இழந்த பின்னும் இருக்கும் உலகம்

உயிர் எழுத்து 2012 ஜனவரி இதழில் வெளியான – புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனர் மக்மல்பஃப் பற்றிய செழியனின் “சாலையில் வரும் ஆசிரியர்” என்ற கட்டுரைக்கு, அதே வருடத்தின் ஜூலை மாத இதழில் கௌதம சித்தார்த்தன் எழுதியிருந்த “சிறுவனைப் பின்தொடர்ந்த நான்…” என்ற அனுபவப் பகிர்வு நுட்பமாக அவதானிக்க வேண்டிய ஒன்று.

geometry-box3ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதியின் “Children Of Heaven” கடந்த பல பத்தாண்டுகளில் உலக சினிமா ஆர்வலர்களின் மத்தியில் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பை எளிதில் சொல்லிவிட முடியாது. பள்ளிகளுக்கிடையிலான ஓட்டப் பந்தயப் போட்டியில் இரண்டாம் பரிசான ஒரு ஜோடிக் காலணிகளைப் பெறுவதற்காக ஒரு பள்ளிச் சிறுவன் போட்டியில் கலந்துகொள்கிறான். கால்களுக்குப் பொருத்தமான காலணிகளை அணியாமல் வரும் மாணவர்களைப் பள்ளியில் தண்டிக்கிறார்கள். ஆகவே, அவனது லட்சியம் இரண்டாம் பரிசான காலணிகளின் மீதே குவிகின்றது. போட்டி நடக்கும் நாளில் வெறுங்காலுடன் ஓடுகிறான் சிறுவன். காலில் கொப்புளங்கள் ஏற்படுகிறது. வலியை மீறியும் ஓடுகிறான். ஒரு வெறியில் ஓடியவன் பந்தய தூரத்தை முதலில் கடந்துவிடுகிறான். முதற்பரிசாக ஒரு கோப்பையை அவனிடம் கொடுக்கிறார்கள். இரண்டாம் பரிசான காலணிகள் வேறோருவனுக்குச் சென்றுவிடுகிறது. முதல்பரிசு பெற்றும் தனக்கு வேண்டியதை இழந்து நிற்கிறான் சிறுவன்.

பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் வாழும் பெற்றோர்களின் குதிரைக் கடிவாள வாழ்க்கை, குழந்தைகள் மீதான பெற்றோர்களின் அதிகாரமும் அடக்குமுறையும், குழந்தைகளுக்கிடையிலான புரிந்துணர்வு, கல்வி நிறுவனங்களின் ஒழுக்க வரைமுறைச் சட்டகங்கள் என பல்வேறு கூறுகளில் மஜீத் மஜிதியின் இந்தத் திரைப்படத்தை அணுக இயலும்.

ஜேக் நியோவின் இயக்கத்தில் 2003- ஆம் ஆண்டில் வெளிவந்த “Home Run” என்ற திரைப்படம் பரவலான கவனத்தை அவருக்குப் பெற்றுத்தந்ததுள்ளது. மஜீத் மஜிதியின் “Children Of Heaven” மூலக்கதையை அவரது அனுமதியுடன் தழுவி எடுத்திருந்தாலும் முக்கியமான விருதுகளைப் பெற்ற ஆசிய திரைப்படம் இது. இந்த இரண்டு படங்களிலும் ஒரே செருப்பை அண்ணனும் தங்கையும் மாறிமாறி போட்டுக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்களுடைய சங்கடங்களே படம் முழுக்கவும் நீள்கிறது. உலகின் எல்லா நாடுகளிலும் இதுபோன்ற சங்கடங்களை எதிர்கொள்ளும் பள்ளிச் சிறார்கள் இருக்கிறார்கள். கல்விப் புலச் சூழலானது, சிறுவர்களின் யதார்த்த வாழ்விலிருந்து விலகியே இருக்கிறது. இந்த யதார்த்தச் சிக்கல்களை உள்ளது உள்ளபடி உளவியல் கூறுகளுடன் பிரதிபலிப்பதால் தான் ஈரானிய திரைப்படங்கள் காலம் கடந்தும் நிற்கிறது. மாற்று சினிமா ஆர்வலர்கள் கொண்டாடும் இலக்கணமாகவும் இத்திரைப்படங்கள் திகழ்கிறது.

geometry-boxஇந்தியாவுக்குப் பயணப்பட்ட ஈரானிய திரைப்பட இயக்குனர் மக்மல்பஃப் – வடபழநியிலுள்ள ஆய்வுக் கூடத்திலிருந்து மெர்ஷியாவுடன் வெளியில் வந்து இளைப்பாற பழச்சாறு அருந்திக் கொண்டிருக்கிறார். அதனைக் கவனித்த சாலையோரச் சிறுவன் பழரசக் கோப்பையைத் தன்னிடம் கொடுக்குமாறு கேட்கிறான். மறுகணம் யோசிக்காமல் எச்சில்பட்டக் கோப்பையை இந்தியச் சிறுவனிடம் நீட்டுகிறார் மக்மல்பஃப். கோப்பையைப் பெற்றுக்கொண்ட சாலையோரச் சிறுவன், நெடுஞ்சாலையைப் பிரிக்கும் திண்டில் செய்தித்தாளை விரித்து கால்மேல் கால்போட்டவாறு உட்கார்ந்து, ஓர் இளவரசத் தோரணையுடன் கடந்துசெல்லும் வாகனங்களையும் மனிதர்களையும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பழரசத்தைப் பருகத் தொடங்குகிறான். எல்லோருக்குள்ளும் விதவிதமான ஆசைகள் இருக்கிறது. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை கணநேர விருப்பங்கள். இந்தச் சிறுவனுக்குப் பழரசமே அந்த கணத்தில் தேவையானதாக இருக்கிறது. கேட்ட நொடியில் விருப்பப்பட்ட ஒன்று அவனுக்குக் கிடைத்தும் விடுகிறது. அதன்பின், உலக அரியாசனத்தில் உட்கார்ந்ததுபோல அவனது உடல்மொழி மாறுகிறது. இந்தச் சம்பவத்தை “சாலையில் வரும் ஆசிரியர்” என்ற உயிர் எழுத்து இதழில் வெளியான கட்டுரையில் செழியன் குறிப்பிடுகிறார்.

“இங்கு இந்தியாவில் சாலையில் தான் எத்தனை கதைகள்? அவ்வளவு உயிரோட்டமான கதாபாத்திரங்கள் உலவுகிறார்கள். கொஞ்சநேரம் சாலையைக் கவனித்தால் போதும், எத்தனை விதமான மனிதர்கள் கடந்து செல்கிறார்கள்.” என்று சொல்லும் மக்மல்பஃப், “இந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அவனிடம் ஒரு கதை நிச்சயமாக இருக்கும்” என்கிறார். “குழந்தைகளும் சிறுவர்களும் தானே நமது ஆன்மா. இதுபோன்ற மனிதர்களைப் படம் எடுங்கள்” என்று தனது இந்தியப் பயண அனுபவத்தை நினைவு கூர்கிறார் ஈரானிய இயக்குனர் மக்மல்பஃப்.

ஈரானிய இயக்குனர் போலவே, எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனுக்குக் கிராமத்துச் சிறுவனுடனான ஓர் அனுபவம் வாய்த்திருக்கிறது. நகர வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டது கிராமிய வாழ்வு. பள்ளியில் படிக்கும் சிறுவன் வெயில் சாயும் நேரத்தில், குளக்கரையில் ஜியோமெட்ரிபாக்சை வைத்துக்கொண்டு தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். புதிதாக வாங்கிய ஜியோமெட்ரிபாக்ஸிலுள்ள உபகரணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் குளத்துத் தண்ணீரில் வீசி எறிந்து மகிழ்கிறான் பள்ளிச் சிறுவன். அவனுக்குப் பின்னால் நின்றவாறு சிறுவனின் செயலை கவனித்துக் கொண்டிருக்கிறார் கௌதம சித்தார்த்தன். வெயில் பட்டு ஜியோமெட்ரிபாக்ஸ் ஒளிர்வதையும், ஒவ்வொரு கணித உபகரணத்தையும் குளத்துத் தண்ணீரில் வீசி எறியும் பொழுது மீன்கள் போல அந்தப் பொருட்கள், நீரினைக் கிழித்துக்கொண்டு செல்வதையும் பார்த்து ரசிக்கிறான் சிறுவன். ஒரு புள்ளியில் சிறுவனும் கெளதமனும் உரையாடத் துவங்குகிறார்கள்.

பள்ளியில் சிறப்பு கணிதத் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வில் கலந்துகொள்ள ஜியோமெட்ரிபாக்ஸ் அவசியம். ஏழைச் சிறுவனோ நன்றாகப் படிப்பவன். ஆசிரியர்களிடம் நல்ல பெயரும் வாங்குபவன். எனினும், படிக்கத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பவன். சிறப்புத் தேர்வில் கலந்துகொள்ள பள்ளித் தோழனிடம் ஆலோசனை கேட்கிறான் சிறுவன். குளத்து மீன்களைப் பிடித்து விற்பனை செய்து, அந்தப் பணத்தில் போட்டியில் கலந்துகொள்ளத் தேவைப்படும் ஜியோமெட்ரிபாக்ஸ் வாங்க ஆலோசனை கூறுகிறான் நண்பன். போலவே, ஒருநாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, மீனைப் பிடித்து இரவு நேரச் சந்தையில் விற்பனை செய்து அந்தப் பணத்தில் ஜியோமெட்ரிபாக்ஸ் வாங்கிக்கொண்டு பள்ளிக்கு வருகிறான் சிறுவன். விடுப்பு எடுத்திருந்த தினத்தன்று சிறப்பு கணிதத் தேர்வு நடந்து முடிந்ததைத் தெரிந்துகொண்டு மிகுந்த துயரம் அடைகிறான் அவன். பள்ளி விட்டதும் துயரத்துடனும் விரக்தியுடனும் குளக்கரைக்குச் சென்று ஜியோமெட்ரிபாக்ஸ் உபகரணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் குளத்தில் வீசி எறிகிறான் சிறுவன். நீர்நிலையின் மேற்பரப்பைக் கிழித்துக்கொண்டு செல்லும் பொருட்களின் குறுகிய நேரப் பயணம், அவற்றால் நீர்பரப்பில் ஏற்படும் சலனம், சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பு, இறுதியில் உபகரணங்கள் குளத்தின் ஆழத்திற்குச் சென்று மறைவது என சூழலை ரசிக்கத் துவங்குகிறான். இயற்கையுடன் இணைந்த மனநிலையில் அவனது துயரமும் விரக்தியும் வடியத் துவங்குகிறது. அவனது மன இறுக்கம் காணாமல் போகிறது. விளையாட்டு அவனது மனத்துயரை ஆற்றுகிறது. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மட்டுமே இந்த மனநிலை சாத்தியம். இந்த மனச்சமாதானம் தான் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிலைகளில் தேவைப்படுகிறது.

geometry-box2“கடந்து செல்லும் மனிதர்களை ஏளனமாகப் பார்த்துக்கொண்டே, பழரசத்தை அருந்தும் சிறுவனைப் பார்த்து நான் அசந்துவிட்டேன். அந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அங்கு ஒருகதை நிச்சயமாக இருக்கிறது. அதுதான் சினிமா. உலகில் எங்கும் இல்லாத அளவுக்குத் தணிக்கை விதிகள் இருந்தபோதும் ஈரானிய சினிமா ஒளிர்கிறதென்றால் அதன் காரணமென்ன? அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் தானே உண்மையான ஆன்மா. இதுபோல மனிதர்களைப் படம் எடுங்கள்” என்கிறார் தனது இந்தியப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட மக்மல்பஃப்.

கௌதம சித்தார்த்தனின் “சிறுவனைப் பின்தொடர்ந்த நான்…” என்ற கட்டுரையைக் குறும்படமாக எடுத்திருக்கிறார் தரமணி திரைப்படக் கல்லூரி மாணவர் பொன்தமிழ். கட்டுரையைக் கொஞ்சம் போல விரிவான தகவல்களைச் சேர்த்து காட்சி ஊடகத்திற்கு ஏற்ப மாற்றி இருக்கிறார். கட்டிட வேலைகள் நடக்கும் பள்ளியொன்றின் தாழிடப்பட்ட வகுப்பறையின் முற்றத்தில் கணிதப் பாடம் நடக்கிறது. சக நண்பர்களிடம் கணித உபகரணங்களை இரவல் கேட்கிறான் தங்கசாமி. மற்றொரு மாணவனிடமும் ஜியோமெட்ரிபாக்ஸ் இல்லை. வகுப்பு நடந்து கொண்டிருக்கையில் சக மாணவர்களிடம் பேசும் இருவரையும் கணித ஆசிரியர் எச்சரிக்கை செய்கிறார். மேலும் “நாளைல இருந்து யாராச்சும் பாக்ஸ் இல்லாம வந்திங்கன்னா. என் கிளாஸ் முடியிற வரைக்கும் முட்டி போடணும்,” என்கிறார்.

‘சிறப்பு கணிதத் தேர்வு’ பற்றிய சுற்றறிக்கை வருகிறது. அடுத்த பள்ளி நாளில், கணித வகுப்பு நடக்கும்போது மாணவர்களில் சிலர் பாக்ஸ் இல்லாததால் முட்டி போடுகிறார்கள். இந்தத் தண்டனையில் இருக்கும் பொழுது தங்கசாமியையும், உடன் முட்டி போட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு பையனையும் சமூகவியல் ஆசிரியர் அழைப்பதாக ஒரு மாணவன் வந்து கணித ஆசிரியரிடம் முறையிடுகிறான். இருவரும் சமூக ஆசிரியர் வகுப்பெடுக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். “டேய் பசங்களா… உங்க டெஸ்ட் பேப்பர நான் திருத்திட்டேன். சாயந்தரமா வீட்டுக்கு வந்து மத்தவங்களோட பேப்பர திருத்திடுங்கடா…” என்கிறார். இருவரும் தலையாட்டிவிட்டுச் செல்கிறார்கள். இவர்கள் மறுபடியும் வகுப்பிற்குச் செல்வதற்குள், நாளைய தினம் நடக்க இருக்கும் சிறப்பு கணிதத் தேர்வு பற்றிய அறிவிப்பைக் கணித ஆசிரியர் மாணவர்களிடம் தெரிவிக்கிறார்.

இது தெரியாமல் தேர்வு நடைபெறும் தினத்தன்று மீன்பிடித்து விற்று அதன் மூலம் ஜியோமெட்ரிபாக்ஸ் வாங்குவதற்கு விடுப்பு எடுத்துக்கொள்கிறான் தங்கசாமி. அதற்கடுத்த நாள் தேர்வெழுதக் கனவுகளுடன் வந்து ஏமாற்றம் அடைகிறான். இந்த ஏமாற்றத்தைச் சரி செய்யவே கணித உபகரணங்களைக் குளத்து நீரில் தனிமை நிறைந்த சூழலில் வீசி எறிந்து விளையாடுகிறான் அவன். சிறப்புத் தேர்வில் முதல் மாணவனாக வெற்றியடைய வேண்டும் என்ற வேட்கையை விட, மற்ற மாணவர்களைப் போலவே போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்பதுதான் தங்கசாமியின் ஆழ்மன விருப்பமாக இருக்கிறது. பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் வயதுவந்த பிள்ளைகளுக்கு மடிக்கணினி கொடுப்பதிலுள்ள ஆர்வம், பள்ளிச் சிறார்களின் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் அத்தியாவசிய கல்வி உபகரணங்களை வழங்குவதில் எந்த அரசும் முனைப்புடன் செயல்படுவதில்லை என்பது வருத்தமான விஷயம். குழந்தைகளுக்கு எது தேவை என்பதை பெற்றவர்களும் சரி, கல்விச் சூழலும் சரி, அரசு இயந்திரங்களும் சரி புரிந்துகொள்வதே இல்லை. உலகம் முழுமைக்கும் இந்தக் கூற்று பொருந்தும்.

குறும்படத்தில் நடித்த எவருமே தொழில்முறை நடிகர்கள் அல்ல. எல்லோருமே பொன்னேரிக்கு அருகிலுள்ள ஓர் அரசுப் பள்ளி மாணவர்கள். போலவே, குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படமும் கூட. தங்களிடமுள்ள குறைந்தபட்ச வசதிகளை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டக் குறும்படம் என்றாலும் இன்னும் கூட சிறப்பாக இவர்களால் எடுத்திருக்க முடியும். சில குறைகள் இருப்பினும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி இது என்பதை மறுப்பதற்கில்லை. ஜூலை மாதம் 5- ஆம் தேதி ஏற்பாடாகியிருந்த DBCIA முழுநாள் திரைப்பட விழாவில் இந்தக் குறும்படமும் திரையிடப்பட்டது. “அரைகுறையாகக் கட்டுமானப் பணிகள் நடக்கும் பள்ளி வளாகம், மதிய உணவில் புழு இருப்பது போன்ற மாணவர்களின் உரையாடல், முட்டி போட வைத்து தண்டனை கொடுத்தல், தேர்வுத் தாள்களை மாணவர்களை விட்டே திருத்த வைப்பது” போன்ற யதார்த்தச் சிக்கல்களைக் குறும்படத்தில் கொண்டு வந்தது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன், ஹோம் ரன், ஜாமின்ட்ரிபாக்ஸ், போன்ற பள்ளிச் சிறார்களின் வாழ்வைச் சித்திரிக்கும் திரைப்படங்களையும் குறும்படங்களையும் பார்க்க நேர்கையில் கவிஞர் சுகுமாரன் தனது பள்ளி வாழ்க்கை அனுபவங்களை நினைவு கூர்ந்து எழுதிய “இழந்த பின்னும் இருக்கும் உலகம்” என்ற அனுபவக் கட்டுரைதான் நினைவிற்கு வருகிறது. இந்தத் தலைப்பு எத்தனை வசீகரமானது.

எதிர்பார்த்த காலணிகள் கிடைக்கவில்லை. ஜியோமெட்ரிபாக்ஸ் விலைக்கு வாங்கியும் பலனில்லை. தமக்குத் தேவையானதை இழந்து இந்தச் சிறுவர்கள் நிற்கிறார்கள். இழப்பின் வடுவானது மச்சம் போல ஆழ்மன எண்ணங்களில் உறைந்து கிடந்தாலும், அவையெல்லாவற்றையும் மீறி இந்த உலகமே அவர்களுடையதாகத்தான் இருக்கிறது. எனினும், இச்சிறுவர்கள் எல்லாவற்றையும் கடந்து போகிறார்கள்.

ரத்தம் உறைந்த கால் கொப்புளங்களை மீன்கள் கொத்தித் தின்ன உட்கார்ந்திருக்கிறான் ஈரானியச் சிறுவன், எச்சில் பழரசத்தை ருசித்துப் பருகியவாறு வாகன இரைச்சல்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறான் மக்மல்பஃப் சந்திக்க நேர்ந்த இந்திய நகரத்துச் சாலையோரச் சிறுவன், கிராமத்து குளக்கரை ஒன்றில் கால் நனைத்து வீடு திரும்புகிறான் கௌதம சித்தார்த்தன் சந்தித்து உரையாடிய கிராமத்துச் சிறுவன். “இழந்த பின்னும் இருக்கும் உலகம்” – இந்தச் சிறுவர்களைப் பற்றி எழுதுகையில் இதைவிடப் பொருத்தமான தலைப்பு எனக்குக் கிடைக்கவில்லை. கவிஞர் கோபித்துக்கொள்ள மாட்டார் என்பதால் அனுமதியின்றி இந்தத் தலைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். திரைப்பட ஆர்வலர்கள் சிற்றிதழ்களை கவனித்து “சிறுகதை, நாவல், கவிதை” போன்ற இலக்கியப் படைப்புகளிலுள்ள அம்சங்களைக் காட்சி மொழிக்குக் கடத்துவதைப் போலவே, நிகழ்வுக் கட்டுரை ஒன்றையும் நுட்பமாக வாசித்துக் காட்சி மொழிக்குக் கடத்துவது ஆரோக்கியமான விஷயம். இந்தச் சூழல் தொடர வேண்டும்.