தூரயியங்கி – எமக்குத் தொழில் அழித்தொழிப்பது

drones1

2008ன் ஜனாதிபதி தேர்தலில் நின்ற ஒபாமா நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். அவற்றில் ஒன்றைச் செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். பாகிஸ்தானிலும் இன்ன பிற தேசங்களிலும் பதுங்கியிருக்கும் அல் காய்தா தீவிரவாதிகளை டிரோன் கொண்டு குறி வைத்துத் தாக்கி அழிப்பேன் என்றார். ’இளம் அமெரிக்க உயிர்களை இழக்கக்கூடிய ஆபத்து நிறைந்த காலாட்படையை அனுப்ப மாட்டேன். கடுமையான பொருட்செலவில் அதிவேக விமானங்களை அனுப்ப மாட்டேன். அதே சமயம் தீவிரவாதிகள், நம்மைத் தாக்கி அப்பாவி உயிர்களைக் கொல்வதையும் தடுப்பேன். அதற்கு டிரோன் உபயோகிப்பேன்.’ என்றார்.

அதை எப்படித் தொழில்நுட்பம் கொண்டு நிறைவேற்றினார் என்பதைப் பார்ப்போம்.

சொல்வனம் இதழ் 59ன் மகரந்தத்தில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது:

கொல்லுவதை மட்டும் மேன்மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொலையாளிகள் மறைந்து இருந்து கொல்லும் ராட்சத யுத்தம் மேன்மேலும் பெருகி வருகிறது. மறைந்து கொல்வதை விமான குண்டு வீச்சு, ராக்கெட் குண்டு வீச்சு, பன்னாடு தாண்டித் தாக்கும் மிஸைல்கள்-இப்படிப் படிப்படியாக தூரத்திலிருந்தும், உயரத்திலிருந்தும் தாக்குவதை முனைந்து வளர்க்கிறார்கள் மேலையர். ஒரு காரணம், மிக அடிப்படையானது. இதை எத்தனை பேர் யோசித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேற்கில் குழந்தைகள் பிறப்பது மிகவும் குறைந்து விட்டது. போருக்குப் போய்ச் சாக இளைஞர்கள் முன்னளவு தயாராக இல்லை, அத்தனை எண்ணிக்கையிலும் அவர்கள் இல்லை. முதியோர்கள் கூட்டம் பெருத்து வருகிறது. உலக வளங்களில் பெரும்பகுதியை இன்னமும் கபளீகரம் செய்து வாழும் மேற்குக்குத் தம் வாழ்விலும் வசதி குறையக் கூடாது, தம் நிலங்களில் இதர நிலப்பகுதிகளிலிருந்து மனிதர்கள் உள்ளே நுழையக் கூடாது. அதே நேரம் பிற நிலப்பகுதிகளில் கிட்டும் கனிமங்களும் எரிபொருட்களும், தொழிலுற்பத்திப் பொருட்களும் தம் நாடுகளுக்கு மலிவு விலையில் பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும். இப்படிப் புலி வாலைப் பிடித்த கதை அவர்களுடையது.
எனவே போர்களில் ஆட்களை இழக்காது ஆயுதங்களால் மட்டும் தாக்க மேன்மேலும் திட்டமிட்டுச் சாதிக்கிறார்கள். கொல்லப்படும் மனிதரை அருகில் பார்த்தால், தொலைக்காட்சிகளில் ஊறி வளர்ந்து எதையும் உளநிலைப் பார்வையிலேயே பார்த்துப் பழக்கமான முதலியப் பண்பாட்டு மனிதர்களுக்கு மிக்க மன உளைச்சல் ஏற்படுகிறதாம். ஆனால், அதனால் கொல்வதை விடுவார்களா என்றால், அதெப்படி முடியும்? அது பண்பாட்டில் ஊறிப் போய் விட்டது. அதனால் நேரில் பார்க்காமல் பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து கொல்வதை ஒரு பெரும் தொழில் நுட்பமாக வளர்க்கிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு கூடுவாஞ்சேரியில் பறக்கும் விமானத்தை இயக்கினால், அந்த விமானத்தை டிரோன் எனச் சொல்லலாம். துவக்க காலத்தில் பெரும்பாலும் வேவு பார்ப்பதற்கே ட்ரோன்கள் உதவின. கொஞ்ச நாள் கழித்து தொலைதூர கண்காணிப்புக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது, குறி பார்த்துத் தாக்கவும் ட்ரோன்கள் செயல்படுகின்றன.

தீவிரவாதிகளின் வீட்டின் முகவரி தேடி, அவர்கள் இருக்கும் இருப்பிடத்திற்கு வண்டியோட்டியோ, பொடி நடையாகவோ செல்லும் காலத்திற்குள், தீவிரவாதிகள் வீடு மாற்றி விடுகிறார்கள். அப்புறம், மறுபடி வீட்டின் முகவரியைத் தேடும் படலம், எனக் கண்ணாமூச்சி விளையாடாமல், இருந்த இடந்த்திலிருந்து தொடர்ந்து கண்காணித்து, தக்க தருணத்தில் வேண்டிய நபரோ, நபர்களோ கிட்டியவுடன், ரிமோட் பொத்தானை அமிழ்த்தி, தொலைக்காட்சியை இயக்குவது போல், தொலைக்கட்டுப்பாட்டில் தீவிரவாதியைப் போட்டுத் தள்ள ட்ரோன்கள் இயங்குகின்றன.

உலக வர்த்தக மையம் தகர்க்கப் பட்டபிறகு இதன் உபயோகம் அதிகரித்தது. செய்திகளில் பரவலாக அடிபட்ட மட்டில் – யேமன், சொமாலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்க வான்படையில் 2,300த்து சொச்சம் விண்கலங்கள் இருக்கின்றன. படைவீரர் ஓட்டிச் செல்லும் விமானங்களில் இருக்கும் பல விஷயங்கள் ட்ரோன்களிலும் இருக்கின்றன. தானியங்கியாகப் பறக்கும் வசதி உண்டு; எந்த இடத்தில் இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும் என்பதை அறியும் புவிநிலை காட்டி (GPS) உண்டு; கொடூரமான ஆயுதங்களும் உண்டு; ஆனால், விமான ஓட்டி மட்டும் கிடையாது. எனவே, இவற்றை ‘ஆளில்லா விமானங்கள்’ (unmanned aerial vehicles) அல்லது ’தொலை ஓட்டுந‌ர் விமானங்கள்’ (remotely piloted aircraft) என அழைக்கிறோம்.

ஆங்கிலத்தில் ட்ரோன் என்றால் ஆண் தேனீ. இவற்றால் தேன் சேகரிப்பில் பங்குபெற இயலாது. பிறரைக் கொட்ட இயலாது. சோம்பேறி. ஒவ்வொரு தேனீக்கூடாக சென்று, அங்கு, இனப்பெருக்கம் செய்வது மட்டுமே, இதன் ஒரே வேலை. இந்த அப்பாவி ஆண் தேனீயான ’ட்ரோன்’, எப்படி ஆபத்தான தானியங்கி விமனத்திற்கு பெயர் ஆனது?

1935ல் இங்கிலாந்தில் தொலைதூரத்தில் தானியங்கியாகப் பறக்கும் விமானத்தை இன்னொரு விமானம் இயக்கும். அதற்கு டி.எச். 82பி இராணித் தேனீ (DH 82B Queen Bee) எனப் பெயரிட்டார்கள். இராணி இல்லாமல் அந்த மற்றொரு தேனீ (ட்ரோன்) இயங்காது என்பதால், அந்தக் களபலி விமானத்திற்கு ‘ட்ரோன்’ எனப் பெயர் சூட்டினார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் பயிற்சிக்கு உபயோகித்த இலக்குகளை ட்ரோன் என அழைக்கத் துவங்குகிறார்கள். அன்று இலக்காகப் பயன்பட்ட ட்ரோன்கள், இன்று தங்கள் இலக்குகளை பலி கொள்கின்றன.

வியட்நாம் போரின் போது மட்டும் ஆறாயிரத்து சொச்சம் விமானிகளை அமெரிக்கா இழந்தது. அது தவிர பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை இழந்தது. விமானங்கள் தரைக்கு அருகே பறப்பது முதல் காரணம். விமானிகளால் டக்கென்று தப்பித்து ஓடுவதற்கு, சரேல் திருப்பங்கள் செய்ய இயலாத விமானங்கள் இரண்டாம் காரணம். விமானியின் திறமைக்கேற்பவே விமானம் இயங்கும்; அந்த சாமர்த்தியம் இல்லாத விமானிகள் மூன்றாம் காரணம். இந்தப் பிழைகளை ஆளில்லா விமானங்கள் போக்குகின்றன.

ஆளில்லா ட்ரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் ட்ரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும், பசியும் கிடையாது. ஒரே வேலையையே, திரும்பத் திரும்பச் செய்யச் சொன்னால், ‘போரடிக்கிறது’ என அலுத்துக் கொள்ளாமல் இயந்திரகதியில் மீண்டும் மீண்டும் துல்லியமாக கண்காணிக்கும்; கால் கடுக்க விழி இமைக்காமல் தன் பிடியில் சிக்கியவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பின் தொடர்ந்து அவரும் அறியாவண்ணம் காவல் காக்கும்.

விமானி இயக்கும் சண்டை ஜெட்களை இரண்டு மணி நேரத்திற்கு மேல் இயக்க இயலாது. போனோமா.. வந்தோமா என்று இருக்க வேண்டும். கடைசியாக, ட்ரோனிற்கு ஆகும் செலவும் கம்மி. விமானியுள்ள போர்விமானத்தில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு ஆகும் செலவில், ட்ரோன் விமானங்கள் முன்னூறு கிலோமீட்டர் பறந்துவிடும். அவ்வளவு இலேசானது. காரைப் போல் எடை கொண்டது. சோப்புத் துண்டு போல் போர் விமானம் கனக்கும் என்றால், டிரோன்களோ நுரை போல் பறக்கும். விமானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இருக்கும் இராட்சத உபகரணங்களோ, பாதுகாப்பு அம்சங்களோ, துரத்துவோரிடமிருந்துத் தப்பித்துச் செல்ல அதிவேகமாக பறக்கவேண்டும் என்னும் நிர்ப்பந்தமோ இந்த உலோகப்பறவையிடம் இல்லை. எதிராளி தாக்க வந்தால் தற்கொலைப் படை – மௌனமாக தன்னுடைய விஷக்குப்பியை அருந்துவது போல், தன்னைத் தானே வெடித்துக் கொள்ளக் கூட முடியும்.

ஏன் இதெல்லாம் திடீரென்று முக்கியமாகிறது?

இராக்கில் இப்பொழுது அமெரிக்கப் படை இல்லை. ஆஃப்கானிஸ்தானை விட்டும் கூடிய சீக்கிரமே அமெரிக்கா மூட்டை கட்டப் போகிறது. இன்றைய நிலையில் பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளைத் தாக்க ஆஃப்கானிஸ்தானில் இருந்து ட்ரோன்களை அனுப்ப முடிகிறது. ஆனால், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் பாசறை ஏதும் இல்லாவிட்டாலும் கூட அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருந்தும், நெவாடாவில் இருந்தும் ட்ரோன்களை அனுப்பலாம். மணிக்கு ஐநூறு மைல் வேகத்தில் ஐம்பதாயிரம் அடியில் பறக்கும் ட்ரோன்களைக் கொண்டு சொமாலியா அல் காய்தாவும் பாகிஸ்தான் தாலிபான் தலைவர்களும் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை அறியலாம். தேவைப்பட்டால், அவரின் தலை மட்டுமே சுக்கு நூறாக வெடிக்குமாறு ஆணையும் பிறப்பிக்கலாம்.

இப்போதைக்கு இந்த உளவாளி ட்ரோன்களை இயக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க சி.ஐ.ஏ. யிடம் (அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை) இருக்கிறது. அதாவது, உளவு பார்ப்பது உளவுத்துறையின் வேலை. எனவே, உளவு பார்க்க ட்ரோன்கள் அனுப்புவது உளவுத்துறையின் கடமை. ஆனால், இப்பொழுதோ, உளவு என்பதைத் தாண்டி, தாக்குதலுக்கு ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாக்குதல் ராணுவத்தினர் வேலை. எனவே இதை இராணுவத்திற்கு மாற்றிக் கொடுக்குமாறு ஒபாமா விண்ணப்பித்திருக்கிறார். இதை இரகசியமாகச் செயல்படும் சிஐஏ-வில் இருந்து ஓரளவு வெளிப்படையாக இயங்கும் பெண்டகனுக்கு மாற்றிவிட்டால், ட்ரோன்களை விமர்சிப்பதற்காக, அவற்றால் நிகழும் சாவுகளுக்காக, மத்திய உளவுத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிபரான ஒபாமாவை எந்நேரமும் காயும் ஊடகங்களும் இடதுசாரிகளும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மீது தங்கள் விமர்சனத்தைச் செலுத்துவார்கள். இது வரை அமெரிக்க வலதுசாரியினரால் போற்றிக் கொண்டாடப்பட்டு, பெருமளவு தம் சொத்து போலவே பாவிக்கப்படும் பாதுகாப்புத் துறை இப்படி விமர்சனத்துக்குள்ளாக நேர்ந்தால், ஒரு புறம் அமெரிக்க வலதுசாரியினருக்கு தலையுச்சி பற்றி எரியும். அதே நேரம் உலகத்தின் விமர்சனமெல்லாம் அவர்கள் மீது பாயும். உலகரங்கிலும், உள்நாட்டிலும் அமெரிக்க வலதுசாரியினரின் நிலை திண்டாட்டமாகலாம். ஆனால் அடுத்த தேர்தலில் ஒபாமாவின் கட்சி இதனால் தோற்க நேரிட்டாலும் நேரலாம்.

இது எதுவும் நேராகக் கணக்கிடப்படக் கூடியதல்ல. காற்றடிக்கும் பக்கமெல்லாம் அமெரிக்க மக்கள் கருத்துச் சாய்வு இருக்கிறது என்பதே பிரச்சினை.

ஏன் இராணுவத்திற்கு கை மாற வேண்டும்? அமெரிக்க ராணுவம் இந்த ஆயுதங்களை ஏன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புகிறது?

மூன்றடி நீளமே இருக்கிறது ‘ரேவன்’ (Raven – அண்டங்காக்கை). இராணுவ வீரரின் தோள்பையில் அடக்கமாக உட்கார்ந்திருக்கும். எப்பொழுது தேவையோ, அப்பொழுது பையில் இருந்து வெளியில் எடுத்து, கை கால் நீட்டி. முழு உருவமும் கொடுத்து, பேப்பர் ராக்கெட் விடுவது போல், அம்பைப் போல் கையால் வீச வேண்டும். அதன் பிறகு, பொம்மை ஹெலிகாப்டர் ஓட்டுவது போல், அதை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைக்கலாம். பாகிஸ்தான் இராணுவத்திடம் கூட நூற்றுக்கணக்கில் இந்த ரேவன் ட்ரோன்கள் இருக்கின்றன.

ஒசாமா பின் லாடனைப் பிடிக்க சி.ஐ.ஏ. சென்டினல் (sentinel) ட்ரோன் விமானத்தை உபயோகித்தது. ஆனால், அதே போன்ற பழைய மாடல் ட்ரோன்களை சீனாவிற்கும் ரஷியாவிற்கும் வேவு பார்க்கவோ, வெடி வெடிக்கவோ அனுப்பித்தால் பாதி வழியிலேயே நசுக்கி விடுவார்கள். அதற்கு, எளிதில் கண்டு பிடிக்க முடியாத, அதி வேகம் கொண்ட, அடுத்த தலைமுறை கொலைகார ட்ரோன்களைத் தயாரிக்க வேண்டும். நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து, தானியங்கியாக வெளிவந்து, சமயம் பார்த்து விண்ணில் பறந்து, அயல்நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கேயே யார் கண்ணிற்கும் எந்த ரேடாருக்கும் தெரியாமல் பறக்கும் ட்ரோன்கள் தேவை. அதற்கு சிஐஏ போன்ற உளவு அமைப்பிடம் இல்லாத, இராணுவத்திடம் மட்டுமே எப்போதுமிருக்கும் பெரும் பணபலம் தேவை.

இங்கிலாந்தில் இந்த மாதிரி புத்தம்புதிய ட்ரோன்களை டரானிஸ் (Taranis) என பறக்க விடுகிறார்கள். பிரான்சும் நியுரான் (Neuron) தயாரித்திருக்கிறது. இரானும் சவூதி அரேபியாவும் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் நான்கு நிறுவனங்கள் விதவிதமான பெயர்களில் கள்ளமாகத் தாக்கும் ட்ரோன்களைத் தயாரிக்கின்றன. நார்த்ராப் (Northrop) ட்ரோன்களுக்கு எக்ஸ் 47பி (X-47B) என மறைபெயர் சூட்டியிருக்கிறது. லாக்ஹீட் மார்டின் (Lockheed Martin) ஆர்.கியூ 170 (RQ-170); ஜெனரல் அடாமிக்ஸ், போயிங் என எல்லோரும் எம்.க்யூ 9 ரீப்பர் (MQ-9 Reaper) வடிவமைப்பில் மும்முரமாக இருக்கிறார்கள்.

உங்கள் செல்பேசியில் இருக்கும் புகைப்படக் கருவிகள்தான் இங்கேயும் பயன்படுத்தப்படுகின்றன. செல்பேசியில், மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு கேமிராக்கள் இருக்கும். இந்த புதிய வகை ட்ரோன்களில் அது போல் ஐநூறு கேமிராக்கள் அதன் உடலெங்கும் பதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தன் அடியே நடக்கும் அனைத்து விஷயங்களையும் வெகு துல்லியமாகக் கண்காணிக்க இயலுகிறது. அதே சமயம், பருந்துப் பார்வையாக, மொத்த விஷயங்களையும் பார்க்க முடிகிறது. அதாவது கூகுள் வரைபடத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஆழமாக, மேன்மேலும் அருகே சென்று வரைபட உருவைப் பெரிதாக்கிக் கொண்டே போய், உங்கள் வீட்டினுள் நுழைவதைப் போல் ஐம்பதாயிரம் அடியில் இருந்து இந்த ட்ரோன்கள் உங்களை இருபத்து நான்கு மணி நேரமும் ரோந்து சுற்றலாம். அப்படியே ஒட்டுக் கேட்கவும் செய்யலாம். எந்த வீடு எப்பொழுது தேவையோ, அந்த வீட்டின் செயல்பாடுகளை மட்டும் தேவைக்கேற்ப அகலமாக பிக்சல் பிக்சலாக விருத்தியாக்கி நோக்கலாம். அங்கே நடக்கும் உரையாடலைப் பதிவு செய்ததைப் போட்டுத் தானியங்கியாக மொழிபெயர்க்கலாம்.

இந்த வகை ட்ரோன்களிடம் இப்போதைக்கு எதிர்ப்பு சக்தி என்பது ரொம்பவேக் குறைவு. காலுறை கிழிந்தால் தூக்கிப் போட்டுவிட்டு, புதியது மாற்றிக் கொள்வது போல், அவ்வப்போது ஒரு ட்ரோன் பழுதாகிவிட்டாலோ, எதிரியால் சுடப்பட்டாலோ, அதை தாரை வார்த்துவிட்டு, புதிய ட்ரோனை அதே பகுதிக்கு ஏவுவது வழக்கம். ஆனால், அதற்கு பதில் எதிராளியின் விமானத்தை சுதந்திரமாகத் தாக்குவது, தற்காப்பாக ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது என ரோபாட் போல் தனக்குத் தானே முடிவெடுக்கும் திறனும் எடுத்த முடிவை செயலாக்கும் வசதியும் அமையப் பெற்றால், இவ்வகை ட்ரோன்களை அயல்நாட்டால் எளிதில் அழிக்க இயலாது. அதே போலத் தாக்கும் ட்ரோன்களை அவையும் தயாரிக்க வேண்டி வரும். ஒரு கட்டத்தில் வானப் போர் முழுதுமே ட்ரோன்களின் போராகலாம் என்று தோன்றுகிறதா?

முதலாம் உலகப் போரின் போது விமானங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அவ்வாறுதான் இப்போதுட்ரோன்கள் இளம்பிராயத்தில் இருக்கின்றன. இனிமேல்தான் முழுமூச்சில் என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும், எப்படியெல்லாம் உபயோகிக்கலாம், எங்கனம் கட்டுப்பாடுகள் வைக்கலாம், எங்கே பறக்கலாம், எவர் கையில் கொடுக்கக் கூடாது போன்ற சட்டதிட்டங்களையும் சமூக வழக்கங்களையும் தயாரிக்க வேண்டும்.

அவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.

உசாத்துணை:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.