அன்றாட வாழ்வில் சிந்தனைச்சோதனைகள்

சென்ற இதழில் நாம் பார்த்த டிராலி சோதனையும் ஹைன்சின் திண்டாட்டமும் நமது தார்மீக நெறிமுறைகளை அளந்து பார்த்தவை. அத்தகைய வேதாந்த விசாரணைகளில் இருந்து சற்றே கீழிறங்கி வந்தால் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சிந்தனைச்சோதனைகள் நுழைந்து இருப்பதை எளிதில் பார்க்கலாம்.

தீஷியசின் கப்பல்

Plutarchசென்ற வருடம் இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தைப்பற்றிய அனுக்ரஹாவின்  சொல்வனம் கட்டுரையை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர் ப்ளூடார்க் ஒரு கேள்வியை எழுப்பினார். நமது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் முன்னோடியான  தீஷியெஸ்ஸிடம் ஒரு அழகான புது கப்பல் இருக்கிறது. அதை வைத்து வியாபாரம் நடத்தி வளர்ந்து வரும் தீஷியெஸ் வருடாவருடம் கப்பலை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளத்தேவையான பராமரிப்பு வேலைகளை செய்துவிடுவான். மரத்தினால் செய்யப்பட்ட அந்தக்கப்பலின் பலகைகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் பயணத்தினால் அரிக்கப்பட, பத்து இருபது வருடங்களில் கப்பலின் அத்தனை பலகைகளும் மாற்றப்பட்டு விட்டன. இதேபோல் மராமத்து வேலைகளின் மூலம் கப்பலில் உள்ள பாய்மரம், கயிறுகள், கருவிகள் என்று ஒவொன்றாக எல்லாமே மாற்றப்பட்டுவிட்டால், இப்போது இருக்கும் கப்பல் தீஷியெசின் ஒரிஜினல் கப்பல்தானா அல்லது இது வேறு கப்பலா? இதுதான் ப்ளுடார்க்கின் கேள்வி. தீஷியெசின் ஒரிஜினல் கப்பலில் இருந்த பாகங்கள் எதுவும் புதிய கப்பலில் பாக்கி இல்லை என்றால் இது வேறு கப்பல்தானே? அப்படியென்றால் அது எப்போது வேறு கப்பலாக மாறியது? ஒரிஜினல் கப்பலின் 51ஆவது சதவீத பாகம் மாற்றப்பட்டபோதா? அல்லது கடைசி 100ஆவது சதவீத பாகம் மாற்றப்பட்டபோதா? பாகங்கள் மாறினால் என்ன, அது இன்னும் தீஷியெசின் ஒரிஜினல் கப்பல்தான் என்று வாதிட்டுப்பார்போம். இப்போது ஒரிஜினல் கப்பலில் இருந்து உளுத்துப்போன பாகங்களை காயலான் கடையில் போட்டபோது, அங்கே ஒருவர் அந்த பழைய பாகங்களை உபயோகித்து திரும்பவும் ஒரு கப்பலை உருவாக்கியதாகக்கொள்வோம். இந்த உளுத்துப்போன கப்பல் கடல் பயணத்திற்கு உதவாது என்றாலும், இப்போது உலகில் இரண்டு கப்பல்கள் இருக்கின்றன அல்லவா? அப்போது எது தீஷியெசின் கப்பல்?

இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்பும் எளிதான விடை கிடைக்காத இந்தக்கேள்வி சமகால வாழ்வில் பல இடங்களில் தலைகாட்டுவதைப்பார்க்கலாம். நான்கு பேர் சேர்ந்து பீட்டில்ஸ் போன்ற ஒரு இசைக்குழு அமைத்து மிகவும் புகழ்பெற்று நிறைய சம்பாதிக்கிறார்கள். காலப்போக்கில் குழுவைச்சேர்ந்த ஒவ்வொரு கலைஞரும் வயதாகி ஓய்வு பெறும்போது வேறு புதிய கலைஞர்கள் சேர்ந்து விழுந்த ஓட்டைகளை நிரப்புகிறார்கள். குழு ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இருந்த நால்வரும் புதிய குழுவில் இல்லாத நிலையில், இப்போது இருப்பது அதே இசைக்குழுதானா அல்லது இது வேறு இசைக்குழுவா? இப்போது எம்‌பி3 வடிவத்தில் அவர்களின் பாடல்கள் விற்கப்படும்போது பழைய கலைஞர்களுக்கு எவ்வளவு ராயல்டி கொடுக்கப்பட வேண்டும்? இந்த சண்டைகள் வருடந்தோறும்  நீதிமன்றங்களில் அரங்கேறி வருகின்றன.

இசைக்குழுக்களை விட்டுவிட்டு தனி மனிதர்களை எடுத்துக்கொள்வோம். இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் சாதாரணமாக நடந்து வருவதை எல்லாம் தாண்டி 2005ல் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் மாற்று அறுவை சிகிச்சையை முகத்தின் ஒரு பாதிக்கு செய்து காட்டினார்கள். 2010இல் முழு முகமாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிய, கடந்த பத்து வருடங்களில் பல நாடுகளில் இப்போது இந்த முகமாற்று சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. பழுதாகிப்போன கால் முட்டி, இடுப்பு போன்ற உறுப்புகளுக்கு உலோக கலவைகளால் ஆன செயற்கை உறுப்புகள் இப்போது சாதாரணமாக பொருத்தப்படுகின்றன. கொஞ்சம் முன்பின்னாக ஓடி தொந்தரவு தரும் இதயங்களை ஒரே சீராக ஓட வைக்க பேஸ் மேக்கர் போன்ற கருவிகளும் கூட சகஜமாய் உபயோகப்படுத்தப்படுகின்றன. இனிவரும் காலங்களில் மேன்மேலும் செயற்கை அல்லது இயற்கை மாற்று உறுப்புக்களை நாம் பொறுத்திக்கொள்ளும்போது, எப்போது ஒரு மனிதர் தன் அடையாளத்தை இழக்கிறார்? இப்போதைக்கு இந்த கேள்விக்கு நம் மூளையும் நினைவுகளும் நிலைத்து இருக்கும்வரை நாம் நாம்தான் என்று பதில் சொல்லி வைக்கலாம். ஒரு வேளை மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமானால்?  அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். நம் தனிமனித நினைவுகளும், தான் என்ற பிரக்ஞையும்தான் நமது அடையாளம் என்றால், அல்ஸைமெர்ஸ் போன்ற இரக்கமற்ற வியாதிகளால் அவதிப்படும் ஒரு நோயாளியின் நினைவுகள் செல்லரித்துப்போகும் போது, இன்றைய சட்டப்படி நாம் அந்த நோயாளி அடையாளத்தை இழந்து விட்டதாக கருதுவதில்லையே, அது சரியா?

கழிப்பறையில் ஒரு சிலந்தி

தாமஸ் நேகல் ஒரு தற்காலத்தைய அமெரிக்க தத்துவத்துறை பேராசிரியர். அவர் ஒரு நாள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க சென்றபோது அங்கே பரிதாபமாய் ஒரு சிலந்தி ஒன்றிக்கொண்டு இருப்பதை பார்த்தார். அது இருந்த இடத்திலிருந்து அந்த போர்சலைன் வழுக்களைத்தாண்டி வெளிவருவது எப்படி என்று அதற்கு தெரிவதாக  நேகலுக்கு தோன்றவில்லை. அதன் மேலேயே அவ்வப்போது மூத்திர மழை பெய்துகொண்டிருந்தாலும் வேறு வழியின்றி அது அந்த அருவருப்பூட்டும் சிறுநீர் கழிக்கும் இடத்திலேயே ஓட்டிக்கொண்டு இருப்பதாகத்தோன்றியது. தன் வேலையை முடித்துக்கொண்ட நேகல், பாவம் அந்தச்சிலந்தி என்று நினைத்தவாறு தன் அலுவலகத்துக்கு திரும்பிவிட்டார். மறுநாள் அதே கழிப்பறைக்கு அவர் திரும்பச்சென்றபோது, அந்த சிலந்தி அதே இடத்தில் அதே பரிதாப தோற்றதுடன் முழித்துக்கொண்டு இருந்தது. அதற்கு எங்கிருந்து உணவு கிடைக்கிறது, எப்படி உயிர் வாழ்கிறது என்று எதுவும் தெரியவில்லை.

ThomasNagel

இந்தமுறை மனம் பொறுக்காத நேகல் துடைக்கும் காகிதம் ஒன்றை எடுத்துக்கொண்டு சிலந்தியிடம் சென்று காகிதத்தால் அதை வருட, அது காகிதத்தில் ஜம் என்று ஏறிக்கொண்டது. நேகல் அதை அருகிலிருந்த ஒரு காய்ந்த இடத்தில் இறக்கிவிட்டு, “அந்த மூத்திர மழையிலிருந்து உனக்கு நிரந்தர விடுதலை. குஷியாக எங்காவது போய் பிழைத்துக்கொள்”, என்று சொல்லிவிட்டு, ஒரு நல்ல காரியம் செய்த மனமகிழ்வுடன் தனது அலுவலகத்துக்கு திரும்பினார். அன்று மாலை வீட்டுக்கு கிளம்பும்முன் திரும்ப கழிப்பறையை உபயோகிக்க அவர் சென்றபோது அந்த சிலந்தி அவர் அதை இறக்கி விட்ட அதே இடத்தில் இன்னும் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை பார்த்து, “இன்னும் எங்கேயும் போக உனக்கு மனசு வரவில்லையோ” என்று கிண்டலடித்துவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். மறுநாள் அவர் திரும்பி வந்தபோது அந்த சிலந்தி அவர் இறக்கி விட்ட அதே இடத்தில் செத்துக்கிடந்தது. இதைப்பற்றி பின்னால் எழுதிய நேகல், இதை ஒரு சிந்தனைச்சோதனையாக வாசகர்களை பார்க்கச்சொன்னார். நமக்கு எவ்வளவு நிச்சயமாக பட்டாலும், பிறர் வாழ்க்கையில் நாம் தலையிடுவது எப்போதுமே சரியா என்பதுதான் நம் முன் வைக்கப்படும் கேள்வி. அந்தச்சிலந்திக்கு தெரிந்ததெல்லாம் அந்த மூத்திர மழை வாழ்க்கை மட்டும்தானோ? அதற்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று எப்படியோ அதற்கு கிடைத்துவந்த சாப்பாட்டைப்பறித்து பட்டினிபோட்டு கொன்று விட்டேனோ என்று கேட்கிறார்  நேகல்.

இவ்வளவு மோசமாக நமக்குத்தெரியும் வாழ்விலிருந்து சிலந்தியை “காப்பாற்றுவதே” தவறாக முடியக்கூடும் என்றால், ஒருவரை மதம் மாற்றவைத்து “காப்பாற்றுவது”, பழங்குடி மக்களை “பண்படுத்துவது” எல்லாம் எவ்வளவு தூரம் சரி? கிளி போன்ற சிறு பறவைகளை வீடுகளில் கூண்டில் அடைத்து செல்லப்பிராணிகளாய் வளர்ப்பது சரியா என்ற கேள்வி வரும்போது, அந்த பழக்கத்தை ஆதரிப்பவர்கள் அந்தப்பறவைகள் இப்படி வளர்ப்பதற்காகவே முட்டைகளில் இருந்து பொறிக்கப்பட்டவை, அவற்றிக்கு கூண்டுக்கு வெளியே வாழவே தெரியாது, அவற்றை காப்பாற்றுகிறோம் என்று விடுதலை கொடுத்து வெளியே பறக்கவிட்டால் மறுநாளே ஏதாவதொரு பூனைக்கு மதிய உணவு ஆகிவிடும் என்று வாதிடுகிறார்கள். வெளியே சுதந்திரமாய் பறந்து திரிய வேண்டிய பறவைகளை இப்படி வீடுகளில் கூண்டில் வளர்ப்பதற்காகவே என்று குஞ்சு பொறிப்பதே அவற்றின் வாழ்வில் தேவை இல்லாமல் நாம் தலையிடுவதற்கு சமம் என்று இதற்கு பதில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் எல்லாம் எது சரி எது தவறு என்பதற்கு எளிதான விடைகள் அளிப்பது, தத்துவார்தமான பிடிவாதங்கள் இல்லாமல் எல்லா பக்கங்களையும் அலச விரும்புபவர்களுக்கு மிகவும் கடினம்.

இந்த சிந்தனையை வேறு இரு சோதனைகள் தொடர்ந்து இருக்கின்றன. ஒரு சோதனை உலகில் உள்ள அனைவரும் அசைவ உணவை விட்டுவிடுவதாக நினைத்துப்பார்க்க சொல்கிறது. அத்தகைய உலகில் உணவுக்காக வளர்க்கப்படும் பல லட்சக்கணக்கான விலங்குகளுக்கு தேவை இருக்காது என்பதால் அவை வளர்க்கப்படுவது நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக பல உயிரினங்கள் சுத்தமாக அழிந்து மறைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒருவிதத்தில் பார்த்தால் மனிதர்கள் அசைவ உணவு உண்பதில் மனிதர்களைவிட அதற்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு, தன் இனத்தை நீண்ட காலம் காப்பாற்றிக்கொள்ளும் தேவை காரணமாக அதிக ஆர்வம் இருக்கிறது என்று சிலர் வாதிட்டிருக்கிறார்கள். இது சரியான வாதமாகப்படவில்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன் வம்சாவளியை பல நூறு ஆண்டுகளுக்கு தொடரச்செய்யும் டார்வீனிய ஆர்வம் நிச்சயம் உண்டு. ஆனாலும் இந்த வாதம் சரியானால், எதிர் காலத்தில் வாழ்க்கை தரம் உயர நிச்சயம் வழியில்லை என்ற போதும் பல லட்சக்கணக்கான உயிர்களை பிறக்க வைத்து பரிதாபமான வாழ்வை வாழ வைப்பது மேல் என்றாகிறது. இதை ஏற்றுக்கொண்டால், சென்ற இதழில் பார்த்த தள்ளுவண்டி சோதைனையில் பாலத்தில் இருந்து தள்ளி விடுவதற்கென்றே மனிதர்களை வளர்ப்பது கூட சரி என்றல்லவா ஆகிவிடும்?

JohnRawlsஅதெல்லாம் சரியில்லை, மனிதர்களையும் விலங்குகளையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பது தவறு என்றும் ஒரு வாதம் உண்டு. அந்தக்கருத்து ஜான் ரால்ஸ் என்ற வேதாந்தி அறிமுகப்படுத்திய அடுத்த சோதனைக்கு நம்மை கூட்டிச்செல்கிறது. நீதியின் கோட்பாடு (Theory of Justice) என்ற புத்தகத்தில் எல்லோருக்கும் எந்தக்காலத்திற்கும் உகந்த அரசியலமைப்பையும் சட்டதிட்டங்களையும் உருவாக்குவது எப்படி என்ற கேள்வியை அவர் அலசியிருக்கிறார். இதற்கான ஒரு ஆரம்ப நிலை (Original Position) சிந்தனை சோதனையில் நம் நிகழ்கால வாழ்க்கைத்தரம், சமுதாயத்தில் நமது இடம், நாம் வாழும் நாடு, அங்கே நிலவும் சட்டதிட்டங்கள், அரசியலமைப்பு அனைத்தையும் “அறியாமை முக்காடு” (Veil of Ignorance) ஒன்றை அணிந்துகொண்டு மறந்து விடச்சொல்கிறார். அதன் பின் நமக்கு முன்னே இருக்கும் பல்வேறு அமைப்புகள், சட்டங்களில் இருந்து எது சரி என்று படுகிறதோ அவற்றை புதிதாக அமையும் ஒரு சமுதாயத்திற்காக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் தேர்வுகள் முடிந்தபின் நீங்கள் எப்படிப்பட்ட மனிதர், அந்த புதிய சமுதாயத்தில் எங்கே வாழ்கிறீர்கள் போன்ற விவரங்கள் உங்களுக்கு சொல்லப்படும்.

உதாரணமாக, போதை மருந்துகளை விற்பவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நீங்கள் நியாயமானது என்று தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த மாதிரியான சட்டம் இன்று பல நாடுகளில் நிலவுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த தேர்ந்தெடுத்தல் முடிந்தபின், உங்கள் வாழ்வைப்பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரிய வரும்போது, நீங்கள் புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒருவராகவும், ஒரு முரட்டு போதைப்பொருள் தயாரிக்கும் வில்லனால் அவற்றை விற்க கட்டாயப்படுத்தப்படுபவராகவும் இருக்க நேர்ந்தால்?

நாம் அனைவரும் எப்படி சிந்திக்கிறோம், எந்த மாதிரி சட்டதிட்டங்களை ஆதரிக்கிறோம் என்பதெல்லாம் நமது பின்புலம், நாம் வாழும் சமூகத்தின் பின்னணிச்சூழல் என்ன என்பதைப்பொருத்ததே என்பதை இந்த சிந்தனைச்சோதனை வலியுறுத்துகிறது. இந்தக்காரணத்தால் இங்கிலாந்தின் ராணிக்கும், இந்தியாவில் ஒரு குப்பத்தில் வாழும் மனிதனுக்கும், ஒரு ஆப்பிரிக்க பழங்குடிப்பெண்ணுக்கும் தனித்தனியாக சரி என படும் சட்டதிட்டங்களுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே நாம் எந்த தேசத்தில் எப்படிப்பட்ட வாழ்வு வாழப்போகிறோம் என்பது பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் அமைப்பு பொதுவாக எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் ஒத்துவரும் அமைப்பாக இருக்க வாய்ப்பு அதிகம். தேர்ந்தெடுப்புகளுக்குப்பின் திரை விலக்கப்பட்டு நமது கதாபாத்திரம் நமக்கு காட்டப்படும்போது அது ஒரு மனிதவடிவமாகக்கூட இல்லாமல், ஒரு சாப்பாட்டிற்காக வளர்க்கப்படும் கோழியாகவோ அல்லது (மனிதர்களை பல விதங்களில் ஒத்து இருந்தாலும் ஒரு விலங்கினமாக இருக்கும்) சிம்பன்ஸி குரங்காகவோ இருக்க நேர்ந்தால்? நம்முடைய தேர்வுகளை இத்தகைய வாழ்வு பற்றிய பின்புலங்களும், அவதாரங்களும் எவ்வளவு தூரம் மாற்றிவிடும் என்று எண்ணிப்பாருங்கள். பலமுறை பலவடிவங்களில் வெளிவந்திருக்கும் Planet of the Apes திரைப்படத்தின் மூலக்கதைக்கரு கூட இத்தகைய ஒரு சிந்தனைச்சோதனைதான்.

அடுத்த இதழில் கணினியியல் சம்பந்தமான, அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு பற்றிய சில சோதனைகளைப்பற்றி பார்க்கலாம்.

(தொடரும்)