ஒளிப்பதிவாளர் கம்பன்

எனக்குப் பிடித்த கம்ப ராமாயணப் பாடல்:

வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையில் மதியன்ன நகையிழந்த முகத்தானை
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின்று இடைவீழ விம்முற்று நின்றொழிந்தான்

 
இதை இரண்டு அல்லது மூன்று முறை வாசியுங்கள். உரக்கவே படிக்கலாம், தப்பில்லை. அருமையான இதன் சந்தத்தை உள்வாங்குங்கள். இந்தப் பாடல் அயோத்தியா காண்டத்தில், குகப் படலத்தில் வருகிறது.
குகன் பரதனைப் பார்த்தவுடன் அவனது நிலையைக் கூறும் பாடல் இது.
இதன் அர்த்தம் மற்றும் நுண்மையைப் பார்க்கும் முன்னர் கொஞ்சம் இதன் பின்புலத்தை அறிவது அவசியம்.
பரதன் தன் படையுடன் கங்கைக் கரையை அடைகிறான், இராமனைக் கண்டு அயோத்திக்கு அழைத்துச் செல்ல. அவன் குறிப்பை அறியாத குகன்

நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில்
புகை உற

அப்படையைப் பார்த்துச் சீறுகிறான்:
என் ஆருயிர் நண்பனை நாட்டை விட்டுத் துரத்தியதும் அல்லாமல் இங்கேயும் அவன் மேல் போர் தொடுக்க வந்து விட்டனரா, என்ன?

அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை கண்டு விலகிடும் வில்லாளோ (நான்)?

என்ன செய்கிறேன் பார் இவர்களை!

எலி எலாம் இப்படை
அரவம் யான்

அப்படியே முழுங்கி விடமாட்டேனா என்ன? என்று பலவாறு புலம்புகின்றான்.
அதற்குள் குகனைப் பற்றிக் (உங்கள் குலத் தனி நாதற்கு
உயிர் துணைவன், உயர் தோளான்…) கேள்விப் பட்ட பரதன்,
மன் முன்னே தழீஇக் கொண்ட
மனக்கு இனிய துணைவன் ஏல் (என் அண்ணலுக்கு நண்பன் என்றால்)

என் முன்னே அவர் காண்பென்
யானே சென்று

என எழுந்து செல்கின்றான். அப்பொழுதுதான் நம் பாடல் வருகின்றது.
 
சரி, இதை இப்பொழுது சந்தி பிரித்துப் பொருள் பார்க்கலாம்.

வற்கலையின் உடையானை
மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன*
நகை இழந்த முகத்தானை
கல் கனியக் கனிகின்ற
துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ,
விம்முற்று நின்று ஒழிந்தான்.

 
வற்கலையின் உடையானை
வற்கலை என்பது மரவுரியைக் குறிக்கும். அடிப்படையில் இது
வல்+ கலை, வல் என்றால் வலிமை/கடுமை, கலையென்றால் ஆடை. வற்கலை, அதாவது வலிமை/கடுமையான ஆடை. மரவுரியைக் குறிக்கும். (தற்காலத்தில் வற்கலையை நாம் ஜீன்ஸ் என்று அழைக்கிறோம்!).
மாசு அடைந்த மெய்யானை
பரதனின் உடல் முழுவதும் தூசு படிந்துள்ளது பாதுகாப்பாகத் தேரில் வராமல் (அண்ணன் நடந்து வந்தான் என்று கேள்விப்பட்டுத் தானும்) நடந்து வந்ததால்.
நற்கலை இல் மதி என்ன
நல்ல கலை இல்லாத மதி, ஒளி இழந்த சந்திரன். சில நேரங்களில் மேகமூட்டத்திற்குள் இருக்கும் சந்திரன் களை இழந்து காணப்படும், அது போல. இது மேற்கூறிய மாசு அடைந்த மெய்யுடன் ஒத்துப் போவதும் காண்க.
நகை இழந்த முகத்தானை
மதிக்குக் கலை எவ்வளவு அவசியமோ, அதேபோல முகத்திற்கு நகை அவசியம் என்ற பொருள் உள்ளடங்கியிருப்பதைக் காண்க.
ஆக, பரதன் எவ்வாறு காட்சி அளிக்கிறான் என்று பாருங்கள்:
வற்கலையை அணிந்துள்ளான் (பட்டு பீதாம்பரத்துடன் காட்சி தருவான் என்று குகன் நினைத்திருக்கலாம். இதுவே ஒரு முதல் அதிர்ச்சியாக இருந்திருக்கும், குகனுக்கு); உடல்முழுவதும் தூசி படிந்துள்ளது; முகம் ஒளி இழந்து காண்கிறது.
சரி, ஆடை, உடல், முகம் எல்லாம்தான் வர்ணித்தாயிற்றே, இனிமேல் என்ன என்று நாம் நினைக்கும்போதுதான் கம்பன், இவ்வளவு நேரம் முத்து, மாணிக்கங்களைக் கோர்த்துக் கொண்டிருந்தவர், முத்தாய்ப்பாய் ஒரு பெரிய வைரத்தை வைக்கிறார், எல்லாவற்றிற்கும் சிகரமாக.
கற்கனியக் கனிகின்ற துயரானை
என்கிறார். பரதனின் முகத்தில் மண்டியிருக்கும் துயரைக் கண்டால் கல்லும் கனிந்து விடுமாம்! ஆஹா, என்ன கற்பனை, என்ன ஒரு சொல்லாடல், என்ன கவித்துவம்!
(ஹூம்! தற்பொழுது மேஜிகல் ரியலிசம் பற்றி நாம் தென் அமெரிக்க எழுத்தாளர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று!)
சரி, மீண்டும் சேர்த்துப் பார்க்கலாம்.

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நற்கலையில் மதியன்ன நகை இழந்த முகத்தானை
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்

எப்படி ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் நேர்த்தியாக ஃபோகஸ் செய்வது போலச் செய்கிறார் பாருங்கள்.
வற்கலையின் உடையானை – – லாங் ஷாட்;
மாசு அடைந்த மெய்யானை – – மீடியம் ஷாட்;
நற்கலையில் மதியென்ன நகை இழந்த முகத்தானை – – க்ளோஸ் அப்;
கற்கனியக் கனிகின்ற துயரானை – – எக்ஸ்டிரீம் க்ளோஸ் அப்!
எந்த ஒரு வகையான நெருடலோ, தடங்கலோ இல்லாமல் ஒரு மென்மையான காட்சிப் பதிவு; ஸ்மூத் கேமெரா வொர்க்!
இவ்வாறு காட்சி தரும் பரதனை குகன்
கண் உற்றான்
அதாவது வெரித்து நோக்குகின்றான். வெறுமே கண்டான் என்று சொல்லாமல், கண் உற்றான் என்பதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது; அதாவது நம்பமுடியாத காட்சியைக் காண்பது போல வெறித்து நோக்குகின்றான். அடுத்த வரிக்கும் இது முன்னோடியாக இருப்பது புரியும்.
அடுத்த வரியைப் பார்ப்பதற்கு முன் குகனைப்பற்றி இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்: அவன் எயினர்கோன்; வேடர்களின் அரசன். கங்கைக் கரையின் நாயகன். வில் அவன் தோளைவிட்டு நீங்காது ஒரு கணமும். அப்படிப் பட்டவன் நிலை, பரதனைப் பார்த்தவுடன்,
விற்கையினின்று இடை வீழ
அவனது வில், அவன் கையை விட்டுத் தானே கீழே விழுந்ததாம். ஒரு தன்னிச்சையான செயல். அவன் ஒன்றும் செய்ய வில்லை.
அதற்கும் மேல் அவன்,
விம்முற்று நின்று ஒழிந்தான்
என முடிக்கிறார். அதாவது, சில நேரங்களில் நாம் துக்கம் மேலானால், ‘ஆங்என்று தொண்டை அடைக்க நிற்க மாட்டோமா, அதைப் போல். திகைப் பூண்டை மிதித்தது போல் என்று சொல்வார்கள்.
குகன் வில் கீழே விழ, விம்மிச் செயலற்று நிற்கிறான். ஆக, மிக்க சீற்றத்துடன், போர் குறியுடன் வந்தவன், பரதனைக் கண்டவுடன், இரக்கம் மிகுந்து, செயலிழந்து, கையறு நிலையில் நிற்கிறான்.
இப்படி நான்கே வரிகளில் ஒரு ஓரங்க நாடகமே நடத்தி விட்டார் பாருங்கள்.
பின்னர் பரதனிடமிருந்து அவன் முழுக் கதையும் கேட்ட குகன்,
தாய் உரையைக் கேட்டுத் தந்தை உனக்கு அளித்த தரணியைத் தீ வினை என்று நீ உதறிவிட்டு வந்ததைக் கேட்கும் பொழுது
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா!
என்று வியந்து கூறுகிறான். கம்ப ராமாயணத்திலேயே மிகவும் உருக்கமான காட்சி இது. பல்வேறு நுண்ணிய வர்ணங்களைக் குழைத்துத் தீட்டிய சித்திரம் போன்ற கம்பனின் சொற்சித்திரம் மிக மிக அற்புதமான விலையற்ற பரிசு நமக்கு.

oOo

  • அன்னஎன்பதுதான் பாடம் என்று எனக்கு ஞாபகம். ஆனால் tamilvu, projectmadurai இரண்டுமே என்னஎன்றுதான் பதிவு செய்திருப்பதால், அதையே நாம் பயன் படுத்தலாம். தமிழ் அறிஞர் யாரேகிலும் இதைத் தெளிவு படுத்தலாம்.

பி. கு.எனக்குத் தமிழ் அறிவுறுத்திய ஆசான்களுக்கு ஒரு சிறு காணிக்கையாக இக்கட்டுரை சமர்ப்பணம்.

0 Replies to “ஒளிப்பதிவாளர் கம்பன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.