சிதம்பர ரகசியம் – பூர்ணசந்திர தேஜஸ்வி

சாதி அரசியலையும் சமய அரசியலையும் சம அளவில் கலந்து, அதில் மூடநம்பிக்கை, சுற்றுச்சூழல் சீரழிவு இரண்டையும் தலா ஒரு கோப்பை சேர்த்து, தேக்கரண்டியளவு கல்லூரி அரசியல் விட்டு, அரசு மெத்தனம் என்ற அடுப்பில் வைத்து சீராகக் கலக்கவும். இறுதியில் மெல்லிய காதல் உணர்வுகளைத் தாளிதம் செய்தபின் கிடைப்பதுதான் சூடான, சுவையான சிதம்பர ரகசியம். 
 
பூரணசந்திர தேஜஸ்வியின் சிதம்பர ரகசியம் ஒரு இருள் நகைச்சுவைப் புனைவு. கர்நாடகாவில் உள்ள மல்நாட் பகுதியில் உள்ள கேசரூரு என்ற ஒரு கற்பனை நகரில் கதை நிகழ்கிறது. தேஜஸ்வி இந்த நகரை அதன் அத்தனை குறை நிறைகளோடும் உயிர்ப்புள்ளதாகப் படைத்து அதன் அழிவுப் பாதையைச் சித்தரித்திருக்கிறார். 
Tejaswi
பூர்ணசந்திர தேஜஸ்வி
 
ஷியாம் நந்தன் அங்காடி ஒரு உளவுத்துறை அதிகாரி. ஏலக்காய் வாரியத்தின் ரகசியப் பிரிவு அதிகாரியான அவன் கேசரூருவுக்கு ஒரு காரணத்தோடு அனுப்பி வைக்கப்படுகிறான். அவனுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை: கேசரூரு பகுதியில் ஏலக்காய் உற்பத்தி குறைவதற்கான காரணங்களை அவன் கண்டறிய வேண்டும். இருநூறு கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி வருவாய் ஈட்டித் தந்த ஏலக்காய் வர்த்தகம் தற்போது ஐம்பது கோடி என்ற அளவுக்கு வீழ்ச்சி கண்டிருப்பது குறித்து அரசு கவலைப்படுகிறது. கேசரூருவில் உள்ள ஏலக்காய் ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி ஜோகிஹல் மர்மமான முறையில் மரணமடைந்ததையும் அரசு விசாரணைக்கு உட்படுத்த விரும்புகிறது. ஜோகிஹால் மரணத்துக்கும் ஏலக்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கும் ஏதும் தொடர்பு உண்டா என்பதை அங்காடி துப்பறிய வேண்டும். இந்த மையத் திரியையொட்டி தேஜஸ்வி மெல்ல மெல்ல கேசரூருவைவும் அதன் குறைகளையும் சித்தரிக்கிறார். 
 
புரட்சிகரமாகச் சிந்திக்கும் மாணவர்கள் சிலரை அறிமுகப்படுத்தித் துவங்குகிறது இந்த நாவல். மாணவப் புரட்சியின் தந்தை ராமச்சந்திரா என்ற ஆசிரியர் என்றாலும் புரட்சியின் வேரோ கல்லூரியில் உள்ள மாணவிகளை வசீகரிக்கும் நோக்கமாக இருக்கிறது. மாணவ புரட்சியாளர்களின் பராக்கிரமங்கள் சிறந்த முறையில் பகடி செய்யப்பட்டிருக்கின்றன. முனைவர் பாட்டில் அவர்களது கல்லூரியில் உரையாற்றும்போது மாணவர்கள் அவரைக் குறுக்கிட்டுப் பேசுவதும் அதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பமும் நாவலில் உள்ள மிகச் சிறந்த கதைக்கட்டங்கள். பயணத்தின்போது எச்சரிக்கையாக வாசிக்கவேண்டிய அத்தியாயம் இது என்றுகூட சொல்வேன், திடீரென்று பீறிட்டெழும் உங்கள் சிரிப்பு சக பயணியர்களுக்குத் திகைப்பூட்டி அவர்களை அச்சுறுத்துவதாக இருக்கலாம். 
 
சுலைமான் பேரி கேசரூரு வந்து, திரைமறைவு வேலைகளைச் செய்து தொழிலில் வெற்றி பெறும்போது கேசரூரு சமயம் சார்ந்து பிளவுபடத் துவங்குகிறது. அங்கு ஒரு மசூதி கட்டப்படுகிறது. அதன் அழைப்பைச் சமாளிக்க சில இந்துக்கள் நாளெல்லாம் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யத் துவங்குகின்றனர். இந்தப் பிளவு அனைத்து சமூக தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஊரில் பல முடிவுகளும் இரு தரப்பினரையும் சரிக்கட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்படுகின்றன.
 
ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் கிருஷ்ணா கௌடா வீட்டின் கூரையில் கற்கள் விழுகின்றன, யார் இந்த வேலையைச் செய்வது என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்தப் பிரச்சினையைக் கொண்டு தேஜஸ்வி மூடநம்பிக்கையின் கோட்டுச் சித்திரத்தை நமக்களிக்கிறார். இருளில் குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் கிருஷ்ண கௌடாவும் அவரது சகாக்களும் பேய்களுக்கு அஞ்சி வெறும் கையுடன் திரும்புகின்றனர். இந்தப் பகுதிகள் அபத்தமாக இருப்பதோடு விலா நோக சிரிக்க வைப்பதாகவும் இருக்கிறது. 
 
இந்த நாவலில் உள்ள சரடுகளை இதுபோன்ற ஒரு அறிமுகத்தில் பேசுவது என்பது சாத்தியமில்லை. சுற்றுச்சூழலாகட்டும், அரசியலாகட்டும், சாதி, பெண்ணடிமை என்று இந்த நாவலில் உள்ள சமூகச் சிக்கல்கள் அனைத்தையும் தேஜஸ்வி மிக விரிவாக விவரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். 
 
இருண்ட, அபத்த, நகைச்சுவைப் பகடி என்றுதான் இந்த நாவலைச் சொல்ல முடியும். இந்த அபத்த நகைச்சுவையின் வழி தேஜஸ்வியின் சினம் வெளிப்படுகிறது. மானுட பேராசையின் காரணமாக நிகழும் சுற்றுச்சூழல் நசிவைக் கண்டு அவர் கோபப்படுகிறார். அறிவியலைப் பொருட்படுத்தாது மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்கும் மனிதர்களைப் பார்த்து அவர் கோபப்படுகிறார். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டிய இளைஞர்கள் எதிர்பாலினரை வசீகரிப்பதில் தம் உழைப்பைச் செலவிடுவது குறித்து அவர் கோபப்படுகிறார். அரசுத் துறை மெத்தனம் குறித்து அவர் கோபிக்கிறார். கல்வி நிலையங்களில் வியாபித்திருக்கும் அரசியலை அவர் சாடுகிறார். சுருக்கமாகச் சொன்னால், இன்றுள்ள சமூக அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் அவரைக் கோபப்படுத்துகின்றன. ஆனால் நம் நல்லூழ், இதற்காக குமுறிக் கொந்தளிக்காமல், தேஜஸ்வி தன் கோபத்தைச் சிரிப்பாக மாற்றுகிறார்- கோட்பாட்டு நாவலாக இருந்திருக்கக்கூடிய அபாயம் நீங்கி நமக்கு மிகச்சிறந்த பகடி ஒன்று கிடைக்கிறது.
 
தேஜஸ்வியின் கத்தி மிகக் கூர்மையானது. சாதி சமயம் பார்க்காமல் அது அனைவரையும் கண்டதுண்டமாக்குகிறது. மூடத்தனம், பேராசை, மடமை போன்ற நற்குணங்கள் உலகளாவியவை. தன் சாதியின் வசதிகளையும் சமயப் பிரிவினைகளையும் பயன்படுத்திக் கொண்டு லம்பாடி பெண்களைச் சுகிக்க விரும்பும் வேசையாக இருக்கும் பிராமணன்; அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சட்டத்துக்குப் புறம்பாக காட்டு மரங்களை வெட்டும் இசுலாமியனான சுலைமான் பேரி, பணித்திறமையற்ற கல்லூரி முதல்வர்; ஒரு நாவலாசிரியனிடம் மர்மக்கதை எழுதச் சொல்லி கொலைக் குற்றவாளியைத் துப்பறியும் அபத்த உளவாளி அங்காடி; திருடும் லம்பாடிகள்; சாதி அமைப்பைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தலித்துகள் – தேஜஸ்வி யாரையும் விட்டுவைப்பதில்லை. விஞ்ஞானி பாட்டில் போன்ற சிலர் மட்டுமே காயமின்றி தப்பிக்கின்றனர்.
 
நோயாளியின் தற்போதைய உடல்நிலையைத் துல்லியமாக கணிக்கும் இயந்திரம் போன்றவர் தேஜஸ்வி. துயரரின் சரிதையை அதனால் கண்டு சொல்ல முடியாது, ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை அது விவரிக்காது. ஆனால் இந்த நிலை தொடர்ந்தால், அல்லது மேலும் மோசமடைந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லி தேஜஸ்வி எச்சரிக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்பதை நாம்தான் புரிந்து கொண்டாக வேண்டும் – எந்தப் பிரச்சினையும் தனக்கான தீர்வைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
 
ஒவ்வொரு நிகழ்வாக விவரித்து வளர்கிறது இந்த நாவல். ஒன்றுக்குப்பின் ஒன்று என்று அடுக்கடுக்காக நகைச்சுவைச் சம்பவங்களைச் சொல்லிச் செல்கிறார் தேஜஸ்வி. இவற்றில் சில மிகவும் அபத்தமாக இருக்கின்றன, ஒரு சில சர்ரியலிய சாயல் கொண்டிருக்கின்றன – தார் தயாரிக்கும் எந்திரம் வெடித்துச் சிதறுவது அத்தகைய ஒரு விபத்து. மாறி மாறி வெவ்வேறு சரடுகளைத் தொடர்கிறார் தேஜஸ்வி, கதைக்களம் மெல்ல மெல்ல முழுமையான தன்னுருவம் பெறுகிறது. நாவலின் கதைமாந்தர் மிகவும் சுவாரசியமானவர்கள்: கிருஷ்ணா கௌடாவின் மகள் மீது மோகம் கொண்ட புரட்சிகர மாணவர் படை, கிறுக்குத்தனமான முனைவர் பாட்டில், கோழி திருடும் மாயி என்று பலர். கதைமொழியும் சுவாரசியமாக இருக்கிறது, இதன் வசவுகள் சுவை கூட்டுகின்றன. கதையில் நகைச்சுவைச் சம்பவங்களை உருவாக்குவதில் தேஜஸ்வி மிகத் தேர்ந்தவர், நகைச்சுவையே நாவலில் நம்மை இறுதி வரை இருத்தி வைத்திருக்கிறது.
 
இந்த நாவலை ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகத்துடன் ஒப்பிடலாம். இரண்டும் ஓரே வகைமையைச் சார்ந்தவை. தர்பாரி ராகம் சிற்றூரின் அரசியலை கவனப்படுத்துகிறது. ஆனால் சிதம்பர ரகசியமே சிற்றூரின் இன்னும் பெரிய விள்ளலை நமக்கு அளிக்கிறது. சமூக அமைப்பின் ஒவ்வொரு அடுக்கையும் விவரிக்க முயற்சித்திருக்கிறார் தேஜஸ்வி. இதை அரசியல் நாவல் என்று குறுகலான பொருள் கொள்ள முடியாது என்ற வகையில் தர்பாரி ராகத்தைக் காட்டிலும் விரிவாக நம் சமுதாயத்தின் சுகவீனங்களைக் கண்டு முழுமையான சித்தரிப்பை அளிக்கும் நாவல் இது. நாவலின் முடிவு இருள் நிறைந்ததாக இருக்கிறது – அனைத்து தளங்களிலும் விரவியிருக்கும் ஒழுக்கக்கேடுகளை நீக்காவிட்டால் எதிர்காலம் மிகவும் இருண்டதாக இருக்கும் என்று எச்சரிக்கிறார் தேஜஸ்வி.
 
சிதம்பர ரகசியம் முக்கியமான ஒரு நாவல், இதை தர்பாரி ராகத்தோடு இணைத்து வாசிக்க வேண்டும். தர்பாரி ராகம் பல்வேறு மொழியாக்கங்களாகக் கிடைக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக சிதம்பர ரகசியம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. இந்த நிலை மாறுமா என்ன என்று தெரியவில்லை, ஆனால் நல்ல ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மிகவும் சாதாரண புத்தகங்கள்கூட தெருவுக்குத் தெரு கிடைக்கும் நம் நகரங்களில் நம்மைப் பற்றியும் நம் சமூக அமைப்பைப் பற்றியும் நேர்மையான குரலில் பேசும் சுவாரசியமான சிதம்பர ரகசியம் போன்ற நாவல்களைத் தேடித் திரிய வேண்டியிருப்பது நவீன அறிவுத்துறை பண்பாட்டு அவலம்.
 
இந்த நூலின் தமிழாக்கத்தை நான் வாசித்தேன். இது சாகித்ய அகாடமி பிரசுரம். நாவலை கன்னட மொழியிலிருந்து மிகச் சிறந்த முறையில் தமிழாக்கியிருப்பவர் பா கிருஷ்ணசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.