நடீன் கோர்டிமர் [1923 – 2014]

Ulf Andersen Portraits - Nadine Gordimer

காலத்தைத் தாண்டி நிற்கும் மனித வாழ்வுக்கதைகளைப் படைத்தாலும் வாழும் காலகட்டத்தின் பிரதிநிதிகளாக எழுத்தாளர்களைப் பார்க்கும் போக்கு உலகெங்கும் உள்ளது. அதுவும் பெரும்பாலான விமர்சகர்கள் இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த எழுத்தாளர்களை ஏதேனும் ஒரு பகுப்பில் தொகுத்தும் பிரித்தும் வந்துள்ளனர். வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை விமர்சகர்களும் ரசிகர்களும் எப்படி வரவேற்றனர் என்பதைக் காணும்போது அந்தந்த காலகட்டத்தின் விமர்சன இயங்குமுறை எப்படி இருந்தது என்பதை உணரமுடிகிறது.

நடீன் கோர்டிமர் அவர்களது நெடிய வாழ்வில் பல வரலாற்று காலகட்டத்தைக் கடந்திருக்கிறார். அதற்கேற்றார்போல் அவரது படைப்புகளும் வெவ்வேறுவிதமான விமர்சனங்களை சந்தித்திருக்கின்றன. சட்டென விலகிய மேகத்திரள் போல காலனியாதிக்கத்தின் கோரப்பிடிப்பிலிருந்து விடுபட்ட கருப்பின மக்களின் சிக்கல்களைப் பேசுவதாகட்டும், ஆப்பிரிக்க நாட்டுப் பிரஜைகளிடம் எஞ்சியிருந்த பழக்கங்களையும் திரிபுகளையும் எதிர்கொண்ட நவீன மனிதனின் பார்வையைச் சித்தரிப்பதாகட்டும், காலனியச் சிறையில் தமது இறக்கைகளை இழந்த நவீனப் பெண்களின் நிலையை விவரிப்பதாகட்டும் நடீன் கோர்டிமர் ஒவ்வொரு வகையான வாழ்வைப் பற்றியும் மிக விரிவாகப் பதிந்துள்ளார்.

அவர் மிகச் செறிவாக இயங்கிய அறுபது வருட காலகட்டத்தில் உலகச் செயல்பாடுகள் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகியிருக்கிறது. ஐசக் டென்னிசனின் `ஆப்பிரிக்காவிலிருந்து` (Out of Africa) படைப்பில் நாம் பார்க்கும் ஆப்ரிக்க மக்களுக்கும், ஜெ.எம்.கூட்சியின் நவீன தென்னாப்பிரிக்கா மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி, நடீன் எழுதிய ஆரம்பகாலகட்டக் கதைகளுக்கும் 2010இல் வெளியான சிறுகதைகளுக்கும் இடையே உள்ளது. காலனி ஆதிக்கத்திலும் அதன் பிடியிலிருந்து தளர்ந்த சமயங்களிலும் ஆப்பிரிக்கா ஒரு புதிர் கண்டம். நவீன மனிதன் தொடமுடியாத `பழைமைவாதம்` நிரம்பிய நிலம். இந்தியர்களும், வெள்ளையர்களும் வேலைக்காகப் படை திரண்டு சென்ற காலகட்டத்திலும் ஆப்பிரிக்க ஆதி குடியினருக்கும் அவர்களுக்கும் பெரும் இடைவெளி இருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து புத்தகத்தில் வட ஆப்பிரிக்க இஸ்லாமியருடனான நெருக்கம் குறித்து ஐசக் டெனிசன் மிக விரிவாக எழுதியுள்ளார். ஆனால் அரசியல் பகடைக்காயாக அம்மனிதர்கள் மாறியிராதக் காலகட்டம். அவர்களைப் போல மிகச் சில ஆப்பிரிக்கர்கள் மட்டுமே பெரும் நிலப்பகுதிக்கு பிரதிநிதியாக இருந்துள்ளனர்.

காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை கிடைத்ததும், உலகளாவிய மனித வாழ்வில் நவீன மனிதனைத் தொட்டுக்குலுக்கிய பல கேள்விகள் மிக இயல்பாகவே ஆப்பிரிக்க மக்களையும் சீண்டின. அதுவரை ஏலம் விடப்பட்டு வீடுகளிலும் பண்ணைகளிலும் வேலை செய்துவந்த ஆப்பிரிக்கக் கருப்பர்கள் மட்டுமே அந்நிலத்தை அறிந்துகொள்ள உதவிய முதல் மனிதர்கள். பல பயணக்கட்டுரைகள் ஆப்பிரிக்கக் காடுகளைப் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், அம்மனிதர்களைப் பற்றி வெகுசில ஆக்கங்களே வெளியாயின. விடுதலைக்குப் பின்னர் தலைதூக்கிய ஆப்பிரிக்க நாடுகள் நவீன வாழ்வின் குழப்பங்களையும், முதலியத்தின் வாலைப் பிடிக்க அரசுகள் எடுத்த கூட்டு முயற்சியின் பக்கவிளைவுகள் என ஒரு பக்கம் சென்றது. இதன் விளைவு ஆதிகாலப் பழக்க வழக்கங்களை உதறி நிற்கத்துடிக்கும் ஒரு தலைமுறை தன் முன்னோரையும் அவர்களது வாழ்வையும் ஒதுக்கியது. ரைசாட் கபுசின்ஸ்கி (Ryszard Kapuscinski) எனும் பயண எழுத்தாளர்கள் ஆப்பிரிக்க கருப்பின குலக்குழுவுடன் பல காலம் தங்கியிருந்த அனுபவங்களை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் ஒரு செய்தி மிக முக்கியமானது. அதுவும் நவீன மனிதனும், குடியரசு அரசுகளும் முதலியத்தை வெறிகொண்டு துரத்திச்சென்றபோது –

Many African nations are already living through a second phase of their short postwar history. The first phase was a rapid decolonization, the gaining of independence. It was characterized by a universal optimism, enthusiasm, euphoria. People were convinced that freedom meant a better roof over their heads, a larger bowl of rice, a pair of shoes. A miracle would take place – the multiplying of loaves, fishes and wine. Nothing of the sort occurred. On the contrary. There was a sudden increase in the population, for which there was not enough food, schools or jobs.

Cobra’s Heart, Ryszard Kapuscinski.

இதில் அவர் குறிப்பிடும் ரொட்டி, மீன் மற்றும் வைன் குறிப்பு மிக முக்கியமானது. ஆப்பிரிக்க பழங்குடிகளின் மத குல நம்பிக்கைகளைக் கலைத்து நவீன மனிதத்தை நோக்கிப் பாதை காட்டிய ஆப்பிரகாமிய நம்பிக்கைகள் முதலியத்தை நோக்கியே இட்டுச் சென்ற பரிதாபமான நிலை.

பிற நாடுகளில் வாழ்ந்தவர்களுக்கு ஆப்பிரிக்கா குறித்து இருந்த பிம்பம் வேறு வகையானது. ஆப்பிரிக்கா காலனியச் சங்கிலியை உதறுவதற்கு சிறிது காலகட்டத்துக்கு முன்னரே ஐரோப்பாவும், அமெரிக்காவும் நவீன காலகட்டத்தை அடைந்துவிட்டன. ஆப்பிரிக்கா நாடுகள் விடுதலை அடைந்த ஐம்பது/அறுபதுகளில் பிற நாடுகள் நவீன யுகத்தின் போலி வாக்குறுதிகளைக் கண்டுகொண்டுவிட்டன. அவர்களைப் பொருத்தவரை ஆப்பிரிக்கா என்பது கன்னி நிலம். அங்குள்ள பண்பாடும், வாழ்வுமுறையும் நவீன மனிதனைத் திரும்ப மீட்டுவிடும் எனும் கனவு பலருக்கும் இருந்தது. பாவமன்னிப்பு பெற்றது போல தன்னை மீட்டுக்கொள்ள அக்காலகட்டத்துக்குள் நுழைந்துவிட முடியும் எனும் நப்பாசை. ஆனால் நிஜம் வேறு மாதிரி இருந்தது. மிக மிக வேகமாக பண்பாடும், மனித மனங்களும், முதலிய வேட்கையும் ஆப்பிரிக்காவை அக்கனவு நிலையிலிருந்து சீர்கேடான பாதைக்குச் செலுத்திக்கொண்டிருந்தது.

இப்பின்புலத்தில் நடீன் கோர்டிமர் கதைகளை நாம் பார்க்க வேண்டும். 1950களில் எழுதத்தொடங்கிய நடீன் ஆரம்பகாலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிறப் பெண்ணின் உணர்வுகளையும் வளர்ப்புச் சூழல் பற்றியும் எழுதினார். தென் ஆப்பிரிக்காவில் கருப்பு இன எதிர்ப்பு வெகு அதிகமாக இருந்த காலகட்டம். நடீன் எழுதிய பெரும்பாலானக் கதைகள் இப்படிப்பட்ட அரசியல் சூழலைச் சுற்றியே அமைந்துள்ளது. கருப்பின மக்களின் ஆதரவாளராக பகிரங்கமாக அவர் செயல்பட்ட காலகட்டம். ஒரு பக்கம் தென் ஆப்பிரிக்காவின் நவீன மனித மீட்புக்கான இடமென நினைக்கும் பிற நாட்டவர்கள். மறு பக்கம் பெரும் பிரிவினை அடையாளங்களால் உருவாகும் வன்முறைகளின் விளைநிலமாக தெனாப்பிரிக்கா மாறியது. பல நூற்றாண்டுகளாக தங்கள் நாட்டிலும் பிற நாட்டிலும் அடிமைகளாக இருந்த கருப்பின மக்கள் தங்களுக்கென அரசியல் நிலைபாடுகளில் கவனம் செலுத்தத்தொடங்கிய காலகட்டம்.

ஆப்பிரிக்கா பயணக்குறிப்புகளும், கதைகளும் மேற்குலக ரசிகர்களிடையே ஆப்பிரிக்கா எனும் நிலப்பகுதி பற்றிய சாகச உணர்வை அளித்திருந்தது. புதையல்களின் சுரங்கமாகவும், பூவுல சொர்க்கத்தை அளிக்கும் போதை விளைச்சல்களைக்கொண்டு நிலமாகவும் அவர்களுக்கு அது தெரிந்தது. ஜோசப் கான்ராட் எழுதிய Heart of Darkness நாவல், மனிதன் தன்னைக் கண்டுகொள்ள, மனிதத்துவத்தின் எச்சங்களை மீட்டெடுக்க புழங்க வேண்டிய சமூகமாக ஆப்பிரிக்காவைக் காட்டியது. நடீன் கோர்டிமரின் எழுத்து இக்கனவுச் சித்திரத்தை முழுவதும் கலைக்கிறது. ஆப்பிரிக்கா எனும் நிலப்பகுதி பல இனக்குழுக்களின் தொகுப்பு. அங்கிருந்து வரலாற்றுப்பாதையைத் தொடர்ந்து முதலியத்தையும், சுதந்திரத்தையும் ஒரு சேரக்கண்டுகொள்ளும் இருவேறு இனக்குழுவின் பிரிவினையையும், வன்முறையையும் காட்டுகிறது. நடீன் கொர்டிமரின் கதைகள் அனைத்தும் இந்த நிலப்பகுதியின் நிஜமான அரசியலை மையமாகக் கொண்டவை. அவை எந்தொரு சாகசத்தையும் காட்டுவதில்லை. கருப்பின மக்கள் சுதந்தரத்தை சுவைக்கத் துடிப்பதில் உள்ள மீறல்களையும், வெள்ளை இன மக்கள் ஆதிக்குழுக்களிடம் மனிதத்தை மீட்டெடுக்கச் செய்யும் முயற்சிகளையும் ஒருசேரக் காட்டுகிறது.

Beethovan is one-sixteenth black எனும் சிறுகதைத் தொகுப்பு தென் ஆப்பிரிக்கா இனங்களின் அடையாளச் சிக்கல்களை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. தன் நினைவில் இருக்கும் பழைய ஆப்பிரிக்காவை நினைத்து ஏங்கும் வெள்ளை நிறப் பாட்டியும், கணவன் இறந்தபின் தனது குழந்தையுடன் காதலனைத் தேடிச் செல்லும் நவீன கருப்பின பெண்ணின் போராட்டத்தையும் நடீன் கோர்டிமரால் ஒருசேரக் காட்ட முடிகிறது. மேலோட்டமாகத் தெரியும் இனவெறுப்பைத் தாண்டி இக்குழுவினரின் சில பிரதிநிதிகளைக்கொண்டு இருபதாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவின் பயணத்தைக் கூறுகிறார்.

நடீன் கோர்டிமர் எழுதிய நீண்ட காலகட்டத்தில் பலவிதமான அடையாள அரசியல் விமர்சன ரகங்கள் வந்து மறைந்துவிட்டன. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து மனித இருப்பைப் பற்றிய கதை எனும் பொது அடையாளத்தில் அவரது கதைகளை வைத்தாலும் வரலாற்றின் ஒரு சிறு ஓட்டத்தில் கருப்பின அரசியலோடு மிகவும் பின்னிப்பிணைந்த படைப்புகளை எழுதியவராகிறார் நடீன் கொர்டிமர். நீண்ட மரபைக் கொண்ட கருப்பின ஆப்பிரிக்கா தனது அடையாளங்களை இழந்து நவயுக தொழில்நுட்பங்களில் தஞ்சம் புகுந்திருப்பதையும், அடிப்படை நியாய உணர்வையும் மனிதத் தத்துவத்தையும் தேடப்புறப்படும் மேற்கத்திய மனோபாவத்தையும் நடீன் கோர்டிமரின் எழுத்து கேள்வி கேட்கிறது; பரந்த காட்டை அளக்க முற்படும் சிறு நத்தைபோல அவ்வப்போது எல்லை வந்துவிட்டதா என எட்டிப்பார்க்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.