கவிதை வந்து விழும் கணம்
கவிதை வந்து விழுகின்ற கணத்தில்
காலம் இடம் களைந்து
நிர்வாணமாவதே முதல் வினை
கனவுக்குள் அமிழும் கணம்தோறும்
உடைகள் உதிர்கின்றன
பறந்து வந்து இறங்கும்
உதிரிச்சொற்கள்; ஒவ்வொன்றும்
கவிதையை நோக்கி கைகாட்டிவிட்டு
அதிர்வின்றி அமர்கின்றன
தும்பிகளைப்போல
வயதும் பாலும் குணமும் கலைகிறது
உதிரிச்சொற்கள் ஒளியிழக்கின்றன
மொழியும் உதிர்கிறது பதட்டமாகிறேன்
அகமும் உடைந்து
ஒவ்வொரு சில்லும் உருகிட
‘நான்’ கலைந்து இருண்டபின்
கவிதை மட்டும் இருந்தது
நீண்ட இடைவெளிக்குப்பின்
பிசுபிசுவென்ற திரவத்திற்குள்
எங்கோ துடிக்கிறது இதயம்
உயிர்பிக்கும் ஒரு பெருமூச்சிற்குப் பிறகு
கனவை உடைத்துக்கொண்டு
வெளியேறி
சிதறிக்கிடக்கும் உதிரிச்சொற்களின்
கோடிட்ட இடங்களை
வலிந்து நிரப்புகிறேன் – ஒரு
பயணக்கட்டுரையைப் போல.
மீண்டும் காத்திருக்கிறேன் – தானே
ஒரு கவிதை வந்து விழும் கணத்திற்காக.