ஆவாரங்காடு

indian-village-street

“எளா கனகவல்லி வாளா சீக்கிரம்.தேரம் இருட்டுது”என்ற அமுதா வாசலில் கனகவல்லி தொடுக்க வைத்திருந்த கனகாம்பர மலர்களை நுகர்ந்துகொண்டிருந்தாள்.

“இப்பமே வந்துட்டியாங்கும்.எனக்கு வரவே இல்லிய.செத்தயம் நில்லுளா.ஈரப்பாவாடையோட நிக்கென்.மாத்திட்டு வாரேன்”கனகவல்லி கதவு விலக்கி வெளிவாசலை நோக்கி ஒவ்வொரு பூவாக நிமிண்டிக்கொண்டிருந்த அமுதாவை உள்ளே அழைத்தாள்.

“உள்ள வந்து என்னத்தளா பாக்க சொல்லுத.சீக்கிரம் மாத்து.எனக்கு அவசரமா போணும்”

“அவசரம்னா உம் மாப்பிளய கூப்டவேண்டியதான” என்றவாறே உள்ளாடை கொக்கியை கஸ்டப்பட்டு இணைத்துகொண்டாள்.ஈரப்பாவாடை சாணி மொழுகிய தரையில் குத்துச்செடியாய் கிடந்தது.அருகிலிருந்த தகரப்பெட்டியிலிருந்து பாச்சா உருண்டை வாசனையோடு ராமருக்குப் பிடித்த நீல நிற மேல்சட்டையையும்,கத்திரிப்பூ நிற சேலையையும் எடுத்துக்கொண்டாள்.

“நீ குளிச்சி மினுக்குததப் பாத்தா ராத்திரி ராமருக்கு நல்ல வேல வைப்ப போலுக்க”என்ற ராணி வாசல் கடந்து கதவு விலக்கினாள்.

“ம்க்கும் வேல மயித்த பாத்துட்டாலும்.பத்து நிமுசம் கிட்ட கெடந்தாலே பெரிய விசியம்”சேலை நுனியை இடுப்பில் செருகியவாறே சலித்துக்கொண்டாள்.

“என்னளா முதுவுலாம் சத துருத்திக்கிட்டு நிக்கி”

“இந்த பிச்சக்காரப்பயலுவ எண்ணக்கி குடுத்த அளவுல சட்ட தச்சிருக்கானுவ.அதுலயும் அந்த காமராஜ் தூமக்கி நா ஒரு அளவு குடுத்தா நாரப்பய அவன் பொண்டாட்டி சைசுக்கு தைக்கான்”

இருவரும் சிரித்துக்கொண்டனர்.

“செரி செரி சீக்கிரம் முந்திய மடிளா”

“நாயி நடுங்குத மாதி நடுங்காத.ரெண்டு நுமுசம் நில்லு.”

அமுதா கதவு விலக்கி வெளிக்கடந்தாள்.சைக்கிளை தொழுவத்தில் நிறுத்திக்கொண்டிருந்த ராமர் அமுதாவைக் கண்டதும்,

“என்ன அமுதா எங்க வீட்டு மாராணிய காங்கலிய”

“ம்ம்ம் ஒனக்கு இன்னக்கி எதொ விருந்து தாராளம் ராத்திரிக்கி.உள்ள மினுக்கல் நடக்கு”சொல்லிக்கொண்டே தெருவில் இறங்கினாள்.

வெளியே வந்த கனகவல்லி அடுப்படிக்கு சென்று கொதித்துக்கொண்டிருந்த அரிசியை கிண்டிவிட்டாள்.நெருப்பு அடுப்பின் வாசலுக்கு வெளியில் கிடந்தது.இரண்டு சீமக்கருவேல மரக்கட்டையை எடுத்து அடுப்பினுள் வைத்து தீயை ஒருங்கிணைத்தாள்.

“இந்தா ஒங்களத்தான.செத்தயம் அடுப்ப பாத்துக்கிடுங்க நா வெளிய பேட்டு வாரேன்”

சைக்கிள் செயினுக்கு எண்ணெய் போட்டுக்கொண்டிருந்த ராமர் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

“சீக்கிரம் வந்து தொல” என்றவன் பார்வை கழுத்துக் கீழிருந்தது.

ஏற்கனவே தெருவை அடைந்திருந்த அமுதா தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்ற சுமதியை வழிமறித்து வாயடித்துக்கொண்டிருந்தாள்.

“எளா இப்ப வாறியா இல்லியா”அமுதா அலறினாள்.

வாசல் கடந்தவளை சற்று நேரம் பின்புறம் நோக்கிவிட்டு குளிக்கத் தயாரானான் ராமர்.கனகவல்லி வருவதைக் கண்ட அமுதா சுமதியிடம்”போளா சீக்கிரம் போயி கொடத்த வச்சிட்டு வா.எவட்டயாது வா பாத்துட்டு நின்னுறாத” என்றாள்.

சுமதி ஓட்டமும் நடையுமாக தண்ணீர் குடத்தோடு கடந்தாள்.குடத்திலிருந்து தளும்பிய நீர் தரையில் விழ புழுதி எழுந்து அடங்கியது.இருவரும் மெல்ல நடக்கத் தொடங்கினர்.

ஊரிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் மண்சாலையில் அரைகாத தூரம் சென்றால் ஒரு பாலம் வரும்.பாலத்திலிருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் நூறு மீட்டர் சென்று வடப்புறம் திரும்பினால் ஆவாரங்காடு.பெண்களுக்கான பகுதி.பாலத்திலிருந்து கிழக்கு பக்கமுள்ள குளக்கரை முழுவதும் ஆண்களுக்கான பகுதி.குளத்தில் நீர் இல்லாத நாட்களில் குளக்கரை சுத்தமாக இருக்கும்.குளம் தான் எல்லாவற்றிற்கும்.குளத்திலிருந்து மேற்கு நோக்கினால்,அதிகாலை வெயில் பட்டு அந்தரங்கம் களையும் மேற்குத்தொடர்ச்சி மலையெனத் தெரியும் ஆவாரங்காடு.

ஊரிலிருந்து பாலம் நோக்கி திரும்பும் முச்சந்தியில் நின்று கொண்டிருந்தனர்.தெருவின் நிறம் அடர் சாம்பல் நிறமாய் மாறியிருந்தது.தெருவிளக்கு வெட்டப்பட்ட பல்லி வால் துண்டென துடித்துக்கொண்டிருந்தது.மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளும்,மாடுகளும்,மனிதர்களும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

“ம்ப்பா.. ம்ப்பா..இந்தேரு..எங்க போது.?..தா..யோ..ளி.. செப்புல ஒண்ணு வச்சம்னா தெரியும்,”சின்னமணி தாத்தா அருகிலிருந்த செடியை மேயச் சென்ற மாட்டை அடிப்பதுபோல் பம்மாத்துக்காட்டி சாலைக்கு திருப்பினார்.

சுமதியும் இணைய மூவரும் ஒதுங்கி நின்றுகொண்டனர்.

“சீக்கிரம் பத்திட்டு போறும்யா.ரெம்பதான் கிலாவுதாரு”என்று வழக்கம்போல் போலிச்சண்டைக்குத் தயாரானாள் அமுதா.

“வாடீ எம்மருமொவள.ராத்திரி வா வீட்டுக்கு சாவாசமா எப்புடி பத்தணும்னு சொல்லித்தாறேன்,”என்றவர் முகம் முழுவதும் சிரிப்பு.

“ம்ம்க்கும் ஒம்மமாதியே ஒம்ம மாடும் வீடு வீடா அலையுது பாரும்.”

கடந்தனர்.

மாடுகளின் பின்னால் தெருவெங்கும் புழுதிக்காடு.மூன்று சிறுவர்கள் வட்டு உருட்டியவாறே வேகமாக மாட்டின் பின்னால் ஓடினர்.நடுவில் சென்றவனுக்கு கால்சட்டை அவிழவே ஒருகையால் பிடித்துக்கொண்டே வட்டுருட்டினான்.

“ஒங்க எளவுல நின்னுட்டு போய் சேர பத்து மணி ஆயிரும் போலுக்க,”சலித்துக்கொண்டாள் அமுதா.அடி வயிறு இளக ஆரம்பித்திருந்தது.

“இன்னும் வடக்க பாலத்துல ஒரு எளவெடுத்த கூட்டம் இருக்கும்”சேலைத்தலைப்பால் மூக்கை பொத்திக்கொண்டே கூறினாள் கனகவல்லி.

ஊரின் கடைசி வீடான கொறக்கட்டி வீட்டை கடக்கும்போது,கொறக்கட்டி பொண்டாட்டியுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தான்.கெட்ட வார்த்தைகள் பின்னல் பின்னலாய் காற்றில் கலந்தன.பாலத்து அரட்டை கேட்க ஆரம்பித்தது.”சத்தமாக சிரிப்பது குட்டியாகத்தான் இருக்கும்.அந்த நாய்தான் எதுக்கெடுத்தாலும் கெக்கலிச்சி சிரிக்கும்,”என்று மனதில் எண்ணிக்கொண்டாள் அமுதா.

சாலையின் இருபுறமும் மூன்றடிக்கொரு எருக்கஞ்செடி வளர்ந்து படர்ந்து கிடந்தது.அவற்றிற்கிடையில் காய்ந்து கிடந்த நெருஞ்சிக் கொடியும்,கொளிஞ்சிச் செடியும்,தும்பைச் செடியும் நிழல்போல் தெரிந்தன.

அவர்கள் பாலத்தை அடையும்போது யார் என்ன பேசுகிறார்கள் என்று அவதானிக்க முடியாத அளவுக்கு குரல்கள் விரவிக்கிடந்தன.மூவரும் கடக்கும் தருணம் மட்டும் அமைதி.

“எல யார்ல?”கிசுகிசு குரல்.

“ராமர் பொண்டாட்டி மட்டும் மினுக்கா தெரிதா.மத்த ரெண்டும் அந்த கோவேரிக் கழுதயளாதான் இருக்கும்,”கிசுகிசு குரல்.

வெடித்து சிரித்தனர்.

“பேதி எடுக்கு பாரு தூமயளுக்கு,”என்று தூரத்தில் சென்று அமுதா சொன்னது அவர்கள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

ஆவாரங்காட்டில் மனிதத்தலைகளும்,ஆவாரஞ்செடியும் வித்தியாசமின்றி தெரிந்தன.கள்ளிவேலி ஓரமாக வடக்கு நோக்கி செல்லும் ஒத்தையடிப்பாதையில் சற்று தூரம் நடந்தனர்.பின் செங்கோண முக்கோணமாய் அமர்ந்துகொண்டனர்..யாரோ இருவர் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.இரு சக்கர வாகனம் பேரிரைச்சலோடு இருளைக் கிழித்துக்கொண்டு கடந்தது.

அவர்களுடன் சும்மா கணக்குக்கு அமர்ந்திருந்தாள் கனகவல்லி.அவளுக்கு எந்த தூண்டலும் இருந்திருக்கவில்லை.சற்று நேரத்தில் மூவரும் எழும்பவும் கள்ளிவேலியிலிருந்து ஆந்தை பெருங்குரலெடுத்து கத்தியவாறு கடந்தது.

திரும்பி வரும்போது பாலத்தில் கூட்டம் குறைந்திருந்தது.பாலத்தின் மேற்கு பக்கம் யாரோ இருவர் புகைத்துக் கொண்டிருந்தனர்.நெருப்புக்கணல் விரிந்து சுருங்கியது.கிழக்குப் பக்கம் மூன்று உருவம் தெரிந்தது.ஏதோ நீண்ட உரையாடலுக்கு பிந்தைய அமைதி.

“எங்களா அந்த பிச்சக்காரப்பயல காங்கல”என்ற சுமதி கனகவல்லி இடுப்பைக் கிள்ளினாள்.

“எங்களா கைய வைக்க? அவன்ட்ட சண்டக்கி போலனா ஒனக்கு ஒறக்கமே வராதா?”

“பேரப்பாரு குட்டி ஜட்டின்னுக்கிட்டு”

சிரித்துக்கொண்டே ஊர் எல்லையை அடைந்துவிட்டனர்.கொறக்கட்டி இன்னும் கத்திக்கொண்டிருந்தான்.தெருவில் புழுதி அடங்கியிருந்த்து.மாட்டுப்பண்ணை ஆட்கள் கேன்களைத் தூக்கிக்கொண்டு அலைந்துகொண்டிருந்தனர்.பால் கறக்கும் சத்தம் ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருந்தது.

“தாயோளி எங்க சுத்துது..ஹ்ம்ம்ம்..இந்தேரு..ம்ம்ப்பாஆஆஆ..கால ஆட்டாத ஒண்ணு வச்சம்னா தெரியும்.முதுவு உறுத்துதோ” குரல்கள் கடந்தன.

தெருவிளக்கு வெளிறிய வெள்ளை நிறத்தில் எரிய ஆரம்பித்திருந்தது.கொசுக்கள் மொய்த்திருந்ததால் அதன் வெளிச்சம் சிதறியது.

“ செரிளா ராத்திரி நடக்கத காலேல சொல்லு”வாயைப்பொத்தி குலுங்கி சிரித்துக்கொண்டே விடைபெற்றாள் அமுதா.கூடவே சுமதியும்.

கனகவல்லி வீட்டு வாசலில் நுழையும்போது ராமர் குளித்து முடித்து முற்றத்தில் அமர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்தான்.

“இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சி வரவேண்டியதானளா.”

“எவ்ள தூரம் இருக்கு பேட்டு வரண்டாமா,”கீழ்ப்பக்கமுள்ள மறைவில் அமர்ந்தவாறு பதிலளித்தாள்.

“சோத்த வடி கொழஞ்சிறப்போது.என்ன கறி வைக்கப்போற?”

“வெள்ளப் பயித்தங்கொழம்பு வைக்கலாம்னு பாக்கேன்.”

“அத ஓந்தலையில வச்சிதான் அறக்கணும்.”

“வேற ஒண்ணுமே இல்ல கறிக்கி பெறவு என்னய.”

அதன்பின் இருவரும் எதுவும் பேசவில்லை.அரைமணி நேரத்தில் குழம்பு வைத்துமுடித்தாள்.முற்றத்தில் அமர்ந்து உண்டுமுடிக்க வயிறு குளைத்து வலித்தது.மூச்சு திணறியது.குனிந்தாள்.நிமிர்ந்தாள்.வயிற்றை அழுத்திப் பற்றினாள்.வலி ராட்டினமாய் சுற்றி சுற்றி வந்தது.மெல்ல கடைக்கு சென்று இரண்டு கிளாஸ் ஓமத்திரம் குடித்தாள்.சற்று அமச்சல் குறைந்தது.ஊரே தூக்கத்தின் துவக்கப் புள்ளியில் போர்வை விரித்திருந்தது.வீட்டை அடைந்தாள்.

“எங்களா போன வா வந்து படு.”

வெளிப்புற விளக்கு முழுவதையும் அணைத்துவிட்டு அறைக்குள் சென்றாள்.குளித்து முடித்தபோது இருந்த உற்சாகமும் ஆர்வமும் காணாமல் போயிருந்தது.வயிறு வேறு சரியில்லை.அவனிடம் சொல்ல தைரியமுமில்லை.சொன்னாலும் “பத்து நிமுசம் கெட,”என்றுதான் சொல்வான் என்பதால் மனதை தயாராக்கிக்கொண்டாள்.அதற்குள் அவளைப் பிடித்து இழுத்து தனக்கடியில் ஆக்கினான்.

அவன் அகலும் நேரம் வயிறே வெடித்துவிடும்போல் இருந்தது.மெல்ல மூச்சைத் தளர்த்தி ஆடையற்ற உடலை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.இருட்டில் அவன் முதுகு நனைந்த கரும்பாறையாய் தெரிந்தது.வலி மீண்டும் உச்சத்தை எட்டியது.வெளியே செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.விட்டில் பூச்சிகளின் அவலம் தெருவின் நிசப்தத்தை குலைத்தது.

“என்ன செய்வது?எழுப்பி அவனை துணைக்கு அழைக்கலாமா?அழைத்தாலும் வருவானா?’ என்று குழம்பியவளாய் ஒரு சாய்ந்து அப்படியே கிடந்தாள்.நேரம் நகர்ந்தது.

சிறிது நேரம் கழித்து மெல்ல அவன் கை அவளது இடுப்பிலிருந்து மேலே நகர்ந்து பற்றியது.அவள் திரும்பும்முன் குப்புறக் கிடந்தாள்.தலையணையில் எச்சிலும் கண்ணீரும் வழிந்துகொண்டிருந்தன.

ஒரு பெட்டை நாய் தெருவழியே ஊழையிட்டுக் கடந்தது.

அவன் அகல்கையில் “என்னங்க எனக்கு வெளிய போணும்போல இருக்கு.செத்தயம் வாங்களேன்.”

“போளா மனுசனுக்கு ஒடம்பு வலி தாங்கமுடியல.பேட்டிரி கெடக்கு எடுத்துட்டு பேட்டு வா”என்றவாறே திரும்பி படுத்துக்கொண்டான்.

மெல்ல எழுந்து சேலையை உடுத்திக்கொண்டாள்.தெருவில் இறங்க தெருவிளக்கு வெட்டிக்கொண்டிருந்தது.ஊளையிட்டு சென்ற நாய் திரும்பி நின்று குரைத்தது.அதோடு இன்னுமிரண்டு நாய்கள் சேர்ந்து கொண்டன.ச்சீசீ என்ற அதட்டலுடன் வடக்கு நோக்கினாள். அடர்கருப்பாய் இருந்தது சாலை.டார்ச்சை அடித்தவாறு நகர்ந்தாள்.அடி வயிறு இளகிவிட்டிருந்தது.இருட்டு மெல்ல விழுங்கிக்கொண்டது.

கொறக்கட்டி வீட்டு நாய் வெறிகொண்டு குரைத்தது.பயம் வயிற்றை இறுக்க அங்கேயே சாலை ஓரம் எருக்கஞ்செடியின் அருகில் அமர்ந்தாள்.காய்ந்த கொளிஞ்சிச் செடி பின்னந்தொடையை குத்தியது.வெடித்து வெளியேறியது கண்ணீரும்தான்.

எழுந்து ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைந்தாள்.கால் கழுவி அறைக்குள் நுழைய அசதியில் அப்படியே உறங்கிப்போனாள்.நாய்கள் இன்னும் குரைத்துக்கொண்டே இருந்தன.

அதிகாலையே எழுந்து ஆவாரங்காட்டிற்கு சென்று வந்து காலை வேலைகளைத் தொடங்கினாள்.தெரு அதன் முழுபலத்தோடு இயங்க ஆரம்பித்திருந்தது.தண்ணீர் பிடிக்கும் இடத்தில் அமுதா பிடித்துக்கொண்டாள்

“என்னளா கண்ணப்பாத்தா ராத்திரி புல்லா தூங்கல போலுக்கு”என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“தேவிடியா நீ வாய் வச்ச ராத்திரி புல்லா வயித்தவலில கெடந்துருக்கென்.இந்த பயித்தங்கொளம்பு எளவு ஒத்துகிடல.”

“அய்ய்ய்யோ..ராமர் ஒன்ன கொல்லாம்மதான விட்டான்”

“அதெல்லாம் கொன்னுபோட்டாது அவன் வேலைய கரெட்டா செஞ்சிருவான்”என்று வெறுமையாய் கூறினாள்.

முகம் சுருங்கிய அமுதா”செரிளா நம்ம விதி அது என்னய”என்று சமாதானப்படுத்தினாள்.

குளிக்கமாட்டேன் என்று அடம்பிடித்த எதிர்வீட்டு பையனை அடித்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள் லட்சுமி.”பள்ளிக்கொடத்துக்கு குளிக்காம ஊத்த நாறிப்போயா போவாங்க.ஒன்ன மாதி பிள்ளியலாம் எப்பிடி அதுவளாவே குளிச்சி போதுவ” என்றவள் தலையில் ஒரு குட்டுவைத்து தண்ணீரை ஊற்றினாள்.

சைக்கிளில் கடந்தான் ராமர்.தூக்குச்சட்டிக் கூடை சைக்கிளில் தொங்கியது.

“எளா ராத்திரி வயித்த வலில அப்டி கெடந்து துடிச்சிருக்கென்.ஒரு வார்த்தகூட என்னனு கேக்காம போறத பாத்தியா”

“இருளா நாறப்பய சாங்காலம் வரட்டும்.என்னனு ஒரு முடிவு கட்டுதேன்.நாண்டுட்டு நிக்க மாதி நாலு கேள்வியாது கேக்காம உடமாண்டேன் பாரு.”

“என்ன பேசி என்னளா புண்ணியம்.செரி பீடி சுத்திட்டியா. ஒனக்கு எப்பம் கணக்கு”

“பதினோரு மணி கணக்குளா சுத்திட்டு இருக்கென்.ஒனக்கு எப்பம்?”

“எனக்கு 12 மணி கணக்குளா.செரி போ அப்பம் பெறவு பாப்பம்.”

காலை உணவுக்கு மீண்டும் அந்தக் குழம்பை சாப்பிடலாமா வேண்டாமா என்ற யோசனையின் முடிவில் சாப்பிட்டு முடித்திருந்தாள்.ஆடு,மாடுகள் மேய்ச்சலுக்கு கிளம்பின.தெருவெங்கும் சாணமும்,புழுக்கைகளும் நிறைந்திருந்தன.முற்றத்திலிருந்து பீடி சுற்றிக்கொண்டிருந்தவளுக்கு வயிறு வலிப்பதுபோல் இருந்தது.”இது என்ன எளவு இப்பிடி பண்ணுது” என்று எண்ணியவள் ஓமத்திரம் வாங்கி குடித்தாள்.சற்று நேரம் மூச்சு செறிவாயிருந்தது.மீண்டும் வலி உச்சத்தை அடைய மூச்சு முட்டியது.வெளியே செல்ல வேண்டும் என்று நடக்க ஆரம்பித்தாள்.

கொறக்கட்டி மனைவி கத்திக்கொண்டிருந்தாள்.அருகில் செல்ல செல்ல குரல் தெளிவாய் கேட்டது.

“தேவிடியாளுவ வீட்டு மின்ன வந்து பேண்டு போட்றுக்காளுவ.நல்லா அவிச்சி தின்னுபுட்டு அவளுவ வீட்டு அடுப்பாங்கரையில போயி பேலவேணியதான பலவட்ரைய”என்று அலறிக்கொண்டிருந்தாள்.நான்கைந்து குழந்தைகள் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தன.

அவமானத்தில் தனக்குள்ளே கூனிக்குறுகி எருக்கஞ்செடியை கடக்கையில் அடுப்புக்கரியால் மூடப்பட்டிருந்தது இரவு சென்றது. பாலத்தை அடைகையில் பயம் தொற்றிக்கொண்டது.கல்யாணமாகிய ஒன்றரை வருடத்தில் ஒருமுறையோ இருமுறையோ பகல் நேரத்தில் சென்றிருக்கிறாள் என்றாலும் அது உச்சிப்பொழுது.ஆள் நடமாட்டம் இருந்திருக்கவில்லை.குழப்பத்துடன் மேற்கே திரும்பி வடக்கு நோக்குகையில்,.ஆடு மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.மேய்ப்பர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.அதை விட்டால் வேறு இடம் இல்லாததால் தவித்துக்கொண்டிருந்தாள்.12மணி பீடிக்கணக்கு வேறு அழுத்தியது.ஆடு மாடுகள் அசைவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் திரும்பி குளத்துக்கரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.கரையில் எருமை மாடுகள் சாணமிட்டவாறே கடந்து சென்றன.

தூரத்தில் தெரியும் அடர்ந்த எருக்கஞ்செடியை நோக்கி நீரற்ற குளத்துவழி நடக்க ஆரம்பித்தாள்.அதற்கு முன்பே மாடுகள் குளத்திற்குள் இறங்கியிருந்தன.

0 Replies to “ஆவாரங்காடு”

  1. அருமையான எழுத்து நடை, கிராம்த்து பெண்கள் படும் வேதனைனை காட்சிகளாக கண்முன் கொண்டுவந்தன.
    திரு. ஆ. செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.