மீள்சந்திப்பு

நான் கதைக்கருவிலிருந்து கதைகளைத் தொடங்குவதில்லை.  கனவுகள், புரிதல்கள், சொல்லவேண்டிய கருத்துகள் போன்றவற்றுடன் வேலையைத் தொடங்குவேன். கதாபாத்திரங்களும், கதைக்கருவும் தானாகவே வந்துவிடும் – எனக் கூறும் ஜான் சீவர் (John Cheever) அமெரிக்காவின் மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியராகக் கொண்டாடப்படுபவர். சிறுகதைகளுக்காக புலிட்சர் பரிசை வென்ற ஜான் சீவரின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான Reunion கதையின் மொழிபெயர்ப்பைக் கீழே படிக்கலாம்.

மொழியாக்கம்: போகன்

மூலம்:- Reunion

 

 

கடைசியாக நான் அப்பாவைப் பார்த்தது கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேசனில். நான் என்னுடைய பாட்டி வீட்டிலிருந்து கேப் நகரத்தில் எனது அம்மா வாடகைக்கு இருந்த காட்டேஜ் நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.அப்போது அப்பாவுக்கு நான் ந்யூயார்க்கில் சுமார் ஒன்றரை மணி நேரம் நான் பிடிக்க வேண்டிய ரயில்களுக்கு இடையில் இருப்பேன் என்றும் அப்போது சேர்ந்து மதிய உணவு அருந்தலாமா என்றும் கேட்டு கடிதம் எழுதினேன்.அவருடைய காரியதரசி அப்பா என்னை தகவல் மையத்தில் மதியம் சந்திப்பார் என்று பதில் எழுதினாள்.

சரியாக பனிரெண்டு மணிக்கு நான் அவர் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வருவதைப் பார்த்தேன். இப்போது அவர் எனக்கு ஒரு அன்னியர். அம்மா அவரை விவாகரத்து செய்து மூன்று வருடங்களாகிறது அன்றிலிருந்து நான் அவரைப் பார்த்ததில்லை எனினும் அவரைப் பார்த்த அந்த நொடியிலேயே நான் அவர் எனது ரத்தமும் சதையும் எதிர்காலமும் துயரமும் என்பதுபோல் நெருக்கமாக உணர்ந்தேன். நான் வளர்ந்தால் நிச்சயம் அவரைப் போலத்தான் இருக்கப் போகிறேன் என்பது போலவும்..நான் நிச்சயம் என்னுடைய வாழ்க்கையை அவரது எல்லைகளுக்குள்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்பா பெரிய அழகான மனிதர்.அவரைத் திரும்பப் பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.அவர் எனது முதுகில் அறைந்து கைகளைப் பற்றிக் குலுக்கினார் ”ஹாய் சார்லி ”என்றார்

”எனக்கு உன்னை எனது க்ளப்புக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று மிக விரும்புகிறேன்.ஆனால் அது தூரத்தில் இருக்கிறது.ரயிலைப் பிடிக்க வேண்டி இருப்பதால் பக்கத்தில் எங்கேயாவது சாப்பிடலாம்”என்று என்னை அணைத்துக் கொண்டார்.அவரிடமிருந்து விஸ்கி ஆப்டர் ஷேவ் லோசன் கம்பளிகள் ஷூ பாலிஷ் மற்றும் ஒரு முதிர்ந்த ஆணின் காட்டமான வீச்சம் எல்லாம் கலந்து ஒரு வாசனை வீசியது.அதை நான் என் அம்மா ஒரு ரோஜாவை முகர்வது போல ஆழ்ந்து இழுத்து முகர்ந்தேன். நான் அப்போது எங்கள் இருவரையும் சேர்த்து யாராவது பார்க்கவேண்டும் என்று விரும்பினேன். எங்கள் இருவரையும் சேர்த்து யாராவது ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்று விரும்பினேன்.நான் எங்களின் அந்தக் கணத்தைப் பதிவு செய்யவேண்டும் என விரும்பினேன்.

நாங்கள் ஸ்டேசனை விட்டு வெளியே வந்து எதிர்ப்புறமிருந்த ஒரு ரெஸ்டாரண்டுக்குச் சென்றோம்.முன்னமே போய்விட்டபடியால் இடம் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தது.பார் டெண்டர் ஒரு டெலிவரி பையனிடம் ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருந்தான். ஒரு வயதான வெயிட்டர் அடுக்களையின் வாசலருகே சிகப்புக் கோட் அணிந்து நின்றுகொண்டிருந்தான். நாங்கள் அமர்ந்ததும் அப்பா அவனை உரத்த குரலில் கூப்பிட்டார்.

‘ஏய் !தம்பி!வெயிட்டர்!இங்கே பார்..நீதான்” காலி ஹோட்டலில் அவரது உரத்த சப்தம் பொருத்தமில்லாது இருந்தது.

”இங்கே கொஞ்சம் வரணும் ”என்றவர் கைகளையும் தட்டினார். இம்முறை அது வெயிட்டரின் கவனத்தை ஈர்த்தது. அவர் எங்களை நெருங்கி வந்தார்.

”என்னைக் கைதட்டிக் கூப்பிட்டீர்களா ?”‘

”அமைதி அமைதி வெயிட்டரே”, என்றார் அப்பா.

”உங்களுக்கு சிரமமில்லை எனில் உங்களது வேலைக்கு வெளியே அது இல்லை எனில் எங்கள் இரண்டு பேருக்கும் இரண்டு குவளை ஜின் வேண்டும்”

”என்னை யாரும் கைதட்டிக் கூப்பிடுவது எனக்குப் பிடிக்காது”என்றார் வெயிட்டர் ..

”நான் என்னுடைய விசிலைக் கொண்டுவந்திருக்கவேண்டும்”என்றார் அப்பா.”வயதான வெயிட்டர்களுக்கு மட்டுமே கேட்கக் கூடிய விசில்..இருக்கட்டும். உடனே பென்சிலை எடுத்துக் கொண்டு ஆர்டரை எடுங்கள்.இரண்டு ஜின்கள் .இரண்டு!”

”நீங்கள் வேறெங்காவது போய்விடுவது நல்லது”என்றார் அந்த வெயிட்டர் அமைதியாக.

”நான் கேட்டவற்றிலேயே ரொம்ப உத்தமமான கருத்து! ”என்றார் அப்பா ”சார்லி வா.இந்த இடத்தை வேகமாக விடுவோம்”

நான் அவரைப் பின்தொடர்ந்து வேறொரு ரெஸ்டாரண்டுக்குள் போனேன். இம்முறை அவர் அவ்வளவு கொதிப்புடன் இல்லை.எங்களது பானங்கள் வந்தன.அவர் என்னிடம் பேஸ்பால் சீசனைப் பற்றி குறுக்குக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவர் மறுபடியும் தனது காலிக் கண்ணாடித் தம்ளரை கத்தியால் தட்டிக் கொண்டு கத்த ஆரம்பித்துவிட்டார்

”ஏய் !தம்பி!வெயிட்டர்! இதே பானம் இன்னும் இரண்டு கிளாஸ் கொண்டுவர முடியுமா?”

”இந்தப் பையனின் வயது என்ன ?என்று வெயிட்டர் கேட்டான்.

‘அது உனது கவலை இல்லை ”என்றார் அப்பா.

”மன்னிக்கவும் சார் இந்த சிறு பையனுக்கு இன்னொரு கிளாஸ் ஜின் தருவதற்கில்லை ”

”அப்படியா?நான் உனக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். ரொம்பவே ரசமான செய்தி.ந்யூ யார்க்கில் இது மட்டும்தான் ரெஸ்டாரன்ட் என்று இல்லை.தெருமுனையில் வேறொன்றைத் திறந்திருக்கிறார்கள். வா சார்லி”

அப்பா பில்லைக் கொடுத்துவிட்டு இன்னொரு ரெஸ்டாரண்டுக்குள் புகுந்தார்.நானும் பின்தொடர்ந்தேன்.இங்கே வெயிட்டர்கள் பிங்க் நிற ஜாக்கட்டுகள் அணிந்து அதன்மேல் வேட்டைக்குப் போகும்போது அணியும் கோட்டுகள் அணிந்திருந்தனர்.. சுவர்களில் குதிரை ஏற்றத்துக்கான கருவிகள் நிறைய மாட்டப்பட்டிருந்தன.” வேட்டை நாய்களின் அரசரே மற்றும் டாலிஹோ.

‘இங்கே முதலில் இரண்டு கிளாஸ் ஜின் ‘

”இரண்டு கிளாஸ்?”வெயிட்டர் புன்னகைத்துக் கொண்டே கேட்டார்.

”நான் அதைத்தான் சொன்னேன் என்று நன்றாக உனக்குத் தெரியும் !”‘என்றார் அப்பா கோபத்துடன்.’

‘எனக்கு இரண்டு கிளாஸ் ஜின் வேண்டும் .சீக்கிரமாக.பழைய இங்கிலாந்தில் எல்லாம் மாறிவிட்டது என்று இளவரசர் சொல்கிறார். என்ன மாறியிருக்கிறது என்று பார்ப்போம்”

”இது இங்கிலாந்து இல்லை சார்’

”என்கூடசர்ச்சை செய்யாதே !”என்றார் அப்பா”சொன்னதைச் செய்!’

‘சார் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன் சார் ”

”என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாத ஒரு விஷயம்… ”என்றார் அப்பா”மரியாதையே இல்லாத பணியாளர்கள் தான்..சார்லி வா.போகலாம்”.

நான்காவது நாங்கள் போன இடம் ஒரு இத்தாலியன் ரெஸ்டாரன்ட்..அப்பா வெயிட்டரிடம் ”காலை வணக்கம்.தாங்கள் எங்களுக்கு அருள் கூர்ந்து ஒரு உதவி செய்ய முடியுமா எங்களுக்கு இரண்டு கிளாஸ் அமெரிக்கன் ஜின் தேவைப்படுகிறது ”என்றார் இத்தாலிய மொழியில்.

வெயிட்டர் ”மன்னிக்கவும் சார்.எனக்கு இத்தாலியமொழி தெரியாது ”

”அட.உனக்குத் தெரியும்.உனக்குத் தெரியும் என்று நன்றாகவே எனக்குத் தெரியும்.போ நான் சொன்னதைக் கொண்டுவா”என்று மீண்டும் இத்தாலிய மொழியில் முன்பு சொன்னதையே சொன்னார்.

அவன் போய் தலைமை வெயிட்டரை அழைத்துவந்தான்.அவர் நெருங்கி வந்து ”சார் இந்த மேசை ரிசர்வ் செய்யப்பட்டிருக்கிறது”

”நல்லது.எங்களுக்கு வேறு மேசை கொடு”

”எல்லா மேசையுமே ரிசர்வ் செய்யப்பட்டிருக்கிறது”

”புரிந்தது.உங்களுக்கு எங்களது ஆதரவு தேவையில்லை.இல்லையா?எல்லாரும் நரகத்துக்குப் போங்கள் !”என்று கத்தினர்.பின்னர் அதையே இத்தாலிய மொழியிலும் கத்திவிட்டு ”வா சார்லி போகலாம்”

நான் ”எனது ரயிலைப் பிடிக்கவேண்டும் அப்பா ”என்றேன்.

”சாரி பையா.ரொம்பவே சாரி.”என்று அவர் என்னை தோளோடு அணைத்துக் கொண்டார்.”எனது க்ளப்புக்கு மட்டும் உன்னை அழைத்துக் கொண்டு போக நேரமிருந்திருந்தால்..இரு நான் உன்னை ரயில் ஏற்றிவிட வருகிறேன்”.

”பரவாயில்லை அப்பா”

”இரு .நான் உனக்கு ரயிலில் படிக்க ஏதாவது வாங்கி வருகிறேன்”என்று அவர் அங்கிருந்த சிறிய புத்தகக் கடைக்குப் போனார்.

”கருணை உடைய சார்,.நீங்கள் தயைவு கூர்ந்து எனக்கு உங்களிடமுள்ள ஒன்றுக்கும் உதவாத மாலை செய்தித்தாள்களில் ஒன்றை எனக்குத் தர முடியுமா ?”கடையில் இருந்தவர் பதில் பேசாது அவரிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒரு பத்திரிகையின் அட்டையை வெறிக்கத் தொடங்கினார்.

அப்பா விடாது ”இது உங்களுக்குப் பெரிய சிரமமா இருக்குமா சார்?”என்றார்”உங்களது மஞ்சள் பத்திரிகைகளில் ஒன்றை எனக்கு விற்பது உண்மையிலேயே உங்களுக்கு மிகுந்த சிரமம் தரும் ஒரு காரியமா சார் ?”

”எனக்குப் போகணும் அப்பா”, என்றேன் நான்  ”நேரமாகிறது”

”கொஞ்சம் இரு சார்லி.இந்த ஆளிடமிருந்து ஒரு பதில் பெறாமல் நான் விடப் போவதில்லை”

”குட்பை டாடி”என்றேன் நான்.

பிறகு கீழிறங்கி எனது ரயிலைக் கண்டு ஏறிக் கொண்டேன்.

அதுதான் அப்பாவை நான் கடைசியாகப் பார்த்தது.

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.