ஒரு குளத்தங்கரைப் பகல்
சுடும் வெயிலைச் சுடும் வெயிலில்
எனக்கு முன்னே நில்லாமல் இறங்கிச் செல்லும் படிகளில் தாவி
இறங்கி
படித்துறையின் பாசி பிடித்து வழுக்கும் கடைசிப் படியில் கவனமாய்க் கால் நனைத்து
மறுபடியும்
எனக்கு முன்னே நில்லாமல் ஏறிச் செல்லும் படிகளில் தாவி
ஏறி
மேல் படி தொடும் நிலத்தில் நின்று காணும் சுடும் கணத்தில் தான் அறிவேன்.
சதா
இறங்கியும் ஏறியும்
ஏறியும் இறங்கியுமாய் வெப்பில் மூச்சிளைக்கும் படிகள்.
வேர்த்து
விறு விறுத்திருக்கும் நீர்க்குளம்.
தகிப்பில்
ஊர் மந்தை எருமையாய்க் குளத்தில் விழுந்து ஊறித் திளைக்கத் தவிக்கும் என் காலடி நிலம்.
ஒரு காலடி கூட எடுத்து வைக்க எந்த அவாவுமில்லாமலிருக்கும்
குளத்தங்கரை அரச மரம்.
வரந் தரும் அரசமரத்தடிப் பிள்ளையார் கழுத்தில் போட்ட பூ மாலையை இழுத்துத் தின்னும் ஒரு சினை ஆடு.
யாரும் பொறி கூடப் போடாத பாசிக் குளத்தில் செங்குத்தாய் வீழும் சூரியனை இரை விழுங்க எகிறும் மீன்கள்.
சொக்கப் பனையாய் எரியும் என் நிழலில்
சொக்கிக் கிடக்கும் நான்.
காட்டுக்குள் காடு
நெளிந்து நெடுஞ் சடையாய் நீளும் மலைக் காட்டு வழி
நெட்டுக் குத்தலாய்
ஏறும்
ஏற்றத்தில் அங்கங்கே நின்று மெல்ல ஏறி உள் மூச்சு வாங்கி
நிற்க
வழியோரம் நெடுக
ஊரும் கறுப்புக் கோடு போல் ஊரும் கட்டெறும்புகளின் வரிசையில் இளைப்பில்லாமல் செல்ல மேற்செலவில் சேர்ந்து ஊர்வேன்.
எறும்புகள்
ஊற்றாய்க் கடைசியாய் உள் நுழையும்
பொந்தில்
கடைசி எறும்பாய் உள் நுழைந்து காண
எறும்புகள்
தூக்கி வந்து வைத்திருக்கும் உள்ளே காட்டுக்குள் காட்டையே !