செஞ்சிவப்புச் சிந்தனைகள்

Che_Guvera_Communism_Socialism_Marxism

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எண்பதுகளில் பிரபலமாக இருந்த ஒரு புத்தகப் பிரசுர நிறுவனம். சோவியத் சோசலிசக் குடியரசின் (ரஷ்ய) பண உதவியுடன் நடத்தப்பட்ட நியூ செஞ்சுரி ஏராளமான ரஷய் எழுத்தாளர்களின் புத்தகங்கங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. வழு வழுப்பான காகிதத்தில், மிகத் தரமான முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். வெறும் ஐம்பது அல்லது நூறு ரூபாய்க்கு கால் மூட்டை புத்தகங்களை அள்ளிக் கொண்டு வருவேன். அத்தனை சல்லிசு.

ஒரு கம்யூனிஸ்டு புர்ச்சியாளனாக மாறி உலகையே உலுக்கப் போகிற மமதையில் திரிந்து கொண்டிருந்த காலமது. நான் அள்ளிக் கொண்டு வருகிற புத்தகங்களைக் கண்டு “குடுக்குற காசை இப்பிடி வீணாக்கிப்புட்டானே…” என்று வீட்டில் ஆளுக்காள் வசை பாடுவார்கள். ஒரு எதிர்கால புர்ச்சி வீரனைப் பற்றி பனாதைகளுக்கு என்ன தெரியும் என்பதால் நான் அதனை அதிகம் பொருட்படுத்தியதில்லை. Well, let us not go there…

இப்போது இருப்பது போல புத்தகங்களை வாங்கும் வசதி எண்பதுகளில் இருந்ததில்லை. சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் அவ்வப்போது சிறிய டெண்ட் போன்ற அமைப்பு நியுசெஞ்சுரியால் அமைக்கப்பட்டு புத்தகங்களை விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். பூக்கடை போலிஸ் ஸ்டேசனுக்கு அருகில், சைதாப்பேட்டை மறைமலை பாலம் தாண்டியவுடன் ஒரு சிறிய இடத்தில் அல்லது எழும்பூர் பாந்தியன் சாலையில்…இப்படி. மக்ஸீம் கோர்க்கி, செக்காவ், இன்னபிற ரஷ்ய எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானது அப்போதுதான். மொழிபெயர்ப்பும் தரமானதாகவே இருக்கும்.

கோர்க்கியின் சிறுகதைகளை ரசித்த அளவிற்கு அவரது புகழ்பெற்ற “தாய்” நாவலை என்னால் கடைசிவரை படிக்கவே இயலவில்லை. கொஞ்சம் திராபைத்தனமான மொழிபெயர்ப்பின் காரணமாக எனக்குள் இதுவொரு புண்ணாக்குத்தனமான நாவல் என்ற எண்ணம் எப்படியோ ஒட்டிக் கொண்டுவிட்டது. இன்றளவும் அதுவே எனது எண்ணம். ரஷ்ய மொழியில் நேரடியாகப் படித்தால் ஓரளவிற்கு சுவாரசியமாக இருக்குமோ என்னமோ. மக்ஸீம் கோர்க்கியின் பிற்கால நடவடிக்கைகள் அவரது புரட்சிகர “தாய்” நாவலை கேலிக்குள்ளாக்கி விட்டிருந்தது.

ரஷ்யப் புரட்சியின் பெரும் ஆதரவாளராக, மானுட இருளை திறமையுடன் தனது எழுத்தில் கொண்டு வருபவராக இருந்த கோர்க்கி, ஸ்டாலினால் அந்தப் புரட்சியின் நோக்கம் திசைமாற்றப்பட்டு பல இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தார். அதுமட்டுமல்லாமல், ஸ்டாலினின் ஆதரவாளராக, அவரின் துதிபாடியாக வாழ்ந்து மறைந்த கோர்க்கியின் மீதான எனது அபிமானத்தை முற்றிலுமாக இழந்தேன். அதற்காக அவரது இலக்கியப்படைப்புகளை எவராலும் ஒதுக்கித் தள்ளிவிட இயலாது. உலக இலக்கியத்தில் மக்ஸீம் கோர்க்கியின் இடம் நிரந்தரமானது. இங்கு நான் சொல்வது என்னுடைய எண்ணங்கள் மட்டுமே.

ஸ்டாலினால் சைபீரியச் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த பல இலட்சம் ரஷ்யர்களின் துயரங்களை வெளியுலகிற்கு அறிவித்த Aleksandr Solzhenitsyn அவரது The Gulag புத்தகத்தில், மக்ஸீம் கோர்க்கியைக் குறித்துக் கூறும் ஒரு சம்பவம் கவனிக்கத்தக்கது. சைபீரியச் சிறைகளைக் குறித்து “ஆய்வு” செய்வதற்காக, ஸ்டாலின் மக்ஸீம் கோர்க்கியை அனுப்பி வைக்கிறார். அன்றைய ரஷ்ய நடைமுறைகளை அறிந்தவர்களுக்கு அது வெறும் கண்துடைப்பு என்பது தெரியும். கோர்க்கி ஒவ்வொரு குலாக்காக பார்வையிட்டுக் கொண்டு வருகிறார். அவர் ஓரிடத்தில் பார்வையிட வருவது அங்குள்ள அதிகாரிகளுக்கு முன்பே அறிவிக்கப்படும். அவர்கள் ஏதேனும் ஒரு குலாக்கை சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து வைத்திருப்பார்கள். கோர்க்கி அதனைப் பார்வையிட்டு, அதிகாரிகளை வாயாரப் பாராட்டிவிட்டு அடுத்த குலாக்கிற்குப் போவார்.

Aleksandr Solzhenitsyn இருக்கும் தீவிற்கு மக்ஸீம் கோர்க்கி வரவிருப்பதால் அதனைச் சுத்தப்படுத்துவதற்கு சிறைக் கைதிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் எதிர்பாராத விதமாக கோர்க்கியின் நீராவிப்படகு சிறிது முன்னராகவே அந்தத் தீவிற்கு வந்து சேர்கிறது. கிழிந்த உடையுடன், சரியான உணவின்றி பசியிலும், நோயிலும் வாடிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்த சிறைக்கைதிகளை கோர்க்கி பார்த்து விடக்கூடாது என்பதற்காக அத்தனை பேர்களையும் ஓரிடத்தில் தரையில் உட்கார வைத்து அவர்கள் மீது தார்ப்பாயை வைத்து மூடுகிறார்கள். சத்தமிடுபவர்கள் உடனடியாகக் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஏதோ காரணங்கள் சொல்லி படகினுள் தாமதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கோர்க்கி கரைக்கு வந்து அந்த தார்ப்பாய் குவியலைக் கண்டும் காணாதவர் போலச் செல்கிறார். அவரை ஒரு சிறுவர் விடுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஏற்கனவே சொன்னபடி, வெள்ளையடிக்ப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்த அந்த விடுதியில் சிறுவர்கள் தூய உடையணிந்து, படுக்கைகளில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். கோர்க்கி அதனைக் கண்டு மிகவும் மகிழ்ந்து போகிறார். அங்குள்ள சிறுவர்களுடன் தான் பேச விரும்புவதாகச் சொல்கிறார். அதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அவருடன் பேசிய சிறுவர்களில் இருந்த ஒரு பதினாலு வயதுடையவன் கோர்க்கியிடம் உண்மையைப் போட்டுடைக்கிறான். இது அத்தனையும் நாடகம் என்றும் ஏராளமான நோயுற்ற சிறைக் கைதிகள் நீங்கள் வருவதனால் காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறான். இதனை எதிர்பார்க்காத கோர்க்கி திகைத்துப் போகிறார். எதுவும் பேசாமல் கண்களில் கண்ணீர் வழிய கோர்க்கி அங்கிருந்து நகர்ந்ததும் அந்தப் பதினாலு வயதுச் சிறுவன் அந்த இடத்திலேயே அடித்துக் கொல்லப்பட்டான் என்கிறார் Aleksandr Solzhenitsyn.

கோர்க்கி, ஸ்டாலினிடம் என்ன “ஆய்வு” அறிக்கையை சமர்ப்பித்தார் என்பது இன்றளவும் தெரியவில்லை. அவர் வந்து போன பிறகும் பல இலட்சக்கணக்கான ரஷ்யர்கள் குலாக்குகளில் கொல்லப்படுவது நடந்து கொண்டுதானிருந்தது.

Cannibal Island : Death in Siberian Gulag என்று ஒரு ஆவணப்படம் இருக்கிறது. சைபீரிய நதியின் நடுவிலிருக்கும் ஒரு தீவிற்கு, தனக்கு வேண்டப்படாத ஆறாயிரம் பேர்களைக் கைது செய்து அனுப்பி வைக்கிறார் ஸ்டாலின். அவர்களுக்கு உணவோ, நீரோ, மருந்தோ எதுவும் அளிக்கப்படவில்லை. அந்தத் தீவில் உண்ணும் வகையில் விளைவது எதுவுமில்லை. எனவே பட்டினியால் வாடும் கைதிகள் ஒருவரை ஒருவர் அடித்துச் சாப்பிடத் துவங்குகிறார்கள். இறுதியில் அத்தனை பேர்களும் இறந்து போனார்கள். உண்மையில் நடந்த விஷயம் இது.

நமது கம்யூனிஸ்ட்களில் எத்தனை பேர்களுக்கு இதெல்லாம் தெரியும் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருப்பவனைப் பார்த்தால் என்னால் சிரிக்காமலிருக்கவும் முடியவில்லை. காலத்தின் கோலமல்லவா இது?

பேனாவோ, பென்சிலோ அல்லது எழுதும் தாள்களோ கையில் வைத்திருப்பது கடுமையான குற்றம் என்று அறியப்பட்ட சைபீரியச் சிறையில் வாழ்ந்த Aleksandr Solzhenitsyn, புழுக்கைப் பென்சிலை மறைத்து வைத்து, டாய்லெட் பேப்பரிலும், கைக்குக் கிடைத்த தாள்களிலும் சைபீரியச் சிறையில் வாடுபவர்களைப் பற்றி எழுதினார். மிகுந்த சிரமத்துடன் அந்தக் காகிதங்கள் ஜெர்மனிக்குக் கடத்திவரப்பட்டு பின்னர் புத்தகமாக வெளிவந்தது. The Gulag புத்தகத்தைப் படிக்கிற எவனும் மீண்டும் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளத் துணியமாட்டான்.

* Cannibal Island : Death in Siberian Gulag புத்தகமாகவும் வெளிவந்திருக்கின்றது.

oOo

தமிழ்நாட்டில் கட்சிப் பணிக்காக தமது முழுச் சம்பளத்தையும் கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, அவர்கள் அதிலிருந்து பிரித்துக் கொடுக்கும் சொற்பக் காசை தனது குடும்பத்திற்குச் செலவிட்டுத் தங்களையும், தங்களின் குடும்பத்தினரையும் வாழ்வு முழுவதும் வறுமையில் வாட விட்ட பல இளிச்சவாய கம்யூனிஸ்ட் காம்ரேடுகளின் கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அதனைக் குறித்து எண்ணிப் பார்க்கையில் எனக்குள் வரும் வருத்தத்திற்கு அளவில்லை. ஸ்டாலினிசக் கொடுமைகள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்ட எழுபதுகளில் கூட இதுபோன்ற காம்ரேட் கமிசார்கள் தமிழகத்தில் நிறைந்திருந்தார்கள்.

கம்யூனிச நாடுகளில் பாலும், தேனும் ஓடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்த தமிழக காம்ரேட் கமிசார் பல இலட்சக்கணக்கான சோவியத் குடிமக்களை சைபீரியச் சிறையிலடைத்துக் கொன்ற ஸ்டாலினின் ஆட்சியைக் குறித்தோ, பல மில்லியன் சீனர்களைப் பட்டினியிட்டுக் கொன்ற மாவோவின் கொடூரங்களைக் குறித்தோ, கம்போடியாவில் பொதுவுடமையின் பேரால் போல்-பாட்டினால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், தொழிற்சாலை ஊழியர்களைக் குறித்தோ, ரோமானியாவை நாசமாக்கிய செசஸ்கு குறித்தோ அல்லது இன்றளவும் கம்யூனிஸ்டுப் பொதுவுடமையின் பெயரால பல்லாயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் வட கொரிய கிறுக்கர்கள் குறித்தோ, கியூபாவை பொருளாதார ரீதியாக நாசமாக்கிய ஃபிடல் காஸ்ட்ரோ அல்லது இன்னபிற கம்யூனிச சர்வாதிகாரிகளைக் குறித்தோ எந்தவிதமான அறிதலும் உடையவரல்லர். மேற்கூறிய சர்வாதிகாரிகளின் கீழ் வாழ்ந்தால் காம்ரேட் கமிசாரும் அவரது குடும்பத்தினருமே முதலில் பாதிக்கப்படுவார்கள் என்ற அறிவும் அவர்களுக்கு இருந்ததில்லை.

கம்யூனிச சித்தாந்தம் ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத சித்தாந்தம் என்பதினை அறிந்து கொண்ட உலகின் பெரும்பாலான கம்யூனிஸ்ட்டுகள் அதனை விட்டு விலகினார்கள். சீனக் கம்யூனிஸ்ட்டுகள் உள்பட. இன்று சீனா பெயரளவிற்கு ஒரு கம்யூனிச சர்வாதிகார நாடாக மட்டுமே இருக்கிறது. கம்யூனிசம் சாதாரண சீனர்களை அடக்கி வைக்க மட்டுமே இன்றைக்கு உபயோகிக்கப்படுகிறது. ஆம்; பொதுவுடமைச் சர்வாதிகாரத்தின் பெயரால் சாதாரண சீனர்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். எதிர்ப்புக் குரல் எழும்பாத வண்ணம் அவர்களின் குரல்வளைகள் நசுக்கப்படுகின்றன. இதையெல்லாம் சொல்வதால் தமிழ்நாட்டுக் காம்ரேட் கமிசார்கள் எரிச்சலடைவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்ன செய்வது? உண்மை என்றுமே இறப்பதில்லையே? அது அங்கேயே அல்லவா நின்று கொண்டிருக்கிறது? எவ்வளவு மறைத்தாலும். ஒளித்தாலும். இல்லையா?

பொதுவுடமைச் சமுதாயத்தில் அனைவரும் சமம்; என்ன வேலை செய்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வருமானம்; வாழ்க்கை முறை…இன்ன பிற என்பது காம்ரேட் கமிசாரின் ஒரு முக்கியமான வாதம். அந்தோ பரிதாபம்! ஒரு கம்யூனிச தேசத்தில், ஒரு சர்வாதிகாரியின் துப்பாக்கியின் கீழ் வாழாத, எந்த நேரத்தில் தன்னைக் கைது செய்வார்களோ, எப்போது சிறைக்கு அனுப்புவார்களோ என்னும் அச்சத்துடன் அனுதினமும் வாழும் ஒரு பாக்கியம் கிட்டாத தமிழக கமிசார் எவரும் அவ்வாறு நினைப்பது ஆச்சரியமில்லை. அப்படியொரு வாழ்வு அன்னார் வாழ்ந்திருந்தால் இப்போது அதுகுறித்து என்ன சொல்லுவார் என்றும் என்னால் எண்ணாமலும் இருக்கவியலவில்லை.

ரஷ்யர் ஒருவர் என்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஸ்டாலினின் காலத்தில் பிறந்து, குருஷ்ச்சேவ், பிரஸ்னேவ் காலத்தில் சோவியத்து சோசலிசக் குடியரசில் வளர்ந்தவர் அவர். ஸ்டாலினின் ரஷ்யா குறித்து எனது கண்ணைத் திறந்துவிட்டதில் அவருக்குப் பெரும்பங்கு இருக்கிறது. அவருடன் ஒரு ரஷ்ய ரெஸ்டாரண்டிற்கு மதிய உணவிற்குப் போயிருந்தேன். இந்தியாவில் சோவியத் யூனியனைக் குறித்தும், அங்கு பாலும் தேனும் ஓடுவதாக தமிழகத்தில் கூறப்படுவதனை, எழுதப்படுதனைக் குறித்தும் படித்து வளர்ந்த எனக்கு, சோவியத் யூனியன் திடீரென சிதறு காயாகச் சிதறி விட்டதில் பெருத்த ஆச்சரியம் இருந்த காலம் அது.

எழுபதுகளில் ஜெயகாந்தன் போன்றவர்கள் சோவியத் யூனியனுக்குப் பயணம் போவார்கள். திரும்பி வந்து அங்கே பாலும், தேனும் பெருகி ஓடுவதாகக் கட்டுரை எழுதுவார்கள். அவர்களுக்குக் காட்டப்படுவது எல்லாம் திட்டமிடப்பட்ட கம்யூனிசப் பொய்கள் என்பதினை உணர்ந்து கொள்ளவே பல காலம்  பிடித்தது ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு. உணர்ந்தாலும் அதனை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஜெயகாந்தனின் சோவியத் நண்பரான வித்தாலி ஃபூர்ணிக்காவ் என்பவர்தான் அவரை மாஸ்கோவின் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வித்தாலி ஃபூர்ணிக்காவ் என்ன ஆனார் என்று ஜெயகாந்தனைத்தான் கேட்க வேண்டும்.

மேற்படி ரஷ்ய நண்பரிடம் சோவியத் யூனியனைக் குறித்து எனக்குள் இருந்த சித்திரத்தை உணர்ச்சிகரமாக விவரித்துக் கொண்டிருந்தேன். “என்ன வேலை செய்தாலும் ஒரே சம்பளமும், வாழ்க்கை முறையும் அற்புதமான ஒன்றல்லவா?” என்றேன். ரஷ்ய நண்பர் புன்னகையுடன் நான் சொல்வதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“இந்த ரெஸ்டாரண்டிற்கு நாம் வந்தவுடன் நம்மைப் புன்னகையுடன் வரவேற்றார்கள். தண்ணீர் கொடுத்தார்கள். என்ன வேண்டும் என்று பணிவுடன் கேட்டுத் தெரிந்து சென்றார்கள். உணவின் சுவையும், தரமும் இங்கு நன்றாகவே இருக்கும். ஒருவேளை நன்றாக இல்லையென்று புகார் செய்தால் நம்மிடம் பணம் வசூலிக்காமலேயே அவர்கள் நம்மை அனுப்பி வைக்கவும் கூடும். இல்லையா?”

நான் பதில் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப, திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படுகிறது. கொடுக்கும் ஊதியத்திற்கேற்ப அவர்கள் அந்த வேலையைத் திறம்பட செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறு வேலை செய்யாவிட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அந்த அச்சமே அவர்கள் தங்களின் முழுத் திறமையைப் பயண்படுத்தி அவர்களை வேலை செய்ய வைக்கிறது. அதன் காரணமாகவே இந்த ரெஸ்டாரெண்ட் நன்றாக நடக்கிறது. நாமும் இத்தனை மைல்கள் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம் இல்லையா?”

ஆமென்று தலையை அசைத்தேன்.

“இப்படி கற்பனை செய்து பார். இதுவொரு கம்யூனிச நாட்டில் அரசாங்கத்தால் நடத்தபடும் ஒரு ரெஸ்டாரெண்ட். இந்த ரெஸ்டாரெண்ட்டில் அனைவருக்கும் ஒரே சம்பளம் வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள். மேனஜருக்கும் ஒரே சம்பளம்; சமையலறையில் சமைப்பவருக்கும் ஒரே சம்பளம். பரிமாறும் சர்வருக்கும் ஒரே சம்பளம் என்று வைத்துக் கொள்வோம். இங்கு எதுவும் சரியாக நடக்குமென்றா நினைக்கிறாய்? யார் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அதனைத் தட்டிக் கேட்க மேனஜருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் கிடைக்க வேண்டிய சம்பளம் அவரவர்களுக்குக் கிடைத்துவிடும். எனவே யாருமே அவர்களின் வேலையைச் செய்ய மாட்டார்கள். செய்தாலும் அது அரைகுறையாகத்தான் இருக்கும்”

“சோவியத் யூனியனின் எந்தவொரு ரெஸ்டாரெண்டிற்கு நான் சென்றாலும் முதலில் நான் செய்வது அங்கு சமையலறையில் உறங்கிக் கொண்டிருக்கும் சமையல்காரனுக்கு லஞ்சம் கொடுப்பதுதான் என்பது உனக்குத் தெரியுமா? அதன் பின்னர் சர்வரைத் தாஜா செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த உணவு ஆறுவதற்கு முன் நம் மேசைக்குக் கொண்டு வந்து வைப்பான். அந்த ரெஸ்டாரெண்டின் மேனேஜர் நமக்கு அறிமுகமில்லாதவர் என்றால் அங்கு செல்வதே வீணான ஒரு செயலாக இருக்கும். அனேகமாக தண்ணீரைப் போன்ற சூப்பைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. இங்கு இறைச்சியும், பாலும், காய்கறிகளும் எந்தத் தடையுமின்றிக் கிடைக்கிறது. சோவியத் யூனியனில் இறைச்சியைக் கண்ணில் பார்க்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். இறைச்சி ரேஷனில்தான் கிடைக்கும். அதனை வாங்குவதற்கு மணிக்கணக்கில் விறைக்கும் குளிரில் நாம் நிற்க வேண்டும். நான் நின்றிருக்கிறேன்….”

“சனிக்கிழமையன்று ரொட்டி என்னுடைய ஊருக்கு ரயிலில் வருகிறதென்றால் நாங்கள் வியாழக்கிழமையே ரயில்வே ஸ்டேசன் வாசலில் கியூவில் நிற்க ஆரம்பிப்போம்…பொதுவுடமை கொடுக்கும் பரிசு அது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், படித்த பிறகு எங்கு வேலை செய்ய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்கமே தீர்மானிக்கும். நீங்கள் மருத்துவத்திற்குப் படிக்கலாம். ஆனால் அரசாங்கம் உங்களை கிராமத்திற்கு அனுப்பி விவசாய வேலை பார்க்கச் சொன்னால் அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும். வேறு வழியே இல்லை….அப்படியான ஒரு வாழ்க்கை வாழ உனக்கு ஆசையிருந்தால் சொல்…உன்னை வடகொரியாவிற்கு அனுப்பி வைக்கிறேன்…” என்று உரக்கச் சிரித்தார்.

எங்களின் பேச்சு நீண்டு கொண்டு சென்றது. சோவியத் யூனியனைப் பற்றி ஒரு இந்தியனாக அதுவரையில் நான் அறிந்து வைத்திருந்த கற்பனை பிம்பம் எனக்குள் தகர்ந்ததை உணர்ந்தேன். பின்னாட்களில் The Gulag போன்ற புத்தகங்கள் என்னை மேலும் விழிப்படையச் செய்தன.

oOo

இப்படியாக தமிழ் நாட்டு அறிவுசீவிகளால் பரணி பாடப்பட்டுக் கொண்டிருந்த எழுபதுகளில் சோவியத் யூனியனைப் பற்றிக் கொஞ்சம் எதிர்மறையான தகவல்களை அளித்தவர் என்று கண்ணதாசனைச் சொல்லலாம். அதற்காக அவர் வசைபாடப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அன்றைக்குத் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக இருந்த திரைப்பட இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனும், கண்ணதாசனும் சோவியத் அரசாங்கத்தின் அழைப்பில் சோவியத் யூனியனுக்குப் போனார்கள். கண்ணதாசன் நினைத்த இடத்தில் பாடல்கள் இயற்ற, அதற்கு எம். எஸ். வி. இசையமைக்க ஒரே ஆரவாரமான பயணம் அது. பயணத்தின் முடிவில் கண்ணதாசன் ஒரு சோவியத் சூப்பர் மார்க்கெட்டைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். சோவியத் உழைப்பாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஏராளமான பொருட்களும், விவசாய விளை பொருட்களும் சோவியத் யூனியனின் சூப்பர் மார்க்கெட்டுகளில் குவிந்து கிடப்பதாக தமிழ் நாட்டு அறிவுசீவிகள் எழுதிக் குவித்திருந்தார்கள். கண்ணதாசனுக்கு அதனை எப்படியும் தன் கண்ணால் கண்டுவிட வேண்டுமென்று ஆசை. எனவே பயண ஏற்பாட்டாளர்களை மிகவும் வற்புறுத்திக் கேட்க, அவர்களும் அவரை ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு அரைமனதுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஏகப்பட்ட கற்பனையுடன் சென்ற கண்ணதாசன், மேற்படி சூப்பர் மார்க்கெட் காலியாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். பொதுவுடமையில் “பொலிட் பீரோ”தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பது அவருக்குப் புரியவில்லை. “ஒரு சாதாரண தலைவலி மாத்திரை கூடக் கிடைக்காத பொதுவுடமை சூப்பர் மார்க்கெட்டை விடவும், நிரம்பி வழியும் பொருட்களையுடைய எங்கள் ஊர் பெட்டிக் கடைகள் எத்தனையோ மேல்” என்றார் கவியரசர் ஏமாற்றத்துடன்.

தமிழ்நாட்டுப் பொதுவுடமை அறிவுசீவிகள் அவருக்கு எத்தகைய அர்ச்சனை நடத்தியிருப்பார்கள் என்பதினை எண்ணிப்பார்க்கவே வேண்டியதில்லை.

பொதுவுடமைக் கருத்தினைப் பணக்காரர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அது உலகத்தின் தலைவிதியையே மாற்றியிருக்கக் கூடும். ஆனால் பொதுவுடமை சித்தாந்தம் ஏதுவுமில்லா ஏழைகளிடம் சென்று சேர்ந்தது. அவர்களிடம் பகிர்ந்தளிக்க எதுவுமில்லை. எனவே பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்குக் கொடுக்கும் சித்தாந்தம் அவர்களைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. அது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒரு சித்தாந்தம் என்று உலகம் உணர்ந்து கொள்வதற்கு முன்னால் பல கோடிக் கணக்கானவர்கள் பட்டினியாலும், நோயாலும், சர்வாதிகாரிகளாலும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

மார்க் ட்வைன் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவில் பயணம் செய்தவர். அது குறித்துப் பல பயணக்கட்டுரைகளையும் எழுதியவர். ரஷ்ய பிரபுக்களின் ஆடம்பர வாழ்க்கை முறைகளையும், அவர்களால் சைபீரியச் சிறைக்கனுப்பி வைக்கப்பட்டவர்களையும், ரஷ்யக் குடிமக்களின் வறுமையையும் மிகக் கசப்புடன் பகிர்ந்து கொண்டவர். அவரது ரஷ்யப் பயண நேரத்தில் சோஷலிஸ்ட்டுக்களைப் பற்றி கேள்விப்படுகிறார். அவர்களின் சித்தாந்தங்களையும் புரிந்து கொள்ள முனைகிறார். இறுதியில் அவர்கள் அளிக்கும் பொதுவுடமைத் தத்துவம் ஒன்றுக்கும் உதவாது என்று முடிவிற்கு வரும் மார்க் ட்வைன், “Communism is idiocy. They want to divide up the property. Suppose they did it — it requires brains to keep money as well as make it. In a precious little while the money would be back in the former owner’s hands and the communist would be poor again” எனக் கேலி செய்கிறார்.

oOo

ஒரு மனிதனின் வாழ்வில் பதினைந்து முதல் பதினெட்டு வயது வரையிலான பருவம் மிகவும் கடினமானது என்று நினைக்கிறேன். வறட்டுச் சித்தாந்தங்களும், தவறான புரிதல்களும் நம்மை எளிதில் ஆட்கொண்டுவிடும் வயது அது. அந்த வயதில் ஏற்படும் தவறானதொரு சிறிய சலனம் கூட நம்மைப் படுகுழியில், வன்முறைப் பாதையில் தள்ளிவிடலாம்.

அதிலும் எளிதில் உணர்ச்சி வசப்படுகிற, சினிமாப் பித்துப் பிடித்த தமிழ்நாட்டுப் பதின்பருவச் சிறுவர்களை வன்முறைப் பாதையில் திருப்பிவிடுவது மிகவும் எளிது. இலங்கைப் பிரச்சினையும், நக்ஸலைட்டுகளும் கொடிகட்டிப் பறந்த எண்பதுகளில் கருணாநிதி, கா. காளிமுத்து, வை. கோபாலசாமி போன்றவர்கள் இந்தப் பணியினைச் செவ்வனே செய்தார்கள். இன்றைக்கு செபாஸ்டியன் சைமன் (சீமான்), திருமாவளவன் போன்றவர்கள் செய்துவருகிறார்கள். வன்முறையைத் தூண்டி அதில் லாபமடைவது என்பது தமிழ்நாட்டில் நல்லதொரு தொழில். அதில் இவர்கள் விற்பன்னர்கள். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே இவர்களின் திருப்பணியே தவிர, உருப்படியான எந்தச் செயலும் இவர்களால் இங்கு நிகழ்ந்ததில்லை என்பது மறுக்கவியலாத உண்மை.

எண்பதுகளில் நக்ஸலைட்டுகள் பிரச்சினை தமிழ்நாட்டின் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் அதிகமிருந்தது. அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., வால்டர் தேவாரம் போன்ற போலிஸ் அதிகாரிகளின் துணையுடன் அதனை கொடூரமாக ஒடுக்கினார். பல நூற்றுக் கணக்கான நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.  மூளைச் சலவை செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இந்த இயக்கங்களில் இணைந்து தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தார்கள். ஒரு நக்ஸலைட்டாக மாறுவதிலிருந்து மயிரிழையில் தப்பிய அனுபவமும் எனக்கிருக்கிறது. வெறும் இருபது ரூபாய் இல்லாததால்.

நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு யாரோ ஒரு அச்சுக்கூட உரிமையாளர் பணம் தரவேண்டியிருந்தது. அவரால் அந்தப் பணத்தைத் திருப்பித் தர இயலாததால் தன்னிடமிருந்த அச்சுக்களை (அச்சு எழுத்துக்களை மட்டும்) வீட்டு உரிமையாளரிடம் கொடுத்திருந்தார். அதில் பணம் பார்க்க நினைத்த எங்கள் வீட்டு உரிமையாளர், பிற பிரிண்டிங்க் பிரஸ்களிலிருந்து திருமண அழைப்பிதல்கள், பிற சிறு அச்சு வேலைக்கான ஆர்டர்களை வாங்கிவருவார். அந்த வேலைகளுக்கு அச்சுக் கோர்ப்பதற்காக தோழர் “இராஜநாகம்(!)”  நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வருவார். ஒல்லியாக, வெற்றிலை குதப்பிய வாயுடன் இருந்த தோழர் “இராஜநாகம்” ஒரு நக்ஸலைட்டாக பின்னர் எனக்கு அறிமுகமானார். அல்லது ஒரு நக்ஸலைட்டாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். புரட்சிப் புத்தகங்களைப் படித்து, புரட்சி முழக்கங்களைக் நித்தம் கேட்டுக் கேட்டு, ஒரு புர்ச்சியாளனாக மாற வேண்டிய கனவுடன் இருந்த எனக்கு இராஜநாகம் ஒரு ஹீரோவானார்.

இன்றைக்கு இருப்பது போல “டெஸ்க் டாப் பப்ளிஷிங்” இல்லாத காலம் அது. காரீயத்தால் செய்யப்பட்ட எழுத்துக்களை ஒவ்வொன்றாகக் கையால் கோர்க்க வேண்டும். சள்ளை பிடித்த வேலை அது. ஒரு பக்கம் கோர்க்க இரண்டு நாட்கள் கூட ஆகலாம். அவ்வாரு கோர்த்த அச்சுக்களை ஒரு சிறிய அச்சு இயந்திரத்தில் வைத்து, அதில் மசி தடவிப் பிரிண்ட் செய்வார்கள். அதற்குப் புரூஃப் பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு இராஜநாகம் மிகவும் பிடித்துப் போனார். காம்ரேட் இன்னொரு காம்ரேடைக் கண்ட நாளது! வாழ்க புர்ச்சி!!

தினமும் மணிக்கணக்கில் கம்யூனிசக் கொள்கைகளைப் பற்றிப் பேசி கொள்வோம். அல்லது அவர் பேசுவார். நான் வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் கேட்டுக் கொண்டிருப்பேன். பேச்சோடு பேச்சாக தனக்குத் தமிழரசனைத் தெரியும் என்றார். (இந்தத் தமிழரசன் பண்ருட்டியின் முந்திரிக்காட்டுப் பகுதியில் பிரபலமாக இருந்ததொரு நக்ஸலைட். ஏதோவொரு கிராமத்து வங்கியைக் கொள்ளையடிக்கச் சென்று, கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டவர். அவருடன் இன்னும் நான்கு பேர்களையும் கிராமவாசிகள் கொன்றார்கள். அதெல்லாம் இரண்டொரு மாதத்திற்குப் பின்னர் நடந்த விஷயங்கள்.)

புர்ச்சியாளனாக மாற வேண்டிய உந்துதல் இராஜநாகத்தின் தூபத்தால் நாளுக்கு நாள் எனக்குள் அதிகமாகிக் கொண்டிருந்தது. என்னை உடனடியாக தமிழரசனிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவரைத் துளைக்க ஆரம்பித்தேன். பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்த இராஜநாகம் திடீரென்று ஒருநாள் “இன்றைக்குச் சாயங்காலம் ஒரு மீட்டிங்கிற்குப் போகிறோம் தோழர். தயாராக இருங்கள்” என்றார்.

வெடிகுண்டு தயாரித்த வழக்கில் சிறையிலிருந்துவிட்டு விடுதலையாகியிருந்த புலவர் கலியபெருமாள் என்பவரின் மீட்டிங் அது. பெரம்பூர் ஐ.சி.எஃப் ஃபேக்டரியின் வாசலுக்கு எதிரில் கூட்டம். என்ன காரணத்திற்காக அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார் என்ற காரணம் எனக்குத் தெரியவில்லை. கம்யூனிச சார்பு யூனியன்கள் நிறைந்த பகுதி என்பதற்காக இருக்கக்கூடும். மேடையில் கலியபெருமாளும், என் வயதினையொத்த நான்கைந்து இளைஞர்களும் இருந்தார்கள். மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. யாரோ ஒரு இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தான். கேட்பதற்குத்தான் யாருமில்லை.

அந்தத் தெருவெங்கும் போலிஸ்காரர்கள் மஃப்டியில் நின்று கொண்டிருந்தார்கள். நானும் இராஜநாகமும் ஒரு பெட்டிக்கடையில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தோம். மேடையிலிருந்த இன்னொரு இளைஞன் கலியபெருமாளிடம் இராஜநாகத்தைக் காட்டி ஏதோ சொன்னான். கலியபெருமாள் இராஜநாகத்தை நோக்கி ஒரு புன்னகை செய்தார். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. அப்போதே புர்ச்சியாளனாக மாறிவிட்ட சந்தோஷத்தில் மிதந்தேன்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த ஒரு மஃப்டி மெதுவாக எங்களருகில் வந்து நின்று, அப்பாவியாக “யாரு சார் அவரு. பெரிய ஆளாக இருப்பார் போலேருக்கே….” என்றார். இராஜநாகத்தின் முகம் மாறியது. பதிலளிக்காமல் என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டுப் போனார். அதன் பிறகு நான்கைந்து நாட்களுக்கு இராஜநாகத்தின் சுவடே தெரியவில்லை.

ஒருநாள் மதியவேளையில் அவசரமாக அச்சுக் கோர்க்கும் அறையிலிருந்து வெளியே கிளம்பிப் போய்க் கொண்டிருந்த இராஜநாகத்தை வாசலில் வைத்துப் பிடித்தேன்.

“என்றைக்கு என்னை தமிழரசனிடம் அழைத்துப் போகப் போகிறீர்கள் தோழர்?” என்றேன் எரிச்சலுடன்.

“இன்றைக்கு இரவு கிளம்பி லாரியில் பெண்ணாடத்திற்குப் போகலாம் தோழர். அங்கிருந்து மீன்சுருட்டிக்குப் போய் தமிழரசனைப் பார்க்கலாம். லாரி செலவிற்கு ஒரு இருபது ரூபாய் மட்டும் தேற்றிக் கொண்டு வாருங்கள். சாயந்திரம் வருகிறேன். யானைக் கவுனிக்குப் போய் அங்கிருந்து லாரி பிடிக்கலாம்….” என்று சொல்லியபடி அவசரமாக அங்கிருந்து அகன்றார் இராஜநாகம்.

என்ன பாடுபட்டும் என்னால் அந்த இருபது ரூபாயைத் தேற்ற முடியவில்லை. இரவு வெகுநேரம் வரை காத்திருந்தும் இராஜநாகம் வரும் சுவடே தெரியவில்லை. அன்று மட்டுமல்ல. அதற்குப் பிறகு இராஜநாகத்தை எங்கேயும் நான் சந்திக்கவில்லை. நாகம் ஏதோவொரு புற்றுக்குள் புகுந்து காணாமல் போய் விட்டது.

என் வாழ்க்கைப் பயணமும் இன்னொரு கிளையை நோக்கித் திரும்ப ஆரம்பித்தது.

0 Replies to “செஞ்சிவப்புச் சிந்தனைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.