமாகச் சொன்னாள்.

சரண்யா தன் புகார்களை அடுக்க ஆரம்பித்தாள். “அதுவானா பரவாயில்லை பாட்டி. அவ ஏதோ டிசைனர் புடவை கட்டிண்டு வந்திருக்கா. எல்லாரும் அத அப்படியே ‘ஆஹா ஓஹோ’ன்னு புகழறா. அங்க வந்த பசங்க எல்லாம் என்னைப் பாத்து ஒரு சின்ன ‘ஹலோ’ன்னு சொல்லிட்டு உடனே அவ கிட்ட போயி ‘லவ்லி சாரி யா’ ன்னு வழிய ஆரம்பிச்சிடறா. எல்லாம் அவளோட ஒரு போட்டோ, ஒரு செல்பி. உடனே ‘வித் gorgeous ம்ருதுஸ்மிதா’ன்னு facebook அப்டேட் வேற.” அவள் குரலில் சோகம் கலந்த கோபம் இருந்தது.

பாட்டி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அப்பொழுது சரண்யாவின் கைபேசி மணியடித்தது. அவள் அதை எடுத்து, “ஹை ராகுல்” என்றாள். குரலில் சந்தோஷம் குடிகொண்டது. அரை நிமிடம் தான் நீடித்தது. “ஓஹோ. ஓஹோ” என்றபோது குரலில் ஏமாற்றம் இருந்தது. “ஓகே யா. நைஸ் டு க்நொவ்’ என்று சொல்லி உரையாடலை முடித்தாள். முடித்தவுடன் அம்மாவை பார்த்து துக்கம் தொண்டை அடைக்க, “இனிமே நம்ப அவளப் பிடிக்கவே முடியாது” என்றாள்.

“என்ன ஆச்சு? யாரப் புடிக்க முடியாது?”

“அந்த ம்ருதுஸ்மிதாவத்தான். இப்போ தான் ராகுல் போன் பண்ணான். அந்த டீ வீ காரா அவள அமெரிக்கா அழைச்சிண்டு போறாளாம். அங்க நெறைய கச்சேரி பண்ணப் போறாளாம். கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆரதனைல பாடினாலும் பாடுவளாம். இனிமே அவ காலு பூமில எங்க நிக்கப் போறது,”. சரண்யாவின் முகம் பார்க்க பாவமாக இருந்தது.

அம்மா பேயறைந்தது போல் உட்கார்ந்துக்கொண்டாள். அப்பாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. எங்கே அஸ்த்ரம் தன் மேல் பாயுமோ என்ற பயம் மூஞ்சில் தெரிந்தது. பாட்டியும் நானும் மட்டும்தான் இதைப் பற்றி கவலைப்படவில்லை.

“இதெல்லாம் முக்கியம் இல்லடீ” என்று பாட்டி சொல்ல ஆரம்பித்தவுடனே சரண்யா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அம்மா பாட்டியைப் பார்த்து, “நீ கொஞ்சம் சும்மா இரு,” என்று சொல்லிவிட்டு சரண்யாவை அணைத்துக்கொண்டாள். “நான் இருக்கேன் இல்லை. ஏன் அழற? உன்னையும் அந்த லெவலுக்குக் கொண்டு போறேனா இல்லையா பார்.”

அப்பாவைப் பார்த்து, “நாளைக்கு மதுரை விஸ்வநாதனை நம்ப பாக்க போறோம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க,” என்று ஆணையிட்டாள். பாட்டியால் இந்த முறை ஒன்றும் சொல்லமுடியவில்லை.

அடுத்த நாள் விஸ்வநாதன் மாமா வீட்டுக்கு சென்றோம். முதலில் எங்களைப் பார்க்க ஒரு அல்லக்கை வந்தான். “உட்காருங்கோ. மாமா வந்துடுவார்,” என்றான். அவன் பெயர் ஏ.கிஷோர். நான் அவனை ஏ.கே. என்று கூப்பிட்டேன். கொஞ்சம் நேரம் கழித்து மாமா வந்தார். நெற்றி முழுக்க விபுதி பட்டை. தங்க frame போட்ட கண்ணாடி, பாதி வழுக்கையான மண்டை, பட்டு வேஷ்டி, வெள்ளை ஜிப்பா, ஒரு காதுல கடுக்கன், சிவப்பு நிறத்துல ஒரு அங்கவஸ்திரம். ஒரு கர்நாடக இசை கலைஞன் stereotype எப்படி இருக்குமோ மாமா அப்படி இருந்தார்.

“வாங்கோ. வாங்கோ. நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். ரமணி உங்க நண்பரா?” என்று அப்பாவை பார்த்து கேட்டார்.
“ஆமாம்”
“எனக்கு அவர ரொம்ப நல்லா தெரியும். உங்கள ரொம்ப சிபாரிசு செஞ்சார். குழந்த தான் பாட்டுக் கத்துக்க போறதா? நீ யார் கிட்ட பாட்டு கத்துக்கற?”

“திருமதி அனந்தலக்ஷ்மி”

“ஓஹோ. அவளோடது அருமையான பாடந்தரமாச்சே?”

“நல்ல பாடாந்தரம் தான் மாமா ஆனா குழந்த கொஞ்சம் உலகத்துல முன்னேரனமோல்யோ?” என்றாள் அம்மா.

மாமாவின் உதட்டில் ஒரு சிறு புன்னகை பூத்தது அனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒரு பாட்டு பாடு குழந்த” என்று சரண்யாவை பார்த்து மாமா கேட்டார். சரண்யாவிற்கு மாமா அவளை ‘குழந்தை’ என்று அழைப்பது பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தது. மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டே, ‘வடிகா கோபாலுனி’ என்று அனுபல்லவியில் ஆரம்பிக்கும் மோகன பதம் ஒன்று பாடினாள். அவள் பாடி முடித்தவுடன் “ஆஹா” என்றான் ஏ.கே. “கண்ண மூடினா அப்படியே தேவி தெரியறா மாமா. நல்ல பாட்டு”. பாட்டு கண்ணனை பற்றியது. அதுவும் ஸ்ருங்காரம் ததும்பும் பாட்டு. இவனுக்கு தேவி எப்படித் தெரிந்தாள்?

“அருமையாப் பாடற குழந்த. கனமான சங்கீதம். ரொம்ப கர்நாடகமான சங்கீதம்,” என்று சொல்லிவிட்டு அர்த்தபாவத்துடன் அம்மாவை பார்த்தார்.

“ஆமாம் மாமா. ரொம்பவே கர்நாடகமா இருக்கு. கொஞ்சம் ஜனரஞ்சகமும் சேர்ந்துடுட்டா..” என்று அம்மா இழுத்தாள்.

“நீங்க சொல்றது புரியறது மாமி. இந்த மாதிரி சங்கீதத்த கேக்க யாருக்கும் பொறுமை இருக்கறதில்ல. எங்க குரு சின்னவரா இருந்தப்போ எல்லாரும் இப்படித் தான் பாடிண்டு இருந்தா. எல்லாரும் பெரிய மஹான்கள்.” கண்ணை மூடிக் கை கூப்பி வணங்கினார்.

ஏ.கே. உடனே, “பத்து வரிக்கு ஒரு தரம் குருவைப் பத்தி பேசாம இருக்க முடியாது மாமாவால,” என்றான். இவனுக்கு மாமா சம்பளம் கொடுக்கிறாரோ?

மாமா இரண்டு கைகளை விரித்து மேலே தூக்கினார். “எல்லாம் குரு கடாக்ஷம்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார், “இது பாஸ்ட் ஃபுட் காலம் மாமி. எல்லாரும் எதுக்கோ ஓடிண்டே இருக்கா. அப்புறம் டெக்னாலஜி எவ்வளவு முன்னேறிடுத்து. என் பேரன் அமெரிகாலேர்ந்து அது ஏதோ ஐ-பாடாமே அதுலேர்ந்து சாட் பண்றான். என்ன இங்க பாடச் சொல்லி அங்க கேக்கறான். காலத்துக்கு ஏத்தாபோல நம்பளும் மாறனும்.”

“மாமானுக்கு பேரன் பேத்தினா உயிரு,” என்றான் ஏ.கே.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. கிழவர்கள் பேரன் பேத்தி பற்றிப் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள். நல்ல வேலை மாமா அந்த ரூட்டில் செல்லவில்லை.

“கச்சேரி நல்ல அமையறதுன்றது நம்ப எப்படி பிளான் பண்றமோ அதப் பொறுத்து இருக்கு. எல்லாமே கனமாவும் கர்நாடகமாவும் குடுத்தா பத்திரிகைல நல்லா எழுதுவளோ என்னவோ ஆனா கேக்க ஆள் கம்மியா இருக்கும். அதுனால கனமான சிலத குடுத்துட்டு நடுவு நடுவுல எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி எதாவது புது புது ஐடம் குடுத்துண்டே இருக்கணும்.” என்று அறிவுறுத்தினார்.

“சினிமால ஐடம் நம்பர் மாதிரி” என்றார் அப்பா.

மாமா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தார். “என்ன சொல்றீர். நான் பேசிண்டிருப்பது மும்மூர்த்திகள் கொடுத்த சுத்த கர்நாடக சங்கீதம் பத்தி. அதுக்கும் அர கொறையா ஆடைய போட்டுண்டு ஆடற பாட்டுக்கும் எப்படி முடிச்சி போடுவேள்? உங்களுக்கு அந்த மாதிரி எதாவது பாட்டு வேணும்னா நீங்க வேற யாரையாவது பாருங்கோ. என்ன விட்டுடுங்கோ!” என்று கைகூப்பி, கண் மூடி சிரம் தாழ்த்தினார்.

அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவை பார்த்தார். அம்மா அப்பா பக்கமே மூஞ்சிய திருப்பவில்லை. இதை பார்த்து அப்பா முகத்தில் பீதி கூடியது. என்ன சொல்ல வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை. நானும் சரண்யாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். மாமா இன்னும் அதே போஸில் இருந்தார்.

ஏ.கே. மெதுவாக, “மாமாவுக்கு கர்நாடக இசை தெய்வத்துக்குச் சமானம்,” என்று யாரையும் பார்க்காமல் பொதுவாகச் சொல்லிவிட்டு, “ஏதோ பெரியவர் தெரியாம சொல்லிட்டார். நீங்க இப்படிக் கோச்சிக்கக் கூடாது” என்று சொல்லி அம்மாவுக்கு, “இங்கேர்ந்து நீங்க வண்டிய நகத்துங்க” என்பது போல் கண்களால் சைகை செய்தான். அம்மா புரிந்துக்கொண்டு, “அவர் ஒரு வெகுளி மாமா. எத பேசணும் எதப் பேசக்கூடாதுன்னு தெரியாது. நீங்க கொச்சிக்கப்டாது. உங்க சங்கீதம் ரொம்ப ஒசத்தின்னு தெரிஞ்சி தானே மாமா வந்திருக்கோம்,” என்றாள்
மாமா மெதுவாகத் தலையைத் தூக்கி, கண்ணாடியைக் கழட்டி, கண்ணைத் திறந்து எல்லோரையும் பார்த்துவிட்டு மறுபடியும் கண்ணாடியை மாட்டிக்கொண்டார். “சரி விடுங்கோ. ரமணி வேற ரொம்ப சொல்லியிருகான். குழந்தையும் நல்லா பாடறா. அடுத்த வாரத்துலேர்ந்து ஆரம்பிக்கலாம்,” என்றார்.

“ஃபீஸ் எவ்வளவு மாமா?” முந்திரிக்கொட்டையாக நான் கேட்டேன்.

அப்பா முகத்தில் மறுபடியும் பீதி குடிக்கொண்டது. மாமா எதுவும் சொல்வதற்கு முன் அம்மா, “நீ வாய மூடிண்டு இருக்கியா?” என்றாள். அதே சமயம் ஏ.கே. “மாமாவுக்கு பணம்லாம் ரெண்டாம் பட்சம் தான். எவ்வளவோ பேருக்கு பணம் வாங்காமலே சொல்லிக்குடுத்திருக்கார். சிலர் பேருக்கு மாமாவே பணம் கொடுத்து என்கரேஜ் பண்ணியிருக்கார்,” என்றான்.

“ஓஹோ. அப்படின்னா ஃபீஸ் கடையாதாக்கும்” என்றேன் நான்.

அம்மாவின் பார்வை என்னைச் சுட்டது. நான் வாயை மூடிக்கொண்டேன்.

“சரி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்பறேன்” என்றார் மாமா. ஏ.கே.வை பார்த்து, “எல்லாருக்கும் காப்பிக்கு ஏற்பாடு பண்ணிட்டயா?” என்று வினவினார். “இதோ வருது” என்றான். “காபி குடிச்சிட்டுப் போங்கோ” என்றார். ஏ.கே. சரண்யாவை பார்த்து “மாமா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ,” என்றான். சரண்யா மாமாவுக்கு நமஸ்காரம் செய்தாள்.

அடுத்த ரூமுக்குப் போனவர் ஏ.கே. வை கூப்பிட்டார். அவன் காதில் ஏதோ சொன்னார். அவன் தலையாட்டிக்கொண்டு இருந்தான். அவர் அங்கிருந்து சென்றவுடன் எங்களிடம் வந்து “காபி குடிங்கோ” என்று உபசரித்தான். நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது, அப்பாவை பார்த்து, “ஒரு அஞ்சு நிமிஷம் உள்ள வரேளா? மாமா ஏதோ பேசணும்னார்” என்றான். அப்பாவுக்கு மறுபடியும் டென்ஷன். அம்மா, “போயிட்டு வாங்கோ” என்று ஆணையிட ஏ.கே.வுடன் அப்பா உள்ளே சென்றார்.

பத்து நிமடங்கள் கழித்து வெளியே வந்தார். நாங்கள் கார் ஏறி கிளம்பினோம். “என்ன கேட்டார்” என்று அம்மா கேட்க, “பீசைப் பத்திப் பேசினார். என்னடி இவ்வளவு ஜாஸ்தியா இருக்கு!” என்றார். “நீங்க சும்மா இருங்கோ. நம்ப பணத்தப் பத்திக் கவலைப் பட வேண்டாம்,” என்றாள் அம்மா.

சரண்யா மதுரை விஸ்வநாதனிடம் சேருவது பாட்டியைத் தவிர எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாட்டி அம்மாவிடம், “ஏன்டீ இப்படி அவசர படற. இன்னும் நல்லா பாட்ட கத்துக்கட்டும். அதுக்கப்புறம் புகழ் தானா வரும். இந்த வயசுல தான் பாட்டும் நல்லா கத்துக்க முடியும். கத்துண்டதெல்லாம் மனசுல ஸ்திரமா நிக்கும். அனதலக்ஷ்மிகிட்டயே போகட்டும்டீ.”

அம்மா விட்டுக்கொடுக்கவில்லை.

சரண்யா மதுரை விஸ்வநாதனிடம் பாடம் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தாள். முதல் சில நாட்கள் எல்லோருக்கும் ஏமாற்றமாக இருந்தது. மாமா சொல்லிக்கொடுப்பது ரொம்ப கம்மியாக இருந்தது. அவருடைய சிஷ்யகோடி யாரவது சொல்லிகொடுப்பான் / கொடுப்பாள். மாமா எப்பொழுதாவது வந்து பிழை திருத்திவிட்டு செல்வார்.

இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் ஒரு ‘வளரும் இளம் கலைஞர்’ மாமாவைப் பார்க்க வந்தான். அவன் மாமாவுடைய சிஷ்யன். அவன் சரண்யா பாட்டை கேட்டுப் பாராட்டிவிட்டு அவளுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான். இவளுக்குத் தலை கால் புரியவில்லை. வீட்டில் வந்த பிறகு ஒரு மணி நேரம் அதைப் பற்றித் தான் பேச்சு. சில நாட்களுக்கு பிறகு இன்னொரு பிரபலமான பாடகி மாமாவைப் பார்க்க வந்தார். அவரும் எல்லா சிஷ்யர்களுடனும் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார். முதலில் பாட்டு கற்றுக்கொள்ளச் செல்வதற்கு மூக்கால் அழுத சரண்யா இப்பொழுது மாமா வீட்டிற்குப் பத்து நிமிடம் முன்பே சென்று விடுகிறாள். அடிக்கடி beauty பார்லர் செல்கிறாள். இதை பார்த்து பாட்டி மூக்கால் அழ ஆரம்பித்தாள்.

நான்கு மாதங்கள் பிறகு முதல் முறையாக சரண்யா டி,வீ யில் தோன்றினாள். ஏதோ ஒரு பெரிய விழாவுக்கு கடவுள் வணக்கம் பாடிய ஐந்து பெண்மணிகளில் இவளும் ஒருத்தியாக இருந்தாள். வீட்டில் எல்லோருக்கும் முகத்திலும் தாங்கள் ஜன்ம சாபல்யம் அடைந்துவிட்டோம் என்ற உணர்ச்சி தெரிந்தது. பாட்டியும் பேத்தியை டி.வீ யில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டாள்.

“இது வெறும் முதல் கட்டம் தான் மாமி. இவ இன்னும் எவ்வளவோ மேல போகணும்,” என்று மாமா அம்மாவிடம் டெலிபோனில் சொன்னாராம். டி.வீ.யில் வந்தாலும் இன்னும் கச்சேரியில் கூட்டம் அதிகம் வருவதில்லை என்று அம்மாவுக்கு வருத்தம். “நீங்க கவலப்படாதேங்கோ. நான் புதுசா ஒரு ஐடெம் ரெடி பண்ணியிருக்கேன். அடுத்த மாசம் கோகுலாஷ்டமி சீரிஸ்ல அத இவ பாடுவோ. அதுக்கப்புறம் பாருங்கோ எப்படி ஷைன் ஆகப்போரான்னு.”

சில நாட்கள் கழித்து சரண்யா அந்த புது ஐட்டத்தை வீட்டில் பாடிக் காண்பித்தாள். காவடிச்சிந்து போல இருந்தது. ஒவ்வொரு சரணமும் வேறு வேறு ராகம், வேறு நடை. கடைசியில் கண்ட நடையில் உச்சச்தாயியில் ‘தக தகிட, தக தகிட, தக தகிட’ என்று ஜதியை நான்கு முறை சொல்லி ஆவேசமாக முடித்தாள் சரண்யா. வீட்டுக்கு வந்திருந்த ஏ.கே மற்றும் இதர சிஷ்யகோடிகள் பலமாக கைத்தட்டினார்கள். ரொம்ப catchyஆக இருந்தது என்று ஒத்துக்கொள்ளவேண்டும். அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் வாயெல்லாம் பல். பாட்டி மட்டும், “என்ன கண்றாவிடீ இது?” என்று கேட்டாள்.

“நீ எல்லாத்துலையும் குத்தம் கண்டுபிடிப்ப!” என்றாள் சரண்யா.

“யார் பாட்டுடீ இது? இவ்வளவு இரைச்சலா இருக்கு?”

ஏ.கே. பதில் சொன்னான், “மாமாவோட மச்சினர் பண்ண பாட்டு. கர்நாடக இசையும் பரதத்தையும் கலந்து குடுத்திருக்கார்”

“என்ன எழவோ. இதையெல்லாம் யாரவது கேப்பாளா?”

அடுத்த நாள் எல்லோரும் கேட்டார்கள். கேட்டுவிட்டு கையும் தட்டினார்கள். அன்று கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பா கூட்டம் சேர்ப்பது என்றால் சிலருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவார், சிலருக்கு போன் செய்வார், சிலருக்கு மெயில் அனுப்புவார். இந்த முறை கூட்டம் சேர்ப்பதை மாமா ஏ.கே. பொறுப்பில் விட்டார். அவன் facebook, ட்விட்டர், கூகிள் க்ரூப்ஸ், ரசிகா.org என்று பல இடங்களில் நிகழ்ச்சியை விளம்பரம் செய்தான். மாமாவின் சிஷ்யர்கள் எல்லோரையும் வரச் செய்தான். நான்கு பத்திரிகைகளில் நிகழ்ச்சி விவரங்கள் வெளிவரச் செய்தான். ‘பரிவாதினி’ வாயிலாக நிகழ்ச்சியை இண்டர்நெட்டில் லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஏற்பாடு செய்தான். அதன் விவரத்தையும் சோசியல் மீடியா முழுவதும் பரப்பினான். ஹாலும் நிரம்பியது. பலர் youtube வாயிலாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அனதலக்ஷ்மி மாமி சொல்லிக்கொடுத்த கீர்த்தனைகளை சரண்யா அதிகமாகப் பாடவில்லை. மாமாவிடம் (அல்லது அவர் சிஷ்யர்களிடம்) சொல்லிக்கொண்ட பல கிருதிகளைப் பாடினாள். என் காதுக்கு இந்த பாடந்தரத்தில் அவ்வளவு அழுத்தம் இல்லை போல் தோன்றியது ஆனால் கேட்க இனிமையாக இருந்தது. எல்லோரையும் சட்டென்று கவர்ந்தது. பாட்டி இந்த கீர்த்தனைகளைக் கேட்கும்பொழுது, “இசையல கவர்ச்சி முக்கியம் இல்லடீ. பாட்டு ஆத்மார்த்தமா இருக்கணும். பாட்டு காத தொட்டா மட்டும் போறாது. மனச தொடணும். மூளைய தொடணும்.”

மாமாவின் மச்சினர் இயற்றிய ஐடம் சூப்பர் ஹிட்டானது. சரண்யா அதைப் பாடி முடித்ததும் மூன்று நிமிடத்திற்கு கைத்தட்டல் நிற்கவில்லை. அதைக் கேட்ட மாமாவுக்கு ஒரே பெருமையாக இருந்தது. கச்சேரி முடிந்த உடனே அம்மா மாமாவுக்கு ஐந்தாயிரம் ருபாய் வெத்தலை பாக்குடன் தட்சணையாகக் குடுத்தாள். நாங்கள் எல்லோரும் மாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டோம். பாட்டி மட்டும் ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு வரும்பொழுதும் வந்து சேர்ந்த பிறகும் சரண்யாவுக்கு கால் மேல் கால் வந்துக்கொண்டே இருந்தது. Facebookஇல் எக்கச்சக்க லைக்ஸ், ட்விட்டரில் அதை பற்றிப் பேச்சு, rasikas.orgஇல் பாட்டை ரொம்ப புகழ்ந்து ஒரு விமர்சனம் என்று நண்பர்கள் சரண்யாவுக்கு செய்தி கொடுத்தபடியே இருந்தனர். ராகுல் போன் செய்து, “சுபெர்ப் பெர்பார்மன்ஸ். யூ ஹாவ் அரைவ்டு,” என்றான். இரண்டு மூன்று பேர் அடுத்த கச்சேரி பிக்ஸ் செய்ய அப்பாவுக்கு போன் செய்திருந்தார்கள்.

அடுத்த நாள் நானும் பாட்டியும் மட்டும் வீட்டில் இருந்தோம். பத்மாவதி பாட்டி அவள் பேத்தி காமாக்ஷியுடன் வீட்டுக்கு வந்தாள். பத்மாவதி பாட்டி எங்களுக்கு உறவு. என் பாட்டியின் சின்ன வயசு தோழி. நுழைந்தவுடன் காமாக்ஷி என்னைப் பார்த்து, “ஹாய்” என்று சொல்லிவிட்டு, பாட்டியிடம், “பாட்டி, நெத்தி சரண்யா பாடின புது பாட்டு செம ஹிட்டு. எல்லாரும் அதப் பத்தி தான் பேசறா. அடுத்த ஸ்டார் சரண்யா தான். நீ கூட டி.வீ ல வந்துடுவ பாட்டி” என்றாள்.

“அனந்தலக்ஷ்மி கேட்டாளா பாட்ட? என்ன சொன்னா?” என்று பாட்டி காமாக்ஷியை கேட்டாள். காமாக்ஷி அனந்தலக்ஷ்மி மாமியிடன் பாட்டு கத்துக்கொள்கிறாள்.

காமாக்ஷியின் முகம் மாறியது. “மாமிக்கு சரண்யா மேல ரொம்பக் கோவம். சொல்லிக்காம கொள்ளாம பாட்ட நிறுத்திட்டா. என்ன திமிர் பாரு. குருன்னு ஒரு மரியாத வேண்டாமான்னு ஒரு நாள் கோவமாக் கேட்டா. அதுனால நான் சரண்யா பத்தி மாமிகிட்ட எதுவும் பேசறதில்ல”.

“ஹ்ம். நானாவது பேசியிருக்கணும். என்னவோ போ” என்றாள் பாட்டி.

“அத விடுடீ. பேத்தி என்னமா கைத்தட்டல் வாங்கியிருக்கா. அத்த பார்த்துச் சந்தோஷப்படு.” என்றாள் பத்மாவதி பாட்டி.

“அந்தப் பாட்டு சகிக்கலடீ. அத எப்படித் தான் கேக்கறாளோ? நான் என்னமோ என் பேத்தி நல்ல சங்கீதமா பாடுவா. சங்கீதம் கெட்டுபோயிண்டு இருக்கற இந்தக் காலத்துல இவோ நல்ல சங்கீதம் நாலு பேரு கேட்கற மாதிரி பாடுவோ. சங்கீதத்துக்கு நம்பளால முடிஞ்சுது பண்ணோம்ன ஒரு திருப்தி இருக்கும்ன்னு நெனச்சேன். ஆனா அது முடியாது போல இருக்கு,” என்றாள் வருத்தத்துடன்.

“சங்கீதத்த நம்ப காப்பாத்த முடியும்னு நம்ப நெனைக்கறது நம்பளோட திமிரத்தான் வெளிப்படுத்தறது. சங்கீதத்துக்கு நம்ப தான் வாழ்வு தரப்போறோம்ன்னு நெனைக்கறதே ஒரு அர்ரோகன்ஸ் இல்லையா? நீயும் நானும் பாடணும்னு தான் கனவு கண்டோம். நல்லாவும் பாடிண்டிருந்தோம். ஆனா நம்பளால பாடகியா ஆகமுடியல. அதுக்குன்னு யார் அழுதா? சங்கீதம் தான் வளராம இருந்துடுத்தா? நல்லா பாட்றவா வரத்தான் செஞ்சா. சங்கீதமும் ஜம்முனு இருக்கு. அதக் காப்பாத்திக்க அதுக்குத் தெரியும். அத பத்தி கவலைப்படாம பேத்திய ஆசிர்வதிக்கரதப் பாரு. அவ எப்படிப் போகணும்னு ஆச பட்றாளோ அப்படிப் போகட்டும். எல்லாம் நல்லா வருவா” என்று ஒரு சின்ன லெக்சர் கொடுத்தாள் பத்மாவதி பாட்டி.

“என்னமோ போடி. அது போகட்டும், நீ என்னடி புதுசா கத்துண்டிருக்க?” என்று காமாக்ஷியை பார்த்து பாட்டி கேட்டாள்.

“சஹானா பதம் மொரதோப்பு”

“அச்சச்சோ. ரொம்ப அருமையான பதமாச்சே. பாடுறீ பாடுறீ”

காமாக்ஷி சிறிய சஹானா ஆலாபனை செய்துவிட்டு, “மொர” எடுப்பு கீழே, “தோஒஓஒஒபூஊஊஊ” உடனே மேல சென்றாள். மெதுவாக சஹானா அறை முழுவதும் பரவியது. ஒவ்வொரு கமகமும் சஹானாவுக்கு அழகு கூட்டியது. அனுஸ்வரங்கள் கச்சிதமாக வரவேண்டிய இடத்தில் வந்து ராகத்தை ஜோலிக்க வைத்தன. வக்கிர சஞ்சாரங்கள் வரும் பொழுது அருவியில் குளித்தது போல் ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு செல்லாமல் நிசப்தத்தை இன்னும் தீவிரப்படுத்தியது இந்தப் பதம். அவசரமில்லாமல் நிதானமாக பாடினாள் காமாக்ஷி. ‘மேர காது ரம்மனவே” என்று அவள் முடித்த பொழுது பாட்டியின் கண்ணில் நீர் கோர்த்திருந்தது. “ரொம்ப நல்லா பாடறடீ காமாக்ஷி. இப்படியே பாடுடீ.” என்றாள் பாட்டி.

கொஞ்ச நேரம் கழித்து இருவரும் கிளம்பி சென்றார்கள். அவர்கள் போனவுடம் பாட்டி என்னிடம், “சஹானா எவ்வளவு அழகா இருந்துதுடா. அத கேட்டப்புறம் எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கு” என்றாள். ஆனால் அன்று முழுவதும் அவள் சோகமாகவே இருந்தாள்.

(புகைப்பட உதவி – இந்தியன் எக்ஸ்பிரஸ்)

0 Replies to “கச்சேரி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.