அணு உலைகளுக்குள் அத்துமீறி நுழையும் கலை
ஒசாமா பின் லாடனைத் துரத்திக் கொண்டு டோரா போரா மலைப் பகுதிகளுக்குச் சென்றவர் டால்டன் ஃப்யூரி. இப்பொழுது அரசாங்கத்தின் பாதுகாப்பு சறுக்கல்களை ஆய்ந்து கொண்டிருக்கிறார். மின் உற்பத்தி நிலையங்களுக்கு எவ்வாறு எல்லாம் தீங்கு விளையலாம் என்பதை வைத்து நாவல் எழுதி இருக்கிறார். அடிதடி வீடியோ விளையாட்டுகளை வடிவமைப்பதற்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். கூடவே, அமெரிக்காவில் இருக்கும் 61 அணு நிலையங்களில் நாற்பதில் அத்துமீறி தடைசெய்யப்பட்ட பிரதேசங்களுக்குள் நுழைந்திருக்கிறார். கதிரியக்க நாசகாரச் செயலை முடிக்குமளவு பதினாறு தடவை முன்னேறியிருக்கிறார். இவரது சாகசங்களை வைத்து, அணு உலைக் கூடங்களின் பாதுகாப்பை எப்படி மேம்படுத்துவது என்று யோசிப்பது அமெரிக்க அரசின் நோக்கம். கூடங்குளத்திற்கு இன்னும் வரவில்லையாம்.
http://www.theatlantic.com/magazine/archive/2014/05/the-infiltrator/359818/
oOo
தனிப்பட்ட தகவல்களும் அம்பல வெளிகளும்
நீங்கள் குப்பையைப் போட்டுவிட்டு சென்ற பிறகு, அதை ஒருவர் எடுத்து, ஆராய்ந்து, ‘உங்கள் வீட்டில் என்ன மாத்திரை சாப்பிடுகிறீர்கள்? கருத்தடை உபயோகிக்கிறீர்களா?’ போன்ற இரகசியங்களை பொதுவில் போடலாம். குப்பை பொது சொத்து. தி.நகரின் நடேசன் பூங்காவில் நண்பருடன் பேசும் அரசியல் கருத்தைப் பதிவு செய்து பண்பலையில் ஒலிபரப்பலாம். பொதுவிடங்களில் நீங்கள் உரையாடுவது பொது சொத்து. பாரத்மேட்ரிமொனியில் மணமகனின் பின்னிரவு வோட்கா கும்மாளப் புகைப்படமும் அதன்பின் போட்ட ட்விட்டின் சாராம்சமும் செல்பேசி பயணித்த கதையும் காசுக்கு விற்கலாம். இவையெல்லாம் பொது இடங்களில் கிடைக்கின்றன. உங்களின் சொந்த வாழ்க்கைத் தகவல்களை, நீங்கள் தவறுதலாக வெளியிட்ட அந்தரங்கங்களை உங்கள் வலைப்பதிவுகளிலிருந்து நீக்கிவிட்ட பிறகும் கூகிளும் இன்ன பிற இணைய சொத்துகளும் அவற்றை ஆவணமாக வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுரையின் கருத்து ஒப்புக்கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால், விவாதிக்க வேண்டிய கருப்பொருளை அலசுகிறது.
https://medium.com/message/what-is-public-f33b16d780f9
oOo
விந்துக்குழாய் தொட்ர்பறுத்ததால் புற்றுநோய் வருகிறதா?
விந்துக் குழாயின் தொடர்பை அறுத்துக் கருத்தடை செய்து கொண்ட ஆண்களுக்கு, ப்ரொஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகம் என்று தற்போதைய ஆய்வு ஒன்று சொல்கிறது.
இந்தியாவில் பல பத்தாண்டுகளாக இந்த முறையே மக்கள் தொகை வளர்ச்சிக் கட்டுப்பாட்டுக்கு அரசால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பல கோடி இந்தியர்கள் இந்த சிகிச்சையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இனி வரும் பல பத்தாண்டுகளில் இவர்களில் எத்தனை ஆண்கள் இந்த வகைப் புற்று நோயால் பாதிக்கப்படுவார்களோ?
இந்த அறுவை சிகிச்சை முறை பெரும்பாலும் ஏழை பாழைகளால் ஏற்கப்பட்டது என்பதால் புற்று நோயை அது துவங்குகையிலேயே கண்டுபிடிப்பதும், உடனே சிகிச்சை செய்யத் துவங்குவதும் அனேகமாக நடக்காது என்று நாம் ஏற்கனவே அறிவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன் கூட்டியே இந்த ஆபத்து குறித்து அறிவிக்க நம் அரசோ, ஊடகங்களோ தயாராக உள்ளனவா? மருத்துவ மனைகளும், பொது நலக் கண்காணிப்பில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் இத்தகைய ஆபத்துகள் குறித்து உலகெங்கும் நடக்கும் ஆய்வுகளைப் படித்து அவற்றை பொது அறிவிப்பாகச் செய்யக் கூடிய பணியில் ஈடுபடத் தயாரா?
http://well.blogs.nytimes.com/2014/07/17/a-vasectomy-may-increase-prostate-cancer-risk/
oOo
தொற்றுவியாதிகளைத் தடுக்கும் தாமிரம்
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது எவர்ஸில்வர் என்றழைக்கப்படும் உலோகப் பாத்திரங்கள் இந்தியச் சமையலறைகளில் இன்று பெருமளவு இடம் பிடித்திருக்கின்றன. முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்தவை செப்பு, பித்தளை, இரும்பு, மண் பாத்திரங்கள். இவற்றில் பழைய சம்பிரதாயங்களை விடாமல் கைப்பிடிக்கும் குடும்பங்களில் குடிநீரை செப்புப் பாத்திரங்களில் (குடங்கள்) வைத்திருப்பார்கள். அவை சுத்தம் செய்யச் சிறிது உழைப்பு தேவைப்படுபவை. ஆற்றுப் படுகையில் நீர் சேந்தி வர வேண்டிய வேலையைச் சிறுமிகளும், சிறுவர்களும் மேற்கொள்ளுவர். ஆனால் கூட வரும் அம்மாக்களும், அத்தைமாரும், புளியைப் போட்டு அந்தக் குடங்களைத் தேய்த்துக் கழுவிப் பொன் போல மின்ன வைத்த பின்னரே அவற்றில் நீர் சேந்தப்படும். அவை ஏன் செப்புப் பாத்திரங்களாக இருந்தன என்பதை நாம் சுலபமாகவே மறந்திருந்தோம். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரங்கள் கழுவச் சுலபமாக இருந்தன, அனேகமாக எப்போதும் மின்னின, தவிர எந்த உணவுப் பொருளோடும் அவை ரசாயன உறவு கொள்வதில்லை என்பதாகத் தோன்றியது. அவை மற்றெல்லா உலோகங்களையும் புழக்கத்திலிருந்து எளிதில் அகற்றி விட்டன.
ஆனால் சமீபத்திய ஆய்வுகள் செப்பு அருமையான கிருமி நாசினி. அந்த உலோகப் பாத்திரங்களில் வைக்கப்படும் தண்ணீரில் கிருமிகள் உயிர் தரிப்பதில்லை. அவற்றால் ஆன எந்தப் பரப்பிலும் கிருமிகளால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்று கண்டறிந்த பின்பு, மருத்துவ மனைகளில் பலர் தொடும் பரப்புகளில் செப்பு உலோகத்தைக் கலந்த உலோகப் பரப்பாக ஆக்க முடிவு செய்திருக்கின்றன அந்த மருத்துவ மனைகள். அப்படிச் செய்த மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு மருத்துவ மனையிலிருந்து கிருமிகளால் நோய் வருவது சுமார் 50% குறைந்து விட்டதாம். ஆகும் செலவோ, அப்படி நோய்ப்படும் மனிதர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு ஆகும் செலவில் ஒரு சிறு பகுதிதான்.
நம் பண்டை நாகரீகம் அப்படி ஒன்றும் மூடக் கூட்டமில்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
https://medium.com/the-magazine/copper-kills-infections-dead-a173cd1d2cfe
oOo
காண்பதெல்லாம் மறையுமென்றால்
தாமரை முகம், அகில் வாசனை எனச் சொல்லும்போதெல்லாம் ஒரு பொருளையும் அதன் தன்மையையும் இணைத்தே உருவகப்படுத்துகிறோம். இலக்கியத்தில் மட்டுமல்ல அறிவியலும் பொருட்களையும் அவற்றின் தன்மையையும் சேர்த்தே சொல்லிவந்திருக்கிறது. எல்லா பொருட்களும் அவற்றின் தன்மைகளும் அடிப்படை துகள்களின் லீலை எனும்போது பருப்பொருளின் துகளையும், அவற்றின் தன்மை உறைந்திருக்கும் துகளையும் பிரித்துப் பார்க்கமுடியும் எனும் கோட்பாடு நோக்கி துகள் பெளதிக அறிஞர்கள் முன்னேறுகிறார்கள். இன்றைய தொழில்நுட்பம் மூலம் இதை நிரூபிக்க இயலாது.
http://physicsworld.com/cws/article/news/2013/nov/18/physicists-reveal-a-quantum-cheshire-cat
oOo