இருபத்தோராம் நூற்றாண்டில் படைப்பிலக்கியத்தைத் தனதாகச் சுவீகரித்துக்கொண்டு தழைத்துக் கிளைபரப்பியிருக்கும் ‘தன்னை எழுதுதல்’ (Ecriture de soi) எழுத்து வகைமைக்குக் காரணங்கள் பல. ஆனால் அதன் வேர் இருத்தலியலும் அதன் மீதான விசாரணையும் என்பதைத் தொடக்கத்திலேயே அழுந்த பதிவு செய்துவிடலாம்.
எழுத்துக்கு வேர் பேச்சு எனில், தன்னை எழுதுதலுக்குத் ‘தன்னைப் பேசுதல்’. மனித வரலாற்றின் தொடக்கத்தில் பேச்சாளனும், பின்னர் எழுத்தாளனும் வருகிறார்கள். மேடையில் ஊரறிய அல்லது நாலுபேரிடம் தனது சுபகீர்த்திகளைச் சொல்லப்பழகியவனுக்குத் தனது அபகீர்த்தியினை, தனது அகவெளியின் அழகுகளை, ஆபாசங்களைப் பகிர்ந்துகொள்ள அல்லது தனியொருவனாக மனதிற்படுகிற வதைகளுக்கு வடிகால் தேடிக்கொள்ளத் ‘தன்னைப் பேசுதலைத்’ தொடக்கத்தில் இரண்டொருவரிடம் தொழிற்படுத்தியிருக்கவேண்டும். மனிதன் எழுதத்தொடங்கியபோதே ‘தன்னை எழுதுதல்’ பிறக்கவில்லை, அது பைய வளர்ந்ததால் நெடிய வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. தனது அந்தரங்கங்களை இரண்டொருவரிடம் வாய்மொழி ஊடாகப் பகிர்ந்துகொண்ட ஆரம்பகால மனிதன், தற்போது முச்சந்தியில் கூச்சமற்று பறைகொட்டித் தெரிவிக்கிறான். கொண்டாடப்படவேண்டியவற்றை மட்டுமல்ல பழிக்கஞ்சவேண்டியவற்றையும் பகிர்ந்துகொள்கிறான். இதற்கு அசாத்திய துணிச்சல் தேவை.
சமயங்கள் கோலோச்சிய காலத்தில் (இன்றுங்கூட?) ‘தன்னை உரைத்தலின்போது’ கேட்கிறவனிடம் மண்டியிடவேண்டியிருக்கிறது, இவனுக்கும் கேட்பவனுக்குமான உறவு ‘கீழ்-மேல்’ என்ற நியதிக்குரியது. ‘கீழ்’ அசுத்தம், மேல் சுத்தம்; பாவசங்கீர்த்தனம் செய்கிறவன் பாவி, ஈனப்பிறவி. கேட்பவன் இவனை உய்விக்க வந்தவன், ஒருவகையில் இரட்சகன். வாய்மொழியின்போது கேட்போரின் முகபாவங்களை நேரில் எதிர்கொள்கிற இக்கட்டுகள் உண்டு, எழுத்தில் அவ்வாறான சங்கடங்கள்கூட இல்லை. பேச்சு ஊடாக இரண்டொருவர் பகிர்ந்துகொண்ட இவனது ‘சுயம்’, எழுத்து ஊடாக நூறு, ஆயிரம், இலட்சம்பேர்களைச் சென்றடையும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவ்வாசிப்புக்கூட்டத்தில் இவனோடு சமதளத்தில் நிற்பவர் அநேகர். எழுத்தில் வாசிக்கிற அந்த ‘அநேகரை’ படைக்கிறவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வாசிக்கிற அவர்களுக்கும் இவன் யாரென்ற கேள்வி அத்துணை முக்கியமல்ல. ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதுபவன் வாசகனிடம் நூலை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்கிறான். இன்று ஊடகமும் தொலைத்தொடர்பு சாதனங்களில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியும் கூடுதல் துணிச்சலை(?) தருகின்றன. ” சங்கடங்கள் காரணமாக மாடியிலிருந்து குதித்து இன்று காலை தற்கொலை செய்துகொள்ள இருக்கிறேன்” என முக நூலில் எழுதும் பதின்பருவத்தினர் உள்ள காலமிது.
தன்னை எழுதுதல் இன்று பல உட்பிரிவுகளைக் கொண்டு மேற்குலகில் இயங்குகிறதென்ற போதிலும் பொதுவில் அதனைச் சுயவரலாறு, சுயபுனைவு என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். இவ்விரண்டுள் சுயவரலாறு மூத்தது; 19ம் நூற்றாண்டு அதன் தொடக்கமென இலக்கியவரலாறுகள் தெரிவிக்கின்றன. இச்சுயவரலாறு என்பது நாம் அதிகம் வாசித்திருக்கிற …… அன்னாருக்கும் இன்னாருக்கும் தை திங்கள்…. மகவாய்ப் பிறந்தேன் என ஆரம்பித்து உத்தமர்களாகவும் சாதனையாளர்களாவும் தங்களை வெளிஉலகிற்குக் கற்பிதம் செய்யும் உயர்வு நவிற்சி அணி வகைப்பாடு அல்ல, தங்கள் வாழ்க்கையை உள்ளபடி விளங்கச்சொல்வது, நடந்ததை நடந்தவாறு சொல்வது:
“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்”
எனத் தண்டிலங்கார ஆசிரியர் பொருளுரைப்பதை இங்கே நினைவுகூரத்தக்கது.
என்றைக்கு மனிதன் தனது வாழ்க்கையைப் பிறர் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டானோ அன்றைக்கே அவனது சுய விருப்பு வெறுப்புகள் முக்கியம் இழந்தன. தனது உணர்ச்சிகளைச் சிரைத்துக்கொண்டு வாழவும், அறிவுகொண்டு உணர்ச்சிகளை வெல்லவும் போதித்தார்கள், ஒழுக்கத்தையும் கற்பையும் கட்டாயம் ஆக்கினார்கள், அவற்றையெல்லாம் அறநூல்கள் என்றார்கள். குடும்பமும், சாத்தியமற்றவிடங்களில் சமயங்களூம் உட்புகுந்தன. கடவுள், ஊழ், சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்கள் கொண்டு மனிதர்களை அச்சுறுத்தி அவர்களின் ‘தான்’ உணர்வினைப் பொசுக்கி இருக்கிறார்கள். ‘நான்’ என்ற சொல் கர்வத்தின் குறியீடென்றும் கடவுளிடமிருந்து மனிதனை அப்புறபடுத்திவிடுமென்றும் திரும்பத் திரும்பப் போதித்தார்கள். புலன்களையும் அதுசார்ந்த உணர்ச்சிகளையும் தனது கட்டுக்குள் வைத்திருப்பது திருமடங்களின் வாழ்க்கை நெறி, அனைத்தையும் துறந்தவர்களே கடவுட் சேவைக்கு உகந்தவர்கள்.பாவசங்கீர்த்தனங்கள் கூட மனிதர்களின் சுயபரிசோதனைகளுக்கு உதவவில்லை. இக்கட்டத்தில்தான், எங்கே கதவுகள் அடைக்கப்பட்டனவோ அங்கிருந்தே ‘தன்னை எழுதுதல்’ சுயவரலாறுகளுக்கு முன்பாகத் தோன்றின.
செயிண்ட் ஆகஸ்டீன் என்பவர் எழுதிய ‘பாவசங்கீர்த்தனம்’ (confession -Saint Augustin), மோந்தேஞ் என்பவரின் சுய பரிசோதனை (Les Essais – Michel de Montaigne), மிஷெல் தெ மரோல், ரெட்ஸ் கார்டினல் ஆகியோரின் ‘நினைவுகள்’ (Mémores) போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். பக்தி இலக்கியத்திலும், சித்தர் பாடல்களிலும் உதாரணங்கள் சொல்ல நமக்கு நிறைய இருக்கின்றன. இவர்கள் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் குருமார்கள், தேவ இரட்சகனின் பிரதிநிதிகள். அவசியம் என்கிறபோதெல்லாம் மேய்ப்பவனிடம் இந்த ஆடுகளுக்கு முறையிடும் வாய்ப்புகள் இருந்தன. எனினும் பாவங்கள் அரிப்பிலிருந்து நிவாரணம் தேடவேண்டிய நெருக்கடியும் அவர்களுக்கு இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து, இலக்கிய வாதிகள் உள்ளே நுழைகிறார்கள். பிரான்சு நாட்டில் ஷத்தோபிரியான், லமார்த்தின், கஸனோவா போன்றோர்குறிப்பிடவேண்டியவர்கள். இவர்கள் அனைவரும் என்ன பெயரிட்டு அழைத்திருப்பினும், எழுதுபொருள் அவர்கள் வாழ்க்கைப்பற்றிய ஆவணங்களாக, சாட்சியங்களாக, நினைவூட்டல்களாக இருக்கின்றன.
எனினும் தன்னை எழுதுதலை தெளிவுபடுத்திய முதலாவது இலக்கியவாதி (பிரெஞ்சு இலக்கிய உலகைப் பொறுத்தவரை) ரூஸ்ஸோ. செயல்பாடுகளால் மனிதர்கள் கட்டமைக்கப்படுகிறார்கள் என நம்பும் இருத்தலியல் வாதிகளான சார்த்துருவும் சிமோன் தெ பொவாருங்கூட (2) ‘நான் ‘ ‘எனக்கு’ என்று உருவெடுக்கும் கருத்தியத்தின் அடிப்படையிலேயே தங்கள் இருத்தல் சுயவரலாற்றை எழுதினார்கள், ஆனால் அங்கு ‘இருத்தல்’ ‘சாரத்திற்கு- முந்தையது என்பதை வலியுறுத்த ‘தன்முனைப்பு’ தன்னைத்தானே விடுவித்துக்கொண்டதும் நடந்தது. தன்னை எழுதுதல் புதிய பாய்ச்சலுடனும், புதிய பரிமாணங்களுடனும் தழைத்தகாலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சிக்மண்ட் பிராய்டு உருவாக்கிய உளவியல் பகுப்பாய்வு பெரும் அளவில் உதவியது, காரணக் காரிய தர்க்கவியலை மறுத்து; உயிர்வாழ்க்கையில் வடுவாக நின்றுபோன சம்பவங்களைக் கணக்கிற்கொள்ளாமல்; சிறுகச்சிறுக ஆன்மா (3) (subject) கட்டமைத்துக்கொள்ளும் உள்ளுடம்பை (Subjectivity) அதன் பண்பை சிறப்பித்தது. சுயவரலாறு என்பது ஒரு மனிதர் அல்லது பெண்மணியின் வாழ்க்கையில் சம்பவித்த மறக்கவியலாத தருணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதென்றும், சம்பந்தப்பட்ட மனிதர்களின் அகவய பண்புகளைக் கட்டமைப்பதே அதன் முழுமையான நோக்கமென்றும் கருதுகிற சிந்தனை வலுவுற்றது இக்காலக்கட்டத்தில்தான். In Search of Lost Time (தொலைத்த காலத்தைத் தேடி) புகழ் இலக்கியவாதி மர்செல் புரூஸ்ட்(Marcel Proust) தன்னை எழுதுதலில் புதிய விந்தையை நிகழ்த்தியிருந்தார். ‘தன்னை’ விசாரணக்கு உட்படுத்தித் தனது செயல்பாடுகளுக்கான ‘காரணக் காரியத்தை’ ஆய்வதுதான் தன்னை எழுதுதலில் அவர் அறிமுகப்படுத்தும் வகைமை. இம்ப்ரெஷனிஸ ஓவியர்கள், “மேலோட்டமாக நாங்கள் வரைந்த ஓவியத்தை மட்டும் பார்க்காதீர்கள், அந்த ஓவியங்கள் ஊடாக எங்கள் கண்களைப் பாருங்கள்” – என்றார்கள். சுயவரலாற்றிலும் அது நிகழ்ந்தது அங்கே கதைமாந்தர் இடத்தைக் கதைசொல்லி அபகரித்துத் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். அமைப்பியல் வாதத்தின் பங்கும் இதிலுண்டு, அவர்கள் தன்னை எழுதுதலைக் குறியியல் பரிணாமமாகப் பார்த்தனர். “தன்னைப் பற்றிய புனைவில்” ‘படைப்பு -ஆளுமை நிறமிழக்கிறது, ‘சுயவரலாறு’ அல்லது ‘தன் சரித்திர’த்திடம் அவன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் தன்னை உரசிப்பார்க்க அவனுக்கு உதவுகிறது. அதனால் யார் எழுதியது? எழுதியவரின் ஆளுமை என்ன, வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்குள்ள கவர்ச்சிகள் குறைந்து, உண்மைகள் என்று சொல்வதைத் (மேன்மை கீழ்மையை) தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைப் பிறரிடம் தூண்டுகிறது. இதில் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும் தொடக்கத்தில் கூறியதுபோன்று சுயசரிதைகளில், “எழுதுபவரைத் தேடுவதாகப் பாசாங்குசெய்து, வாசகர்கள் தம்மைத் தேடுகிறார்கள்” என்பதே உண்மை. தன்னை எழுதுவதென்பது சில வேளைகளில் தன்னைச் சொல்வது, தன்னை விவரிப்பது. தனது நம்பிக்கையை, தனது அவநம்பிக்கையைப் பேசுவது:
” எப்படியாச்சும் ஒரு நல்ல வேலையைத் தேடிகிட்டு, சுயமா சம்பாரிச்சுகிட்டு யாரையுமே எதிர்பாராமே நம்ம காலுலே நாமே நிக்கனும்னு அவளுக்குள்ள தீர்மானமா ஒரு முடிவெடுத்துக்கிட்டா” ( மனுசி – பாமா பக்கம்- 19)
“முன் வாசல் படி இறங்கும்போது அவன் விட்டுவிட்டு வள்ளியின் முகத்தைப் பார்த்தான். அவளை அணைத்து அவள் முகத்தில் முத்தம் இட வேண்டுமென்று பாலுவுக்குத் தோன்றிற்று” ( குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி; பக்கம் 595)
” ஒரே ஒரு கருத்தை என் மனது சுற்றுகிறது. ஆனால் இந்த மையத்தில் புலையர்கள் உயிருள்ள மனிதர்களாக இன்னும் எனக்குத் தென்படவில்லை. மறையும் மாலைப் பொழுதில் வரும் நீளமான நிழல்கள், தொலைவிலேயே நின்று கேட்டுக்கொண்டிருக்கும் கருப்பு நிழல்கள்….இரவு எப்படிப் புணர்கின்றன, எப்படி யோசிக்கின்றன. குழந்தைகளை எப்படிக் கொஞ்சுகின்றன, எப்படி அழுகின்றன -எதுவுமே தெரியாது. பெயர்களே மறந்து போகின்றன. யார் பிள்ளன், யார் கரியன், யார் முத்தன்… ( பாரதிபுரம் – யு.ஆர். அனந்தமூர்த்தி; பக்கம் -166)
மேற்கண்ட உதாரணங்களிலிருந்து “மேற்கத்தியர்கள் மட்டுமே ‘தன்னைஎழுதுதலில் பங்கெடுத்தவர்கள்” என்ற கருத்தை மறுக்க முடிகிறது. ஆனால் மேலை நாட்டினரோடு ஒப்பிடுகையில் இது குறைவுதான். தவிர ஒரு பார்வையாளனாகத் தன்னை வைத்து நாவலைப் படைக்கிறபோதே புனைவில் இடம்பெறும் ஒவ்வாமைகளைப் படைப்பாளியோடு இணைத்துப் பார்க்கும் மனநிலைகொண்ட இந்தியச்சமூகத்தில் இதுவே அதிகம். தவிர இங்கே ‘தன்னை எழுதுதல்” என்ற முயற்சியே கூட ஒர் இந்தியத் திரைப்படகதைநாயகனை முன்னிறுத்துவதுபோன்ற பாமரத்தனமான செயலாக இருக்குமே ஒழிய, ஓர் உள்ளுடம்பின் உண்மையான ஆளுமையைப் (அழுக்குகளையும் சேர்த்து) புரிந்துகொள்ள வழிவகுக்காது. இதற்கு ஒரு வகையில் போலியான ஒரு மரபைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியச் சமூகமும் பொறுப்பு. செர்ழ் தூப்ரோஸ்கி (Serge Doubrovsky) ஒரு பிரெஞ்சு படைப்பிலக்கியவாதி, விமர்சகர், பிரெஞ்சு மொழி பேராசிரியர் “தன்னை எழுதுதல் குறித்த தெரிவித்தது: “எழுத்தாளன் இறந்தாலென்ன? அவனுக்கு மறுபிறவியை ஏற்படுத்தித்தரத் ‘தன்னை எழுதுதல்’ இருக்கிறதென” கூறியவர். அவருக்கு “அச்சடித்த காகிதத்தளத்தில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்தித் தரும் சந்திப்பே ‘தன்னை எழுதுதல்’. அவருக்கு முன்பாக எழுத்தாளன் இறக்கிறான் என அறிவித்திருந்த ரொலான் பர்த், தூப்ரோஸ்கி கூற்றை வழிமொழிவதுபோல “ரொலான் பர்த் பற்றி ரொலான் பர்த்” என்ற தமது சுயசரிதையை எழுதி மறுபிறவி கண்டதை இங்கே குறிப்பிடவேண்டும்.
——————————————————————
1. Cd. Page 46 -Le magazine Littéraire Avril 2013
2. Les Mots – J.P. Sartre, Mémoires d’une jeune fille rangée
3. உளப்பகுப்பாய்வில் Subject, subjectivityஎன்ற இரு சொற்களுக்கும் சரியான தமிழ்ச் சொற்களைக் கையாளுவது அவசியமாகிறது. Subjectஎன்கிற சொல் உளப்பகுப்பாய்வின் படி ஓர் ‘being’ (உயிருரு). எனவே தமிழில் உளப்பகுப்பாய்வு பொருளில் ‘Subject’ஐ குறிக்க ‘ஆன்மா’பொருத்தமானது. அதுபோல ‘Subject’தன்னில் கட்டமைக்கும் ‘subjectivity’ஐ ‘சூக்கும சரீரம்’ அல்லது ‘உள்ளுடல்’ எனலாம் அதை ‘அகநிலை’ (தற்போது அநேகர் உபயோகிக்கும் சொல்) என்ற சொல்லால் குறிப்பிடுவது உளப்பாகுபகுப்பாய்வு பொருளுக்கு ( அதற்கென உள்ள கராதிகளைப் பார்க்கவும்) எவ்விதத்திலும் பொருந்தவில்லை. அதுபோலப் பிறரிடம் அல்லது வெளி உலகிடம் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள Subject எடுக்கும் உருவமே உளப்பகுப்பாய்வின்படி ‘Object’. அதனைக் குறிக்க வழக்கிலுள்ள ஸ்தூல சரீரம் அல்லது ‘வெளியுடல்’ இரண்டிலொன்றை பாவிக்கலாம்.