[stextbox id=”info” caption=”எழுத்தாளரின் உபாதைகளும் ஆய்வுக்குகந்த தர்க்கங்களும்”]
இது ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றிய கட்டுரை. மனிதருக்கு 25 வயதிலிருந்தே கடும் கண் நோய். 48 வயதுக்குள் அவருடைய இடது கண்ணில் 800 இல் ஒரு பங்குதான் செயல்பட்டதாம். இன்னொரு கண் 30 இல் ஒரு பங்குதான். அவருடைய கண்ணாடியின் சக்தி +17 இரண்டு கண்ணிலும். பிறர் எழுத்து, கடிதங்களை உருப்பெருக்கும் கண்ணாடி கொண்டுதான் அவரால் படிக்க முடிந்ததாம். வாழ்நாளில் பெரும்பகுதி நோய்வாய்ப்பட்டே காலம் கழித்திருக்கிறார் ஜேம்ஸ் ஜாய்ஸ். 58 வயதில் இறக்கும்போதும் வயிற்றுப் புண்ணால் இறந்திருக்கிறார். இத்தனை பிரச்சினைகளோடு அவர் எழுதியவையோ அசுர சாதனை என்று சொல்லப்படக் கூடிய வகை நாவல்கள், சிறுகதைகள்.
கட்டுரை ஐரிஷ் ஆய்வாளர்களுக்கும், இங்கிலிஷ்/ அமெரிக்க ஆய்வாளர்களுக்குமிடையே நடந்த, நடக்கிற கடும் சர்ச்சைகளைப் பற்றியும் பேசுகிறது. கடைசியில் கட்டுரையாளர், ஜாய்ஸுக்கு இருந்த உபாதைகளெல்லாம் அவருக்கு மேகநோய் (ஸிஃபிலிஸ்) இருந்திருக்கிறது, அதற்கு அப்போது இருந்த சிகிச்சைகளெல்லாம் ஆர்ஸெனிக் போன்ற கடும் விஷங்கள் சேர்ந்தவை, அதில் ஒரு சிகிச்சை அவருக்கு வாழ்நாள் பூராவும் கண்நோயைக் கொடுத்தது என்று முடிவு சொல்கிறார்.
இறுதியில் வாசகர்களின் மறுவினை என்ன என்று பார்த்தால், ஒருவர் ஐரிஷ்காரர்களுக்கு கத்தியெடுத்துச் சண்டை போட யாராவது ஒரு புனிதர் காரணமாக இருக்க வேண்டும். அது ஜாய்ஸாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை அவர் எழுதியதெல்லாம் வெற்றுச் சாணி என்று சொல்லித் தன் அபார புத்திசாலித்தனத்தைப் பறைசாற்றுகிறார்.
என்னதான் ஹார்பர்ஸ் மந்திலி பத்திரிகையாக இருந்தாலும், வாசகர் தரம் அப்படி எல்லாம் உயர்ந்து விடுவதில்லை என்று கொள்வதா, அல்லது என்ன உயர் தரமான வாசகர் கூட்டத்திலும் நாகரீகமற்றுப் பேசிக் கடாசுவதற்கென்று ஓரிருவர் இருப்பதே சகஜம் என்று கொள்வதா?
ஜாய்ஸ் துன்பப்பட்டதற்கு என்ன காரணம் என்று ஆய்ந்து சுமார் எட்டு புத்தகங்கள் வந்து விட்டதாகக் கட்டுரையாளர் சொல்கிறார். நம் ஊரில் எழுத்தாளர்களைப் பற்றி அப்படி எல்லாம் ஆய்ந்து யாரும் எழுதுவதில்லை என்று நாம் ஒருபுறம் குறைப்படுகிறோம், இப்படி ஆய்ந்து தொல்லைப்படுத்தாமல் விடுகிறார்களே என்றும் ஆசுவாசப்படலாமோ?
http://harpers.org/blog/2014/07/on-joyce-and-syphilis/
[/stextbox]
[stextbox id=”info” caption=”அறிபுனை ஆக்கங்களில்தான் விவசாயிகளை செல்வந்தராக்க முடியும்”]
மோடி அரசு பதவி ஏற்றதும் நாட்டில் பாலாறு ஓடும், மாருதம் வீசும், மரங்களிலிருந்து தேன் சொட்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஏதோ குறைந்த பட்சம் செயல்படும் அரசு ஒன்று கிட்டும், மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றுதான் எதிர்பார்த்தார்கள்.
ஆறு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் குறை சொல்கிறார்கள் என்கிறார் மோடி. இதர பாஜ கட்சியினரும், கிட்டத் தட்ட இதையே சொல்கிறார்கள். வேறெது எப்படி இருந்தாலும், விவசாயத்தைப் பொறுத்த வரை பாஜ கட்சியினரோ, மோடி அரசோ இன்னும் உருப்படியான வழிமுறைகளைப் பற்றி யோசிக்கத் துவங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. உலகெங்கும் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கும் வணிக விவசாயமும், பெருந்தன நிறுவன விவசாயமும் இந்தியாவிலும் தன் அரக்கக் கால்களை எடுத்து வைக்கவே மோடி அண்ட் கோ விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது. இது குறித்துப் பல தலையங்கங்கள் தமிழ் பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள்.
குறிப்பாக பயிர்களின், தாவரங்களின் மரபணு மாற்றச் சோதனைகளையும், அன்னிய நிறுவனங்கள்/ ஆய்வு அமைப்புகளின் முயற்சிகளையும் இந்தியாவில் தொடர அனுமதிக்கப் போவதாக மோடி அரசு தீர்மானித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகக் கிட்டாத நிலையில் இதைக் குறித்து கண்டனம் தெரிவிப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
இந்த வகை முயற்சிகளின் உலகத் தலை மாநிலமான அமெரிக்காவில் விவசாயிகளின் நிலை என்ன? அதைப் பற்றி இங்கொரு கட்டுரை பேசுகிறது. தொடர்ந்து அமெரிக்கச் சிறு நில விவசாயிகள் வறுமைக் கோட்டின் அருகில் அல்லது அதற்குக் கீழேயே வாழ்கிறார்கள், தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடத் தயங்கத்தான் வேண்டி இருக்கிறது, ஏதேதோ உபரி எடுபிடி வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருப்பதால்தான் காலம் தள்ள முடிகிறது, தம் விளை பொருட்களைச் சந்தையில் விற்று சிறு லாபம் கூட ஈட்ட முடியாத நிலை, இதை எல்லாம் குறித்து தம்மைத் தவிர வேறு யாரும் சிறிதும் கவலைப்படுவதில்லை, அடுத்த தலைமுறை இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடாமல் இருக்கச் செய்ய வேண்டும் என்றுதான் விவசாயிகள் நினைக்கிறார்கள் என்று இந்த விவசாயி எழுதுகிறார்.
அட, இதேதான் இந்தியச் சிறு விவசாயியும் இப்போதே நினைக்கிறார். விவசாயிகளின் தற்கொலையில் தலைமை நாடாக விளங்கும் இந்தியாவை மேலும் படுகுழியில் தள்ளி இந்தியாவின் முதுகெலும்பாக இன்னமும் விளங்கும் விவசாயிகளை முறிக்கவே மோடி அரசு முயல்கிறதா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. இனி அமெரிக்கச் செய்தியைப் பாருங்கள்.
http://goo.gl/nD3MIT
[/stextbox]
[stextbox id=”info” caption=”பல் இருக்கும் – புற்றுநோய் வரும்”]
இந்தியர்களின் பற்களைப் பாதுகாக்கவே தினம் தோறும் பாடுபடும் கோல்கேட் பற்பசை நிறுவனம் இந்தியத் தொலைக் காட்சிகளின் திரையை நாளில் ஏராளமான நிமிடங்கள் ஆக்கிரமிக்கிறது. அத்தனை விளம்பரங்கள் அந்த நிறுவனத்துப் பற்பசை ஒரு நாளும் நோய்வாய்ப்படாத பற்களை, ஈறுகளை மக்களுக்குக் கொடுக்கும் என்று நம்மை மூளைச் சலவை செய்கின்றன.
இதற்கு வெள்ளைக் கோட்டு ஒன்றை அணிந்த மழமழா சவரத்துடன் சிரித்த முகமும், கனிவே சொல்லாகக் கொட்டும் மனிதரின் குரலோடும் தோன்றும் ஒரு விளம்பர நாயகர் டாக்டராக நடித்து நம் பற்களை எப்படி கிருமிகளிடம் இருந்து, துர்நாற்றத்திலிருந்து காப்பாற்றி, நம்மை ஆட்கொள்ளவே தோன்றியது இந்தப் பற்பசை என்று நம்மை நம்ப வைக்க முயல்கிறார், ஒவ்வொரு பதினைந்து நிமிடமும்.
அத்தகைய கோல்கேட் பற்பசையில் என்னதான் இருக்கிறது? ஆளைக் கொல்லும் புற்று நோயை நமக்குள் தூண்டக்கூடிய ஒரு ரசாயனப் பொருள்- இதுதான் வாயில் கிருமிகளைக் கொல்லும் என்று கோல்கேட் நம்மை மூளை சலவை செய்கிறது. ட்ரைக்ளோஸான் என்கிற இந்த ரசாயனப் பொருள் புற்று நோயைக் கொணரும் வாய்ப்பு அதிகமுள்ளது என்றும், மலட்டுத் தன்மையையும் கொணரும் என்றும் தற்போது அமெரிக்கப் பத்திரிகைகள் சொல்லத் துவங்கியுள்ளன. இது அமெரிக்க நிறுவனங்களிடையே நடக்கும் வியாபாரப் போரால் வெளிவரும் செய்தியா என்று நாம் ஊகிக்கத் துவங்கக் கூட முடியாது. ஆனால் இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் இந்திய அரசும், மாநில அரசுகளும் இந்த வகைப் பற்பசையை இந்தியாவில் விற்க அனுமதிக்கக் கூடாது என்றுதான் நமக்குத் தோன்றும். குறைந்தது இந்தியர்கள், வேறு தேர்வுகள் இருக்கையில் இந்தப் பற்பசையை வாங்காமல் இருக்கலாம், தற்காப்பு முயற்சிகள் தனிநபர் அளவில்தான் இந்தியாவில் சாத்தியம்.
http://www.bloomberg.com/news/2014-08-11/in-35-pages-buried-at-fda-worries-over-colgate-s-total.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”எருமையை வரைவது எப்படி?”]
எல்லா நிறுவனங்களிலும் நுழைந்த முதல் இரண்டு வாரம், அந்த நிறுவனத்தின் வழிமுறைகளை பயிற்சியாகக் கற்றுத் தருவார்கள். ஐ-போன் கண்டுபிடித்த ஆப்பிள் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. எளிமையாக வடிவமைப்பது எப்படி என்பதை சொல்லித் தர இயலுமா? முடியுமே… என்கிறார்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் வழித்தோன்றல்கள். கரடு முரடான எருதை நான்கே கோடுகளில் பிகாஸோ வரைந்தது போல், தங்களுடைய கணினி வடிவமைப்பை எவ்வாறு குழந்தையும் இயக்குமாறு சுளுவாக்குவது என்பதை புதியதாக சேரும் அனைவருக்கும் பாடம் எடுக்கிறார்கள். அதைக் குறித்த நியு யார்க் டைம்ஸ் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.
http://www.nytimes.com/2014/08/11/technology/-inside-apples-internal-training-program-.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”ஆயிரம் ரோபாட்டுகளின் அணிவகுப்பு”]
உயிரணுக்கள் ஒன்று சேர்ந்து திசுக்கள் ஆவது போல், பல பறவைகள் தானாகவே அணி அமைத்து வானில் பறப்பது போல், ஆயிரம் ரோபாட்டுகள் தாங்களாகவே இணைந்து கொள்கின்றன. ஒருசேர தங்கள் பணிகளை நடத்துகின்றன. எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் கணினி கிடையாது. ஒழுங்காக கோர்த்துவிடும் மனித இடையூறுகளும் கிடையாது. ஒவ்வொரு ரோபாட்டிற்கும் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவுதான். ஒவ்வொன்றிற்கும் மூன்று சின்னஞ்சிறிய கால்கள். அவற்றைக் கொண்டு தானகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு தத்தித் தத்தி நகர்கின்றன. விண்வெளிக்கு எடுத்துச் செல்வதில் இருந்து நகரத்தின் மாசு அளவை கண்காணிக்கும் பயன்பாடு வரை காலத்திற்கேற்ப தேவைக்கேற்ப இவை மாறிக் கொண்டே இருக்கும் என்பது மட்டுமே நிரந்தரம்.
http://arstechnica.com/science/2014/08/thousand-robot-swarm-assembles-itself-into-shapes/
[/stextbox]