உயிர்ப்பித்த சித்திரங்களால் தயாரிக்கப்படும் முழு நீளத் திரைப்படங்களில் ஜப்பானிய இயக்குநர்கள் உலகப் புகழ் பெற்றவர்களாகி வருகிறார்கள். ஹயாவ் மியாசகியின் பெயரைக் கேள்விப்படாத அனிமேஷன் பட ரசிகர் யாரும் இருப்பாரா என்பது ஐயமே. அவர் நிச்சயமாக ஜப்பானின் இயக்குநர்களில் ஒரு சிகரம் என்றால், உலகெங்கும் அதிகம் பரபரப்பாகத் தெரிய வராத ஆனால் மிக்க திறமையுள்ள அனிமேஷன் பட இயக்குநர்கள் வேறு சிலர் ஜப்பானில் உள்ளார்கள். அப்படி இருந்த ஒருவர் கொன் சதோஷ் எனப்படும் Satoshi Kon. இவரது திரைப்படங்களைப் பற்றிய விவரங்களை இந்த வலைப்பக்கத்தில் காணலாம். இதொரு விடியோ.
1963 இல் பிறந்த கொன் சதோஷ் 2010 ஆம் ஆண்டு, தன் 47 அவது வயதில், புற்று நோயால் அகால மரணமடைந்தார். இருந்தும், அவர் புகழ் மேன்மேலும் பரவி வருகிறது.
அனிமேஷன் படங்கள் மட்டுமல்ல அவர் புகழுக்குக் காரணம். அவர் தன் பதின்ம வயதிலிருந்து மாங்கா எனப்படும் சித்திரப் படக் கதைப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவருடைய ஒரு பிரசித்தி பெற்ற நூல் ‘ட்ராபிக் ஆஃப் த ஸீ’ என இங்கிலீஷில் தலைப்பு கொண்ட [’கைகிஸென்’ ஜப்பானிய மொழிப் பெயர்] ஒரு புத்தகம். இவரது வேறு சில நூல்கள் இப்போதுதான் இங்கிலிஷில் கிட்டத் துவங்கி இருக்கின்றன. கைகிஸென் புத்தகம் 1990 இல் ஜப்பானிய மொழியில் வெளி வந்தது.
1991 இல் வேறொருவரின் திரைப்படத்தில் கதைத் தயாரிப்பும், கலை இயக்கமும் இவரது பங்காக இருந்தது. படத்தின் தலைப்பு ‘மாக்னெடிக் ரோஸ்’. 1997 இல் இவர் தனது இயக்கத்தில் முதல் படமாக ‘பர்ஃபெக்ட் ப்ளூ’ என்ற மர்மப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் வெற்றியும், புகழும் அடைந்தார். அதற்குப் பிறகு 2001 இல் ‘மிலெனியம் ஆக்ட்ரஸ்’ என்ற படததை வெளியிட்டார். பிறகு வெளி வந்த படங்கள் ‘டோக்யோ காட்ஃபாதர்ஸ் (2003); ‘பாரனோயா ஏஜெண்ட்’ (2004); ‘பாப்ரிகா’ (2007) ஆகியவை. இறந்த போது ஒரு படத்தில் பாதி இயக்கி முடித்திருந்தார். அந்தப் படம் இன்னும் வெளி வரவில்லை.
தான் இப்படி அகாலத்தில் இறப்பது குறித்து கொன் சதோஷி வருத்தம் தெரிவித்து எழுதிய ஒரு நீண்ட குறிப்பின் இங்கிலிஷ் மொழி பெயர்ப்பு சமீபத்தில் கிட்டியது. அதை இங்கு காணலாம்.
http://www.makikoitoh.com/journal/satoshi-kons-last-words
கொன் சதோஷின் விருப்பத் தேர்வு அனிமேஷன் படங்கள்தாம். முழு நீளப் படங்களில் மற்ற சாதாரணப் படங்கள் போன்றவற்றை ஏன் நீங்கள் தயாரிக்கக் கூடாது, உங்கள் படத் தொகுப்பு முறை அசாதாரண நிபுணத்துவம் கொண்டதாக இருக்கிறதே என்று கேட்கப்பட்ட போது கொன் சொன்னது குறிப்பிடத்தக்கது. அனிமேஷன் படத் தொகுப்பில் தான் மிகச் சிக்கனமாக, ஆனால் வெகு துரிதமாகக் கதை சொல்ல முடிகிறது, இந்தத் துரிதம் உயிருள்ள நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களில் தனக்குக் கிட்டாது என்றிருக்கிறார். அவருடைய படத் தொகுப்பு முறையின் நுட்பம் குறித்த ஒரு சிறு தகவல் படம் வலையில் கிட்டியது. அதை உங்கள் பார்வைக்குக் கொணர்வதில் சொல்வனம் மகிழ்ச்சி அடைகிறது.
– மைத்ரேயன்
கொன் சதோஷியின் படத் தொகுப்பில் கால, இடவெளிப் பயணம்