(இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டிய இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர் – அவற்றுக்கு நான் வழங்கிய பதில்கள் ஆக்கம் தரக்கூடியவை மட்டுமல்ல, சுவாரசியம் நிறைந்தவையும்கூட. சில கேள்விகள் பத்திரிக்கைகளில் வந்தவை, பிற தொலைபேசிமூலம் கூறப்பட்ட பதில்கள்)
1. இயற்கை விவசாயத்தில் இடுபொருள் செலவு அதிகம் என்கிறார்களே, அது உண்மையா?
– கே. சுவாமி, சிதம்பரம்
ரசாயன விவசாய இடுபொருட்களான யூரியா, பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவை மானிய விலையில் கிடைப்பதால் மலிவு என்று நினைக்கலாம். வெளியில் வாங்காமல் உங்கள் தோட்டத்திலேயே ஆடு, மாடு, கோழி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வளர்த்து விருத்தி செய்தால் செலவு வராது. ஆடு, மாடு, கோழி உரங்களைப் பக்குவப்படுத்தி உயிரி உரங்களான அசோஸ்பைரிலம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோன்ஸ் ஆகியவற்றை உகந்தவாறு கலந்து பக்குவப்படுத்தி வழங்கினால் ரசாயன உர வழங்கலுக்கு ஈடாக மகசூல் பெறலாம். இயற்கை இடுபொருட்களுக்கும் உயிரி உரங்களுக்கும் மானியம் இல்லை. ஆகவேதான் செலவு அதிகம் என்று தோன்றுகிறது.
ஒரு லாரி லோடு தொழுஉரம் 1000 ரூபாய் வெளியில் வாங்கி உயிரி உரங்களுடன் கலந்து மக்கிய நிலையில் பயன்படுத்துக. இப்போது பல ஊர்களிலும் தொழுஉரத்தைக் கேட்டு வாங்குகிறார்கள். கிடைக்கும்போது வாங்கி அதில் உள்ள பாலிதீன் பொருட்களை அப்புறப்படுத்தி அப்படியே மண்புழு உரமாக மாற்றிப் பயன்படுத்தலாம்.
செலவைப் பார்த்தால் முடியுமா? இயற்கையில் விளைந்தவற்றை உண்டால் – பிறகு மருத்துவச் செலவு குறைவுதானே! தொழு உரங்களை ஊட்டமேற்றிப் பயன்படுத்தினால் செலவையும் குறைக்கலாம்.
oOo
2. கோமியத்தைப் பூச்சி விரட்டியாகப் பயன்படுத்துவது எப்படி? அசுவினியை அகற்றுவது எப்படி?
– ஸ்ரீகாந்த், முசிறி.
கோமியம், அதாவது பசுவின் மூத்திரத்தைப் பிடித்து காற்று புகாதவாறு பிளாஸ்டிக் கேனில் சேமித்துக் கொண்டு பின்னர் நமக்குத் தேவையான அளவில் எடுத்துக் கொண்டு மிச்சத்தை இறுக்கமாக மூடுவது அவசியம். அவ்வாறு பயன்படுத்த எடுத்துக்கொண்ட கோமியத்துடன் பத்து மடங்கு தண்ணீர் சேர்த்து பயிர் மீது தெளிக்கலாம். ஒரு ஏக்கர் பயிருக்கு 5 முதல் 10 டேங்க் அடிக்கலாம். ஒரு டேங்க் என்பது பத்து லிட்டர் கொள்ளளவு உள்ள ஸ்ப்ரேயர். பத்து லிட்டர் சிறுநீருடன் நூறு லிட்டர் தண்ணீர் சேர்த்தால் பத்து டேங்க் ஸ்ப்ரே செய்யலாம். அல்லது, வேப்பங்கொத்தை ஒடித்துக் கொண்டு ஸ்ப்ரேயர் உதவியில்லாமலும் தெளிக்கலாம்.
அசுவினியில் கருப்பு, வெள்ளை என்று இரண்டு வகைகள் உண்டு. கோமியத்துடன் வேப்பெண்ணை ஐம்பது மில்லி எடுத்து டாய்லெட் சோப்பு கரைசலில் எமல்ஷன் செய்து மேற்படி பத்து சதவிகித பசு மூத்திரக் கலவையில் சேர்த்தும் தெளிக்கலாம். பசு மூத்திரம் கிடைக்காதபோது, அதற்கு பதில் ஐந்து மடங்கு நீர் சேர்த்து வேப்பெண்ணை எமல்ஷனைத் தெளிக்கலாம்.
oOo
3. சப்போட்டா மரம் எங்கள் வீட்டில் நன்கு காய்த்து பழங்களும் ருசியாக இருந்தன. குரங்குத் தொல்லையால் காய்களைப் பறித்து ஃபிரிட்ஜில் வைத்தோம். எல்லாம் வீணாகி விட்டன. ஏன்?
– எஸ். சந்திரலேகா, காட்பாடி
பொதவாக சப்போட்டாவைப் பறித்தவுடன் சாப்பிட முடியாது, மரத்தில் பழுத்து தானாகவே விழுந்தால் சாப்பிடலாம். ஆனால், அதற்குள் குரங்கு மட்டுமல்ல, அணிலும் தின்றுவிடும். மரத்திலிருந்து பழம் கீழே விழ ஆரம்பித்துவிட்டால் அவை கனிகள் முதிர்ந்து விட்டன என்று பொருள். மரத்தில் ஏறி முதிர்ந்த கனிகளைப் பறித்து மூங்கில் கூடைகளில் வைக்கலாம். கூடைக்குக் கீழே செய்தித் தாள்கள், வைக்கோல் சிறிது வைத்து இருபது பழங்கள் வரை பழுக்க வைக்கலாம். நான்கு நாட்களில் கால் பகுதி பழுத்துவிடும். பழுத்த கனிகளைத் தனியே பிரித்து இரண்டு மூன்று நாட்களுக்குள் பயன்படுத்தலாம். பழுத்தபின் ஃபிரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும். பழம் பழுக்க வெப்பம், இறுக்கம், புகைமூட்டம் வேண்டும். ஃபிரிட்ஜ் எதிர்மறையாகச் செயல்படும். வர்த்தக நோக்கில் ஓரே சமயம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பழங்கள் பழுக்க வேண்டும் என்றால் வாழைப்பழம் பழுக்க புகை மூட்டம் போடுவார்கள். ஆனால் இயற்கையாய் பழுத்த சப்போட்டாவே அதிக சுவையாக இருக்கும்.
oOo
4. என் நிலம் செம்மண் கலந்த சரளை நிலம். பாசன வசதி இல்லை. மர சாகுபடி செய்ய வேண்டும். எவையெல்லாம் நடவு செய்யலாம்?
-பிச்சமுத்து, காவக்காரப்பட்டு
நல்ல கேள்வி. செம்மண்ணில் சரளை என்பது பிரச்சினையான நிலை. சரளையில் சுண்ணாம்புச் சத்து கூடுதலாய் இருக்கும். அது காய்கறிச் சாகுபடிக்கு உகந்தது அல்ல. பாசன வசதி இருந்தால் அகத்தி, வேர்க்கடலை, துவரை, உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்யலாம். கேழ்வரகு முயற்சிக்கலாம். மரவகை என்று பார்த்தால் எல்லா வகையான மரமும் பயிர் செய்யலாம். மா, முருங்கை, கொய்யா சிறப்பாக வரும். சந்தனவேம்பு, மலைவேம்பு, மகாகனி, பதிமுகம், காசிவில்வம், புளி, பூவரசு, தென்னை, நெல்லி – இவற்றில் நீர்வசதி இல்லாவிட்டால் தென்னையைத் தவிர்க்கலாம்.
ஆடி, ஆவணி மாதங்களில் நடவு செய்யலாம். சித்திரை, வைகாசி வரும்போது மரமும் ஏழெட்டு அடி உயர்ந்துவிட்டால் வறட்சி தாங்கும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர் விடலாம். லேசாக ஈரம் காத்தால் போதும். மரம் நடும்போதே நல்ல உயரமான மரக்கன்றுகளைத் தேர்வு செய்க. மூன்றடியாவது வளர்ந்திருக்க வேண்டும். ஒரு அடி ஆழத்தில் குழி வெட்டி மக்கிய தொழு உரம் இட்டு, மண் ஆறியபின், மர நடவு செய்ய வேண்டும். மண் சற்று பொலபொலப்பாக இருந்தால் நன்கு வேர் பிடிக்கும்.
oOo
5. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் திருமஞ்சனம், பால், தயிர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைப் பயிர்களுக்குத் தெளிக்கலாமா? அழுகிய மாம்பழங்களுக்குப் பயனுண்டா?
– கே.பி. அருணாசலம், இலவமலை
சுவாமிக்கு அபிஷேகம் செய்த மேற்படி திரவங்களில் மேலும் நீரூற்றி ரவா சல்லடையில் வடி கட்டவும். சிமெண்டு சாக்கில் பத்து கிலோ, அல்லது தேவையான அளவில் பசுஞ்சாணத்தை கட்டி வைக்கவும். அந்த மூட்டையை ஒரு தொட்டிக்குள் இறக்கவும். 24 மணி நேரத்துக்குப்பின் அந்தச் சாணி மூட்டையை வெளியே எடுத்து விடவும். இப்போது தொட்டியில் வடிகட்டிய சாணி நீர் தெளிவான ரசம் போல் இருக்கும். இவ்வாறு வடி கட்டிய, ஊறிய சாண ரசத்தில் வடிகட்டிய அபிஷேக நீரை ஒன்று சேர்த்து பயிர் மீது தெளிக்கவும். பயிருக்கு நோய் வராது, மகசூல் உயரும். வடிகட்டியபின் மிகுந்துள்ள சாணி வண்டலையும் அபிஷேக நீர் மண்டியையும் ஒன்றாய் கலந்து மர அடியில் நிழல் காய்ச்சல் போட்டு மண்புழுக்களை விடலாம். இல்லாவிட்டால் உலர்ந்ததும் புட்டுப்பதத்தில் எடுத்து பயிர்களுக்கு அடி உரமாக இடலாம்.