கொக்குகளைக் காண்பதற்கான ஏக்கம் ஒவ்வொரு வருடமும் என்னுள் அதிகரித்துக் கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். வருடம்தோறும் இப்பருவத்தில் குன்றின் மேல் நின்றுகொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போதெல்லாம் காட்டுவாத்துகள் மட்டுமே தென்படுகின்றன. வாத்துகள் கூட அழகாகவே இருந்திருக்கும், கொக்குகள் மட்டும் இல்லாமலிருந்தால்.
செய்தித்துறையில் பணிபுரியும் வாலிபன் ஒருவன் பொழுது போக்க உதவினான். ஹோமரைப் பற்றிப் பேசினோம், ஜாஸ் இசையைப் பற்றிப் பேசினோம். த ஜாஸ் ஸிங்கர் (The Jazz Singer) என்ற படத்தில் என் இசை பயன்படுத்தப்பட்டிருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை. சில சமயங்களில் வாலிபத்தின் அறியாமை என்னைக் கிளர்ச்சியுறச் செய்கிறது. இவ்வறியாமையும் ஒரு வகையான மௌனமே.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுற்றிவளைத்து என் புதிய படைப்புகளைப் பற்றிக் கேட்டான். நான் சிரித்தேன். எட்டாவது சிம்ஃபொனியைப் பற்றிக் கேட்டான். நான் இசையைப் பட்டாம்பூச்சியின் இறகுகளுடன் ஒப்பனை செய்தேன். எனது இசைப்பணி ஓய்ந்துவிட்டதென்று விமர்சகர்கள் புலம்புவதாக அவன் கூறினான். நான் சிரித்தேன். அரசாங்கத்திடமிருந்து பென்சனைப் பெற்றுக் கொண்டு என் கடமைகளைச் செய்யத் தவறிவிட்டேன் என்று ஒரு சிலர் – அவன் கண்டிப்பாக அதில் சேர்த்தியில்லை – கூறுகிறார்களாம். எனது புதிய சிம்ஃபொனி எப்போது முடிக்கப்படும் என்று அவன் கேட்டான். நான் சிரிப்பதை அத்துடன் நிறுத்திக் கொண்டேன். “அதை முடிக்கும் பணியிலிருந்து நீ தான் என்னை இப்போது தடுத்துக் கொண்டிருக்கிறாய்” என்று பதிலளித்து விட்டு , அவனை வெளியே இட்டுச்செல்ல, பணியாளுக்கு மணியடித்தேன்.
இளம் இசையமைப்பாளராக இருந்த போது இரண்டு கிலாரினெட்கள் இரண்டு பஸூன்களுடன் இணைந்து வாசிப்பதற்காக ஒரு முறை இசையமைத்தேன் என்று அவனிடம் கூற விரும்பினேன். அப்போது எனக்கு அதிகமான நன்னம்பிக்கை இருந்திருக்கவேண்டும், ஏனெனில் நாட்டிலேயே பஸூன் வாத்தியக்காரர்கள் மொத்தம் இருவர்தான் இருந்தார்கள். அதில் ஒருவருக்கு காசநோய் வேறு.
இளைஞர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எனது இயற்கை எதிரிகள்! தந்தை ஸ்தானத்திலிருந்து அவர்களை வழிநடத்த விரும்புகிறேன் . அவர்களுக்கோ அதில் கடுகளவு கூட அக்கறையில்லை. அதற்கு அவர்களுக்கு ஒருக்கால் நல்ல காரணமும் இருந்திருக்கலாம்.
இயல்பாகவே கலைஞன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறான். இது வழக்கமானதும், சிறிது காலத்துக்குப் பிறகு பழக்கப்பட்டுவிட்ட ஒன்றும் கூட. நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்: என்னை சரியான விதத்தில் பிறழ்பொருள் கொள்ளுங்கள்.
பாரிஸிலிருந்து கே. –இன் கடிதம். டெம்போ குறியீடுகளைப் பற்றி அவருக்கு கவலை. நான் உறுதிப்படுத்த வேண்டுமாம். Allegro –விற்கான மெட்ரோனோம் குறியீடுகள் கண்டிப்பாக வேண்டுமாம். doppo piu lento –வின் இரண்டாவது மூவ்மெண்டில் வரும் K எழுத்து மூன்று இசைச் சட்டங்களுக்கு (Bars) மட்டும் தானா என்பதை அவர் அறிய விரும்புகிறார். மேஸ்டிரோ K. உங்கள் திட்டங்களை எதிர்க்க நான் விரும்பவில்லை. மிகையான தன்னம்பிக்கையுடன் தொனிப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள் : இறுதியில், உண்மையை வெளிப்படுத்துவதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட வழிகள் இருக்கின்றன.
N.-னுடன் பீத்தோவனைப் பற்றிப் பேசியது நினைவிற்கு வருகிறது. காலத்தின் சக்கரங்கள் மற்றுமொரு முறை சுழன்ற பின்னாலும் மோட்ஸார்ட்டின் சிறந்த சிம்ஃபொனிக்கள் நின்று கொண்டிருக்கும். ஆனால் பீத்தோவனோ காலாவதியாகியிருப்பார் என்று N அபிப்பிராயப் பட்டார். எங்களிருவருக்கும் இடையே நிலவும் வேற்றுமைகளுக்கு இது ஒரு நல்ல உதாரணம். புஸோணி மற்றும் ஸ்டென் ஹாமருடன் பழகுவது போல் என்னால் N.-னுடன் பழக முடிவதில்லை.
எனது தொழில் நுட்பத்தைப் பற்றி திரு.ஸ்திராவின்ஸ்கி (
ஃபிரெஞ்சு விமர்சகரொருவர் என் மூன்றாவது சிம்ஃபொனியை உதாசீனப்படுத்த முனைகையில் கூனோவை(Gounod) மேற்கோள் காட்டினார் : ‘ கடவுள் மட்டும்தான் C மேஜரில் இசையமைப்பார்’. துல்லியமாகச் சொன்னீர் ஐயா!
மாலரும் (Mahler) நானும் ஒரு முறை இசையமைப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கு, சிம்ஃபொனி உலகைப் போல் தன்னுள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டும். சிம்ஃபொனியின் வடிவமே அதன் சாரம் என்று நான் பதிலளித்தேன்; கட்டிறுக்கமான பாங்கும், நோக்குருக்களுக்கு (Motifs) இடையே உள்தொடர்பை உருவாக்கும் ஆழ்ந்த தருக்கமுமே அதன் சாரம்.
இசை இலக்கியமாக இருக்கையில், மோசமான இலக்கியமாகவே அது இருக்கிறது. வார்த்தைகள் அற்றுப்போகும் புள்ளியில்தான் இசை தொடங்குகிறது. இசையே அற்றுப் போகும்போது? மௌனம். மற்ற கலைகள் அனைத்தும் இசையின் நிலையை அடையவே விழைகின்றன. இசை எதை அடைய விழைகிறது? மௌனத்தை. இது உண்மையெனில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனது இசைக்காக எவ்வளவு பிரசித்தி பெற்றிருந்தேனோ அதே அளவிற்கு இப்போது எனது நீண்ட மௌனத்திற்காகவும் பிரசித்தி பெற்றுள்ளேன்.
நிச்சயமாக, இப்போதும்கூட என்னால் துக்கடாக்களை இயற்ற முடியும். மிதிக்கட்டையை அவள் இயக்கும் விதத்தில், அவள் கற்பனை செய்துகொண்டிருப்பதை விட அதிகம் கோளாறுகளிருப்பதை அறியாத ஒன்றுவிட்ட தம்பி S-இன் புது மனைவிக்காக ஒரு பிறந்தநாள் இண்டர்மெஸ்ஸோ. அரசாங்கத்தின் அழைப்பையும், ஏற்றுவதற்கு கொடியிருக்கும் ஒவ்வொரு பட்டியின் விண்ணப்பத்தையும் என்னால் எளிதாகவே நிறைவேற்ற முடியும். ஆனால் அது பாசாங்காகவே இருக்கும். எனது பயணம் அநேகமாக முடிவடைந்து விட்டது. என் இசையை வெறுக்கும் என் எதிரிகள் கூட அதற்கு ஓர் தருக்கமிருப்பதை ஒத்துக் கொள்வார்கள். இசையின் தருக்கம் அதை இறுதியில் மோனத்திற்கே இட்டுச் செல்லும்.
A.-யிடம் இருக்கும் மனோதிடம் என்னிடம் இல்லாதது ஒரு குறையே. அவள் ஜெனரலின் மகள் ஆயிற்றே !. . மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் ராஜநடை போடும் தலைகனம் பிடித்த ஆசாமியாக என்னை மற்றவர்கள் காண்கிறார்கள். என் வாழ்வின் பீடத்தில் A தன்னையே பலிகொடுத்து விட்டதைப் போல் பேசிக் கொள்கிறார்கள். எனினும் நான் தான் என் வாழ்க்கையைக் கலையின் சன்னிதியில் அர்ப்பணம் செய்திருக்கிறேன். நான் ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளன், ஆனால் எப்படிப் பட்ட மனிதன் என்று கேட்டால் அது முற்றிலும் வேறு விஷயம்! இருப்பினும் நான் அவளை விரும்பினேன் என்பதே உண்மை. நாங்கள் இருவரும் ஓரளவிற்கு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். நான் அவளைச் சந்தித்தபோது அவளது வீரநாயகனை ஊதாப்பூக்கள் நிரம்பிய மஞ்சத்தில் மகிழ்விக்கும் யோசஃப்சன்னின் (Josephsson’s) கடற்கன்னியாகவே அவள் எனக்கிருந்தாள். போகப் போக அனைத்துமே கடினமாகி விடுகின்றன. மனதின் பேய்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. எனது தங்கை மனநோய் மருத்துவமனையில் இருக்கிறாள். குடி. உளக்கோளாறு. சோகாப்பு.
உற்சாகமாய் இருங்கள் ! மரணம் தெருமுனையில் தான் இருக்கிறது.
ஆட்டோ ஆண்டர்சன் எங்கள் குடிவழிப் பட்டியலை இவ்வளவு முழுமையாகத் திரட்டியிருப்பது என்னைப் பிணிக்கிறது.
வீட்டில் பாடவோ, இசையை வாசிக்கவோ என் ஐந்து பெண்களுக்கும் எப்போதுமே தடை விதிக்கப் பட்டிருப்பதாலேயே என்னை ஒரு சர்வாதிகாரியாகச் சிலர் கருதுகின்றனர். மோசமாக வாசிக்கப்படும் வயலினிலிருந்து வரும் ஆரவாரமான கீச்சொலிகளோ, மூச்சிரைப்பதால் கவலைக்கு ஆளாகும் புல்லாங்குழலோ கிடையாது. என்ன அநியாயம் , மாபெரும் இசையமைப்பாளனின் வீட்டில் இசையே கிடையாதா! ஆனால் A புரிந்துகொண்டாள். அவளுக்குத் தெரியும் இசை மௌனத்திலிருந்தே வரவேண்டும் என்று. அதிலிருந்து தொடங்கி அதனிடமே திரும்பிச் செல்ல வேண்டும்.
A கூட மௌனத்தில்தான் செயல்படுவாள். கடவுளுக்குத் தெரியும் என்னிடம் எவ்வளவு குறைகள் இருக்கிறதென்று. தேவாலயத்தில் புகழப்படும் அவ்வகையான கணவனென்று என்னை நான் ஒரு போதும் பாவித்துக் கொண்டதில்லை. கோதென்பர்கிற்குப் பிறகு அவள் எனக்கொரு கடிதம் எழுதினாள். மரணத்தின் விறைப்பு என்னை ஆட்கொள்ளும் சமயத்தில் எனது கோட் பாக்கெட்டுகளை துழாவும் போது அவர்களுக்கு அது கிடைக்கும். ஆனால் சாமான்ய நாட்களில் அவளுக்கு என் மேல் கோபமில்லை. மேலும் மற்றவர்களைப் போல் எனது எட்டாவது சிம்ஃபொனி எப்போது தயாராகும் என்று அவள் எப்போதுமே கேட்டதில்லை. அவளது காரியங்கள் அனைத்துமே என் தேவைகளை அனுசரித்து அமைக்கப்பட்டவைதானே. இரவுகளில் நான் இசையமைக்கிறேன். இல்லை, இரவுகளில் ஒரு பாட்டில் விஸ்கியுடன் மேஜை முன் அமர்ந்து வேலை செய்ய முனைகிறேன். பிறகு, தலை இசைக்குறியீட்டுத் தாள்களின் மீதிருக்க, கை காற்றைப் பற்றும் பாவனையில் மடங்கிக் கிடக்க, நான் விழித்துக் கொள்வேன். நான் தூங்கும் போது A. விஸ்கி பாட்டிலை அப்புறப்படுத்தி இருப்பாள். நாங்கள் இதைப் பற்றிப் பேசுவதில்லை.
நான் எப்போதோ விட்டுவிட்ட மதுதான் இப்போது என் மிக விசுவாசமான துணை. என்னை அதிகமாகப் புரிந்துகொள்வதும் அதுதான் !
தனிமையில் உணவருந்துவதற்காகவும் இறப்பைப் பற்றிச் சிந்திப்பதற்கும் வெளியே செல்கிறேன். அல்லது இதைப் பற்றி மற்றவர்களுடன் பேசுவதற்காக Kamp, Societetshuset, Konig போன்ற ஹோட்டல்களுக்குச் செல்கிறேன். அந்த வினோதமான Man lebt nur einmal (ஓரு முறை மட்டுமே வாழ்கிறோம்) விசயத்தை பற்றிப் பேச. Kamp ஹொட்டலின் ‘எலுமிச்சை மேஜை’ கும்பலுடன் சேர்ந்து கொள்கிறேன். A இதை ஏற்பதில்லை.
எலுமிச்சை மரணத்தின் குறியீடு என்று சீனர்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது. Anna Maria Lenngren – இன் கவிதை ‘ கையில் எலுமிச்சையுடன் புதைக்கப் படுதல்’. மிகச் சரி. A. இதை ஆரோக்கியமற்ற சாவைப் பற்றிய சிந்தனை என்று தடுக்க முயன்றிருப்பாள். ஆனால் சாவைப் பற்றிச் சிந்திக்க ஒரு பிணத்துக்குத்தானே அதிக உரிமை இருக்கிறது ?
கொக்குகளை இன்று கேட்டேன் . ஆனால் பார்க்க முடியவில்லை. மேகங்கள் மிகத் தாழ்வாகவே இருந்தன. ஆனால் குன்றின் மீது நின்று கொண்டிருக்கையில் , கோடைகாலத்திற்காகத் தெற்கே பெயர்கையில் அவை அடித்தொண்டையிலிருந்து எழுப்பிய குரல்கள், உயரத்திலிருந்து என்னை நோக்கி வருவதைக் கேட்க முடிந்தது. கண்ணுக்குப் புலப்படாதபோது அவை இன்னமும் அழகாக இருந்தன, இன்னமும் மர்மமாக. இசையின் கணீரென ஒலிக்கும் ஆழத்தை அவை முதலிலிருந்து மீண்டும் எனக்குக் கற்றுத் தந்தன. அவற்றின் இசை, என் இசை, இசை. இது தான். மலை மீது நின்று கொண்டிருக்கிறீர்கள், மேகங்களுக்கு அப்பாலிருந்து அகத்தை உருக்கும் ஒலிகளை உங்களால் கேட்க முடிகிறது. இசை – என் இசை கூட – எப்போதுமே தெற்கு நோக்கிப் பயணிக்கிறது, மறைமுகமாக.
இப்பொழுதெல்லாம், நண்பர்கள் என்னை கைவிடுவதற்கான காரணம் என் வெற்றியா அல்லது என் தோல்வியா என்பது கூட எனக்குச் சரியாகப் புலப்படுவதில்லை. இது தான் வயோதிகம் போல !
ஒருக்கால் நான் கடினமானவனாகவே இருக்கலாம். ஆனால் அவ்வளவு கடினமானவன் அல்ல. என் வாழ்நாள் முழுதும், நான் காணாமல் போகையில், என்னை எங்கு தொடர்பு கொள்ள முடியும் என்பதை அவர்கள் எப்போதுமே அறிந்திருந்தார்கள் : ஆய்ஸ்டர்களையும் , ஷாம்பேய்னையும் பரிமாறும் மிகச் சிறந்த உணவகங்களில்.
அமெரிக்காவிற்கு சென்ற போது, அதுவரையில் ஒருமுறை கூட நானாகவே சவரம் செய்து கொண்டதில்லை என்ற உண்மை அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் ஏதோ ராஜ பரம்பரையைச் சேர்ந்தவன் போல. ஆனால் நான் ஒருபோதும் என்னை மேட்டுக்குடியோனாகப் பாவித்துக் கொண்டதில்லை. இதில் பெரிய விசயமேதும் இல்லை, சவரம் செய்துகொள்வதில் நேரத்தை விரயம் செய்ய நான் விரும்பவில்லை, அவ்வளவே. மற்றவர்கள் அதை எனக்காகச் செய்து தரட்டுமே.
இல்லை, அது உண்மையல்ல. என் தந்தை மற்றும் தாத்தாவைப் போல் நானும் கடினமானவன் தான். என் விசயத்தில், நான் கலைஞனாக இருப்பது இதை இன்னமும் மோசமாக்குகிறது. எனது மிக விசுவாசமான மற்றும் என்னை மிகவும் புரிந்துகொள்ளும் துணையாலும் இது மேலும் மோசமாகிறது. மிகச் சொற்பமான நாட்களையே மதுவற்ற நாட்கள் (sine alc) என்று என்னால் கூறிக்கொள்ள முடியும். கைகள் நடுங்குகையில் இசைக்குறியீடுகளை எழுதுவது கடினமானது. இசைக்குழுவை இயக்குவது கூடக் கடினம் தான். பல கோணங்களில், A என்னுடன் வாழும் வாழ்க்கை ஒரு வகையான உயிர்த்தியாகமே. இதை நான் நன்றியுடனே ஏற்றுக் கொள்கிறேன்.
கோதென்பர்க். இசை நிகழ்ச்சிக்கு முன் நான் காணாமல் போனேன். எப்போதும் இருக்கும் இடத்தில் என்னைக் காண்பதற்கில்லை. A-யின் நரம்புகள் முறுக்கேறித் தெறித்தன. ஆனாலும் அவள் அரங்கத்திற்குச் சென்றாள், நல்லது நடப்பதற்காக பிரார்த்தித்துக் கொண்டே. அவளை ஆச்சரியப்படுத்தியபடி நியமித்த நேரத்தில் நான் பிரவேசித்து தலைவணங்கி, படோனை உயர்த்தினேன். ஓவெர்சரின் ஒரு சில இசைச்சட்டங்கள் முடியும் முன்னரே, ஒத்திகையில் இருப்பது போல் நான் நிறுத்துவதற்கான சமிக்ஞையைக் காட்டியதாக A என்னிடம் கூறினாள். அரங்கத்தினர் குழம்பினர், அதற்கும் மேலாக இசைக்குழு தடுமாறியது. அடுத்த இசைச் சட்டத்தை தொடங்குவதற்கான அழுத்தமற்ற மெல்லடிக்கான செய்கையைக் காட்டிவிட்டு மீண்டும் தொடக்கத்திற்குச் சென்றேன். அதைத் தொடர்ந்து பெருங்குழப்பம் நிலவியதாக A என்னிடம் உறுதியாகக் கூறினாள். ரசிகர்கள் உற்சாகமாகத் தான் இருந்தார்கள். மறுநாள் பத்திரிகைக்கார்களும் மரியாதையாகவே விமர்சனம் செய்திருந்தார்கள். ஆனால் நான் A சொன்னதையே நம்புகிறேன். நிகழ்ச்சிக்குப் பிறகு அரங்கிற்கு வெளியே நண்பர்களுடன் நின்று கொண்டிருக்கையில், பாக்கெட்டிலிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து படிக்கட்டில் எறிந்து நொறுக்கிவிட்டேனாம். இதைப் பற்றிய நினைவே எனக்கில்லை.
வீடு திரும்பி நான் சத்தமின்றி என் காலைக் காப்பியைக் குடித்துக் கொண்டிருக்கையில் அவள் என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். முப்பது வருட தாம்பத்தியத்திற்குப் பிறகு என் வீட்டில் எனக்கே கடிதம் எழுதியிருக்கிறாள். அன்றிலிருந்து அவளது வார்த்தைகள் என்னுடன் கூடவே இருந்துகொண்டிருக்கின்றன. நான் சிக்கல்களிலிருந்து தப்பிக்க மதுவில் அடைக்கலம் தேடும் ஒரு உபயோகமற்ற கோழை என்றும், குடி எனக்கு புதிய பெரும்படைப்புகளைப் படைப்பதற்கு உதவும் என்று நான் நம்பிக் கொண்டிருப்பதாகவும், அந்த நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானதென்றும் அவள் எழுதியிருந்தாள். எது எப்படி இருப்பினும் நான் குடிபோதையேறிய நிலையில் இசைக்குழுவை நடத்துவதைப் பொதுமக்களுடன் பார்க்கையில் ஏற்படும் அவமானத்திற்கு இனிமேலும் தன்னை உட்படுத்திக் கொள்ள அவள் தயாராக இல்லை.
எழுத்து மூலமாகவோ பேச்சுமொழியிலோ பதிலுக்கு ஒரு வார்த்தையைக் கூட நான் அவளுக்கு அளிக்கவில்லை. செயலின் மூலம் மறுமொழியாற்ற முயன்றேன். கடிதத்தின் வாக்கை மெய்ப்பிக்கவே அவள் செயல்பட்டாள் . அதன்படி ஸ்டாக்ஹோமிற்கோ, கோபன்ஹேகனுக்கோ, மால்மோவிற்கோ எனக்குத் துணையாக அவள் வரவில்லை. அவளது கடிதத்தை என்னுடன் எப்போதும் வைத்திருக்கிறேன். எங்கள் மூத்த பெண்ணின் பெயரைக் கடிதத்தின் உறையின் மீது எழுதியிருக்கிறேன், என் மரணத்திற்குப் பின், என்ன சொல்லப்பட்டது என்று அவளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக.
இசையைப் படைப்பவனுக்கு வயோதிகம் எவ்வளவு கொடூரமானது! முன்னைப் போல் வேகமாக எதுவும் நிறைவேறுவதில்லை. சுயவிமர்சனக் கண்டனமோ ஸ்தம்பிக்கச் செய்யுமளவிற்கு பூதாகாரமாக வளர்கிறது. புகழ், கைத்தட்டல்கள், அலுவல் சார்ந்த விருந்துகள், அரசாங்கமளிக்கும் பென்ஷன், விசுவாசமான குடும்பம், கடல்களுக்கு அப்பாலுமுள்ள ரசிகர்கள், இவை மட்டுமே மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படுகின்றன. எனது காலணிகளும் சட்டைகளும் எனக்காகவே பெர்லினில் தயாரிக்கப்படுவதையும் அவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். Homo diurnalis (தினசரி மனிதன்) புகழுடன் வரும் அலங்காரப் பகட்டுகளைப் பெரிதும் மதிக்கிறான். ஆனால் Homo diurnalis – ஸை மனிதகுலத்தின் கடைசித் தளத்தில் வசிக்கும் ஒரு ஜீவனாகத்தான் நான் கருதுகிறேன்.
என் நண்பன் டொய்வோ கூலா (Toivo Kuula) பூமியில் புதைக்கப்பட்ட நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது. யேகர் (Jaeger) எனப்படும் ஜெர்மானிய காலாட்படை வீரர்களால் தலையில் சுடப்பட்டு சில வாரங்களில் உயிரிழந்தான். அவனது ஈமச்சடங்கின் போது கலைஞனுக்கு வாய்த்திருக்கும் துயர்மிகு வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு உழைப்பு, திறம், தைரியம்… அதன் பின் அனைத்தும் முடிந்துவிடுகிறது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதன் பின் மறக்கப்பட்டு – இதுவே கலைஞனின் பிழைப்பு. மனநோயிலிருந்து தப்பிப்பதற்குக் கலையைக் கலைஞன் பயன்படுத்திக் கொள்கிறான் என்ற ஃபிராய்டின் வாதத்தை எனது நண்பன் லாகர்போர்க் பரிந்துரைக்கிறார். வாழ்வை அதன் முழுமையில் வாழ முடியாத கலைஞனின் இயலாமைக்கு ஈடுகட்டும் ஒரு வடிகாலாக படைப்புத்திறன் இருக்கிறது. இது வாக்னரின் கருத்தைச் சற்று விருத்தி செய்கிறது, அவ்வளவே. நம்மால் வாழ்வை முழுவதுமாய் அனுபவிக்க முடியுமானால் நமக்குக் கலை அவசியமில்லை என்ற கருத்தையே வாக்னர் வலியுறுத்தினார். என்னைப் பொறுத்தமட்டில் இவர்கள் எல்லோருமே இதைத் தலைகீழாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கலைஞன் பல உளவியல் சார்ந்த சிக்கல்களால் பாதிக்கப்படுகிறான் என்பதை நான் மறுக்கவில்லை. மற்ற எல்லோரையும் விட நான் எப்படி இதை மறுக்க முடியும் ? நிச்சயமாக, உளக்கோளாறுகள் என்னையும் பாதிக்கினறன. மேலும் பல சமயங்களில் துயரத்தால் வருத்தத்தில் ஆழ்த்தப்படுகிறேன். ஆனால் இவை அனைத்தும் நான் கலைஞனாக இருப்பதின் விளைவுகளே ஒழிய கலைக்கான காரணங்கள் அல்ல. இலக்குகளை இவ்வளவு உயரத்தில் வைத்துக்கொண்டு நாம் அடிக்கடி அவ்வுயரங்களை எட்டாமலே தோல்வியுறுவது எப்படி உளக்கோளாறுகளை ஏற்படுத்தாமல் இருக்க முடியும் ? பயணச்சீட்டுகளில் பொத்தலிட்டுக் கொண்டு நிற்குமிடங்களைச் சரியாக உரக்கக் கூவும் டிராம் நடத்துனர்கள் அல்லவே நாம். மேலும் வாக்னருக்கு நானளிக்கும் பதில் மிக எளிமையானதே: முழுதாக வாழப்படும் வாழ்க்கை அதன் இன்பங்களிலே மிகவும் உன்னதமான கலை நயத்தலை எப்படி உட்கொள்ளாமல் இருக்க முடியும் ?
எக்காலத்திற்கும் பொருந்தும், ஸ்வரங்களின் இயக்கத்தை நிர்ணயிக்கும் தெய்வீகமான கோட்பாடுகளைக் கண்டடைவதே சிம்ஃபொனியை உருவாக்குபவனின் மனப்போராட்டமாக இருக்கலாம். ஆனால் இந்த சாத்தியத்தையே ஃபிராய்டின் கருத்தியல்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. இம்மனப்போராட்டத்தின் சாதனை என்பது அரசனுக்காகவும், நாட்டிற்காகவும் உயிர்விடுவதை விடச் சற்று மேலானது. உருளைக்கிழங்குகளை நடவு செய்துகொண்டே, பயணச்சீட்டுகளை பொத்தலிட்டுக் கொண்டே பலரும் இதைச் செய்யலாம்… இதைவிட அதிகமான நபர்கள் இவற்றை விட உபயோகமான பல காரியங்களையும் செய்யலாம்.
வாக்னர் – அவனது தெய்வங்களும், நாயகர்களும் ஐம்பது ஆண்டுகளாக தசையில் புழுக்கள் நெளியும் அருவருப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள்.
என்னை ஜெர்மனியில் புதிதாக வந்திருக்கும் இசையைக் கேட்பதற்காக அழைத்துச் சென்றார்கள். “நீங்கள் அனைத்து நிறங்களையும் கலந்து கதம்பப் பானகங்களைத் தயாரிக்கிறீர்கள். நானோ துல்லியமான குளிர்நீரை இங்கு கொண்டு வந்திருக்கிறேன்,’ என்று கூறினேன். எனது இசை உருகும் பனிக்கட்டி. அதன் இயக்கத்தில் அதன் உறைந்த தொடக்கங்களை நீங்கள் காணலாம்… அதன் கணீரென ஒலிக்கும் ஆழங்களில் அதன் ஆதி மௌனத்தை நீங்கள் கண்டறியலாம்.
வெளிநாடுகளுள் எந்த நாடு என் இசையை அதிகமான அன்பைக் காட்டி ரசித்திருக்கிறது என்று என்னிடம் கேட்டார்கள். இங்க்லண்ட் என்று பதிலளித்தேன். நாட்டுப்பற்று வெறி அறவே இல்லாத நாடது. அங்கு ஒரு முறை சென்றிருந்த போது, குடிநுழைவு அதிகாரி என்னை அடையாளம் கண்டுகொண்டார். திரு, வான் வில்லியம்ஸைச் சந்தித்தேன். இசையைத் தவிர எங்களிருவருக்கும் பொதுவாக இருந்த ஒரே மொழியான ஃப்ரெஞ்சு மொழியில் பேசிக் கொண்டோம். ஒரு இசைநிகழ்ச்சிக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்த்தினேன் . எனக்கு இங்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள், அதே அளவு எதிரிகளும் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று நான் கூறினேன். போர்ன்மத்தில் இசை பயிலும் மாணவன் ஒருவன் எனக்குத் தன் வந்தனங்களைத் தெரிவித்து விட்டு, எனது நான்காவது சிம்ஃபொனியைக் கேட்பதற்காக லண்டனிற்கு வருமளவிற்கு அவனுக்கு வசதியில்லை என்று பாசாங்கற்ற எளிமையுடன் கூறினான். எனது பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டே, ‘ein Pfund Sterling நான் உனக்குத் தருகிறேன்’ என்று கூறினேன்.
எனது பல்லிய அமைப்பு பீத்தோவனுடையதைக் காட்டிலும் சிறந்தது. எனது இசையின் கருப்பொருட்களும் கூட. ஆனால் அவர் மதுபான தேசத்தில் பிறந்தவர், நான் பிறந்த இடத்திலோ வெண்தயிரே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. என்னுடையதைப் போன்ற ஒரு அரும் திறமையை, (மேதமையை பற்றிக் கூறவே வேண்டியதில்லை), வெண்தயிரை ஊட்டி வளர்க்கமுடியாது.
போர் நடந்து கொண்டிருந்தபோது கட்டிடக்கலைஞர் நார்ட்மன் வயலின் பெட்டியைப் போல் உருவமைக்கப்பட்டிருந்த சிப்பமொன்றை அனுப்பி இருந்தார். அது உண்மையிலேயே ஒரு வயலின் பெட்டியே, ஆனால் அதனுள் புகைப்பதனம் செய்யப்பட்ட செம்மறியாட்டுக் குட்டியின் காலொன்று இருந்தது. எனது நன்றியை தெரிவிக்கும் வகையில் ‘Fridolin’s Folly’ என்ற படைப்பை இசையமைத்து நார்ட்மனுக்கு அனுப்பினேன். அதன் பிறகு , எவரோ ஒருவர் எனக்கு கூடை நிறைய அயிரை மீன்களை அனுப்பினார். பாடற்குழுவிற்கான ஒரு Choral படைப்பைக் கொண்டு அவருக்கு பதிலளித்தேன். புரவலர்கள் இருந்த காலத்தில், கலைஞ்ர்கள் இசை படைப்பார்கள், அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வரையில் அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. இப்போதோ எனக்கு உணவு அனுப்பப் படுகிறது, பதிலுக்கு நான் இசையை உண்டாக்குகிறேன். தற்செயலாக நிகழும் திட்டமற்ற முறைமை இது.
டிக்டோனியஸ் எனது நான்காவதை ‘பட்டை ரொட்டிச் சிம்ஃபொனி’ என்று அழைக்கிறார், அந்தக் காலத்தில் ஏழைகள் மைதா மாவை அரைத்த மரப்பட்டையுடன் கலப்படம் செய்ததை குறிப்பதற்காக. இதைக் கொண்டு செய்யப்பட்ட ரொட்டித் துண்டங்கள் உயர்தரமாக இல்லாவிட்டாலும், பட்டினிச் சாவுகளைப் பெருமளவிற்குத் தடுத்தன. வாழ்வைப் பற்றிய ஒரு சிடுசிடுப்பான, மகிழ்ச்சியற்ற பார்வையையே என் நான்காவது சிம்ஃபொனி வெளிப்படுத்துகிறது என்று கலிட்ச் கூறினார்.
நான் இளைஞனாக இருந்தபோது, விமர்சனத்தால் காயப்பட்டேன். இப்போது, நான் சோகமான மனநிலையில் இருக்கையில், என் படைப்பைப் பற்றி எழுதப்பட்ட மகிழ்ச்சியற்ற வார்த்தைகளை மீண்டும் படிக்கிறேன், இது என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. ‘எப்போதுமே இதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், விமர்சகனுக்கு சிலை வைத்த நகரம் ஒன்று கூட உலகத்தில் இல்லை,’ என்று என் சகஊழியர்களுக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நான்காவதின் மெதுவான மூவ்மெண்ட் எனது ஈமச்சடங்கில் வாசிக்கப்படும். இதன் ஸ்வரங்களை எழுதிய கை ஒரு எலுமிச்சையைப் பற்றியபடியே புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இல்லை, உயிரற்ற எனது கையிலிருந்து A எலுமிச்சையை எடுத்துக் கொண்டுவிடுவாள், இப்போது உயிருள்ள கையிலிருந்து விஸ்கி பாட்டிலை எடுத்துக் கொள்வதைப் போல.
என் எட்டாவது, அதைப் பற்றி மட்டுமே எல்லோரும் கேட்கிறார்கள். மாய்ஸ்ட்ரோ, எப்போது அது முடிக்கப்படும் ? முதல் மூவ்மெண்ட் மட்டுமாவது… ? அதை நிகழ்த்துவதற்காக K.-யிடம் அதை அளிப்பீர்களா ? ஏன் அதை முடிப்பதற்கு இவ்வளவு காலமாகிறது ? வாத்து நமக்காகத் தங்கமுட்டைகள் இடுவதை ஏன் நிறுத்திவிட்டது ?
கனவான்களே, புது சிம்ஃபொனி ஓன்று வெளிவரலாம் அல்லது வராமலும் போகலாம். எனக்கு பத்து, இருபது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருக்கால் இன்னம் முப்பது ஆண்டுகள் கூட ஆகலாம். ஒருக்கால் அந்த முப்பதாண்டு இடைவெளியின் இறுதியில் ஓன்றுமே இல்லாமல் கூடப் போகலாம். ஒருக்கால் தீ விபத்தில் எல்லாம் முடிந்துவிடலாம். முதலில் தீ , பிறகு மௌனம். அனைத்துமே அப்படித் தானே முடிகிறது . ஆனால், கனவான்களே ,என்னைச் சரியான விதத்தில் பிறழ்பொருள் கொள்ளுங்கள். நான் மௌனத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. மௌனமே என்னைத் தேர்வு செய்துள்ளது.
இன்று A-யின் ‘பெயர் நாள்’. நாய்க்குடைகளைப் பொறுக்கிச் சேகரிப்பதற்காக நானும் வரவேண்டும் என்று அவள் விரும்புகிறாள். மொரெல் எனப்படும் காளான்கள் காட்டில் பழுத்துக் கொண்டிருக்கின்றன. என்ன சொல்வது, இது என் குறிப்பிடத்தக்க திறமைகளில் ஒன்றல்ல. ஆனாலும் கூட, உழைப்பு, திறமை மற்றும் மனவுரத்தின் உதவியால் ஒரு மொரெலைக் கண்டுபிடித்தேன். அதைத் தரையிலிருந்து எடுத்து, மூக்கினருகே வைத்து, நன்றாக முகர்ந்த பிறகு, பவ்யமாக A.-யின் சிறு கூடைக்குள் இட்டேன். அதன் பின் மணிக்கட்டியிலிருந்து பைன் ஊசிகளை தூசிதட்டி விட்டு, கடமையைச் செய்துமுடித்த திருப்தியுடன் வீடு திரும்பினேன். பின்னர் , நாங்கள் டூயெட்டுகளை வாசித்தோம். Sine alc.
கையெழுத்துப் பிரதிகள் தீக்குளித்து தீர்ப்பைப் பெறும் நாள். (auto-da-fe). அவற்றை சலவைக்கூடையில் திரட்டி உணவறையில் A-யின் முன்னிலையில் தீயிலிட்டுக் கொளுத்தினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு,A பொறுக்க மாட்டாமல் வெளியே சென்றாள். நான் நல்ல காரியத்தைத் தொடர்ந்தேன். முடியும் நேரம் நெருங்குகையில் எனது மன நிலை பளுவற்று அமைதியானது. இந்நாள் ஒரு நன்னாள்.
முன்னைப் போல் வேகமாக எதுவும் நிறைவேறுவதில்லை…. உண்மை தான். ஆனால் வாழ்வின் இறுதி மூவ்மெண்ட் குதூகலமான rondo allegro –வாக இருக்கவேண்டும் என்று நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அதற்குப் பொருத்தமான கால அளவைகளை நாம் எப்படிக் குறியிட வேண்டும் ? கம்பீரமான Maestoso ? ஒரு சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் வாய்க்கும். Largo – விலோ நமது தேவையை மிஞ்சும் கண்ணியமுள்ளது. மெதுவாக உணர்ச்சியுடன் விரியும் Largamente e appassionato ?. ஒரு கடைசி மூவ்மெண்ட் அப்படியும் தொடங்கலாம் – எனது முதலாவதைப் போல. ஆனால் அது இசைக்குழுவை மேலும் மேலும் வேகமாகவும், சத்தத்துடனும் வாசிக்கச் செய்வதற்காக, நிகழ்த்துனர் கையை சாட்டையடிப்பது போல் வேகமாக ஆட்டிக்கொண்டு நிற்கும் allegro molto –விற்கு நிஜவாழ்க்கையில் இட்டுச் செல்லுவதில்லை. இல்லை, தனது இசையையே அடையாளங்காண இயலாத கிழவனும், ஒத்திகைக்கும் கச்சேரிக்கும் வித்தியாசம் தெரியாத மூடனும், இணைந்திருக்கும் ஒரு குடிகாரனைத்தான் வாழ்க்கை மேடையேற்றி இருக்கிறது. கோமாளித்தனத்திற்கு ஏற்ற Tempo buffo – வாக இதைக் குறியிடலாமா ? இல்லை, எனக்கு இப்போது புரிந்துவிட்டது. ஸ்வரங்களை அவற்றிற்கு அளிக்கப்பட்ட கால அளவைகளுக்குப் பின்னும் முடிந்தவரையில் நீடிக்கச் செய்யும்படிக் கோரும் sostenuto – வாக இதை குறியிட்டு, நிகழ்த்துனருக்கு முடிவு செய்யும் சுதந்திரத்தை அளித்துவிடவேண்டும். இறுதியில், உண்மையை வெளிப்படுத்துவதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட வழிகள் இருக்கின்றன.
எப்பொதும் போல் இன்றும் காலை நடைப்பயிற்சி சென்றேன். குன்றின் மேல் நின்று கொண்டு வடக்கு திசையை நோக்கினேன். ‘எனது வாலிபத்தின் பறவைகளே !’ என்று வானத்தைப் பார்த்து கத்தினேன். மேகமூட்டம் அதிகமாகவே இருந்தது. ஆனால் முதல்முறையாக கொக்குகள் அவற்றிற்கடியே பறந்தன. அவை நெருங்கி வருகையில், கூட்டத்தை விட்டு ஓரு பறவை மட்டும் பிரிந்து என்னை நோக்கி நேராகப் பறந்து வந்தது. அதன் வருகையைப் பாராட்டும் வகையில் நான் கைகளை உயர்த்த, அது என்னை ஒரு முறை மெதுவாகச் சுற்றிவிட்டு, எக்காளமிட்டபடி, தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் தனது கூட்டத்துடன் மீண்டும் இணைவதற்காகப் பறந்து சென்றது. ஒன்றுமே கேட்கமுடியாமல், மௌனம் மீண்டும் தொடங்கும் வரையிலும் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
மெதுவாக வீட்டை நோக்கி நடந்தேன். வாசலில் நினறபடி ஒரு எலுமிச்சைக்காகக் குரல் கொடுத்தேன்.