அன்பு செலுத்தப்படாதவை ஒத்த சாயல் கொள்கின்றன.
– Andrés Neuman, Traveler of the century
சென்ற நூற்றாண்டின் இறுதியில், ஜெஃப்ரி நன்பெர்க் (Geoffrey Nunberg) தனது ‘The Future of the Book’ என்ற நூலில் இந்த விபரீதக் கணிப்பை முன்வைத்தார்: “அச்சடித்து தைத்து அட்டை போடப்பட்ட தொகுப்புகளாய் புத்தகத்தை அதன் பொதுவான பொருளில் புரிந்து கொள்வோமாயின், பெரும்பாலான புத்தகங்கள் விரைவில் மறைந்துவிடப் போகின்றன[1]“. நாம் தொட்டு, தடவி, முகர்ந்து, இன்னும் பல எண்ணற்ற காரியங்களைச் செய்து நமக்குரியதாக்கிக் கொள்ளும் புத்தகங்களை இனி கடைகளில் விலை கொடுத்து வாங்க முடியாமல் போகும். இத்தகைய எதிர்கால சிதழ்தரிசனவுலகை நினைத்துப் பார்ப்பது இன்று சாத்தியம் என்ற எண்ணமே திகைப்பூட்டி அச்சுறுத்துவதாக இருக்கிறது. ஆனால், இது போன்ற எதிர்மறை உணர்வுகள் புத்தகங்களைப் பிறழ்காமத்தின் இலக்குப் பொருளாக்குவதாகச் சொல்லி நிராகரிக்கின்றனர் டிஜிடல் வலியுறுத்துனர்கள்.
சென்னையில் உள்ள என் வீட்டு நூலகத்தில் ஒரு புத்தகம் புதையுண்டு கிடக்கிறது. அதன் முன்னட்டையின் மறைவில் பல பத்தாண்டுகளுக்கு முன் ஒரு பெண் என்மீது கொண்டிருந்த அளவற்ற காதலின் நினைவுச் சின்னம் பதிவாகி இருக்கிறது. ஸ்டெந்தாலின் (Stendhal) அர்ப்பணிப்புச் சொற்களை மாற்றிச் சொல்வதானால் “அதிர்ஷ்டமுள்ள சிலர்”, தம் வாழ்வில் ஒரு முறையோ இரு முறையோ ஒரு பெண் தன்னை அறியத்தரும் அந்தச் சொற்களை, அதுவும் கொடுப்பினை உள்ள சிலருக்கு மட்டுமே கிட்டக்கூடிய அந்தச் சொற்களை, அவள் தன் கைப்பட அதில் வெளிப்படுத்தியிருக்கிறாள். மாறுபாடுகளே இல்லாத தரத்தை நோக்கித் தலைதெறிக்கத் திரும்பும் இந்த உலகில், Ulysses – இன் ஒவ்வொரு பிரதியும் அதன் பிற பிரதிகளைப் போலும் அவையனைத்தும் வேறு எந்தப்பிற புத்தகத்தைப் போலும் தோற்றம் தரும் இந்த உலகில், புத்தகங்கள் பிறழ்காமப் பொருட்களாவதெனில் ஆமென் என்று அங்கீகரிக்கிறேன் நான்.
எண்பதுகளின் துவக்கத்தில், கவிதையல்ல, Octavio Paz எழுதிய கதையொன்றின் தமிழாக்கத்தைப் படித்தபோது (அந்தக் கதையின் பெயர் Blue Bouquet என்று நினைக்கிறேன்), என் ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவன், Paz-இன் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்று Labyrinth of Solitude என்று போகிறபோக்கில் சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்தத் தலைப்புச் சொற்களின் ரசவாதம் என்னை மந்திரத்தால் மயக்கியது போலிருந்தது. நான் போர்ஹெஸ்ஸின் Labyrinths படித்திருந்தேன், மார்கேஸின் One Hundred Years of Solitude படித்திருந்தேன். அவற்றை வாசித்ததில் கிறுகிறுத்துப் போயிருந்தேன். ஆனால் பாஸ் சென்னையின் எந்த ஒரு பெரிய புத்தகக் கடையிலும் கிடைப்பதாயில்லை. (பெரிய புத்தகக்கடை என்று ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன், அப்போது சின்னச் சின்னதாக இரண்டு மூன்று கடைகள் இருந்திருந்தால் அதிகம், லாண்ட்மார்க் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது).
அதிர்ஷ்டவசமாக என் நண்பர்களும் நானும் மேல்தர புத்தகங்களை விற்கும், மனஸ், என்ற ஒரு சிறிய கடை தேனாம்பேட்டையில் இருப்பதைக் கண்டுபிடித்திருந்தோம், அங்கு அசிஸ்டென்ட் மானேஜராக இருந்த ஒரு அழகிய பெண்ணுக்காகவே அடிக்கடி அந்தக் கடைக்குச் செல்வதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தோம். மானஸின் உரிமையாளர் ஒரு பதிப்பகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அவர் பதிப்புத் துறையில் இருந்த தன் தொடர்புகள் வழியாக புத்தகங்களை இறக்குமதி செய்து தர முன்வந்தார். எப்படியோ அவர் தூசு படிந்த ஒரு காடலாகில் கிங் பெங்குவின் பதிப்பித்த The Labyrinth of Solitude எங்கே கிடைக்கும் என்று கண்டுபிடித்து அதன் ஒரு பிரதியைத் தருவிக்க ஏற்பாடு செய்தார். புத்தகம் எப்போதும் வரும் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. அது வருமா என்பதுகூட தெரியாமல் இருந்தது. சில மாதங்கள் கழிந்தன.
காத்திருந்த இந்த நாட்களில் நான் ஒரு லத்தீன் அமெரிக்க நாவலை விரிவாகக் கற்பனை செய்து கண்டிருந்தேன், மாய யதார்த்த அழகுகளும் போர்ஹேசியானாவின் (Borgesiana) சிக்கனக் கவித்துவமும் என் கற்பனையில் இருந்த நூலை அலங்கரித்தன. என்ன சொல்வது, ஆசை தனக்கென்று தனித்துவம் கொண்ட முரணணிகளை புனைந்து கொள்கிறது!
சுட்டெரித்த ஒரு கோடைக்கால பகல் பொழுதில், ஆசீர்வதிக்கப்பட்ட அந்தப் புத்தகம் ஒரு வழியாய் வந்து விட்டது. மனஸ் அந்தச் செய்தியை தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். அன்றைக்கே அவசர அவசரமாகப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள ஓடினேன். நீண்டகாலம் புத்தக அடுக்குகளில் இருந்த தோற்றம் என்றாலும், அதன் அட்டை என்னவோ வசீகரமாகவே இருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்லும்போது அதன் பக்கங்களை புரட்டிப் பார்க்கத் துவங்கினேன். அப்போதுதான் தெரிந்தது, மெக்சிகன் அனுபவத்தின் முரணியம் குறித்து ஆக்டோவியா பாஸ் எழுதிய ஒரு நீண்ட கட்டுரைதான் இந்தப் புத்தகம் என்று.
நான் கற்பனை செய்து வைத்திருந்த அந்த மகோன்னத நாவல், பல இரவுகளாய் கட்டிக் காத்து, காய்ச்சலின் அதீத ஏக்கத்துடன் எழுப்பியிருந்த அந்தக் கனவுக் கோட்டை, இறுக்கமான ஒரு கட்டுரையின் கனத்துடன் என் மீது இடிந்து விழுந்தது. அதன்பின் அந்தப் புத்தகத்தைப் படிக்கத் துணிந்து, பாஸின் வரையற்ற உரைநடையின் அழகில் ஸ்தம்பித்து நிற்பதற்கு பல மாதங்கள் ஆனது.
தீவிரமான கற்பனை நவிற்சியில் தோய்ந்த ஏக்கங்களும், அவை காலப்போக்கில் நிறைவு பெரும் சாத்தியங்கள் குறித்த எதிர்பார்ப்புகளுமாக இருக்கும் மூன்றாம் உலக தேசத்தில் புத்தகங்களின் பற்றாக்குறைக்கென்றே சில தனி ஆறுதல்கள் உண்டு. நமது நூற்றாண்டு அதன் செழிப்பாலும் செயலாற்றலாலும் பொருட்களுக்கான கசப்பும் இனிப்பும் கலந்த ஏக்கத்தைக் கழித்துக் கட்டிவிட்டது. புத்தகக்கடைகள் இல்லாதிருத்தலில் துவங்கி அவை சர்வநிச்சயமாகப் பயனற்றுப் போகும்வரையான துயர ஆரம் நம் வாசிப்புப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்றும் சுட்டுகிறது.
திரை தேய்ப்பர்கள் நம்மை நம்பச் சொல்வதற்கு மாறாக ஒரு நூலின் உள்ளடக்கத்தை நாம் உள்வாங்கிக் கொள்வதைவிட அதிகமான ஏதோ ஒன்று வாசிப்பனுபவத்தில் இருக்கிறது என்று நம்புகிறேன். டிஜிடல் தகவல்களை நம் மூளைக்குள் டிஜிடலாகப் பொதித்து வைக்கும் அறிபுனைச் சித்திரம் நியாண்டர்தல்களாகிய நாம் விடாது இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் வாசிப்பு அனுபவத்துக்கு ஏதோ ஒரு வகையிலேனும் ஈடாக முடியுமா என்ன!
வாசிப்பு அனுபவம் என்று நான் அழைக்கும் விஷயம், நாம் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு வெகு காலம் முன்னரே துவங்கிவிடுகிறது. நூலகங்களிலும் புத்தகக்கடைகளிலும் புரட்டிப் பார்த்தல், முன்னட்டை அமைப்பைப் பார்த்து வசீகரிக்கப்படுதல், அதன் பைண்டிங், எழுத்துருக்கள், ஓவியங்கள், எவ்ரிமேன்ஸ் லைப்ரரி எடிஷன் வாங்குவதா அல்லது பெங்குவின் மாடர்ன் கிலாசிக்ஸ் எடிஷன் வாங்குவதா என்ற இருப்பியல் சார்ந்த அகச்சிக்கல், விலையுயர்ந்த ஒரு புத்தகம், ஒரு பேச்சுக்கு பரூஸ்ட்டின் In Search of Lost Time நாவலின் மிகச் சமீபத்திய மொழிபெயர்ப்பின் ஆலன் லேன் பாக்ஸ் எடிஷன் என்று வைத்துக் கொள்வோம், அதை வாங்குவதற்கு முன் நிகழும் மனத்தடுமாற்றங்கள்…இவை ஒவ்வொன்றும் அவற்றின் துணை நினைவுகளோடு ஒரு சுருதிக் கோவையாக உருவாகி நாம் இறுதியில் புத்தகத்துடன் சுருண்டு படுக்கையில் வாசிப்பின் அடக்கமான சேம்பர் ம்யூசிக்காக வளர்கிறது. இவை ஒவ்வொன்றும் நம் மனதில் தம் தடம் விட்டுச் செல்கின்றன, அத்தடங்களில் சில கண்ணுக்கும் புலப்படுகின்றன (வில்லியம் காஸ் புதையலாய் மதித்த ஜாம் கறை படிந்த ட்ரெஷர் ஐலாண்ட் புத்தகம் நினைவிருக்கிறதா?)., பின்னொரு கட்டத்தில் தொடர்ந்து வளரும் நம் நூலகத்தைக் கிளறிக் கொண்டிருக்கும்போது, அவை பூதம் போல் கிளம்பி எழுவதுண்டு – படித்து மறந்து கண்டெடுக்க முடியாத அந்த வாக்கியத்தை தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டு, வேண்டுமென்றே தொலைந்துவிடும் அந்தப் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கையில், நினைவுகளைத் தடங்களாகக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகங்கள் எப்போதுமே எதேச்சையாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும்.
சில நாட்களுக்கு முன் நான் ரயிலில் என்னோடு வந்துகொண்டிருந்த ஒரு இளைஞனிடம் மைக்கேல் ஹோல்ராய்டின் அத்தை நூலகம் செல்லத் துவங்கிய நாட்களில் தான் எடுத்துவந்த புத்தகங்களை , அவற்றில் உள்ள கிருமிகளைச் சாகடிப்பதற்காக ஓவனில் வைத்து இளஞ்சூட்டில் பதப்படுத்துவாள்[2] என்ற சுவாரசியமான தகவலைக் கூறினேன், “இதற்காகதான் நாம் மின்புத்தகங்களைப் பயன்படுத்த வேண்டும்,அவை சுத்தமாக இருக்கின்றன, அவற்றில் கிருமிகள் இருக்காது,” என்று ஆர்வத்துடன் அந்த டெக்னோ-எவஞ்சலியர் பதில் கூறினார். எது எப்படியானாலும், உனக்கு அப்படியே அந்த ஆசை இருந்தாலும் உன்னால் எப்படி ஒரு மின்புத்தகத்தை இளஞ்சூட்டில் வறுக்க முடியும் என்று நான் கொஞ்சம் நக்கலாகவே குறுக்கிட்டேன். அவர் சிறிதுகூட சிரிப்புக்கு இடம் கொடுக்காமல் நான் சொன்னதைப் புறக்கணித்தார். தன் நூலகத்தில் உள்ள அத்தனை புத்தகங்களையும் தன்னால் இப்போது ஒரு சிறு பையிலேயே கொண்டு செல்ல முடியும் என்று அவர் பெருமைப்பட்டுக் கொண்டார். அவற்றில் உள்ள அத்தனை தகவல்களும் அவரது விரல் நுனியில் இருக்குமாம். ஏதோ புது மின்புத்தக ரீடர்களின் விற்பனையாளன் என்பது போல் அவரது உற்சாகம் இருந்தது.
ஆனால் அதற்குள் என் மனம் எங்கோ சென்றுவிட்டிருந்தது, ஒவ்வொரு பதிப்பையும் வெவ்வேறாக்கும் தொடுகையின் நுண்மைகளை யோசிக்கத் துவங்கிவிட்டேன். 84, சேரிங் கிராஸின் கதைசொல்லி ஹெலன் ஹான்ஃப்பை நினைத்துப் பார்த்தேன் – புத்தகங்கள் மீதான நேசத்தை அழகாகப் போற்றும் நாவல் அது: “அமெரிக்க புத்தகங்களின் செத்து வெளிறிய காகிதங்களுக்கும் கெட்டித்துப் போன அட்டைகளுக்கும் பழகிப் போயிருந்த நான், தொடுகையில் அவ்வளவு ஆனந்தம் அளிப்பதாக ஒரு புத்தகம் இருக்கக்கூடும் என்பதை அறிந்திருக்கவே இல்லை[3]“. இந்தப் புத்தகத்தின் மின்பிரதியை என் மாமா எனக்கு அனுப்பி வைத்ததும் நினைவிருக்கிறது, அதன் முதல் சில பக்கங்களுக்குப் பின் ஏதோ பெரும் தவறிழைப்பதைப் போலத் தோன்றியது. புத்தகங்களைச் சேகரம் செய்வதையும் அதனுடன் வரும் அத்தனை இன்பங்களையும் ஏமாற்றங்களையும் இனிக்க இனிக்கப் போற்றும் இந்தப் புத்தகத்தை மின்னூலாக வாசிப்பது பொருத்தமாக இருக்கவில்லை. உடனே அதன் நூற்றாண்டு பதிப்பொன்றை உள்ளூர் நூலகத்திலிருந்துத் தருவித்தேன். அதன் உள்ளடக்கத்துக்குத் தக்க மதிப்புகொண்ட ஒரு பிரசுரத்தின் உறுதியான தாள்களைப் புரட்டி ஹெலனின் புத்தகசேகரிப்புக் கிளர்ச்சிகளை முழுமையாக அனுபவித்தேன்.
Flaubert தன் தோழி Mademoiselle Leroyer de Chantepie -யிடம், “நீ வாழ விரும்பினால் வாசி!” என்று வலியுறுத்தினார்.: “சில சமயம் நான் சொர்க்கம் என்பது முடிவற்ற தொடர் வாசிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்று வர்ஜினியா வுல்ப் தன் கடிதங்களில் ஒன்றில் எழுதுகிறார் . வாசகன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி கொண்டவனுக்கு வாசிப்பே அவனது எண்ணங்களில் முன்னிலையில் இருக்கிறது, இங்கே இப்போதும் இனி எப்போதும். எனவேதான் அவர்கள் மிக நெருக்கமாக உணர்ந்து, அனுபவித்து ரசிக்கும் ஒரு விஷயத்தின் மையத்தில் தவிர்க்க முடியாத மாற்றம் புகுத்தப்படும்போது ஊழிக்காலத்து பெருந்துயரத்தால் வாட்டப்படுகிறார்கள்.
ஆனால் சரித்திரம் என்னவோ எவ்வளவு மதிக்கப்பட்டதாக இருந்தாலும் அத்தனை புத்தகத் தொகுப்புகளும் நிலையானவையல்ல என்றுதான் நம்மிடம் திரும்பத் திரும்ப நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது. 47 BCல் அலெக்சாண்ட்ரியாவின் ஆயுதக்கிடங்குக்கு அருகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 40000 புத்தகங்கள் தீக்கிரையாகின என்கிறார்கள் – அல்லது நீங்கள் இபின் அல் கிப்தியை நம்புவதானால் மதவெறிக்கு பலியாயின, அத்தனை புத்தகங்களும் ஒவ்வொன்றாகப் பொதுக் குளியலகங்களின் அடுப்புகளில் விறகுகளாகப் பயன்படுத்தப்பட்டன. 1540ல், போர் தொடுத்துப் புகுந்த ஐரோப்பியர்கள் உள்ளூர் மக்களின் படைப்புகளுக்கு இருக்கக்கூடிய ஆன்மிக ஆற்றலை அஞ்சி அமெரிக்காவின் தொல் நூலகங்களை அழித்தனர் என்று எழுதுகிறார் நாவலாசிரியர் லெஸ்லி சில்கோ – மகோன்னதமான மிக்ஸ்டெக் மற்றும் மாயன் திரைச்சீலை ஓவியங்களை அழித்தனர். மக்களைக் கொன்று அவர்களின் மண்ணைக் கவர்வதற்கு முன் புத்தகங்களைத்தான் அழித்தனர்.
புத்தகங்கள் ஆனந்தமாய் அழிக்கப்படுவதை விவரிக்கும் சிதையுலக விவரிப்புகள் புனைவுகளில் ஏராளமுண்டு. நதானியல் ஹாதோர்ன் Earth’s Holocaust என்றொரு அச்சுறுத்தும் கதை எழுதியிருக்கிறார். அதன் சமூகம் தான் நாகரிகத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதான நம்பிக்கையில் கடந்த காலத்தின் மிச்ச சொச்சங்களாக உள்ள பண்பாட்டுப் பழங்குப்பைகளைக் கொளுத்த மாபெரும் நெருப்பைப் பற்ற வைக்கிறது, அதில் அழிகின்றன மாபெரும் அமெரிக்க, ஜெர்மானிய எழுத்தாளர்களின் படைப்புகளும் மில்டனும் ஷேக்ஸ்பியரும் முடிவில் பைபிளும்கூட. ரே பிராட்பரியின் பாரன்ஹீட் 411 நாவலில் தீயணைப்புப் படையினர் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொளுத்தும் நகைமுரணைப் பார்க்கிறோம்.
அசிங்கப்படுத்தி அழிக்கும் இந்த நாகரிகமற்ற செயல்களுக்கு மாறாக, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை கொண்ட வாசகர்கள் தாங்கள் நேசிக்கும் புத்தகத் தொகுப்புகளின் ஒரு சிறு தடயத்தையாவது எக்காலத்திற்கும் தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபடுகிறார்கள்.. ஆல்பர்டோ மங்க்வெல் போலந்து நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் பற்றி எழுதுகிறார். யூதப் புத்தகங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் அந்த நூலகர் தினமும் சில புத்தகங்களாக ஒரு வண்டியில் மறைத்துச் சென்று காப்பாற்றினாராம். அந்தப் புத்தகங்களைப் படிக்க எவரும் பிழைத்திருக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்தார் என்றால் இதை நினைவைக் காக்கும் ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். “பண்டைய கப்பாலியர்கள் சொற்படி, இந்த உலகம் நாம் வாசிப்பதால் இருப்பதில்லை, நம்மால் வாசிக்கப்படும் சாத்தியத்தில்தான் உருக்கொள்கிறது[4]”.
எனக்கும் இடிந்து விழும் என் நூலக புத்தக அடுக்குகளின் கீழ் நான் சிக்கிக் கொள்ளும் துர்சொப்பனங்கள் வருவதுண்டு. சாவை நேசிக்கும் நோய்மைத் தருணங்களில் இது எனக்கு மிகப் பொருத்தமான மரணமாக இருக்கும் என்றும் தோன்றுவதுண்டு. வேறு நெகிழ்ச்சியான தருணங்களில் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போதே உயிர் பிரிய வேண்டும் என்று விரும்புகிறேன் (ஆனால் அது என் விருப்பப் பட்டியலில் உள்ள அத்தனை புத்தகங்களையும் நான் படித்து முடித்தவுடன்தான் நிகழ் வேண்டும்).
எலியாஸ் கனேட்டி எழுதிய ஆட்டோ தாஃபே என்ற அந்த அசாதாரண புத்தகத்தின் பிகாடோர் பதிப்புதான் இப்போது நினைவுக்கு வருகிறது. 80களின் சென்னையில் அதைப் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது – அதன் அட்டையில் ஒருவன் தன் தலையின்மீது புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பான். தன் மாபெரும் நூலகத்துக்காகவே வாழும் தனிமை விரும்பி பீட்டர் கைன் பற்றி எலியாஸ் கனேட்டி எழுதிய வினோதமான புத்தகம் அது. அதன் இறுதியில் அவன் சிரித்துக் கொண்டிருப்பான், அவன் நூலகத்தில் இருக்கும் அவனது நேசத்துக்குரிய புத்தகங்கள் ஒவ்வொன்றாக நூலகத்தின் பெருநெருப்பின் தீக்கங்குகள் விழுங்குகையில் அவன் ஒரு ஏணியின் மீது நின்று கொண்டிருப்பான். அதற்கு முன்னர் அவனது கேலித்தனமான, ஆனால் பரிதாப திருமணம் அவனை அவனது நூலகத்தின் சில பகுதிகளிலிருந்து பிரிக்கும்போது மறக்க முடியாத இந்தப் பத்தி வரும்;
“புத்தகங்களுக்கு உயிரில்லை; அவற்றுக்கு உணர்வில்லாமல் இருக்கலாம், மிருகங்களுக்கும், ஏன் செடிகொடிகளுக்கும் தெரியுமளவுக்குக்கூட அவற்றுக்கு வலி தெரியாமல் இருக்கலாம், ஆனால் உயிரற்றவற்றுக்கு வலிக்காது என்பதற்கு நம்மிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? ஒரு புத்தகம், பல ஆண்டுகளுக்கு தம் சகாக்களாக இருந்த பிற புத்தகங்களுக்காக, நாமறியாத, நமக்கு அந்நியமான வேறு ஏதோ ஒரு வகையில் ஏங்காது என்று நமக்கு எப்படி தெரியும்?… மிருகங்களைவிட, புத்தகங்களை ஒரு மாற்று குறைவாக மனிதர்கள் கருதினார்கள் என்பதுதான் கைனுக்கு அதிசயமாக இருந்தது[5]…”
புத்தகங்களுக்கு ஏங்கும் புத்தகங்கள், என்ன ஒரு கற்பனை.
மனதைத் தொடும் தீச்சுவாலைகளைப் பேசும்போது யாரால் உம்பர்ட்டோ ஈக்கோவின் நேம் ஆப் த ரோசில் ஆட்சோ தன் இளம்பருவத்து ஏடிபிஷியத்துக்குத் திரும்புவதை மறக்க முடியும்: தண்ணீராலும் கரையான்களாலும் அழிக்கப்பட்ட புத்தக அலமாரிகள், மிச்சமிருப்பவை எல்லாம் ஏட்டில் எழுதப்பட்டவற்றின் மங்கிய எச்சங்கள், புத்தகங்களின் ஆவிகள். ஈக்கோ வேறோரிடத்தில் அலட்டலில்லாமல் இதைச் சொல்லியிருக்கிறார்: “ஏடிபிஷியம் முடிவில் எரிந்தாக வேண்டும் என்பது எனக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது… மத்திய காலகட்டத்தில் பேராலயங்களும் கன்னிகாமடங்களும் விறகு போல் எரிந்தன… பொருத்தமான லாபிரிந்த் ஒன்றை இரண்டு மூன்று மாதங்களில் அமைத்தபின் கடைசியில் காற்று புகா வண்ணம் அதில் வெட்டுத் துளைகளை உருவாக்க வேண்டியிருந்தது[6]!”
இப்படிதான், வாசக நண்பர்களே, நீங்கள் ஒரு மகோன்னதமான பண்பாட்டு மரபைக் கச்சிதமாக அழிப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள். கேடுகெட்ட துளைகளைப் பற்றி நமக்கு எந்த அறிவும் இல்லாது இருக்கும்போது, திடீரென்று நம் நேசத்துக்குரிய புத்தகக் கடைகள் ஒவ்வொன்றாகக் காணாமல் போவதைப் பார்க்கிறோம், அவற்றோடு புத்தகங்களை மேய்வதில் கிடைக்கும் அதிர்ஷ்டவசமான கண்டுபிடிப்புகளும் காணாமல் போகின்றன, வாசிப்பின் தொடுகை இன்பங்களை இழக்கிறோம் (இனி மின்புத்தகங்களின் வாசகர்கள், இல்லை, பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மணத்தை சுவாசிக்கவும் தேர்வு அளிக்கப்படும் என்று நினைக்கிறேன்), புத்தகங்கள் நம் வீடுகளின் சௌகரியமான மூலைகளை இழக்கும், அவற்றோடு நாமும் நம் புகலை, நம் வளையை, நம் நூலகங்களை.
தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் என்னை ஒரு லட்டைட் என்று நீங்கள் குற்றம் சாட்டுமுன் இதைச் சொல்லிவிடுகிறேன் : இது அத்தனையையும் நான் என் ஐபாடில்தான் தட்டச்சினேன். தார்மீகக் கோபத்தில் நீங்கள் கத்துவது எனக்குக் கேட்கிறது, ஆனால் என்ன சொல்லட்டும், போதலேரின் சொற்கள்தான் உதவிக்கு வரவேண்டும் – நான் உங்கள் சராசரி Hypocrite lecteur தானே , உங்கள் மாற்றுருவம்தானே , உங்கள் இரட்டைப் பிறவிதானே?
oOo
[i] லட்டைட் என்பது ஆங்கிலத்தில் வரும் Luddite என்ற சொல்லின் ஒலிபெயர்ப்பு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நெசவாலைகளில் வேலையை மிச்சப்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட இயந்திரங்களிற்கு எதிராகப் போராடியவர்கள் லட்டைட்கள். தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களை விரும்பாதவர்கள் என்ற அர்த்தத்தில் இப்போது பயன்படுத்தப்படுகிறது.