முடிவு

pratnan

ப்ரதிபா நந்தகுமார் சமகால கன்னட எழுத்துலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். கன்னடம், ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதும் இவர் பல கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஆவணப்படங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ள இவர் பல பத்திரிக்கைகளிலும் எழுதி வருகிறார். 2000 வருடத்திய சாஹித்ய அகாதமி விருதும் 2003ம் வருடம் மஹாதேவி வர்மா காவ்ய ஸன்மான் விருதும் பெற்றுள்ளார். இவருடைய கவிதைகள் 5 தொகுப்புகளாய் வெளிவந்துள்ளன. இவருடைய பல படைப்புகள் கவிதை மற்றும் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. தற்சமயம் இவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

இச்சிறுகதையின் மூலத் தலைப்பு: அந்த்யா. தமிழில் மொழிபெயர்த்தவர்: உஷா வை.

***

இங்கே பாருங்க, முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்க அடம் பிடித்தால் நான் எழுதவே போவதில்லை. பாத்திரங்கள் அவற்றின் ட்ராக்கில் ஓடிக் கொண்டிருக்கும்போது நீங்க ஒரு பக்கமாக நின்றுகொண்டு ‘கமான் கமான்” என்று கத்தலாம், ஆனா நீங்களே ஓடுவது சாத்தியமா? சில சமயங்களில் எனக்குக் கதாபாத்திரங்களை துரத்திக் கொண்டு போவதே சிரமமாக இருக்கிறது. வர வர அவை கட்டுக்கடங்காமல் ஒரு தாளிலிருந்து இன்னொரு தாளுக்குத் தாவி விடுகின்றன. உடனே பிடிக்காமல் போனால் இன்னொரு அத்தியாயத்துக்கே கூட போய்விடுகின்றன. அவர்களை இரண்டு சாத்து சாத்தி சரியான இடத்தில் உட்கார்த்தி வைப்பதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. இதுலே உங்க பேச்சை அவர்கள் கேட்கப் போகிறார்களா என்ன?

இன்றைக்குக் காலம்கார்த்தாலே மாலினி வந்து உட்கார்ந்துவிட்டாள். சமையல் மேடையின் மேலே காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்து, நான் நறுக்கிக் கொண்டிருந்த காய்களில் ஒன்றொன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தாள். ‘காப்பி வேணுமா’ ன்னு கேட்டதற்கு ‘உம்” என்றதற்கு மேலே கொடுக்காமல் இருக்க முடியுமா? கொடுத்தேன். குடிச்சுட்டு வாயை மூடிக்கொண்டு போகிற வர்க்கம் இல்லையே அது. என் பிராணனை வாங்க வேண்டியது பாக்கி இருக்கே.

“இல்லே..’அவனுடைய முடிவுக்காகக் காத்திருந்தாள்’ னு கதையை முடிச்சிருக்கயே, பெண்ணியவாதிகள் உன்னை சும்மா விடுவாங்களா?”

“அவங்க என்ன விடறது? உனக்கு இதெல்லாம் புரியாது. சும்மாக் கெட. முடிவு எப்படி இருக்கணும்னு எனக்குத் தெரியும்…”

“என்ன தெரியும்? உன் தலை…முடிவு சரியில்ல. மாத்து…”

“என்ன சரியாயில்லை? எதை மாத்தணும்? சும்மா எதையாவது சொல்லாதே..”

“எதையாவது சொல்லலை. முடிவு சரியாயில்லை. மாத்தி எழுது. அவ்வளவுதான். கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்து…”

“நடராஜனுக்கு எத்தனை பிடிச்சிருக்கு தெரியுமா?”

“சரி. விடு…புரிஞ்சு போச்சு” லோட்டாவை ணங் கென்று வைத்துவிட்டு தடக்கென மேடையிலிருந்து குதித்தாள்.

“என்னடி…என்ன  புரிஞ்சுது? சொல்லவந்ததை முழுசா சொல்லிட்டு போ. பாதியிலே நிறுத்திட்டு போகாதே…”

நான் எதற்காக அவளோட ஒப்புதலுக்கு மல்லாடணும்.

“நடராஜ் சரின்னதுக்கப்புறம் உனக்கு யார் ஒப்புதல் கொடுத்தால் என்ன, ஒப்பாவிட்டால் என்ன?”

“இன்னும் யாரோட ஒப்புதல் வேணும்? விமரிசகர்களுடையதா?”

“இங்கே பாரு…பேச்சைத் திருப்பாதே. வாசகர், விமர்சகர்னெல்லாம் வட்டம் அடிக்காதே. உனக்கு முடிவு சரின்னு படுகிறதா?”

என்று சொல்லிவிட்டு ஒரு கணமும் நிற்காமல் தலைப்பை பறக்கவிட்டுக்கொண்டு போயே போய்விட்டாள். பிடித்து அடிக்கணும் எனத் தோன்றியது. இவள் யார் இப்படி தகராறு பண்ணுவதற்கு?

அப்படிப் பார்த்தால் அவள் முதலில் இங்கு வந்ததே தகராறில்தான். மகாராணி புயலைக் கிளப்பிவிட்டாள். யாரோ ஒரு வாசகன் நீளமாக ‘கதை நன்றாக இருக்கிறது. சூட்சுமமாக இருக்கிறது…’ அப்படி இப்படி என்று கடிதம் எழுதியிருந்தான். அப்போதுதான் அதைப் படித்து முடித்திருந்தேன். நடராஜும் அதைப் படித்துவிட்டு பெருமையுடன் தலை அசைத்துவிட்டு அப்போதுதான் வெளியே போயிருந்தான். இவள் உள்ளே வந்தாள். என்னவோ தனக்கே வந்தது என்பதுபோல கடிதத்தைப் படித்து உதட்டை சுழித்தாள். “சரி… இன்னும் இதே மாதிரி நாலு கதை எழுதிவிட்டு ஜனப்ரிய எழுத்தாளர் னு போர்ட் போட்டுடலாம்” என்றாள்.

“ஏன்? என்னாச்சு கதைக்கு?”

“என்ன ஆகணும் நீயே சொல்லு?”

“ஏய்…வாய மூடு…இத்தனைக்கும் நீ யாரு?” எனக்குக் கோபம் வந்தது.

“நான் யாராயிருந்தாலென்ன…முதல்லே இந்த குப்பையெல்லாம் எடுத்து எறிஞ்சுவிட்டு வா”

எனக்கு பயங்கரக் கோபம் வந்தது. இன்னொரு தரம் இந்த வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று அடித்து அனுப்பினேன்.

அப்படியும் திரும்ப வந்தாள். அவள் வந்த அன்றைக்கு நாகலக்ஷ்மி வந்திருந்தாள். அவள் ரேடியேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு உத்தியோகத்திலிருந்தபோது திருமணமாயிற்று. அவளுடைய கணவன் ‘நீயொன்றும் வேலைக்குப் போகவேண்டிய அவசியமில்லை. நான்தான் சம்பாதிக்கிறேனே, நீ வீடு, குழந்தைகளை பார்த்துக்கொண்டிரு’ என்று அவளை சம்மதிக்க வைத்திருந்தான். அவள் அதில் மனம் தளர்ந்து போயிருந்தாள். நான் அவளிடம் ‘ஏதாவது செய்து அவனை சம்மதிக்க வை” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் நடராஜ் வந்து “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். சும்மா வீட்டிலே ஹாயாக இரு’ என்று அவளை கன்வின்ஸ் செய்தான். கதை எழுதி ஒரு மாதமாகியும் முடிவு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தேன். நடராஜ் ஒரே நிமிஷத்தில் சொல்லிவிட்டான்.

சமுதாயத்துக்குப் பெரிதாய் ஏதோ பரிசளித்ததுவிட்டது போல நடராஜ் பெருமையில் மிதந்து கொண்டிருந்தபோது மாலினி வந்து அவனைக் கேலி செய்து எரிச்சல் மூட்டிவிட்டாள். முடிந்திருந்தால் அன்றைக்கு நடராஜ் அவள் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பான். சிரித்துக்கொண்டே தப்பித்து ஓடிவிட்டாள்.

அன்று இரவு தூக்கம் வராமல் போராடிக் கொண்டிருந்தபோது இனிமேல் இவர்கள் இருவரும் சந்திக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என முடிவு செய்தேன்.

இது நடந்ததற்குப் பின் மாலினி என்னைப் பார்ப்பதற்கு மட்டும் வந்துகொண்டிருந்தாள். துணி தோய்க்கும்போது, பாத்திரங்கள் தேய்க்கும்போது, சமையல் செய்யும்போது ஒரு மேடையில் ஏறி உட்கார்ந்து காலாட்டிக் கொண்டு பேச ஆரம்பிப்பாள். ‘அது சரியா…இது சரியா…’ என ஆரம்பித்து பிடித்துக் கொள்வாள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தேன். போகப் போக அளவுக்கு மீறிப் போக ஆரம்பித்தது. திட்டினேன், அசையவில்லை. நடராஜனிடம் புகார் சொன்னேன். ‘அவளைத் தீர்த்துக் கட்டி திதி பண்ணிடறேன்’ எனக் குதித்தான் ஆனால் அவளுடைய தலைமுடியைக் கூட அவனால் அசைக்க முடியவில்லை.

நடராஜனின் தோல்வியை முதல்முறையாய் பார்த்தேன். அது எனக்கு சந்தோஷமாக இருந்ததா இக்கட்டாக இருந்ததா எனத் தெரியவில்லை.

போகப் போக அது பழக்கமாகிப் போனது. அவள் வருவது, என்னைச் சீண்டுவது, நடராஜ் அவளைத் திட்டுவது, அவள் அவனைக் கேலி செய்வது…இதற்கெல்லாம் நடுவில் எனக்கு அமைதியில்லாமல் போயிற்று, அவ்வளவுதான்.

அந்த லலிதா வந்த போது இப்படியிருக்கவில்லை. வார்த்தைகளால் சாதிக்கமுடியாததை லலிதா ஒரு பார்வையால் சாதித்துவிடுவாள். ஆரோக்கியமும் அழகும் மின்னும் அவளுடைய வசியமான தோற்றத்தை எதிர்த்து நிற்க ஒரு ஆணாலும் முடியாது என்று அவளுக்கே தெரிந்திருந்தது அவள் சீண்டினால் நடராஜனுக்கு கோபம் வருவதற்கு பதிலாய் வெறி தலைக்கேறி மூச்சு முட்டியது. ‘பெண்ணுன்னா இப்படி இருக்கணும்’ என்று வியாக்கியானம் வேறே. எனக்கு இதில் ஒரு ஆட்சேபணையும் இருக்கவில்லை ஆனால் அவன் அளவுக்கு அதிகமாகவே ஜொள்ளு விட்டது போலத் தோன்றியது.

நான் சும்மா இருந்தாலும் இந்த மாலினி சும்மா இருக்கவேண்டுமே. அவனை மட்டம் தட்டி மண்ணிலே புரட்டி எடுத்துவிட்டாள். “தூ, அதென்ன.. அப்படி வாயைப் பிளந்துகொண்டு பார்க்கிறீங்க? பெண் என்றால் அவளுடைய உடம்பு என்று சொல்கிறார்கள், ஆனால் இப்படியா  கச பாரம், குச பாரம் னு தொப்புளுக்குக் கீழே, மார்பு தவிர வேறெதுவும் இல்லையா? ஆம்பிளையோட அனாடமிலே எந்த பாகத்துக்கு பொம்பிளைகள் இப்படி ஒரேயடியாய் அலைகிறார்கள் சொல்லு? “

அவள் பேச்சைக் கேட்குமளவுக்கு நடராஜனுக்குப் பொறுமை இல்லை. மாலினி அவன் மூடைக் கெடுத்துவிட்டாள். அன்றைக்குத்தான் முதல் தடவையாய் அவன் என்னை அடித்தான். கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாமல் போனபோது அவனுக்குக் கிட்டிய ஒரே வழி – அவனுடைய உடல்பலத்தை பிரயோகிப்பது. என்னைவிட மாலினிக்கு புத்தி புகட்டுவதற்காகவே அவன் என்னை அடித்தான். என் கண்ணிலிருந்து வழிந்த நீரைப் பார்த்து இனிமேல் அவள் வரமாட்டாள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.

வந்தது மட்டுமில்லை, நிலத்தில் ஊன்றி நின்றுவிட்டாள். போகவே இல்லை. யார் வந்து என்ன செய்தாலும் நகரவில்லை. நடராஜனின் கோபமும் அவளை ஒன்றும் செய்யவில்லை. நான் என்ன அவளை குங்குமம் கொடுத்து வா வென்று அழைத்தேனா? இத்தனையெல்லாம் ஆன பிற்பாடும் அவள் வந்து இங்கேயே இருக்கிறாளென்றால்?

நடராஜனே அவளை ஓட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். பலவிதத்தில் தொல்லை கொடுத்தான். என்னென்னவோ கட்டளைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் விதித்தான். அவள் அசையவில்லை. அவளுக்கு சாப்பாடு கொடுக்காதே என்றான். நான் கொடுக்கவில்லை. அவள் திருட்டுத்தனமாய் எடுத்து மறைந்து தின்றாள். மிஞ்சிப்போனது, பழையது எல்லாம் நான் கொடுத்தேன். தின்று கொழுத்தாள். ஆரம்பத்தில் கண்மறைவாக நடமாடிக் கொண்டிருந்தவள் பிறகு எல்லோர் முன்னாலும் கம்பீரமாய் நடக்க ஆரம்பித்தாள். விடுப்பில் வந்திருந்த மாமா ‘என்னப்பா, உன் பெண்டாட்டி இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறாள்?’ என்று கேட்டார்.

நடராஜனுக்கு தன் கையாலாகாத்தனம் புரிந்திருக்கவேண்டும். ஆனால் அதை ஒப்புக் கொள்ள முடியாமல் எகிறி குதித்தான். இருவரும் நாய் பூனை போல கடித்துக் குதறிக் கொண்டனர். அவனுக்கு சரி என்பது அவளுக்கு தப்பு, அவளுக்கு சரி என்றால் அவனுக்கு தப்பு. இவர்கள் இருவரிடையில் சிக்கிக்கொண்டு தோற்றுப்போனவள் நான்தான்.

இறுதியில் நான் இவர்கள் இருவரிடமிருந்தும் ஒதுங்கியிருக்க ஆரம்பித்தேன். மாலினி இருக்கையில் நடராஜனிடமிருந்து விலகியிருந்தேன். அவன் இருந்தால் அவளிடமிருந்து. இப்படியாக நாடகம் களைகட்ட ஆரம்பித்தது.

ஒருநாள் நான் எழுதி வைத்திருந்த ஒரு கதையை மாலினி படித்துவிட்டாள். ஆரம்பித்தது அவளுடைய நச்சரிப்பு.

‘முடிவு சரியில்லை. மாத்து’

மாலினி படித்தாள் எனத் தெரிந்த உடனேயே நடராஜனும் படித்தான். அவன் அபிப்பிராயப்படி ‘முடிவு நன்றாக இருக்கிறது. அப்படியே விடு’

‘என் பாட்டுக்கு வராதீர்கள். நீங்க ரெண்டு பேரும் முடிவைப் பத்தி தகராறு பண்ணினால் நான் இதோட எழுதறதையே நிறுத்திடப் போறேன்’ என்றேன். அதற்கும் ஒரு பலனும் இல்லை.

ஒரு நாள் ஒரு உபாயம் தோன்றியது. அந்த லலிதாவின் வழியை உபயோகித்துப் பார்த்தால் என்ன? ஒருதரம் முயற்சி செய்துதான் பார்ப்போம். மாலினிக்கு நடராஜை பிடித்துப் போனாலோ அல்லது அவளிடம் அவன் மயங்கிப் போனாலோ இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும். இந்த யோசனை வந்ததுமே தலையில் இருந்த பாரம் குறையத் தொடங்கியது. திட்டம் போட ஆரம்பித்தேன்.

அன்று மாலினி மிக அழகாய் அலங்கரித்து வந்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே புருவத்தை சுருக்கும் நடராஜன்கூட அன்றைக்கு புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டான். அவர்கள் இருவருமே பேசிக்கொள்ளட்டும் என்று நான் சற்று வெளியே இருந்தேன்.

ஆனால் மாலினி அவனைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படவில்லை. என்னைத் தேடிக்கொண்டு வந்தாள். வீடு முழுவதும் சுற்றியும் நான் காணாமல் போகவே வேறு வழியில்லாமல் நடராஜனிடம் போய் நான் எங்கே என்று சைகையில் கேட்டாள். அவன் அதற்கு பதில் சொல்லுமுன்பே நான் தடக் என்று கதவை வெளியிலிருந்து மூடிவிட்டேன்.

பாபி படத்தில் வரும் “சாபி கோ ஜாய்’ (சாவி தொலைந்துபோய்விட்டால் ) பாடல் சீன் போல ஆகவில்லை. நான் உசிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தேன். நான்தான் கதவை தாளிட்டது என்று தெரிந்தால் இவர்கள் இருவரும் என்னைக் குறுக்காலே வெட்டிப் போட்டு விடுவார்களே. ஏதானும் விபரீதமாகிவிட்டால் தெரியட்டும் என்று கதவின் மேல் காதை வைத்துக் கேட்டேன்.

கொஞ்ச நேரம் எதுவும் கேட்கவில்லை. பிறகு குளவிச்சத்தம் போல நிதானமாய் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க நானே அறியாமல் அந்த சத்தத்துக்குக் தலையாட்டிக் கொண்டிருக்கையில் திடுமென்று அது தம்பட்ட சத்தமாக மாறியது. அதையும் மீறி மாலினி லலிதா இருவரின் குரலும் உரத்துக் கேட்க ஆரம்பித்தது. பயத்தில் தெப்பமாய் வியர்த்துப் போய் அவர்கள் இருவரையும் வெளியே விட்டுவிடுவதற்காக தாழ்ப்பாளில் கை வைத்தேன். தாழ்ப்பாள் கையில் பிடிபடவில்லை. என் இரண்டு கைகளும் பறவையின் சிறகுகள் போல ஆகிவிட்டிருந்தன. கடைசியில் என்னவோ செய்து இறக்கைகளினாலேயே தாழ்ப்பாளை நீக்கினேன். உள்ளே பாய்ந்து பார்த்தால் அங்கே யாருமே இல்லை.

ஜன்னலுக்கப்பால் ஒரு ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. தேர், அதற்கு முன்னால் பொய்க்கால் குதிரை, புலி வேஷம், பாளையக்காரன், மயில், குண்டு பொம்மை என என்னென்னவோ வேஷம் போட்டுக் கொண்டு குதித்தாடிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். நன்றாக ஆடினால் யாராவது பணம் கொடுக்க, அதை வாங்கி தம் ட்ராயருக்குள் சொருகிக்கொண்டு வந்தார்கள். உடம்பெல்லாம் சிகப்பாய் பூசிக்கொண்டு கறுப்பு ஜட்டி போட்டுக்கொண்டு கறுப்புக் கண்ணாடி போட்ட பாளையக்காரன் அரிவாளைப் பிடித்துக் கொண்டு தாவித் தாவி வந்தான். அவனைப்பிடிக்க சிலர் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் பின்னால் குரூரமான பார்வையை வீசியபடி வந்துகொண்டிருந்தான் ஆடுவதற்குத் தயாராய் மரக்கால்களைக் கட்டிக் கொண்டிருந்த பொய்க்கால் குதிரைக்காரன்.

‘எந்த சாமி, எந்த கோவில் தேர்? எதுவும் புரியவில்லை. யார் யாரோ தம் வீடுகளிலிருந்து பூ, பழம் தேங்காய் எல்லாம் கொண்டுவந்து பூஜை செய்துகொண்டிருந்தார்கள். மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஆரத்தித் தட்டில் காசு போட்டுக் கொண்டிருந்தார்கள். தட்டில் விழுந்த காசை எடுக்கக் குனிந்த பூசாரியின் மெல்லிய வேட்டியினூடே வி ஐ பி தெரிந்தது.

இரண்டே நிமிடங்களில் தேர் முன்னே நகர்ந்தது. கடகட வென்று சத்தம் போட்டுக் கொண்டு ஜெனெரேடரும் தேரின் பின் நகர்ந்து ரதத்தின் பின்பக்கம் வெறும் இருட்டு. சற்று முன்பு வரை பளபளத்த ஸ்வாமி, பூ, அலங்காரம், விளக்கு, ஊர்வலம், தம்பட்டம் எல்லாம் பிரமை போல் ஆனது. சரக்கென நினவு வந்தவளாய் மூலைக்கு ஓடினேன். தொட்டவுடன் கதவு திறந்துகொண்டது. உள்ளே போனால் அங்கே யாருமில்லை. நடராஜ், மாலினி, கூடவே லலிதா? மூன்று பேரும் அப்படி மாயமாகப் போவது எப்படி சாத்தியம்? கட்டிலுக்கு மேலே, கீழே, பீரோவுக்குப் பின்னால் எல்லா இடத்திலும் துழாவினேன். எங்கே போனார்கள்? அட, அது எப்படி முடியும்? பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. வெளியே ஓடி வந்தேன். யாரையாவது கூப்பிட்டுக் கேட்கவேண்டும். “ஏய், யாரு அங்கே…

poykkalதேர் வீதிமூலையில் திரும்பிக் கொண்டிருந்தது. ஓடிப்போய் கூட்டத்தில் புகுந்து தள்ளிக் கொண்டு முன்னே போனேன். நடராஜும், மாலினியும் மரக்கால்களைக் கட்டிக் கொண்டு டம்ம டக்கா டம்ம டக்கா என்று ஆடிக் கொண்டிருந்தார்கள். நம்பமுடியாமல் அவர்கள் பின்னேயே போனேன். மரக்கட்டை காலால் அடி எடுத்து வைக்க முடியவேயில்லை. மெதுவாய் தேர், அதன் உடன் போன மக்கள், ஊர்வலம் எல்லாம் முன்னே நகர்ந்தது. தேரின் முதுகில் இருள் படர்ந்தது. நிதானமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டேன்.

படியேறி, உள்ளே போய் நேராய் மூலையிலிருந்த சேரில் உட்கார்ந்து சரசரவென எழுத ஆரம்பித்தேன். கதையின் முடிவு உள்ளேயிருந்து குதித்து குதித்து வந்துகொண்டிருந்தது. லட்சம் வர்ணங்கள் கொண்ட அழகான கிளி என்னுடைய பெரியமரத்தில் கூடு கட்டிக் கொண்டிருந்தது. அதன் இரைச்சலினூடே வேறே எந்த சப்தமும் எனக்குக் கேட்கவில்லை, யாருடைய காலடி சப்தமும் கூட.

தோள் மேல் யாருடைய கையோ விழுந்தபோது தலையை உயர்த்திப் பார்த்தேன். கதையின் முடிவைப் படித்து ஒரு சின்னப் புன்னகையுடன் “வா…மாலினி… சாப்பிடு… தட்டு வைத்திருக்கிறேன்” என்றான் நடராஜ் என் முகவாயை பிடித்து.

அவனுடைய முகத்தில் இன்னும் பொய்க்கால்குதிரை ராஜாவின் வண்ணம் மிஞ்சியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.