ஹாங்காங் கைமாறியபோது…

Hongkong_China_Communism_Freedom_UK_Democracy_Protest_HK_Mao

சில சமயம் சரித்திர நிகழ்வுகள் நடக்கும்போது அந்த மாற்றங்கள் அல்லது சூழ்நிலைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்றோ அல்லது வேறு என்ன மாதிரி மாற்றங்கள் நேரக்கூடும் என்றெல்லாம் நாம் யோசித்து இருக்கலாம். நல்லது நேரும்போது, இந்த நல்ல காலம் தொடருமா, அல்லது இடர்பாடுகள் வருமா என்ற கவலையும் சஞ்சலமும் இருக்கும்.

அப்படி ஒரு கலவையான சூழ்நிலையில்தான் ஹாங்காங் 1997 ஜூலை முதல் தேதியன்று இங்கிலாந்திடமிருந்து சீனாவிற்கு கை மாறிற்று. வரலாற்றுப்படி, 19ம் நூற்றாண்டில் முதலாம் அபின் போருக்குப் பின், சீனா பல பிரதேசங்களை இங்கிலாந்திடம் இழந்தது. 1898 ம் ஆண்டு ஹாங்காங் தீவுகள் இங்கிலாந்திடம் 100 வருட குத்தகையில் அளிக்கப்பட்டு, ஹாங்காங் இங்கிலாந்தின் காலனிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.1984ல் சீனாவும் இங்கிலாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்தக் குத்தகை முடியும் தருவாயில், 1997 ம் ஆண்டு ஜூலை முதல் தேதி இங்கிலாந்து ஹாங்காங்கை திருப்பித் தந்தது.

கைமாறும் உடன்படிக்கையில், 50 ஆண்டுகள் வரையில் ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், சீனாவின் கொள்கைகள் எந்த விதத்திலும் ஹாங்காங்கை பாதிக்காது என்றும் சீனா உறுதியளித்து இருந்தது. பிரதான தேசமான சீனாவின் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், ஹாங்காங்கிற்கு சிறப்பு விலக்குகள் அளித்து, அதை “ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதி” என்று அறிவித்தது. ஒருபடி மேலே போய், ஒரு சீன அதிகாரி, புனித நூல்களிலிருந்து “தர்மம்” பற்றி மேற்கோள்கள் காட்டி, சீனா எப்படி வணிக தர்மத்தை நிலை நாட்டும் என்று ஆணித்திரமாகக் கூறியதாக செய்திகள் வெளி வந்தன – பின்குறிப்புடன்: வணிகர்கள் பேசாமல் – அரசியலில் மூக்கை நுழைக்காமல் – தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் வரையில் ஒரு பிரச்சனையும் இருக்காது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டதாக அந்தச் செய்திகள் கூறின. சந்தைப் பொருளாதாரம், மற்றும் சுயேச்சையான பொருளாதார சூழ் நிலையம் கைமாறுதலுக்குப் பிறகும் தொடரும் என்றும் புதிய தலைவர் துங் சீவா உறுதியளித்திருந்தார்.

குறிப்பாக இந்திய வணிகர்களுக்கு எந்த விதப் பாதிப்பும் இருக்காது என்று குறிப்பிடப்பட்டது. ஹாங்காங்கின் மக்கள தொகையில் அரை சதவிகிதம் மட்டுமே இருக்கும் இந்தியர்கள் ஹாங்காங்கின் மொத்த வியாபாரத்தின் 10 சதவிகித அளவை நிர்வகிக்கின்றனர் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. இப்படிப் பொருளாதார நிலையில் வலுவான ஒரு இனத்தினரை சீனா விட்டுக்கொடுக்காது என்றும் கூறப்பட்டது.

இருந்தாலும் பரவலாக மக்களிடம் இதுவரையில் இங்கிலாந்து பிரஜைகளாக ஜனநாயக முறையில் வாழ்ந்திருந்த தங்கள் வாழ்க்கை இனி எப்படி இருக்கும்; சீனாவின் கம்யூனிசக் கொள்கைகளும், ஆதிக்க முறைகளும் தங்கள் வாழ்வைப் பாதிக்குமா, என்றெல்லாம் பலவிதக் குழப்பங்கள் நிலவின.

அப்போது, சிங்கப்பூரிலிருந்து அந்த நிகழ்வைப் பற்றி பத்திரிகைகளுக்கு செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்த நானும் என்னைப் போன்ற செய்தியாளர்கள் பலரும் தங்கள் செய்திகளில் மக்களின் அந்தக் கவலையையும் சஞ்சலங்களையும் பிரதிபலித்தனர்.

இன்று 17 ஆண்டுகள் கழித்து ஹாங்காங்கிலிருந்து வரும் ஜனநாயகப் போராட்டச் செய்திகளைப் பார்த்தால் அந்தக் கவலைகளுக்கு அர்த்தமுள்ளதோ என்று தோன்றுகிறது.

1997 ம் வருடம் நான் அனுப்பிய அந்தச் செய்திகளில் ஹாங்காங் இந்தியர்களின் கலக்கங்கள் குறிப்பாக அதிகம் பதிவாகியிருந்தன.

இனி, என் தடம் சொல்லும் கதைகளில் பின்னோக்கி அடுத்த பயணம்.

செய்தி நாள்: 11.2.1997. இடம் – சிங்கப்பூர்.

“ஹாங்காங் இந்தியர்களிடையே மகிழ்ச்சி நிலவியது. காரணம்? பிரிட்டிஷ் பிரஜைகளாக பல தலைமுறைகளாக ஹாங்காங்கில் வாழ்ந்த தாங்கள் ஜூலை முதல் தேதி நாடு சீனாவிடம் கைமாறும்போது தாம் நாடற்றவர்களாக ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தவர்களுக்கு, சீனர் அல்லாத சிறுபான்மை இனத்தவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை அளிக்கப்படும் என்று இங்கிலாந்து அறிவித்து விட்டது.

ஹாங்காங்கில் சீனர்கள் 97 சதவிகிதம். மற்றவர்கள் 3 சதவிகிதம். இந்த 3 சதவிகிதத்தில், இந்தியர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், மற்றும் ஐரோப்பியர்களும் அடக்கம். இவர்களில் இந்தியர் ஏழில் ஒரு பங்கு.

ஹாங்காங்கில் இருக்கும் சீனர்கள் ஜூலை முதல் தேதிக்குப் பின்னர் இயல்பாக சீனப் பிரஜைகளாகிவிடுவர். ஆனால் இந்தியர்கள், மற்ற சிறுபான்மை இனத்தினர் நிலை அப்படி அல்ல. அவர்கள் சீன அரசியல் சட்டமைப்பின் படி அந்நிய இனத்தினர் என்பதால் சீனக் குடியுரிமை பெற முடியாது. இரட்டைக் குடியுரிமை முறையும் அங்கே வழக்கமில்லை.

சுமார் 8000 சிறுபான்மை இனத்தினர் இவ்வாறு நாடற்ற நிலையில் விடப்படுவார்கள் என்று கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் நாடற்ற நிலையில் இருக்க நேரிடும் சிறுபான்மையினரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆசிய நாடுகளிலிருந்து, குறிப்பாகப் பழைய பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து – அதாவது பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற பகுதிகளிலிருந்து குடியேறியவர்கள். எனவே இன்றைய இந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இனம் கண்டுபிடிப்பதோ, அதைக் கொண்டு இந்தியக் குடியுரிமை வழங்குவதோ இயலாத காரியம். அதனாலேயே இந்தியா மௌனம் காத்தது என்று சில ஹாங்காங் இந்தியர் நினைத்தார்கள். தற்போது பெரும்பாலும் இவர்களிடம் இருப்பது “பிரிட்டிஷ் சார்ந்த பிரதேச சான்றிதழ்”(British Dependent Territory Certificate). ஆனால் இவர்கள் வைத்து இருக்கும் பாஸ்போர்ட்டில் வெளி நாடு வாழ் பிரிட்டிஷ் பிரஜைகள்- British National(Overseas) என்ற சான்றிதழ்கள் இருந்தன. பிரச்சனை என்னவென்றால், இவை வெறும் பயணச் சான்றிதழ் மட்டுமே. இதை வைத்துக் குடியுரிமையைப் பெற முடியாது; அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கவும் முடியாது.

இந்த நிலைமையில் இந்தியர்கள் இந்தியா திரும்பலாம் என்றால் இந்திய அரசியல் சட்டமைப்பின் படி, இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து குறிப்பிட்ட வருடங்கள் இருந்திருக்க வேண்டும். தவிர, இத்தனை காலமும் பிரிட்டிஷ் பிரஜைகளாக ஹாங்காங்கில் வாழ்ந்து பழகியவர்களுக்குத் திடீரென்று இந்தியா திரும்புவதென்பது கடினமான ஒன்று. பெரும்பாலானவர்களுக்கு அங்கே உற்றார், உறவினர் என்று யாரும் கிடையாது. இந்திய அரசியல் சட்டமும் இரட்டைக் குடியுரிமையைக் கொடுக்காது.

இதற்கு இடையில் ஹாங்காங் இந்தியத் தலைவர்கள் சிலர் இப்படி நாடற்ற நிலையில் உள்ள இந்த ஹாங்காங் சிறுபான்மை இனத்தவர்களை இங்கிலாந்து தன நாட்டுகே குடிமக்களாக அறிவிக்க வேண்டும் என்று முயற்சி செய்தனர்.

“இங்கிலாந்து அரசிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தப் பலவிதக் குழுக்களை பலமுறை இங்கிலாந்து அழைத்துச் சென்றுள்ளேன். ஆனால், சிறுபான்மையினர் துன்பப்படும் நிலை ஏற்பட்டால் இங்கிலாந்து அரசு அவர்களை ஏற்றுக்கொள்ளும் என்ற உத்திரவாதம் மட்டுமே இதுவரை இங்கிலாந்து அரசிடமிருந்து கிடைத்து இருக்கிறது” என்று இரண்டு வாரம் முன்புதான் ஹாங்காங்கின் முக்கிய இந்திய தொழிலதிபர் திரு ஹரி என் ஹரிலேலா கூறியிருந்தார்.

“ஆனாலும் ஹாங்காங் வாழ் இந்தியர் தங்களது எதிர்காலத்தைப் பற்றி உற்சாகமாகவே இருக்கின்றனர். ஏனெனில் ஹாங்காங்கின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு இன்றியமையாதது என்பதை பெய்ஜிங் நன்கு புரிந்து கொண்டுள்ளது. அவர்கள் இந்த நாடு மேலும் வலுப்பெற உதவ வேண்டும் என்றும் அது விரும்புகிறது.” என்றும் அவர் கூறிஇருந்தார். ஹாங்காங் இந்தியக் கழகங்களின் கவுன்சிலின் தலைவராகவும் சீன ஹாங்காங்கின் முதல் தலைவரான துங் சீவா என்பவரைத் தேர்ந்தெடுத்த குழுவில் ஒருவராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார்.

இங்கே இந்தியர்கள் எண்ணிக்கை சுமார் 25,000. இவர்களில் அநேகம் பேர் வணிகர்கள். நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கும் வரையில் அவர்களுக்குப் பிரச்சனையில்லை. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் தற்போது நிலவும் நல்லுறவும் இவர்கள் நம்பிக்கைக்கு ஒரு காரணம்.

தவிர, இந்தியர்களில் அநேகம் பேர் பல வெளி நாடுகளில் குடியுரிமை அல்லது நிரந்தரமாக வாழும் சான்றிதழ்களை வைத்திருந்தனர். “இதனால் தேவைப்பட்டால் வேறு நாட்டில் சென்று குடியேற இவர்களுக்கு வாய்ப்பு உண்டு.” என்கிறார் சமீபத்தில் சிங்க்கப்பூரில் தன வியாபாரக் கிளையைத் தொடங்கி இருக்கும் ஹாங்காங் இந்தியர் ஒருவர்.

இப்படிப் பல தொழிலதிபர்களும், வணிகர்களும் பல வருடங்கள் முன்பே – நாடு கைமாறும் ஒப்பந்தம் கை யெழுத்தானதுமே – தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்கி விட்டனர்.

ஆனால் கடை நிலை ஊழியர்கள், குறைந்த வருவாய் உள்ளவர்கள் இப்படி மாற்றுக் குடியுரிமை ஏதும் இல்லாத நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றவர்கள்.

சில இந்தியரிடையே மற்றொரு கேள்வியும் எழுகிறது. “நாடு முழுவதையும், அதன் வளங்களையும் சேர்த்து சீனா எடுத்துக்கொள்ளும்போது, ஏன் இந்த நாட்டு மக்களையும் ஒரு சேர எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று இவர்கள் வினவுகின்றனர். ஆனால் இதுவரையில் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்தபோதும் இவர்கள் முழுமையாக இங்கிலாந்து குடிமக்களாக இருந்திருக்கவில்லை. அதே நிலையில் இவர்கள் தொடர்ந்து இருக்கலாமே என்று சீனா கருதுவதாக சீனாவின் நிலையை சிலர் விளக்குகின்றனர்.

இதற்கிடையில் ஜூலை முதல் தேதியையும் ஹாங்காங் சிறுபான்மையினரின் நிலைமையையும் உலகமே கரிசனத்துடன் கவனித்து வருகிறது. இங்கேயுள்ள இந்திய / பிரிட்டிஷ் கூர்க்காக்களை மலேசியா ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறது. ஆனால் மலேசியக் குடியுரிமையைக் கொடுத்தா என்று தெளிவாகவில்லை. அதேபோல் சிங்கப்பூரும் தன் குடியேற்ற விதிகளில் ஹாங்காங்கிலிருந்து வருபவர்களை வரவேற்க ஏதுவாக நிறைய விதிகளை மாற்றியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இங்கிலாந்து ஹாங்காங் சிறுபான்மையினரைத் தம் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளும் அறிவித்த்து பல ஹாங்காங் இந்தியர்களிடையே நிம்மதியைக் கொடுத்தது.

இது ஒருபக்கம் இருக்க, ஹாங்காங் சீனர்களிடையேயும் ஒருவித குழப்பமும், சஞ்சலமும் இருந்தது. பிரதான தேசமான சீனாவுடன் இணையும்போது எல்லாம் முன்பு இருந்ததுபோல் சுமுகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்பு போல் சுதந்திரமும், வெளிப்படையான வாழ்க்கை முறையும் இருக்காது என்று அநேகர் நினைத்தனர். சீனா தன் ஆதிக்கத்தைக் காட்டாமல் விடாது என்பது இவர்களது பயம். இதற்கு பயந்தே பலர் ஏற்கனவே உலகின் பல மூலைகளுக்குச் சென்று விட்டனர்.

இந்த வேதனையிலும் புன்முறுவலை வரவழைக்கும் ஒரு விஷயம் இருந்தது. ஹாங்காங்கை விட்டு வெளியேறும் சில சீனர்கள் தங்கள் முன்னோர்களின் நினைவிடங்களிலிருந்து அஸ்திகளையும் எடுத்துப் போவதாக செய்தி வர ஆரம்பித்தது. வருடம் ஒரு முறை அவர்கள் முன்னோர்களை கல்லறைக்குச் சென்று வழிபடும் பழக்கம் இருப்பதால், திரும்ப ஹாங்காங் வரமுடியாதே என்று அஸ்திக் கலசங்களையும் தாங்கள் போகும் ஊர்களுக்கு எடுத்துச் செல்கின்றனராம்! சான்பிரான்சிஸ்கோவில் கல்லறை நிர்வகிக்கும் ஒருவர் திடீரென்று அஸ்திக் கலசங்களை இடம் மாற்றும் பிசினஸ் அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டாராம்!

ருடம் 2014.

சரித்திரம் நடந்து 17 வருடங்கள் ஓடிவிட்டது. ஹாங்காங் கைமாறிய சில வருடங்களிலேயே அவ்வப்போது சீனா ஏதோ ஒரு விதத்தில் தன ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வந்தது. நாளடைவில் வாக்கு அளித்தபடி ஹாங்காங் சிறப்பு பகுதி அரசாங்கம் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போனது. தற்போது 2017 ல் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஹாங்காங் மக்களின் கோரிக்கையையும் அது நிறைவேற்றுமா என்று கவலை கொள்ளும் மக்கள் ஒரு ஜனநாயகப போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.

கடந்த ஜூலை முதல் தேதியன்று மாபெரும் எழுச்சி. ஜனநாயம் வேண்டும் என்று சுமார் 800,000 மக்கள் ஒரு வாக்களிப்பில் தெரிவித்து இருப்பதாக செய்தி. இதன் நடுவில் இங்கிலாந்து தலையிட வேண்டுமென்று பலர் எதிர்பார்க்கின்றனர். 1997ல் கைமாறியபோது, ஜனநாயக நெறிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது; அப்படி ஏதும் அத்து மீறி நடந்தால் இங்கிலாந்து தலையிட்டு ஹாங்காங் மக்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள் என்ற இங்கிலாந்தின் வாக்குறுதியை பலர் நினைவூட்டுகின்றனர்.

ஹாங்காங் சரித்திரத்தில் இனி என்ன மாறுதல்கள் வருமோ! மக்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்…

0 Replies to “ஹாங்காங் கைமாறியபோது…”

  1. ஹாங்காங் என்றாலே செழிப்பான ஒரு பிம்பம் மட்டுமே நினைவில் வரும். அந்த ஊருக்குள் இத்தனை பொறுமல்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அருணா. சைனாவைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே பயம் இருப்பது உண்மைதானே. இந்த ஊரிலேயெ அவர்கள் செய்த பண்டங்கள் தான் விலைக்குக் கிடைக்கின்றன. அவ்வளவு ஆதிக்கம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் சொல்லி இருக்கும் செய்திகள் அடித்தட்டு இந்திய பரம்பரையினரின் அச்சத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.மேலும் மேலும் சீனாவின் அச்சுறத்தலுக்கு ஆளாகாமல் அவர்கள் நல்லபடியாக வாழவேண்டும். மிக நன்றி. ஹாங்காங் பற்றிய புதுக்கோணம் படிக்கக் கிடைத்தது,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.