வந்தாரங்குடி புத்தக விமரிசனம் – வாசகர் எதிர்வினை

வந்தாரங்குடி நாவலைப் பற்றி நண்பர் கோபாலகிருஷ்ணனின் பதிவினைப் படித்தபின் பல்வேறு எண்ணங்கள் எழுந்தன. முக்கியமாக அவற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.
ஒன்று வாழ்வியல் மாற்றங்கள் அது உண்டாக்கும் ஆழமான பாதிப்புகள். இரண்டு அரசியல் இயக்கங்கள் இலக்கியங்களில் இடம் பெரும்போது அவற்றைக் குறித்த படைப்பாளியின் பார்வை.

நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாகிய கால கட்டத்தில், அதற்காக பலி கொள்ளப்பட்ட கிராமங்களைப் பற்றியும், வாழிடங்களிலிருந்து அகற்றப்பட்ட மனிதர்களைப் பற்றியுமான நாவலே கண்மணி குணசேகரனின் “வந்தாரங்குடி“, என்று அறிமுகம் செய்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இதில் வரும் பலி கொள்ளப்பட்ட என்ற வார்த்தைகள் மிகவும் விவாதத்துக்குரியது. அணைக்கட்டுகள்,அனல் மின் நிலையங்கள் சாலைகள் போன்ற எந்த ஒரு பெரிய திட்டமுமே ஒரு குறைந்தபட்ச நில ஆர்ஜிதங்கள். அதன் காரணமாக ஏற்படும் புலப் பெயர்வுகள் என்பவை தவிர்க்க இயலாதவை என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

இதில் நாம் உண்மையில் கவனம் செலுத்திப் பார்க்கவேண்டியது நில இழப்பிற்கும் அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் இழப்பிற்கும் ஆளான மக்கள் எந்த விதத்தில் நியாயமான இழப்பீடுகள் பெற்று மறுகுடியமர்வு செய்யப்படுகிறார்கள் என்பதைத்தான். பெரும்பாலும் இவை முறையாக நடைபெறுவதில்லை என்பதே வரலாறு அதற்காகத்தான் மேதா பாத்கர் போன்றவர்களின் நர்மதா பச்சாவ் அந்தோலன் முதலிய இயக்கங்கள் தேவைப்படுகின்றன. எவ்வளவோ போராட்டங்களுக்குப் பிறகும் கூட அவை முழு வெற்றி அடைவதில்லை என்பதும் கண்கூடு.

ஆனால் வந்தாரங்குடி நாவலில் வரும் சம்பவங்கள் மேற்சொன்ன வரலாற்றுக்கு விதிவிலக்காக அமைந்த ஒரு சில சந்தர்ப்பங்கள் என்பதையே காட்டுகின்றன. நிலக் கையகப்படுத்தலுக்கு உள்ளாகும் அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடுகளும் வேலை வாய்ப்புகளும் நிச்சயமாக தரப்பட்டுள்ளன என்பதை கதையின் போக்கில் நாம் காண்கிறோம், (நிச்சயமாக சில தீவிர போராட்டங்களுக்குப் பிறகுதான்) இதில் நிலத்தை இழந்த அனைவருமே ஒரு நல்ல இழப்பீட்டுத் தொகையோ அல்லது வேலை வாய்ப்போ பெற்று ஒரு நகர வாழ்வுமுறைக்கு தம்மை தகவமைத்துக் கொள்வது பதிவாகியுள்ளது. இதில் விதிவிலக்கு என்பது போராட்டத்தை முன்னிருந்து நடத்திடும் இரு இளைஞர்களும் ராசொக்கியம் எனும் அந்த “திருத்தவே முடியாத” விவசாயியும் தான். ஆனால் அங்கும் ராசொக்கியத்தின் பிரச்சினைகள் இழப்பீடுகள் பற்றியது அல்ல. அவர் புதிதாக விவசாயம் துவங்கிடும் இடத்தில் சாமான்ய மனிதர்களால் ஏற்படுவதே ஆகும் அதற்கு அரசாங்கம் என்ன செய்யும்.அந்த இளைஞர்களுக்கு கூட வேலை வாய்ப்பு தாமதப் படுகிறதே ஒழிய இழப்பீடு மறுக்கப் படுவதில்லை.

மானுட குல வரலாற்றில் ஒரு கட்டத்திற்குப் பின் விவசாயத்தில்ருந்து தொழிற்சாலை மற்றும் கிராமத்திலிருந்து நகரம் என்பதே தவிர்க்க இயலாத போக்காக இருக்கும்போது, (இதே வரிகளை சிங்கூர் போராட்டத்தின் போது புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்)வேளாண் நிலங்கள் இழப்பு என்பதைக் குறித்த நிலவுடமை சமூகத்தின் வருத்தங்கள் கொஞ்சம் disproportionate ஆகவே பதிவு செய்யப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன். சொல்லப் போனால் வேளாண்மை என்பதே கூட இயற்கைக்கு மாறானதுதான். காடுகளை அழிக்காமல் வேளாண்மை சாத்தியமா என்ன? (வானத்துப்பட்சிகளை பாருங்கள் அவை விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை… விவிலியம்)இன்றைய வேளாண் குடிகளின் மனநிலையும், காடுகளை வேளாண் நிலத்துக்கு பறிகொடுத்த வனவாசிகளின் மனநிலையும் பெரிதும் மாறுபட்டதல்ல இங்கு வேளாண்மை குறித்த சமணர்களின் நிலைபாட்டினை எண்ணிப் பார்க்கலாம்.மேலும் ஒன்று,ஒரு இலட்சிய உலகம் என்பது உணவு உற்பத்தியில் (வேளாண்மையில்) ஈடுபடும் மக்கட் தொகை மிகக் குறைந்த பட்சமாக இருப்பதுதான் என்றே நான் நினைக்கிறேன். ஆயிரம் சதுர அடிகள் கொண்ட ஒரு வீட்டில் சமையலறை என்பது 100 அடிக்கும் குறைவாகவே அமைகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியச் சூழலில் நகரமயமாக்கமும் தொழில் மயமாக்கமுமே தலித் மக்களுக்கு ஒரு குறைந்த பட்ச விடுதலையை அளித்தவை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கோபாலக்ருஷ்ணனின் நெடுஞ்சாலை குறித்த அவதானிப்பு சுவாரசியமானது. ஆனால் அங்கும் ஒவ்வொரு bye -pass ம் ஒரு 5- 10 வருடங்களுக்குள் தாம் விலகி வந்த மக்கள் வாழ்விடங்களை தம்மருகே இழுத்துக்கொண்டு விடுகிறது என்பதும் மீண்டும் புது புற வழிச் சாலைகள் தேவைப் படுகிறது என்பதுமே உண்மைகள்.

அடுத்து பா.ம.க வின் செயல் பாடுகள் குறித்த கண்மணியின் பதிவுகள். நிச்சயமாக இந்த நாவல் வன்னியர் சங்கத்தின் செயல் பாடுகளை மட்டுமே விவரிக்கிறது என்பது ஒரு முக்கியமான குறைதான். தமிழகத்தின் அந்தப் பகுதி எப்போதுமே இடது சாரி இயக்கங்களின் செயல்பாட்டுக்கு களமாக இருந்தவை/இருப்பவை. இன்றளவும் NLC யின் ஜெயங்கொண்டம் விரிவாக்கத்துக்கு எதிராக ம.க.இ.கவே அதிகம் போராடுகிறது. இந்த நாவலில் இடது சாரி இயக்கங்களின் போராட்டம் முழுமயாக இருட்டடிப்பு செய்யப் படுகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. நிச்சயமாக அவர்களின் செயல்பாடுகள் குறித்தத தகவல் என்னிடம் ஏதும் இல்லை. ஆனால் இந்தப் போராட்டத்தை கண்மணி முற்றிலும் வன்னிய சாதியினரின் போராட்டமாக சுருக்கித்தான் விட்டார், வன்னியரல்லாத சமூகங்கள் இந்த நிகழ்வை எப்படி எதிர் கொண்டன என்பது குறித்த பதிவுகளே இந்த நாவலில் இல்லை.

மற்றுமொரு முக்கியமான விஷயம் 1987-88 காலகட்டத்தில் வன்னியர் சங்கம் வன்னிய மக்களுக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டம் குறித்த நாவலின் பதிவுகள். வன்னிய மக்களுக்கு என்றே 20 சதவிகித தனி ஒதுக்கீடு கோருவதன் நியாயங்களை நாவல் விவாதிப்பதில்லை.அதை ஒரு உரிமையாகவே பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் நிறுவுகிறது.( அந்த 20 சதவீதக் கணக்கு எம்ஜிஆர் கூட்டிய அனைத்து சமுதாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பலப்பட்ட கதை தனியான ஒன்று.) அது மட்டுமல்ல அந்தப் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்னியரல்லாத மக்களின் உயிரிழப்புகளையும், வெட்டப்பட்ட மரங்களையும் (இன்றளவும் பாமகவுக்கு கெட்ட பெயரைத் தரும்)அது தமிழகத்தின் வட பகுதிகளில் பொது மக்களுக்கு ஏற்படுத்திய எண்ணற்ற இன்னல்களையும் நடு நிலையிலிருந்து நாவல் அணுகவேயில்லை. முற்றிலும் வன்னியர் சங்கத்திற்கு ஆதரவான நிலையையே எடுத்திருக்கிறது. மேலும் இந்த நாவல் மட்டுமல்ல கண்மணியின் அனைத்துப் படைப்புகளிலுமே கடலூர் விழுப்புரம் மாவட்டங்களின் வன்னிய-தலித் உறவுகள்/மோதல்கள் குறித்த அவரது மௌனம் ஒரு படைப்பாளிக்கு அழகானதல்ல. அதனாலேயே இந்த நாவல் பா.ம.க.வுக்கும் ராமதாசுக்கும் கொடி பிடிக்கிறது என்ற எண்ணம் தோன்றுவது இயல்பானது என்றே நான் நினைக்கிறேன்.

ஈழப் போராட்டம் குறித்தப் பதிவுகள் எல்லாம் தமிழகத்தின் பொதுப் புத்தி சார்ந்த உணர்ச்சி வசப்பட்ட உரையாடல்கள் என்பதைத் தாண்டி ஆழமான விவாதங்கள் ஏதும் இந்த நாவலில் இல்லை என்பதே உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.