தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்

பாகம் 1- தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம்- சில முன்குறிப்புகள்

Gabe : தால்ஸ்தாய் முழுச்சாப்பாடு. துர்கேனிவை உணவிற்குப் பின் அருந்தும் இனிப்பு, பழவகைகளாக நாம் பாவிக்கலாம். அவரது எழுத்தை நான் அப்படித்தான் வரையறுப்பேன்.

Rain :  அப்போது தாஸ்தயெவ்ஸ்கி?

Gabe : தாஸ்தயெவ்ஸ்கியிற்கு நாம் முழுச் சாப்பாட்டுடன் ஒரு விட்டமின் மாத்திரையையும் கொஞ்சம் செறிவூட்டப்பட்ட கோதுமைக் குருத்துகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Woody Allen, Husbands and Wives.

பல பத்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் வசித்துகொண்டிருந்த ஐஐடி ஹாஸ்டலிற்கு நடந்து போய்க் கொண்டிருக்கையில், என் ஜூனியர் ஷெனாய் நம்பவே முடியாத ஒரு தகவலைத் தெரிவித்தான். குற்றமும் தண்டனையும் நாவலை அவன் வியப்பிற்கும் அப்பாற்பட்ட 18 முறை படித்திருந்தானாம். ஆங்கிலத்தில் conspicuous consumption என்று அழைக்கப்படும் இந்த அதீதமான நுகர்வை அசைபோட்டுக் கொண்டு என் மனம் அதன் வாடிக்கையான கேலித் தடத்தில் செல்லத் தொடங்கியது: ஆன்மாவின் தாஸ்தயெவ்ஸ்கிய வண்டல்மண்ணில் விளையும் குருத்துகளால் குழப்பத்திலும் சோகாப்பிலும் தள்ளப்பட்டிருக்க வேண்டிய இவனது 20 வயது மூளை எப்படி இன்னமும் குதூகலமாக இருக்கிறது என்று தனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டுக் கொண்டது.

பல வாசிப்புகளுக்குப் பிறகு தாஸ்தயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை வெறும் டெஸ்ஸர்ட் உணவுவகைகளை மட்டும் கொறிப்பதற்கான சாத்தியமே இல்லை என்பதை நான் உறுதிபடுத்திக் கொண்டேன். பல்தரப்பட்ட உணவு வகைகள் நிரம்பிய பெருவிருந்தையே நாம் ஒவ்வொரு முறையும் செரித்தாக வேண்டும். இவற்றுள் சில நமக்கு சுவையற்றதாகவும் இருக்கலாம், மற்றும் சில (சலிப்பூட்டும் வகையில் நீண்டு கொண்டிருப்பதால்) அஜீரணத்தையும் அளிக்கலாம். ஆனால் மொத்தத்தில் நோக்குகையில் இவ்விருந்து திருப்தியாக இருந்ததென்றே கூறத் தோன்றுகிறது – ஏனெனில் கடந்த காலத்துக்குரிய எழுத்தாளர்களுள் ஒரு சிலரே இதுபோல் நேரடியான உடனடித்தன்மையோடு நம் சுவையரும்புகளுடன் உரையாடும் வகையில் தம் படைப்புகளை விருந்தாக நம்முன் வைக்கிறார்கள்.

JoeFrank
ஜோஸஃப் பிராங்க்

இத்தனைக்கும் தாஸ்தயெவ்ஸ்கியின் வரலாற்று உலகம் நமக்குப் பரிச்சயமான ஒன்றல்ல. மெய்யாகவே அவர் நம் பிடரியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போகிறார், அவரது பாதாள உலகை நோக்கி. நமது அகவுலகின் நிகழ்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் (சில சமயங்களில் நமது அகங்களைக் கண்டு நாமே அச்சுறும் வகையில்) பாதாளவுலகின் இருளார்ந்த நிகழ்வுகளை நம்மை வலுக்கட்டாயமாகப் பார்க்கச் செய்து விடுகிறார். இலக்கியத்தின் உன்னதப் பரவசத்தாலும், மனமுறிவின் வலியாலும் ஏகதேசம் தாக்கப்பட்டு நாம் நமது அகமே எதிரொலிக்க ஒட்டுக் கேட்கிறோம். நம்மை நாமே ஒட்டுக் கேட்கச் செய்வது – இதுவே பொருட்படுத்தத்தக்க படைப்புகளைப்  பிறவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியக் கூறாக எனக்குப் படுகிறது.
.
தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகு முழுமையையும் விவரித்து அது தன் சூழலோடு பொருந்தும் விதம் குறித்து சில முன்தகவல்கள் அளிக்குமுன், தாஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவரான ஜோஸஃப் பிராங்க், அவரது “முற்றூழித்துவ கற்பனை’யைப் பேசுவதைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். (eschatological imagination). முடிவுகளைக் கருத்தில் கொள்ளும் அந்தக் கொதிகலனில்தான் அவர் தன் காலத்தின் சர்வமறுப்புச் சித்தாந்தங்களை உருக்கிப் பிரித்து அவற்றின் அதிதீவிர எல்லைகளுக்கு நீட்டித்துச் சென்றார். சிந்தனைகளும் அவை உள அமைப்பைத் தீர்மானிப்பதில் பெரும்பங்காற்றுவதையும் அது சார்ந்த அறச் செயல்பாடும் தாஸ்தயெவ்ஸ்கியின் அழகியல் சாதனைகளுக்கு மிக அவசியமாய் இருந்தன. 1840களில் தாஸ்தயெவ்ஸ்கி கிறித்தவ அன்பையும் சமூக நீதியையும் முதன்மைத் தளங்களாய்க் கொண்டதாய் தோன்றி அப்போது பரவலான அங்கீகாரம் பெற்றிருந்த உடோபிய சோசலிஷச் சித்தாந்தங்களின் தீவிர தாக்கத்துக்குட்பட்டவராய் இருந்தார்.

பெட்ரஷேவ்ஸ்கி வட்ட உறுப்பினராய் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த தாஸ்தயெவ்ஸ்கி, பொது மன்னிப்பு வழங்கப்பெற்றிருந்தாலும் பல ஆண்டுகள் சைபிரியாவில் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது. இந்தச் சைபீரிய காலகட்டத்தில்தான் அவர் சமூக முன்னேற்றம் என்ற தன் ஆதார அக்கறையைத் தன் சிந்தனை அமைப்பின் மையக்கூறாய் விளங்கப்போகும் கருத்துருவாக்கங்களைக் கொண்டு வலுப்படுத்திக் கொள்வார்: சுதந்திரம் பற்றிய சிந்தனைகள், அறம் சார்ந்த இருப்பு, தன்னிச்சை, ஆளுமை, அகங்காரம் – இவற்றையும், இவை அகத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற மானுடத்திற்குத் தேவையாக இருக்கும் வடிகால்களையும்தான் தாஸ்தயெவ்ஸ்கி பின்னர் தான் எழுதிய மாபெரும் நாவல்களில் மீண்டும் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தினார். இந்தக் கடும்பணி முகாமிலிருந்து விடுதலை பெற்றுத் திரும்பும்போது தாஸ்தயெவ்ஸ்கி தேசிய, அரச ஆதரவு நிலைப்பாடுகள் கொண்ட அமைப்பொழுங்காளராய் வெளிப்படுவார்.

ds

இதனினும் முக்கியமாய், சைபீரிய கடும்பணி முகாமின் இரக்கமற்ற யதார்த்தத்தில் அவர் ரஷ்ய மக்களின் கிறித்தவ வேர்களைக் கண்டுணர்வார்- இதுவே பின்னர் அவரது கலையின் மையமாய் விளங்கும் அச்சுமாகும், தனக்குப் பிரியமான கருப்பொருட்களின் ஒட்டுறவு வட்டங்கள் இந்த மையத்தைச் சுற்றிச் சுழலுமாறு தாஸ்தயெவ்ஸ்கி அமைத்துக் கொள்வார். சிந்தனைகள் தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்பூக்க கற்பனைக்குத் தேவைப்பட்டதெனினும் அவர் எப்போது கோட்பாட்டியலாளராய் இருந்தது கிடையாது எனபதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். தாஸ்தயெவ்ஸ்கியைக் குறித்து தனக்கேயுரிய அறிவுத்தெறிப்புடன் ஆக்டோவியோ பாஸ், “கருத்தொன்றை மற்றொன்று கொண்டு எதிர்ப்பவரல்ல, மானுட எதார்த்தமொன்றைப் பிறிதொரு மானுட எதார்த்தத்தைக் கொண்டு எதிர்ப்பவர்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ருஷ்யாவுக்குத் திரும்பும்போது அவர் செர்னஷெவ்ஸ்கியின் பகுத்தறிவு அகங்காரவாதத்தின் இதயமாய் விளங்கிய நாத்திகம், பகுத்தறிவு, பயன்தகவுடைமை எனும் மூன்றின் வினோதக் கலவையை எதிர்கொள்வார். உணர்வற்ற, அன்னியப்படுத்தும் இயற்கை முடிபுக் கொள்கையைத் தன் ஆதாரமாய் கொண்டதாய் மெய்யான ரஷ்ய மையத்துடன் தொடர்பற்றிருந்த இந்தக் கோட்பாட்டின் மீதான அவரது முதல் திட்டமிட்ட தாக்குதல்தான் Notes from the Underground என்ற புத்தகம். உயர்ந்த நன்மையின் பெயரில் எதையும் செய்வதற்கான நிபந்தனையற்ற உரிமை கொண்ட நீட்ஷேயிய அதிமானுடர்களின் எலைட்டிய கும்பலை நியாயப்படுத்தும் கருத்துருவாக்கத்தைத் தாக்கி இதே போக்கில் அவர் எடுத்த அடுத்த முன்னெடுப்பு நடவடிக்கைதான் Crime and Punishment என்ற அடுத்த நாவல். கட்டுரையின் பிற்பகுதியில் குறிப்பிட்ட இந்த நாவலை மேலும் ஆழக் காணலாம்.

ஸெர்கேய் நீசயேவின் ரகசிய அமைப்பின் நாசகாரச் செயல்களும் அதில் முன்னர் உறுப்பினராக இருந்த இவனாவை அவர்கள் கொலை செய்வதும் The Demons என்ற அவரது அடுத்த நாவலின் மையமாக இருந்தது (Possessed and The Devils என்ற பெயரிலும் இது வெளியிடப்பட்டது). மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் பொருள் கொள்வதெனில், மேலைத் தேயத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளே பேய்த்தனங்கள், அல்லது அவற்றின் மானுட வடிவங்கள். ஷாடோவின் ஸ்லாவினக்கொள்கை, வெர்கோவென்ஸ்கியின் சூனியவாதம், கிரிலோவின் மானுட-இறைப்பாடு’ போன்ற வெவ்வேறு திரிகளை தமக்குள் சமரிடச் செய்து பலகுரலில் ஒலிக்கும் இந்த நாவல் ‘சிந்தனைப் பேய்கள்‘ அத்தனைக்கும் பிதாவான அதன் துயர நாயகன் நிகோலாய் ஸ்டாவ்ரோகினின் பிரதான குரலையும் எதிர்த்து அக்குரல்களை ஒலிக்கச் செய்கிறது.

தன் வலிமையைச் சோதனைகளுக்கு உட்படுத்தி அதன் இயல்பை அறிய முனையும் ஸ்டாவ்ரோகின் தனக்கு எல்லையற்ற ஆற்றல் உள்ளதென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் தன் வலிமையின் பயன்பாட்டுச் சாத்தியங்களைக் குறித்து அக்கறையற்று இருக்கும் அவன், நன்றோ தீதோ தான் செய்வது எதுவாயினும் அது குறித்து சம அளவிலேயே களிப்படைகிறான். ஆன்ம அக்கறையின்மையோ, அல்லது இன்னும் சொல்லப் போனால், ஆன்ம இன்மையோ, எதுவாயினும், இறைநம்பிக்கையை இழப்பினும் சாத்தானின் இருப்பை நம்பக்கூடும் என்ற இந்தத் தீவிர வேதனை (“என்னிலிருந்து பெருக்கெடுத்தது எதுவெனில் இன்மை, எந்த மனவிரிவுமற்ற, எந்த விசையுமற்ற இன்மை. அல்லது அது இன்மையுமன்று”), என்பதுவே அவனை இறுதியில் தற்கொலையை நோக்கிச் செலுத்துகிறது இக்காட்சியின் துல்லிய உளநிலைச் சாயல்கள் அனைத்தையும் ஒரு அருமையான சிறு நுண்தகவலைக் கொண்டே தாஸ்தயெவ்ஸ்கி நமக்கும் காட்டிவிடுகிறார்!- (“பட்டாலான கயிறு… மிகையளவு சோப்பு குழைத்திருந்தது”). இப்போதும், இந்த நூல் பதிக்கப்பட்டு 150 ஆண்டுகளாகியும், புரட்சிகரமான ஆதர்சங்கள் அனைத்துக்கும் அப்பால், அற லட்சியங்களின் துரோகத்தில் விளையும் சீரழிவின் கூர்பார்வை விவரிப்பாய் அதன் சாத்தான்கள் காலாவதியாகாமல் உயிர்த்திருக்கின்றன.

தி இடியட் நாவலில் தாஸ்தயெவ்ஸ்கி தன் கிறித்தவ லட்சியவாதக் கற்பிதங்கள் அனைத்தையும் அவற்றின் நேர்மறைப் பொருளில் மிஷ்கின் என்ற துயர உருவத்தைக் கொண்டு உருவகிக்க முயற்சிக்கிறார். தன் வாழ்வின் நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கி, அவர் எழுதியவற்றில் மிக அதிக அளவில் சுயசரிதத் தன்மை கொண்ட நாவல் இது – தனக்கு உயிர் வாழ இன்னும் மூன்று நிமிடங்களே உள்ளன என்ற அறிதலுடன் சாப்பரத்தில் நிற்கும் அந்த மூலாதார நிகழ்வு உட்பட பலவும் அவர் தன் வாழ்வில் எதிர்கொண்டவை. அசாதாரண புரிந்துணர்வு அமையப்பெற்ற இளவரசன் மிஷ்கின், வாழ்வின் ஆனந்தத்தை இழக்காமலே மரணத்தை மீளுருவாக்கம் செய்து கொள்ளும் கற்பனைத்திறன் கொண்டவனாய் இருக்கிறான். ஆளுமைச் சிதைவுக்குட்படாமல் சஹிருதய உணர்வாழம் அனிச்சைத்தன்மை கொண்டு விரிவடைதலின் விவரிப்பு என்று முதற்பகுதியையும், இந்த புரிந்துணர்வின் அதிதீவிர செறிவாக்கம் காரணமாக அகவுணர்வு மெல்லச் சிதிலமடைவதன் விவரிப்பு என்று இதன் இரண்டாம் பகுதியையும் வாசிக்க முடியும்.

தாஸ்தயெவ்ஸ்கியின் முரணியக் கற்பனை எதிர் துருவங்களுக்கிடையே ஒரு இறுக்கமான இணைப்பை தோற்றுவித்து இயங்கியது, அந்த முரணியக்கத்தின் உடைதளம் மற்றும் நெகிழ்தளங்களைக் கொண்டு இவை கூடும் ஒரு தரிசனத்தைக் கொண்டு ருஷ்ய சிக்கலுக்கான தீர்வை அடைய அவர் முயற்சித்தார். ’தி இடியட்’  நாவலில் நாம் இந்த முரண்கள்/ இருமைகளைக் காண்கிறோம், ஆதர்ச கிறித்தவ அன்பு சாமானிய மானுட வாழ்வின் கோரிக்கைகளோடு போராடுகிறது, நஸ்டாஸியாவும் அக்லாயா சர்வவியாபக காதலுக்கும் சமய உணர்வற்ற காதலுக்கும் உரிய பிரதிமைகளாக இருக்கின்றனர். மிஷ்கினின் தன்னடக்கமும் இப்போலிட்டின் கிளர்ச்சியும், தன்னைக் கடந்து செல்வதற்கான மானுட விழைவும் அதற்கெதிரான புலனாதார அனுமானத்தை அவசியப்படுத்தும் பகுத்தறிவும்…

ஆனால் தாஸ்தயெவ்ஸ்கி இது சாத்தியமற்ற முயற்சி என்று அறிந்திருந்தார். இவ்வுலகில் ஆதார நியதியின்படி ஆளுமையை எப்போதும் … அகங்காரம் இடைமறித்து” நின்று கொண்டிருப்பதால் “இயேசு சொன்னவாறு தன்னைப் போல் பிறரை நேசிப்பது” என்பது அசாத்தியமாகவே இருக்கிறது. இதனால் தான் மிஷ்கின் என்ற “”தன்னிரு காதல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாத” அசடன் முழுத்தோல்வியைச் சந்திக்க வேண்டியதாகிறது. அறிவுக்கும் கிறித்தவ நம்பிக்கைக்கும் இடைப்பட்ட வெகுகால முரண்பாட்டைத் தன் அனைத்து நாவல்களிலும் விவாதித்த தாஸ்தயெவ்ஸ்கியின் கருப்பொருளின் மகோன்னதமான விவரிப்பாய் உள்ள, தாஸ்தயெவ்ஸ்கி மரணமடைவதற்கு இரு மாதங்கள் முன்னர் நிறைவு செய்யப்பட்ட Brothers Karamazov நாவலே அவரது மிகச் சிறந்த மாஸ்டர்பீஸ் என்று விவாதிக்க முடியும்.

மிகவும் இறுக்கமான, சிந்தனைவயப்பட்ட நாவல் இதுவென்று உங்களை எண்ணச் செய்தால், இதையும் சொல்கிறேன் – Brother Karamazov ஒரு கொலைக் கதைதான், அந்தக் கொலையின் துப்புத் துலக்கமும் விசாரணையும் விவரிக்கப்படும் நாவல்தான் அது. புலன் நாட்டம் கொண்ட திமித்ரி (அவனது ஒன்றுவிட்ட சகோதரர்கள்தான் நாத்திக இவானும், சிவந்த கன்னங்கள் கொண்ட இளம் நோவிஸ் அலோஷாவும்) இரு பெண்களுடன் சிக்கலான உறவு வைத்திருக்கிறான், இதனால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக அவன் தன் தந்தை கரமஸோவையே கொன்று விடுகிறான். இந்த நாவலுக்கு ஒரு ஃபால்ஸ்டாஃப்பிய (Falstaffian) உற்சாகம் உண்டு – அசாதாரண அளவில் குடியும் கூத்தியாளாகவும் கொண்டாட்டம் போடும் கிழட்டு கரமஸோவ்தான் இதன் ஃபால்ஸ்டாஃப், ஒரு ராட்சதன் மாதிரியானவர் இவர். இந்தப் பாத்திரம் ஒரு அற்புதப் படைப்பு, இதன் உயிர்ப்பு காரணமாக இவர் மகன் கையால் கொல்லப்படுவதை நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. இது பற்றி விமரிசகர் ஜான் ஜோன்ஸ் மிக அழகாகச் சொன்னார்: “தன் கொலைக்குக் கிழவனும் உடந்தையாயிருப்பதை இந்த நூலின் பிரதான படிமம் சுமந்து செல்கிறது. அவனது வீடு நாறுகிறது. அவனது வாழ்க்கை நாறுகிறது. ஆனால் ஒரு மிஸ்டிக்தன்மையுடன் அவன் இவற்றுக்குத் தன்னை ஒப்புவித்துக் கொள்வது அவன் செத்தாக வேண்டும் என்ற தீர்ப்பாக ஒருபோதும் கெட்டிப்பதில்லை. அதற்கு அனுமதியாத அளவு விரிந்த இயல்பு அவனுக்குண்டு.

பரந்து விரியும் இந்த நாவலின் செழுமைகளை முக்கியமான ஒரு எதிர் இணையின் முரணியக்கமாகக் கத்தரிக்க முடியும் – இவானும் திமித்ரியும். தன் உலகப்பார்வையைப் பட்டை தீட்டிக்கொள்ளப் பயன்படும் சாணையாக எதிர்த்து நிற்பதற்கென்றே தாஸ்தயெவ்ஸ்கியால் உருவாக்கப்பட்ட பிரதிவாதிதான் இவான்.. சிந்தனைவயப்பட்ட அவனது அறிவு, கவித்துவம் நிறைந்த உணர்ச்சி மிகுந்த திமித்ரியின் அறிவாற்றலுக்கு எதிராய் இருக்கிறது. சுதந்திரம் போன்ற ஒரு கனமான வஸ்துவைக் கையாள முடியாத அளவு வலுவற்றதாய் மனித இனம் இருக்கிறது என்ற எண்ணத்தின் காரணமாகவே இவானின் பைத்தியக்கார பிரதான விசாரகர் மானுட சுதந்திரத்தை வேரறுக்க முனைகிறார்.. கருணை நிறைந்த இறைவன் எல்லாவற்றையும் மன்னிப்பான் என்ற எதிர்பார்ப்பில் விதியின் கூற்றை ஆன்மிக நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வதாலேயே பாதர் ஜோஸிமா பல வகைகளில், பிரதான விசாரகரின் முழக்கங்களை எதிர்கொள்ள முடியாத, ஒரு எளிய அட்டைக் கத்தியாக ஆகிவிடுகிறார் . பிரதான விசாரகரே திமித்ரியால் படைக்கப்பட்டு, அவனது குரலிலேயே நமக்கு அளிக்கப்பட்டிருந்தால் கரமஸோவ் சகோதரர்கள் இன்னும் வலுவான, மாறுபட்ட நாவலாக இருந்திருக்கும் என்று விமரிசகர் ஹரோல்ட் ப்ளூம் கூறுகிறார். ஆனால் இது விவாதத்துக்கு உரியது.

அப்படியானால் நாவலாசிரியர் கூற்றுப்படி இதன் நாயகனாய் விவரிக்கப்படும் அலோஷா பற்றி என்ன சொல்ல? பிற பாத்திரங்களின் மாபெரும் இருப்பின்முன் இவன் மறைந்து போகிறான். பிறரின் கருத்துகளின் கொள்கலம் இவன், இந்தக் கருத்துகளை இதர உலகினருக்குத் தெரியப்படுத்துவதுதான் இவனது முக்கியமான வேலை. ஊதிப்பெருத்த அகந்தைகள் நிறைந்த, எல்லோரும் அளவுக்கு அதிகம் பேசும் இந்தநாவலில், இவன் எளிய செவியன். இந்த நாவலை மொழிபெயர்த்த ரிச்சர்ட் பெவியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார், “இதுதான் இவனது உண்மையான வரம், இவனைக் கொண்டு சொல் உயிர் பெற முடியும்”.

இனி தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்ற நாவலைப் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் சற்று விரிவாக பேசலாம்.

(தொடரும்)
————————————————————————————————-
நோக்குநூல்கள்:
·  Crime and Punishment, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky
· Demons, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky
· The Idiot, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky
· Brothers Karamazov, Fyodor Dostoevsky, Translated by Richard Pevear & Larissa Volokhonsky
· Dostoevsky: A Writer in His Time by Joseph Frank

0 Replies to “தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.