ஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி

புதர்களுக்கிடையில் மறைந்திருந்து மணிக்கணக்கில் காத்திருப்பார் ரங்கண்ணா. சேவல் இன்று எந்த ராகத்தில் கூவப்போகிறது என்பதை அறியும் ஆவலால் அவர் விடியற்காலை வேளையிலே அங்கு சென்றிருப்பார். முந்தைய நாள் பைரவி பாடிய சேவல் தன் இன்றைய உணர்ச்சிகளுக்கு ஏற்ப காம்போதியில் கூவுவது அவரைப் பரவசப்படுத்துவதாக இருக்கும்.

தி. ஜானகிராமனின் மகத்தான காவியமான மோகமுள்ளில் வரும் பாத்திரம் ரங்கண்ணா இசை ஞானத்தில் கரைகண்டவராகப் போற்றப்படுகிறார். உயர்ந்த இசைக்கான அவரது தேடல் இலக்கிய மரபில் ஒரு பழங்கதைக்குரிய நிலையான் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனால், யதார்த்தம் இப்படிப்பட்ட உயர்வு நவிற்சிக்கு எதிரானது. நம்மிடையே ரத்தமும் சதையுமாக வாழும் ஒரு உண்மையான மேதை இப்படியெல்லாம் பேசும்போது அவரை நாம் சும்மா விடுவதில்லை.

1989ஆம் ஆண்டு ஃப்ரண்ட்லைன் இதழில் வெளிவந்த பேட்டியில் நிருபர், நீங்கள் எது இசை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள், என்று இளையராஜாவைக் கேட்கிறார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்:

“ஒலியன்றி வேறல்ல இசை. ஒரு நாய் குரைப்பதில் இசை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் நடையிலும் இசை இருக்கிறது. இசை விவாதிக்கப்படக்கூடிய விஷயமல்ல. அது அனுபவத்துக்குரியது. இந்த உலகம் தனக்கே உரிய லயத்தில் இயங்குகிறது. அது தனது சமநிலையை இழக்காமல் சுழல்கிறது. அதே போல் ஒலியின் அடிப்படை ஆதார சுருதி ஒன்றே. அதில் ஏற்ற இறக்கங்கள் கிடையாது. அது உச்சத்தை நோக்கி உயர்வதுமல்ல, அலைவுகள் கொண்டு சஞ்சரிப்பதுமல்ல. இசை எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. ஆனால் அதன் இயக்கம் நமது சாமானிய புலன்களுக்கு அப்பாற்பட்டது. மனிதர்களாகிய நம் அறிவு குறுகிய எல்லைகளுக்கு உட்பட்டது. செவிப்புலனின் அலைவரிசைக்குத் தக்க ஒலிகளைதான் நம்மால் கேட்க முடியும். ஆனால் அதற்கு மேலும் கீழும் ஸ்வரங்கள் உள்ளன. இந்த விஷயத்தை நாம் மறந்து விடுகிறோம். இயற்கையின் ஆதார சுருதியை மனிதன் தன் வசதிக்காக ஆக்டேவின் ஏழு ஸ்வரங்களாகப் பிரித்து வைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாய் ஊளையிடுவதைக் கேட்டுப் பாருங்கள். அதில் ஸ்வரப் பிரஸ்தானம் இல்லையா? ஸ ரி க ம (ஒற்றுமையைப் பாடிக் காட்டுகிறார் இளையராஜா).

ஒரு நாய் ஊளையிடுவதற்கும் வித்வான்கள் பாடுவதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. உண்மையில் வெவ்வேறு சமயங்களில் ஒரு நாய் என்னென்ன ராகங்களில் குறைக்கிறது என்பதை இசைக்குறிப்புகளாக எழுத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது என் எண்ணத்தை நிருப்பிப்பதாக இருக்கிறது – ஒலியன்றி வேறல்ல இசை”

இந்த பேட்டிக்குப் பின், ஊடகங்களில் தன்னைச் சரியாக வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர் என்றும், தான் நினைத்ததை நினைத்தபடியே பேசுகிறார் என்றும் அரசியல் சரிகளை அனுசரிக்கத் தெரியாதவர் என்றும் இளையராஜா குறித்து ஒரு பொது பிம்பம் உருவாகிவிட்டது. இதில் கொஞ்சம்கூட நியாயமில்லை. இளையராஜாவின் மேதமை அவரின் ஊடகத் திறமையில் அல்ல. அதைக்காட்டிலும் அபூர்வமான ஒரு வரம் பெற்றிருப்பதால்தான் என்னைப் போன்ற பலருக்கும் அவர் ஒரு ஆதர்சமாக இருக்கிறார்.

அவர் வயதுச் சிறுவர்கள் மூங்கிலை வளைத்து வில்லாக்கிக் கொண்டிருந்தபோது, அவரை அதில் துளையிட்டு தனக்கென குழல் செய்து கொள்ள வைத்த அந்த வரத்தைச் சொல்கிறேன். அவருக்கும் இசைக்கும் உள்ள உறவு காலங்களுக்கு அப்பாற்பட்டது. இசை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இளையராஜாவைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்லலாம். மிகச் சிறு வயதிலேயே அவர் இசைக்கும் காற்றுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவைக் கண்டு கொண்டுவிட்டார். தான் கேட்கும் அத்தனை ஒலிகளையும் இசையாகக் கண்டுணரும் கந்தர்வத்தன்மை கொண்டதாகச் சிறுபிள்ளைப் பருவத்திலேயே இருந்தது அவரது அறிவின் விசாலம்.

அவருக்கு, திரைப்படம் என்ற ஊடகத்தின் வழி தன் படைப்பூக்கத்தை வெளிப்படுத்தும் கட்டாயம். என்றாலும்கூட, உணவு இடைவெளிகளிலும் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்ட நள்ளிரவுகளிலும் அவர் தனது அறிவின் தேடலை நிறைவு செய்து கொள்வதற்கான நேரத்தை உருவாக்கிக் கொண்டார். இதன் பலனாக நமக்கு கிடைத்தவைதான் ‘Nothing but wind’ மற்றும் ‘How to Name it’ என்ற இரு தனியிசைதொகுப்புக்கள். இந்தியாவின் அசல் ஃப்யூஷன் இசை என்றால் அது இதுதான் என்று மறுபேச்சுக்கு இடமின்றி இன்றளவும் நிறுவும் தொகுப்புகள் அவை. எல்லைகளற்ற இசையின் ஆன்மா இளையராஜாவாக உயிர் பெற்றெழுந்தபோது இலக்கணங்களைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாய் தோன்றிய சிந்தனை மடைமாற்றப்பட்டு இந்த இரு தொகுப்புகளில் நமக்குரிய இசையாய் பதிவாயின. கிருஹபேதம், கவுண்ட்டர்பாயிண்ட்டுகள் முதலான ஆழமான இசைக் கோட்பாட்டு பரிசோதனை முயற்சிகளில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், தன் விருப்பத்துக்கு உகந்த கருப்பொருட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை முறையான இசையாக்கங்களாக வளர்த்தெடுத்தார் அவர்.

இசை, நடனம், இலக்கியம், ஓவியம் முதலிய நுண்கலைகளின் பின்னிருக்கும் ஆற்றல் எது? வேறு எந்த வகையிலும் புலப்படுத்த முடியாத உணர்ச்சிகளை ஆன்மாவின் அந்தரங்க உணர்வுகளாக வெளிப்படுத்தும் ஆற்றல்தான். இந்த இரு தனியிசைத் தொகுப்புகளும் இளையராஜாவின் சிந்தனையோட்டத்தை நாம் அறியக்கூடிய சாளரங்கள். இவற்றில் அவர் இசையைக் கொண்டு தன் அக உணர்வுகளுக்கு புற உருவம் தந்திருக்கிறார்.

இந்தியாவில் இந்த நூற்றாண்டின் மாபெரும் இசையமைப்பாளர்கள் என்று தேடினால் நாம் நிறைய பேரைச் சொல்லலாம். எதிர்காலத்திலும் நிறைய பேர் வரப்போவது உறுதி. ஆனால் இதுவரை யாருமே கால உணர்வை ஒரு கருப்பொருளாக உறையச் செய்தது கிடையாது. அண்டப் பெருவெடிப்பில் துவங்கி யுகசந்தி வரையிலான காலத்தைக் குறுக்கி இசையில் வார்ப்பது ஒரு கருத்துநிலைச் செயல்பாடாகும். ஆனால் இளையராஜா இதை, தனது Nothing but Wind ஆல்பத்தில் உள்ள ஐந்து இசைக் கோவைகளில் ஒன்றில் சாதித்திருக்கிறார். அதுதான் ஆல்பத்தின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது. இந்த இசைக் கோவையில் அவர் மானுடம் பற்றிய சிந்தனைகளை இசையில் வெளிப்படுத்த சில பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். நன்மை/ தீமை, இசை – காற்று உறவு, பரிணாம வளர்ச்சி, மனித இனத்தின் வளர்ச்சியும் முடிவும், என்று பல தளங்களில் இயங்குகிறது ராஜாவின் இசை.

“Nothing but Wind” என்ற தனியிசையின் கருப்பொருள் குறித்து அதன் முன்னட்டையின் உட்புறம் விக்டர் ஏஞ்சல் ரோபெரோ இவ்வாறு எழுதினார்:

நவீன நாகரிகத்துக்கும் மனித இனத்துக்கும் இடையிலுள்ள போராட்டத்தை இங்கு இளையராஜா மிகுந்த ஆற்றலுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். பறவைகள் மற்றும் வெட்டுக்கிளிகளின் சீட்டியொலியையும் மூங்கில் காடுகளிடையே காற்று புகுந்து எழுப்பும் சலசலப்பையும் கேட்டுணர்ந்த மனிதன், முதலில் மூங்கிலில் துளையிட்டு குழல் செய்து கொள்கிறான், அதில் இசை எழுப்புகிறான். ஆனால் அந்த கோகுல காலம் விரைவிலேயே அவனைக் கடந்து செல்கிறது, மனித வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்ததாக ஆகிறது, நாளுக்கு நாள் அது தொழில்மயப்படுத்தப்படுகிறது. முதலில் ரயில், பின்னர் விமானம், அதன் பின் ஜெட் வேகத்தில் காலம் விரைகிறது. இன்று நாம் நட்சத்திரங்களை நோக்கி வெடித்துக் கிளம்பும் ராக்கெட் என்ஜின்களின் உறுமலைக் கேட்கிறோம். ஒரு புறம் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபட மந்திரங்கள் கோஷங்கள் மூலம் தெய்விகத்தைத் தொட முயற்சிக்கிறோம். மறுபுறம், டிஸ்கோ இசை, மற்றும் வேறுசில சாதாரண இன்பங்களைக் கொண்டு நாம் கேளிக்கையில் நம்மை மறக்கிறோம். நம் சமூகம் தன்னை அழித்துக் கொள்ளப் போகிறது; தவிர்க்க முடியாத யுகசந்திக்குப்பின் இசைக்கலைஞன் தன் குழலைக் கீழே வைக்கிறான். அவனால் இனியும் வாசிக்க முடியாது. தான் என்ன செய்தாலும் சரி, இசையென்பது எப்போதும், காற்றன்றி வேறில்லை என்பதை அவன் உணர்ந்து விட்டான்”.

இந்த முழு இசை துணுக்கை இங்கே கேட்கலாம்.

Musician_ILAYARAJA_Tamils

குழல் வாசிப்பவன் ஒருவனைக் கதைசொல்லியாக உருவாக்கி அவனைக் கொண்டு காலத்தை இசையாய் வெளிப்படுத்துவதில்தான் இளையராஜாவின் மேதைமை வெளிப்படுகிறது. காலமாற்றத்தின் குறியீடுகளாக இருக்கும் பல்வேறு மூவ்மெண்டுகளாக இந்த காம்போசிஷன் பகுக்கப்பட்டிருக்கிறது.

 

 

முதல் மூவ்மெண்ட் காலத்தின் துவக்கத்தை அறிவிக்கிறது. உயிர்கள் தோன்றுகின்றன. பறவைகள் சீட்டியடிக்கின்றன. ஏழு கட்டை நடபைரவியை தம்புராவில் மீட்டுவது போலஆதாரமாய் சுருதி சமைத்து பறவைகள் ஆர்ப்பரிக்கின்றன.. (அதாவது B minor Scale).. அதில் ஒரு பறவை பஞ்சமத்தை (அதாவது Dominant 5th ஆகிய F#)  பிடித்துக்கொண்டு 3/4ல் தாளத்தை தருகிறது. . இந்த கூட்டு ஒலிகளின் பின்னணியில் வண்டுகள் மூங்கிலைத் துளைத்திருக்க வேண்டும். அங்கே இயற்கையாகவே குழலொலி உருவாகிறது. குழல் இசைப்பவன் இப்போது வருகிறான். புதிதாய் தனக்குக் கிடைத்திருக்கும் விளையாட்டுப் பொருளை எடுத்துப் பார்க்கிறான், அதில் புதிய ஓசைகளைக் கண்டு கொள்கிறான், பரிசோதனை முயற்சிகளில் முதல் முறையாக இசையை உருவாக்குகிறான். இதில் ஒரூ சுவையான விஷயம், இந்தக் கருப்பொருள் மூங்கில் குழலில் இசைக்கப்படுவதில்லை\ – கீபோர்டின் செயற்கை தொனியில் வாசிக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று யோசித்துப் பார்க்கிறேன். துவக்ககால இசை பயிற்சியற்றதாக, ஒற்றைத்தன்மை கொண்டதாக, அழகுகளும் அலைவுகளும் அற்றதாக இருக்க வேண்டும் என்று இளையராஜா இப்படிச் செய்திருக்கலாம். அல்லது அசல் குழலின் தாக்கத்தை இறுதி கட்டத்துக்கு ஒதுக்கி வைத்திருக்கலாம். 1:04 வரை இந்த யுகம் நகர்கிறது.


 
இப்போது பரிணாம வளர்ச்சி துவங்குகிறது. உலகம் ஒரு சுவர்க்க பூமியாக மாறுகிறது. இதில் எங்கும் உயிர்ப்பு இருக்கிறது. வாத்துகளும், வளர்ப்புப் பிராணிகளும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றன. எங்கும் இன்பம் நிறைந்திருப்பதை உணர்த்த ஏழு கட்டை நடபைரவி உருமாறி இரண்டு கட்டை சங்கராபரணமாகிறது (அதாவது B minorலிருந்து இந்த மூவ்மெண்ட் அதன் Relative major ஆன D majorக்கு மாறுகிறது.) சங்கராபரணத்தில் திடீரென கைசிகி நிஷாதம் புகுந்து (Flat seventh note if C in the D major scale) ஹரிகாம்போதியின் சாயல் கொண்ட நாட்டுப்பண் ஒலிக்கிறது. மறுபடி சங்கராபரணம் திரும்பி ஹார்மோனியுடன் கூடிய முழுமையான மேஜர் மூவ்மெண்ட்டாக மாறுகிறது இந்த மெலடி. இப்போது வாத்தைப் போன்ற இரு குவாக்-குவாக் சத்தங்கள் கேள்வி – பதில் உரையாடல் நடத்திக் கொள்கின்றன. இப்போது தீவிரமாக ஒரு பாஸ் டிராக் இணைந்து கொள்கிறது. மெதுவாக இது இசையின் முதுகெலும்பாகிறது. இப்போது  சங்கராபரணத்தின் பஞ்சம (அதாவது ஒலிக்கும் ஸ்கேலின் டாமினன்ட் note A of the D Major scale), ஓங்கியும் அடங்கியும் ஒலித்து குழல் வாசிப்பவனிடம் இசையை மறுபடி  ஒப்படைக்கிறது.  1:04 முதல்2:06 வரையிலான இசைக்கட்டம் இது. இப்போது இசை B minor ஸ்கேலுக்குத் திரும்புகிறது. குழல் இசைப்பவன் மட்டுமல்ல, மானுடமே தெம்பாக இருக்கிறது.

 
இந்த இடத்தில் இளையராஜாவிற்கே தனித்துவமான பாஸ் கிடாரில் கவுண்ட்டர் மெலடி அமைக்கும் உத்தி துவங்குகிறது. B minorரில் ஒரு மணிச் சத்தம் Arpeggioவாக இறங்கும்போது பாஸ் கிட்டார் எதிர்திசையில் ஏறுகிறது. இதுவரை diatonic minor scale ஆக இருந்த மெட்டில்  எங்கிருந்தோ பிரதி மத்யமம் தோன்றி தர்மாவதியின் சுவையைக் கூட்டுகிறது. (F note and C# major chord). இசையமைப்பாளனின் உலகில் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் நகற்கிறது. இன்னமும் மானுடத்தின் பொற்காலம் மறையவில்லை. எங்கும் ஆனந்தமும் நல்லிணக்கமும் விரவியிருக்கின்ர்ண. இந்த மூவ்மெண்ட்டின் அலங்காரங்கள் மிகுந்த பகுதி இதுதான், இங்கு இசை முழுமையடைந்த நிலையில் ஒலிக்கிறது – 2:06 முதல் 3:00 வரையிலான இசை இது. இந்த முதல் மூன்று நிமிடங்களோடு முதல் மூவ்மெண்ட் முடிவுக்கு வருகிறது.

இந்த டிராக்கின் அலங்காரங்கள் மிகுந்த பகுதி இதுதான், இங்கு இசை முழுமையடைந்த நிலையில் ஒலிக்கிறது – 2:06 முதல் 3:00 வரையிலான இசை இது. இந்த முதல் மூன்று நிமிடங்களில் முதல் மூவ்மெண்ட் முடிவுக்கு வருகிறது.

 துரிதமாகக் காலத்தைக் கடக்கும் மனிதனின் பயணம் இரண்டாம் மூவ்மெண்டின் (3:00 – 5:54) ஆதாரமாக அமைந்துள்ளது. இயந்திரங்கள் மூலம் அவன் பிரபஞ்சத்தை தன்வசப்படுத்தத் தொடங்குகிறான். தொழிற்புரட்சியின் ஆரம்பம். அடுத்த சில நூற்றாண்டுகளில் பலவகையான இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் வாழ்வு எளிதாகிறது. ரயிலை உருவாக்குகிறான்; விமானத்தை ஓட்டுகிறான்; விண்ணில் ஏவுகணை செலுத்துகிறான். இயந்திரங்கள் சேமித்துக்கொடுத்த நேரத்தை அனுபவிப்பதற்கு மாறாக மூச்சுமுட்டுமளவு நேரமில்லாமல் தவிக்கிறான். பெரும்புதிரான தனது நேரப்போதாமையையும் மன சஞ்சலத்தையும் புரிந்துகொள்வதற்கான முயற்சியாக முழுமையான நம்பிக்கையில்லாவிட்டாலும் ஆன்மிகத்தில் ஈடுபடுகிறது. மனிதனின் இந்த மாறுதலை இசைவழியாக காட்டியிருப்பது இளையராஜாவின் தனிப்பட்ட சாதனை. இயந்திரங்களின் அரூப சத்தங்களை படம்பிடித்ததைத் தொடர்ந்து சிறு மெளனம் நிலவுகிறது. முப்பது நொடிகளுக்கு (4:06 முதல்) அடுத்தடுத்த ஸ்வரங்களை ஒரே நேரத்தில் ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் இசைத்து ஒரு அபஸ்வர தொடர்வளையத்தை உருவாக்குவதன் மூலம், மனிதன் இப்புதிர் மாயை விளையாட்டைப் புரிந்துகொள்வதையும் அதில் தன்னை இழப்பதையும் காட்டுகிறார். கட்டற்ற காலக்கிரமத்தில் அதிரும் தந்தி இசைப்பகுதி இப்புதிர் சூழலை இன்னமும் தீவிரப்படுத்துகிறது. தர்க்கத்தைக்கொண்டு கட்டப்பட்ட தனது கனவு சாம்ராஜ்யம் நொறுங்குவதைக் காணும் மனிதன் கடவுளிடம் தஞ்சமடைகிறான். இந்த இடத்தில் நுழையும் மந்திரங்களின் ஓதுதல் ஏற்கனவே நிலவியிருக்கும் குழப்ப உணர்விற்கு ஒரு புது இசை பரிமாணத்தை அளிக்கிறது.

 ஆனாலும் ராஜசுக வாழ்வை அவன் கைவிடவில்லை. வாழ்வின் எல்லா கீழ்மைகளிலும் ஈடுபடுகிறான். இது மூன்றாவது மூவ்மெண்டின் கருப்பொருளாகிறது. நமது குழலோன் காலக்கணக்கைக் கச்சிதமாகத் தக்கவைத்திருக்கிறான்.

இம்முறை இசையின் மையம் குழலிசையிலிருந்து டிஸ்கோவுக்கு (5:55 முதல் 8:27 வரை) மாறுகிறது. முன்னெப்போதும் அமைத்திராத தடத்தில், மூல இசையின் தாளத்தை மாற்றுகிறார் ராஜா. முறையான 4 அக்‌ஷர தாளத்தில் இருந்தாலும் 8 மாத்திரைகளை 3+3+2 என ட்ரம்ஸில் பிரித்து ஒழுங்கான தாளவரிசைக்குள் ஒரு முரண்பாட்டான உணர்வை உருவாக்குகிறது. போதாததற்கு, பேஸ் பகுதி முழுவதும் அரை இடத்தில் விழுகிறது. மிகக் கச்சிதமாக இம்மாற்றம் நிகழ்வதால் முதல் மூவ்மெண்டின் மையமும் மூன்றாம் மூவ்மெண்டின் மையமும் ஒன்றே என்பதை இசை ரசிகர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். நாளை என்பதே இல்லை எனும்படியாக குழலிசை மெலடியை முடிவில்லாமல் இசைத்துக்கொண்டேயிருக்கிறது. டிரம்பெட்டும் ட்ரோம்போனும் மையத்தை மேலும் மெருகேற்றுவதால் இசை உச்சகட்டத்தை அடைகிறது. இவையிரண்டும் டிரம்ஸ் மற்றும் கிதார் தக்கவைத்திருக்கும் இசைத்தடத்தைக்கொண்டு மேலும் புது தளங்களை ஆராய்கின்றன.

 நான்காவது மூவ்மெண்டில் வாழ்வு ஒரு முழுவட்டத்தை முடிக்கிறது. அவனது பொறுப்பற்ற தன்மையால் பல யுத்தங்கள் உருவாகின்றன. எங்கெங்கிலும் அழிவு ஏற்பட்டாலும், எப்படியேனும் உலகத்துக்கு அதிகார மையம் உருவாகவேண்டும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐன்ஸ்டீனிடம், `அடுத்த உலக யுத்தத்தில் உபயோகப்படுத்தப்படும் கருவி என்னவாக இருக்கும்?` என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. `மூன்றாவது உலக யுத்ததில் எவ்விதமான கருவிகள் உபயோகப்படுத்தப்படும் எனத் தெரியாது.ஆனால் நான்காவது ஒரு யுத்தம் வந்தால் நிச்சயம் கற்களும், மரத்துண்டுகளும் மட்டுமே உபயோகப்படும்` என்றார். அப்பெரியவரின் வாக்கு பலித்தது; மொத்த மனித இனமும் யுத்தத்தில் அழிக்கப்பட்டது.

உலகின் கடைசி மனிதனின் தீவிரத்துடன் குழலிசைக் கலைஞன் காலக்கணக்கை பாதுகாக்கிறான். பசியும், தனிமையும், சாவும், விரக்தியும் கூடியிருக்கும் வேளையில் சந்தோஷமான பழங்காலத்தை நினைத்தபடி புல்லாங்குழலை இசைக்கிறான். கல்பாவித்த சரிவில் உட்கார்ந்து இசைக்கும்போது, காற்றை உணர்கிறான், புல்லாங்குழலின் ஓசையை கவனிக்கிறான்; முடிவில் தன்னையே உணர்கிறான். அதற்குத் தக்கபடி இந்த மூவ்மெண்டில் உண்மையான மரக்குழலை இளையராஜா உபயோகப்படுத்துகிறார். இத்தொகுப்பின் ஆதாரசுருதியை உணர்த்தும் இந்த புல்லாங்குழல் இசை கேட்பவரின் ஆழ்மனதை மீட்டுகிறது. உண்மையான புல்லாங்குழலின் ஓசையை பாடலின் முதலில் உபயோகப்படுத்தியிருந்தால் இத்தனை வீரியமான பாதிப்பை கேட்பவர் மனதில் உண்டாக்கியிருக்குமா என்பது சந்தேகமே. சொல்லொண்ணா அளவு மனதை அந்த இசை முழுமையாக ஆட்கொள்வதால் அவனால் புல்லாங்குழலை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.

இசை என்பது வெறும் காற்று மட்டுமே எனும் முழுமையான உண்மை அவனுக்கு உறைக்கும்போது இசைப்பதை நிறுத்திவிட்டு புல்லாங்குழலை கீழே வைக்கிறான். கடைசி முறையாக குழலின் உள்ளே செல்லும் காற்றின் ஊளை கேட்கிறது. அந்த காற்றும் இசையாகவே வெளியேறுகிறது. புல்லாங்குழலின் இசை மெல்ல உருண்டு கரைகிறது. இசை முடிவுக்கு வருகிறது. இசையென்பது ஒலியன்றி வேறல்ல என்பது தெளிவாகிறது.

மூன்றாம் உலகப்போரால் மனிதம் அழியலாம் என்பது ஐன்ஸ்டீனின் கற்பனையில் உதித்த காலப்பயணம்.

ரங்கண்ணாவும் காம்போதியில் கூவிய சேவலும் தி.ஜானகிராமனின் கற்பனையில் உதித்த பாத்திரங்கள். அந்த கூவல் எப்படி காம்போதியானது என ஒருபடி இறங்கி இசைவழி விளக்க வேண்டிய அவசியம் இலக்கியத்திற்கு இல்லை. அனுபவம் சார்ந்த வர்ணனையில் அது சாத்தியமாகிறது. `நத்திங் பட் விண்ட்` அப்படி ஒருபடி கீழே இறங்கி பிரபஞ்சத்தின் ஆரம்ப நிமிடம் முதல் எதிர்கால நிகழ்தகவு வரை உள்ள காலஅளவை 11 நிமிடங்களாய் வெளிப்படுத்தும் ஒரு நிஜப்படைப்பு.

இந்த உருவமற்ற கற்பனையை மிகத் தத்ரூபமான இசைத்துணுக்குகளாக வடித்தது மட்டுமல்லாது கேட்பவர்களுக்கும் தம் ஐம்புலன்களின் ஒன்றின் வழியாகவேனும் அதை கடத்த இளையராஜாவால் முடிந்திருக்கிறது

இசையின் தனித்துவமும் இதுதான்…ராஜாவின் தனித்துவமும் இதுதான்.

பி கு:
குழலிசை கலைஞன் பல்வேறு காலகட்டங்களில் வாசிக்கும் இசையை ஒருசேர பியானோவில் தொகுக்க முயன்று இந்த இசைக்கு நான் செலுத்திய மரியாதை இங்கே:

0 Replies to “ஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி”

 1. இவ்வளவு ஆழமாகவோ துல்லியமாகவோ இசையை ரசிக்கும் திறனோ ஆர்வமோ எனக்கில்லை. ஆனால் இப்படியும் எழுதுவோர் உண்டு என்பதே விந்தை.
  தெய்வீக சக்தி கொண்டது என்று கர்நாடக இசையையோ, மோஸார்ட் கால ஐரோப்பிய செவ்வியல் இசையையோ புகழ்வதிலும், இணையற்ற மேதைமையின் வெளிப்பாடு என்று ஏதோ ஒரு காலத்து இசையை மிகைப்படுத்துவதிலோ நான் உடன்படவில்லை. தனிப்பட்ட ஒரு ஓவியமோ நூலோ சிற்பமோ மிளிர்வது போல், சில நேரம் சிலரின் இசை பலருக்கு மிகவும் பிடிக்கும்.
  பாமரர் ரசிக்கும் லயிக்கும் சினிமா இசையையும் என் கல்லூரி பிராயத்திலும் பின்னரும் நான் ரசித்த இளையராஜாவை ரசித்து எழுதிய ஆய்வென இதை நான் கருதுகிறேன். பிரபஞ்சத்தின் வரலாற்றையும் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியையும் ஒரு இளையராஜாவின் அறிவியல்பால் மேலோட்ட ஆர்வத்தை மற்றுமே காட்டுகிறது – அதில் ஆழம் இல்லை. இதை கூட மற்றக் கலைஞர் செய்வதில்லையே என்ற வருத்தம் தான். ஆனால் அவ்விசை செவிமகிழ்ந்து சிந்தை சிலிர்க்கிறது. விஞ்ஞான வளர்ச்சியை சத்தம் போடும் விசைகளால் சித்தரிப்பது (இசைப்பது? ஒலிப்பது) ஒரு எளிமையான் யுக்தியென்றே விட்டுவிடலாம். அந்த பகுதியில் இசை நன்றாக இல்லை. பல கலைஞர்களுக்கு நிம்மதியை கெடுத்த கல்வியென விஞ்ஞானத்தின் மேல் ஒரு கோபம் இருப்பதே இந்த நாராசத்துக்கு காரணமாக இருக்கலாம்.
  அந்த கோபம் நியாயமற்றது, தவறானது. ஸ்டேன்லி குப்ரிக்கின் 2001 பித்துக்குளித்தனத்திற்கு ஒப்பானது. அறிவியலின் அழகியலும் மானுட மகிமையும் வலிகுறைத்த இன்பம் பெருக்கிய சாதனைகளை புரிந்துகொள்ளவில்லை என்று காட்டுகிறது. பொதுவாக கலைஞர்களுக்கு என்னுடைய விமரிசனமே பித்துக்குளித்தனமாகவே தெரியும். போகட்டும்.
  “ராஜசுக வாழ்க்கையை அவன் கைவிடவில்லை” – எந்த ராஜாவும் காணாத சுகங்களை நாம் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியால் பாமர மனிதன் காண்கிறான், அனுபவிக்கிறான். அவர் பட்ட பல துன்பங்கள் நம்மில் பலகோடிகளுக்கு இல்லை. ராஜ ராஜ சோழன் காபி அருந்தவில்லை, ஐசக் நியூட்ட டூத்பிரஷ் வைத்து பல்தேய்ததில்லை, டார்வின் குழந்தைகள் மரணத்தை தடுக்க பெனிசிலின் இல்லை. இந்த விந்தைகள சாதாரணமாகிவிட்டன என்பதே அறிவியலின் வெற்றி. ரிச்சர்ட் டாக்கின்ஸ் அகலமாக, ரிச்சர்ட் ஃபெய்ன்மன் சுவையாக, பீட்டர் மெடவர் ஆழமாக தெளிவாக, (http://varahamihiragopu.blogspot.com/2014/04/blog-post_23.html) ஜூலியன் சைமன், ஹான்ஸ் ரோஸ்லிங்க், மாட் ரிட்லி ஆணித்தரமாக இதை சொல்கின்றனர். புறிந்துகொள்ளாதது கலைஞர்களின் குறை. சமுதாயத்தின் சித்தாந்தத்தில் இது வருமை.

 2. கதிரவன் தருகிற அனல் ஒளியும்
  நீ தர அமுதாய் இனிக்கிறதே!
  இறைவனின் அனல்போல் அருள் ஒளியை
  ஞானியர் தந்தால் குளிர்கிறதே!
  என்று இசைஞானி ஒரு பாடலில் எழுதியுள்ளார். அதைப் போன்று இசைஞானி கொடுக்கும் மிக உயர்ந்த பொக்கிஷங்களில் தாங்கள் உணர்ந்தவற்றை, தாங்கள் உணர்ந்தவற்றை என்னைப் போன்ற பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் பகிற்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி விக்கி சார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.