ஹால் ஃபிரான்சிசும் தாமஸ் வுல்ஃபும்

Writers_Circle_Block_Wireless_Laptop_Typing_Author_Bulls_Eye_Circles

ஹாலிவுட்டில் இருக்கும் ஸ்டான்லி ரோசின் புத்தகக் கடையில் சுமார் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிட்ஸ்பர்க் எஃகு ஆலையில் பணி புரிந்த சகா ஒருவன் இருந்தான். அவன் போலாந்து மற்றும் இதர மத்திய, தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளிகளைப் பற்றி சில சிறுகதைகளை எழுதியிருந்தான். வாட்ட சாட்டமாக, தடித்த குரலோடும், சிரித்த முகத்துடனும் இருந்த அவன் பெயர் ஓவென் பிரான்சிஸ். நண்பர்கள் ஹால் என்று அழைத்தனர். அவன் எழுதிய கதைகள் ‘அட்லாண்டிக் மந்த்லி’ மற்றும் ‘சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்’ போன்ற சஞ்சிகைகளில் வெளியாகி இருந்தன. ஆனால் அவன் ஹாலிவுட் வந்த போது அவன் புத்தகம் எதுவும் பதிப்பித்திருக்கவில்லை. எஃகு ஆலைகளில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கு எழுதும் வாய்ப்புக்காக ஒரு படத் தயாரிப்பாளரைத் தேடி வந்தான். ஒரு வழியாக ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தார். ஆனால் அவனுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட நியூ யார்க்கின் அறிவு ஜீவிகளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். இருந்தும் பன்னிரண்டு வாரங்கள் பணி செய்தான். ஒவ்வொரு வாரமும் தான் அதுவரை வாழ்நாளில் பாத்திராத அளவு பணத்தை காசோலையாகப் பெற்றுக் கொண்டான். நல்ல சாப்பாட்டுக்காகவும், தரமான சாராயத்துக்காகவும், பளபளப்பான பெண்களுக்காகவும், தெவிட்டாத கேளிக்கைகளுக்காவும் ஏங்கிய அந்த இருபது வயது மத்தியவர்க்க இளைஞனுக்கு கையில் காசும், கொஞ்சம் மதிப்பும், திரை உலகில் தொடர்பும் இருந்ததால் எல்லாம் சுலபமாக கிடைத்தன. அந்நாளில் தேசத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் ஹாலிவுட்டை நோக்கி பாய்ந்து கொண்டிருந்த எல்லா எழுத்தாளர்களைப் போலவே, அவனுடைய லட்சியமும் இங்கே கொஞ்சம் பொருள் ஈட்டிவிட்டு, உலகில் தனக்கு பொருத்தமான ஒரு இடத்திற்கு விரைந்து சென்று, தான் எதிர்பார்த்தபடி தன் முதல் நல்ல புதினத்தை எழுத வேண்டும் என்றே இருந்தது. இப்படி எல்லாம் பேசிய எழுத்தாளர்களில் சொற்பமானவர்களே தாங்கள் சொன்னபடி செய்தார்கள் என்பதை நான் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஹாலிவுட்டிற்குச் சென்ற பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் ஐயாயிரம் டாலர்களோ, பத்தாயிரம் டாலர்களோ சேர்த்த பின் புதினம் எழுதவிருப்பதாகக் கூறினார்கள். சீக்கிரமே அது இருபதாயிரமாகவும், ஏன் ஐம்பதாயிரமாகவும் வளர்ந்தது. நீங்கள் பசியோடு இருக்கும் ஒரு எழுத்தாளராக இருப்பீர்களாயின், வறுமையில் இருந்து அப்போதுதான் விடுபட்டு இருப்பீர்களாயின், அமெரிக்காவின் மாநகரங்களின் இருக்கும் குளிர்ந்த அழுக்கான சுற்றுப்புறங்களில் இருந்து வந்திருப்பீர்களாயின், உங்களுக்கு எவ்வவளவு பணம் கிடைத்தாலும், நீங்கள் எழுத நினைக்கும் அந்த தலை சிறந்த காவியத்தை படைக்க உங்களுக்கு இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படும். தொடக்கத்தில் இந்த எழுத்தாளர்கள் எல்லாம் எழுதப்படாத இந்தப் புதினங்களைப் பற்றி பேசினார்கள். ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின், பத்தோ, இருபதோ, இன்னும் ஒரு சிலர் ஐம்பதாயிரமோ சேர்த்த பிறகு, நட்சத்திரம் ஆகும் கனவுகளோடு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் அரை டஜன் அழகிகளுடன் ஆனந்தமாக இருந்து விட்டு, தோட்டங்களுடன் கூடிய வீடுகள் வாங்கிவிட்டு, அந்த வீடுகளில் ஃபிலிப்பீன்ஸ் அல்லது சீன தேசத்து சமையல்காரர்களையும், வேலைக்காரர்களையும், தோட்டக்காரர்களையும், காரோட்டிகளையும் நியமித்து விட்டு, அந்த எழுதப்படாத முதல் புதினங்களைப் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல், அந்த உன்னதமான படைப்பை எழுத விடாமல் தடுத்ததாக முதலாளித்துவத்தை குற்றம் சாட்டி அழுது புலம்பினார்கள். இது போன்ற எழுத்தாளர்களின் நேர்த்தியான இல்லங்களுக்கு
் சென்று, அவருடைய இரண்டு மூன்று இலக்கிய நண்பர்களைச் சந்தித்து, தங்களின் விருப்பத்துக்கு மாறாக இப்படியொரு கொடுமையான சூழ்நிலைக்கு இழுக்கப்பட்டிருப்பதைக் குறித்து அவர்கள் புலம்புவதை கேட்பதே ஒரு தனி சுகம். இந்த எழுத்தாளர்கள் எல்லாம் அழுது கொண்டிருக்கையில், “இவர்களுக்கு எல்லாம் இதை விட சிறப்பான ஒரு வாழ்க்கை அமையாது. அது இவர்களுக்கும் தெரியும்” என்று பிராந்தியைப் பருகிக் கொண்டே ஸ்டான்லி ரோஸ் அடிக்கடி சொல்வதுண்டு.

ஹாலிவுட் திரைக்கூடங்களின் வெற்றிகரமான எழுத்தாளர்கள், நூற்றுக்கணக்கான குப்பைப் படங்களின் திரைக்கதை ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஏதோ தியாகிகளைப் போல நடந்து கொள்வது வேடிக்கையான கூத்தாக இருக்கும்.

ஆனால் பிட்ஸ்பர்கிலிருந்து வந்த நம் சகாவுக்கு அப்படி எதுவுமில்லை. அவன் கை நிறைய சம்பாதிப்பதிலும், படத் தயாரிப்பாளார்கள் கேட்டதை எழுதித் தருவதிலும் திருப்தியாக இருந்தான். அது நியூ யார்க்கின் மேதாவிகளைப் பற்றியானாலும் சரி, இல்லை நெப்ராஸ்காவின் அடி முட்டாள்களைப் பற்றியானாலும் சரி. அவனுக்கு எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தன. மேலும்,  தான் எழுதிய ஐந்து சிறுகதைகளை மட்டுமே நம்பி,  அவற்றை முதலாளி படித்துக் கூடப் பார்க்காமல், தனக்கு முதல் வேலை கிடைத்ததை எண்ணி பெருமை கொண்டான். இதற்கிடையில் அவன் தாமஸ் வுல்ஃபை சந்தித்தான். இருவரும் நண்பர்கள் ஆயினர். பிறகு, ஒவென் ஃபிரான்சிஸ் தாமஸ் வுல்ஃபைப் பற்றியும், அவர் எழுத்துக்களையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். குறிப்பாக ‘லுக் ஹோம்வார்ட், ஏஞ்சல்’ பற்றி. டாம் வுல்ஃப் தான்யா எழுத்தாளன்! அந்த ராட்சசன் சில சமயங்களில் மூன்று தினங்களாக, மூன்று இரவுகளாக கண் விழித்து ஒருவித முரட்டுத் தனமான மயக்கத்துடன் எழுதி இருக்கிறான். அவன் தான் உண்மையான எழுத்தாளன். இங்கே ஹாலிவுட்டின் ஓட்டை எழுத்தாளர்களைப்  போல போலியில்லை. இவர்கள்தான் தாங்கள் தனிமையில் செத்துப் போவதைத் தவிர்க்க ஒரு அழகியுடன் கை கோர்த்துக் கொண்டு, மூவாயிரம் டாலருக்கான மற்றுமொரு வாராந்திர காசோலையை தூக்கிக் கொண்டு அழுது வடியும் முகத்துடன் வங்கிக்கு ஓடிக் கொண்டிருப்பார்கள்.

“தொலையட்டும் போ! நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை. இப்போது  இருக்கும் இந்த அலுங்கல் குலுங்கல் இல்லாத உடற் பயிற்சியைத்தான் வைத்தியர் எனக்கு பரிந்துரைத்திருக்கிறார். எனக்கு நல்ல எழுத்தை வாசிக்கப் பிடிக்கும். ஆனால் எனக்கு எழுத வராது என்பது எனக்குத் தெரியும். எனக்கு எழுத வருவதெல்லாம் என்னோடு நீண்ட காலம் வேலை செய்த ஏழை அடிமைகளைப் பற்றிய சாதாரண கதை தான். நான் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருப்பதற்கு ஒரே காரணம், எனக்கு அது தலை கீழாக அத்துபடியான விஷயம். பின்புலம் அனைத்தும் உண்மை. அந்த பின்புலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் யாருக்கும் எழுத வராது, இல்லை எழுத விருப்பமில்லை. என் கருப்பொருளில் ஒரு உண்மையும் ஈர்ப்பும் இருந்தன. ஆனால் என் நடை ரொம்ப சராசரியானது, சாதரணமானது” என்று சொல்லிக் கொள்வான்.

எது எப்படியோ, திரைப்படக் கூடங்களில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக உழைத்த பின், நிறைய களித்த பின், ஹாலுக்கு வேலை போனது. அவனுடைய முகவராலும் அவனுக்கு ஒரு புது வேலையைத் தேடித் தர முடியவில்லை. அப்போது தான் ஹால் முடிவு செய்தான்… பிடிக்கிறதோ இல்லையோ, தன்னுடைய முதல் புதினத்தை எழுதத் துவங்கி விட வேண்டும் என்று. எதோ கொஞ்சம் காசு சேர்த்து வைத்திருந்தான். ஆனால் அவனுடைய வேகத்துக்கு அது ரொம்ப நாட்கள் தாங்காது என்று தெரிந்தும் வைத்திருந்தான். ஆக, தன் விடுதி அறையில் உள்ள மேஜையின் மீது தன் தட்டச்சு இயந்திரத்தை வைத்து, புதினத்தை எழுத ஆரம்பித்தான். எழுதுவது சிரமமாக இருந்தது. இரண்டு காரணங்கள் – முதலாவதாக அவனுக்கு எழுதுவது எப்போதுமே ஒரு சிரமமான விஷயம். இரண்டாவதாக அவன் தன்னுடைய அந்த உண்மையான, கடினமான வாழ்க்கையிலிருந்து விலகி நீண்ட தூரம் வந்து விட்டான். அவனால் மீண்டும் அதை உணர முடியவில்லை. அவனுடைய போலாந்து மற்றும் மத்திய, தென் கிழக்கு ஐரோப்பியக் குடியேறிகள் எல்லாம் இப்போது அறிஞர் சபையின் அங்கத்தினர் ஆகி விட்டிருந்தனர், இல்லை அதை விடவும் மோசமாகி விட்டிருந்தனர். அவன் பணி செய்த போது இருந்தது போல முரடர்களாகவும், பேசா மடந்தைகளாகவும் அவர்கள் இல்லை. மிருதுவானவரகளாகவும், வாய்ச் சொல் வீரர்களாகவும் மாறி விட்டிருந்தனர். உண்மையில் அவர்கள் மாறவில்லை, அவன்தான் மாறி விட்டிருந்தான். இருந்த போதிலும், அவன் எழுதுவதைக் கை விடவில்லை. ஒரு மூர்க்கத்தனமான போரை அரை நம்பிக்கையுடன் போரிட்டு வந்தான். ஒன்றன் பின் ஒன்றாக பொய்யான தொடக்கங்களைத் தொடங்கினான். நடுப்பகல் முதல் இரவு வரை எழுதுவான். அதன் பிறகு ஸ்டான்லி ரோஸின் புத்தகக் கடைக்கு விரைந்தோடுவான். பின், ஸ்டான்லியுடனும், கூட நானோ, இல்லை வேறு யார் அங்கே இருக்கிறார்களோ, அவர்களையும் அழைத்து கொண்டு முச்சோ & ஃபிரான்க்குக்கு செல்வான்.  முதலில் மூன்று நான்கு சுற்று மது அருந்திய பின், பலத்த விருந்து இருக்கும். “சகோ! நான் முயற்சி செய்கிறேன். முயற்சி பண்ணவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. என்ன… என்னால் அதை முடிக்க முடியவில்லை. அதான் விஷயம். நான் அதை முடித்தே தீர வேண்டும். நான் ஒன்றும் சிறந்த முதல் புதினத்தை எழுத வேண்டும் என்று அவசியமில்லை. அது தேவையே இல்லை. நான் ஒரு எழுத்தாளன் ஆக வேண்டியதே இல்லை. ஆனால், நான் எழுதி ஒரு புதினத்தை பிரசுரிக்கவில்லை என்றால் எனக்கு ஹாலிவுட்டில் இன்னொரு வேலை கிடைக்காது. எனக்கு இங்கிருந்து விலகிச் செல்ல விருப்பமில்லை” என்று குடிக்கும் போதும், சாப்பிடும் போதும் ஹால் சொல்வான்.

“ஒரு வழியாக கொஞ்சம் சுமாராகப் போகிறது . இன்று மதியம் மூன்று பக்கங்கள் எழுதினேன். அவை சொல்லிக் கொள்ளும் படியான ஏதோ ஒன்றுக்குத் தொடக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் முதல் அத்தியாயம். ‘என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள், எஜமான் அவர்களே’ என்று தலைப்பு வைத்திருக்கிறேன். போலாந்து மற்றும் மத்திய, கிழக்கு ஐரோப்பியக் குடியேறிகள் எல்லாம் தாங்கள் நகைப்புப் பொருளாய் இருப்பதை வெறுப்பார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நகைக்கப்படுவது, குறிப்பாக எஜமானனால் நகைக்கப்படுவது என்பது உச்சபட்ச அவமானம். ஒருவனின் தாயையும், தந்தையையும் கெட்ட வார்த்தைகள் சொல்லி வைவதற்கு சமம். தான் நகைப் பொருளானதை எண்ணி கோபம் கொள்ளாத ஒரு போலாந்து மற்றும் மத்திய, கிழக்கு ஐரோப்பியக் குடியேறியைக் கூட எனக்குத் தெரியாது. முதலில் கோபம் உள்ளே வரும். நாட்கள் செல்ல செல்ல அந்த ஏளனச் சிரிப்பு அந்த எளியவனின் மனதில் வளர்ந்து ஒரு நாள் அவன் கோபம் வெளிப்படும். அவன் யாரையோ கொல்லத் துணித்து விட்டான் என்பது உங்களுக்கு புரியும். அது அவனுடைய எஜமானனாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவனுடைய மனைவியாக இருக்கலாம். அவன் எஜமானனின் மனைவி இல்லை. அவனுடைய சொந்த மனைவி. அந்த ஏழை மனிதன் நகைப் பொருளாக ஆன தினத்திலிருந்து அவனிடம் இருந்து அடியும் உதையும் வாங்கிக் கொண்டிருக்கிறாளே, அவள். என்னமோ எல்லாவற்றிற்கும் அவளே காரணம் என்பது மாதிரி! மேலும் அவன் தன்னுடைய மூத்த மகனையும் அடிப்பான். அந்தப் பிள்ளையும் இது தான் இயல்பு என்பது போல வாங்கிக் கொள்ளும். இது தவறு என்றோ புறம்பானது என்றோ அதற்கு தோன்றாது. அவன் அப்பா சமீபமாக அவனை அடிக்கிறார். அவ்வளவே! இது தான் எனது முதல் அத்தியாயத்தில் உள்ள விஷயம். நான் இனி செய்ய வேண்டியதெல்லாம் இந்த விஷயத்தை புத்தகத்தை முடிக்கும் வரை கொண்டு செல்ல வேண்டும். இறுதி அத்தியாயத்தில் அந்த ஏழை மனிதன் யாரைக் கொல்லப் போகிறான், தன் மனைவியையா இல்லை தன் மூத்த மகனையா, இல்லை அவன் தன் கிறுக்குத்தனத்தில் இருந்து விடுபட்டானா என்று நான் முடிவு செய்ய வேண்டும். இப்போதைக்கு அவன் யாரையோ கொல்லப் போவது போலத்தான் தெரிகிறது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவன் தன்னுடைய கோபத்தில் இருந்து விடுதலை அடைந்ததாக மாற்றி விட்டாலும் விடுவேன். அதை நான் பல முறை கண்டிருக்கிறேன். அதுவே நிதர்சனமான உண்மை. ஆனால் அது ஒரு புதினத்துக்கு சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. அதுதான். அவன் எப்படி தன் கிறுக்குத்தனத்தில் இருந்து வெளியே வந்தான் என்று உனக்குத் தெரிந்து கொள்ள வேண்டுமா? சரி. அவனைப் பார்த்து சிரித்ததிலிருந்து அவன் கடுமையாகவும், சிறப்பாகவும் வேலை செய்வதை அந்த முதலாளி கவனிக்கிறான். கூடவே அவன் வெறித்தனத்தின் வாசற்படியில் இருப்பதையும் கவனிக்கிறான். அதனால் அவன் மும்முரமாக வேலை செய்து கொண்டு இருக்கையில் அந்த எஜமானன் அவனிடம் சென்று, ‘நிக்! இந்த மொத்த ஆலையிலும் நீ ஒருத்தன் தான் சிறந்த தொழிலாளி’ என்று கூறுகிறான். அது மட்டுமே அந்த எஜமானன் செய்ய வேண்டியது. அவன் அமைதியாகி விடுகிறான். அவன் கோபம் காணாமல் போய் விடுகிறது. அவன் வேலை முடிந்ததும் குடிக்கிறான். தன் மனைவிக்கு புதுத் துணியும், தன் மகனுக்கு புதுச் சட்டையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறான். சென்றதும் தன் மனைவியையும், மகனையும், மற்ற பிள்ளைகளையும் கரங்களால் அணைத்துக் கொள்கிறான். அவனுக்கு என்ன ஆயிற்று என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் எனக்குத் தெரியும். நான் இதை பார்த்திருக்கிறேன். எப்படி கதை நன்றாக இருக்கிறதா?” என்று அவ்வவ்போது அவன் கேட்பான்.

“கண்டிப்பாக. ஸ்க்ரிப்னர்சில் இருந்து நாளை ஒரு ஆள் வருகிறார். அவரிடம் இதைப் பற்றி சொல்கிறேன். நீ எழுது. ஸ்க்ரிப்னர்ஸ் இதை பிரசுரிக்கும். அதற்கு பிறகு நீ திரைக் கூடங்களுக்குச் சென்று நல்ல சம்பளத்துக்கு மறுபடியும் வேலை பார்க்கலாம். புத்தகம் உனக்கு ஒரு ஐநூறு டாலர்கள் பெற்றுத் தரும். ஆனால் அது ஒரு புத்தகம். நான் அதை எடுத்துக் கொண்டு, மற்ற புத்தகங்களுடன் இதையும் ஊரில் உள்ள எல்லா படத் தயாரிப்பாளர்களிடமும் காட்டுகிறேன். நீ மீண்டும் வட்டத்துக்குள் வந்து விடலாம்” என்று ஸ்டான்லி சொல்வார்.

ஆக, ஹால் ஃபிரான்சிஸ் எழுதினான். எழுதுவதின் சிரமம் குறையவேயில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் கிட்டத்தட்ட பாதி புத்தகத்தைக் காகிதத்தில் கொண்டு வந்து விட்டான். ஸ்க்ரிப்னர்சில் இருந்து வந்த ஆள் ஹாலுடனும், ஸ்டான்லியுடனும், அந்நாட்களில் அந்த புத்தகக் கடையில் சுற்றித்திரிந்த என் போன்ற மற்ற சிலருடனும் உட்கார்ந்து கொண்டு பேசினான். அவனுக்கு இந்த கரு பிடித்திருக்கிறது என்றும், திரு.ஸ்க்ரிப்னரிடமே புத்தகத்தைப் பற்றி பேசுகிறேன் என்றும் சொன்னான். புத்தகம் முடிவடைந்த மறுகணமே ஸ்க்ரிப்னர்ஸ் அதை பதிப்பித்து வெளியிடும் என்று உறுதி அளித்தான்.

நான் மூன்று மாதங்களுக்கு சான் ஃபிரான்சிஸ்கோ சென்று விட்டேன். பிறகு ஹாலிவுட்டுக்குத் திரும்பி புத்தகக் கடையை மீண்டும் சுற்றத் தொடங்கினேன்.

ஒரு மாலை வேளையில் ஹால் ஃபிரான்சிஸ் வந்தான். புதினத்தைப் பற்றி கேட்டேன்.

“என்ன புதினம்?” என்று திரும்ப கேட்டான். “என்னால் எழுத முடியாது. டாம் வுல்ஃபால் எழுத முடியும். இந்த தேசத்திலேயே அவர்தான் ஒரே ஒரு எழுத்தாளர். அவரைப் போல ஒரு ஆள் எழுதிக் கொண்டிருக்கையில், என்னைப் போன்ற ஆட்கள் எல்லாம் எங்களுடைய தட்டச்சு இயந்திரங்களைத் தூக்கித் தூர வைத்து விடலாம். அவருடைய புதிய புத்தகத்தைப் பார். இதோ மேஜையில் இருக்கிறது பார்”. புத்தகத்தை எடுத்து என் கையில் கொடுத்தான். “ஸ்டான்லி இப்போதுதான் இந்த புத்தகத்தின் மற்றுமொரு நூறு பிரதிகளைத் தருவித்து இருக்கிறார். மூன்றே நாட்களில் நூறு பிரதிகளை விற்றிருக்கிறார். மேலும் இது ஒன்றும் புதினம் இல்லை. சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைகள் விற்றுப் போகாது என்று உனக்கே தெரியும். ‘மரணம் முதல் மறுநாள் காலை வரை’ – எடுத்துக் கொள், படித்துப் பார். டாம் வுல்ஃப் மட்டும் தான் சரியான அனைத்தையும் சொல்கிறார். மற்றவர்கள் யாரும் எதையும் சொல்வதில்லை. மேலும், டாம் எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ, அப்படிச் சரியாக சொல்கிறார். கூவுகிறார். கத்துகிறார். கர்ஜிக்கிறார். அவர் ஒரு எழுத்தாளராக ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் மூன்று பக்கங்களுக்கு ஒரே வாக்கியத்தை எழுதுகிறார். அது எத்தனை நீளமான வாக்கியம் என்று நீ கவனிக்கக் கூட மாட்டாய். அது அப்படி எளிமையாகவும், திருத்தமாகவும் இருக்கும். அவரை வாசிக்க வாசிக்க உனக்கே புரியும் அவர்தான் இந்த நாட்டிலேயே, ஏன் இந்த உலகத்திலேயே ஒரே எழுத்தாளர் என்று. நாங்கள் எல்லாம் வாழ்க்கையை நுனிப்புல் மேய்ந்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் டாம் மட்டுமே ஆற அமர மொத்த மனித இனத்தையுமே இரண்டே கவளங்களில் விழுங்கி விடுகிறார். அவருடைய புதிய புத்தகத்தை வாசித்ததிலிருந்து, என் தட்டச்சு இயந்திரத்தின் முன் அமர்ந்து, ஒரு முட்டாள் முதலாளியால் சிரிக்கப்பட்ட ஒரு மத்திய, கிழக்கு ஐரோப்பியக் குடியேறியைப் பற்றிய என் அற்பமான கதையை எழுத எனக்கு மனம் வரவில்லை. அந்த ஏழையின் மனைவியைப் பற்றியும், அவனுடைய ஏழை மகனைப் பற்றியும், அவனுடைய மற்ற ஏழைப் பிள்ளைகளைப் பற்றியும், அவனுடைய வறிய கிறுக்குத்தனத்தை பற்றியும் எழுதத் தோன்றவில்லை. ஆனால் டாமோ ஒட்டு மொத்த அழுக்கான மனித இனத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் சிறுக்கிகளின் பிள்ளைகள் அனைவரையும் தேவதைகளாக மாற்றி விடுகிறார். ஏன் அவருடைய அசிங்கமான அயோக்கியன்கள் எல்லோரையும் கூட தேவதைகள் ஆக்கி விடுகிறார். அவர்கள் கூட டாமின்  எழுத்தில் சிரஞ்சீவிகள் ஆகிவிடுகின்றனர்.”

டாம் வுல்ஃபை மறந்து விட்டு அவனுடைய புத்தகத்தை எழுதும் படி ஹாலிடம் ஸ்டான்லி சொன்னார். ஒரு எழுத்தாளருக்கு இன்னொரு எழுத்தாளரைப் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு சிறந்த எழுத்தாளர் சம காலத்தில் எழுதுகிறார் என்பதற்காக ஒரு நல்ல எழுத்தாளர் எழுதுவதை நிறுத்தி விட வேண்டும் என்று கட்டாயமில்லை. ஸ்டான்லிக்கு வேண்டியது எல்லாம் ஹால் பிரான்சிஸ் அந்த ஊரிலேயே இருக்க வேண்டும். தினமும் இரவு அவருடைய கடைக்கு வருகை தர வேண்டும். ஏனென்றால், அவன் தனது எழுத்தைப் பற்றி புலம்பாத வேளைகளில், அந்த ஊரில் பழகுவதற்கு மிக இனிமையானவன் ஹால். ஆயினும், இறுதியில் ஹால் புத்தகத்தை முடிக்கவில்லை. அவனுக்கு மீண்டும் ஒரு திரைபடத் தயாரிப்பாளரிடம் ஒரு வேலை கிடைத்தது. சம்பளம் குறைவு தான். வேலையும் ஆறு வாரங்கள் மட்டுமே இருந்தது. இப்படியே இரண்டு, மூன்று ஆண்டுகள் சென்றன.

தினமும் இரவு, ஹால் ஃபிரான்சிசும் ஸ்டான்லி ரோஸும் சந்தித்து, சாப்பாடும் சாராயமும் தங்களுக்கு அங்கேதான் கட்டுப்படி ஆகும் என்பதால், பக்கத்துக் கடையான முச்சோ & ஃபிரான்க்குக்குச் சென்று நல்ல உணவு உண்டனர், மது அருந்தினர். ஸ்டான்லி தன் நண்பனிடம் புதினத்தை முடிக்க முயற்சி செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு ஹால் அதை வெறுத்து ஒதுக்கி வைத்து விட்டான். ஸ்டான்லியோ இரவெல்லாம் கண் விழித்து, இருவரும் குடித்திருக்கும் போது, அதை முடிக்கும் படி ஹாலை ஊக்குவித்துக் கொண்டிருந்தார். அவனுக்கு மூன்றோ நான்கோ அத்தியாயங்கள் தான் மிச்சம் இருந்தன. அதை முடித்து விட்டு, நிறைய சம்பளத்துக்கு ஒரு நல்ல வேலைக்குப் போகச் சொன்னார். ஆனால் ஓர் இரவு ஹால் வரவில்லை. ஸ்டான்லி அவன் வீட்டுக்குச் சென்றார். நோய்வாய்ப்பட்டுப் படுத்துக் கிடந்தான். மறு இரவு ஹால் இறந்து போனான்.

“அவன் என் கைகளில் செத்துப் போனான். நான்தான் அவனைப் புதைத்தேன்” என்று ஸ்டான்லி சொன்னார்.

ஆகட்டும், இப்போது, அந்த காலத்தில் பல எழுத்தாளர்களில் ஒருவனே ஒவென் ஃபிரான்சிஸ். அவனுக்கு நிகழ்ந்தது மற்றவர்களுக்கு நிகழவில்லை. அல்லது மற்ற பலருக்கு நடக்கவில்லை. நிச்சயமாக அதே விதத்தில். அந்த மனிதனை சாகடித்ததோ, அல்ல அவன் சாவிற்கு காரணமாக இருந்ததோ பல ஆண்டுகளாகக் குடித்து குடித்துப் பெருத்துப் போன உடம்பு மட்டுமல்ல. அவன் தன் எழுத்தை நம்பவில்லை. நம்ப முடியவில்லை. டாம் வுல்ஃப் எழுதுகிற வரையில் தான் எழுத இந்த உலகில் ஒரு காரணமும் இல்லை என்று அவன் நம்பினான். டாம் வுல்ஃப் எல்லாவற்றையும் சொன்னார். வுல்ஃப் என்கிற அந்த மாமனிதரை, ஆற்ற முடியாத தீராப்பசி கொண்டவரை, பெரும்பாலும் சோர்வே அடையாத அந்த கட்டாய எழுத்தாளரை அவன் ரசித்தான், நேசித்தான். மேலும் அவன் அவரை ஒரு எழுத்தாளராய், ஒரு இயங்குகிற எழுத்தாளராய் பெரிதும் மதித்தான். ப்ரூக்லினில் ஒரு உளுத்துப் போன வீட்டில் வசித்துக் கொண்டு, கால நேரத்தையும், சாப்பாடு தண்ணீரையும் மறந்து, வெறித்தனமாக உழைப்பவர். பல மணி நேர  உக்கிரமான தவத்திற்குப் பின்பும், உலகின் அதிவேகமான எழுத்துக்குப் பின்பும், மேலும் சில நேரங்களில் ஒரு முழுப் பகலும், முழு இரவும் முடிந்த பின்பும், சில நேரங்களில் அதற்கு அப்புறமும்,  தன் குடிலிலிருந்து தள்ளாடி எழுந்து கொள்வார். அனல் பறக்கும் உழைப்பால் அவருடைய பெரிய சரீரம் புனிதமாக்கப் பட்டிருக்கும். அவருடைய கனத்த உடல் பாரம் குறைந்து இருக்கும், ஏறக்குறைய எடையின்றிப் போயிருக்கும். நேரம் நகர நகர அவர் தெருக்களின் மேலே பறப்பார். அதிகாலை மூன்று அல்லது நாலு மணி போல பாலத்தை கடந்து மன்ஹாட்டன் வந்து, கப்பல்துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களை சந்திப்பார். ஓரிரண்டு மணி நேரங்கள் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வார். பிறகு பறந்து செல்வார். டாம் வுல்ஃப் ஒரு பெரிய உடம்பில் புதைந்து கிடந்த ஒரு உன்னத ஆன்மா, ஒரு பரிசுத்த ஆவி. அவர் அளவிற்கு திறமையும், தீராப்பசியும் கொண்ட அவருடைய பழைய நண்பன் ஹால் ஃபிரான்சிஸ் தான் ஒன்றுமில்லாதவன் என்றும், ஒரு சூனியம் என்றும், தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றும் நம்பினான். ஆமாம். ஹால் ஒரு அளவிற்கு டாமைப் பற்றியும், தன்னைப் பற்றியும் தவறாகப் புரிந்து வைத்திருந்தான். அவனுக்கு சொல்ல ஏதோ இருந்தது. அதை அவன் போதுமான அளவிற்கு அடிக்கடி சொல்லி வந்தான். ஆனால் எழுத்தில் இல்லை. அதை அவன் மதுக்கடையில் குடித்துக் கொண்டே சொன்னான். அவனுக்கு அந்த நேரத்தில் அதை கேட்க யாரோ தேவைப்பட்டார்கள். அப்புறம் இல்லை. அவனுக்குக் கிட்டிய சிறந்த செவிகள், உலகின் புதிய பகுதியில் அவன் கண்ட புது நண்பன் ஸ்டான்லி ரோசினுடையவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.