பெய்யெனப் பெய்யும் மழை

rain

முன் குறிப்பு:

1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி.

2.இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

3. சர்வதேச மழை நினைவு தினம்: உலக நகரங்களில் மழை பொழிவது நின்று போய் சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆகி விட்டன. இறுதியாக பதிவு செய்யப்பட்ட மழை ஆகஸ்ட் 30, 2070ல் பெய்ததாய் பழங்கால‌ அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30, மழை நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

4. ஆதிவாசிகள் தீவு: “நாகரிகம்” அடையாத‌ மனிதர்கள் எஞ்சியுள்ள பகுதி. மிகவும் வித்தியாசமான, உலகத்துக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்கள் கொண்ட குடி என்பதால், உலக நாடுகள்சபையால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட ஆயிரம் பேர் வாழும் தீவு.

அன்பு த‌ன் ல‌க்கேஜை ஒரு முறை ச‌ரிபார்த்துக் கொண்டான். ஆக்சிஜ‌ன் வளையம் இன்னும் எத்த‌னை நாள் வ‌ரும் என்று கைக்கணிணியில் விசாரித்தான். நூறு ப‌ண‌த்திற்கு உண்டான‌ ஆக்சிஜ‌ன் மீத‌மிருப்ப‌தாக‌ ப‌தில் வ‌ந்த‌து. இன்னும் ஆயிர‌ம் ப‌ண‌த்திற்கு ஆக்சிஜ‌ன் ரீசார்ஜ் செய்தால் ஆதிவாசிக‌ள் தீவுக்கு போய் வ‌ரும் வ‌ரை க‌வ‌லையில்லை என்று தோன்றிய‌து.

ஆதிவாசிகள் தீவில் வசிக்கும் மனிதர்கள் ஆக்சிஜ‌ன் வளையம் பயன்படுத்தாது  சுவாசிக்கிறார்கள் போன்ற தகவல்களை அறிந்திருந்தாலும், அவன் அதை நம்பத் தயாராக இல்லை..இங்கெல்லாம் பிற‌ந்த‌வுட‌ன் தொப்புள் கொடி அறுபட்ட மறு நொடி ஆக்ஸிஜன் வளையம் மாட்டி விடுகிறார்கள். செய‌ற்கை முறையில் ஊரெங்கும் ப‌ர‌ப்ப‌ப்ப‌டும் காற்றிலிருந்து குறிப்பிட்ட‌ அள‌வை அந்த வளையத்தினுள்ளிருக்கும் கருவி உள்ளேற்றி சுவாச‌ம் கொடுக்கும். ப‌ண‌ம் க‌ட்டி “ஆக்சிஜன் சர்வீஸ்” ரீசார்ஜ் செய்ய‌ ம‌ற‌ந்தால் அதோ க‌திதான்! உல‌க‌மே இப்ப‌டி “மூச்சு வாங்கும்” பொழுது, ஏதோ ஒரு ஊரில் மட்டும் மக்கள் தாங்களாகவே ஸ்வாசிக்கிறார்கள் என்பதை எப்படி நம்ப முடியும்?

அன்புக்கும் சிறுவ‌ய‌திலிருந்தே ஆதிவாசிக‌ள் தீவுக்கு ஒரு முறையேனும் சென்று வ‌ர‌ வேண்டும் என்று ஆசைதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வருடாந்தர விடுப்பில் செவ்வாய் கிரகத்துக்கு கூட போய் சுற்றிப் பார்த்து வந்து விட்டான் அன்பு.  ஆனால் ஆதிவாசி தீவு நினைத்தால் போய் வர முடியும் இட‌மாக‌வா இருக்கிற‌து? எத்த‌னை அப்ரூவ‌ல்க‌ள், காத்திருப்புக‌ள், அரசாங்க மற்றும் பாதுகாப்பு கெடுபிடிக‌ள்… ஆண்டுக்கு ஒரு மாத‌ம் தான் வெளிவாசிக‌ள் தீவுக்குப் போக‌ அனும‌தி. அதுவும் ஒரு நாளுக்கு நூறு பேர் ம‌ட்டுமே. அன்பு ப‌ண‌ம் க‌ட்டி ப‌திவு செய்து ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் ஆகி விட்ட‌ன‌. இந்த‌ மாத‌ம் தான் அதிர்ஷ்ட‌ம் அடித்திருக்கிற‌து. ச‌ர்வ‌தேச‌ ம‌ழை நினைவு தின‌த்தை ஒட்டி, முன்ப‌திவு செய்த‌வ‌ர்க‌ளுக்கு ஆக‌ஸ்ட் மாத‌ம் முழுவ‌தும் ஒரு நாள் சென்று வ‌ர‌ அனும‌தி என்ற‌ அறிவிப்பு வ‌ந்த‌தில் இருந்து அன்பு ப‌ர‌ப‌ர‌ப்புட‌ன் தயாராகிக் கொண்டிருந்தான்.

இதோ அந்த‌ நாளும் வ‌ந்து விட்ட‌து… தீவுக்குச் செல்லும் சிற‌ப்பு விமான‌ம் ஒன்றில் ஏறி அம‌ர்ந்து க‌ண்க‌ளை மூடினான். திடீரென்று அவ‌னுக்கு கொள்ளு தாத்தா ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. ஞாப‌க‌ம் தீடீரென்றுதானே வ‌ரும்? அவ‌ர்தான் அவ‌னுக்கு “அன்பு” என்று பெய‌ர் வைத்தார். வ‌ள‌ர்ந்த‌ பின் த‌ன‌து பெய‌ர் மிக‌வும் வித்தியாச‌மாக‌ உள்ள‌தையும் அந்த‌ பெய‌ரை வேறு எங்குமே கேள்விப்ப‌ட‌வில்லை என்ப‌தும் ஒப்பு மொழியில் அப்ப‌டி ஒரு வார்த்தையே இல்லை என்ப‌தும் அவ‌னுக்கு விசித்திர‌மாக‌ இருந்த‌ன‌. அவ‌ன‌து தாத்தா ஒரு முறை த‌ன‌து கொள்ளு தாத்தா கால‌த்தில் “த‌மிழ்” என்றொரு மொழி இருந்த‌தாக‌வும் அதில் “அன்பு” இருந்த‌தாக‌வும் சொல்லியிருந்தார். எத‌ற்கு “அன்பு” ப‌ற்றிய‌ ஆராய்ச்சி இப்போது என்று தோன்ற‌, ஆதிவாசிக‌ள் தீவு ப‌ற்றி தான் இதுவ‌ரை அறிந்திருந்த‌ த‌க‌வ‌ல்க‌ளை அன்பு அசை போட‌த் துவ‌ங்குவ‌த‌ற்கும் விமான‌ம் வானில் சீறுவ‌த‌ற்கும் ச‌ரியாக‌ இருந்த‌து…

ப‌ல‌ ம‌ணி நேர‌ப் பிர‌யாண‌த்திற்குப் பின் விமான‌ம் கீழிற‌ங்க‌த் துவ‌ங்கிய‌ போது அவ‌ன் க‌ண்ட‌ காட்சியில் அதிர்ந்து போனான்…க‌ண் காணும் தொலைவு வ‌ரையிலும் ப‌ச்சை நிற‌த்தில் ஏதேதோ வ‌டிவ‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கில் “அவை” உய‌ரே எழுந்து நின்ற‌ன‌. அவை மெதுவாக‌ அசைவ‌து போல‌ இருந்த‌து. முத‌ல் பார்வையிலேயே அவை க‌ண்ணுக்கு குளிர்ச்சி த‌ருவ‌து போல‌ இருந்த‌தால் அன்புக்கு அந்த‌ “ப‌ச்சை ப‌சேல்” மிக‌வும் பிடித்துப் போன‌து. ஆண்டுகள் கோடி கடந்தாலும் இயற்கையின் நிறத்தின் குணம் மாறுமா என்ன? விமான‌த்திலிருந்து இற‌ங்கிய‌வுட‌ன் அவ‌னுக்கு ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு குடைந்த பின் ஒரு கைடு கொடுத்தார்கள். கைடு இன்றி ஆதிவாசிக‌ள் தீவுக்குள் அன்னிய‌ர்க‌ள் செல்ல‌ அனும‌தி இல்லை.

“எனது பெயர் ஜோசப்” என்று புன்னகையுடன் அறிமுகப்படுத்திக் கொண்டார் கைடு. ஒரு இளைஞன் அல்லது யுவதியை கைடாக எதிர்பார்த்த அன்புக்கு முதியவரான ஜோசப்பைப் பார்த்து சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது. “உங்க‌ள் ஆக்சிஜ‌ன் வளையத்தைக் க‌ழ‌ற்றி விடுங்க‌ள்.

இங்கு அது தேவையில்லை. அது வேலையும் செய்யாது” என்றார். சிறிது த‌ய‌க்க‌த்துட‌ன் வளையத்தைக் க‌ழ‌ற்றிய‌ நொடி சில்லென்று ஒரு காற்று மூக்கின் வ‌ழியே உள்ளே நுழைவ‌தும் உடம்பு முழுவ‌தும் புத்துண‌ர்ச்சி பெறுவ‌தும் இதுவ‌ரை உண‌ர்ந்திராத‌ அனுப‌வ‌மாக‌ இருந்த‌து அன்புவுக்கு.

ஆச்ச‌ரிய‌த்துட‌ன் இது எப்ப‌டி? என்று கூவினான் அன்பு. சுற்றியிருந்த‌ ப‌ச்சை வெளிக‌ளை சுற்றிக் காட்டி இவ‌ற்றிலிருந்துதான் நீங்கள் சுவாசித்த காற்று வ‌ருகிற‌து என்று அவ‌ற்றை நோக்கி அழைத்துப் போனார் ஜோசப். நூறு கைக‌ளை வித‌வித‌மாக‌ நீட்டி ம‌ட‌க்கிய‌ப‌டி அவ‌னைப் பார்த்து அரவணைத்துக் கொள்ள அழைப்பது போல‌ நின்றிருந்த‌து அது. அதன் ஒவ்வொரு கையிலும் ஆயிரக்கணக்கான பச்சை விரல்கள் அசைந்தபடி இருந்தன. ஸ்ஸ்ஸ் என்று ஒரு சத்தம் அவற்றிலிருந்து வந்து கொண்டிருந்தது. “இதை நாங்க‌ள் ம‌ர‌ம் என்போம். இந்தத் தீவில் ம‌ட்டுமே இவை வ‌ள‌ர்கின்ற‌ன‌. மீத‌மிருக்கின்றன. இவை ந‌ம‌க்குத் தேவையான‌ சுத்த‌மான‌ காற்றைத் த‌ருகின்ற‌ன‌ என‌வே தான் ஆக்சிஜ‌ன் வளையமின்றி நீங்க‌ள் நின்றிருக்கிறீர்க‌ள்” என்றார்.

“இதை ஏன் உல‌கில் எங்குமே பார்க்க‌ முடிய‌வில்லை” என்று ஆச்ச‌ரிய‌மாக‌க் கேட்டான் அன்பு.

“நில‌மும் நீரும் இருக்கும் இட‌த்தில் தான் இவை உயிர் வாழும்” என்று ஜோசப் சொன்ன‌வுட‌ன், க‌ண்ணாடியாய் ப‌ள‌ப‌ள‌க்கும் ந‌க‌ர‌த்து த‌ரைக‌ள் அன்பின் ஞாப‌க‌த்திற்கு வ‌ந்த‌ன‌.

“வாருங்க‌ள் ஊருக்குள் போக‌லாம்” என்று அழைத்துச் சென்றார் ஜோசப். சாலையின் இருமருங்கிலும் ஆலும் வேம்பும் அசைந்தாடியபடி இருந்தன. அவற்றின் நிழல்கள் தெருவெங்கும் படர்ந்து தெருவே ஒரு தள்ளாட்டத்தில் மிதப்பது போல இருந்தது. தெருவில் விழுந்த மரங்களின் நிழல் இடைவெளிகளில் சூரியனின் கதிர்கள் பாய்ந்து வெளிச்சம் படர்ந்து ஓவியம் போல் அழகுற்றிருந்தது அவர்கள் நடக்கத் துவங்கிய சாலை. வழியில் குறுக்கிட்ட‌ ப‌ல‌ரும் அன்பைப் பார்த்து புன்ன‌கைத்து ந‌ல‌ம் விசாரித்த‌ன‌ர். இவ‌ர்க‌ளை எல்லாம் எனக்கு யாரென்றே தெரியாதே… தானாக‌ வ‌ந்து பேசுகிறார்க‌ளே என்று விய‌ந்தான். “நாங்க‌ள் அடுத்தவர்களின் நேர அனுமதியின்றி பேசுவ‌தில்லை. பேச‌வேண்டுமென்றால் ஒத்த‌ நேர‌த்திற்கு முன்ப‌திவு செய்ய‌ வேண்டும். நானும் என் ம‌னைவியும் அக்டோப‌ர் ப‌த்தாம் தேதி இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ப‌திவு செய்திருக்கிறோம். ஆறு மாதங்களுக்குப் பிறகு அப்போது தான் இருவருக்கும் நேரம் ஒத்து இருக்கிறது” என்றான். ஜோசப் சிரித்தார். அவரின் மனவோட்டத்தை அன்பு அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜோசப்பின் வாழ்க்கையும் இருபது வருடங்கள் முன்பு வரை அப்படித்தானே இருந்தது!

அவன் கடந்து சென்ற வீடுகளில் ஆளரவம் அதிகம் இருப்பது போலத் தெரிந்தது. ஜோசப்பிடம் ஒரு வீட்டில் இத்தனை பேரா என்று விசாரித்தான் அன்பு. அவர், “ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அமைப்புக்குப் பெயர் குடும்பம். அதில் பெற்றோருடைய பெற்றோர் துவங்கி சிறு பிள்ளைகள் முதல் அடங்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடும்பம் வாழும். அந்தக் குடும்பங்களின் நடக்கும் நல்லது கெட்டது இன்ப துன்பம் அனைத்திலும் அனைவரும் பங்கு பெறுவர்” என்றார். அன்புக்கு தெரிந்ததெல்லாம் வீட்டுக்கு ஒருவர் என்ற பழக்கம் மட்டுமே. அந்தந்த உறவுக்கென்று ஆண்டுக்கு ஒரு தினம் உண்டு. அந்த தினத்தில் மட்டும் அந்த உறவை சந்தித்து வாழ்த்து சொல்லும் பழக்கம் நகரங்களுக்கு வந்து பல தலைமுறை கடந்து விட்டது. மற்றபடி தன்னைப் பற்றி யோசிக்கவே அந்த ஒற்றை ஆள் வீடுகளுக்கு நேரமில்லையே! அன்பு, தன் பெற்றோரிடம் கடைசியாக எப்போது பேசினோம் என்று யோசித்தான். ஞாபகம் இல்லை. ஏன் இது போல் நம் வாழ்க்கை இல்லாமல் போனது என்ற கேள்வி முதன்முதலாக அவனுக்குள் எழுந்தது. அவனுக்கு மட்டுமா? தீவுக்கு வெளியில் வாழும் எவருக்கும் எழுமே?

ஊரின் தெருக்களில் வீடுகளின் முன்னே தண்ணீர் கேன் மற்றும் குவளை வைக்கப்பட்டிருந்தது. நடமாடும் மனிதர்களின் தாகம் தணிக்க அனைத்து வீடுகளின் முன்னும் இவ்வாறு வைத்திருப்பது ஆதிவாசிகளின் பலகாலப் பழக்கம் என்றார் ஜோசப். அன்புக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. அவன் ஊரில் ஒரு குவளை தண்ணீருக்கு ஆயிரம் பணம் தர வேண்டும். பணம் கொடுத்தால் மட்டும் போதாது. ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்னால்தான் “தயார்” செய்து கொடுப்பார்கள். இங்கோ ஊரில் போவோர் வருவோர் எல்லோருக்கும் தண்ணீர் வைத்திருக்கிறார்களே என்று அன்புக்கு ஆச்சரியம் தாளவில்லை.

தான் மிக‌வும் ஆர்வ‌மாக‌ பார்க்க‌ வ‌ந்திருந்த‌ விஷ‌ய‌த்தை மெதுவாக‌ அவ‌ரிடம் கேட்டான். “ம‌ழையை நான் பார்க்க‌ முடியுமா?”. “போன‌ வாரம் தான் பெஞ்ச‌து. இது மழை சீஸன் தான். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா இன்னிக்கு கூட பெய்யலாம். உங்க நகரங்களில் என்னென்னவோ கண்டுபுடிச்சீங்க வசதின்னு நீங்க நினைக்கற எல்லாத்துலயும் புரள்றீங்க. ஆனா கோடி கோடியாய் கொட்டி வருடக்கணக்கா ஆராய்ச்சி செஞ்சும் மழையை மட்டும் உங்களால உண்டாக்க முடியலை பார்த்தீங்களா? ஏன்னா, மழை நினைச்சாத்தான் மழை. அது விரும்பற இடத்துலதான் அது பெய்யும்”” என்றார்.

நேர‌ம் பிற்ப‌க‌லை தாண்டி ஓடிக் கொண்டிருந்த‌து. “ஆறு ம‌ணிக்குள்ள‌ விமான‌ நிலைய‌த்துக்கு போய்ச்சேர‌ வேண்டும். அருங்காட்சிய‌க‌ம் ம‌ட்டும்

பார்க்க‌ நேர‌ம் இருக்கும்” என்று மியூசிய‌த்திற்கு அழைத்துப் போனார் ஜோசப். ஏக‌ப்ப‌ட்ட‌ ஆச்ச‌ரிய‌ங்க‌ளை அடுத்த‌டுத்து பார்த்த‌ப‌டியே வ‌ந்து ஒரு க‌ண்ணாடிப் பேழையின் முன் வ‌ந்து நின்றார் கைடு.

ஐநூறு ஆண்டுக‌ளுக்கு முந்தைய‌ புத்த‌க‌ம் இது. சில‌ ப‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும்தான் கிடைத்த‌து. இதை திருக்குற‌ள் என்று அப்போதைய‌ ம‌க்க‌ள் அழைத்துள்ள‌ன‌ர். த‌மிழ் என்ற‌ மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌தாம் என்று சொல்லிக் கொண்டே வ‌ந்தார் ஜோசப். ஏதேதோ வ‌டிவ‌ங்க‌ளை வ‌ரிசையாக‌ வைத்த‌து போல‌ இருந்த‌து அது. ப‌சு த‌ன் நாக்கால் க‌ன்றை ந‌க்கும் காட்சியைப் பார்க்கும் பொழுது ஏற்ப‌டும் உண‌ர்வைப் போன்ற‌தொரு அனுப‌வ‌த்தை அன்பு அடைந்திருந்தான்.

பேழையின் அருகிலேயே ஒரு ஸ்கிரீனில் பேழையில் இருப்ப‌து என்ன‌ என்ற‌ விப‌ர‌ங்க‌ள் ஒப்புமொழியில் ஓடிக்கொண்டிருந்த‌ன‌. அதில், மொத்த‌ம் ஆயிர‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ குற‌ள்க‌ள் இருந்த‌தாக‌வும் இருப‌து ம‌ட்டுமே இப்போது முழுதாக‌ மீத‌மிருப்ப‌தாக‌வும் அத‌ன் அர்த்த‌ங்க‌ள் என்ன‌வென்றும் இருந்த‌ன‌. வாசித்துக் கொண்டே வ‌ந்த‌ அன்பின் க‌ண்க‌ள் ஓரிட‌த்தில் நிலைகுத்தி நின்ற‌தை பார்த்த‌ கைடு, “அன்பு, லாஜிக்கே இல்லாம‌ இருக்குல்ல‌, ந‌ல்ல‌வ‌ன் ஒருத்த‌ன் இருந்தா போதுமாம் அவ‌னுக்காக‌வே அந்த‌ ஊரு முழுக்க‌ ம‌ழை பெய்யுமாம்… எப்ப‌டின்னு யோசிக்கிறீங்க‌ளா? நீங்க‌ இற‌ங்கின‌ உட‌னே பார்த்தீங்க‌ளே ம‌ர‌ங்க‌ள்…அதைப்போல‌ ஆயிர‌க்க‌ண‌க்குல‌ இந்த‌த் தீவுக்குள்ள‌ இருக்கு. அதை நாங்க‌ காடு அப்ப‌டின்னு சொல்லுவோம். மழையும் காடும் கணவன் மனைவி மாதிரி. ஒண்ணு இல்லேன்னா இண்ணொண்ணுக்கு அர்த்தம் இல்ல‌. அது ரெண்டும் சேர்ந்துதான் இந்த‌ தீவோட‌ உசுருங்க‌ எல்லாத்தையும் பெத்த‌வ‌ங்க‌ மாதிரி பார்த்துக்குது. உயிர்க‌ளுக்கு எப்ப‌டி தாய்ப்பாலோ அது மாதிரிதான் ம‌ழை உல‌க‌த்து உயிர்க‌ளுக்கு எல்லாம் தாய்நீர்” என்றார்.

அன்புக்கு, தானும் த‌ன் மொத்த‌ இன‌முமே கூனிக் குறுகுவ‌து போல‌ இருந்த‌து. நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி பெரிய வேலையில இருந்தேன் பணம், பணம், பணம் அதான் மூச்சு. கோடியில புரண்டேன். என்னை மாதிரி தான் எல்லாருமே ஒடிக்கிட்டுருந்தாங்க. இன்னிக்கு நேத்திக்கு ஓட்டமா? நாமெல்லாம் இப்படி வெறி பிடிச்ச மாதிரி ஓட ஆரம்பிச்சு ஒரு ஆயிரம் வருஷம் இருக்காது? அந்த ஓட்டத்துல நமக்கு உபயோகமில்லைன்னு தோன்ற எல்லாத்தையும் மிதிச்சு ஒழிச்சோம்…இன்னிக்கு இந்த தீவுல மட்டும் தான் மனுஷனை தவிர்த்து வேற உயிரினங்களைப் பார்க்க முடியும். அப்பத்தான் எனக்கு இந்த தீவுக்கு வர வாய்ப்பு கிடைச்சது. நானும் இதே இடத்துல நின்னு நல்லவன் ஒருத்தன் இருந்தா ஊருக்கே மழை பெய்யறதாவது கிறுக்குத்தனமா இருக்கேன்னு யோசிச்சிருக்கேன்…இங்க நான் பார்த்த எல்லாமே ஊருக்கு போன பிறகு வாழ்க்கைங்கற பேருல நாம் என்ன செஞ்சுகிட்டிருக்கோம் அப்படின்னு நாளும் பொழுதும் கேள்வியாய் மாறி என்னை துரத்திகிட்டே இருந்தது. ரெண்டு வருஷம்…இங்க வந்து சேர்ந்துட்டேன். ஒவ்வொரு நாளும் என்னமோ பயன் உள்ளதை செய்யற மாதிரி தெரியுது” என்றார்.

அன்புக்கு த‌ன‌க்குள் ஏதோ உடைந்து உருகுவ‌து போல‌ இருந்த‌து. உச்சியிலே மேக‌ம் லேசா க‌ருத்திருக்கு இன்னிக்கு பெஞ்சாலும் பெய்யும் என்று

த‌ன‌க்குத் தானே சொல்லிக் கொண்டே மேலும் தொடர்ந்தார் ஜோசப்…ம‌ழைதான் ந‌ம‌க்கு எல்லாமே. அதுதான் ந‌ம‌க்குள்ள‌ புகுந்து ந‌ம்ம‌ள‌ உருவாக்குது. ம‌ண்ணுக்குள்ள‌ போற‌ ம‌ழை விளைய‌ற‌ உண‌வுக்குள்ள‌ போய் அதை சாப்பிட‌ற‌ ந‌ம‌க்குள்ள‌ வ‌ந்துறுது…ந‌ம்ம‌ உண‌ர்வுக‌ள் எல்லாமே ம‌ழை அணுக்க‌ள் கொடுத்ததுதான். ம‌கிழ்ச்சி, பாச‌ம், சோக‌ம், கோப‌ம் எல்லாமே சுயநலம் இல்லாம மனுஷனுக்கு வந்த வ‌ரைக்கும் உல‌க‌த்துல‌ எக்க‌ச்ச‌க்க‌மா ம‌ழை பெஞ்ச‌து. ஆனா அந்த‌ உண‌ர்வுக‌ள் எல்லாத்தையும் த‌ன‌க்காக‌வே ம‌னுஷ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பிச்ச‌ பிற‌கு உண‌ர்வு  அணுக்க‌ள் எல்லாம் உருக்குலைஞ்சு கெட்டுப் போச்சு. ம‌ழையும் விட்டுப் போச்சு. அதான் நீங்க‌ எல்லாம் இய‌ந்திர‌ம் மாதிரி வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கீங்க‌…ஒரு த‌ட‌வை ம‌ழையில‌ ந‌னைஞ்சு பாருங்க‌. அது உங்க‌ள‌ ம‌னுஷ‌னா மாத்திரும்.  என்னிக்கு உலகத்துல பெரும்பாலான மக்கள், எவ்வளவு சுயநலமா ஒருத்தன் இருக்கானோ அந்தளவுக்கு அவன் புத்திசாலி என்றும் வாழ்த்தெரிஞ்சவன் என்றும் நினைக்க ஆரம்பிச்சாங்களோ, என்னிக்கு உலகத்துல பெரும்பாலான மக்கள், அடுத்தவங்கள பத்தி யோசிக்கறவங்களையும் அவங்க வலியில

உதவ நினைக்கறவங்கள இளிச்சவாயன் அப்படின்னும் வாழ்த்தெரியாதவன்னும் நினைக்க ஆரம்பிச்சாங்களோ அன்னிக்கே மழை நம்மள விட்டு விலக ஆரம்பிடுச்சு…” என்றார்.

ஜோச‌ப்பிட‌ம் தீவை சுற்றிக் காட்டிய‌த‌ற்கு நன்றி தெரிவித்து விட்டு என‌க்கு ஏதேனும் ஒரு செடி த‌ர‌ முடியுமா ஊரில் சென்று வ‌ள‌ர்ப்ப‌த‌ற்க்கு என்று கேட்டான்.

ஜோச‌ப்போ, உங்க‌ள் ஊர்க‌ளில் ம‌ண் என்ப‌தே குப்பை என்பார்களே ஊர் முழுவதும் பாலீஷ் செய்தல்லவா வைத்திருப்பீர்கள் ம‌ண்ணை எப்ப‌டி எடுத்துப் போவீர்க‌ள் என்றார். தான் எப்ப‌டியேனும் அனும‌தி பெற்று விடுவேனென்று சொல்லி மிக‌வும் வ‌ற்புறுத்தி ஒரு செடியை தொட்டியில் வாங்கிக் கொண்டான். ம‌ண் நிர‌ம்பிய‌ சிறு தொட்டியில் செடியை ந‌ட்ட‌ ஜோச‌ப், வெட்டிய‌ இட‌த்திலிருந்து ம‌ண‌ல் எடுத்து செடியின் வேரைச் சுற்றி ப‌ர‌ப்பி அமுக்கினார். ஆச்ச‌ரிய‌மாக‌ பார்த்துக் கொண்டிருந்த‌ அன்புவிட‌ம், “இது தாய் ம‌ண். செடியை பிடுங்கி ந‌டும் பொழுது அத்துட‌ன் தாய் ம‌ண்ணையும் அனுப்ப‌ வேண்டும். இல்லையென்றால் வ‌ள‌ராது” என்றார். ம‌னித‌ இன‌மே, த‌லைமுறை த‌லைமுறைக‌ளாக‌ வேரிலிருந்து பிடுங்க‌ப்ப‌ட்டு வேறிட‌த்தில் ந‌ட‌ப்ப‌ட்டு தாய் ம‌ண் அறியாம‌ல் வேர் பிடிக்க‌ வ‌ழியின்றி த‌த்த‌ளிக்கும் ஒர் இன‌மோ என்று தோன்றிய‌து அன்புக்கு.

மேகம் மூட்டம் போடத்துவங்கியிருந்தது. தான் கிளம்புதற்குள் ஒரு முறை மழை பெய்யாதா என்ற ஏக்கத்தில் விமான‌ நிலைய‌ வாயிலில் தொட்டியை அரவணைத்த‌ப‌டி இலைக‌ளை வ‌ருடி பார்த்துக் கொண்டிருந்தான் அன்பு. தூற‌ல் துவ‌ங்கிய‌து. அவ‌னைப் பார்த்த‌ ஜோச‌ப், “நீங்கள் இலையை வருடும் பாங்கிலேயே அதற்குள்ளும் ஒரு உயிர் ஒளிந்திருக்கிறது என்ற புரிதலின் அக்கறை தெரிகிறது…இதுவே அன்பின் அ\டையாள‌ம் தான். அனேக‌மாக‌ இந்த‌ ம‌ழை உங்க‌ளுக்காக‌த்தான் வ‌ந்து கொண்டிருக்கிற‌து போலும்” என்றார்.

இடி மின்ன‌ல் என‌ த‌ன் ப‌ரிவார‌ங்க‌ளுட‌ன் ஆட்ட‌ம் போட்டுக் கொண்டு இற‌ங்கிய‌து பெரும‌ழை!

0 Replies to “பெய்யெனப் பெய்யும் மழை”

  1. வளர்ச்சி என்ற முழக்கத்தின் கீழ் பலியிடப்படும் மானுடத்திற்கும் பல்லுயிர்களுக்கும் இந்த கதையை காணிக்கையாக்க வெண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.