எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா?

ebola_poster

டாக்டர் உமர் ஷேக் கான் இறந்து போனார் என்று செய்தி 29 ஜூலை 2014ல் வந்தபோது பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தவில்லை. சியர்ரா லியோன் நாட்டில் ஒருவர் உயிர் வாழ்ந்திருந்தால்தான் அது செய்தியாக இருக்க முடியும் என்று கருநகைச் செய்திகளில் அது அமிழ்ந்து போனது. யார் இந்த டாக்டர் கான்? எங்கோ ஆப்பிரிக்காவில் ஒருவர் இறந்த்தற்கு நாம் ஏன் வருந்த வேண்டும்?

எபோலா காய்ச்சல் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு கினியா, சியர்ரா லியோன், லைபீரியா நாடுகளில் இதுவரை 900 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். நைஜீரியாவில் இது பரவிய செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியபின்னரே உலகம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பீதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எபோலாவைக் குறித்து கொஞ்சம் அறியலாம்.

1970களின் இறுதியாண்டுகளில்தான் எபோலா இரத்தகசிவு காய்ச்சல் என்பது வேறுவகையான ஒரு நோய் என்பதை மருத்துவர்கள் அறிந்தனர். ஜைர், கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் இந்த எபோலா தொற்று நோய்க்கு இன்று வரை மருந்து கிடையாது.

மீண்டும்… எபோலாவுக்கு இன்று வரை மருந்து கிடையாது. பரவும் வேகமோ படு தீவிரம். . நோயாளி தகுந்த தனிப்படுத்தப்பட்ட சிகிக்சைக்கு எடுத்துச் செல்லுமுன்பே இறந்து போவார். இறப்பு நேர்வதற்கும் நோய்ப்படுவதற்குமான விகிதம் 90%க்கும் மேல். சில நேரங்களில் 100% மரணம். முதுகெலும்புள்ள, பாலூட்டிகளைத் தாக்கிப் பரவும் இந்த வைரஸ் மனிதர்களில் பரவினால் முழுதுவதுமாக கிராமம் கிராமமாக அழித்துவிட்டே அடங்குகிறது.

எபோலா வைரஸில் மூன்று வகை இருக்கின்றன. இதில் மிகக் கொடியதாக ஜைர் எபோலா வைரஸ் என்பதைச் சொல்லலாம். மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் தொடர்புகளற்ற தொலை தூரப்பகுதிகளில் அடுத்தடுத்து மரணம் நிகழ்ந்த செய்தி கிடைத்தபின் அங்கு செல்லுமுன் பெருவாரியாக மக்கள் அழிந்திருப்பார்கள். உடல்கள் அவசரம் அவசரமாக புதைக்கப்பட்டு/ எரிக்கப்பட்டு சிதிலமடைந்திருக்கும். உயிருடன் இருப்பவர்கள் சிதறியோடியிருப்பார்கள்., இது எப்படி வந்தது? என்ற ஆய்வுகளைத் தகுந்த தகவல்கள் இல்லாது நடத்துவது பெரும் சிரமமாக இருந்தது.

சியர்ரோ லியோன் , லைபீரியா, கினியா நாடுகளின் எல்லைகளில் இருக்கும் கிராமங்களில் , ஒவ்வொரு நாட்டிலும் கலவரம், இயற்கையின் சீற்றம் நிகழும்போதும், மக்கள் இங்குமங்கும் செல்வது சகஜம். எபோலா காய்ச்சல் ஓரிடத்தில் வெடித்திருக்கிறது என்றால், பதற்றத்தில் மக்கள் ஓடி அடுத்த நாடுகளில் நுழைவதில் , அங்கும் காய்ச்சல் பரவுகிறது. இப்படித்தான் லைபீரியாவிலிருந்து, சியர்ரா லியோனின் எல்லை மாநிலத்தில் எபோலா காய்ச்சல் இந்த வருடம் பரவியிருக்கிறது என நம்பப் படுகிறது.

முக்கியமாக பழம் தின்னி வெளவால்கள், குரங்குகள் எபோலா வைரஸ்ஸின் தாங்கிகள், இவற்றின் இறைச்சியை உண்பவர்கள் அதனைச் சரியாக சமைக்காவிட்டால், அல்லது, அதன் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் பச்சையாக உணவில் கலந்தால், எபோலா உள் நுழையும். அத்தோடு இந்த வெளவால்கள் கடித்த பழங்களில் அதன் உமிழ்நீர் மூலம் தேங்கி, அதனை உண்ணும் கால்நடைகளுக்குப் பரவுவதும் சாத்தியம், இந்த கால்நடைகளின் உடல் திரவங்கள், சிறுநீர், சாணி போன்றவைகளிலிருந்து மேய்ப்பவர்களுக்குப் பரவுவதும் சாத்தியம். அந்த மக்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடங்களுக்குச் செல்வார்களாயின், பாஸ்போர்ட் விசா இன்றி இலவசமாக அண்டை நாடுகளுக்கு எபோலா காய்ச்சல் பரவும்.

_76625302_dr_khan

டாக்டர் ஷேக் உமர் கான்

இந்த அளவு தகவலை அரும்பாடுபட்டு, எல்லையில் துணிச்சலாக நின்று சேகரித்தது “ எல்லைகள் அற்ற மருத்துவர்கள் Medecins Sans Frontieres ” என்ற தன்னார்வல மருத்துவர் அமைப்பு. அதில் சியரா லியோனின் லைபீரிய எல்லையில் முன்னின்று நோயாளிகளைப் பராமரித்து சிகிக்சை அளித்தவர் டாக்டர் ஷேக் உமர் கான்.

சியரா லியோன் குறித்து Blood Diamond போன்ற ஹாலிவுட் படங்கள் மூலம் நீங்கள் அறிந்திருக்கலாம். எப்போதும் உள்நாட்டுப் போர். வைரம், தங்கம் போன்ற செல்வங்களுக்கான போர், கடத்தல் என்று சிதைபட்டிருக்கும் ஒரு மேற்கு ஆப்பிரிக்க நாடு அது. அதன் அண்டை நாடுகளும் அத்தனை வளர்ந்தவையல்ல. லைபீரியா, கினியா போன்றவை இன்றும் ஆப்பிரிக்காவின் அமைதிக்கு பெரும் தலைவலி.

எதற்கு இதனைக் கவனிக்க வேண்டுமென்றால், ஒரு நோய் பரவுகின்றது என்றால் அதனைத் தடுக்கத் தேவையான உள்கட்டமைப்பு இங்கு எதிலும் இல்லை. சியர்ரா லியோனின் எல்லை மாகாணத்தில் இருக்கும் மருத்துவ முகாமில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கும் மேல் செல்லும். குளிர்பதன அமைப்பு என்பதெல்லாம் அரிது. அந்த இடத்தில் எபோலா காய்ச்சல் கண்ட நோயாளிகளின் அருகே, சிகிக்சைக்குச் செல்லும் மருத்துவர்கள் முழு உடலையும் மறைத்திருக்கும் தடுப்புடைகளை அணிந்து பல மணி நேரம் நிற்க வேண்டும். இது எபோலாவை விடக் கொடியது.

சற்றே தடுப்புடையை விலக்கி நோயாளியைத் தொட்டால்.? இதற்கு எபோலா ரத்தக்கசிவு காய்ச்சல் என்ன செய்யும் என்பதை சற்று அறியவேண்டும்.

எபோலா வைரஸ், எந்த உடலில் ஏறுகிறதோ, அதன் செல்களை பிய்த்து, மரபணுக்களில் தனது மரபணுவைப் புகுத்தி பிரதிகளை உருவாக்கும். உருவாக்கப் பட்ட பிரதிகள், உடைபட்ட செல்லின் புரதங்களைச் சேர்த்து, தனது வெளிச்சுவற்றை உருவாக்கி வெளியேறும். இறந்த செல்கள் வெடித்து, வைரஸ் வெளியேறும்போது எபோலா க்லைக்கோப்ரோட்டின் என்ற புரதம் சுரக்கிறது. இந்தப் புரதம் ரத்த நாளங்களின் உட்சுவற்றில் ஒட்டிக்கொண்டு உட்புறமிருந்து தாக்குகின்றன. இதனால் மெலிவடையும் நாளச்சுவர்களின் வழியே, உள்ளிருந்து குருதி சவ்வூடு பரவும் தன்மையால் மெல்லக் கசிந்து வெளியேறும். கசிந்த குருதி, உடலுறுப்புகளில் நிறைய, உள் உறுப்புகள் மெல்ல செயல்பாட்டை இழந்து இறக்கின்றன. இரத்தம் கட்டுக்கடங்காமல் உடைந்த உடல் உறுப்புகளின் வழியே கசியும்.

எபோலா வைரஸ் தான் தாக்கிய செல்கள் , வேற்று உயிரியை எதிர்க்கும் வெள்ளையணுக்களுக்கு மின்செய்திகளை அனுப்புவதைத் தடுக்கிறது. இந்த வெள்ளையணுக்கள் எதிர் நுண்ணுயிரி உடலில் புகுந்ததை அறிந்தாலே, நோய் எதிர்ப்பு இயக்கம் தூண்டப்படும். பன்மடங்கு பெருகியபின், எபோலா வைரஸ், வெள்ளையணுக்களையே தாக்கி அதன்மூலம் உடலின் பல உறுப்புகளை அடைந்து பெருகுகின்றது.

உடலில் செல்கள் பெருமளவில் உடைந்து வைரஸின் பிரதிகள் அதிகமாய் வெளியேறும்போது, சைட்டோகைன் என்ற மூலக்கூறுகளைத் தூண்டுகிறது. இந்த ஸைட்டோகைன் மூலக்கூறுகள், நோய் எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டும். நோய் எதிர்ப்பாக வெள்ளையணுக்கள் இந்நேரத்தில் வைரஸைத் தாக்க இயங்கும். இதுவே காய்ச்சலாக பரிணமிக்கிறது. , பெரிய அளவில் சைட்டோகைன் விரைவில் தூண்டப்படுவதால், திடீரென கட்டுக்கடங்காத காய்ச்சல் தோன்றுகிறது. தலைவலி, வாந்தி, காய்ச்சல் என்று ஃப்ளூ போன்ற அறிகுறிகளுடன் தோன்றுவதால், முதலில் ஃப்ளூ என்றே ஐயம் கொள்ள வைக்கின்றது. இதனை சாதாரணமாக விட்டுவிட்டால், மிக விரைவில், மிகுந்த வலியைத் தந்தவாறே, எபோலா உடலெங்கும் வியாபிக்கும்,.ஒவ்வொரு உறுப்பாக கொஞ்சம் கொஞ்சமாக தன் வலிவை இழக்க, இரத்த வாந்தி, காதுகளில் மூக்கில் ரத்தம் வழிதல், பேதி, பெரும் காய்ச்சல், மூட்டுகளில் பெருவலி என்று தான் தாக்கிய உடலை மிக மோசமாக குரூரமாக அழித்துவிட்டே அடங்கும் எபோலா. இறப்பு ஒரு நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் நிகழலாம்.

இத்தனை கொடூரமாகக் கொல்லும் எபோலாவில் துடிக்கும் நோயாளியின் இரத்தமோ, சிறுநீரோ, மலமோ , சிகிச்சையளிப்பவரின் தொடுதலால் அவர் உடலில் புகுந்தால், அவரும் நோய்வாய்ப்படுகிறார். இப்படித்தான் டாக்டர் ஷேக் உமர் கான் நோய்வாய்ப்பட்டார்.

அப்படியானால் இது இன்னும் கொஞ்சநாளில் ப்ளேன் பிடித்து எங்க ஊரில் இறங்குமோ ? என்று பீதியடைய வேண்டாம். எபோலா இவ்வளவு தொற்று வியாதியாக இருப்பினும், அந்த நோயாளியின் உடல் திரவங்கள் படும்வரை ஆபத்தில்லை. சியர்ரா லியோனிலிருந்து நைஜீரியாவுக்கு வந்த ஒரு நோயாளி, நெரிசலான விமான பயணத்தில் இருந்திருந்தாலும், அவரால் அந்த விமானத்தில் வந்த எவருக்கும் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. மனிதர் இப்போது தனியறையில் மிக்க பாதுகாப்புடன் சிகிக்சை பெற்று வருகிறார்.

மேற்கு ஆப்பிரிக்காவின் ஆபத்தான இடம் என்று அறிவிக்கப் பட்ட பகுதிகளில் தைரியமாக முன்னின்று சிகிச்சை செய்யவும், மேலும் பரவ விடாமல் தடுக்கவும் , தைரியமும், விவேகமும், தன்னலமற்ற சேவை மனப்பான்மையும் கொண்ட மருத்துவர்களின் தேவை அதிகம். அந்த ஊர் மக்களின் நாகரிகம், பண்பாடு பழக்க வழக்கங்களை அறிந்த அந்த ஊர் மருத்துவர்கள் இருப்பது அவசியம்.

எபோலாவின் தீவிரம் அறியாத மக்கள், நோய்ப்பட்டவர்களைத் தனிமையில் விட அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும், இறந்தபின் , நோய் பரவாமலிருக்க , அந்த உடலை பாதுகாப்பாக அழிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். சில நேரங்களில், புதைப்பதற்கு முன் உடலை ஒரு முறை குளிப்பாட்டுவது என்று வரும் சடங்குகளால், மக்கள் நோய் வாய்ப்படுகின்றனர். கூட்டமாக புதைக்குமிடம் செல்வது, சில நேரங்களில் மருத்துவமனை/ பிரேதக் கிடங்கிலிருந்து சடலத்தை அடக்கத்திற்காகத் திருடிச் சென்றுவிடுவது என்ற பழக்கங்களால் எபோலா வேகமாய்ப் பரவுகிறது. இதனை மக்களுக்கு அவர்கள் மொழியில் எடுத்துச் சொல்லி, இன்று சியர்ரா லியோனில் எபோலா பரவாமல் தடுத்தவர் ஒருவர் உண்டு என்றால் அது ஷேக் உமர் கான் என்று தாராளமாகச் சொல்லலாம்.

கான் பணியாற்றிய Medicin Sans Frontierier என்ற அமைப்பு பாரீஸீல் ‘50களின் இறுதியில் தொடங்கப்பட்டு உலக இயக்கமாக வலுவடைந்த்து. உள்நாட்டுப் போர்கள், நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களில் பாதிப்படைபவர்களுக்கு ,மருத்துவக் கட்டமைப்பு இல்லாத இடங்களில் வரும் பேரிடர்கள், தொற்று நோய் பேரழிவுகள் தோன்றிய இடங்கள் என்று அடிப்படை வசதிகள் குறைந்த, இல்லாத இடங்களில் விளிம்பு நிலையில் நின்று பணியாற்றும் துணிச்சலான அமைப்பு எம் எஸ் எஃப். அதில் முன்னணியில் நின்று சேவை செய்ய துணிவும், தன்னலமற்ற தியாக மனப்பான்மை பெரிதும் வேண்டும். கான் இறந்தது, உயிரின நல்வாழ்வுக்கு பேரிழப்பு; எபோலாவுடனான போரில் ஒரு பெரும் பின்னடைவு, லைபீரியாவில் இதுபோன்று ஒரு மருத்துவர் போனவாரம் மரணமடைந்திருக்கிறார். இரு அமெரிக்க மருத்துவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். தகுந்த நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை மேற்கொள்ளப் பட்ட்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை . ஆனாலும் ஆபத்தில்லை என்று சொல்லமுடியாது. இது எபோலா.

இப்போதுதான் ஐரோப்பா மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. பல ஐரோப்பிய நாடுகள், தங்கள் விமான நிலையங்களில் எபோலா தாக்கிய நோயாளிகளைத் தனித்தறியும் திறன் கொண்ட ஆட்கள் இல்லை என தயக்கத்துடன் ஒத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இன்று வரை மும்பையில் ஒரு எச்சரிக்கையும் எழுப்பபடவில்லை. கல்கத்தா விமான நிலையத்தில் வந்து சேரும் பயணிகளை காய்ச்சல், வலி ,பேதி இருப்பின் விமான நிலைய மருத்துவரிடம் சொல்லவேண்டும் என அறிவித்திருக்கின்றனர்.

இந்த உயிர்க்கொல்லியை உயிரிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளின் கையிலிருந்து காப்பது பெரும் சவால் என உலக நாடுகள் கவலையடைந்திருக்கின்றன. எபோலா வைரஸ் நுழைந்த பின் ஒரு வாரம் வரை ஒன்றும் செய்யாமலும் இருக்கும். அந்த நேரத்தில், எபோலாவால் தாக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பவர்களை மக்கள்தொகை அடந்த நகரங்களில் விட்டு விட்டால், அதன் விளைவுகளை .இந்தியா போன்ற நாடுகளின் தொற்று நோய் தடுப்பு மையங்கள் எந்த அளவுக்கு சமாளிக்கும் என்பது தெரியவில்லை.

உசாத்துணை :

  1. http://www.independent.co.uk/news/world/africa/ebola-virus-top-sierra-leone-doctor-shek-umar-dies-of-disease-9636406.html
  2. https://internationalmedicalcorps.org/imc/_pressreleases/2014_7_28_pr_sierra-leone_ebola-update?gclid=Cj0KEQjwu_eeBRCL3_zm8aOtvvkBEiQApfIbGPKUAuE8_6VRVA6-lnjEOCGhNRSJ_tjFFdkH_yrKcQQaAoUg8P8HAQ#.U94EUvmSzp4
  3. http://en.wikipedia.org/wiki/Ebola_virus_disease
  4. http://www.cdc.gov/vhf/ebola/
  5. http://www.msf.org

0 Replies to “எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா?”

  1. வைரஸ் ஏற்படுத்தும் உடலின் அழிவுகள் பற்றிய விவரம் குலை நடுங்க வைப்பதுடன் படித்தவுடன் பேதியைக்கிளப்பும் அளவுக்கு கொடூரமாக உள்ளது கட்டுமான அடிப்படைத் தடுப்பு போன்ற வசதிகளோ அதிதீவிர பொறுப்பின் பேரில் எடுக்கும் நடவடிக்கை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஏதுமற்ற இந்தியா போன்ற நம் நாட்டில் இதன் விளைவுகள் நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது செய்தி பரவும் வேகம் ஒன்றே இதன் பரப்பைத் தடுக்க வல்ல ஓர் ஆயுதமாக இருக்கும் வாய்ப்பு மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது. கட்டுரையாளரின் சொல்லாட்சி வலிமையானது நோய் பற்றிய முக்கியத் தகவல்களுக்கும் எச்சரிக்கைக்கும் நன்றி.

  2. பொதுவாக எபோலா வெகு பலமாகப் பரவாமல் இருக்கக் காரணமே அதன் வீரியம் தான் – வெகு விரைவில் கொல்லுவதால் பொதுவாக எபோலா வெளி வந்து தானாகவே ஒரு கிராமத்தில் அனைவரையும் அழித்து விட்டு நின்று விடும்.
    இத்தகைய வைரஸ்கள் என்ன சாதிக்கின்றன என்பதில் கேள்விகள் உண்டு. பொதுவாக அனைத்து உயிரினங்களின் நோக்கமும் தம்முடைய பிரதிகளைப் பரப்புவதே.நோய் பரப்பும் தொற்றுக் கிருமி மிக விரைவில் தன்னால் தாக்கப்படும் உயிரைக் கொல்வதால் அதற்குத் தான் நஷ்டம். அக்கிருமியால் பரவ முடியாமல் போகிறது. இதனால் முழுவதுமாக விரைவில் கொன்று போடும் கிருமிகள் பரிணாம வளர்ச்சியில் வெற்றி பெறுவதில்லை என்று படித்திருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.