அசோகமித்திரனின் முன்னோடியாக ஹெமிங்வேயை சொல்வார்கள். அவர் பாவம். கிட்டத்தட்ட எழுபதாண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதால் யாரோடவாவது ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு விவாதத்தின் போது சால் பெல்லோ, பஷீர், பைரப்பா எல்லாம் அசோகமித்ரனுக்கு இணையாக வந்து போனார்கள். எவ்வளவு பேரைத்தான் படிப்பது என்று மலைத்து நிற்கும்போதுதான் ஹெமிங்வேயின் சிறுகதை தொகுப்பு கைக்கு மாட்டியது. Homage to Switzerland, ஒரே சூழலில் நிகழும் மூன்று சம்பவங்களைக் மோனாடிராமா பாவனையில் சொல்லும் தன்மை கொண்டது. அதை சாதாரண கிம்மிக் உத்தியாக நிறுத்திவிடாமல் ஆழமான அனுபவமாக மாற்றியிருப்பதுதான் ஹெமிங்வே என்னும் கலைஞனின் வெற்றி. எளிமையான, ஆனாலு வெகு நுணுக்கமான ஆர்ப்பாட்டமில்லாத உரையாடல்களும் விவரிப்புகளும். அவருடைய புனைவுகளில் வரும் நாயகர்களிடையேயான ஒப்புமை பரவலாக அறியப்பட்டது. இதில் இடம்பெறும் வீலர், ஜான்சன் மற்றும் ஹாரிஸும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மூவரிடமும் மற்றவர்களிடம் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் ஓர் அடிப்படை அசௌகரியம் அடிசரடாக ஓடுகிறது. ஹெமிங்வேயின் சொந்த வாழ்க்கையின் சம்பவங்களே அந்த அசௌகரியங்களை இணைக்கிறது. இரண்டாவது கதையின் மூலத்தில் நாயகன் வேற்று மொழிகளான ஜெர்மனையும் ஃப்ரெஞ்சையும் பயன்படுத்தி போர்ட்டர்களுடன் உரையாடுவதன் மூலம் தன் சிக்கலிலிருந்து சற்று விலகியிருக்க முயலும் நுட்பம், மொழியாக்கத்தில் சாத்தியமாகவிலை. மான்ட்ரூ (Montreux), வீவே (Vevey), மற்றும் தெரிதே (Territet) என கதை நிகழும் எல்லா ஊர்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக ஒரே ரயில் பாதையில் அமைந்திருக்கின்றன. பனிபொழியும் இரவிடையே ஒரு மணிநேரம் தாமதமாக வரும் ரயிலுக்காக கதை நாயகர்கள் உணவகத்தில் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதையின் தொடக்கத்தையும் மேலெழுந்தவாரியாக பார்த்தால் ஒரேமாதிரியாக தோன்றினாலும், நுட்ப வேறுபாடுகளோடு சமூக நிலைகளையும் அதற்குள் நாயகர்களின் புழங்குவதையும் பிரதிபலிக்கிறது.
பகுதி – 1
மான்ட்ரூவில் திரு. வீலரின் ஓவியம்
நிலையத்தின் உணவு விடுதியினுள் வெளிச்சமாகவும் கதகதப்பாகவும் இருந்தது. மேஜைகளின் மேல்புறம் துடைத்து பளபளப்பாக இருக்க, மெருகேற்றிய காகிதப்பைகளில் கூடை கூடையாக ப்ரெட்செல்கள் இருந்தன. நாற்காலிகள் செதுக்கப்பட்டு இருந்தாலும், உபயோகத்தால் தேய்ந்து உட்காருவதற்கு வசதியாக இருந்தன. சுவரில் ஒரு செதுக்கப்பட்ட மரக் கடிகாரமும் அறையின் மறுகோடியில் ஓர் அருந்தகமும் இருந்தன. சாளரத்துக்கு வெளியே பனி பெய்துகொண்டிருந்தது. நிலைய போர்ட்டர்கள் இரண்டு பேர் அந்த கடிகாரத்துக்கு அடியிலிருந்த மேஜையில் அமர்ந்து புதிய வைனை குடித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு போர்ட்டர் உள்ளே வந்து சிம்ப்ளன்-ஓரியண்ட் விரைவு வண்டி செயிண்ட் மாரிஸ்ஸில் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது என்று சொன்னான். அவன் வெளியே போய்விட்டான். மிஸ்டர். வீலரின் மேஜைக்கு பரிமாறும் பெண் வந்தாள்.
“வண்டி ஒரு மணி நேரம் தாமதம், சார்’ என்றாள் அவள். ‘உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா?’
‘என்னை விழிப்புடன் வைத்திருக்காது என்று நீ நினைத்தால் சரி’
‘தயவுசெய்து?’ கேட்டாள் அந்த பணிப்பெண்
‘கொண்டு வா’ என்றார் மிஸ்டர். வீலர்
‘நன்றி’
சமையலறையிலிருந்து அவள் காப்பி கொண்டு வர, மிஸ்டர். வீலர் சாளரத்துக்கு வெளியே, நிலைய நடைமேடையின் விளக்கொளியில், பனிப்பொழிவைப் பார்த்தார்.
‘ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் பேசுவாயா?’ பணிப்பெண்ணைக் கேட்டார்.
“ஓ! ஆமாம் சார். ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் தவிர வட்டாரவழக்குகளும் பேசுவேன்’
‘நீ ஏதும் அருந்த விரும்புகிறாயா?’
‘ஓ! இல்லை சார். உணவகத்தில் வாடிக்கையாளருடன் குடிக்க அனுமதி இல்லை’
‘சிகரெட் எடுத்துக் கொள்ள மாட்டாயா?’
‘ஓ! இல்லை சார். நான் புகைப்பதில்லை’
‘பரவாயில்லை’ என்றார் மிஸ்டர். வீலர். அவர் மீண்டும் சாளரம் வழியே பார்த்தார், காபியை குடித்தார், பிறகு சிகரெட்டை பற்றவைத்தார்.
‘ஃப்ராய்லெய்ன்”‘ என அழைத்தார். அந்த பணிப்பெண் வந்தாள்.
“என்ன வேண்டும், சார்?’
‘நீ,’ அவர் சொன்னார்.
‘நீங்கள் அந்தமாதிரி என்னைக் கிண்டல் அடிக்கக் கூடாது’
‘நான் கிண்டல் அடிக்கவில்லை’
‘அப்படியானால், அதை சொல்லக் கூடாது’
‘எனக்கு வாதம் செய்ய நேரமில்லை,’ மிஸ்டர். வீலர் சொன்னார். ‘நாற்பது நிமிடங்களில் ரயில் வந்து விடும். அதற்குள் என்னுடன் நீ மாடிக்கு வருகிறாய் என்றால் நான் உனக்கு இருநூறு ஃப்ராங்குகள் தருவேன்’
‘நீங்கள் இம்மாதிரி பேசுக் கூடாது சார். நான் போர்ட்டரை உங்களுடன் பேசச் சொல்கிறேன்’
‘எனக்கு போர்ட்டர் தேவையில்லை,’ மிஸ்டர். வீலர் சொன்னார். ‘காவலாளோ, அந்த சிகரெட்டு விற்கும் பையன்களில் ஒருவனோ கூட தேவையில்லை. நான் உன்னை விரும்புகிறேன்.’
‘நீங்கள் அப்படி பேசுகிறீர்கள் என்றால், வெளியேற வேண்டும். இங்கே இருந்து கொண்டு அப்படியெல்லாம் நீங்கள் பேசக் கூடாது.’
‘அப்படியென்றால் நீ விலகிப் போக வேண்டியதுதானே? நீ விலகிப் போய்விட்டால் உன்னோடு நான் பேச முடியாதே’
அந்த பணிப்பெண் விலகிச் சென்றுவிட்டாள். மிஸ்டர். வீலர் அவள் போர்ட்டர்களுடன் பேசுகிறாளா என கவனித்தார். அவள் பேசவில்லை.
‘மேடமோசேல்’ அவர் அழைத்தார். அந்த பணிப்பெண் வந்தாள்.
‘எனக்கு ஒரு போத்தல் சயான் கொண்டு வா, தயவுசெய்து’
‘சரி சார்,’
மிஸ்டர். வீலர் அவள் போவதை, பிறகு வைனோடு வந்து, அவர் மேஜையில் வைத்ததை கவனித்தார். கடிகாரத்தைப் பார்த்தார்.
‘நான் உனக்கு 200 ஃப்ராங்க்குகள் தருகிறேன்,’ என்றார்.
‘தயவுசெய்து அப்படியெல்லாம் பேசாதீர்கள்’
‘200 ஃப்ராங்க்குகள் பெரும் பேரத்திற்கான பணம்’
‘நீங்கள் அப்படியெல்லாம் பேசக்கூடாது!’ பணிப்பெண் சொன்னாள். அவள் தன் ஆங்கிலத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள். மிஸ்டர். வீலர் அவளை சுவாரசியமாக பார்த்தார்.
‘இருநூறு ஃப்ராங்க்குகள்’
‘நீங்கள் வெறுக்கத்தக்கவர்’
‘அப்படியானால் நீ விலகிப் போக வேண்டியதுதானே? நீ இங்கே இல்லையென்றால் நான் உன்னுடன் பேச முடியாதே’
அந்த பணிப்பெண் மேஜையை விட்டு அகன்று அருந்தகத்திற்கு சென்றாள். மிஸ்டர். வீலர் வைனை குடித்துவிட்டு சற்று நேறத்திற்கு தனக்குள்ளேயே புன்முறுவலித்துக் கொண்டார்.
‘மேடமோசேல்’ கூப்பிட்டார். அந்தப் பணிப்பெண் அவரைக் கேட்காதது போல பாவனை செய்தாள். ‘மேடமோசேல்’ மீண்டும் கூப்பிட்டார். பணிப்பெண் வந்தாள்.
‘உங்களுக்கு எதுவும் வேண்டுமா?’
‘மிகவும். உனக்கு முந்நூறு ஃப்ராங்க்குகள் தருகிறேன்’
‘நீங்கள் வெறுக்கத்தக்கவர்’
‘முந்நூறு ஸ்விஸ் ஃப்ராங்க்குகள்’
அவள் விலகிச் செல்ல, மிஸ்டர். வீலர் அவளைப் பின்தொடர்ந்து பார்த்தார். ஒரு போர்ட்டர் கதவைத் திறந்தான். அவன்தான், மிஸ்டர். வீலரின் பைகளை தன் பொறுப்பில் வைத்திருப்பவன்.
‘இரயில் வந்து கொண்டிருக்கிறது சார்’ அவன் ஃப்ரெஞ்ச்சில் சொன்னான். மிஸ்டர். வீலர் எழுந்தார்.
‘மேடமோசேல்’ என்று அழைத்தார். அந்த பணிப்பெண் அவர் மேஜையை நோக்கி வந்தாள். ‘வைன் எவ்வளவு?’
‘ஏழு ஃப்ராங்க்குகள்’
மிஸ்டர். வீலர் எட்டு ஃப்ராங்க்குகளை எண்ணி மேஜை மீது வைத்தார். தன்னுடைய மேலங்கியை அணிந்துகொண்டு போர்ட்டரை தொடர்ந்து, பனி பொழிந்துகொண்டிருக்கும் நடைமேடைக்கு சென்றார்.
‘ஓ! போய் வருகிறேன், மேடமோசேல்’ என்றார். அந்த பணிப்பெண் அவர் போவதை கவனித்தாள். அசிங்கமானவர், அவள் நினைத்தாள், அசிங்கமானவர் மற்றும் வெறுக்கத்தக்கவர். முந்நூறு ஃப்ராங்க்குகளாம், ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்கு. எத்தனை முறைகள் சும்மாவே அதை நான் செய்திருக்கிறேன். இங்கே ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. அவருக்கு கொஞ்சமாவது அறிவிருந்திருந்தால் இங்கே இடம் இல்லை என்று தெரிந்திருக்கும். நேரம் இல்லை, ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. முந்நூறு ஃப்ராங்குகளாம் அதை செய்வதற்கு. என்ன மாதிரியான மனிதர்கள் இந்த அமெரிக்கர்கள்.
தன்னுடைய பைகளுக்கு பக்கமாக, சிமிண்டு நடைமேடையில் நின்றுகொண்டு, பனியினூடே எதிரே வரும் வண்டியின் விளக்கொளியில் தண்டவாளத்தை குனிந்து பார்த்தபடி, மிஸ்டர். வீலர் அது ஒரு சிக்கனமான விளையாட்டு என்று எண்ணிக் கொண்டார். உண்மையில் இரவு உணவுக்கு மேல், அவர் வைனுக்காக 7 ஃப்ராங்குகளும், டிப்ஸுக்காக 1 ஃப்ராங்க்கும் செலவழித்திருக்கிறார். எழுபத்தைந்து சென்ட்டிம்கள் போதுமானதாக இருக்கும். எழுபத்தைந்து சென்டிமாக இருந்தால் அவர் இன்னமும் நன்றாக உணர்ந்திருப்பார். ஒரு ஸ்விஸ் ஃப்ராங் ஐந்து ஃப்ரெஞ்சு ஃப்ராங்குகளுக்கு சமம். மிஸ்டர். வீலர் பாரிஸுக்குதான் போய்க்கொண்டிருக்கிறர். அவர் பண விஷயத்தில் படு ஜாக்கிரதை, பெண்களை பொருட்படுத்துவதில்லை. அவர் அந்த நிலையத்தில் முன்னர் இருந்திருக்கிறார், அங்கே மாடி எதுவும் கிடையாது என்பதை அறிவார். மிஸ்டர். வீலர் எப்போதும் முன்னேற்பாடில்லாத வாய்ப்புகளை மேற்கொள்வதில்லை.
பகுதி II
மிஸ்டர். ஜான்சன் விவேயில் அதைப் பற்றி பேசுகிறார்
நிலையத்தின் உணவு விடுதியினுள் வெளிச்சமாகவும் கதகதப்பாகவும் இருந்தது. மேஜைகளின் மேல்புறம் துடைத்து பளபளப்பாக இருக்க, சிலவற்றின் மேலே சிவப்பு மற்றும் வெள்ளைக்கோடுகளிட்ட மேஜைத்துணிகளும், மற்றவைகளின் மேலே நீலம் மற்றும் வெள்ளைக்கோடுகளிட்ட துணிகளும், எல்லாவற்றின் மேலே மெருகேற்றிய காகிதப்பைகளில் கூடை கூடையாக ப்ரெட்செல்கள் இருந்தன. நாற்காலிகள் செதுக்கப்பட்டு இருந்தாலும், உபயோகத்தால் தேய்ந்து உட்கார ஏதுவாக இருந்தன. சுவரில் ஒரு செதுக்கப்பட்ட மரக் கடிகாரமும் அறையின் மறுகோடியில் ஒரு ஜிங்க் அருந்தகமும் இருந்தன. சாளரத்துக்கு வெளியே பனி பெய்துகொண்டிருந்தது.
நிலைய போர்ட்டர்கள் இரண்டு பேர் அந்த கடிகாரத்துக்கு அடியிலிருந்த மேஜையில் அமர்ந்து புதிய வைனை குடித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு போர்ட்ட்ர் உள்ளே வந்து சிம்ப்ளன்-ஓரியண்ட் விரைவு வண்டி செயிண்ட் மாரிஸ்ஸில் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது என்று சொன்னான். மிஸ்டர். ஜான்சனின் மேஜைக்கு பரிமாறும் பெண் வந்தாள்.
“வண்டி ஒரு மணி நேரம் தாமதம், சார்’ என்றாள் அவள். ‘உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா?’
‘அதிகத் தொல்லை தராது என்றால் சரி’
‘தயவுசெய்து?’ கேட்டாள் பணிப்பெண்
‘எடுத்துக் கொள்கிறேன்’
‘நன்றி’
சமையலறையிலிருந்து அவள் காப்பி கொண்டு வர, மிஸ்டர். ஜான்சன் சாளரத்துக்கு வெளியே, நிலைய நடைமேடையின் விளக்கொளியில், பனிப்பொழிவைப் பார்த்தார்.
‘ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் பேசுவாயா?’ பணிப்பெண்ணைக் கேட்டார்.
“ஓ! ஆமாம் சார். ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் தவிர வட்டாரவழக்குகளும் பேசுவேன்’
‘நீ ஏதும் அருந்த விரும்புகிறாயா?’
‘ஓ! இல்லை சார். உணவகத்தில் வாடிக்கையாளருடன் குடிக்க அனுமதி இல்லை’
‘சிகரெட் எடுத்துக் கொள்ள மாட்டாயா?’
‘ஓ! இல்லை சார்’ அவள் சிரித்தாள். ‘நான் புகைப்பதில்லை’
‘நானும் புகைப்பதில்லை’ என்றார் ஜான்சன். ‘அதொரு அசுத்தமான பழக்கம்’
பணிப்பெண் விலகிச் செல்ல, ஜான்சன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு காபியை குடித்தார். சுவரிலிருந்த கடிகாரம் ஒன்பதே முக்கால் எனக் காட்டியது. அவருடைய கைக்கடிகாரம் சிறிது விரைவாக ஓடுகிறது. பத்தரைக்கு வரவேண்டிய ரயில் – ஒரு மணி நேர தாமதம் என்பதால் பதினொன்றரைக்கு வரும். ஜான்சன் பணிப்பெண்ணை அழைத்தார்.
‘சினோரியா!’
‘என்ன விரும்புகிறீர்கள் சார்?’
‘நீ என்னுடன் விளையாட மாட்டாயா?’ ஜான்சன் கேட்டார். அந்த பணிப்பெண் முகம் சிவந்தாள்.
‘இல்லை, சார்.’
‘நான் எதையும் வன்முறையாக குறிப்பிடவில்லை. விவேயின் இரவுவாழ்க்கையை நீ கொண்டாட வேண்டாமா? விருபப்பட்டால் ஒரு தோழியையும் அழைத்து வாயேன்’
‘நான் வேலை செய்ய வேண்டும்’ பணிப்பெண் சொன்னாள். ‘எனக்கு இங்கே பணி இருக்கிறது’
‘எனக்குத் தெரியும்’ சொன்னார் ஜான்சன். ‘ஆனால், மாற்று ஆள் கிடைக்காதா உனக்கு? உள்நாட்டு கலகத்தின் போது அப்படியெல்லாம் செய்தார்கள்’
‘ஓ!, இல்லை சார். நான் இங்கேயேதான் இருக்க வேண்டும்’
‘உனது ஆங்கிலததை எங்கே கற்றாய்?’
‘பெர்லிட்ஸ் பள்ளியில் சார்.’
‘அதைப்பற்றி சொல்’ என்றார் ஜான்சன். ‘பெர்லிட்ஸ் பள்ளியின் பட்டதாரி மாணவர்கள் கொண்டாட்டமானவர்களா? முத்தமிடுதல், தடவுதல் எல்லாம் எப்படி? நிறைய மென்மையானவர்கள் இருந்தனரா? நீ எப்போதாவது ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டை சந்தித்திருக்கிறாயா?’
‘என்ன?’
‘உனது கல்லூரி நாட்கள் உனது வாழ்நாளிலேயே சந்தோஷமான தினங்களாக இருந்தனவா? கடந்த இலையுதிர் காலத்தில் பெர்லிட்ஸ் என்ன மாதிரியான அணியை கொண்டிருந்தது?’
‘விளையாடுகிறீர்களா, சார்?’
‘லேசாகத்தான்’ என்றார் ஜான்சன். ‘நீ ஒரு மிக நல்ல பெண். என்னுடன் விளையாட விரும்பவில்லையோ?’
‘ஓ! இல்லை சார்,’ என்றாள் அந்த பணிப்பெண். ‘உங்களுக்கு எதுவும் கொண்டு வர வேண்டுமா?’
‘ஆம்,’ சொன்னார் ஜான்சன். ‘வைன் பட்டியலை கொண்டு வர முடியுமா?’
‘சரி, சார்’.
ஜான்சன் வைன் பட்டியலோடு அந்த மூன்று போர்ட்டர்களும் அமர்ந்திருந்த மேஜைக்கு சென்றார். அவர்கள் அவரை நிமிர்ந்து பார்த்தனர். வயதானவர்களாக இருந்தார்கள்.
‘எதுவும் குடிக்க விரும்புகிறீர்களா?’ என ஜெர்மனில் கேட்டார். அவர்களில் ஒருவர் தலையாட்டி புன்னகைப் புரிந்தார்.
‘உய், மிஸ்ஸூர்”
‘நீ ஃப்ரெஞ்சு பேசுவியா?’
‘உய், மிஸ்ஸூர்”
‘என்ன குடிக்கலாம் நாம்? ஷாம்பெய்ன் தெரியுமா உங்களுக்கு?
‘தெரியாது, மிஸ்ஸூர்’
‘தெரிந்திருக்க வேண்டுமே’ சொன்னார் ஜான்சன். ”ஃப்ராய்லெய்ன்”‘ ‘ பணிப்பெண்ணை அழைத்தார். ‘நாங்கள் ஷாம்பெய்ன் குடிக்க விரும்புகிறோம்.’
‘எந்த ஷாம்பெய்னை விரும்புவீர்கள் சார்?’
‘சிறந்ததை’ சொன்னார் ஜான்சன். ‘எது சிறந்தது? என போர்ட்டர்களை கேட்டார்
‘சிறந்ததா?’ முதலில் பதில் பேசிய போர்ட்டர் கேட்டார்.
அந்த போர்ட்டர் தன் கோட்டு பையிலிருந்து தங்கவிளிம்பு கொண்ட கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு அந்தப் பட்டியலை பார்த்தார். நான்கு அச்சடிக்கப்பட்ட பெயர்களுக்கும் அதன் விலைகளுக்கும் மேலே தன் விரலை ஓட்டினார்.
‘ஸ்போர்ட்ஸ்மேன்’ அவர் சொன்னார். ‘ஸ்போர்ட்ஸ்மென்தான் ஆகச் சிறந்தது’
‘நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா கனவான்களே?’ ஜான்சன் மற்ற போர்ட்டர்களிடம் கேட்டார். ஒரு போர்ட்டர் தலையாட்டினார். மற்றொருவர் ஃப்ரெஞ்ச்சில், ‘எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் ஸ்போர்ட்ஸ்மென் சிறந்தது என்று கூறக் கேட்டிருக்கிறேன். அது நல்லது.’ என்றார்
‘ஒரு போத்தல் ஸ்போர்ட்ஸ்மென்’ ஜான்சன் பணிப்பெண்ணிடம் சொன்னார். வைன் பட்டியலில் விலையைப் பார்த்தார். பதினொரு ஸ்விஸ் ஃப்ராங்குகள். ‘இரண்டு போத்தல் ஸ்போர்ட்ஸ்மென் ஆக்கிக் கொள்ளுங்கள். இங்கே உங்களுடன் நான் அமர்ந்து கொள்ளவா?’ ஸ்போர்ட்ஸ்மென்னை பரிந்துரைத்த போர்ட்டரிடம் கேட்டார்.
‘அமருங்கள். தாராளமாக இங்கே இருங்கள்’ அந்த போர்ட்டர் அவரைப் பார்த்து சிரித்தார். கண்ணாடியை மடித்து பையில் போட்டுக் கொண்டிருந்தார். ‘இன்று தங்களின் பிறந்தநாளா?’
‘இல்லை,’ சொன்னார் ஜான்சன். ‘இது பண்டிகையில்லை. என் மனைவி என்னை விவாகரத்து செய்யத் தீர்மானித்திருக்கிறாள்’
‘அதனால்’ சொன்னார் அந்த போர்ட்டர். ‘நடக்காது என நம்புகிறேன்’ அடுத்த போர்ட்டர் மறுதளிப்பாக தலையை ஆட்டினார். மூன்றாவது போர்ட்டர் சற்று மந்தமான செவிப்புலன் உடையவராக தெரிந்தார்.
“சந்தேகமில்லாமல் இதொரு பொதுவான அனுபவம்தான்,” சொன்னார் ஜான்சன், ‘முதல் முறையாக பல் டாக்டரிடம் போகும் அனுபவமோ அல்லது முதல்முறையாக பெண்ணுக்கு ஏற்படும் சுகவீனமோ, ஆனால் நான் வருத்தமடைந்தேன்’
‘அது புரிந்துகொள்ளக் கூடியது,’ சொன்னார் மூத்த போர்ட்டர், ‘நான் அதை புரிந்து கொள்கிறேன்’
‘உங்களில் யாருமே விவாகரத்து செய்துகொள்ளவில்லையா?’ ஜான்சன் வினவினார். கொச்சை மொழியை விட்டுவிட்டு, சிறிது நேரமாக நல்ல ஃப்ரெஞ்ச்சில் பேசிக் கொண்டிருந்தார்.
‘இல்லை,’ ஸ்போர்ட்ஸ்மென்னை தருவித்த போர்ட்டர் சொன்னார். ‘இங்கே அதிகம் விவாகரத்து செய்வதில்லை. சிலர் விவாகரத்து செய்கிறார்கள் ஆனால் அதிகம் இல்லை’
‘எங்களில்’ கதையே வேறு. கிட்டத்தட்ட எல்லோருமே விவாகரத்தானவர்கள்தான்’ என்றார் ஜான்சன்
‘அது உண்மை,’ போர்ட்டர் ஆமோதித்தார். ‘நான் செய்தித்தாளில் படித்திருக்கிறேன்’
‘நானே சற்று தளர்ந்தவன்’ ஜான்சன் சொல்லிக் கொண்டே போனார். ‘நான் விவாகரத்து ஆவது இது முதல்முறை. எனக்கு முப்பத்தைந்து வயதாகிறது’
‘ஆனால் நீங்கள் இன்னமும் இளமையாக இருக்கிறீர்கள்’ மற்ற இருவரிடமும் அவர் விளக்கினார்.’ ‘மிஸ்ஸூருக்கு முப்பத்தைந்து வயது ஆகிறதாம்’ மற்ற போர்ட்டர்கள் தலையாட்டினர். ‘இவர் மிகவும் சின்னவர்’ சொன்னார் ஒருவர்.
‘ஆக நிஜமாகவே முதன்முறை விவாகரத்து செய்கிறீர்களா?’ கேட்டார் போர்ட்டர்.
‘மிகச்சரி’ சொன்னார் ஜான்சன். ‘தயவுசெய்து வைனை திறவுங்கள், மேடமோசேல்’
‘அது மிகவும் செலவானதா?’
‘பத்தாயிரம் ஃப்ராங்குகள்’
‘ஸ்விஸ் பணமா?’
‘இல்லை ஃப்ரெஞ்சு பணம்.’
‘ஓ! சரி. இரண்டாயிரம் ஸ்விஸ் ஃப்ராங்குகள். எப்படி இருந்தாலும் அது மலிவில்லை’
‘இல்லை’
‘ஏன் அதை ஒருவர் செய்ய வேண்டும்?’
‘செய்ய வேண்டி கேட்டுக்கொண்டாள் ‘
‘ஆனால், ஏன் அப்படிக் கேட்க வேண்டும்’
‘வேறொருவரை மணம் செய்துகொள்ள வேண்டி’
‘ஆனால், அது முட்டாள்த்தனம்’
‘நான் ஒத்துக்கொள்கிறேன்’ என்றார் ஜான்சன். அந்த பணிப்பெண் நான்கு கோப்பைகளை நிறைத்தாள். எல்லோரும் கோப்பைகளை உயர்த்தினர்.
‘நடக்கட்டும்’ சொன்னார் ஜான்சன்.
‘உங்களின் நலனுக்கு’ என்றார் அந்த போர்ட்டர். மற்ற இருவரும் ‘சல்யூட்’ என்றனர். ஷாம்பெய்ன் இனிய இளஞ்சிவப்பு பானம் போல ருசித்தது.
‘பல மொழிகளில் பதில் சொல்வது ஸ்விசர்லாந்து வழக்கமோ?’ ஜான்சன் கேட்டார்.
‘இல்லை’ சொன்னார் அந்த போர்ட்டர். ‘ஃப்ரெஞ்சுதான் அதிகம் பயிலப்பட்டது. தவிர இது சூஸி ரொமாந்த் பகுதி’
‘ஆனால் நீ ஜெர்மன் பேசுகிறாயே?’
‘ஆம். என்னுடைய பூர்விகத்தில் ஜெர்மன் பேசுகிறார்கள்’
‘அப்படியா’ என்ற ஜான்சன், ‘நீ ஒருபோதும் விவாகரத்து ஆனதில்ல என்று சொன்னாயோ?’
‘இல்லை. அது ரொம்ப செலவு பிடித்தது. மேலும், நான் எப்போதும் மணம் புரிந்ததுகொண்டதில்லை’
‘ஆஹ்,’ சொன்னார் ஜான்சன். ‘இந்த மற்ற கனவான்கள்?’
‘அவர்கள் மணமானவர்கள்”
‘என்ன?’
‘நீங்கள் மணமான நிலையை விரும்புகிறீர்களா?’ ஜான்சன் அந்த போர்ட்டர்களில் ஒருவரைக் கேட்டார்.
‘உய். அது வழக்கமானதுதான்’
‘மிகச்சரி,’ சொன்னார் ஜான்சன். ‘நீங்கள் மிஸ்ஸுர்?’
‘சரியே’ சொன்னார் அடுத்த போர்ட்டர்.
‘ஆனால் எனக்கு,’ சொன்னார் ஜான்சன். ‘சரியாக இல்லை’
‘மிஸ்ஸூர் விவாகரத்து செய்யப் போகிறார்’ முதல் போர்ட்டர் விளக்கினார்.
‘ஓஹ்!’ இரண்டாவது போர்ட்டர் சொன்னார்.
‘ஆஹா’ சொன்னார் மூன்றாவது போர்ட்டர்.
‘சரி,’ சொன்ன ஜான்சன், ‘விஷயம் தீர்ந்து போய்விட்டதென தெரிகிறது. என் தொல்லைகள் உங்களுக்கெதற்கு’ முதல் போர்ட்டரைப் பார்த்து சொன்னார்.
‘ஆனால்,’ சொனனார் அந்த போர்ட்டர்.
‘சரி. வேறெதாவது பற்றி பேசுவோம்’
‘உங்கள் விருப்பம்”
‘எதைப் பற்றிப் பேசலாம்?’
‘நீங்கள் விளையாடுவீர்களா?’
‘இல்லை,’ சொன்னார் ஜான்சன். ‘ஆனால் என் மனைவி விளையாடுவாள்’
‘கேளிக்கைக்கு என்னதான் செய்வீர்கள்?’
‘நான் ஒரு எழுத்தாளன்’
‘அதில் நிறைய பணம் வருகிறதா?’
‘இல்லை. பிரபலமடைந்தால் அப்புறம் வரும்’
‘சுவாரசியமானதா?’
‘இல்லை’ சொன்னார் ஜான்சன், ‘சுவாரசியமானதில்லை. மன்னிக்கவும், கனவான்களே, நான் இப்போது கிளம்பவேண்டும். மற்றொரு போத்தலை நீங்களே குடித்துவிடுகிறீர்களா?’
‘ஆனால், ரயில் இன்னும் முக்கால் மணி நேரத்திற்கு வரப்போவதில்லை’
‘தெரியும்’ சொன்னார் ஜான்சன். அந்த பணிப்பெண் வந்ததும் வைனுக்கும் உணவுக்கும் பணம் செலுத்தினார்.
‘நீங்கள் வெளியே கிளம்புகிறீர்களா, சார்?’ கேட்டாள்
‘ஆம்,’ சொன்னார் ஜான்சன், ‘ஒரு சிறிய நடை போகப்போகிறேன். என் பைகளை இங்கேயே விட்டுப் போகிறேன்’
மஃப்ளர், மேலங்கி மற்றும் தொப்பியை அணிந்து கொண்டார். வெளியே பனி பலமாக பெய்துகொண்டிருந்தது. அந்த மூன்று போர்ட்டர்களும் அமர்ந்திருந்த மேஜையை சாளரம் வழியே திரும்பிப் பார்த்தார். அந்த பணிப்பெண் அவர்களின் கோப்பைகளில் திறந்திருந்த போத்தலிலிருந்து கடைசி வைனை நிரப்பிக் கொண்டிருந்தாள். திறக்கப்படாத போத்தலை எடுத்துக் கொண்டு அருந்தகத்திற்கு திரும்பினாள். அவர்கள் ஆளுக்கு மூன்று ஃப்ராங்குகள் கிடைக்கும், ஜான்சன் நினைத்துக் கொண்டார். அவர் திரும்பி நடைமேடையில் நடந்தார். உணவகத்தின் உள்ளே, அதைப் பற்றி பேசினால் மட்டுப்படும் என்றுதான் நினைத்தார்; ஆனால் அது மட்டுபடவில்லை; அவரை இன்னமும் அருவெறுப்பாக உணரவைத்துவிட்டது.
பாகம் III
தெரிதேயில் சக உறுப்பினர் ஒருவரின் மகன்
தெரிதே நிலையத்தின் உணவு விடுதியினுள் சற்று கூடுதல் கதகதப்பாக இருந்தது. விளக்குகள் பிரகாசமாக இருந்தன. மேஜைகளின் மேல்புறம் துடைத்து பளபளப்பாக இருந்தது. மேஜைகளின் மேல் மெருகேற்றிய காகிதப்பைகளில் கூடை கூடையாக ப்ரெட்செல்களும், ஈரமான பியர் கோப்பைகள் மேஜை மீது வட்ட அடையாளங்களை ஏற்படுத்தா வண்ணம் அட்டை பட்டிகளும் இருந்தன. நாற்காலிகள் செதுக்கப்பட்டு இருந்தாலும், உபயோகத்தால் தேய்ந்து உட்கார ஏதுவாக இருந்தன. சுவரில் ஒரு செதுக்கப்பட்ட மரக் கடிகாரமும் அறையின் மறுகோடியில் ஓர் அருந்தகமும் இருந்தன. சாளரத்துக்கு வெளியே பனி பெய்துகொண்டிருந்தது. ஒரு வயதான மனிதர் அந்த கடிகாரத்துக்கு அடியில் காப்பி அருந்தியபடி மாலை செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார்.
ஒரு போர்ட்ட்ர் உள்ளே வந்து சிம்ப்ளன்-ஓரியண்ட் விரைவு வண்டி செயிண்ட் மாரிஸ்ஸில் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது
என்று சொன்னான். மிஸ்டர். ஹாரிசின் மேஜைக்கு பரிமாறும் பெண் வந்தாள். மிஸ்டர். ஹாரிஸ் அப்போதுதான் இரவு உணவை முடித்திருந்தார்.
“வண்டி ஒரு மணி நேரம் தாமதம், சார்’ அவள் சொன்னாள். ‘உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா?’
‘உன் விருப்பம்’
‘தயவுசெய்து?’ கேட்டாள் அந்த பணிப்பெண்.
‘சரி’ என்றார் மிஸ்டர். ஹாரிஸ்.
‘நன்றி, சார்’ என்றாள் பணிப்பெண்.
சமையலறையிலிருந்து அவள் காப்பி கொண்டு வர, மிஸ்டர். ஹாரிஸ் அதில் சர்க்கரை இட்டு, ஸ்பூனால் கரைத்துக்கொண்டு, வெளியே, நிலைய நடைமேடையின் விளக்கொளியில், பனிப்பொழிவைப் பார்த்தார்.
‘ஆங்கிலம் தவிர வேறு மொழி பேசுவியா நீ? பணிப்பெண்ணை வினவினார்.
“ஓ! ஆமாம் சார். ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் தவிர வட்டாரவழக்குகளும் பேசுவேன்’
‘எது உனக்கு ஆகப் பிடித்தமானது?’
‘அவை எல்லாமே ஒரே மாதிரியானவைதான் சார். ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்று என்னால் சொல்ல இயலாது’
‘நீ ஏதேனும் பானம் அல்லது காப்பி குடிக்கிறாயா?’
‘ஓ! இல்லை சார். உணவகத்தில் வாடிக்கையாளருடன் குடிக்க அனுமதி இல்லை’
‘சிகரெட் எடுத்துக் கொள்ள மாட்டாயா?’
‘ஓ! இல்லை சார்’ அவள் சிரித்தாள். ‘நான் புகைப்பதில்லை’
‘நானும் புகைப்பதில்லை’ என்றார் ஹாரிஸ். ‘நான் டேவிட் பெலாஸ்கோவுடன் ஒத்துப் போகவில்லை’
‘என்ன?’
‘பெலாஸ்கோ. டேவிட் பெலாஸ்கோ. கழுத்துப்பட்டியை பின்புறமாக அணிந்திருப்பவன் என்பதால் அவனை எப்போதும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், நான் அவனுடன் ஒத்துப் போவதில்லை. பிறகு அவனும் செத்துப்போய்விட்டான்’.
‘மன்னிக்கவும், நான் செல்லலாமா சார்? கேட்டாள் அந்த பணிப்பெண்.
‘தாராளமாக’, என்றார் ஹாரிஸ். நாற்காலியில் முன்னே நகர்ந்து அமர்ந்து கொண்டு சாளரத்தை வெளியே நோக்கினார். அறையின் மறுபுறத்தில் அந்த வயதானவர் செய்தித்தாளை மடித்துவைத்தார். அவர் மிஸ்டர். ஹாரிசை பார்த்துவிட்டு தன்னுடைய காப்பிகோப்பையை மற்றும் சாசரை எடுத்துக் கொண்டு ஹாரிசின் மேஜைக்கு நடந்தார்.
‘அத்துமீறுகிறேன் என்றால் மன்னிப்பை கோருகிறேன்,’ என்றார் ஆங்கிலத்தில், ‘ஆனால் நீங்கள் தேசிய புவியியல் குமுகாயத்தின் உறுப்பினராக இருப்பீர்களோ எனத் தோன்றியது’
‘தயவுசெய்து அமருங்கள்’ என்றார் ஹாரிஸ். அந்த் கனவான் அமர்ந்து கொண்டார்.
‘இன்னொரு காப்பி அல்லது ஏதேனும் பானம் குடிக்கிறீர்களா?’
‘நன்றி’ என்றார் அந்த கனவான்.
‘என்னுடன் கிர்ஷ் அருந்துகிறீர்களா?’
‘செய்யலாம். ஆனால் நீங்களும் குடிக்க வேண்டும்’
‘நான் வற்புறுத்துகிறேன்’ ஹாரிஸ் பணிப்பெண்ணை அழைத்தார். அந்த வயதான கனவான் தன்னுடைய கோட்டின் உள்பாக்கெட்டிலிருந்து தோலால் ஆன சிறிய புத்தகத்தை எடுத்தார். அகலமான இரப்பர் வளையத்தை பிரித்து பல காகிதங்களை வெளியில் எடுத்து, ஒன்றைத் தேர்வு செய்து ஹாரிஸிடம் கொடுத்தார்.
‘அது என்னுடைய உரிம சான்றிதழ்’ என்றார். ‘உனக்கு அமெரிக்காவின் ஃப்ரெட்ரிக் ஜே ரஸ்ஸலைத் தெரியுமா?’
‘தெரியாது என்று அஞ்சுகிறேன்’
‘அவர் வெகு பிரபலம் என நம்புகிறேன்’
‘அவர் எந்த இடத்தை சேர்ந்தார்? ஸ்டேட்ஸின் எப்பகுதி என்று உங்களுக்குத் தெரியுமா?’
‘நிச்சயமாக வாஷிங்டனிலிருந்துதான். அதுதானே குமுகாயத்தின் தலமையகம்?’
‘அதுதான் என நம்புகிறேன்’
‘நீ நம்புகிறாய். உறுதியாகத் தெரியாதா?’
‘நான் வெகு காலமாக வெளியே இருக்கிறேன்’ என்றார் ஹாரிஸ்.
‘அப்படியானால் நீ உறுப்பினர் இல்லையா?’
‘இல்லை. ஆனால் என் தந்தை உறுப்பினராக இருந்தார். அவர் பல வருடங்களாக உறுப்பினரக இருந்தவர்’
‘அப்படியானால், அவருக்கு ஃப்ரெட்ரிக் ஜே ரூஸல் பற்றி தெரிந்திருக்கும். அவர் குமுகாயத்தின் அலுவலர்களில் ஒருவர். நீ கவனித்திருக்கலாம், நான் உறுப்பினராக முன்மொழியப்பட்டது மிஸ்டர். ரூஸலால்தான்.’
‘எனக்கு மிகவும் மகிழ்ச்சி’
‘நீ உறுப்பினர் இல்லை என்பது எனக்கு வருத்தம். உன் தந்தை மூலமாக நீ விண்ணப்பிக்கலாமே’
‘செய்யலாம்’ என்றார் ஹாரிஸ். ‘திரும்பியதும் செய்யனும்’
‘உனக்கு அறிவுறுத்துகிறேன்’ என்றார் அந்த கனவான். ‘நீ அந்த பத்திரிகையை பார்க்கிறாய் இல்லையா?’
‘கண்டிப்பாக’.
‘வட அமெரிக்க ஃபானாக்களின் வண்ணத் தட்டுகளுடனான இதழைப் பார்த்தாயா?’
‘ஆம். பாரிஸில் பார்த்தேன்’
‘அலாஸ்கா எரிமலையின் பனோரமா படம் கொண்ட இதழை?’
‘அது அற்புதமானது’
‘மூன்றாம் ஜார்ஜ் ஷிராஸின் காட்டுவிலங்கு படங்களை மிகவும் ரசித்தேன்’
‘அவை வெகு நயமானவை’
‘என்ன சொன்னாய்?’
‘அவை அபாரமானவை. அந்த ஆள் ஷிராஸுடைய…’
‘அவரை ‘ஆள்’ என்றா அழைப்பாய்?’
‘அக்கால நண்பர்கள்’ என்றார் ஹாரிஸ்.
‘அப்படியா. மூன்றாம் ஜார்ஜ் ஷிராஸை தெரிந்து வைத்திருக்கிறாய். அவர் வெகு சுவாரசியமானவராக இருக்க வேண்டும்’
‘அவர் சுவாரசியமானவர்தான். நானறிந்தவர்களிலேயே மிகவும் சுவாரசியமானவர்’
‘இரண்டாம் ஜார்ஜ் ஷிராஸையும் தெரியுமா உனக்கு? அவரும் சுவாரசியமானவரோ?’
‘அவர் அவ்வளவு சுவாரசியம் இல்லை’
‘நான் அவரை வெகு சுவாரசியமானவராக கற்பனை செய்து வைத்திருந்தேன்’
‘ஒரு வேடிக்கை தெரியுமா. அவர் அவ்வளவு சுவாரசியமானவர் இல்லை. ஏன் என்று அடிக்கடி வியந்திருக்கிறேன்’
‘ஹ்ம்ம்…’ என்றார் அந்த கனவான். ‘அந்த குடும்பத்தில் எவராக இருந்தாலும் சுவாரசியமானவராக இருப்பார் என எண்ணியிருந்தேன்’
‘சஹாராவின் பனோரமா நினைவிருக்கிறதா?’ ஹாரிஸ் கேட்டார்.
‘சஹாரா பாலைவனம்? அது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் முந்தையது.’
‘அது சரி. என் தந்தையின் விருப்பத்துக்குரியவற்றில் ஒன்று’
‘அவர் புதிய இதழ்களை விரும்புவதில்லையா?’
‘அவர் அனேகமாக விரும்புவார். ஆனால் அந்த சஹாரா பனோரமா மேல் மிகவும் பிரியமாக இருந்தார்.
‘அது பிரமாதமானது. ஆனால் எனக்கு, அதன் அறிவியல் ஈர்ப்பை விட கலை மதிப்பு மிகவும் அதிகமானது.’
‘எனக்கு தெரியவில்லை’ என்றார் ஹாரிஸ். ‘காற்று அத்தனை மணலையும் பறக்கடிக்க, அரேபியர் தன்னுடைய ஒட்டகத்துடன் மெக்காவை நோக்கி மண்டியிட்டபடி இருக்கும் படம்’
‘என் நினைவில் இருந்தபடி, அந்த அரேபியர் ஒட்டகத்தைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்’
‘நீ மிகவும் சரி’ என்றார் ஹாரிஸ். ‘நான் கர்னல் லாரன்ஸின் புத்தகத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்’
‘லாரண்ஸின் புத்தகம் அரேபியாவைப் பற்றித்தான் பேசுகிறது என நினைக்கிறேன்’
‘மிகச்சரி,’ என்றார் ஹாரிஸ். ‘அந்த அரேபியரைத்தான் நினைத்துக் கொண்டேன்’
‘அவர் ஒரு மிக சுவாரசியமான இளைஞனாக இருக்க வேண்டும்’
‘அப்படித்தான் என்று நானும் நினைக்கிறேன்’
‘அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் எனத் தெரியுமா?’
‘அவர் அரச விமானப்படையில் இருக்கிறார்’
‘அவர் ஏன் அதை செய்ய வேண்டும்?’
‘அவர் விரும்புகிறார்’
‘அவர் தேசிய புவியியல் குமுகாயத்தை சேர்ந்தவரா என்றுத் தெரியுமா உனக்கு?’
‘இருப்பாரா என்பது சந்தேகம்’
‘அவர் ஒரு வெகு நல்ல உறுப்பினராக இருக்கக் கூடும். அவர்கள் உறுப்பினராக்கிக் கொள்ள விரும்பும் வகையான மனிதர் அவர். அவர்கள் அவரை சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்று நீ நினைத்தால், நான் மிக்க சந்தோஷத்தோடு அவரை முன்மொழிவேன்.’
‘அவர்கள் விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன்’
‘விவேயில் ஒரு விஞ்ஞானியையும், லூசானில் என்னுடைய அலுவலக சகா ஒருவரையும் முன்மொழிந்து, இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கர்னல் லாரன்ஸையும் நான் முன்மொழிந்தால் அவர்கள் வெகு திருப்தி அடைவார்கள் என்று நம்புகிறேன்’
‘அதொரு அபாரமான யோசனை’ என்றார் ஹாரிஸ். ‘இந்த உணவகத்திற்கு அடிக்கடி வருவீர்களா?’
‘இரவு உணவிற்கு அப்புறம் காபி அருந்த இங்கு வருவேன்’
‘நீங்கள் பல்கலைகழகத்திலா இருக்கிறீர்கள்?’
‘நான் இப்போது செயலாக இல்லை’
‘நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன்,’ என்றார் ஹாரிஸ். ‘நான் பாரிசுக்கு போய்விட்டு, ஹாவ்வியிலிருந்து ஸ்டேட்ஸுக்கு கடல்வழி பயணம் செல்கிறேன்.’
‘நான் அமெரிக்காவிற்கு சென்றதே இல்லை. ஆனால், செல்ல வேண்டும் என்று பெரிதும் விருப்பம் உண்டு. ஒருவேளை குமுகாயத்தின் சந்திப்புகளில் கலந்துகொள்ளலாம் எப்போதாவது. உனது தந்தையை சந்தித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.’
‘அவரும் உங்களை சந்திப்பதை விரும்புவார் என்பது உறுதி ஆனால் அவர் சென்ற வருடம் இறந்துவிட்டார். விந்தையான நிகழ்வாக சுட்டுக்கொண்டு செத்துப் போனார்,
‘நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரின் இழப்பு அறிவியலுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பேரிடியாக இருக்கும்.’
‘அறிவியல் அதை நன்றாகவே எடுத்துக் கொண்டது’
‘இது என்னுடைய விலாச அட்டை,’ ஹாரிஸ் சொன்னார். ‘அவருடைய இனிஷியல்கள் E.D.க்கு பதிலாக E.J. என்றிருக்க வேண்டும். அவர் உங்களை அறிந்து கொள்ள விரும்புவார் என்று எனக்குத் தெரியும்’
‘அது பெரும் இன்பமாக இருந்திருக்கும்’ அந்த கனவான் தன்னுடைய சிறிய புத்தகத்திலிருந்து ஒரு விலாச அட்டையை எடுத்து ஹாரிஸிடம் அளித்தார்.
அதில்:
‘நான் இதை பத்திரமாக வைத்திருப்பேன்’ என்றார் ஹாரிஸ்.
அடிக்குறிப்புகள் :
- ப்ரெட்செல்கள் (pretzel) – ஜெர்மானிய தீனி வகை. முடிச்சு (knot) வடிவில் bake செய்யப்படும் ஒருவகை தின்பண்டம்.
- ‘ஃப்ராய்லெய்ன் (Fraulein) – ஜெர்மன்னில் ‘பெண்’ என்று பொருள்.
- மேடமோசேல் (Mademoiselle) – ஃப்ரெஞ்சில் பெண்ணை மரியாதையுடன் விளிக்கும் சொல்.
- ரு வே மேடமோசேல் (Au revoir, Mademoiselle) – குட்பை அம்மணி
- மான்ட்ரூ (Montreux)- ஸ்விட்சர்லாந்தில் ஒரு ஊர்
- விவே (Vevey) – ஸ்விட்சர்லாந்தில் ஒரு ஊர்
- தெரிதே (Territet) – ஸ்விட்சர்லாந்தில் ஒரு ஊர்
- ஜிங்க் அருந்தகம் (Zinc bar) – ஜிங்க் இசையுடன் கூடிய பார்
- சினோரியா! (Signoria) – ஃப்ரெஞ்சில் பெண்ணை விளிப்பது
- பெர்லிட்ஸ் (Berlitz) – ஸ்விட்சர்லாந்தின் மொழிக் கற்றுக்கொடுக்கும் பள்ளி நிறுவனம்
- உய், மோன்சே (Oui, monsieur) – ஃப்ரெஞ்ச். பொருள்:- ஆமாம் ஐயா
- சூஸி ரொமாந்த் (la Suisse Romande) – ஸ்விட்சர்லாந்தில் ஃப்ரெஞ்ச் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி
- மிஸ்ஸுர்? (monsieur) – ஃப்ரெஞ்சில் மிஸ்டர். திரு.
- போர்ட்டர் (porter) – இரயில் நிலைய காவலர் மற்றும் சுமை தூக்குபவர்
- கிர்ஷ் (Kirsh) – பழத்தில் செய்யப்படும் பிராந்தி.
- பட உதவி: http://www.rachelmariataylor.
co.uk/Homage-to-Switzerland - “இந்தக் கதை ஹெமிங்வே எழுதிய சிறுகதையின் எதிர்வினையாக உள்ளது. இந்த இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ள ஹெமிங்வே சிறுகதையை இங்கே வாசிக்கலாம்.”
- “Homage to Switzerland”, by Ernest Hemingway கதையை ஜூலியன் பார்னஸ் படிக்கும் ஒலிப்பதிவை இங்குக் கேட்கலாம்.