சர்வர் சுந்தரம்

server_sundaram

என் இயற்பெயர் அழகுசுந்தரம். நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் பார்த்தது முதல் பெயரில் அழகு நீக்கப்பட்டு ‘சர்வர்’ சுந்தரம் ஆனேன். அண்ணாநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் முப்பத்தேழு வருடங்களாக சர்வர் உத்தியோகம்.

‘ஏன்டா! வேலையில சேர்ந்து படிப்படியா முன்னேறி கேஷியர் மேனேஜர்னு போக வேண்டாமா. இப்படியே எத்தனை நாளைக்கு சர்வரா இருக்க போற’.

ஆரம்பத்தில்இது போன்ற கேள்விகளுக்கு பதில் கூற தெரியாமல் முழிப்பேன். நாளடைவில் யோசித்து ஒரு பதிலை தயார் செய்து கொண்டேன், ‘எல்லாருமே கல்லாபெட்டில ஒக்காந்துட்டா அப்புறம் யார் டேபிள பாக்குறது. எனக்கு இந்த உத்தியோகம்தான்வோய் புடிச்சிருக்கு.’

உண்மையில்,வாழ்கையில் எனக்கு ஏதும் பெரிய பிடித்தம் கிடையாது. ஊரில் இருந்த ஒற்றை பெரியம்மா பத்து  வருடங்களுக்கு முன்னே இறந்து போனாள். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை. தனியாகவே இருந்து பழகிவிட்டேன். ஹோட்டலிலேயே தினம் உணவு. மாடியில் ரூம் கொடுத்திருக்கிறார்கள். செலவு என்று பெரிதாக ஒன்றும் கிடையாது.

ஹோட்டல் ஒரு மிகப்பெரிய கம்யூனிச சித்தாந்தம். எல்லோர்க்கும் ஒரே தரமான உணவு தான்; ஒரே தரமான உபசரிப்பு தான்; வேடிக்கையான, வினோதமான மனிதர்களை சந்திப்பது ஒரு கூடுதல் சுவாரசியம்.

ஐந்து வருடங்களாக அவர் எங்கள் ஹோட்டலில் தான் காலை காபி குடிப்பார்.கையில் அன்றைய ஆங்கில நாளிதழ் குறுக்கெழுத்து பக்கத்திற்கு திருப்பியிருக்கும். காப்பியுடன் அரை மணி நேரம் குறுக்கெழுத்தையே வெறித்திருப்பார். அவர் ஒரு எழுத்து கூட நிரப்பி நான் பார்த்ததில்லை.

குழந்தைகள் ஹோட்டலின்  சூழலேயே மாற்றி விடுவர். “அங்கிள் எனக்கு ஒரு ஐஸ்கிரீம்.”

“முதல்ல ஐஸ்கிரீமா சாப்பிடுவாங்க. எதாவது சாப்டுட்டு ஐஸ்கிரீம் சாப்பிடலாம்” அறிவுரைக்கும் குழந்தையின் அம்மா.

“அப்ப மொதல்ல ஒரு ஐஸ்கிரீம் சாப்டுட்டு அப்புறம் இன்னொரு ஐஸ்கிரீம் சாப்பிடலாம்”.

“ரெண்டு பிளேட் இட்லி குடுங்க”. அம்மாவின் ஆர்டரை எதிர்த்து குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையின் பதிலை நினைத்து சிரித்தவாறே ஆர்டர் கொண்டு வந்தேன். இரண்டு பிளேட் இட்லி – கூடவே ஒரு ஐஸ்கிரீம். குழந்தையின் முகத்தில் பெரிய சிரிப்பு.

ஹோட்டல் வருடத்தின் எல்லா நாட்களும் இயங்கும். எங்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை. நண்பர்கள் சகவாசம் பெரிதாக கிடையாது. எப்பொழுதேனும் இரவு சினிமா காட்சி பார்ப்பதுண்டு. நாகேஷ் எவ்வளோ பெரிய நடிகன்! அவருக்கு துண்டு துக்கடா கேரக்டர்கள் கொடுத்து அவமானபடுத்துகிறார்கள். அவர் அது போன்ற படங்களில் நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

என்னை பற்றி புரளி பேசுவதற்கு என்று ஒன்றும் பெரிதாக இல்லை.அந்த ஒரு புரளியை தவிர! ‘பெருசு மாசத்தில திடீர்னு ஒரு நாள் டிப்டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு எங்கேயோ கிளம்பிடரார்ப்பா . எங்க போறார்னு யாருக்குமே தெரியாது.’

உண்மைதான்! முகம் மட்டுமே தெரியும் அளவு கண்ணாடியில் பெல்டை சரிபார்த்து கொண்டு வெளியே கிளம்பினேன். என்னை சர்வர் உடையிலேயே பார்த்து பழக்கப்பட்டவர்கள் அந்த உடையில் என்னை சட்டென்று அடையாளம் கண்டு கொள்ள முடியாது. பஸ் ஸ்டாப்பிற்கு வந்து 5C பஸ்ஸிற்கு காத்திருந்தேன். கால்மணி நேரமாகியும் எந்த பஸ்ஸும் வருவதற்கான அறிகுறி இல்லை. பஸ் ஸ்டாப்பிற்கு முன்னால் அந்த ஆட்டோ வந்து நின்றது.

“சுந்தரம் சார். பஸ்ஸுக்கு வெயிட் பண்றீங்களா.” ஜோசப். அடிக்கடி ஹோட்டலுக்கு சாப்பிட வருவான். ஹோட்டலுக்கு பக்கத்தில் தான் ஆட்டோ ஸ்டாண்ட்.

“எங்க போகணும்னு சொல்லுங்க. நான் கொண்டு போய் உட்றேன்.”

“வேண்டாம்பா. பஸ் இப்ப வந்துடும்”.

“பிரிட்ஜ் நடுவுல ஒரு பஸ் பஞ்சராயிடிச்சு. அந்த சைடு புல் டிராபிக். பஸ்ஸெல்லாம் இப்ப வராது. காசெல்லாம் ஒண்ணும் வேண்டாம். சும்மா ஏறுங்க.”

“அதுக்காக சொல்லல ஜோசப். உனக்கு எதுக்கு வீண் செரமம்னு பார்த்தேன்.” ஆனால் ஜோசப் என்னை ஏற்றாமல் நகருவதாக இல்லை.

“ஆழ்வார்பேட்டை போகணும்”.

டிராபிக்கை இலகுவாக சமாளித்து ஓட்டினான். “என்ன சார்… நம்ம காஷியர் கதிரேசன் பொண்ணு புருஷன டைவோர்ஸ் பண்ண போகுதாம்”

பதில் ஏதும் சொல்லாமல் ஆட்டோவுக்கு வெளியே பார்த்து கொண்டு வந்தேன்.

“என்ன சார் இந்த காலத்து பொண்ணுங்க. அதோ பாருங்க ! பைக்கு பின்னாடி முக்காடு போட்டுகிட்டு போகுது. புருஷன் கூட போறாளோ யார் கூட போறாளோ “

மீண்டும் பதில் ஏதும் சொல்லாமல் ஆட்டோவுக்கு வெளியே பார்த்து கொண்டு வந்தேன்.

“ஆழ்வார்பேட்ல எங்க சார் போகணும் .”

“கோஆபரேடிவ்  பேங்க் வாசல்ல இறக்கிவிடேன்.”

“இதுக்காவது பதில் சொன்னீங்களே.”

பேங்க் வாசலில் இறக்கி விட்டு பணம் எதுவும் வாங்க மறுத்து கிளம்பினான்.

கடைசிவரை எதற்காக ஆழ்வார்பேட் போறீங்கன்னு கேட்கவே இல்லை. மனிதன் ஒரு விசித்திர பிராணி. எப்போது கண்ணியம் காப்பான் என்று தெரியாது.

கோபெரடிவ் பேங்கிலிருந்து நடந்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் டி.டி.கே சாலை சந்திப்பில் பார்க் ஷெரட்டன் ஹோட்டல். ஹோட்டல் ரிசப்ஷனில் புதுமுகங்கள். தக்ஷின் ஹால் உள்ளே நுழைந்து நான் எப்பொழுதும் அமரும் ஓர இருக்கையை ஆக்கிரமித்தேன். சூட் அணிந்த சர்வர் அருகில் பவ்யமாக வந்து, கவிழ்த்து வைத்திருந்த கிளாஸை நிமிர்த்தி தண்ணீர்  நிரப்பினார்.

“Sir ! Do you want to order now.”

படம்: பென்சில் ஜாமர்கள்

0 Replies to “சர்வர் சுந்தரம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.