புகை

கண் விழித்துப் பார்த்தான். காலை பதினோரு மணி என கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த அலாரம் சொன்னது. அதிகாலை நான்கு மணி வாக்கில் அறைக்கு வந்தது  தோராயமாக ஞாபகம் வந்தது. லாஸ் வேகாஸ் ஒரு மாய உலகம். மாயத்தில் தொலைந்து போக வந்து விழும் கூட்டம் எண்ணி மாளாது.  ஹோட்டல் அறையின் செயற்கை வெளிச்சம் காலை, மாலை, இரவு என காட்டாது. இரவு அருந்தியவை, உண்டவை, புகைத்தவை ஒரு வகை மிதக்கும் நிலையை இன்னமும் தக்க வைத்து கொண்டிருந்தன. மெல்ல நகர்ந்து ஜன்னல் திரையை நகர்த்தி பார்த்தான். நகரம் அமைதியாக இருந்தது. இரைச்சலும், உற்சாகமும் பொங்கிய நள்ளிரவுக்கும் இப்போதைய சாலைக்கும் சம்பந்தமே இல்லை.

அவள் மெல்ல வெள்ளை சிகரெட் பேப்பரில் பழுப்பு தூளை நிரப்பி உருட்டி கொண்டு இருந்தாள். அவள் விரல்கள் மிக அழகானவை, அந்த விரல்களின் லாகவம் அவனுக்கு எப்பொழுதும் பிடிக்கும். பார்த்துக் கொண்டே இருக்க வைக்கும், மயக்கம் தரும். அவனிடம் சுருட்டியதை நீட்டினாள். அவள் உதடுகளில் முத்தமிட்டான். “குட்மார்னிங்,” என்றாள்.  “இது உனக்குதான்,” என்றாள். “நன்றி. இப்போது வேண்டாம்,” என்றான். அறையின் மூலையில் உள்ள காபி போடும் இயந்திரத்தை உயிர்ப்பித்து விட்டான். அது மிக அருமையான வசதிகள் கொண்ட பெண்ட் ஹவுஸ் வகை அறை. அவள் பற்ற வைத்துக் கொண்டாள். அவன் தனது உள்ளாடைகளையும், உடைகளையும் தேடி அணிந்து கொண்டான். அறைக்குள் ரஞ்சனி காயத்ரி அபங் பாடி ஐபேடின் வழியே அந்த அறைக்குள்ளே  இருந்து கொண்டிருந்தார்கள்.

 “இவர்கள் குரல் என்னை அழ வைக்கின்றது. சங்கீதம் நெஞ்சை நிறைக்கின்றது,” என்று கண்ணில் நீர் துளிர்க்கச் சொன்னாள். ஆழமாக இழுத்து அவனிடம் நீட்டினாள். அவன் கண்களால் மறுத்தான்.

 “எனக்கும் பாடல் பிடிக்கின்றது. ஆனால் இதன் நுணுக்கங்கள் தெரியவில்லை.”

அவள் காதில் வாங்கினாளா, இல்லையா என்று தெரியாத நிலையில் கண்ணீர் வழிய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 படுக்கையை அடுத்து இருந்த தொலைபேசியை எடுத்து காலை உணவுக்கு உத்தரவு போட்டான். அறையின் மூலையில் கிடந்த அவள் ரோபை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

 உதடுகளில் வழிந்த சிரிப்போடு அவனை பார்த்தாள். “உடை என் அழகை மறைக்கின்றது. இன்று உடை தேவையில்லை என யோசித்துக் கொண்டிருக்கின்றேன்,”- வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

 “காலை உணவு வருகின்றது. வரும் வேளையில் இதை உடுத்திக் கொள்.”

“என் உடல் தாராசுர கல்வெட்டு, சித்தன்னவாசல் ஒவியம், இந்த ஐபேடில் கசியும் இசை; இதையேல்லாம் திரை போட்டா மறைக்கின்றார்கள். எனக்கும் தேவையில்லை.”

“அதைப் பிறகு பேசலாம். இப்போது உடை உடுத்து. உனது படம் இண்டர்நெட்டில் உலவ வெய்ட்டரிடம் இருக்கும் செல்போன் கேமரா போதும். எனவே இப்போதைக்கு உன் அழகை  ரகசியமாக்கிக் கொள். தவறில்லை.”

 வேண்டா வெறுப்பாக ரோபை உடுத்திக் கொண்டாள்.

 அவன் பழுப்புத் தூள், சிகரெட் பேப்பர் எல்லாம் எடுத்து பெட்டியில் வைத்து மூடினான்.

 “எனக்கு இன்றும், நாளையும் எதுவும் மீட்டிங் இல்லை. நாளை மறுநாள் விற்பனை ஒப்பந்தம் குறித்து ஒரு முடிவுக்கு கேட்ஸை தள்ள வேண்டும். இது யாரும் செய்யாத வேலை. இதில் வரும் சுகமே தனி”- முகம் விரிய் கண்களில் கனவோடு சொன்னாள். முகம் தெளிவானது.

 “புகையை விட வேலை ஒரு துளி அதிக போதையை தருகின்றது.”

கலகலவென சிரித்தாள். ரோப் ஆடை விலகி அழகு தெரிந்தது. இழுத்துக் கட்டினான். அணைத்து முத்தமிட்டாள். கதவு தட்டப்பட அவளை விலக்கிக் கதவைத் திறந்தான். உணவு ட்ரேயுடன் வந்தது.

அவளுக்கு ஓட்சை நகர்த்தி வைத்து விட்டு, ஸ்காரம்ப்ல்ட் முட்டையை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

அவள் முடித்த சிகரெட்டைத் தூக்கிப் போட்டு விட்டு ஓட்சில் ஸ்பூனை கலக்கிக் கொண்டிருந்தாள்.

“நான் 12வது வகுப்பு படிக்கும் பொழுது விற்க தொடங்கினேன். யாராவது விரும்புதை அவருக்கு விற்பது சுலபம். விரும்பாததை விரும்ப வைப்பதே உண்மையான விற்பனை” – மெதுவாக ஆரம்பித்தாள்.

இது அவனுக்குப் புதிது. எட்டு வருடங்களில் அவள் சிறுவயதுக் கதை எல்லாம் அவனிடம் சொன்னது இல்லை. ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத் தொடக்கத்தில் லாஸ்வேகாஸ் விற்பனை கான்ஃப்ரன்சுக்கு வரும் பொழுதும் அவளைச் சந்திப்பான்.

முதல் முறை பார்த்த பொழுது அவளுக்கு 35 வயது. ஆனால் 40 வயதை தாண்டியது போல் இருப்பாள். ஒரு எண்ணைய் நிறுவனத்தின், உதிரிபாகப் பிரிவின் சாதாரண விற்பனைப் பிரதிநிதியாய் அவளைச் சந்தித்தான். சீசர்ஸ் பேலஸ் காசினோவில் ப்ளாக்ஜாக் டேபிளில் முதல் நாள் இரவு சந்தித்தாள். மறுநாள் உதிரிபாக கேட்லாக்கை தூக்கிக் கொண்டு அவனை வந்து கான்ஃபரன்ஸில் சந்தித்தாள். ஒரு நல்ல இரவு அமைந்தது.

அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் சந்திப்பு. இசை, பானம், புகை, விற்பனை, காமம், புத்தகம் என கான்ஃபரன்ஸின் 3 நாட்கள் போகும், பிறகு பிரிவு,மீண்டும் மறு வருட சந்திப்பு.  அவளது தொலைபேசி எண் கூட அவனிடம் கிடையாது.

எட்டு வருடங்களில் அவள் இன்று அவளது சேல்ஸ் கம்பனியின் உயர் அதிகாரி. அவளது விற்பனைத் திறன் எண்ணெய் உதிரிபாகத் தொழில் வட்டத்தில் மிக பிரபலமாக இருக்கிறது.

“என் டாக்டர் அப்பா என்னை டாக்டர் ஆக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார். அவருக்கு அவர் முதலீட்டைப் பாதுகாக்க நான் வாரிசாக வேண்டுமென முடிவு உண்டு. என் அம்மா ஒரு பிள்ளைப் பூச்சி. எதையும் பேசியதில்லை. ஆனால் எளிதில் திருப்தி அடைபவளாக காட்டிக் கொள்பவள். என் அப்பாவுக்கு அதில் ஒரு பெருமை. நான் அப்பா சொன்னதைக் கேட்கக் கூடாது என முடிவு செய்தேன். நான் சொன்னதை என் அப்பா கேட்க வேண்டுமென நிலை எடுத்தேன்,” – பேச்சை நிறுத்திக் கொண்டாள். அவனைப் பார்த்தாள்.

அவன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். பெட்டியைத் திறந்து சிகரெட் பேப்பரையும், பிரவுன் தூளையும் அவளிடம் கொடுத்தான். மெல்ல விரலால் உருட்ட ஆரம்பித்தாள். திடீரென இசையை பேத்தோவனுக்கு மாற்றினாள்.

“சிம்ஃபனி சிக்ஸ். உனக்கு பிடித்தது” – என்றாள்.

 ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான்.

“அப்பாவிடம் பேச ஒத்திகை பார்த்தேன். பேசினேன். நான் டாக்டருக்குப் படிக்காமல், பவுதீகம். கலைக் கல்லூரியில் சேர்ந்தேன்.  அன்றுதான் தெரிந்து கொண்டேன். எல்லாமே சொற்களில்தான் இருக்கின்றது. சரியான வார்த்தைகளில் சரியான இடத்தில் சரியான முறையில் சொன்னால் நினைத்தை அடுத்தவரைக் கேட்க வைக்க முடியும் என்பதை அதிலிருந்தே தெரிந்து கொண்டேன். வார்த்தைகள் பலம் வாய்ந்தவை. ஹிட்லரால் வார்த்தைகளைக் கொண்டு லட்சகணக்கான நபர்களைக் கொலை செய்யத் தயார் செய்ய முடிந்தது. அவ்வளவு பலம் அதில் உண்டு,”- மூச்சை இழுத்து விட்டாள். அவனுக்குப் பற்ற வைத்துக் கொடுத்தாள்.

“அப்பாவிடம் என்ன சொன்னாய்?”

“தற்கொலை செய்து கொள்வதாகச் சொன்னேன்,”- சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“அவர் அனுமதிக்காவிட்டால் செத்து இருப்பாயா?”- அவன் முகம் மாறிக் கேட்டான்.

“சாவில் எனக்கு நம்பிக்கை இல்லை. நிச்சயம் செத்து இருக்க மாட்டேன். மிரட்டல்தான். எந்த அதிகாரமும் எனக்கு அவர் மேல் கிடையாது, அவருக்கு என் மேல் பாசத்தை விட அதிகாரமே இருந்தது. அந்த சூழ்நிலையில் எனக்கு வேறு வார்த்தைகள் கிடையாது. ஒரே முறைதான் சொன்னேன். தற்கொலை அவர் கவுரவத்தை பாதிக்கும், எனவே மறுபேச்சே அவர் பேசவில்லை.”

அமைதியாக இருந்தான். புகை மெல்ல அறையில் உலவி கொண்டிருந்தது.

“என் திருமணம் என் தேர்வுதான். ஐஐஎம்மில் என் வகுப்புதான். மரியாதையானவன்,”- என்று நிறுத்தினாள்.

 “ஆனால்?”

“குழந்தைக்கு முன்பு வரை நான் எனது ப்யரி க்யுரியை அவனிடத்தில் கண்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். மாதத்தில் 20 நாட்கள் விற்பனை வேலைக்காகப் பறந்து கொண்டிருப்பேன். அவன் நிதி மேலாண்மையில் இருந்தததால் அவ்வளவு பயணம் கிடையாது. குழந்தைக்குப் பிறகு மாறி விட்டது,”- ஒரு கணம் உறைந்து உட்கார்ந்திருந்தாள்.

 அவன் மெல்ல அவள் தலையைக் கோதினான்.

“பேச விருப்பமில்லையெனில் விட்டு விடு,” அவள் காதில் குனிந்து சொன்னான்.

“அவன் ப்யரி க்யுரிதான். ஆனால் நான் மேரி க்யுரி கிடையாது.என் பெண்ணை ஐரினாக மாற்றும் வித்தை எனக்கு இல்லை. அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்குப் பயமாகவே இருந்தது. அவள் என்னிடத்தில் ப்ரியமாகத்தான் இருந்தாள். எனக்கு அவளைப் பார்க்கவே பிடிக்காத இடம் ஒன்று வந்தது. கணவரிடம் பேசி விவாகரத்து செய்தேன். என் பழைய வேலை கேட்டர்பில்லரில் இருந்தது. அங்கிருந்து வந்து இந்த கம்பனியில் நான் இரண்டாவது ஆளாக வேலையில் சேர்ந்தேன். உன்னைப் பற்றிச் சொல்லேன்”

“நான் சொல்ல ஒன்றுமில்லை. என்னிடம் எந்த சம்பவமும் இல்லை. நீ இருக்கிறாய். நான் இருக்கின்றேன்.”

 தலையில் கை வைத்து கொண்டு கொஞ்ச நேரம் இருந்தாள்.

“க்ராண்ட் கேன்யன் போகலாமா?”- என்றாள்.

” நான் டூர் ஹெலிகாப்டர் பதிவு செய்யட்டுமா?”

அவள் அவளது உதவியாளருக்கு போன் செய்து பதிவு செய்ய சொன்னாள். இரவு தங்கவும் ஒர் அறை பதிவு செய்தாள்.

“எப்போழுதும் இந்த மாய உலகத்தில்தான் இருக்கின்றோம். இன்று நிகழ் உலகம் போவோம்,” – சொல்லி விட்டு கண்ணை மூடிக் கொண்டாள்.

oOo

sightseeing

 மறுநாள் அதிகாலை காரிருளில் கேன்யனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னமும் சிறிது நேரத்தில் ஒரு பேரோளி வரப் போகிறது என்று இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் தோள்களில் சாய்ந்து நின்று வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

“இப்போழுது என் மனதில் என்ன இருக்கிறது தெரியுமா?” என அவன் காதில் கிசுகிசுத்தாள்.

“கேட்ஸுடன் நாளை நடக்கப் போகும் மீட்டிங்கும், கென்ய எண்ணைய் வயலுமே எனக்கு தெரிகின்றது, இங்கு வரப் போகும் ஒளி என் விற்பனைக்கு ஒரு தடத்தை காட்டுமெனச் சொல்கிறது. ஏன் இப்படி?”- அழுதாள்.

“கிருஷ்ணனின் கடமையைச் செய் போல் ஆகி விட்டாய். இனி நான் என்ன சொல்ல முடியும். இதயத்தை தொடர், அதுதான் நான் செய்தேன். உன் இதயம் விற்பனையைத் தேடுகின்றது, விற்பனைக்கான உன் வார்தைகளைக் கற்பனை செய்து கொண்டே இருக்கின்றது, உன் மூளை உன்னைத் தாயாக, மனைவியாகச் சொல்கிறது, இதையெல்லாம் ஒன்றை ஒன்று விலக்க அமைவதில்லை, ஆறு முகம் கொண்ட தெய்வம் உண்டல்லவா? ஆனால் உனக்கு இருப்பதோ ஒரே முகம். அதுதான் நீ,”- என்றான்.

சூரியன் மேலே வந்தது. கதிர் பரவியது. மெல்ல மலை முகடுகளும், பள்ளத்தாக்குகளும், ஆறு அரித்த தடங்களும் துலங்க ஆரம்பித்தன. பொன்னிறத்தில் கேன்யன் ஜொலித்து தெரிந்தது.

 திரும்பி லாஸ்வேகாஸ் வந்த பின்னர் அந்த இரவில் அவனை உலுக்கி எழுப்பினாள்.

 “எனக்கு நான் விற்க ஒன்று உள்ளது. எனக்கு விற்க வார்த்தைகள் தேடவேண்டும்,”- என உறுதியாகச் சொன்னாள்.

“அப்படியா,” என்றான். திரும்பத் தூங்கி விட்டான்.

 அடுத்த முறை அவன் கான்பரன்ஸ் வந்த பொழுது அவள் வரவில்லை. அவள் தனிப்பட்ட காரணங்களுக்காக கான்பரன்ஸுக்கு முதல்நாள் வேலையை விட்டு விட்டதாக சிஎன்பிசி நியுஸில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இரண்டு வருடம் கழித்து கான்பரன்ஸில் பார்த்தான். இன்னுமொரு புதிய சிறிய கம்பனியின் சார்பாக வந்திருந்தாள். அவன் வேறோரு பெண்ணோடு இருந்ததால் அவளிடம் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.