ஸ்பிதிக்கு ஒரு பயணம் – பகுதி 2

நாங்கள் சட்லஜ் நதியின் குறுக்கே நீளும் பாலத்தைக் கடக்கிறோம், இப்போது ஸ்பிதி நதியையொட்டி, நாக்கோ என்ற ஊரை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைச் சூழ்ந்திருக்கும் நிலம் உயிரற்றுக் கிடக்கிறது. மலைகள் அடர் சாம்பல் நிறமாய் மாறுகின்றன – கருப்பு நிறத்துக்கு வெகு அருகில் வந்துவிட்டன. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து எங்கு நோக்கினும், திசைகள் அனைத்திலும், மலைத்தொடர்கள் உயர்ந்து தாழ்ந்தும் விண்கரையில் அலையாடுகின்றன. மரம் ஏதும் இல்லாத வெற்றுப் பரப்பாய் விரியும் மலைகள், எங்களைச் சுற்றி பல கிலோமீட்டர்கள் நீள்கின்றன, சூரியனின் கதிர்கள் அனலாய்த் தாக்க அவை ஒளிர்கின்றன, தகிக்கின்றன. இமயவரம்பென்றால் இதுதான் – மலைகளுக்கு அப்பால் மலைகள், அவற்றுக்கப்பால் வேறு மலைகள் – தொலைவில் ஒளிரும் தொடுவானில் மலைச் சிகரங்கள் ஒன்றி மறைகின்றன.

என் இடப்புறம், மாபெரும் மலை ஒன்று உயர்ந்து நிற்கிறது – அது அடர்ந்த ப்ரௌன் வண்ணத்தில் இருக்கிறது, மலைப்பரப்பில் உள்ள சேற்றுக்குழம்பின் வண்ணம் அது. அந்த மலையின் மத்தியில் சன்னமான ஒரு கோடு நீள்கிறது, அதன் சிரசில் சற்றே விலகிய கோணத்தில் வகிடெடுத்தது போல் இருக்கிறது. நான் அந்தக் கோட்டைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், “நாம் இன்னும் சிறிது நேரத்தில் அந்தச் சாலையில்தான் பயணிக்கப் போகிறோம்,” என்கிறான் அமித். இப்போது ஒரு ட்ரக் என் கண்ணில் படுகிறது. ராட்சத மலையில் பின்னணியில் அது ஒரு பொம்மை போல் இருக்கிறது, மெல்ல மெல்ல தன் பாதையில் பயணித்து மறைகிறது அது. அந்த மாபெரும் நிலப்பரப்பில் இந்த ட்ரக் மட்டுமே மனிதனை நினைவூட்டுவதாக இருக்கிறது, இது என் தனிமையை மேலும் அதிகரிக்கிறது.

வேறொரு ராட்சத மலையின் சிகரத்தில் இருக்கும் சில வீடுகளைக் காட்டி, “அதுதான் நாக்கோ”, என்கிறான் அமித். வானம் உயர்ந்து நிற்கிறது, மலையுச்சியின் குடியிருப்புகள் அந்த உயரத்தை எட்டிப் பிடிப்பது போல் உயரே எட்டி நின்று கொண்டிருக்கின்றன. நான் அந்த ஊரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெள்ளையடித்த அதன் வீடுகள் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது பொம்மை வீடுகளாய் தெரிகின்றன. “நாக்கோவைத் தாண்டினால்தான் நம் பயணத்தின் மிக அபாயமான இடம் வரும்,” என்கிறான் அமித், “மாலிங் நாலா”. இந்தித் திரைப்படங்களில் புகழ்பெற்ற ஒரு டான் பெயரைச் சொல்வது போல் மாலிங் நாலா என்கிறான் அவன். “எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அதைத் தாண்டிச் செல்ல முடிந்தால் நன்றாக இருக்கும்”.

spiti

இதற்குள் அமித்தின் எச்சரிக்கைகள் பழக்கப்பட்டுப் போய்விட்டன. மாலிங் மாளாவில் நிலைமை உண்மையில் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று ஊகிப்பதற்கில்லை.

நாக்கோவில் மதிய உணவு எடுத்துக்கொண்டபின், மாலிங் நாலா நோக்கி உயரும் மலைப்பாதையில் பயணிக்கிறோம். பயணத்தின் தொடக்கத்தில் அமித் ஒரு கோவிலின் முன் காரை நிறுத்தி வழிபடுகிறான். இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களையும் போலவே இந்தக் கோவிலும் ஒரு வளைவில் நிற்கிறது.

வளைந்து செல்லும் பாதையில் ஒரு முனை திரும்பியதும் மாலிங் நாலா தென்படுகிறது. நாங்கள் இடப்புறம் திரும்ப வேண்டிய ஒரு யூ-டர்னின் மையத்தில் மாலிங் நாலா இருக்கிறது. மலை மீதிருந்து ஒற்றைத் திரியாய் ஒரு ஓடை வடிகிறது – வழக்கம் போலவே எங்கள் பாதையின் ஒரு பக்கத்தில் உயர்ந்த மலைகளும் எதிர் பகுதியில் அதல பாதாளமும் இருக்கின்றன. அமித் மாலிங் நாலாவை சிறிது அச்சத்துடன் நெருங்குகிறான், ஆனால் அவன் இந்த அளவுக்கு பயப்பட்டிருக்க வேண்டாம். நாலா வரண்டிருக்கிறது, அதில் நெளிந்து செல்லும் சன்ன ஓடை, அமித் கொடுத்த பில்ட் அப்புக்குப் பொருந்தாத ஆன்டி-க்ளை\மாக்ஸாக இருக்கிறது.

ஆனால் மாலிங் நாலாவைக் கடந்த சில நிமிடங்களுக்குப் பின்னர்தான் எங்கள் சாகச பயணம் துவங்குகிறது. நாங்கள் நாலாவைக் கடந்தவுடன், இடப்புறம் யூ டர்ன் எடுத்தும் அமித் திடீரென்று காரை வேகமாக ஓழ்ட்டுகிறான், ஒரு கை ஸ்டியரிங் வீலைப் பிடித்திருக்கிறது, மற்றொரு கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டி காரின் கூரையைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவ்வப்போது தலையை ஜன்னலின் வழியே வெளியே நீட்டி தனக்கு வலப்புறம் இருக்கும் மலையை மேல்நோக்கிப் பார்க்கிறான். அமித் மிக வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான், அவனது கண்கள் இப்போது சாலையைப் பார்க்கின்றன, மாறு கணம் மேலே பார்க்கின்றன, கார் வலப்புறம் திரும்புகிறது, இடப்புறம் திரும்புகிறது, வலம், இடம், வலம், இடம் – வேகமாக. சாலையின் வளைவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன, கார் அவற்றில் வேகமாகத் திரும்பிச் செல்கிறது. நான் என் இடப்புறம் பார்க்கிறேன், சில அடி தொலைவில் மலையின் விளிம்பு தென்படுகிறது. சாலையெங்கும் மணல் கொட்டிக் கிடக்கிறது, சக்கரம் சறுக்கினால் எங்கள் நிலை என்னவாகும் என்ற எண்ணம் எழுந்த கணமே அதை அப்புறப்படுத்துகிறேன்.

கார் இடமும் வலமும் திரும்பித் திரும்பி விரைகின்றது, மலையின் விளிம்புக்கு அப்பால் உள்ள ஆழங்கள் தோன்றி மறைகின்றன. நான் என் சீட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அசையாமல் அமர்ந்திருக்க முயற்சிக்கிறேன், என் இதயம் தொண்டையில் முட்டிக் கொண்டு நிற்கிறது. அப்போதுதான் எனக்கு நூலிழையில் உயிர் தொங்குகிறது என்று சொல்வார்களே, அதன் அர்த்தம் புரிகிறது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத வேகம், அமித்தை எச்சரிக்க நா எழும்புவதாயில்லை. துணிச்சலைத் திரட்டிக் கொண்டு அவனிடம் பேசுமுன் அமித் காரை நிதான நிலைக்குக் கொண்டு வருகிறான். “ஆபத்தான இடத்தைக் கடந்து வந்துவிட்டோம்” என்கிறான் அவன்.

நான் எந்த ஆபத்தையும் பார்க்கவில்லை\. என் கண்களில் தெரிந்த குழப்பத்தைப் புரிந்து கொள்கிறான் அமித், “நாம் கடந்துவந்த பகுதியில் மலையிலிருந்து பாறைகள் உருண்டு விழுந்து கொண்டேயிருக்கும். ஒரு சிறு காற்றடித்தாலும் போதும், ஒரு கல் நம் காரின்மீது\ விழுந்தாலும் நம்மால் சமாளித்திருக்க முடியாது,” என்று விளக்குகிறான் அமித்.

அமித்தின் கார் வெண்ணிற இன்னோவா, புதிதாய் மணமானவன் தன் மனைவியை நேசிப்பதுபோன்ற உக்கிரத்துடன் அமித் அந்தக் காரைக் காதலிக்கிறான். அதைப் பளபளப்பாகத் துப்புரவாக வைத்துக் கொள்கிறான், ஒரு சிறு கல் அதன் மீது விழுந்தாலும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அமித்தின் அச்சத்தை நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன் – திரும்பி வரும்போது விதி என்னைப் பார்த்து திருப்பிச் சிரித்தது.

தாபோவில் இரவு உறக்கம், அடுத்த நாள் காலை காஜா பயணம், வழியில் தன்கர் மடாலயத்தில் ஓய்வு. மடாலயம் மலை உச்சியில் அபாயகரமான நிலையில் அமர்ந்திருக்கிறது- ஸ்பிதி, லதாக் பகுதிகளில் உள்ள பல மடாலயங்களும் இப்படிதான் இருக்கின்றன. போர் வீரர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மலைகளின் உயரங்களில் கட்டுப்படும் கொட்டைகள் போல் அல்லாமல், இந்த மடாலயங்கள் தாழ விரிந்திருக்கும் உலகை நோக்கி தியானிக்கும் நோக்கத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றன. நாங்கள் இந்த மடாலயத்தின் மேலடுக்கில் ஏறிப் பார்க்கிறோம் – காற்று வேகமாக வீசிக் கொண்டிருக்கிறது. வானம் மூட்டம் போட்டிருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம். மெல்லிய ஒளியில் மலைகள் இருண்டு கிடக்கின்றன. கீழே குனிந்து பார்க்கிறேன், பின் நதி ஸ்பிதியில் இணைகிறது. சாயம் வெளுத்த சின்னஞ்சிறு கொ\டிகள், துணி உலர்த்த கட்டப்பட்ட கயிறுகள் போன்ற கம்பங்களுக்கு இடையே படபடக்கின்றன. எங்கும் மனிதனும் எந்திரமும் இல்லாத இயற்கை. மலைகள் மட்டுமே, இருண்ட, சிகரத்தில் பனி போர்த்த மலைகளும், ஆறும், காற்றும் எங்களுக்குத் துணை இருக்கின்றன.

City of Kaza

இரு மணி நேரம் பயணித்துப் பின் காஜா சென்று சேர்கிறோம். காஜாவில் இரு இரவுகள்.

“மதியம் சாப்பிட்டுவிட்டுப் போகலாமா?” என்று கேட்கிறான் அமித். காஜாவிலிருந்து கிளம்பப் போகிறோம். மழை வரும் போல் இருக்கிறது. வானில் கருமேகங்கள் திரண்டிருக்கின்றன, மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருக்கிறது, காற்று பலமாய் வீசுகிறது. இந்த வேளையில் புறப்பட அமித் தயங்குகிறான். ஆனால் விடுதியின் மேலாளருக்கு இது எதுவும் பொருட்டாய் இல்லை. “,மதியம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த மழை வலுக்கப் போவதில்லை. சீக்கிரம் வெயில் வந்துவிடும். மதியம் வரை ஏன் இங்கு இருக்க வேண்டும்? இப்போது கிளம்பினால் மதியம் தாபோ போய் சேர்ந்து விடலாம்,” என்று அவர் அமித்தை வற்புறுத்துகிறார்.

“மழையைப் பற்றி கவலையில்லை, காற்றைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது,” என்று சொல்கிறான் அமித். மானேஜர் சிரிக்கிறார். “பயப்பட ஒன்றுமில்லை. சீக்கிரமே காற்று அடங்கிவிடும். கிளம்புங்கள்”.

நாங்கள் கிளம்பிச் செல்கிறோம், மானேஜர் சொன்னது போலவே சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிறது. மேகங்கள் மெல்ல கலைந்து செல்கின்றன, வெளிச்சம் கூடுகிறது, தூறல் நின்று போகிறது. எனக்கு இந்த க்ளைமேட் பிடித்திருக்கிறது, என்று சந்தோஷப்படும்போதுதான் அமித் சொல்கிறான, “மேலே பார்த்துக் கொண்டே இருங்கள். கல் ஏதாவது உருண்டு வந்தால் உடனே என்னிடம் சொல்லுங்கள்.”

நான் எச்சரிக்கையாக வழி நெடுக மலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். சில மலைகள் ஒற்றைக் கல்லால் ஆனவை, சில உடைந்த கற்களால் ஆனவை. சில சேறு நிறைந்தவை, அவற்றில் பாறைகள் ஆங்காங்கே விழுந்து கிடக்கும். இது போன்ற ஒரு மலையில் இருந்துதான் ஒரு சின்னஞ்சிறு கல் உருண்டு வருகிறது. அமித்தை நிறுத்தச் சொல்கிறேன். கல் வேகம் கூட்டிக் கொண்டு உருண்டு வருகிறது, நாங்கள இருக்கும் இடத்துக்கு சில நூறு மீட்டர்கள் முன்னால் சாலையில் விழுந்து, மானொன்று துள்ளிக் குதித்து தாவி ஓடுவதுபோல், அது பெரும்பாய்ச்சல்களில் மலைச்சரிவில் உருண்டு கீழே செல்லும் ஆற்றில் விழுகிறது.

அமித் மெல்ல காரை பின்னோக்கி ஓட்டுகிறான். ஒரு மறைவான இடத்தில் பாதுகாப்பாக அதை நிறுத்தி வைக்கிறான். இப்போது காற்று இன்னும் பலமாக வீசுகிறது. இம்முறை உருண்டு விழும் கல் இன்னும் பெரிதாக இருக்கிறது. அது கீழே விழுந்து மேலும் உயரே உயர்ந்து, பெரிதாய் வளைந்து சாலையை ஒரே தாவலில் கடந்து செல்கிறது. மலைச்சரிவில் ஓடும் மான், பெரும் பாய்ச்சல்களில் வேகம் கூட்டி பெரும் வீழ்ச்சியாய் தண்ணீரை வாரியிறைக்கிறது. பாதுகாப்பான இடத்தில் இருப்பதால் வியப்புடன் நான் அடுத்தடுத்து பல கற்களும் இதே பாதையில் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். காற்று அவற்றை ஒரு திசையில் செலுத்துகிறது, புவி ஈர்ப்பு விசை கீழ் நோக்கி இழுக்கிறது. தட். தட். தட், என்று பாறைகள் விழுந்தவண்ணம் இருக்கின்றன. துவக்கியது போலவே ஒரு கணப்போதில் இந்தக் காட்சியும் முடிவுக்கு வருகிறது. காற்று அடங்கிவிட்டது.

அமித் தன் கையை காருக்கு வெளியே நீட்டி காற்றின் விசையை கணிக்கிறான். காற்று அடங்கிவிட்டது. எங்கள் முன் வளைந்து வளைந்து செல்லும மலைப்பாதை ஓரிரு கிலோமீட்டர்கள் நீள்கிறது. இடப்புறம் வரண்ட மலைகள், அவற்றில் பாறைகள் காற்றில் புரண்டோடத் தயாராய் இருக்கின்றன. எங்களுக்கு மேலிருக்கும் பாறையின் பாதுகாப்புக்கு அப்பால் மறைவிடம் என்று எதுவும் கிடையாது. சாலையில் இறங்கியபின் கற்கள் உருளத் துவங்கினால் பிரார்த்தனையைத் தவிர வேறு கதியில்லை.

அமித்தின் முகம் சிவந்திருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் அவனது தோற்றம் தீவிரமாய் இருக்கின்றது. அவன சாலையைக் கண்காணிக்கிறான், ஜன்னலின் வழியே கையை நீட்டி காற்றைக் கணிக்கிறான். மேலே மேகங்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. மழையின் உச்சியைப் பார்க்கிறான். துணிவே துணை என்று காரை கிளப்புகிறான், அவனது முகம் ஸ்டியரிங் வீலுக்கு நெருக்கமாக இருக்கிறது – மலையைப் பார்த்துக் கொண்டே வேகமாக ஓட்டத் துவங்குகிறான். கார் வேகம் எடுக்கிறது, நாங்கள் வளைந்து வளைந்து தப்பிச் செல்கிறோம், என் கண்கள் உருண்டு விழும் கற்களைப் பார்க்க மலைச்சரிவை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருக்கின்றன. மலை இரக்கம் காட்டுகிறது. நாங்கள் அடுத்த இரண்டு கிலோமீட்டர்களையும் பிரச்சினையின்றி கடக்கிறோம். அதன்பின்தான் நிதானிக்கிறோம்.

இரவு கல்பாவில் கழித்தபின் அடுத்த நாள் காலை கல்காவை நோக்கிச் செல்கிறோம், சிம்லா வழியாக. அமித் என்னை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விடுகிறான். அவனது அடுத்த பயணத்தைப் பற்றி கேட்கிறேன். “தில்லியிலிருந்து ஒரு பெண் வருகிறாள். அவளை இங்கிருந்து சிம்லா அழைத்துச் செல்ல வேண்டும். சிம்லா, கங்ரா பகுதிகளைச் சுற்றிக் காட்ட வேண்டும்”.

நான் அமித்திடம் விடை பெற்றுக் கொள்கிறேன். நகர வாழ்க்கையின் அழுத்தங்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அமித் தன் காரில் இந்த மலைகளில் பயணித்துக் கொண்டிருப்பான், ஸ்பிதி செல்லும்போதெல்லாம் எந்த ஆபத்தும் இல்லாமல் திரும்பி வர பிரார்த்தித்துக் கொள்வான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.