கணினியியலில் சிந்தனைச்சோதனைகள்

வேதாந்த அல்லது தினப்படி வாழ்வு சம்பந்தப்பட்ட விசாரணைகளில் இருந்து கொஞ்சம் விலகி, இந்த இதழில் கணினியியல் பற்றிய மூன்று சோதனைகளை பார்க்கலாம்.

டியுரிங் தேர்வுalan_turing

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆலன் டியுரிங் ஒரு பிரிட்டிஷ் கணிதமேதை. நவீன தத்துவார்த்த கணினியியலின் (Theoretical Computer Science) தந்தை என்று பலராலும் கருதப்படுபவர். வெறும் 41 வயதில் காலமான டியுரிங், 1950இல் கணினி இயந்திரங்களின் நுண்ணறிவு (Machine Intelligence) குறித்த ஒரு கட்டுரையை பிரசுரித்தார். கணினிகளால் மனிதர்களைப்போல் சிந்திக்க முடியுமா என்ற கேள்வியை அலசுவது கட்டுரையின் குறிக்கோள். இதற்காக இவர் முன்வைத்த ஒரு சோதனை பின் நாட்களில் டியுரிங் தேர்வு (Turing Test) என்று பெயர் சூட்டப்பட்டு இன்றும் பிரபலமாக பேசப்பட்டு  வருகிறது.  சுருக்கமாகச்சொன்னால், இந்த சோதனையில் ஒரு அறையில் ஒரு மனிதனும் இன்னொரு அறையில் ஒரு கணினியும் இருக்க, இரண்டு அறைகளுடனும் ஒரு முனையத்தின் (terminal) வழியே உரையாடும் நம்மால் எது மனிதன், எது கணினி என்று கண்டு பிடிக்க முடியாமல் போனால், கணினிகள் மனிதர்களைபோல் இயங்க ஆரம்பித்து விட்டதாக கொள்ளலாம் என்றார் டியுரிங். அதாவது கணினிகள் நம்முடன் தொடர்புகொண்டு ஊடாடுகையில், மனிதர்களுக்கு இருக்கும் குறை நிறைகளை பிரதிபலித்து  மனிதநடத்தையிலிருந்து சிறிதும் பிறழ்வது தெரியாமல் அவற்றால் செயல்பட முடிந்தால் அவற்றின் செயற்கையான நுண்ணறிவு (Artificial Intelligence) மனித அறிவுக்கு ஈடாக வளர்ந்து விட்டதாக நாம் கருதலாம் என்பது அவர் கருத்து.

அறுபத்தைந்து வருடங்களுக்கு முன் கணினியியல் வளர்ந்துகொண்டு இருந்த விதத்தைப்பார்த்துவிட்டு, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறக்குறைய முப்பது சதவிகித மக்களை தாம் ஊடாடிக்கொண்டு இருப்பது ஒரு சகமனிதருடன் என்று கணினிகளால் நம்ப வைக்க முடியும் என்று டியுரிங் கணித்திருந்தார். இந்த சிந்தனைச்சோதனையில் முதல் இதழில் நாம் பார்த்த சோதனைகளைப்போல் ரத்தம் ஏதும் இல்லாததால், கணினி மென்பொருள் பொறியாளர்கள் இந்த நிலையை அடைய பலவருடங்களாய் முயன்று கொண்டு இருக்கிறார்கள். போனமாதம் வெளிவந்த ஒரு அறிவிப்பு சமீபத்திய ஒரு டியுரிங் தேர்வு முயற்சியில், 30% நடுவர்கள், தாங்கள் உக்ரைன் நாட்டைச்சேர்ந்த ஒரு பதின்மூன்று வயது  சிறுவனுடன் உரையாடிக்கொண்டு இருப்பதாக நம்பினார்கள் ஆனால் அவர்கள் ஊடாடிக்கொண்டு இருந்ததென்னவோ ஒரு கணினியுடந்தான் என்கிறது. இந்த அறிவிப்பை வைத்துக்கொண்டு டியுரிங் அறுபது ஆண்டுகளுக்கு முன் அமைத்துக்கொடுத்த ஒரு மைல் கல்லை தாண்டி இருக்கிறோம் என்று சொல்லலாம் என்றாலும், இதுவரை இத்தகைய சாதனைகளை புரிய மென்பொறியாளர்கள் பல்வேறு தகிடுதத்தங்களைத்தான் நம்பி இருக்கிறார்களேயொழிய நிஜமாகவே கணினிகள் நம்மைப்போல இன்னும் யோஜனை செய்ய Watson_Jeopardyஆரம்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அந்த திசையை நோக்கி விடாமல் பொறியாளர்களும் கணினிகளும் ஓடிக்கொண்டு இருப்பதும் உண்மைதான். ஜியோபர்டி (Jeopardy) என்ற புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன் IBMன் வாட்சன் என்கிற கணினி இரண்டு மனிதர்களுடன் போட்டியிட்டு, சாதாரண பேச்சு வழக்கு ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்துகொண்டு பதிலளித்து வென்றதை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இல்லாவிட்டால் யூட்யூப் பக்கம் போய்  “Jeopardy Watson” என்று ஒரு தேடல் நடத்தி விடுவது உத்தமம். அந்த ஜியோபர்டி முயற்சி, சமீபத்தில் வெளிவந்த Her என்கிற ஹாலிவுட் திரைப்படம் போன்றவை எல்லாவற்றிலும் டியூரிங் தேர்வு இழை பின்னனியில் ஓடிக்கொண்டு இருப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

டியூரிங் தேர்வுக்கு எதிர்மறையான சில தேவைகளும் வழக்கில் உண்டு. ஒரு வகையான எதிர்மறை டியூரிங் தேர்வு நிஜ மனிதர்கள் கணினிகள் போல் நடித்து, நடுவர்களை தாம் கணினிகளுடன் ஊடாடுவதாக தீர்மானிக்க வைப்பது. இன்னொரு வகை கணினிகள் ஒரு டியூரிங் தேர்வு வழியாக தாங்கள் ஊடாடுவது மனிதர்கள் கூடத்தான் கணினிகளுடன் அல்ல என்று உறுதி செய்து கொள்ள முயல்வது. சொல்வனம் உள்பட பல வலைதளங்கள் வாசகர்கள் கருத்துக்களை பதிவு செய்ய முயலும்போது CAPTCHA புதிர்களுக்கு பதில் அளிக்கக்கோருவதை பார்த்திருப்பீர்கள். கணினிகளுக்கு எளிதில் புரியாத அத்தகைய கேள்விகளை கேட்பதின் மூலம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்கிற CAPTCHA முறை வழியாக, கருத்துக்களை பதிவு செய்வது மனிதர்கள்தான் என்று வலைதளக் கணினி உறுதி செய்து கொள்கிறது.

ஆலன் டியுரிங் இந்த சிந்தனைத்தேர்வு மட்டுமின்றி, டியுரிங் இயந்திரம் (Turing Machine) என்ற ஒரு சிந்தனைச்சோதனை அமைப்பையும் நமக்கு வழங்கியிருக்கிறார். டியூரிங் தேர்வு பற்றி முன்பே படித்திருந்த நான், இருபத்தைந்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக டியுரிங் இயந்திரம் பற்றி கேள்விப்பட்டபோது இரண்டையும் போட்டுக்- குழப்பிக்கொண்டு இருந்திருக்கிறேன். தன் பெயர் கொண்ட ஒரு சிந்தனைத்தேர்வுடன் டியுரிங் போனஸ்ஸாக ஒரு சிந்தனை இயந்திரத்தை வேறு கணினியியலுக்கு வழங்கி இருக்கிறார் என்று எனக்கு புரிய ஓரிரு நாட்கள் ஆனது!  நவீன கணினியின் அடிப்படை இயக்கங்கள் அனைத்தையும் அலச ஒரு நாடா, அந்த நாடாவில் வெறும் ஒன்று அல்லது பூஜ்யம் என்று எழுத/அழிக்க வல்ல ஒரு அமைப்பு மட்டும்போதும் என்று சொல்லும் இந்த அழகான தத்துவார்த்த டியுரிங் இயந்திர உருவமைப்பு எத்தனையோ ஆராய்ச்சிகளுக்கும் புரிதல்களுக்கும் வழி வகுத்திருக்கிறது. சொல்வனத்தில் கூட இதைப்பற்றி முன்பு ஒரு கட்டுரை வந்திருப்பதாய் ஞாபகம். கணிதம், கணினியியல், சங்கேதகுறியீடுகள், இரண்டாம் உலகப்போரின்போது நாஜி ஜெர்மனிக்கு எதிரான பல கண்டுபிடிப்புகள், மாரத்தான் பந்தயங்கள் என்று பல துறைகளில் புகுந்து விளையாடிய டியுரிங்கின் 41 வருட வாழ்க்கை பலவிதங்களில் வியப்புக்கும் சில விதங்களில் பரிதாபத்துக்கும் உரியது. விருப்பமுள்ளவர்கள் கொஞ்சம் வலை வீசலாம்.

உங்களுக்கு மாண்டரின் தெரியுமா?

ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நீங்கள் ஒரு அறைக்குள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் ஏகப்பட்ட விதிகளடங்கிய ஒரு பெரிய புத்தகம், தேவையான அளவு காகிதம், பேனா எல்லாம் இருக்கிறது. அறைக்கு வெளியிலிருந்து சீன மொழி நன்கு தெரிந்த ஒருவர் மாண்டரின் என்கிற சீன மொழியில் ஒரு கதையையும் அந்த கதையை பற்றிய சில கேள்விகளையும் ஒரு காகிதத்தில் எழுதியோ அல்லது ஒரு கணினி மூலமாகவோ உங்களுக்கு அனுப்புகிறார். உங்களுக்கு சுத்தமாய் மாண்டரின் தெரியாது என்றாலும், ஆங்கிலத்தில் அந்தப்புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கும் விதிகளை பார்க்கிறீர்கள். அதில் இந்த ஜிலேபி வடிவத்துக்கு அப்புறம் இந்த பூச்சி வடிவம் உள்ளே வந்த கேள்வியில் இருந்தால், நீங்கள் இந்த தேன்குழல் வடிவத்தை வரையவும் போன்ற விலாவரியான விதிகளும் குறிப்புகளும் இருக்கின்றன. அந்த விதிகளை பொறுமையாக கடைப்பிடித்து நீங்கள் ஒரு காகிதத்தில் மாண்டரின் எழுத்துக்களை படங்களாக வரைந்து வெளியே காத்திருக்கும் சீன மொழிக்காரருக்கு அனுப்பி வைக்கிறீர்கள். அதைப்படித்த அவர் கேள்விகளுக்கு பதில்கள் சரியாக தரப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார், சில பதில்களில் உள்ள தத்துவார்தமான சில விளக்கங்கள் மிக அருமை. எனவே நீங்கள் சீன மொழியில் ஒரு விற்பன்னர் என்று சான்றிதழே வழங்குகிறார். இந்தக்கட்டத்தில் உங்களுக்கு மாண்டரின் தெரியும் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா?

cr_process

C_Instructions

இதென்ன அசட்டுக்கேள்வி, நான் செய்ததெல்லாம் அந்த புத்தகத்தில் இருந்த விதிகளை செயல்படுத்தியது மட்டும்தானே என்று நீங்கள் பதில் சொன்னால், நீங்கள் வலுவற்ற செயற்கை நுண்ணறிவு (Weak AI) மட்டும்தான் கணினிகளிடையே சாத்தியம் என்று சொல்லும் விஞ்ஞானிகளின் கட்சி. அதற்கு பதில் நான் எப்படி விடை சொன்னால் என்ன, சீன மொழி தெரிந்த ஒருவரால் செய்யமுடியும் அத்தனை விஷயங்களையும் என்னால் அந்த விலாவரி விதிகள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொண்டு செய்ய முடிகிறதென்றால் எனக்கு சீன மொழி தெரிகிறது என்றுதான் அர்த்தம் என்று ஒரே அடியாய் அடித்தீர்களானால், நீங்கள் வலுவான செயற்கை நுண்ணறிவு (Strong AI) கட்சியை சேர்ந்தவர் என்று அர்த்தம். John Searle1980 வாக்கில் இந்த சிந்தனைச்சோதனையை பரிந்துரைத்த ஜான் சேர்ள் (John Searle) முதல் கட்சியை சேர்ந்தவர். அந்தக்கட்சி விஞ்ஞானிகள் கணினிகளை பல்வேறு புத்திசாலித்தனமான வேலைகளை செய்ய வைக்கலாம்; அப்படி செய்ய வைக்கும்போது அவை மனிதர்கள் போலவே செயல்படலாம், மனிதர்களால் அப்படியே உணரவும் படலாம். அந்த நிலை கணினிகள் மனித மூளைக்கும் மனதுக்கும் ஒரு நல்ல மாதிரியாக (model) இருப்பதை குறிக்கிறது. அவ்வளவுதான். அதைத்தாண்டி அவையே மனிதர்களைப்போல் தான் என்கிற ஸ்மரணையை பெற்று விட்டதாக எண்ணுவது முற்றிலும் தவறு என்று வாதிட்டனர். இவர்கள் கருத்துப்படி, புத்திசாலித்தனமான நிரலிகளை உபயோகித்து கணினிகளால் டியுரிங் தேர்வைத்தாண்டிவிட முடியும். ஆனாலும் அந்த அறைக்குள் உட்கார்ந்திருப்பவருக்கு உண்மையில் சீன மொழி தெரியாததைப்போல், கணினிகளும் ஆத்மார்த்தமாக எதையும் புரிந்து கொள்வதில்லை. அவை இயந்திரத்தனமாக சொன்ன வேலைகளைச்செய்வதாக மட்டும்தான் கொள்ளவேண்டும் என்று இவர்கள் அடித்துக்கூறினார்கள்.  எதிர் கட்சியினர் அந்த அளவுக்கு கணினிகள் மனிதர்களுக்கு இணையாக செயல்பட முடிகிற பட்சத்தில், அவையும் தான் என்ற பிரக்ஞை உள்ள மனித மனதுக்கு இணையானதுதான் என்று பிரதிவாதம் தொடுத்தனர். மனித மூளையும் மனமும் இதே போல சில பல ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு செயல் படுவதுதான், அதற்கு மேல் ஆத்மா, இறைவன் கொடுத்த ஸ்பெஷல் வரங்கள் எல்லாம் சும்மா கதை என்பது அவர்கள் கருத்து. ஆரம்பத்தில் சேர்ள் இந்த சோதனையை முன் வைத்தபோது இது கணினிகளின் செயற்கை நுண்ணறிவை அளப்பதற்காக வடிவமைக்கப்பட்டது என்றாலும், பின் நாட்களில் மொழியியல் வல்லுனர்கள், தத்துவவாதிகள், மதவாதிகள், உயிரியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் என்று பலரும் இந்த சோதனையால் ஈர்க்கப்பட்டு விவாத களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

சேர்ளை மறுத்தவர்கள் குறிப்பாக மூன்று விதமான கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

1. அந்த அறைக்குள் உட்கார்ந்திருக்கும் மனிதனுக்கு சீன மொழி புரியாமல் இருக்கலாம். ஆனால் அங்கே நாம் பார்க்க வேண்டியது அந்த மனிதனை மட்டும் அல்ல. அந்த மனிதன், அந்த விதிப்புத்தகம், கேள்வி உள்ளே வரும் விதம், பதில் வெளியே போகும் விதம் எல்லாம் கலந்த அந்த பூரா அறையையும், அறைக்குள் இருக்கும் அத்தனை விஷயங்களையும் சேர்த்து ஒரு சிஸ்டமாக பார்க்க வேண்டும். மொத்தமாக அந்த அமைப்புக்கு சீன மொழி நிச்சயம் புரிகிறது. எனவே அங்கே புரிதல் எதுவுமே நடக்கவில்லை என்று நினைப்பது தவறு.

2. இந்த சோதனையில் விவரிக்கப்பட்ட அமைப்பில் சீன மொழியை முழுதாக புரிந்து கொள்ளுதல் நிகழவில்லைதான். ஆனால் இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு அரைகுறை அமைப்பு. இதைக்கொஞ்சம் மாற்றினால், உதாரணமாக தேவையான காமிரா, அந்த விதிப்புத்தகத்தை விழுங்கிய கணினி எல்லாம் கொண்ட முழு ரோபாட் ஒன்று இருந்து அது பதில்களை கொடுத்தால், அங்கே அந்த ரோபாட்டுக்கு சீன மொழி புரிவதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கும்.

3. மூன்றாவது வாதம் கொஞ்சம் கூட இடத்தை விட்டுக்கொடுப்பதில்லை. இவர்கள் அங்கே நடப்பது புரிதல்தான், அது புரிதல் இல்லை என்றால், இது “புரிதல்” என்றால் என்ன என்பதே நமக்கு இன்னும் சரியாக தெரியவராததால் வரும் குழப்பம் என்று வாதிடுகிறார்கள். நமது புரிதல் பற்றிய உள்ளுணர்வு சரியாகும்போது நமக்கு இது இன்னும் ஒழுங்காக புரியும். நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பது அவர்கள் தரும் விளக்கம்!

கணினியியலில் இருந்து ஆரம்பித்து எதை எதையெல்லாம் இந்த கற்பனை சோதனை தொட்டிருக்கிறது பாருங்கள்!

சீன அறைக்கு பதில் சீன நாட்டு சோதனை

மனித மூளை செயல்படுவது என்பதே மூளைக்குள் இருக்கும் நியூரான்கள் எந்த ஒரு நிலைமைக்கும் ஏற்றாற்போல் ஒன்றை ஒன்று கிளப்பிவிட்டு விழித்தெழ வைக்க அதனாலேயே மூளையில் உண்டாகும் பல்வேறு நிலைகள்தான் என்பது நரம்பியல் நிபுணர்களின் கருத்து. சேர்ள் பரிந்துரைத்த சோதனையில் நாம் அலசுவது ஒரே ஒரு மனித மூளையின் செயல்பாட்டை பற்றி மட்டும்தான். Ned_Blockஅதற்கு பதில் இன்னொரு சிந்தனையை மேற்கொள்வோம். இதன்படி ஒரு சாதாரண மனிதமூளையில் நூறு கோடி நியூரான்கள் இருப்பதாகக்கொள்வோம். துயரம் என்ற நிலைமை வரும்போது, இந்த நூறு கோடி நியூரான்களில் குறிப்பிட்ட அறுபது கோடி நியூரான்கள் ஒரு கோடியில் இருந்து ஆரம்பித்து ஒன்றை ஒன்று உசுப்பி விழித்தெழ வைப்பதாக வைத்துக்கொள்வோம். இப்படி அறுபது கோடி நியூரான்களும் விழித்தெழுந்து ஒரு வித தொடர்பு நிலையை அடைந்தவுடன் மனிதமனம் துயரத்தை உணர்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு மனித மூளையில் உள்ள நூறு கோடி நியூரான்களை சீனாவின் மக்கள்தொகைக்கு இணையாக கொண்டு, சீனாவின் ஒரு கோடியில் ஆரம்பித்து அறுபது கோடிப்பேரை தொலைபேசி மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளச்செய்வோம். ஒருவருடைய தொலைபேசி ஒலிக்கும்போது, அதை அவர் எடுத்து பெரிதாக ஏதும் பேசக்கூட வேண்டாம். அவருக்கு அந்த அழைப்பு வந்தவுடன் அவருக்குக்கொடுக்கப்பட்டு இருக்கும் எண்களுக்கு அவர் தொலைபேசி அழைப்புக்களை செய்யவேண்டும். அவ்வளவுதான். இப்படியாக ஒரு மூளைக்குள் ஒரு குறிப்பிட்ட தொடர்முறையில் நியூரான்கள் விழித்தெழும் அதே வரிசையில் நாம் அறுபது கோடி சீனர்களை தொலைபேசிமூலம் விழித்தெழவைக்கிறோம்.

மூளைக்குள் இருக்கும் தனித்தனி நியூரான்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய இயந்திரத்தில் இருக்கும் சிறு பற்சக்கரங்களைப்போல் என்று கொண்டால், தனித்தனி சக்கரங்களுக்கு மொத்தமாக இயந்திரம் என்ன செய்கிறது என்று தெரியாது என்பதைப்போல், நியூரான்களுக்கும் சரி, தனியொரு சீனருக்கும் சரி மொத்தத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் கடைசியில் அந்த மனிதமனம் அறுபது கோடி நியூரான்கள் விழித்தெழும்போது துயரத்தில் ஆள்வதுபோல், அந்த அறுபது கோடி தொலைபேசி அழைப்புகளும் சரியான வரிசைப்படி செய்யப்பட்ட உடன் சீனா என்ற முழு தேசமும் துயரத்தில் இருப்பதாக கொள்ளலாமா? 1978 வாக்கில் இந்த கேள்வியை எழுப்பியவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நெட் பிளாக் (Ned Block) என்ற தத்துவ பேராசிரியர். இந்த சிந்தனை சோதனை மூலம் இவர் சொல்லவருவது மனிதர்களின் மனசாட்சி, தான் என்கிற பிரக்ஞை எல்லாமே ஒரு மாயை என்பதுதான். இந்துமத கோட்பாடுகளில் எங்கேயோ கேள்விப்பட்டது போல் இல்லை?

(தொடரும்)