முதன்முறை செய்யப்பட்ட ஆராய்ச்சி பற்றிய அறிக்கை ஒன்று நம் பதிப்பாசிரியர் குழு முன் சமர்ப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட இத்தருணம், அன்று விரிவாக விவாதிக்கப்பட்ட ஒரு கேள்வியை மீண்டும் எழுப்ப வேண்டிய சரியான தருணமும் கூட: ”அறிவியல் ஆய்வுகளின் எல்லைகள் மனிதர்களின் அறிதிறனுக்கு அப்பால் நகர்ந்துவிட்ட யுகத்தில் மனித விஞ்ஞானிகள் செய்யக் கூடியது என்ன?”
நம் சந்தாதாரர்களில் பலர், தாம் படித்த கட்டுரைகளை எழுதியவர்கள், தம் ஆய்வுகளின் வழியே வரலாற்றிலேயே முதல் முறையாகக் கண்டு பிடித்த விளைவுகளை விவரித்த ஆய்வாளர்களாகவும் இருந்ததை நினைவு வைத்திருப்பார்கள் என்பதில் ஐயம் இருக்கத் தேவையில்லை. ஆனால் சோதனைவழி ஆராய்ச்சிகளில் மீ-மனிதர்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கிய பின், அவர்கள் நாளாவட்டத்தில் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை எ.ந.ப(எண்முறை நரம்புவழிப் பரிமாற்றம்) மூலமாக மட்டுமே வெளியிட்டனர் என்பதால், ஆராய்ச்சி பத்திரிகைகள் அந்த ஆராய்ச்சி முடிவுகளை இரண்டாம் கைத் தகவலாக மனித மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதை மட்டுமே செய்யும் நிலைக்கு வந்தன. எ.ந.ப முறை இல்லாது போனால், மனிதர்களால் முந்தைய ஆராய்ச்சிகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ, மேற்கொண்டு ஆய்வுகள் செய்யத் தேவையான புதிய கருவிகளை நல்ல பயன்பாட்டு முறையில் பிரயோகிக்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்; அதே நேரம், மீ-மனிதர்கள் தங்கள் எ.ந.ப முறைகளை மேலும் செம்மையானதாக்கி, அதை முன்னைவிட அதிகமாக உபயோகிக்கத் துவங்கினர். மனிதர்களின் வாசிப்பிற்கான ஆராய்ச்சிப் பத்திரிக்கைகள் மீ-மனிதர்களின் ஆராய்ச்சி குறித்துப் பேசும் பரப்பியல் ஊடகங்களாகச் சுருங்கி, அதிலும் சோபிக்காமல் போயின, ஏனெனில் மிகச் சிறந்த மனித அறிவாளிகளால் கூட மீ-மனிதர்களின் சமீபத்து ஆராய்ச்சி முடிவுகளை மொழிபெயர்ப்பில் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

மறை உரை பகுப்பியல் துவக்கத்தில் பிரபலமாக இருந்ததன் காரணம், அப்போதே பல டெராபைட்கள் அளவில் இருந்த மீ-மனிதர்களின் ஆராய்ச்சி வெளியீடுகளின் மொழிபெயர்ப்புகள் பூடகமாக இருந்த போதிலும், அவை முற்றிலும் பிழையானவை இல்லை என்று கருதப்பட்டிருந்ததே. இந்த மொழிபெயர்ப்புகளிலிருந்து அர்த்தமுள்ள தகவல்களைக் கண்டுணரும் பணி, தொல்காலப் பிரதிகளை அர்த்தப்படுத்தும் பணியைப் போன்றதே அல்ல, ஆனாலும் இதில் முன்னேற்றம் இருக்கிறது : சமீபத்திய ஆராய்ச்சிகள் பத்து வருட முந்தைய ’உடலுறுப்பு மாற்று-சகிப்பு மரபணுவியல்’ குறித்த ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு ஹம்ப்ரீஸ் என்பார் கண்டுணர்ந்த உரையின் சரிதன்மையை உறுதிசெய்திருக்கிறது.
மீ-மனிதர்களின் அறிவியல் சார்ந்த உபகரணங்கள் கிடைத்தபோது கலைப்பொருள் உரையியல் துறை உருவானது. இந்த கலைப்பொருட்களுக்கு போட்டியாக உபகரணங்களை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் செயல்படாமல், அவற்றின் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் இயக்க விதிகளை மட்டும் அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இந்த கலைப்பொருட்களை ‘மறுதலைப் பொறியிய’லுக்கு உட்படுத்தினர். இப்படி நுண்பொறிச் சாதனங்களை ஸ்படிகவியல் ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றின் அணுவளவு அமைப்பை அறியும் ஆய்வுகளால், எந்திரக் கூட்டமைப்பியல் குறித்த புதிய அறிதல்கள் சாத்தியமாகின்றன.
தொலை உணர்தல் மூலம் மீ-மனிதர்களின் ஆராய்ச்சிக் கூடங்கள் குறித்து அறிதலே சமீபத்தியதும், முந்தைய ஆய்வுகளைவிட மிகுந்த ஊகங்களை உள்ளடக்கியதாகும். கோபி பாலைவனத்திற்கு அடியில் நிறுவப்பட்டுள்ள புற மோதியுடைப்பான் எனும் இயந்திரம் தான் சமீபத்திய ஆய்வின் குவிமையம். இந்த இயந்திரம் வெளியிடும் நியூட்ரினோவின் சுவடுகள் புரிந்துக் கொள்ள கடினமானதாகவும், மிகுந்த சர்ச்சைக்குரியதாகவும் இருந்தன.(வழக்கம் போல், நியூட்ரினோக்களை கண்டுபிடிக்க உதவும் அந்த கையடக்க கருவியும் மீ-மனிதர்களின் கண்டுபிடிப்பே. அக்கருவியின் இயக்கவிதிகள் இன்னும் மனிதருக்குப் பிடிபடவில்லை.)
இப்போது நம் முன் எழும் கேள்வி, விஞ்ஞானிகளுக்கு இத்தகைய பணிகள் பயனளிக்கக்கூடியவையா? ஐரோப்பாவின் எஃகு இரும்பாலான கருவிகள் புழக்கத்துக்கு வந்து விட்ட காலத்தில் அமெரிக்க பூர்வகுடிகள் வெண்கலத்தை உருக்கும் முயற்சியில் ஈடுபட்டதை நம் விஞ்ஞானிகளின் முயற்சிகளுடன் ஒப்பிட்டு, இதைக் கால விரயம் என்று முடிவு செய்கின்றனர். மனிதர்கள் மீ-மனிதர்களுடன் தொழில்நுட்பப் போட்டியில் இறங்கியிருந்தால் இந்த ஒப்பீடு சரியானதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய அபரிமிதப் பொருளாதாரக் காலகட்டத்தில் இத்தகைய போட்டிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை. உண்மையைச் சொன்னால் – உயர்-தொழில்நுட்பத்தைக் கொண்ட ஒரு கலாச்சாரத்தால் செரிக்கப்படும் (அல்லது) அழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் எந்த ஒரு தாழ்-தொழில்நுட்ப கலாச்சாரத்தையும் போலில்லாமல், மனித இனம் தற்போது பாதுகாப்பாகவே இருக்கிறது.
இன்று வரை வளர்ந்த மனித மூளையை மீ-மனிதர்களின் மூளையாக உயரச் செய்யும் வழி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு மனிதக் கரு தன் நரம்புத் திசுக்களை உருவாக்கத் துவங்கும் முன்பே துவங்கவேண்டிய சுகிமோட்டோ மரபணு சிகிச்சையால் மட்டுமே மனித மூளையை எ. ந. ப முறைக்கு ஏற்றதாக மாற்ற முடியும். இதனால் மீ-மனிதக் குழந்தையை பெற்றெடுக்கும் மனிதப் பெற்றோர்கள் முன் உள்ள தேர்வு கடினமான ஒன்றாக ஆகிறது : தன் குழந்தை மீ-மனித கலாச்சாரத்துடன் பழகுவதை அனுமதிப்பதன் மூலம் தன் குழந்தையின் வளர்ச்சியை தாங்களே புரிந்து கொள்ளமுடியாத பெற்றோராக அவதியுறுவது அல்லது குழந்தையின் இளம்வயதிலேயே மீ-மனிதர்களுடனான தகவல் பரிமாற்றத்தை அனுமதிக்காமல் வளர்ப்பது. அது மீ- மனிதர்களைப் பொறுத்த வரை அவர்களை கஸ்பர் ஹவுசர் போல் குறைபாடுள்ளவர்களாக வளர்ப்பதற்குச் சமம். சமீப காலங்களில், தங்கள் குழந்தைகளுக்கு ஷுகிமோட்டோ மரபணு சிகிச்சைக்கு உட்படுத்தும் மனித பெற்றோர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்யத்திற்கு வந்துவிட்ட தில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இதனால், எதிர்காலத்தில் மனித கலாச்சாரமும் அதன் முக்கிய கூறான அறிவியல் பாரம்பரியமும் நல்ல முறையில் உயிர்த்திருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மறை உரை பகுப்பியல் என்பது, அறிவியல்சார் விசாரணையின் விதிகளுக்குட்பட்ட முறையான துறையாக இருப்பதால், நேரான விஞ்ஞான ஆராய்ச்சியைப் போலவே மனித அறிவின் எல்லையை விஸ்தரிப்பதில் அதுவும் உதவும். மனிதர்களுக்கு வாய்க்காத மேன்மைகளைப் பெற்றிருக்கும் மீ-மனிதர்களுக்கு மனித குலத்தின் பிரச்சனைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய கருவிகளை மனிதர்கள் தங்கள் ஆராய்ச்சிகள் வழியாகக் கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, நம் ஆராய்ச்சி வேறுவித நுண்ணறிவு-மேம்படுத்தி சிகிச்சையைக் கண்டுபிடிக்கக் கூடிய சூழலைக் கற்பனை செய்து பார்த்தால், அச்சிகிச்சை மூலம் மனிதர் தங்கள் அகத்தை கொஞ்சம் கொஞ்சமாக ’மேம்படுத்தி’ தம்மை மீ-மனிதர்களுக்குச் சமமான நிலைக்குக் கொண்டு செல்லமுடியும். இத்தகைய ஒரு சிகிச்சை, நம் உயிரின வரலாற்றிலேயே மிகப்பெரியதான இந்தக் கலாச்சார இடைவெளியை கடக்கும் சாத்தியத்தை நமக்கு தரமுடியலாம். இந்த கலாச்சார இடைவெளியை கடக்கும் சாத்தியத்தை ஆராய மீ-மனிதர்களுக்கு தோன்றாமலே போயிருக்கலாம். இந்த ஒரு சாத்தியப்பாடு மட்டுமே மனிதர்கள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொள்வதை நியாயப்படுத்தப் போதுமானது.
மீ-மனிதர்களின் விஞ்ஞான சாதனைகளைக் கண்டு நாம் மிரள வேண்டியதில்லை. நாம் என்றுமே ஒரு விஷயத்தை நினைவு கொள்ள வேண்டும் : மீ-மனிதர்கள் உருவாகக் காரணமான தொழில்நுட்பங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே. மேலும், கடந்த காலத்தில் அவர்கள் நம்மை விடத் திறமைசாலிகளாக இருந்ததில்லை.
(முற்றும்)
Photo Courtesy : Book Cover of Ted Chiang’s ‘Story of your life & Others’
ஆங்கில மூலம் : “The Evolution of Human Science“, by Ted Chiang
சொற் களஞ்சியம்
மீ – மனிதர்கள்- Metahumans
எண்முறை நரம்பு வழிப் பரிமாற்றம் (எ.ந.ப) – Digital Neural Transfer (DNT)
மறை உரை பகுப்பியல் – Hermeneutics
பிரதி உரை பகுப்பியல் – Textual hermeneutics
மறுதலைப் பொறியியல்- Reverse Engineering
ஸ்படிகவியல்- Crystallography
எந்திரக் கூட்டியல் – mechanosynthesis
உடலுறுப்பு மாற்று-சகிப்பு மரபணுவியல் – histocompatibility genetics
நுண்பொறி சாதனங்கள் – nanoware appliance