பொறியியல் – கல்விக்கு அப்பால்

Indian_Engineer_Students_Employment_Jobs

வருடாந்திர நிகழ்வாக, பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை/ தரம் குறித்துப் பொதுவெளியில் விவாதங்கள் நிகழ ஆரம்பித்து இருக்கின்றன. அது பெற்றோர், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மத்தியில் நிகழும் வழக்கமான நிகழ்வுதான். ஆனால் இந்த விவாதம் நிகழ வேண்டிய களம் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே தான். அப்படி நீங்கள் எதையேனும் பார்த்திருந்தால் பெரும் அதிர்ஷ்டசாலிதான்.

தமிழ்நாட்டில் மொத்தம் 575 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பொறியியல் முடித்து வெளியேறுகின்றனர். இதில் கடந்த சில வருடங்களாக வேலைத்தகுதி (employable) கொண்ட மாணவர்களின் சதவிகிதம் குறித்த புலம்பல்கள் விவாதமாய் பெருமளவில் நிகழ்த்தப்பட்டு வர்வருகின்றன. உண்மையில் அந்த விவாதம் கல்லூரி முதலாளிகளால் செய்யப்படும் விலைச்செய்திகள்தான் (Paid news). அவற்றை முழுமையாய் ஆராய்ந்தால் அவர்கள் முடிவில் நல்ல கல்லூரியில் சேர்ந்தால் நல்ல மதிப்பெண் எடுத்து (நன்றாகக் கற்று அல்ல), வளாக வேலைத்தேர்வில் வெற்றி பெற்று வேலை (குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில்) வாங்கிவிடலாம் என்பதாய் இருக்கும். இது தவறு என்று பேசவோ, அதை மாற்றி மதிப்பெண்ணை விடக் கற்றுக்கொள்ளுதல் முக்கியம் என்றோ, பெரும்பான்மையைக் கல்வி கற்றலுக்குத் திருப்ப வேண்டும் என்றோ சொல்ல இந்தக் கட்டுரை எழுத நான் தயாரில்லை. இப்போதைய மத்திய தரச் சூழலில் அப்படிச் சொல்வது யாராலும் விரும்பக் கூடியதல்ல. ஆனால் கல்வியின் உச்சமான ஆராய்ச்சி வரை அப்படித்தான் செயல்படுவோம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை.

நாம் இங்கே பேசப்போவது பொறியியல் என்ற துறையின் மூலம் மானுட வளர்ச்சி என்பதைப் பற்றி மட்டுமே. சரி. மேலாண்மையில் பரேட்டோ கொள்கை (pareto principle – புழங்கு தமிழில் பாரெட்டோ/பரேட்டோ கொள்கை) என்று ஒன்று இருக்கிறது. அது இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் எண்பதிற்கு இருபது (80:20) என்பதாகப் பிரித்துப் புரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறது. உதாரணமாக ஒவ்வொரு குடும்பத்திலும் வருமானத்தில் 80 சதவிகிதம் 20 சதவிகிதத் தேவைகளுக்குத் தான் செலவாகிறது. (தோராயமாக)

இந்த விதியை உபயோகிக்காத ஆராய்ச்சிகள் வெகு சிலவே. உலகில் இருக்கும் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளில் 80 சதவிகிதத்தை ஆராய்ச்சியாளர்களில் 20 சதவிகிதத்தினர்தான் கண்டுபிடிக்கின்றனர். இந்த 20 சத மாணவர்களை உருவாக்கத்தான் உலகம் முழுவதும் கல்வி அரசுகளால் வழங்கப்படுகிறது. அவர்கள்தான் மானுடத்தின் முன்னேற்றத்தை முன்னிழுத்துச் செல்பவர்கள். இந்த நோக்கத்தின் உபரிகளாகவே மற்ற மாணவர்களும் அவர்களின் உருவாக்கமும் நிகழ்கின்றன. பரேட்டோ விதியை நம்முடைய பொறியியற்கல்வியில் நடைமுறைப்படுத்தினால், ஒட்டு மொத்த இளநிலைப் பொறியியல் மாணவர்களில் 20 சதவிகித மாணவர்களாவது முதுநிலைப் பொறியியல் படிப்பிற்கும், அவர்களில் 20 சதவிகித மாணவர்களாவது ஆராய்ச்சிக்கும் (PhD), அவர்களில் 20 சதவிகிதத்தினராவது முதுநிலை ஆராய்ச்சிக்கும் (PDF) போக வேண்டும். அப்படி நடக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் வருத்தம் தரக்கூடிய உண்மை.

உதாரணமாக நான் கல்லூரியில் படித்தபோது ஒரு வருட மாணவர்களின் எண்ணிக்கை 400 பேர். அவர்களில் 25 பேருக்கும் (~6%) குறைவாகவே முதுநிலைப் பொறியியல் படிக்கச் சென்றார்கள். அவர்களில் ஆராய்ச்சிப் படிப்பிற்குச் சென்றவர்கள் நான்கு பேர். இந்நிலையில் பொறியியல் ஆராய்ச்சிக் கல்வி (Engineering Research Education) குறித்த விவாதங்கள் தேவை. என்னளவில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது ஒரு பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தேவையான பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இப்போதும் குறைவுதான். தங்கள் மாநிலங்களில் பொறியியல் கற்க வாய்ப்பில்லாத, இடம் கிடைக்காத வேற்று மாநில மாணவர்களை இங்கே ஈர்ப்பதன் மூலம், மாநில வருமானம் மற்றும் பணப் புழக்கத்தை இந்தக் கல்லூரிகள் கொஞ்சமேனும் அதிகரிக்கின்றன. அதில் மாணவர் நலன், கல்வித்தரம், கட்டுப்பாடு போன்றவை அரசின் கைகளில் இருந்தாலும் அவை முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை. இது திருத்தி அமைக்கப்பட வேண்டிய ஒன்றுதான். மேலும் இவ்வெளிக்காரணங்கள் காலம் காலமாய் பேசப்பட்டு வரப்படுபவைதான். ஆனால் நாம் பேச வேண்டிய ஒரு உள்விவகாரம் ஒன்று இருக்கிறது – அது ஆராய்ச்சி அமைப்பு மற்றும் நடவடிக்கை குறித்து.

பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தங்கள் துறை சார்ந்த அறிவு மொத்தமாகவே இல்லை/ போதுமான அளவுக்கு இல்லை. இவர்கள்தான் தங்களிடம் பயிலும் மாணவர்களை முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ளவர்கள். தங்களுக்கே தெரியாத ஒன்றை எப்படி அவர்கள் மாணவனுக்குச் சொல்லித் தருவார்கள்? மேலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நான்காம் வருடம் நடக்கும் வளாகத் தேர்வில் வெற்றிபெற்று வேலைக்குப் போய் வாழ்வில் நிலைபெற்றுவிட (settle) வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. இந்த இரு போதாமைகளின் இடையே அரசு ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்து பெருமளவில் விழிப்புணர்வே ஏற்படுத்தவில்லை. இதில் அரசின் பங்களிப்பு குறித்து மேலும் புரிந்து கொள்ள, 1920-1980 வரையிலான ரஷ்யாவின் ஆராய்ச்சிகள், 1930-ல் இருந்தான அமெரிக்க ஆராய்ச்சிகள், 1980-களுக்கு பின்பான சீன ஆராய்ச்சிகளையும் அறிந்துகொள்ள வேண்டும். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை எளிதில் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் கல்விச் சமநிலை என்பது நம் நாட்டில் எப்போதுமே சரியான நிலையில் இருந்ததில்லை. நான் மேலே கொடுத்திருக்கும் பரேட்டோ கொள்கை என்பது புரிதலுக்கான எடுத்துக்காட்டு மட்டுமே. உண்மையில் நாம் இந்தப் பரவலை சரியாக அளவிட என்றே நிறைய கல்வி சார்ந்த கருவிகள், கொள்கைகள் இருக்கின்றன. அதற்கு முன் மேலை நாடுகளில் –இப்போது சீனாவில்- ஆராய்ச்சித் துறைகள் எப்படி இயங்குகின்றன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தேர்ந்த பேராசிரியரின் தலைமையில் ஒரு குறிப்பிட்ட துணைஉட்துறையில் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். அந்த ஆராய்ச்சி, அரசு அல்லது தனியார் நிறுவன நிதிப் பங்களிப்பில் இயங்கும். அப்பேராசிரியர் தன் துணை உட்துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இருப்பார். மாணவர்கள் – ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பைச் செய்த பின் அவர்களுடைய ஆராய்ச்சிப் படிப்பு நிறைவு பெறும், அதன் பின் சுயமாக தானே ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் தகுதியுடன் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்ந்து தங்கள் துறைக்கான அறிவுப் பங்களிப்பை அளிக்க வேண்டும். சில ஆண்டுகள் கழித்து அவர்கள் விரும்பினால் கல்வித் துறைக்குத் திரும்பி அடுத்த தலைமுறை ஆராய்ச்சி மாணவர்களை வழி நடத்தலாம்.

ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன?

 இதுவரை ஆயிரக்கணக்கான பொறியியல் ஆராய்ச்சி முனைவோர்கள் இந்தியாவில் உருவாகி இருக்கின்றனர். ஆனால் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா? ஏனென்றால், இரண்டு/மூன்று தேர்ந்தெடுக்கப் பட்ட பாடங்களில் தெர்ச்சி பெற்று, ஏதேனும் ஒரு துறையில் மூன்று ஆராய்ச்சித்தாள்களைத் தயார் செய்து, அவற்றை பெயர் தெரியாத ஆய்வுப் பதிப்புகளில் வெளியிட்டுவிட்டாலே முனைவர் ஆகிவிட முடியும். இதன் மூலம் எத்தகைய ஆராய்ச்சி வகுப்புகளை நாம் நடத்தி வருகிறோம் என்று புரியும். இது போக இன்றுள்ள எந்த தொழில்நுட்ப, அறிவியல் அல்லது துறை சார்ந்த நிகழ்வுகள் குறித்து எதுவுமே தெரியாத பேராசிரியர்கள் – அவர்கள் பேராசிரியர்கள் என்பதற்காகவே ஆய்வு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இப்படியாக நம்முடைய ஆராய்ச்சித் துறைகளின் தரம் இருக்கிறது. மானுட வளர்ச்சியில் நாம் பங்குபெறுகிறோம் என்று இந்த மாணவர்களுக்கும் தெரியாது. ஆராய்ச்சிப் படிப்பை மற்றெல்லா படிப்புகளைப் போல “படித்து முடித்து” விட்டுக் கல்லூரியில் ஆசிரியராகச் செர்ந்துவிட்டால் வாழ்வில் நிலை பெற்றுவிடலாம், என்று சொல்லும் பல சகமாணவர்களைச் சந்திக்கிறேன். இதுவரை நான் ஆராய்ச்சியில் சாதிக்க வேண்டும், மானுடத்திற்கான என் பங்களிப்பை என்னுடைய கல்வி – ஆராய்ச்சித்தேடலின் மூலம் தர வேண்டும் என்று நினைக்கும் சில மாணவர்களைக் கூட சந்தித்ததில்லை.

வெளிநாட்டுக் கல்வியும் நமது மாணவர்களும்

 பொறியியல் மாணவர்களில் ஒரு சாரார், வெளிநாட்டுகளுக்கு தங்களுடைய முதுநிலைக் கல்வி பயிலச் செல்கின்றனர். இவர்களில் 99% பேர் அந்த அந்த நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற ஒரு முக்கிய வழியாக இதை உபயோகப்படுத்துகின்றனரே தவிர, கற்றல் அல்லது ஆராய்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதே இல்லை. ஆராய்ச்சி வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் அங்கே மிகச் சிறப்பானவை. இருந்தும் சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் project செய்யாமல் ஒன்றரை வருடங்களில் முதுநிலைப் பொறியியல் முடிக்க முடியும் என்றால், அதில் அதிகமாக இந்தியர்கள் இருக்கின்றனர். சீக்கிரம் படித்து முடி, வேலை வாங்கு இதுதான் இவர்களின் தாரக மந்திரம். இவர்களால் தேர்ந்தெடுத்த துறைகளில் எந்த முன்னேற்றமும் இருக்காது. அதே நேரம் பங்களிப்பைத் தர விரும்பும் மாணவனுக்கு வழிமுறைகள் தெரியாததால், வசதிகள் இல்லாததால் வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்பே கிடைப்பதில்லை என்ற நிலையில், கிடைக்கும் சிலரும் தங்கள் பங்களிப்பைத் தருவதில்லை என்பது ஒட்டுமொத்தத் துறைக்குச் செய்யும் துரோகம்.

என்ன செய்யலாம்?

 முதலில் நமக்கும், நமது கல்வித்திட்ட அமைப்பாளர்களுக்கும் செயல்முறைப் பொறியியல்(applied Engineering) மற்றும் ஆராய்ச்சிப் பொறியியல் (Research based Engineering) பற்றிய புரிதலே கிடையாது. செயல்முறைப் பொறியியல் என்பது ஏற்கனவே இருக்கும் ஒரு கண்டுபிடிப்பை கற்று உணர்ந்து கொண்டு அதைத் தேவைக்கு ஏற்ப மாற்றி மக்களுக்கு வழங்குபவர்கள். இவர்களின் வேலை, செய்ததைச் சிறுசிறு திருத்தங்களுடன் திரும்பத் திரும்பச் செய்வதாக இருக்கும். பெரும்பாலும் நிலை பெற்ற மூலமுன்மாதிரியின் (patterned prototype) அடிப்படையில் செயல்படும் வேலைகளைச் செய்யும் இவர்கள் செயல்முறைப் பொறியியலாளர்கள். அவ்வப்போது இவற்றில் இருந்தும் புது கருதுகோள்கள் உருவாகி வரும். அவற்றில் வெகு சிலவே பெரும் மாற்றங்களை நிகழ்த்தும். நமது நாடு முழுக்க நிரம்பி இருக்கும் தொழில் நுட்ப நிறுவனங்கள் இப்படி இயங்குபவையே, இவற்றிற்குப் பொறியியல் பட்டதாரிகளே தேவை இல்லை. அப்படியே தேவை என்றாலும் செயல்முறைப் பொறியியல் பட்டதாரிகளே அதற்குப் போதுமானவர்கள். இவர்களை உருவாக்க இப்படிப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்து அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் போதும்.

இரண்டாவது ஆராய்ச்சிப் பொறியியல் என்பது இதில் இருந்து முற்றிலும் வேறானது, அவர்கள் புது மூலமுன்மாதிரிகளைக் கண்டுபிடிப்பவர்கள். அவர்களின் துறைக்கு ஏற்றது போல வேறு வேறு முன்மாதிரிகளை ஒன்றிணைத்து புதிதாக ஒன்றை உருவாக்குபவர்கள். இவர்களை உருவாக்க இவர்களைவிடத் தொழில்நுட்ப அறிவில் சிறந்த, ஆராய்ச்சிகளில் பங்குபெற்ற ஆசிரியர்களை உருவாக்கி நியமிக்க வேண்டும்.

நம்முடைய பொறியியல் கல்வி இந்த இருவகையினருக்குமே பொதுவான கல்வி முறையை வைத்து இருக்கிறது. அது சரியல்ல. ஒரு செயல்முறைப் பொறியாளருக்கு இத்தனை கடுமையான பாடத்திட்டமே தேவை இல்லை. தன் வேலையில் ஒருமுறைகூட வகை, தொகை நுண் கணிதத்தைப் பயன்படுத்தாத லட்சக்கணக்கான பொறியாளர்கள் இங்கே உண்டு. அதே நேரம் இந்த ஒரு பாடத்தாலேயே பொறியியல் முடிக்காமல் போன மாணவர்களும் உண்டு. இப்படியான மாணவர்கள், அவர்களால் முடிந்த செயல்முறைப் பங்களிப்பைக் கூட அளிக்க முடியாமல், வேறு வேறு வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இது ஒரு உழைப்பு வீணடிப்புதான். அவர்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க நாம் அனுமதிக்க வேண்டும். அதே சமயம், ஒரு ஆராய்ச்சிப் பொறியாளருக்கு இவ்வளவு காலாவதியான பாடத்திட்டம் தேவை இல்லை. நாம் உருவாக்குவது இரண்டுக்குமே தேவைப்படாத மாணவர்களே என்பது புரிகிறதா?

இளநிலைப் பொறியியல் கல்வியில் மாணவர்களின் விருப்பம் சார்ந்து அவர்களைப் பிரித்து விடவேண்டும். ஆராய்ச்சிக்குத் தேவையான கல்வித்திட்டம் என்ற ஒன்று அமைக்கப்பட்டு அதில் குறைந்த பட்சமாக 30 சதவிகித மாணவர்கள் அனுமதிக்கப் பட வேண்டும். அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஒருங்கிணைந்த முதுநிலை+ஆராய்ச்சிக்கல்வி (integrated PhD) சார்ந்த படிப்பில் அனுமதிக்கப்பட வேண்டும்.

செயல்முறைப் பொறியியல் படித்தவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படித் திரும்புவது என்ற கேள்வி எழும், அவர்களும் ஆராய்ச்சி சார்ந்த முதுநிலை பொறியியல் படிப்பைப் படிக்கலாம். ஆனால் அந்த ஆராய்ச்சிக்குத் தேவையான, ஆனால் இளநிலைக் கல்வியில் பயிலாத படங்களை எல்லாம் முதுநிலைக் கல்வியில் முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புகளுக்குத் திரும்பலாம். இப்படி எல்லாம் நம்முடைய பாடத்திட்டங்களை, கல்விமுறைகளை மாற்றாதது வரை, தொழில் நுட்பம் சார்ந்து நாம் தன்னிறைவு அடையப்போவதே இல்லை. அதுவரை நாம் ஊடகங்களில் போலியான விவாதங்களை நிகழ்த்தி விட்டு நடைமுறையில் அறிவுக்கூலிகளை உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டியதுதான்.

குறிப்பு: இதில் குறிப்பிடப் பட்டுள்ள பல முன்னேற்றச் செயல்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தியாவில் நடந்து வருகின்றன. அவை பரவலாக்கப்பட்டு ஒருங்கிணைந்த முனைப்பு ஏற்பட வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம் – குறைகளை மட்டுமே சொல்வதல்ல.

0 Replies to “பொறியியல் – கல்விக்கு அப்பால்”

  1. எப்படியாவது தங்கள் பிள்ளைகள் நிலைபெற்று விடவேண்டுமென்ற துடிப்பு கொண்ட மக்கள் ஒரு போதும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி படிப்பிற்கான ஆதரவை அளிக்கபோவதில்லை,இங்கே பொறியியல் படிப்பை விரும்புவது மாணவனோ பெற்றோறோ பெரும்பாலும் இல்லை, இங்குள்ள கல்வி வியாபாரிகளும் ஊடகங்களும் தான்,சீர்திருத்தம் முதுநிலை கல்விகளில் இருந்து இல்லாமல் தொடக்க நடுநிலை இருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் நமது கல்வி முறை உள்ளது .நான் சந்தித்த வரையில் பள்ளி பாடம் தவிர்த்து(அதுவும் சொல்லிகொள்கிராற்போல் தெரியாமல் போனாலும் மதிப்பெண் என்னவோ 80 சதவிகிதம் எடுத்திருப்பார்கள் ) எதாவது ஒரு துறை அறிவை குறைந்தபட்சமேனும் தெரிந்து வைத்திரும் அல்லது ஆர்வம் கொண்டு இருக்கும் இளைஞரை காண்பது அரிது,சினிமாவும் கிரிக்கெட்டும் நடுத்தரவர்க்க அறிவுத்துறை ,மேல் மேல் நடுத்தர வர்க்கமொருவேளை கால்பந்தும் ஆங்கில வணிக சினிமாவும் தெரிந்து வைத்திருக்கலாம்,நான் பெரும்பாலான சதவிகிதத்தை கூறுகிறேன்,இன்னொரு காரணியாக இன்று கல்லூரிக்கு வரும் 50 சதவிகித கிராமத்து இளைஞர்கள் தங்களது பெற்றோர்களால் எப்படியாவது விவசாயத்தை விட்டு தங்களது பிள்ளைகளை வெளியேற்றி ஒரு குமாஸ்தா நடுத்தரவர்கமாக நிலைநிருத்திடவே விரும்புவார்கள் .அவர்களே நமது கல்வி முதலாளிகளின் பலியும் கூட.இப்போதைய தொழில் நிறுவனங்களில் சிறு மற்றும் சற்றே பெரிய நிறுவனங்களில் ஒரு ஐந்து ஆறு வருட அனுபவம் தேவை உள்ள ஒரு பணிக்கு விளம்பரம் கொடுத்தால் குறைந்தது ஒரு 100 விண்ணப்பம் வருகிறது .ஒரு வருடம் முதல் எட்டு வருட அனுபவம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் அது.இப்போது அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் நபர் உறுதியாக எட்டு வருட அனுபவம் மிக்கவரை 4 வருட அனுபவசாளியின் ஊதியத்திற்கு.இங்கே கீழ் மட்டத்தில் மிகப்பெரிய சமூகச்சிக்கல் ஏற்பட்டு கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து வருடங்களில் மிகப்பெரிய வேலையில்லா திண்டாட்டம் வரத்தான் போகிறது.இனியாவது ஏதாவதொரு உருப்படியான விவாதம் இந்த தளத்தில் நடைபெற்று வந்து கனவுகளுடன் வரும் அந்த மாணவனை காப்பாற்றுவார்களா .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.